privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைஇலக்கிய விமரிசனங்கள்ஜோ டி குரூஸ் : மனிதம் இல்லாதவனுக்கு இலக்கியம் ஒரு கேடா ?

ஜோ டி குரூஸ் : மனிதம் இல்லாதவனுக்கு இலக்கியம் ஒரு கேடா ?

-

சாகித்திய அகாடமி விருது வென்றதால் பிரபலமானவரும், மீனவ மக்களின் நலன் பேணுபவராக, தன்னை காட்டிக்கொள்பவரும்தான் ஜோ டி குரூஸ் என்ற எழுத்தாளர் . இவர் எழுதிய “ஆழி சூழ் உலகு, கொற்கை” எனும் இருநாவல்களில் “கொற்கை” நாவலுக்குத்தான் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

ஆழி சூழ் உலகு
ஆழி சூழ் உலகு – நாவல் எழுதும் போது குரூஸின் மனதில் காவி குடியேறியிருக்கவில்லை.

இந்த விருதுக்கு முன்பே இவர் தனது அரசியல், தத்துவ நோக்கை பார்ப்பனியத்திடமிருந்து பெற்றுக் கொண்டதாக மாறிப் போனார். இதன் தொடர்ச்சியாக ‘இந்திய ராஜபக்சே’ கொலைகார மோடி பிரதமராக வருவதை ஆதரித்து சமீபத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 2002 குஜராத் முசுலீம் மக்கள் இனப்படுகொலையின் நாயகனை பகிரங்கமாக ஆதரிக்கும் முடிவையடுத்து அவர் எழுதிய “ஆழி சூழ் உலகு” நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடவிருந்த நவயனா பதிப்பகம், பதிப்பித்து வெளியிடும் பணியினை நிறுத்துவதாக அறிவித்தது. நாவலை மொழிபெயர்த்த எழுத்தாளர் – ஆய்வாளர் வ.கீதாவும் ஜோ டி குரூஸுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக தனது மொழிபெயர்ப்பை திரும்பப் பெறுவதாக அறிவித்திருக்கிறார்.

முதலில் அரசியலிருந்து துண்டிக்கப்பட்ட கலை இலக்கியம், எழுத்தாளர் சுதந்திரம் போன்ற போதை வஸ்துக்கள் சூழ்ந்திருக்கும் இலக்கிய உலகில், இப்படி ஒரு முடிவை எடுத்ததற்காக நவயனா பதிப்பகத்திற்கும், வ.கீதாவுக்கும் நமது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வோம்.

மோடிக்கு ஆதரவளிக்க கோரி ஃபேஸ்புக்கில் பிரச்சாரம் செய்திருந்த குரூஸ், மோடி ஒரு புரட்சியாளர், தொலைநோக்கு பார்வை கொண்டவர், தன் செயலுக்கு தானே பொறுப்பேற்கிற(!) தகமையாளர், இந்திய கடற்கரை மக்களின் வாழ்க்கையை புரிந்து கொண்டவர் என்றெல்லாம் அடுக்கிவிட்டு அதனால் மோடியை ஆதரிக்குமாறும் கேட்டுக் கொண்டிருந்தார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நவயனா பதிப்பகம்,  மூன்று தலைமுறை மீனவமக்களின் தனித்துவமான வரலாற்றை தன் நாவலில் பதிவு செய்த எழுத்தாளரான ஜோடிகுரூஸ், மோடி போன்ற ஒரு பாசிஸ்டை ‘தொலைநோக்குடையவர்’ என்று கூறி ஆதரிப்பது தங்களுக்கு அதிர்ச்சியும் கவலையும் அளிப்பதாகவும், மோடி ஆதரவு என்பது அவரது தனிப்பட்ட கருத்து என்ற போதிலும் இது போன்ற நபர்களுக்கு தங்கள் பதிப்பகத்தில் எந்த இடமுமில்லை என்றும் கூறி புத்தகத்தை பதிப்பிக்கும் முடிவை திரும்ப பெற்றுக் கொண்டுள்ளது. பதிப்பிக்கும் முடிவை திரும்பப் பெறுவதால் ஏற்படும் இழப்பைக் குறித்த கவலையை விட ஜோ-டி-குரூஸ் எடுத்திருக்கும் அரசியல் நிலைப்பாடு குறித்து தாங்கள் அதிகம் கவலைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. நாவல் வெளிவரும் முன்னரே குரூஸ் குறித்து தெரிய வந்தது மகிழ்ச்சி என்றும் அறிவித்துள்ளது.

வ.கீதா
வ.கீதாவுக்கும் நவயானா பதிப்பகத்துக்கும் நமது பாராட்டினைத் தெரிவித்துக் கொள்வோம்.

