privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்ஐரோப்பாரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை

ரசியா: எலுமிச்சை எதிர்ப்பிற்கும் சிறை தண்டனை

-

சிய அதிபர் விளாடிமிர் புதினை எதிர்த்து போராடியவர்களுக்கு கடந்த பிப்ரவரி 24-ம் தேதி மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று  சிறைத் தண்டனை அளித்து தீர்ப்பளித்துள்ளது. 2012 மே மாதம், புதின் மீண்டும் ரசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து நடந்த பேரணியில், போலீசுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக இவர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

போலோத்னயா குற்றம் சாட்டப்பட்டவர்கள்
போலோத்னயா குற்றம் சாட்டப்பட்டவர்கள்

2000-2008 வரை இருமுறை ரசிய அதிபராக இருந்த புதின் 2012-ம் ஆண்டு மார்ச்சில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு மூன்றாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த அதிபர் தேர்தலில் புதின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி நாடு முழுவதும் புதினுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்றன. “புதின் இல்லாத ரசியா” என்ற முழக்க பதாகைகளை ஏந்தி பல்லாயிரக்கணக்கானோர் பங்குபெற்ற போராட்டங்கள் நடைபெற்றன.

அமெரிக்காவிற்கு சவால் விடும் ஆயுத பலம் உள்ள ரசியாவை வாய்ப்பு கிடைக்கும் விதத்தில் அம்பலப்படுத்தும் விதமாக மேற்குலக பத்திரிகைகளும் அதை பெரிய அளவில் விளம்பரப்படுத்தின. இதே மேற்குலகம்தான் ரசியாவில் புதினை தேர்ந்தெடுத்த முதலாளித்துவ ஜனநாயகத்தை கொண்டு வந்தது. அந்த வகையில் இருவரும் கூட்டாளிகள்தான். அதனாலேயே புதினின் ஒடுக்குமுறைகள் நியாயமாகி விடாது.

2011 டிசம்பரில் நடைபெற்ற பாராளுமன்ற (டூமா)  தேர்தலிலும் புதினின் ஐக்கிய ரசிய கட்சி முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக கூறி பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு போராடினர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதின் எதிர்ப்பு போராட்டம்
புதின் அதிபராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நாளன்று, ”புதின் ஒரு திருடன்” என்ற முழக்கமிட்டபடிய இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி மாஸ்கோவில் நடத்தப்பட்டது.

இந்நிலையில் 2012-ம் ஆண்டு மே 6-ம் தேதி, அதாவது புதின் அதிபராக பொறுப்பேற்பதற்கு முந்தைய நாளன்று, ”புதின் ஒரு திருடன்” என்ற முழக்கமிட்டபடிய இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் கலந்து கொண்ட பேரணி மாஸ்கோவில் நடத்தப்பட்டது. பேரணி போலோத்னயா சதுக்கத்தை நோக்கி முன்னேறிய நிலையில் போலீசார் தடுத்தனர். போராட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தியதை தொடர்ந்து இருதரப்புக்கும் கைலப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து வன்முறையில் ஈடுபட்டதாக கூறி 250 போராட்டக்காரர்கள் கைது செய்யப்படடனர்.

இதில் ஊழல் எதிர்ப்பு செயற்பாட்டாளர் அலெஸ்சி நவல்னி, முன்னாள் துணை பிரதமர் போரிஸ் நெஸ்டோவ் ஆகியோரும் அடக்கம். இதில் மற்றவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில் முக்கிய குற்றவாளிகளாக பன்னிரெண்டு பேர் மீது வழக்கு நடத்தப்பட்டது. இவர்கள் மீது போலீசாரை தாக்கியதாகவும், கலவரத்தை தூண்டியதாக அரசு தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

ரசியாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்கும் சமயத்தில் தன் மீதான மக்களின் எதிர்ப்பை குறைக்கும் வகையிலும், ‘அடக்குமுறை அரசு’ என்ற முத்திரையை தவிர்க்கவும் மேற்கண்ட போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வருக்கு பொதுமன்னிப்பு அளித்தது ரஷ்ய அரசு.

போராட்டக்காரர்கள் கைது
தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில், செர்ஜி கிரிவோவ், அலெசான்டிரா நவ்மோவா,  பார்பவோவ், போலிக்சோவிச்,  சேவியோல்வ், சிம்மின், லுட்க்ஸ்விச், பிலோவ்சோவ் ஆகிய எட்டு பேர் மீது விசாரணை முடிந்து அவர்கள் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தீர்ப்பளித்துள்ளது. அவர்களுக்கு தண்டனை வழங்குவதை  சோச்சியில் நடைபெற்று வந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டி நிறைவடைந்த பிறகு பிப்ரவரி 24-ம் தேதி வரை ஒத்தி வைத்ததாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

24-ம் தேதி குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நான்கு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.  பிலோவ்சோவ் என்பவர் போலீசார் மீது ‘பேரழிவு’ ஆயுதமான எலுமிச்சம்பழத்தை வீசி எறிந்த ‘கொடுங்குற்ற’த்திற்காக தண்டிக்கப்பட்டுள்ளார்.

