privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்கல்விதனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி - 2 மாணவிகள் தற்கொலை

தனியார்மயம் வாங்கிய உயிர்ப் பலி – 2 மாணவிகள் தற்கொலை

-

காசுக்கேற்ற கல்வி என்ற தனியார் மயக் கொள்கையினால் கோடிக்கணக்கான உழைக்கும் மக்களும் அவர்களது குழந்தைகளான மாணவர்களும் கடும் பொருளாதார நெருக்கடிக்கும், மன அழுத்தத்துக்கும் உள்ளாக்கப்படுகின்றனர்.  நன்கு படித்தாலும், பல லட்ச ரூபாய் கொடுத்தால்தான் மேற்படிப்பு படிக்க முடியும் என்ற நிலையில் மருத்துவம், வேலை வாய்ப்பு இவற்றிலும் தனியார் மய, தாராள மய பொருளாதார கொள்கைகளினால் ஓட்டாண்டியாகி வரும் உழைக்கும் மக்கள் மேல்படிப்பு படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சூழலில் நன்கு படித்து பள்ளியிலேயே முதல் மதிப்பெண் எடுத்த அக்கா, தங்கைகளான இரு மாணவியர் மேல் படிப்பு படிக்க முடியாத பொருளாதார சூழலை எண்ணி அஞ்சி தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். அது குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையமும், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கமும் அனுப்பிய அறிக்கை.

விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் கிராமத்தை சேர்ந்த கிருத்திகா, சரண்யா என்ற இரண்டு மாணவிகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து Puser & HRPC குழுவின் அறிக்கை

விருத்தாசலம் வட்டம் கம்மாபுரம் கிராமத்தில் தச்சு வேலை செய்து வருபவர் முருகேசன் (45). இவருக்கு கிருத்திகா, சரண்யா என்ற இரு மகள்களும், சந்திரபிரகாஷ் என்ற மகனும் உள்ளனர். இவர்களது இரு மகள்களும் ஒரு ஆண்டு வயது வித்தியாசத்தில் இருந்தாலும் இருவரும் ஒரே வகுப்பில் கம்மாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் +2 பொதுத்தேர்வு எழுதி இருவரும் பள்ளியின் முதல் (930) மற்றும் இரண்டாம் (928) மதிப்பெண் எடுத்திருந்தனர்.

முருகேசன் ஒரு நீரிழிவு மற்றும் இதய நோயாளி. மேலும் கலைஞர் வீடுகட்டும் திட்டத்தில் அரசிடம் ரூ 70,000 பெற்று கொண்டு மேலும் ரூ 2 லட்சம் கடனாக வாங்கி வீட்டை கட்டி முடித்துள்ளார். குடும்ப பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு, “பெரிய மகளுக்கு திருமணம் செய்து விட்டு , ஒரு மகளை படிக்க வைக்கலாம் இருவரையும் படிக்க வைப்பது இப்போதுள்ள சூழலில் முடியாத காரியம்” என தனது மனைவி ராஜலட்சுமியிடம் பேசிக் கொண்டிருந்த்தை கேட்டு மனமுடைந்த சகோதரிகள் பெற்றோர்கள் வெளியில் சென்றிருந்த நேரம் பார்த்து ஒரே துப்பட்டாவில் இரு முனைகளிலும் இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த செய்தி அப்பகுதி மக்களை கடும் துயரத்தில் ஆழ்த்தியது. செய்தி அறிந்த மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தலைவர் குணசேகரன், மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தின் தலைவர் வை. வெங்கடேசன் மற்றும் வீரகாந்தி, செல்வகுமார், செல்வம், குமார் ஆகியோர் நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு ஆறுதல் கூறினர்.

இது பற்றி சகோதரிகளின் தந்தையிடம் கேட்ட பொழுது “எம்பொண்ணுங்க பத்தாம் கிளாஸ் ஸ்கூல் பஸ்ட் 455 மார்க் எடுத்து எல்லாரும் பாராட்டுனாங்க. இப்ப 12-ம் வகுப்புலயும் ஸ்கூல் பஸ்ட் சொன்னவுடனே ரொம்ப சந்தோஷப்பட்டோம். நானும் என் சம்சாரமும் தான் இதை பற்றி பேசிகிட்டிருந்தோம். இதை காதுல கேட்டுருந்த என் பொண்ணுங்க இப்படி பண்ணிக்கிடுச்சிங்க ஒரு பொண்ணு கட்டி குடுத்தாலும் ஒரு பொண்ண நல்லா படிக்க வைச்சிருப்பேன். ரெண்டும் இப்படி பண்ணிடுச்சிங்க” என கலங்கினார்.