இந்த புத்தகத்தை மொழிபெயர்த்துள்ள வ.கீதா, வெளியிட்டுள்ள செய்தியில், மோடியை ஆதரித்து ஜோ-டி-குரூசின் அறிக்கையை படித்து தான் வேதனையடைந்ததாகவும், அவருக்கு தனிப்பட்ட அரசியல் கருத்தை கூற எல்லா உரிமையும் இருக்கிறது என்றும், ஆனால் மோடியுடன் தொடர்புடைய எவருடனும் இணைந்து செயல்பட தான் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் 2002  குஜராத்தை படுகொலைகளை நாம் மறக்கக் கூடாது, யாரையும் மறக்கவிடக்கூடாது என்றும் தெரிவித்தவர்,  ஜோ-டி-குரூசின் ஆழி சூழ் உலகு மீனவ மக்களின் வாழ்வை படம் பிடிக்கும் சிறப்பான நாவல், அதை ஆதரிப்பதாகவும், ஆனால் குரூஸ் தன் எழுத்தாற்றலை ஒரு அபாயகரமான பாசிச அரசியலுக்கு விற்க முடிவு செய்துள்ளது குறித்து மிகவும் கவலைப்படுவதாகவும் அதனால் தன் மொழிபெயர்ப்பை திரும்ப பெற்றுக் கொள்வதாகவும் அறிவித்துள்ளார்.

புத்தகம் பதிப்பிப்பது இவ்வாறு முடிவுக்கு வந்ததும் தனக்கு அநீதி இழைக்கப்பட்டிருப்பதாக மோடியை தூக்கி பிடிக்கும் கார்ப்பரேட் ஊடகங்களில் குய்யோ முய்யோ என்று குதிக்கிறார் குரூஸ். மீனவ மக்களுக்கு மட்டுமல்லாமல் மொத்த சமூகத்திற்கும் அநீதி இழைத்திருக்கும் குரூஸ், “ஏழைகளை பற்றி எழுதினால் அதற்காக என்னை இடதுசாரி என்று நீங்களாகவே எப்படி கருதிக் கொள்ளலாம்?” என்று இப்புத்தகத்தை  பதிப்பிக்க முன்வந்த நவயனா பதிப்பகத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆயிரக்கணக்கான மக்களை ஈவு இரக்கமில்லாமல் கொன்றொழித்த கொலைகாரனை கண்டிப்பதற்கு இடதுசாரியாகத்தான் இருக்க வேண்டும் என்பதல்ல, ஒரு மனிதனாக இருந்தாலே போதும். அப்படி குறைந்தபட்ச மனிதநேயம் கூட இல்லாத குரூஸ் ஒரு இலக்கியவாதியாக இருந்து என்ன பயன்? மனிதபிமானம் கூட இல்லாத ஒரு நபருக்கு இலக்கியமோ இல்லை நாவலோ அவை வரவேற்பை பெற்றிருந்தாலும் கூட  அதை வைத்து மட்டும் தகுதியோ அங்கீகாரமோ கோர முடியாது.

காவி பயங்கரவாதம்
‘குரூஸின் மீனவ மக்களுக்காக ‘போராடும்’ மோடியின் காவி பயங்கரவாதி!’

இதுதான் இலட்சணமென்றால் குரூஸை நாம் ஒரு மனிதனாக ஏற்பதே சாத்தியமில்லை. இதற்கு மேல் இவரை மனித குலத்திற்காகப் போராடும் இடதுசாரியாக யாராவது கருதினால் அது நிச்சயமாக பெரும் பிழைதான். நாங்களும் இதற்காக சம்பந்தப்பட்டவர்களை ‘கண்டிக்கின்றோம்’.

மேலும், தான் மோடியை ஆதரிப்பதற்கான காரணங்களையும் தெளிவுபடுத்தியுள்ளார் குரூஸ். குஜராத் மாடல் வளர்ச்சியும், உறுதியான தலைமையும் தான் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்று உணர்ந்திருப்பதாலேயே இவர் மோடியை ஆதரிக்கிறாராம். வேலை நிமித்தமாக குஜராத்திற்கு 12 ஆண்டுகளாக சென்று வருவதாகவும் குஜராத்தின் வளர்ச்சி குறித்து அறிந்திருப்பதாகவும், மோடி  ஆளும் வர்க்கத்தை பயன்படுத்தி ஏழைகளை உயர்த்துவதாகவும் தெரிவித்துள்ளார் குரூஸ்.

குரூஸ் அடுக்கிய இந்த வார்த்தைகளைத்தான் தமிழக தொலைக்காட்சிகளில் பாஜக கோயாபல்ஸுகள் அடித்து பேசுகிறார்கள். இதையே கோயாபல்ஸ்தனத்தில் கொட்டை போட்ட அரவிந்த நீலகண்டன் போன்ற பெருச்சாளிகளிடம் பேசி உள்ளே இறக்கியிருக்கிறார் குரூஸ். இதற்கு நம்பகத்தன்மை வேண்டும் என்பதற்காக, தான் குஜராத்திற்கு 12 வருடமாக சென்று வருவதாக கூறுகிறார். சரி, வளர்ச்சி எனும் இந்த பொய் மூட்டையை விடுவோம், இத்தனை ஆண்டுகளில் அவர் குஜராத் கலவரங்களில் உறவுகளையும், வாழ்வையும் இழந்த ஒரு முசுலீமைக் கூட சந்திக்கவில்லையா? இல்லை அவர்களது குடியிருப்புகளுக்கோ, தடுப்பு முகாம்களுக்கோ போவதற்கு வழி தெரியவில்லையா? இசுலாமியர்களை விடுங்கள், தற்கொலை செய்த விவசாயிகள், மலத்தை கையால் அள்ளும் தொழிலாளிகள், வெளி மாநிலங்களில் இருந்து வந்து குறைந்த கூலிக்கு கொத்தடிமையாக இருக்கும் தொழிலாளிகள் இவர்களைக் கூட குரூஸ் ஏன் சந்திக்கவில்லை?

