புதுவைப் பல்கலைக்கழகத்தில் மாணவர் போராட்டம் வெற்றி: மாணவனைத் தாக்கிய சர்வாதிகார ரௌடிக் கும்பலை விசாரிக்க முன்வந்தது நிர்வாகம்!
கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி அன்று ராதாகிருஷ்ணன் என்ற அப்பாவி தமிழ் முதுகலை முதலாம் ஆண்டு படிக்கும் மாணவனைப் பிடித்து ஒரு சிறு குற்றச்சாட்டின் கீழ் தன்னிச்சையாக விசாரித்த புதுவை பல்கலைக்கழகத்தின் அகாடமிக் ஸ்டாஃப் காலேஜ் இயக்குனர் ஹரிஹரன் மற்றும் அவரது கைக்கூலி கும்பல் அந்த மாணவன்தான் பெண்கள் விடுதிகளுக்குள் நுழைந்து மாணவிகளை அச்சுறுத்தியவன் என்று ஒப்புக்கொள்ளச் சொல்லித் துன்புறுத்திச் சித்திரவதை செய்தது. ஆனால் பெண்கள் விடுதிக்குள் நுழைந்து, தொடர்ந்து போக்குக் காட்டித் தப்பி ஓடிக் கொண்டிருக்கும் காமுகனான உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க வக்கற்ற பாதுகாப்பு கம்பெனியும் பல்கலைக்கழகத்தின் நிகழ்வுகள் எல்லாவற்றிற்கும் தான்தான் அதிகாரி, நீதிபதி என்று கருதிக்கொண்டிருந்த ஹரிஹரனும் இந்த மாணவனை வைத்தே தங்களது கையாலாகாத் தனத்தை மறைத்துவிடலாம் என்று கணக்குப் போட்டு அந்த மாணவரைத் துன்புறுத்தி மிரட்டி பொய் வாக்குமூலம் வாங்கியது அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து ஏப்ரல் ஒன்பதாம் தேதி முதல் பெருமளவிலான மாணவர் போராட்டங்கள் வெடித்தன. இதில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தன்னை இணைத்துக் கொண்டு போராடும் மாணவர்களுக்கு ஆதரவாக துண்டறிக்கைகள் சுவரொட்டிகள் மூலம் வீச்சான பிரச்சாரங்களை மேற்கொண்டது. வளாகத்தினுள்ளும் புதுவை நகரிலும் தமிழிலும் ஆங்கிலத்திலும் இருநூறுக்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. முதல் மூன்று நாட்கள் நிர்வாக அலுவலகக் கட்டிடத்தை முற்றுகையிட்டு நிர்வாக நடவடிக்கைகளை முடக்கிய மாணவர்கள் கடந்த செவ்வாய் (ஏப்ரல் 15) அன்று இன்னும் வீரியமான முறையில் போராட்டத்தை கொண்டுசென்றனர். பு.மா.இ.மு. தோழர்களின் ஆலோசனையை ஏற்று மாணவர்கள் துண்டறிக்கைகள் தயாரித்து அவற்றை தமிழிலும் ஆங்கிலத்திலும் விடுதிகளில் உள்ள எல்லா மாணவர்களுக்கும் திங்கள் அன்று பரவலாக விநியோகித்தனர். ஆர்வத்துடன் துண்டறிக்கைகளைப் படித்த மாணவர்கள் தமது ஆதரவைத் தெரிவித்ததோடு ஹரிஹரன் கும்பலின் கொடூரச் செயலுக்கு எதிராக தமது கடும் கோபத்தையும் வெளிப்படுத்தினர். இதற்கிடையில் மாணவரை தனிமையில் வைத்து அடித்துச் சித்திரவதை செய்து அவமானப் படுத்திய ஹரிஹரன், பேராசிரியர் பூஷன், தனியார் செக்யூரிட்டி அலுவலர் ஷியாம், தனியார் செக்யூரிட்டி நிறுவனத்தின் எம்.டி. குணசேகரன் ஆகியோர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்யப் பட்டது.

