முகப்புகட்சிகள்அ.தி.மு.கபாஜக ஆசியுடன் வைகோ திருந்துவார் – இலங்கை தூதர் உறுதி !

பாஜக ஆசியுடன் வைகோ திருந்துவார் – இலங்கை தூதர் உறுதி !

-

“பா.ஜ.க உடனான கூட்டணி, வை.கோ வின் இலங்கை தொடர்பான  அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தும்” என்று இந்தியாவுக்கான இலங்கை தூதர் கரியவாசம் நம்பிக்கையாகக் கூறியுள்ளார்.  மார்ச் 1-ம் தேதி மத்தியபிரதேச மாநில பா.ஜ அரசின் ஆதரவுடன் சாஞ்சியில்  நடந்த இரண்டாவது தர்மா-தம்மா ( இந்து- பொளத்தம்) கருத்தரங்கில் கலந்து கொண்ட பின்னர் இந்து நாளிதழுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நடந்த முதல் கருத்தரங்கம் மற்றும் பல்கலைக்கழக அடிக்கல் நாட்டுவிழாவிற்கு இராஜபக்சே அழைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரசாத் கரியவாசம்
பிரசாத் கரியவாசம்

கரியவாசம் அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் (இலங்கையின்) ‘ஒற்றுமை’க்காகப்  பாடுபடுவதாகவும், பா.ஜ.க வும் அது போல (இந்தியாவின்) ஒற்றுமைக்கான ஒரு சக்தியாக விளங்குவதாகவும்” கூறியுள்ளதன் மூலம் இரு பாசிஸ்டுகளும் ஒரே கொள்கையில் ஊறிய மட்டைகள் தான் என்பதை விவரித்துள்ளார். இங்கு ‘ஒற்றுமை’ என்று இவர் கூற விளைவது சிங்கள பேரினவாதமும், பார்ப்பன இந்துமதவெறியும் தத்தமது நாடுகளில் போராடும் தேசிய இன மக்களின் உரிமைகளை மறுத்து துப்பாக்கி முனையில் பிணைத்து வைத்திருக்கும் ‘ஒற்றுமை’யைத் தான்.

இந்தியாவில் தேசிய இனங்களின் இருப்பையே ஏற்க மறுக்கிறது பா.ஜ.க. காஷ்மீரத்தில் உங்கள் நிலைப்பாடு எதுவோ, அதுவே ஈழத்தில் எங்கள் நிலைப்பாடு என்பதாக கரியவாசம் கூறுவதாகவும் இந்த ஒற்றுமை புராணத்தை புரிந்து கொள்ளலாம். ஜனநாயக மறுப்பு என்ற புள்ளியில் இணைந்து கொள்ளும் இந்த பாசிஸ்டுகள் தான் உண்மையிலேயே இயற்கையான கூட்டாளிகள். குஜராத்தில் முஸ்லீம் மக்கள் மீதான இனப்படுகொலைகளை நிகழ்த்திவிட்டு இன்று வளர்ச்சி என்று வேஷம் போடும் மோடியின் செயலிலும், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை நிகழ்த்திவிட்டு தற்போது அபிவிருத்தி என்று பசப்பி திரியும் ராஜபக்சேவிடமும் என்ன வேறுபாடு இருக்கிறது? அதைத் தான் கரியவாசம் ‘இங்கித’மாக கூறியிருக்கிறார்.