தமிழகத்தில் குமுதம் முதலாளி, ஜூவி ஆசிரியர் குழுவினர் உட்பட நாடெங்கும் உள்ள ஊடகங்களை மோடி அரசாங்கம்  அழைத்து வந்து செட்டப் காட்சிகளையும், கணக்குகளையும் காட்டி பிரச்சாரம் செய்கின்றனர். அதையே தனது சொந்த அனுபவமாக முன்வைக்கிறார் குரூஸ். இதனால் குஜராத் போனவர்களெல்லாம் குஜராத் மக்களைப் பற்றி தெரிந்தவர்கள் என்பது கோயாபல்ஸ் கோமகன்களது உத்தியே அன்றி உண்மை அல்ல.

குஜராத்தில் ஒடுக்கப்பட்ட இசுலாமிய மக்களையும் இதர உழைக்கும் மக்களையும் கண்டுகொள்ளவில்லை என்பதிலிருந்தே இவர் தமிழக மீனவ மக்களுக்காக கவலைப்படுவது நாடகம் என்பது புரிகிறது.

மோடி, அம்பானி, டாடா
குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்

ஏழைகளை உயர்த்த ஆளும் வர்க்கத்தை மோடி பயன்படுத்துவதாக குரூஸ் சொல்கிறார். இது தான் பித்தலாட்டத்தின் உச்சகட்டம். ஜோ-டி-குரூசின் நேர்மையை இதன் மூலம் யாரும் உரசிப் பார்த்துக் கொள்ளலாம். குஜராத்தில் தொழிலாளர்களின் சராசரி ஊதியம் நகர்ப்புறத்தில் 106 ரூபாய், கிராமப்புறத்தில் 86ரூபாய். இந்தியாவிலேயே குறைந்த ஊதியம் குஜராத்தில்தான். இதை எதிர்த்து தொழிலாளர்கள் போராட முடியாது மீறி போராடினால் போலீசின் குண்டாந்தடி தான் வரும். இப்படி தொழிலாளர்களை சுரண்ட கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வாய்பளிப்பதால் தான் அவரை வளர்ச்சியின் நாயகன் என்று கொண்டாடுகிறார்கள் முதலாளிகள்.

குரூஸ் சொல்கிறபடி குஜராத்தில் ஏற்றம் பெறும் ஏழைகள் யாரென்றால் அதானி, டாடா, அம்பானி போன்ற ஒரு வேளை கஞ்சிக்கு வழியில்லாதவர்கள்தான்.. மற்றபடி உண்மையான ஏழைகளை சிவலோக பதவிக்கு தான் உயர்த்தியிருக்கிறார். இதை அங்கு நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் மூலம் புரிந்து கொள்ளலாம். 2012-ல் மட்டும்  அதிகாரபூர்வ புள்ளிவிவரப்படி 564 விவசாயிகள் குஜராத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

ஆழி சூழ் உலகு
கடல் எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயின் மடியில், வாழ்வதற்காக கருணையோடும் வீரத்தோடும் போராடும் மீனவ மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கையை உயிர்ப்போடு சித்தரித்த “ஆழி சூழ் உலகு”

ம.க.இ.க உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் குஜராத் வளர்ச்சியின் மாயையை தமிழகத்தில் திரை கிழித்த பிறகு,  குஜராத்தின் வளர்ச்சி குறித்த பம்மாத்து முன்பு போல் அப்படியே செல்லுபடியாகாது என்பதால் ஜூ.வி யே கூட தன்னை நடுநிலையாளனாக காட்டிக்கொள்ள குஜராத்தின் பலவீனங்களை துளியாவது பட்டியலிடும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. இது ஒரு ஏமாற்றும் தந்திரம் என்றாலும் மட்டையடியாக வளர்ச்சிதான் என்று சொன்னால் மதிப்பு இருக்காது.

ஒரு வேளை குரூஸ் எதுவும் தெரியாத அப்பாவி என்றால் முதலாளித்துவ அமைப்புகளே தூக்கிப் பிடிக்கும் குறியீடுகளிலும் கூட குஜராத் பின்தங்கியிருக்கிறது என்பதோடு தமிழ்நாடு முன்னிடங்களில் இருக்கிறது என்பதை நினைவூட்ட சில புள்ளிவிவரங்கள்.

வறுமைக்கோட்டுக்கு கீழே வாழும் ஏழைகள் குஜராத்தில் 23% தமிழகத்தில் 17% கேரளாவில் 12% தான். கல்வியறிவு பெற்றோர் எண்ணிக்கையில் இந்தியாவில் குஜராத்திற்கு 18-வது இடம், மாநிலத்தின் உற்பத்தி மொத்தத்தில் மராட்டியம் முதலிடம், தமிழகம் மூன்றாமிடம், குஜராத் ஐந்தாமிடம். கடந்த 12 ஆண்டுகளில் தொழில் முதலீடுகளின் வரவில் மகாராட்டிரம் முதலிடம், தமிழகம் 4வது இடம், குஜராத் 5வது இடம்! குஜராத்தின் வளர்ச்சியை அம்பலப்படுத்தி வினவில் ஏராளமான கட்டுரைகள் வந்துள்ளன.

