privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திபேராசிரியர் சாய்பாபா கைது - அரச பயங்கரவாதம்

பேராசிரியர் சாய்பாபா கைது – அரச பயங்கரவாதம்

-

னித உரிமை போராளியும் டெல்லி பல்கலைக்கழக பேராசிரியருமான சாய்பாபா, மஹராஷ்டிரா தீவிரவாத தடுப்பு போலீசாரால் ஜனநாயக நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல் கடத்தி செல்லப்பட்டிருக்கிறார். தேர்தல் முடிவுகளில் யார் வெற்றி பெற்றாலும் வரப் போகும் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் இப்படித்தான் அரச பயங்கரவாதமாக இருக்குமென்பதை இக்கைது நமக்கு சொல்கிறது.

பேராசிரியர் சாய்பாபா
பேராசிரியர் சாய்பாபா

டெல்லி பல்கலையில் ஆங்கிலத்துறை பேராசிரியரான 47 வயதான பேராசிரியர் சாய்பாபா, மாற்றுத்திறனாளியும் ஆவார். வளர்ச்சியின் பெயரால் ஆளும் வர்க்கங்கள் மக்கள் மீது தொடுத்துள்ள போரையும், மத்திய இந்திய காடுகளில் அது நடத்திவரும் பச்சை வேட்டையையும்,  போலி மோதல்களின் மூலம் மக்கள் போராளிகள் வேட்டையாடப்படுவதையும் தொடர்ந்து கண்டித்து வந்துள்ள சாய்பாபா புரட்சிகர ஜனநாயக முன்னணி என்ற அமைப்பின் இணைச்செயலராகவும் பணியாற்றுகிறார்.

கடந்த மே 9 அன்று டெல்லி பல்கலைக்கழகத்தை சேர்ந்த துலாந் ராம் கல்லூரியில் தனது பணியை முடித்து மதிய உணவிற்காக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்த பேராசிரியர் சாய்பாபாவை மஹராஷ்டிரத்தின் நக்சல் தடுப்பு பிரிவு அரச பயங்கரவாதிகள் எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி கடத்திச் சென்றுள்ளனர்.

குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிப்பது, வழக்குரைஞரை சந்திக்க அனுமதிப்பது, வழக்கு விவரங்களை அறிவிப்பது போன்ற அரசியலமைப்பு சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகள் எதையும் பொருட்படுத்தாமல் சாய்பாபா கைது செய்யப்பட்டிருப்பது இந்திய அரச அமைப்புகள் பெயரளவிலான ஜனநாயகத்தைக் கூட முழுமையாக கைவிட்டிருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது.

ஆட்கடத்தல் கிரிமினல் கும்பலைப்போல சாய்பாபாவின் காரை வழிமறித்து அவரையும் அவரது கார் ஓட்டுனரையும் கண்களைக் கட்டி கடத்தியுள்ளனர். சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின், அவரை விமானம் மூலம் நாக்பூருக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்போதும் என்ன குற்றச்சாட்டு, என்ன பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் போன்ற சட்டபூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை.

பின்னர், சாய்பாபா தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு கட்சியுடன் தொடர்பு வைத்திருப்பதாகவும், அக்கட்சிக்கு ஆள்சேர்ப்பதாகவும் தனது ஆள் கடத்தல் நடவடிக்கைக்கு காரணமாக அறிவித்துள்ளது மஹராஷ்டிர காவல்துறை.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம் (UAPA), தேசிய பாதுகாப்பு சட்டம் (NSA) போன்ற ஒடுக்குமுறை சட்டங்கள் இது போன்ற சட்டவிரோத ஆட்கடத்தல்களுக்கு சட்டபூர்வ அங்கீகரம் வழங்குகின்றன. சாய்பாபா மட்டுமின்றி அவர் சார்ந்துள்ள புரட்சிகர ஜனநாயக முன்னணியும் தேர்தலை புறக்கணிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபடுவதாகவும் அவ்வமைப்பிற்கும் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாகவும் குற்றம் சுமத்தி அவ்வமைப்பின் உத்திரகண்ட் மாநில தலைவர் ஜீவன் சந்திராவும் மே 5-ம் தேதி இதே முறையில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலை மாணவர் ஹேம் மிஸ்ராவும், பத்திரிக்கையாளர் பிரசாந்த் ரஹியும் கடந்த டிசம்பர் மாதம் மாவோயிஸ்டுகள் என குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டனர். இருவரும் சாய்பாபாவுடன் தொடர்பில் இருந்ததால் கடந்த செப்டம்பர் 12 அன்றும், ஜனவரி 7 அன்றும் ’திருட்டு போன பொருட்களை தேடுவதற்கான தேடுதல் ஆணை (Search warrant)’ பெற்று சாய்பாபாவின் வீட்டை மஹராஷ்டிர போலீசார் சோதனையிட்டுள்ளனர். அச்சோதனைக்கும் போலீசின் விசாரணைக்கும் சாய்பாபாவும் அவரது குடும்பத்தினரும் ஒத்துழைத்துள்ளதோடு போலீசாரின் மாவோயிஸ்ட்டு முத்திரைகுத்தும் குற்றச்சாட்டை உறுதியாக மறுத்துள்ளனர்.