ஹரிஹரன் மற்றும் பூஷன் ஆகியோர் தமது சொத்துக்களைச் சேதப்படுத்திவிட்டதாக மாணவர்கள் மீது கொடுத்த புகாரை காவல் துறைக்கு அனுப்பிய நிர்வாகம் மாணவர் ராதாகிருஷ்ணன், ஹரிஹரன் கும்பல் மீது கொடுத்த புகாரை அனுப்பாமல் கிடப்பில் போட்டது. முதலில் பல்கலைக்கழகப் பதிவாளர் ஒப்புதல் கடிதம் அனுப்பினால்தான் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்ய முடியும் என்று கூறிவந்த காவல்துறை, புரட்சிகர அமைப்புகள் பிற ஜனநாயக சக்திகள், மாணவர்கள் என்று பல தரப்புகளிலும் இருந்து நெருக்கடி முற்றவே வேறு வழியின்றி முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்தது. செவ்வாய் அன்று மாணவர்களின் போராட்டம் இன்னும் தீவிரமடையும் என்று எதிர்பார்த்த நிர்வாகம் காவல்துறையை சமரசம் பேச அனுப்பியது. ஒரு காவல் ஆய்வாளரும் உதவி ஆய்வாளரும் வந்து கூடியிருந்த மாணவர்களிடம் அமைதியாக இருக்கும்படியும் பிரதிநிதிகள் மட்டும் சென்று நிர்வாகத்திடம் பேசும்படியும் கூறினர்.
அதனை மறுத்துப் பேசிய மாணவர்கள் முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்த பிறகும் ஏன் இன்னும் ஹரிஹரன் கும்பலை கைதுசெய்யவில்லை என்று கேட்டனர். “அவர்களும்தான் உங்களில் நூறுபேர் மீது வழக்குக் கொடுத்துள்ளார்கள், உங்களையும் கைதுசெய்யலாமா?” என்று சமாளித்துக்கொண்டு கேட்க மாணவர்கள் ஆவேசத்துடன், “இப்பொழுதே கைதுசெய்யுங்கள்” என்று ஆர்ப்பரிக்க, பின்வாங்கியது காவல்துறை. “நாங்கள் நிர்வாகத்துடன் பேசுகிறோம், உங்களின் கோரிக்கைகள் ஹரிஹரன் கும்பலை பதவிநீக்கம் செய்ய வேண்டுமென்ற கோரிக்கை நியாயமானதுதான், ஆனால் வளாகத்திற்கு வெளியே ரோட்டுக்கு மட்டும் வந்துவிடாதீர்கள்” என்று கூறிச் சென்றது. பின்னர் மாணவர்கள் அணிதிரண்டு நிர்வாக அலுவலகத்தினுள் பிரவேசித்து “துணைவேந்தர் வந்து உரிய பதிலளிக்காமல் இங்கிருந்து நகர மாட்டோம்” என்று முழக்கமிட்டுவிட்டு அங்கேயே அமர்ந்துகொள்ள காவல்துறை அதிகாரிகள் துணைவேந்தருடன் பேச்சு நடத்தி கடைசியில் பேச்சுவார்த்தைக்கான கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
மாணவர்கள் துணைவேந்தரைக் கேள்விகளால் துளைக்கவே பதில்கூற முடியாமல் திணறிப் போனார் அவர்.

“நீங்கள் ஏன் ஹரிஹரன் கும்பலைப் பாதுகாக்கிறீர்கள்? யார் இந்தப் பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர், நீங்கள்தானா அல்லது ஹரிஹரனா?” என்று சரமாரியாக கேள்வி எழுப்பிய மாணவர்கள், “சரியான நடவடிக்கை எடுக்கா விட்டால் நாங்களே ஹரிஹரன் கும்பலின் மீதும் நிர்வாகத்தின் மீதும் நடவடிக்கை எடுப்போம்” என்று நேரடியாகவே எச்சரித்தனர். ஒரு விசாரணைக் குழுவை நியமித்து அக்குழு கொடுக்கும் பரிந்துரைகளை அப்படியே ஏற்றுச் செயல்படுவதாகக் கூறிய துணைவேந்தர், அதுவரை ஹரிஹரனையும் அவரது கும்பலையும் பணிநீக்கம் செய்வது சாத்தியமில்லை என்று சமாளித்தார். ஆனால் உடனடியாக அவர்களைப் பணிநீக்கம் செய்ய வேண்டுமென்று வலியுறுத்திய மாணவர்கள் உடனடியாக விசாரணை நடத்தி இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று உறுதியுடன் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அது இயலாது என்று துணைவேந்தர் கூறவே துணைவேந்தருக்கும் நிர்வாகத்திற்கும் எதிராக கோஷமிடத் தொடங்கினர். துணைவேந்தரும் பதிவாளரும் அவசரமாக வெளியேறி ஓடினர்.