அதே நேரம் மேற்கண்ட விவரங்கள் குறித்து அறியாத அளவுக்கு ஜோ-டி-குரூஸ் அவ்வளவு முட்டாளாக இருக்க வாய்பில்லை. மோடியை ‘டெவலெப்மன்ட்’ என்ற பெயரில் ஆதரிக்கும், ஏதோ ஒரு சாதாரண நடுத்தர வர்க்க கோயிந்து கிடையாது இவர். இந்துத்துவ கருத்தியலை கடைவிரிக்கும் இவரது பிரசங்கங்கள் யூடியூபிலும், இந்துத்துவ ஆதரவு தளங்களிலும் ஏராளம் காணக் கிடைக்கின்றது. ஆக இவர் மோடியை ஆதரிப்பதன் பின்னணி, வளர்ச்சியோ வெங்காயமோ கிடையாது. பார்ப்பனிய இந்துமதவெறி பாசிசத்தை இவர் கருத்தளவில் மனதார ஏற்றுக் கொண்டுள்ளார்.

நெல்லை மாவட்டம் உவரியில் மீனவ குடும்பத்தில் பிறந்த இவர் நெய்தல் நிலமக்களின் வாழ்வையும்,  அவர்கள் மீதான கத்தோலிக்க திருச்சபையின் சுரண்டல்களையும் உள்ளடக்கி எழுதிய முதல் நாவலான ஆழி சூழ் உலகு தமிழ் இலக்கிய உலகில் நல்ல வரவேற்பை பெற்றது. கடல் எனும் பிரம்மாண்டமான இயற்கைத் தாயின் மடியில், வாழ்வதற்காக கருணையோடும் வீரத்தோடும் போராடும் மீனவ மக்களின் ரத்தமும் சதையுமான வாழ்க்கை அந்த நாவலில் உயிர்ப்போடு இருப்பது உண்மையே.

ஜோ டி குரூஸ்
ஒரு வேளை இளவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு சென்று ‘மீன் நாற்றத்தை’ கழுவி சுத்தப்படுத்தி ஊதுபத்தி – சாம்பிராணியாக குரூஸ் மாற்றப்பட்டிருந்தால் நமக்கு, “ஆழி சூழ் உலகி”ற்கு பதில் ‘காவி கொல் கடற்கரை’தான் கிடைத்திருக்கும்.

இந்த நாவலில் இடம்பெற்றிருக்கும் காலம் அவரது இள வயது ஞாபக சேமிப்பில் மட்டும் இருப்பதால், நல்ல வேளையாக நாவலில் இந்துத்துவம் இல்லை. ஆனால் நாவல் எழுதப்பட்ட வயது, வேலை நிமித்தம் ஏற்பட்ட வர்க்க மாற்றம், நாவலை எழுதத் தூண்டிய, திருத்திய பதிப்பாளர், பிறகு ஜெயமோகன், அரவிந்தன் நீலகண்டன் என்று எல்லாமும் சேர்ந்து அவரை இந்துஞான மரபில் இழுத்துக் கொண்டிருந்த போது அதில் ஊற்றப்படும் நெருப்பாக திருச்சபை பாவி பாதிரிகள் நடந்து கொண்டனர். ஒரு வேளை இளவயதிலேயே ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களுக்கு சென்று ‘மீன் நாற்றத்தை’ கழுவி சுத்தப்படுத்தி ஊதுபத்தி – சாம்பிராணியாக குரூஸ் மாற்றப்பட்டிருந்தால் நமக்கு, “ஆழி சூழ் உலகி”ற்கு பதில் ‘காவி கொல் கடற்கரை’தான் கிடைத்திருக்கும்.

இதனிடையில் ஆழிசூழ் உலகில் திருச்சபையை நாறடித்து விட்டார் என்று குரூஸ் ஊர் விலக்கம் செய்யப்பட்டார். அவரது உவரி வீடும் தாக்கப்பட்டது. இது குரூஸுக்கு தாங்கவொண்ணாத வடுவாக அமைந்து விட்டது. அந்த வடுவை பயன்படுத்திக் கொண்டுதான் ஆர்.எஸ்.எஸ் அயோக்கியர்கள் அவரது சிந்தனையில் காவி வண்ண ரோடு போட்டிருக்கிறார்கள். இதை தொடர்ந்து குரூஸ், கத்தோலிக்க திருச்சபைக்கு எதிராக இருக்க வேண்டி நிர்ப்பந்திக்கப்பட்டார். இப்படித்தான் அவரது கத்தோலிக்க ஆதிக்க எதிர்ப்பு பார்ப்பனியத்திற்கு மடை மாற்றப்பட்டது.

கத்தோலிக்கம் கடற்கரை மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளை விலாவரியாக விளக்கும் குரூஸ், தன் பாரம்பரிய வேர்களை பார்ப்பனிய எதிர்ப்பு மரபில் தேடுவதற்கு பதில் பார்ப்பனியத்திலேயே தேடி தஞ்சம் அடைந்தார். மதங்கள் அனைத்துமே தோன்றிய காலம் தவிர்த்து ஆளும் வர்க்க ஆன்மீக அடியாட்களாக விரைவிலேயே மாறினாலும் இந்துமதம் மட்டும்தான் தோற்றத்திலேயே ஆளும் வர்க்கத்தின் நோக்கை நிறைவேற்றி வருகிறது. கிறித்தவம் இந்தியாவிற்குள் நுழைந்ததற்கு வேண்டுமானால் காலனிய நோக்கம் இருந்தாலும், வளர்ந்ததற்கு காரணம் பார்ப்பனிய கொடுங்கோன்மைதான். இது குறித்து கண்ணை மறைக்கும் காவிப் புழுதி தொடரில் நிறைய கட்டுரைகள் இருப்பதால் இங்கே தவிர்க்கிறோம்.