“நீதிமன்றம் சுதந்திரமாக இருந்திருந்தால் இந்த வழக்கே தூக்கி எறியப்பட்டிருக்கும் ஆனால் இங்கு அனைத்து அரசியல் வழக்குகளும் ரசிய அரசின் வழிகாட்டல்படியே தான் நடக்கின்றன. இந்த வ்ழக்கு புதினால் ஆரம்பிக்கப்பட்டது என்பதால் அவர் தான் இதன் தீர்ப்பை வழங்குவார்” என்று வழக்கு விசாரணைக்கு வரும் போதே போராட்டக்காரரகள் தங்கள் அதிருப்தியை தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள 21வயது டென்னிஸ் லுட்ஸ்க்விச் என்பவரின் தாயார் ஸ்டெல்லா அன்டன் “இந்த வழக்கு பழிவாங்கும் நடவடிக்கை, மக்களை அச்சுறுத்தும் முயற்சி” என்று விமர்சித்துள்ளார். சட்டையில்லாமல் இரத்தக்கறையுடன் போராட்டக் களத்திலிருந்து இழுத்து செல்லப்பட்ட லுட்ஸ்க்விச் தான் போலீசை தாக்கவில்லை என்றும் அவர்கள் தான் தன்னை தாக்கியதாக் கூறி தன் மீதான் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.

ரஷ்யா - போராட்டங்கள்
ரஷ்யா முழுவதும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன.

தற்போது உக்ரைனில் நிலவும் பிரச்சனை காரணமாக சாதகமான தீர்ப்பை எதிர்பார்க்ககூட இல்லை என்றும் போலீசுக்கு எதிரான வன்முறையை சகித்துக் கொள்ள மாட்டோம் என்று தெரிவிக்கவே அரசு விரும்பும் என்றும் இந்த தீர்ப்பின் பின்னால் உள்ள அரசியலை அம்பலப்படுத்துகிறார் ஸ்டெல்லா அன்டன்.

“இந்த தீர்ப்பு அரசியல் ரீதியிலானது. கிரெம்ளின் மாளிகையின் உத்தரவை ஏற்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது” என்றும் எதிர்க்கட்சி தலைவர் போரிஸ் நெம்ஸ்டோவ் உள்ளிட்ட பலர் விமர்சித்துள்ளனர். சர்வதேச மன்னிப்பு சபை இந்த தீர்ப்பு அநீதியானது என்று கண்டித்துள்ளதோடு வழக்கு விசாரணையை நாடகம் என்று வர்ணித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு எதிராக போராட்டம் நடத்திய நூற்றுக்கு மேற்பட்டோரை போலீசார் கைது செய்துள்ளனர்.

இந்த போராட்டம் மட்டுமல்ல ரசியா முழுவதும் போராட்டங்கள் ஒடுக்கப்படுகின்றன. 2012-ம் ஆண்டிற்கு பிறகு மாஸ்கோவை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும் சுமார் 5000 பேர் அரச எதிர்ப்பு போராட்டங்களில் பங்கெடுத்தார்கள் என்று கூறி கைது செய்யப்பட்டுள்ளனர். அதுபோக ரசியாவில் போராட்டங்களுக்கு அரசின் அனுமதி கிடைப்பதை குதிரை கொம்பாக்கும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

புதின் முகமூடி
புதின் முகமூடி அணிந்த ஆர்ப்பாட்டக்காரர்

இதையும் மீறி நடக்கும் அரசு எதிர்ப்பு போராட்டங்களும் போலீசை கொண்டு ஒடுக்கப்படுகின்றன. பெரிய அளவிலான போராட்டங்கள் என்றில்லை தனிநபர் போராட்டம் கூட அனுமதிக்கப்படுவதில்லை. 2012 நவம்பர் மாதம் ஒரு பல்கலைக்கழகத்திற்கு எதிரில் தனிநபர் போராட்டம் நடத்திய இருவரை அனுமதியில்லாமல் பொதுக்கூட்டம் நடத்தியதாக கூறி  காவல்துறை கைது செய்திருக்கிறது. போராட்டம்  மட்டுமல்லாமல் அரசை எதிர்க்கும் எந்த நிகழ்வும் அனுமதிக்கப்படுவதில்லை. புதினை கேலியாக் சித்தரிக்கும் படம் வைத்ததற்காக செயின்ட் பீட்டர்ஸ்பர்க் அருங்காட்சியகத்திற்கு பத்துநாட்களுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டு பின்னர் அந்த படங்களை போலீஸ் பறிமுதல் செய்திருக்கிறது.

சோசலிசத்தின் சாதனைகளை ரசியாவின் சாதனைகளாக காட்டுவது, உக்ரைன் பிரச்சனையை தொடர்ந்து கீரிமீயா இணைப்பு, மேற்குலக்கு அடிபணியாமை என்று ரசிய தேசிய பெருமிதத்தை வளர்த்து அதன் போர்வையில் தனக்கு எதிரான போராட்டங்களை நசுக்கி வருகிறார் விளாடிமிர் புதின். ஏகாதிபத்தியங்களுக்கிடையிலான  மோதல் போக்குகள் முதலில் காவு கேட்பது மக்களின் ஜனநாயக உரிமைகளைத்தான். தற்போது கீரிமியா இணைப்பு காரணமாக புதினின் செல்வாக்கு முன்னெப்போதையும் விட அதிகரித்திருப்பதாக ஊடக கணிப்புகள் கூறுகின்றன. இதன்படி புதினின் எதிர்ப்பாளர்களுக்கு எந்த உரிமையும் நீதியும் இனி கிடைக்காது.

கம்யூனிச சோவியத்தை வீழ்த்திவிட்டோம் என்று மார்தட்டிய முதலாளித்துவம் குறைந்தபட்ச ஜனநாயக உரிமைகளை கூட மக்களிடமிருந்து பறித்து வருகிறது. சோவியத் யூனியனில் அடக்குமுறை இருந்தது என்று புளுகிய மேற்குலகம், தான் கொண்டு வந்த ஜனநாயகத்தை தானே அம்பலப்படுத்தும்படி வரலாறு பழிவாங்கி விட்டது.