privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.ககுடி, தற்கொலை, விபத்து – சாதனை படைக்கும் தமிழகம்

குடி, தற்கொலை, விபத்து – சாதனை படைக்கும் தமிழகம்

-

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை தீக்காயங்களுக்கான பிரிவின் ஆண்கள் பகுதி அது. 27 வயதான திருவண்ணாமலையை சேர்ந்த செந்தில் கடுமையான தீக்காயங்களுடன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னால் தனது மனைவியும், 4 வயது மகளும் உறங்கிக் கொண்டிருக்கும் போது தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்டார்.

டாஸ்மாக்
பெரும்பாலானோர் குடிப்பழக்கத்தின் காரணமாக சாதாரண சிறு பிரச்சனையைக்கூட எதிர்கொள்ளும் திராணியற்றவர்களாக, மது போதையின் உந்துதலால் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக டாக்டர் தெரிவிக்கிறார்.

தனது மனைவியுடன் ஏற்பட்ட தகராறினால் மண்ணெண்ணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்ட, மூன்று குழந்தைகளுக்கு தந்தையான 25 வயதுள்ள வெங்கட், கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருகிறார். தீக்காயங்களுக்கான பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டிருப்பவர்களில் பெரும்பான்மையினர் இவர்களைப் போல் இளைஞர்கள்.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்படும் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையில் 1981 முதல் 2001 வரையிலான இருபதாண்டுகளில் சராசரியாக 37 சதவீதமாக இருந்த ஆண்களின் எண்ணிக்கை இப்போது 45 சதவீதமாக அதிகரித்துள்ளதாக ஹிந்து நாளிதழில் வெளியான செய்தி குறிப்பிடுகிறது.

தற்போது தீக்காயங்கள் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆண்களில் 80% பேர் தமக்குத் தாமே தீயிட்டு கொண்டவர்கள் என தீக்காய பிரிவின் தலைமை மருத்துவர் தெரிவிக்கிறார். மேலும், பெரும்பாலானோர் குடிப்பழக்கத்தின் காரணமாக சாதாரண சிறு பிரச்சனையைக்கூட எதிர்கொள்ளும் திராணியற்றவர்களாக, மது போதையின் உந்துதலால் தற்கொலைக்கு முயன்றுள்ளதாக அவர் தெரிவிக்கிறார்.

20 ஆண்டுகளுக்கு முன்பு வரை தீயிட்டு தற்கொலை செய்து கொள்பவர்கள் பெரும்பாலும் பெண்களாகத்தான் இருந்தனர். இப்போது அதிக எண்ணிக்கையிலான ஆண்களும் தம்மை மாய்த்துக் கொள்ள தீயிட்டுக் கொள்கின்றனர். இந்த முயற்சிகளை ஏதோ தனிப்பட்ட ஒரு குடும்பத்தின் சண்டை சச்சரவாகவும் தனிநபர் ஒழுக்க பிரச்சனையாகவும் குறுக்கி பார்க்க முடியாது. முன்பு பெண்கள் அதிகம் தற்கொலை செய்ததற்கு பார்ப்பனியத்தின் ஆணாதிக்க சமூகத்தின் கொடுமைகளும், தற்போது ஆண்கள் அதிகம் தற்கொலை செய்வதற்கு முதலாளித்துவத்தின் மறுகாலனியாக்க கொடுமைகளும் காரணமாக இருக்கின்றன.

டாஸ்மாக்
டாஸ்மாக கடைகளின் பார்களில் 24 மணிநேரமும் பிளாக்கில் எல்லா சரக்குகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன.

அண்மையில் தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நாட்டிலேயே அதிகமான தற்கொலைகள் நடந்த மாநிலங்களின் பட்டியலில் தமிழகம்  முதலிடத்தில் உள்ளது. 2002-ம் ஆண்டு 11,244 பேராக இருந்த தற்கொலை செய்து கொண்டோர் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. 2012-ம் ஆண்டில் மட்டும் 16,927 தற்கொலைகள் பதிவாகியுள்ளன. தன்னைத்தானே தீயிட்டுக்கொண்டோர் எண்ணிக்கையிலும் (2,349) தமிழகமே முதலிடம் வகிக்கிறது.

2003-ம் ஆண்டு டாஸ்மாக் மூலம், அரசு நேரடியாக மது விற்பனையை துவங்கிய நாள் முதல் ஆண்டுக்கு ஆண்டு விற்பனையில் புதிய வரலாறு படைக்கப்பட்டு வருகிறது. டாஸ்மாக் விற்பனை துவங்கிய, 2003 நிதியாண்டில், ரூ 3,500 கோடியாக இருந்த விற்பனை, 2012-13 நிதியாண்டில் ரூ 21,680 கோடியாக உயர்ந்துள்ளது.  இன்று தமிழ்நாடு முழுவதும் 6,800 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளன.