ஆக வர்ணாசிரம சாதிய கொடுமைகள் பொறுக்க முடியாமல் தான் மக்கள் வேறு மதம் மாறினார்கள். ஆனால் விரைவிலேயே கிறித்தவ மதமும் பார்ப்பனியத்தின் வருணாசிரமத்தை ஏற்றுக் கொண்டுதான் இங்கே நீடிக்க முடிந்தது. ஒடுக்கப்பட்ட பழங்குடி, தாழ்த்தப்பட்ட, மீனவ மக்களுக்கு கிறித்தவம்தான் முதன் முதலில்தான் சேவை செய்தது என்றாலும் நிறுவன ரீதியில் அது பார்ப்பனிய சமூக அதிகாரத்தை ஏற்றுக் கொண்டே செயல்பட்டது. இந்த வரலாற்று உண்மைகளை மறுத்து ஆர்.எஸ்.எஸ் கும்பல் முன் வைக்கும், இந்துமதத்தில் சாதி இல்லை – இடைச் செறுகல், வியாசர் ஒரு மீனவப் பெண்ணின் மகன், பரதவ மக்கள் தொன்மையான இந்துமத நாகரீகத்தின் தொல்குடிகள், கிறித்தவ-இசுலாம் அன்னிய சதி, பாரதத்தை குலைக்க கிறித்தவ-இசுலாமிய நாடுகள் சதி போன்ற கோயாபல்ஸ் விளக்கத்தில் திளைத்த குரூஸ் தற்போது அவற்றையே நம்புகிறார், பேசி வருகிறார்.

தன் இந்துத்துவ சித்தாந்த அரிப்பின் தொடர்ச்சியாக மோடியை ஆதரிக்கும் இவர் அதை விடுத்து மோடி பிரதமாரவது தான் மீனவ மக்களுக்கு நலன்னுக்குகந்தது என்று அதை மீனவ மக்களின் மேல் ஏற்றி கூறுவது மோசடியானது, வன்மையாக கண்டிக்கத்தக்கது. மீனவ மக்களின் வரலாறும், நாட்டின் வரலாற்றுணவர்வும் தெரியாமல் தன்னை மீனவ மக்களின் பிரதிநிதியாக இவர் முன்வைப்பது மேட்டிமைத்தனமானது. மேலும் அந்த மக்களின் வாழ்வை மாற்றுவதற்கு இவர் தன்னறிய எந்த விதமான சமூக, அரசியல் போராட்டங்களிலும் கலந்து கொண்டதில்லை. அவையெல்லாம் ‘கீழ்த்தரமானது’ என்று கருதும் சிற்றிலக்கியவாதிகளின் சமூக விரோத சிந்தனைதான் இவருடையதும்.  மேலும் சாகித்ய அகாடமி விருது பெற்றது மீனவ மக்களுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று உளறுமளவுதான் இவருடைய சமூக பார்வை உள்ளது.

கூடங்குளம் மக்கள் போராட்டம்
கூடங்குளம் மக்கள் போராட்டம்

ஆளும் வர்க்கங்களின் இந்தியாவும், அரசும்தான் மீனவர் உள்ளிட்ட உழைக்கும் மக்களை ஒடுக்கி வருகிறது. அந்த இந்தியாவில் இருந்து வரும் ஒரு அரசு விருதை ஏற்க மறுத்தால்தான் ஒருவன் சமூகப் போராளியாக இருக்க முடியும். மாறாக அடிப்பவனது பாராட்டையே உச்சி மோந்தால் அது அடிமைத்தனமே அன்றி விடுதலை உணர்வல்ல. இந்த இலட்சணத்தில் தனக்கு கிடைத்த விருதை மீனவ மக்களுக்கும் மாற்றி கொடுத்தால் தான் மட்டுமல்ல, மக்களும் அடிமையாகவே இருந்து விட்டு போகவேண்டும் என்ற அதிகாரத்துவமே அன்றி வேறல்ல.

மீனவ மக்களுக்கு உயிராதாரமாக திகழும் கடலையும கடற்கரையையும் காப்பதற்காக இன்று கூடங்குளம் அணுவுலையையும், தாதுமணல் கொள்ளையையும் எதிர்த்து போராடி வருகிறார்கள் கடற்கரை பகுதிமக்கள். அந்த மீனவ மக்களின் போராட்டத்தை கொச்சைப்படுத்தி அந்நிய கைக்கூலிகள் என்றும் கிறித்தவ பாதிரிகளின் சதி என்றும் இன்றளவும் வன்மம் கக்கிவரும் இந்துமதவெறி கும்பலுடன் கொஞ்சி குலாவி வெட்கமில்லாமல் அவர்களுக்கு ஓட்டும் கேட்கிறார் குரூஸ். ஏற்கனவே அவர் தன்னை மீனவ மக்களின் பிரதிநிதி என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் இனி  துரோகிதான். தமிழினவாதியான வைகோ செய்த துரோகத்தைப் போல, மீனவ மக்களை காட்டி கொடுக்கிறார் குரூஸ்.

