Friday, August 12, 2022
முகப்பு வாழ்க்கை பெண் கிணத்துல வாளி கழுத்துல தாலி - சென்னை பெவிமு கூட்டம்

கிணத்துல வாளி கழுத்துல தாலி – சென்னை பெவிமு கூட்டம்

-

மார்ச் 8 உலகப் பெண்கள் தினம். சென்னை – குரோம்பேட்டை வீதிகளெங்கும் சுவர்களில், பெண்கள் விடுதலை முன்னணியின் (பெவிமு)சிவப்பு சுவரொட்டிகள். அவற்றில் காட்சியளித்த, ”சமைப்பதும், பிள்ளைப்பெறுவதும் மட்டும் பெண்களின் வேலையல்ல! பெண் விடுதலையையும் நமது வேலையாக்குவோம்!” என்ற முழக்கங்கள் பொதுமக்களை அரங்கக் கூட்டத்திற்கு அழைத்தன!

அரங்கத்தில் நுழைந்ததும், ஓவியர் முகிலனின் கைவண்ணத்தில் உருவான ஓவியக் கண்காட்சி பார்வையாளர்களை வரவேற்றது. கிளாரா ஜெட்கின் படமும், பெண்கள் இன்றைய காலகட்டத்தில் சந்திக்கும் பிரச்சனைகளையும் குறிப்பாக, குடும்ப சிலுவையில், முதலாளித்துவ ஆணிகளால் பெண் அறையப்பட்டிருந்த ஓவியம் பெண்களின் இன்றைய நிலையை பளிச்சென காட்டியது. வந்தவர்களை வெகுவாக ஈர்த்தது.

ஓவியக் கண்காட்சி

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

பெண்கள், தொழிலாளர்கள், தோழர்கள்,குழந்தைகள் என நூற்றுக் கணக்கானோர் கலந்து கொள்ள  துவங்கியது கூட்டம். தோழர் அமிர்தா தலைமை தாங்கினார். தன் உரையில், பெண்கள் இதுநாள்வரை பெற்ற உரிமைகள் அனைத்தும் போராட்டத்தின் மூலம் தான் கிடைத்தது என்றும், பெண்கள் தினத்தை கோல போட்டி, அழகி போட்டி என கொண்டாட்ட நாள் போல மலின படுத்தியுள்ளனர். மே தினத்தைப் போலவே இது உரிமைகளை மீட்பதற்கான நாள்! இது கொண்டாட்ட நாள் அல்ல என்பதை விளக்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக வந்திருந்த, எழுத்தாளர் பிரியா தம்பி, ”ஆணாதிக்கமும், பெண்ணடிமைத்தனமும், பெண்விடுதலைக்கு தடை!” என்ற தலைப்பில் பேசினார். அன்றாட வேலைகளிலும், தன் சொந்த அனுபவத்திலிருந்தும் ஆணாதிக்கத்தை விளக்கினார். பெண்கள் தனியாக அலுவலக வேலைக்காக கூட பயணம் செய்ய முடியவில்லை என்பதை தனக்கு பேருந்தில் நடந்த சம்பவத்தின் மூலம் அம்பலப்படுத்தினார். வெளிவட்டத்தில், நல்ல நண்பராக பழகுபவர்கள், கணவராக மாறும்போது ”நான் ஆம்பிளை” என்ற ஒற்றை குறியீடுடன் தனது ஆணாதிக்கத்தை நிறுவுவதை அம்பலப்படுத்தினார். வேலைக்கு செல்லும் பெண்கள், பணரீதியில் வளர்ந்துவிட்டதாக நினைக்கின்றனர். ஆனால் குடும்பம் என்ற முறையிலோ வாழ்நாள் அடிமைகளாகவே சுழல்கின்றனர் என்பதை சுட்டிக் காட்டினார். பெண் எல்லா வலிமையும் பெற்றவளாக இருக்கிறாள் ஆனால் அவர்களின் வலிமையை அவர்களே உணர்வதில்லை என்று பெண்ணடிமைத்தனத்தையும் இடித்துரைத்தார் மேலும் கிராம பெண்களுக்கு இருக்கும் துணிச்சல், படித்த பெண்களுக்கு இல்லை என்பதை நடைமுறை உதாரணங்களுடன் எளிமையாக விளக்கி பேசினார்.