தோழர்களின் ஆலோசனையின்படி அன்று மாலை பல்கலைக்கழக பேருந்துகள் வெளியேறும் நேரத்தில் மாணவர்கள் நுழைவாயிலில் கூடி ஹரிஹரன் பூஷன் உள்ளிட்டோரின் புகைப்படங்களையும் உருவ பொம்மைகளையும் செருப்பால் அடித்து நெருப்பில் பொசுக்கினர்.

பேருந்துகளில் இருந்த மாணவர்கள் தாமாகவே இறங்கிப் போராட்டத்தில் கலந்துகொண்டு விண்ணதிர ஹரிஹரன் கும்பலுக்கும் பல்கலைக்கழக நிர்வாகத்திற்கும் எதிராக முழக்கமிட்டனர். பேருந்துகளில் சென்ற பேராசிரியர்களும் அலுவலர்களும் தமது ஆதரவைக் கூறிச் சென்றனர். அடுத்தநாள் புதன் (ஏப்ரல் 16) அன்று போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்கள் அன்று நடைபெறவிருந்த கிரீன் எனர்ஜி டெக்னாலஜி துறைக்கான புதிய கட்டிடத் திறப்புவிழாவை முடக்கி அதில் கலந்துகொள்ள வந்திருந்த வெளிநாட்டு கல்வியாளர்கள் மற்றும் பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) அலுவலர்களிடம் நிர்வாகத்தின் மாணவர் விரோதப் போக்கினை அம்பலப் படுத்தப் போவதாக அறிவித்தனர். பயந்து நடுங்கிப் போன நிர்வாகம் கூட்டத்தை காலை 7.30 மணிக்கே தொடங்கி அவசர அவசரமாக முடித்தது. விழா நடைபெறவிருந்த இடத்தையும் திடீரென மாற்றிக் கொண்டு தப்பிக்கப் பார்த்தது. பின்னர் பத்து மணியளவில் விழாவினை ஒட்டி ஒரு விவாத நிகழ்வு நடைபெற்றது. பேரணியாகப் புறப்பட்ட மாணவர்கள் விழா நடைபெற்ற இடத்தை அடைய விடாமல் தடுக்க அழைக்கப் பட்டிருந்த முப்பதுக்கும் மேற்பட்ட காவலர்கள் மாணவர்களைத் தடுத்து நிறுத்தினர். பெருந்திரளாக தொடக்கம் முதல் உறுதியாகப் போராடிவரும் சுமார் ஐம்பது மாணவிகள் முன்னின்று அணி நடத்திச் சென்றனர்.

துணைவேந்தரின் அலுவலகத்தை நோக்கி முன்னேறிய மாணவர்களை தடுக்க இம்முறை பெண் காவலர்களும் பேச்சுவார்த்தை நடத்த சுமார் இருபது காவல் உயரதிகாரிகளும் காத்திருந்தனர். துணைவேந்தர் அலுவலகத்தின் வாயிலை மூடிய காவல்துறை, நிர்வாகத்திடம் பேசி ஒர் அரங்கினுள் கூட்டம் நடத்தி இன்று தீர்வு கண்டுவிடலாம் என்று கூறியது. “இதுவரை நீங்கள் நடத்திய கூட்டமெல்லாம் போதும், இங்கேயே இப்போதே பதில் கூறிவிட்டு வெளியேறுங்கள்” என்று மாணவர்கள் உறுதியுடன் தெரிவித்தனர். வேறு வழியில்லாமல் அங்கேயே பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டது நிர்வாகம். மாணவர்களின் கோரிக்கைகளை ஏற்று உடனடியாக ஒரு விசாரணைக் குழுவை அமைக்க ஒப்புக்கொண்டார் துணைவேந்தர்.