சில மாதங்களுக்கு முந்தைய ஆனந்தவிகடனில் பின்வரும் கேள்வியை எழுப்பியிருந்தார் குரூஸ். “அணு உலைக்கு எதிராக பல ஆண்டுகளாக மக்கள் போராடுகிறார்கள். ஆனால், கத்தோலிக்கம் மிகப் பெரிய கள்ள மௌனம் சாதிக்கிறது.”  உண்மை தான். சரி, நீங்கள்ஓட்டு போடச்சொல்லும் மோடி இடிந்தகரைக்கு வந்து அணுவுலையை மூட வேண்டும் என்று அறிவித்தாரா என்ன?  கத்தோலிக்கமாவது கள்ள மவுனம் தான் சாதிக்கிறது, ஆனால ஜோ-டி-குரூசின் ஆசி பெற்ற இந்துத்துவா கும்பல் தான் இடிந்தகரை போராட்ட குழு பெண்களை திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தாக்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்து முன்னணி தாக்குதல்
திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் கூடங்குளம் எதிர்ப்பு போராட்டக் குழுவினரை தாக்கிய இந்து முன்னணியினருக்கு எதிராக செருப்பைக் காட்டும் பெண்.

பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவை செய்வதற்காக, இந்திய கடற்கரை நெடுகிலும் அணுவுலைகளை நிறுவி நெய்தல் நில மக்களின் வாழ்வாதாரமான கடலை அழிக்கத் துடிக்கும் கட்சிகளில் ஒன்றான பா.ஜ.க வை ஆதரித்துக்கொண்டே ஆழிசூழ்உலகு என்றும், நெய்தல் நிலம் என்றும் பேசும் நயவஞ்சகம் கொண்டவராகத்தான் இருக்கிறார் ஜோ-டி-குரூஸ். சொந்த மக்களையே ஏமாற்றும் இப்படிப்பட்ட பித்தலாட்டகாரரின் கண்கள், குஜராத்தின் முஸ்லீம்களுக்காக கண்ணீர் வடிக்கும் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்?

பொதுவில் அடுத்தவருக்காக கவலைப்படும் மீனவ மக்கள் மத்தியிலிருந்து எப்படி இப்படி ஒருவர் பேசமுடியும்? அவரது நாவலிலேயே தனது உயிரை தியாகம் செய்து கொண்டு இளையவர்களின் உயிரைக் காத்த மீனவர்கள் ஏராளமிருக்கிறார்கள். ஆனால் குருஸோ தனது நலனுக்காக மீனவ மக்களை பலிகடா ஆக்குகிறார். அந்த வகையில் ஆழி சூழ் உலகு எனும் நாவலே குரூஸை காறித் துப்பும். ஆமாம், குரூஸ் அவர்களே, அந்த நாவல் இனியும் உங்களுக்கு சொந்தமில்லை என்று அறிவியுங்கள், நேர்மையிருந்தால்.

கடற்கரை சமூகத்தில் பிறந்திருந்தாலும் ஜோ-டி-குரூஸ் போன்றவர்கள் வர்க்க ரீதியில் சாதாரண மீனவர் அல்லர். இவர் மிகப்பெரிய தனியார் நிறுவனத்தில் தலைமை பொறுப்பில் வேலை செய்துவருபவர். இவருக்கும் உழைக்கும் மீனவர்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. இருவரின் வாழ்க்கையும் தன்மையிலேயே வெவ்வேறானவை. அதனால் தான் தன்னுடைய பழைய நினைவுகளில் ஆழி சூழ் உலகு படைத்த இவர் இன்று கந்த புராணத்தில் தன் வரலாற்றை தேடிக்கொண்டிக்கிறார். உவரிக்கும் அயோத்திக்கும் அன்டர்கிரவுன்ட் லிங்க் இருப்பதாக உளறுகிறார். உழைக்கும் கடல்சார் பழங்குடிகளான மீனவர்களிடம் இயல்பாகவே இருக்கும் முரட்டுத்தனம் நிறைந்த அன்பு, மனிதநேயம் போன்றவை இது போன்ற கோட்டு சூட்டு போட்ட அதுவும் காவி டை கட்டும் ஜென்டில்மென்களிடம் இருக்க வாய்ப்பில்லை.

இந்தியா முழுவதும் மோடி அலை வீசுவதாக ஆர்.எஸ்.எஸ் கும்பலும், கார்ப்பரேட் ஊடங்களும் கூறித்திரியும் வேளையில் தமிழகத்திலிருந்து இலக்கிய உலகில் இப்படி ஒரு எதிர்ப்பு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதுவே வட இந்தியாவிலோ இல்லை ஏனைய மாநிலங்களிலோ நடப்பது அரிது. காரணம் இங்கே பெரியாரும், திராவிட இயக்கமும் பொதுவுடமை இயக்கத்தினரும் செய்த களப்பணி. இன்றைக்கு பெரியார் மரபு இங்கே இல்லாமல் செய்யும் பணி நடைபெற்று வந்தாலும் அதை தொடர்வதற்கு புரட்சிர அமைப்புகள் களத்தில் நிற்கும்.