பெவிமு சென்னை மாவட்ட செயலர் தோழர். உஷா ”போராளி கிளாரா ஜெட்கின் வாரிசுகளாக….” என்ற தலைப்பில் உரையாற்றினார். இன்றைய காலக்கட்டங்களில் பெண்கள் போராட வரமுடியாத நிலைக்கு தள்ளி வைத்திருக்கும் முதலாளித்துவ சூட்சமங்களை வெட்ட வெளிச்சமாக்கினார். அதிலிருந்து, மீள விவசாயிகள், தொழிலாளர்கள், மற்றும் மாணவர்கள் பிரச்சனைகளோடு உழைக்கும் பெண்கள் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பதன் மூலமே பெண்கள் தங்களை விடுதலையை சாதிக்கமுடியும் என்பதை தெளிவுப்படுத்தினார். மேலும், பெண்களை தொலைகாட்சி மூலம் சிறைப்பிடித்திருக்கும் சீரியல்களின் லட்சணங்களை, மக்கள் மொழியில் பேசி கூட்டத்தினை ஈர்த்தார். சீரியல்களில் மனைவியே தன் கணவனுக்கு இன்னொரு பெண்ணை கூட்டிக் கொடுக்கும் அசிங்கத்தை காறித் துப்பினார்.

உரையாற்றியவர்களுக்கு இணையாக மேடையேறிய, பெண்கள் விடுதலை முன்னணித் தோழர்களும், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும்,புரட்சிகர பாடல்கள் பாடினர். குறிப்பாக, ”….கிணத்துல தொங்கிறது வாளி! பெண்கள் கழுத்துல தொங்குறது தாலி….! ” என்ற பாடல் பலத்த கரகோஷத்தைப் பெற்றது.

சிறப்புரை ஆற்றிய தோழர் துரை சண்முகம் தனது உரையில் , பெண்கள் வீட்டில் சும்மா தான் இருக்காங்க என்று சில ஆண்கள் கூறுவதை இடித்துரைத்தார். பெண்கள் செய்யும் வீட்டு வேலைகள் அங்கீகரிக்கபடுவதில்லை, வீட்டில் வேலை செய்தால் இழிவாக கருதும் ஆண்கள் முதலாளிக்கு போய் அடிமை வேலை செய்வது மட்டும் பெருமையா? என்றும் உழைக்கும் பெண்கள் வேலை செய்து கைகள் காப்பு காய்த்து போய் அவள் கைப்பட்டால் அவளின் கைக்குழந்தை அழுகிறது, அவள் தலைப்பாகை எடுத்து தன் கை மேல் வைத்து பால் கொடுக்கிறாள் என்று பெண்களின் உழைப்பின் மகிமையை விளக்கினார். ஆணாதிக்கம் மக்கள் கும்பிடும் கடவுள் வரையிலும் பிரதிபலிப்பதை பளிச்சென கூறினார். பிடாரி, காளி போன்ற சவால்களை எதிர்க்கொள்ளும் வீர பெண் கடவுள்களை பற்றியும் இப்போது லட்சுமி, பார்வதி என்று கணவன்களின் காலை அமுக்கும் கடவுளாக இருப்பதை விளக்கி பெண் அடிமைத்தனத்தையும் ஆணாதிக்கத்தையும் அம்பலப்படுத்தி பேசினார்.

மறுபுறம்,  பெவிமு வின் தொண்டர் தோழர்கள் குழந்தைகளை கவனித்துக்கொண்டும், வயதானவர்களுக்கு உதவியும், தண்ணீர், டீ, பிஸ்கட்கொடுத்தும் கூட்டத்தினை முறையாக ஒழுங்குப்படுத்தியது, கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்கு உதவியாக இருந்தது.

கூட்டத்திற்கு வந்திருந்த பல புதிய பெண்களிடம் கூட்டம் பற்றி கருத்து கேட்கும் பொழுது, தாங்கள் பெண் விடுதலை பற்றிய குழப்பத்தில் இருந்ததாகவும், இந்த கூட்டம் பல விசயங்களை தெளிவுப்படுத்தியதாகவும், போராட்டமில்லாமல் எதையும் பெறமுடியாது என்பதை உணர வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

பெண்கள் மட்டும் கலந்து கொள்ளும் விதத்தில் இல்லாமல் தோழமை அமைப்பான புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களும்,மக்கள் கலை இலக்கிய கழகம் மற்றும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டது சிறப்பாக இருந்தது.

கூட்டத்திற்கு வந்திருந்த பொதுமக்கள் கூட்டநிகழ்ச்சியின் மூலம் பெண்களின் போராட்ட மரபுகளை நெஞ்சில் ஏந்தி சென்றனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

தகவல் :
பெண்கள் விடுதலை முன்னணி, சென்னை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க