பல்கலைக்கழகத்தில் உள்ளவர்கள் விசாரணைக் குழுவில் இருந்தால் நியாயமான முறையில் விசாரணை நடைபெறாது என்று மாணவர்கள் கூறியதை ஏற்று வெளி மாநிலங்களைச் சார்ந்த நடுநிலையாளர்கள் என்று அறியப்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதி, காவல் உயர் அதிகாரி, புதுவை எஸ்.பி. உள்ளிட்ட ஐந்துபேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அதன் விவரங்களை உடனடியாக இணையதளத்தில் வெளியிடுவதாகவும் அறிவித்தார். குழுவின் விசாரணை விரைந்து முடிக்கப்பட்டு குழுவின் பரிந்துரைகள் அப்படியே நிறைவேற்றப் படும் என்றும் உறுதியளித்தது நிர்வாகம். மாணவர் பிரதிநிதிகள், ஹரிஹரன் கும்பல் விசாரிக்கப்படும்போது பார்வையாளர்களாக இருக்க வேண்டுமென்று மாணவர்கள் கோரியதை முதலில் ஏற்க மறுத்த நிர்வாகம் பின்னர் அதனை ஒப்புக்கொண்டது.

மேலும் விசாரணை முழுவதும் வீடியோ பதிவுசெய்யப்படும் என்றும் அதன் ஒரு படி மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. எந்தச் சூழலிலும் நிர்வாகம் ஹரிஹரனையோ அல்லது அவரது கூட்டாளிகளான கும்பலையோ பாதுகாக்காது என்று உறுதியளித்த துணைவேந்தர், ஹரிஹரனை கல்லூரி வளர்ச்சி குழுவின் (College Development Council) முதன்மையர் பதவியிலிருந்து நீக்கினார். (முறைகேடாக தனியார் கல்லூரிகளுக்கு அங்கீகாரம்/அனுமதி வழங்க ஹரிஹரன் உள்ளிட்ட பலரும் பெருமளவில் பணம் பெற்றுச் சுருட்டிக்கொண்ட துறை இது என்பது முக்கியம்!)
விசாரணை முடியும்வரை காத்திருப்பதென்றும் தாக்கப்பட்ட மாணவர் ராதாகிருஷ்ணனுக்கு நீதியும், அப்பாவி மாணவனை அடித்துச் சித்திரவதை செய்தும் இன்னும் பல அட்டுழியங்கள் செய்தும் சர்வாதிகாரத்துடன் இயங்கிவரும் ஹரிஹரன் மற்றும் அவருக்குத் துணை நிற்போருக்குத் தண்டனையும் கிடைக்காவிட்டால் போராட்டத்தைத் தொடர்வது என்றும் மாணவர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கிடையில் ஹரிஹரன் கும்பலுக்கு எதிரான வழக்கினை தொடர்ந்து நடத்தி அவர்களின் கிரிமினல் செயல்களுக்கு குற்றவியல் சட்டங்களின் அடிப்படையில் தண்டனை பெற்றுத்தர தொடர்ந்து போராடுவது என்றும் மாணவர்கள் உறுதிபூண்டுள்ளனர். இப்போராட்டத்தில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று உணர்வுடனும் உறுதியுடனும் போராடியது எழுச்சியூட்டுவதாக அமைந்திருந்தது.
தமது அகமதிப்பீட்டுத் தேர்வுகளைக்கூடப் பொருட்படுத்தாமல் மாணவிகள் தொடர்ந்து போராட்டங்களில் பங்கேற்றதும் கைதுசெய்தால் கூடப் பரவாயில்லை என்று உறுதியுடன் எதிர்த்து நின்றதும் போராட்டத்திற்கான அவர்களின் வேட்கையைப் பறைசாற்றுவதாக இருந்தது. இப்போராட்டத்தில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தொடக்கம் முதல் உடனிருந்து மாணவர்களை உற்சாகப் படுத்தி ஒன்றுதிரட்டவும் புதிய வழிகளில் வீரியமாகப் போராட்டத்தைக் கொண்டுசெல்லவும் உதவிகளும் ஆலோசனைகளும் வழங்கியது. களப்போராட்டம், சட்டப் போராட்டம் என எல்லா விதங்களிலும் தனது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.
ஓர் அப்பாவி மாணவனை அடித்துச் சித்திரவதை செய்த ஹரிஹரன் கும்பல் தண்டிக்கப்படுமா அல்லது மாணவர்கள் தாமாகவேதான் தண்டனையை வழங்க வேண்டுமா என்பதை இனி பல்கலைக்கழக நிர்வாகத்தின் செயல்பாடுகளும் விசாரணைக் குழுவின் அறிக்கையும்தான் தீர்மானிக்க வேண்டும்!
தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
புதுச்சேரி