ஜெயமோகன்
ஜெயமோகன் போன்ற அற்பங்கள் இதை ஏதோ இடதுசாரி சதிவேலை என்றும், இந்தியா முழுவதும் இடதுசாரி அறிஞர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் உளறுகின்றன.

மாறாக, ஜெயமோகன் போன்ற அற்பங்கள் இதை ஏதோ இடதுசாரி சதிவேலை என்றும், இந்தியா முழுவதும் இடதுசாரி அறிஞர்களே ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றும் உளறுகின்றன. ஜயேந்தரன் கைது செய்யப்பட்ட போது அவரை விடுதலை செய்ய முயன்றும், மோடி குறித்த செய்திகளை அதிகம் வெளியிடவில்லை என்று சித்தார்த் வரதராஜனை நீக்க காரணமாக இருந்த இந்து ராம்தான் இடது சாரி என்றால் ஜெயமோகன் முப்பது ஆண்டுகளாக எதையும் படிப்பதில்லை என்று தெரிகிறது. இன்று இந்தியா முழுவதும் மோடிக்கு ஆதரவாகத்தான் பேச, எழுத வேண்டும் என்று அனைத்து ஊடகங்களும், கலை இலக்கியத்துறையும் மாறிவிட்ட பின் இடதுசாரி சதி என்று உளறுவதற்கு இந்த அறிஞர் எவ்வளவு சரக்கு அடித்தாரோ தெரியவில்லை. மேலும் மோடியைப் பற்றி விமரிசிக்க கூடாது என்று பல பத்திரிகையாளர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர், நீக்கப்பட்டிருக்கின்றனர்.

இதனால்தான் தமிழகத்தில் சாகித்ய அகடாமி எனும் ஜால்ரா விருது வாங்கிய ஒரு எழுத்தாளர் மோடியை ஆதரித்தார் என்ற  காரணத்திற்காக அவரது ஆங்கில பதிப்பு முயற்சி நிறுத்தப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இதுவே வட இந்தியாவில் இருந்தால் வ.கீதா குஜராத் போலீசால் என்கவுண்டர் செய்யப்பட்டிருப்பார். அங்கே இருக்கும் ஜெயமோகன்கள் அதை நியாயப்படுத்தி எழுதவும் செய்வார்கள்.

அடுத்து இந்தப் பிரச்சினையில் இலக்கியவாதிகளும், கடைசி பெஞ்சிலாவது அறிவுஜீவி அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கும் மேன்மக்களும் எழுப்பும் கருத்துச் சுதந்தரப் பிரச்சினையை பார்க்கலாம். இந்தக் கேள்விகளுக்கு வ.கீதாவின் பதிலிலேயே விளக்கம் உள்ளது.

குறிப்பிட்ட பதிப்பகம் குரூஸின் நாவலை ஆங்கில மொழியாக்கம் செய்வதாக ஒப்பந்தம் போடுகிறது, பிறகு ரத்து செய்கிறது. இங்கே ரத்து செய்வதற்கு காரணம் எழுத்தாளரின் மனித விரோத செயல் என்று பதிப்பகம் கருத்து கூறுகிறது. சரி, இதில் எழுத்தாளர் பாதிக்கப்பட்டிருந்தால் சட்டபூர்வமாக வழக்கு போடலாம். போட்டாலும் நீதிமன்றம் அந்த நாவலை வெளியிட்டே தீர வேண்டும் என்று உத்திரவிட முடியாது. வேண்டுமானால் எழுத்தாளருக்கு நிவாரணத் தொகை கொடுக்குமாறு உத்திரவிடலாம். இவ்வளவிற்கும் நவயன்யா பதிப்பகம் இந்த நாவல் முயற்சியால் பொருளாதார இழப்பு இருக்கிறது என்றுதான் சொல்லியிருக்கிறது. மேலும் எல்லா பதிப்பங்களும் அவர்களது அரசியல் நிலைப்பாடு தொடர்புடையதாகவே நூல்களை வெளியிடுகிறார்கள்.

கிழக்கு பதிப்ப்கத்தின் பத்ரி, நக்சலைட்டுகளே இந்த நாட்டின் தேசபக்தர்கள் என்றோ, ஆனந்த விகடனில் மோடி ஒரு கேடி என்றோ, உயிர்மை பதிப்பகத்திலிருந்து திமுகவின் சமூகநீதித் தோல்வி என்றோ புத்தகங்களை போடுவார்களா? இல்லை காலச்சுவடு கண்ணன், சு.ராவின் கவிதைகள் வழியாக அவரது அற்பவாத உலகம் எனும் நூலை ஏன் வெளியிடவில்லை என்று யாராவது கேட்க முடியுமா?

ஒரு பதிப்பகம் எந்த நூல்களை தெரிவு செய்து வெளியிடுகிறது என்பது அதன் உரிமை, சுதந்திரம் என்று ஒத்துக் கொண்டால் அதே உரிமை ஒத்துக் கொண்ட நூலை ரத்து செய்வதற்கு உரிமை உள்ளது என்பதை ஏற்கவேண்டும். இங்கே இவர்கள் ஆராதிக்கும் சட்டத்தின் பார்வையிலேயே கருத்து சுதந்திரத்தை காலி செய்யலாம். இருப்பினும் இதற்கு அடுத்தபடியாக இவர்கள் எழுப்பும் தார்மீக கருத்துக்களையும் பார்க்கலாம்.