துவக்கப்பட்ட காலம் முதல், 2010 வரை சராசரியாக ஆண்டுக்கு 1,500 கோடி ரூபாய் வரை விற்பனை அதிகரித்து வந்த நிலையில், 2012 நிதியாண்டில் மட்டும் 5,000 கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது. சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை குடிப்பவர்கள் அதிகமாக இருந்ததாக கணக்கிடப்பட்ட கேரளத்தில் கூட “சரக்கினால்” அரசு ஈட்டிய ஆண்டு வருவாய் ரூ 8,000 கோடி மட்டுமே.

இந்நிலையில் 2012-ம் ஆண்டின் மது விற்பனை இலக்காக ரூ 25,000 கோடியை நிர்ணயித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு வாய்மொழியாக உத்தரவிட்டது தமிழக அரசு. அதையடுத்து ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனியான இலக்குகள் நிர்ணயிக்கப்பட மாவட்ட நிர்வாகமும் ஒவ்வொரு கடைக்கும் தனித்தனி இலக்குகளை நிர்ணயித்திருந்தன. அதில் இலக்கை பூர்த்தி செய்யாத சூப்பர்வைசர்கள் 242 பேரை, இடைக்கால பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது ஜெயலலிதா அரசு.

டாஸ்மாக்
பெரும்பாலான உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆண்கள் சராசரியாக 45 வயதுக்குள் மரணமடைந்து விடுகின்றனர்.

இந்த விற்பனை இலக்கின் காரணமாக டாஸ்மாக் கடைகளின் பார்களில் 24 மணிநேரமும் பிளாக்கில் எல்லா சரக்குகளும் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. பார்களில் அதிக விலை வைத்து விற்பதால் கிடைக்கும் பணம் போலிஸ், அதிகார வர்க்கம், உள்ளூர் அரசியல் ரவுடிகளுக்கிடையில் பங்கு பிரித்துக்கொள்ளப்படுகிறது.

இன்று பெரும்பாலான உழைக்கும் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஆண்கள் சராசரியாக 45 வயதுக்குள் மரணமடைந்து விடுகின்றனர். கடும் உடலுழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடல் வலியை மறக்க குடிக்க ஆரம்பித்து பின்னர் வேலை செய்யவே குடிக்க வேண்டும் என்ற நிலைக்குள்ளாகி உடல் வலிமையை இழந்து கடைசியில் உயிரையே இழக்கின்றனர். இம்மாதிரியான உயிரிழப்புகள் தற்கொலை அல்லது விபத்து வகைப்படுத்தல்களின் கீழ் பதிவு செய்யப்படுவதில்லை.

இது ஒரு புறமென்றால் மறுபுறம் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தவறாக இருந்த குடிப்பழக்கம் இன்றைய நுகர்வு கலச்சாரத்தில் குடிப்பது ஆண்மைக்குரிய லட்சணமாகவும், இன்பம் துய்க்கும் அடையாளமாகவும் மாறியிருப்பதுடன் மொத்த சமூகமும் குடிப்பதை சகித்துக் கொள்ள பழகியிருக்கிறது இதனால், மதுவுக்கு அடிமையாகும் இளைஞர்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்பது அதிகரித்துள்ளது.

தேசிய குற்றப்பதிவு ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின் படி நாட்டிலேயே அதிகமான விபத்துகள் நடந்த மாநிலங்களின் பட்டியலிலும் கூட தமிழகம்  முதலிடத்தில் உள்ளது. 2012-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்தில் 67757 சாலை விபத்துக்கள் நடந்து 16,175 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

தற்கொலைகள், விபத்துகள் மட்டுமின்றி குடியால் ஏற்படும் இதர உயிரிழப்புகளையும் கணக்கில் கொண்டால் குடி என்பது நம்முடைய உழைப்பை சுரண்டி நம் மனதையே அடிமைப்படுத்துவதுடன் மக்களுடைய உயிரை கொத்து கொத்தாக கொன்றழிக்கும் கொலைகார சக்தியாகவும் உள்ளது.

ஆனால் இப்படி  சமூகத்தை குடிக்கு அடிமைப்படுத்தி, வேலை நிலைமைகளில் சுரண்டி வதக்கி, அரசுக்கு வருமானம் பார்த்து, மக்களை சாலை விபத்துக்களில் கொன்று, மற்றவர்களை தற்கொலை செய்ய வைத்து வருகிறது இந்த அரசு. எந்தக் கட்சி தேர்தல் வெற்றி பெற்றாலும் இதுதான் நிலைமை.

என்ன செய்யப் போகிறோம்?