எதிர்வீட்டில் வசிக்கும் வணிகவியல் இளங்கலை (B.Com) பட்டதாரியான செந்தில் “அந்த பிள்ளைங்களோடவே படிப்பும் பொறந்த மாதிரி, எப்பவும் படிப்பு படிப்புனே இருக்குங்க. வெளில வர்ற வேலையை கிடையாது. சமூகத்தை பற்றி சரியான புரிதல் இல்லாம இப்படி பண்ணிடிச்சிங்க” என கூறினார்.

அம்மாணவிகள் பயின்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் G.சுப்பிரமணியன் அவர்களிடம் விசாரித்த போது “இரண்டு பொண்ணுங்களும் போட்டி போட்டு படிக்குங்க. ஆனால் +2 ரிசல்ட் வந்த 3-ம் நாளே இப்படி பண்ணிக்குங்கன்னு எதிர்பாக்கலே. அரசாங்கம் பெற்றோர்களுக்கும், பிள்ளைகளுக்கும் நிறைய கவுன்சிலிங் கொடுக்கனும். அப்பதான் இது மாதிரி தற்கொலை எல்லாம் முடிவுக்கு வரும்” என்று கூறினார்.

ஆனால், இம்மாணவியர் அடிப்படை வசதிகள் இல்லாத அரசுப் பள்ளியில் படித்துதான் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.

பள்ளியின் +2 தேர்ச்சி சென்ற ஆண்டை காட்டிலும் (50சதவீதம்) இந்த ஆண்டு அதிகரித்துள்ள (75 சதவீதம்) போதும் பள்ளி ஆசிரியர்கள் “மனித உரிமை பாதுகாப்பு மையம் மற்றும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர்கள் சங்கம் சென்ற வருடம் செய்த கல்வி அலுவலக முற்றுகை போராட்டத்தின் காரணமாக இணை இயக்குநர் முதல் அதிகாரிகள் உட்பட அனைவரும் நாங்களும் முழு முயற்சியுடன் செயல்பட்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க செய்ய வெண்டும் என செயலாற்றினோம். 2014-ம் ஆண்டில் மாணவியர் தேர்ச்சி விகிதம் 90 சதவீதம் இருந்தாலும் மாணவர்கள் தேர்ச்சி சதவீதம் 60 தான். அவர்களும் கவனமாக படித்திருந்தால் தேர்ச்சி சதவீதம் இன்னும் அதிகரித்திருக்கும்.” என்றனர்.

மேலும் “சாதி வேறுபாடின்றி இங்கு படிக்கும் பெரும்பாலான பிள்ளைகளின் பெற்றோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். அவர்கள் பள்ளிக்கு வந்து தங்கள் பிள்ளையின் படிப்பை பற்றி தெரிந்து கொள்ள அக்கறை காட்டுவதில்லை. நாங்கள் வரச் சொன்னாலும் வருவதில்லை. இதனால் மாணவர்கள் ஆசிரியர் சொல்வதை கேட்காமல் தங்கள் எதிர்காலத்தை வீணடிக்கின்றனர்.” என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும்,”இந்தப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் +2 வரை 21 பிரிவுகள் உள்ளன. ஆனால் மிக குறைந்த வகுப்பறைகளே உள்ளன. பள்ளிக்கு சொந்தமான இடம் அருகில் நிறைய உள்ளது. அங்கு வகுப்பறை கட்டி கொடுக்க சொல்லி மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தோம். ஆனால் அந்த இடத்தில் இப்பொழுது காவல் நிலையம் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கம் அங்கு எங்களுக்கு வகுப்பறை கட்டி கொடுத்தால் மாணவர்கள் நெருக்கடி இல்லாமல் படிப்பார்கள்” என்று கூறினர்.

குழுவின் அனுபவம் :

இந்த சம்பவத்தின் வாயிலாக அரசு பள்ளியில் படித்தால் பிரயோசனம் இல்லை என்ற பொய் பிரச்சாரத்தை முறியடித்து நல்ல மதிப்பெண் பெற்ற மாணவிகள் கல்வி மட்டுமே வாழ்க்கை இல்லை அதையும் தாண்டி வெளி உலகில் சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றது என்ற புரிதல் இல்லாமல் இப்படி செய்து கொண்டனர். நாட்டு நடப்புகள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுகின்ற வகையில் மன உறுதி ஏற்படுகின்ற வகையில் போராடும் சிந்தனை ஆகியவற்றில் பெற்றார்களுக்கும் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
விருத்தாச்சலம்