இப்படி ‘ஒற்றுமைக்கான’ சக்தியாக திகழும் பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருப்பதால், அந்த சக்தி “வை.கோ வின் அணுகுமுறையில் மாற்றத்தை கொண்டு வரும்”  என்று கருதுகிறார் கரியவாசம். வை.கோவிற்கு விரைவில் நல்ல புத்தி ஏற்பட்டு தன் இலங்கை அரசுக்கெதிரான தனது நிலைப்பாட்டை கைவிடுவார் என்றும் அந்த பேட்டியில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இவரது நம்பிக்கையை மெய்ப்பிக்கும் விதமாக சமீபத்தில் பா.ஜ.கவின் யஷ்வந்த் சின்ஹா எனும் மதவெறி பாசிசக் கட்சியின் தலைவர் ஒருவரை வைத்து ‘மனித உரிமை’ கருத்தரங்கம் ஒன்றை நடத்தியிருக்கிறார் வை.கோ. பாஜகவிற்கும் மனித உரிமைக்கும் என்ன தொடர்பு என்ற மிகப்பொதுவான உண்மையைக் கூட வைகோவின் சந்தர்ப்பவாதம் நியாயப்படுத்துகிறது. வழக்கமாக ஈழ இனப்படுகொலை என்று வீராவேசமாக பேசும் வை.கோ, ‘மனிதஉரிமை’ கருத்தரங்கம் என்று நடத்தியதன் பின்னணியில் பா.ஜ வுடனான கூட்டணி கணக்குகளும் இருக்கவே செய்கின்றன. அதன்படி கூட்டணி பேரம்தான் மனித உரிமையை பலிகடாக்கியிருக்கிறது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோ குறைந்த பட்சம் போர்க்குற்றம் என்றோ கூட அதிகாரபூர்வமாக ஏற்க பா.ஜ.க தயாரில்லை. ஆனால் தமிழக மக்களை ஏமாற்றி ஓட்டு பொறுக்குவதற்காக இங்கொன்றும் அங்கொன்றுமாக சில பா.ஜ.க வினர் இனப்படுகொலை என்று கட்சி நிலைப்பாட்டுக்கு மாறாக ஏமாற்றி பேசி திரிகிறார்கள். ஆக பா.ஜ.க வின் அதிகாரபூர்வ நிலைப்பாட்டிற்கு தன்னால் பங்கம் வரகூடாது அதே சமயத்தில் மக்களையும் ஏமாற்ற வேண்டும் என்ற வை.கோ வின் பரிதவிப்புதான் ‘மனிதஉரிமை’ என்ற தலைப்பு. கூடவே சின்ஹாவுக்கு விருந்து போட்டு கூட்டணியில் நாலைந்து சீட்டு தேறுமா என்று கெஞ்சுவதும் வைகோவின் அஜெண்டாவில் இருந்தது.

வைகோ - பொன்னார்
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்றோ குறைந்தபட்சம் போர்க்குற்றம் என்றோ கூட அதிகாரபூர்வமாக ஏற்க பா.ஜ.க தயாரில்லை.

கடந்த ஆண்டு ஜெனிவா நகரில், ஐநாவின் மனித உரிமைகள் மாநாட்டின் போது “ராஜபக்சே போர்க் குற்றாவளி அல்ல” என்றும் “இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை ஆதரிக்க முடியாது” என்றும், ”அதே சமயம் இலங்கையில் மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும்” என்றும் பா.ஜ.க கூறியதை இதனுடன் பொருத்தி பார்த்தால் இந்த தலைப்புக்கான காரணம் விளங்கும். வை.கோவை மதித்து நாலு சீட்டு கூட கொடுக்கத் தயாரில்லாத பா.ஜ.காரர்கள், மதிமுக கூட்டணிக்காக இந்திய ஆளும் வர்க்க நலனுக்கு எதிராக செயல்படுவார்கள் என்று எந்த கூமுட்டையும் நம்ப மாட்டான். மதிமுக தொண்டனும் நம்ப மாட்டான் என்றாலும் கட்சி உயிர் பிழைத்திருப்பதற்கு இத்தகைய நரிகளை பரியாக்கும் மோசடிகளை ஏற்றுத்தானே ஆகவேண்டும்?

தன் சந்தர்ப்பவாதத்தை மறைக்க, தான் கூட்டணி சேரும் கட்சிகளுக்கு இப்படி தமிழின மேக்கப் போட்டு விடுவது வை.கோவின் வாடிக்கைதான் என்றாலும், முன்பு ஜெயாவுக்கு புலிவேசம் கட்டிவிட்டபோது அவர் வாக்கு பெறும் நோக்கத்துடன் நடிப்புக்காக கூறியதைப் போன்று “ஈழம் வாங்கித் தருவேன்” “படை அனுப்புவேன்” என்று கூட சொல்லத் தயாராக இல்லை அவரது இப்போதைய கூட்டாளி பா.ஜ.க. காங்கிரசுக்கு ஓட்டு போடக்கூடாது என்பதைத் தவிர ராஜபக்சேவை குறித்தும், ஈழம் பற்றியும் அவர்களிடத்தில் இருக்கும் கருத்தும் காங்கிரசின் கருத்தும் வேறு வேறு இல்லை. ஆயினும் பா.ஜ.கவை ஈழத்தமிழர்களின் மீட்பராக சித்தரித்து மக்களை ஏமாற்ற முனைகிறார் வை.கோ.