மாணவர் ஆர்ப்பாட்டம்
பேராசிரியர் சாய்பாபா கடத்தி கைது செய்யப்பட்டதை எதிர்த்து மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.

தனது வளாகத்தினுள் அத்துமீறி நடத்தப்பட்ட சோதனைகள், கைது நடவடிக்கைகளை கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிக்கிறது பல்கலைகழக நிர்வாகம்.

உலகமயமாக்க கொள்கைகளின் மூலம் மறுகாலனியாக்கம் தீவிரப்படுத்தப்பட்டிருக்கும் வேளையில் இந்த அமைப்பை அம்பலப்படுத்தும், கேள்விக்குட்படுத்தும் எந்த ஒரு கருத்தையும் எதிர்கொள்ள ஆளும்வர்க்கங்கள் தயாராயில்லை. கருவிலேயே அழித்துவிட எத்தனிக்கின்றனர்.

200-க்கும் மேற்பட்ட ரகசிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டுக்கொண்டுள்ள அரசுகள், அவ்வொப்பந்தங்களை எதிர்க்கும் மக்களை துணை ராணுவத்தை கொண்டு ஒடுக்குவதும், கேள்விக்குட்படுத்தும் அறிவுத்துறையினரை தீவிரவாதிகள் என முத்திரை குத்தி போலீசை கொண்டு ஒடுக்குவதும் தொடர்ந்து நடப்பதாக இக்கைது நடவடிக்கையை கண்டித்துள்ள அருந்ததி ராய் கூறியுள்ளார்.

இச்சட்டவிரோத கைது நடவடிக்கையை கண்டித்துள்ள முன்னாள் டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ராஜேந்தர சச்சார், பல்கலைகழக வளாகத்திலிருந்து சட்டவிரோதமாக சாய்பாபா கைது செய்யப்பட்டிருந்தும், பல்கலைக்கழக நிர்வாகம் அதை கண்டிக்காமல் கள்ளமவுனம் சாதிப்பதை கண்டித்துள்ளார்.

பேராசிரியர் சாய்பாபா, ஜீவன் சந்திரா கைதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுவிக்க கோரியும் இந்திய, உலக அளவில் மனித உரிமை அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. டெல்லி மற்றும் ஜவர்கர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் அமைப்புகள் தங்களது பேராசிரியரின் கைதைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளன.

ஆளும் வர்க்கங்கள் அடிப்படை உரிமைகள் ஏதுமற்ற ஓட்டுப்போடும் எந்திரங்களாக மக்களை பாவிப்பதை, மிகப்பெரும் ஜனநாயக நடவடிக்கையாக சொல்லிக் கொள்ளப்படும் நாடாளுமன்ற தேர்தல் நடந்து கொண்டிருக்கும் போது நடத்தப்பட்டிருக்கும் இக்கைது நடவடிக்கைகள் மீண்டும் நிருபிக்கின்றன.

பேராசிரியர் சாய்பாபா, ஜீவன் சந்திரா ஆகியோர் மீதான அரசின் பயங்கரவாத நடவடிக்கைகளை வன்மையாக கண்டிக்கிறோம். சட்ட விரோதமாக கைது செய்து வைத்திருக்கும் அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி போராடுவதற்கு அனைத்து ஜனநாயக சக்திகளையும் அறைகூவி அழைக்கிறோம்.