ஒரு எழுத்தாளரின் இலக்கியத்தை ஆராதிக்கும் நீங்கள் அவரது அரசியல் கருத்து சொல்லும் உரிமை காரணமாக அவரது இலக்கிய முயற்சிகளை தடை செய்தால் அது பாசிசமில்லையா என்கிறார்கள். இங்கே ஒடுக்கப்படும் மக்களின் குரலை இலக்கியத்தில் பதிவு செய்திருக்கிறார் என்பதாலேயே குரூஸின் நாவலை பாராட்டுகிறார்கள். அந்த பார்வையிலிருந்தே அவரது மோடி ஆதரவு குரலை கண்டிக்கிறார்கள், அதன் பொருட்டு அவரோடு இணைந்து செய்யும் பதிப்பக முயற்சிகளை கைவிடுகிறார்கள். இதற்கு அவர்களுக்கு உரிமை இல்லையா?

ஈழத்தமிழரின் அவலத்தை ஒருவர் நாவலாக்கி பாராட்டு பெற்ற பிறகு, அவர் ராஜபக்சேவின் ஆட்சியை ஆதரிக்கிறார் என்றால் அவரை பழைய பாராட்டிற்காக தூக்கி சுமப்போமா, இல்லை உறவை வெட்டி எறிவோமா? இது வெறுமனே நூல் அல்லது கருத்துச் சுதந்திரம் குறித்த பிரச்சினை இல்லை. சரியான கருத்துக்களுக்கும், தவறான கருத்துக்களுக்கும் நடைபெறும் போராட்டம்தான் இப்பிரச்சினையின் மையம். இதை விடுத்து கருத்து சுதந்திரம் என்ற ஒன்று அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருப்பதாக கற்பித்துக் கொண்டவர்களால் இந்த சமூகத்திற்கு எந்த விதத்திலும் பயனில்லை.

இறுதியாக ஒரு மனிதன் இலக்கியம் படைக்கிறானா, ஏன் கம்யூனிசம் பேசுகிறானா என்பதை வைத்து மட்டும் மதிப்பிட முடியாது. முதலில் அடிப்படை மனித நேயமும், மதிப்பீடுகளும் அவனிடம், வாழ்க்கையிலும், பேச்சிலும் இருக்கிறதா என்பதே முக்கியம். ஆனால் இந்த தகுதியைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒருவன் உண்மையான கம்யூனிஸ்டாக மாற முடியுமென்றால், ஒரு இலக்கியவாதிக்கு அந்த நிபந்தனை இருப்பதில்லை. காரணம் எழுதுபவன் சமூக இயக்கத்தினை அறிந்து எழுதுவதற்கும் பொறுப்பேற்று பணிபுரிவதற்கும் உள்ள வேறுபாடுதான். ஆகவேதான் எழுதுவதோ இல்லை இலக்கியம் படைப்பதோ ஒரு மனிதனின் ஆகப் பெரும் தகுதியாக கூறமுடியாது என்கிறோம்.

சுருங்கச் சொன்னால் மோடி எனும் காட்டுமிராண்டியை ஆதரிக்கும் குருஸுக்கு இலக்கியம் ஒரு கேடா என்பதே நமது கேள்வி.

வ.கீதா மற்றும் நவயன்யா பதிப்பகம் ஆகியோர் தைரியமாக மோடியின் அதிகாரத்திற்கு பயப்படாமல், குரூஸ் உடனான தொடர்பை துண்டித்தது போன்று இந்துமதவெறி பாஜகவையும், மோடியையும் தூக்கிச் சுமக்கும் வை.கோ வை கண்டிக்கவோ அவருடனான தொடர்பை துண்டித்துக் கொள்ளவோ எந்த தமிழினவாதியும் முன்வரவில்லை. ஆரியத்தை எதிர்த்து படை நடத்துபவர்களும், இந்திய ‘ஏகாதிபத்தியத்திலிருந்து’ தமிழ்தேசிய விடுதலைக்கு ‘களமாடும்’ பல உதிரி தமிழின அமைப்புகளும் வை.கோவை நிச்சயம் கண்டிக்கமாட்டார்கள் என்பதே உண்மை. என்ன செய்வது இயற்கையில் எல்லா பிராணிகளுக்குமே முதுகெலும்பு இருக்கிறதா என்ன?

இவர்கள் இல்லையென்றால் என்ன, மோடிக்கு எதிராக தமிழகம் தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் தனது பதிவை செய்து கொண்டே இருக்கிறது, இருக்கும். மோடி ஆட்சிக்கு வரும் பட்சத்தில் குரூஸின் நாவல் ஆங்கிலத்தில் மட்டுமல்ல, பல்வேறு மொழிகளிலும் கூட வெளிவரும். ஆனால் பார்ப்பனிய பாசிசத்திற்கு பல்லக்கு தூக்கிய அவரது வார்த்தைகள் ஒரு போதும் நிம்மதியைத் தந்துவிடாது. பாசிசத்திற்கும், ஒடுக்குமுறைக்கும் கொடி பிடித்த பல்வேறு மனிதர்களை – அவர்கள் இலக்கியவாதிகளாக இருந்தாலும் – வரலாறும் வரலாற்றை படைக்கும் மக்களும் குப்பைக் கூடைக்குத்தான் அனுப்பியிருக்கிறார்கள்.

–    ரவி
_______________________