கரியவாசத்தின் அந்த பேட்டி மேலும் சில முக்கியமான விசயங்களையும் சொல்லி செல்கிறது. பா.ஜ.க வின் மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுஹான், சீதை தீக்குளித்த இடமாக சொல்லப்படும் இலங்கை நுவாரலியாவில் கோவில் கட்டி வருவதாகவும், அதன் மூலம் இந்தியாவிலிருந்து ஆன்மீக பயணிகளை ஈர்த்து இரு நாட்டு உறவுகளை பலப்படுத்தும் தொலைநோக்கோடு அதை அவர் கட்டி வருவதாகவும் பாராட்டியுள்ளார் கரியவாசம்.

இனப்படுகொலை குற்றச்சாட்டிலிருந்து தப்பிக்க இலங்கை அமைதியாகவும் இயல்பு நிலையிலும் தான் இருக்கிறது என்று காட்டிக்கொள்ள இலங்கை அரசு பகீரத முயற்சி செய்கிறது. சுற்றுலாவை ஊக்குவிப்பது, திரைப்பட விழாக்கள், காமென்வெல்த் மாநாடுகள் என்று தன் இரத்த கறையை மறைக்க முயல்கிறது. இந்த சூழலில் அங்கு சீதைக்கு கோவிலை கட்டி அதன் மூலம் பல்லாயிரக்கணக்கான ஆன்மீக சுற்றுலாவாசிகளை கவர்வது இனப்படுகொலை குற்றத்தை மறைக்க உதவும் என்று தெரிந்தே தான் ம.பி பா.ஜ முதல்வர் அந்த கோவிலை கட்டுகிறார். மேலும் இந்த கோவிலின் பின்னணியில் சங்க வானரங்களின் அகண்ட பாரத கனவும் இருப்பதை மறுக்க முடியாது.

கருணாஸ் போன்ற காமெடி பீஸ்களும் இதர சினிமா நட்சத்திரங்களும் இலங்கைக்கு செல்வதாக தகவல் கிடைத்ததும் அவர்களை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்யும் தமிழினவாதிகள் இன்று வரை சீதை கோவிலை எதிர்த்தோ, பாஜகவை எதிர்த்தோ, பாஜகவிற்கு பல்லக்கு தூக்கும் வைகோ குறித்தோ ஒரு அறிக்கை கூட விடவில்லை. இதனால் சினிமா நட்சத்திரங்களை எதிர்ப்பது தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அதிகாரமும், அரசு பலமும் உள்ள பாஜகவையும் அதன் அடிவருடிகளையும் கண்டிப்பதில் மவுனம் ஏன்?

சீதை கோயில்
நுவரலியாவில் சீதை கோயில் கட்டுகிறது வைகோவின் கூட்டணி கட்சி பாஜக.

விஜய் டி.வி சூப்பர் சிங்கர் பாடகர்கள் இலங்கை போவதாய் தகவல் வந்ததும் வை.கோ வெளியிட்ட அறிக்கையில் பின்வருமாறு கூறினார்:

“ஈழத்தில் நடைபெற்ற படுகொலைகளை மறைப்பதற்காக நரித் தந்திரத்தோடு இந்த இசைவிழாவை நடத்துகிறார்கள். ரோமாபுரி பற்றி எரிந்தபோது நீரோ பிடில் வாசித்தது போல விஜய் தொலைக்காட்சி இசைக் கலைஞர்கள் அங்கு பாடப் போகிறார்களா? ஈழத் தமிழர்கள் எழுப்பிய மரண ஓலம் இன்னும் அங்கு காற்றில் கலந்துதான் இருக்கிறது. காயப்பட்டுப் போன தமிழர்கள் மனங்களில் நெருப்பைப் போடும் வேலையில் விஜய் தொலைக்காட்சி ஈடுபட வேண்டாம்.”

நியாயமான கோபம் தான். மரண ஓலத்தை சம்ஸ்கிருத மந்திர ஒலியால் மறைக்கப் பார்க்கும் பாஜகவுக்கு எதிராக இதே கோபம் வைகோவுக்கு வரவில்லையே ஏன்? ரோம் தீப்பிடித்த போது நீரோ பிடில்தான் வாசித்தான். ஆனால் பாஜகவோ தீ வைத்த இலங்கை அரசை கருத்திலும், அரச உறவுகளிலும் ஆதரித்து உதவி செய்கிறது. அத்தகைய தீவட்டி நீரோக்களுக்கு நல்லெண்ணத் தூதராக பணியாற்றும் வைகோவிற்கு என்ன தண்டனை?

அந்த கோயிலை இடிப்பதற்கு கரசேவை செய்ய தமிழார்வலர்கள் தயாராக இல்லையே ஏன்? வை.கோ, நெடுமாறன் உள்ளிட்ட தமிழினவாதிகள் தம்மளவிலேயே ஒரு தமிழ் ஆர்.எஸ்.எஸ் என்பதால் சீதை கோவிலை எதிர்த்தால் இந்து அல்லது தமிழ் சென்டிமெண்ட் பாதிக்கும் என்று பயப்படுகிறார்கள். கூடவே ஜெயா விரட்டிவிட்ட பிறகு தற்போது வேறு வழியில்லாமல் பாஜகவை அண்டி பிழைப்பை நடத்துவதாலும் அது குறித்து அவர்கள் வாய் திறப்பதில்லை. அருவெருப்பான இந்த பிழைப்புவாதிகளை புரிந்து கொண்டு நிராகரிக்காத வரை ஈழத்தமிழர்களுக்கு எந்த பலனும் இல்லை.

கரியவாசத்தின் பேட்டி, இந்திய ஆளும் வர்க்க நலனை பிரதிபலிக்கும் பா.ஜ.க இலங்கைக்கு எதிராக சிந்திக்காது என்பதையும், தன் பிழைப்புவாதத்திற்காக அவர்களை நம்பச் சொல்லும் வை.கோவின் துரோகத்தையும் நமக்கு எடுத்துக் காட்டுகிறது. ஆனாலும் கரியவாசம் நம்பிக்கை வைப்பது போல வைகோவையெல்லாம் பாரதிய ஜனதா திருத்த வேண்டியதில்லை. ஏனெனில் அவர் இயல்பிலேயே ஒரு பாரதிய ஜனதாவின் தமிழ் பிராண்ட் போர்வாள் என்பதை வரலாறு நிரூபித்திருக்கிறது.

இவற்றை எல்லாம் காண மறுத்து, ‘வை.கோ கூட்டணி மாறலாம் ஆனால் கொள்கை மாறமாட்டார்’; ‘கொள்கை வேறு கூட்டணி வேறு’ என்று வை.கோ ஆதரவாளர்கள் தங்களுக்கு தாங்களே அனுதாபம் சொல்லிக் கொள்கிறார்கள். பிழைப்புவாதிகளுக்கும், அடிமைகளுக்கும் கொள்கை என்று ஒன்று இருக்க முடியுமா? இருந்தால் அதன் பெயர் கொள்கையா?

–    ரவி

  1. ”வை.கோ கூட்டணி மாறலாம் ஆனால் கொள்கை மாறமாட்டார்”

    ”கொள்கை வேறு கூட்டணிவேறு”

    “நான் விபச்சாரம் செய்வேன்” ஆனால் “எனது கற்பு போகவில்லை” இது சரியா???

  2. என்று வை.கோ பாஜக கூட்டனியை உறுதி செய்தாரோ அன்றே ” திருந்திவிட்டார் ! ”

    தமிழன் இன்னும் யார் யாரையெல்லாம் நம்பி ஏமாறப்போகிறானோ ?!

Comments are closed.