Sunday, November 29, 2020
முகப்பு போலி ஜனநாயகம் அதிகார வர்க்கம் ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை !

ஆந்திர பாபுவுக்கு தேர்தல் ஞானம் பிறந்த கதை !

-

சில நாட்களுக்கு முன் திருப்பதியிலிருந்து சென்னை வந்த என் நண்பனை சந்திக்கச் சென்றிருந்தேன். திருப்பதியிலேயே தங்கி வேலை செய்து வருபவன் என்பதால், அவனிடம் ஆந்திர அரசியல் நிலவரம் பற்றி தெரிந்து கொள்ளலாம் என்பது திட்டம்.

holy-election-11ஆனால் அவனோ தேர்தல் பற்றி பேச்செடுத்தாலே எரிச்சலாக பேசினான். ”தேர்தல் எல்லாம் சுத்த ஹம்பக் (பொய்)” என்றான்.

எனக்கு தூக்கி வாரிப் போட்டது. நான் தேர்தல் புறக்கணிப்பை பற்றி பேசினால், “அதெல்லாம் தப்பு, நாம் நிச்சயம் ஓட்டுப் போட வேண்டும், பிடிக்கவில்லை என்றால், 49-ஓ போட வேண்டும். தேர்தல் ஆணையம் நேர்மையாகத் தான் இந்தியாவில் தேர்தல் நடத்துகிறது” என்பான். ஆனால் இப்பொழுது திடீரென்று எங்கிருந்து இந்த ஞானோதயம் வந்திருக்கிறது, ஏன்?

ஆந்திராவில் இந்த முறை தேர்தலில் பணம் பயங்கரமாக விளையாடி இருக்கிறது. பொதுவாக ஓட்டுக்கு பணம் கொடுப்பதெல்லாம் தமிழ் நாட்டில் மட்டும் தான் என்றும், அது திராவிடக் கட்சிகள் மாத்திரம் செய்யும் அசிங்கமான வேலை என்றும் நினைப்பவர்கள் உங்கள் அறியாமையை மாற்றிக் கொள்ளுங்கள்! பா.ஜ.கவுடன் புனிதக் கூட்டணி வைத்திருக்கும் தெலுங்கு தேசம் கட்சியும், ஜகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸும் ஆந்திர தேர்தல் களத்தில் பணத்தை வாரி இறைத்துள்ளன. போலி ஜனநாயகத்தையே உண்மை ஜனநாயகமாக கருதும் நடுத்தர வர்க்கம் அதில் பண நாயகம் இருந்தே தீரும் என்பதை அறியும் போது வெறுக்கிறது. இது என் நண்பனின் தேர்தல் அலர்ஜிக்கு முதல் காரணம்.

மேலும் மக்களும் பணம் வாங்கியதை பற்றி அனைவரும் வெளிப்படையாகவே பேசியபடி இருந்துள்ளனர்.

இவன் வழக்கமாக டீ குடிக்கும் டீக் கடையின் சொந்தக்காரர்,”எப்படியும் ஆந்திராவை பிரிச்ச காங்கிரஸுக்கு ஓட்டு போடக் கூடாது என நான் நினைத்தேன், ஆனால் யாருக்கு போடுவது? ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸுக்கா? இல்ல தெலுங்கு தேசம் கட்சிக்கா? என குழம்பிய போது, அதிக பணம் கொடுத்த தெலுங்கு தேசம் கட்சிக்கு எங்கள் ஓட்டை போட்டு விட்டோம்” என்றிருக்கிறார்.

“எங்கள்? என்றால் எத்தனை பேர்”

“ஆமாம் தம்பி எங்கள் வீட்டில் மொத்தம் 6 ஓட்டு”

“ஏன் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் பணம் கொடுக்கவில்லையா?”

“உண்மையில் சொல்லணும்ன்ன தம்பி எனக்கு ஒய்.ஆஸ்.ஆர் (ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி- முன்னாள் முதல்வர்) மேலே ஆசை இருந்தது, அதனால் தான் நான் முதல்ல அவங்க கிட்டதான் 6 ஓட்டுக்கு எவ்வளவு கொடுப்பாங்கன்னு கேட்டேன். ஓட்டுக்கு 500 ரூபா தரன்னு சொன்னாங்க, ஆனா பாருங்க தெலுங்கு தேசம் கட்சிகாரங்க ஓட்டுக்கு 1000 ரூபா தரன்னு சொல்லிட்டாங்க. நான் அப்பவும், நம்ம ஜகன் பாபு பக்கம் தான் போனேன், அவர்கள் கடைசி வரை ஓட்டுக்கு 500 தாண்டவில்லை. கடைசியில் தெலுங்கு தேசம் கட்சிக்காரங்க மொத்தமா 12,000 கையில் வைத்து சத்தியம் வாங்கி விட்டார்கள்.” என்றிருக்கிறார்.

tdp-ysrcஇந்த நாடாளுமன்றத் தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து மதிப்பு 64 கோடி ரூபாய், ஒய்எஸ்ஆர் – ஜகன்மோகன் கட்சி சார்பில் வெற்றி பெற்றவர்களின் சராசரி சொத்து ரூ 50.9 கோடிதான் என்பதையும் இத்தோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளலாம். மேலும் இந்தியாவிலேயே வெற்றி பெற்ற எம்பிக்களின் சொத்து மதிப்பில் முதல் இடம் வகிப்பது ஆந்திராதான். எனில் சீமாந்திராவில் சாமானியர்களுக்கான ஜனநாயகம் எப்படி இருக்கும்?

தேநீர்க் கடையில் ‘பல்பு’ வாங்கி வாயடைத்துப் போன என்  நண்பன் அவன் குடியிருக்கும் வீட்டு சொந்தக்காரரிடம் இதை பற்றி பேசியிருக்கிறான். அவர் அரசாங்கத்தின் வருவாய் துறையில் முக்கிய பொறுப்பில் இருப்பவர். தேர்தல் பணிக்கு வேறு சென்று வந்தவர்.

அவரிடம் போய் ”சார் ஓட்டுக்கு காசு வாங்கி இருக்காங்க தேர்தல் கமிஷனுக்கு இதெல்லாம் தெரியாதா?” என்று வெள்ளேந்தியாகக் கேட்டிருக்கிறான்.

அவர், ”தெரியும்ப்பா. என்ன செய்ய முடியும்? அவங்களும் மனுஷங்க தானே. இதாவது பரவாயில்லை, தேர்தல் வேலைக்கு போகும் ஆபிஸருங்க அவங்க தபால் ஓட்ட 3,000 ரூபாய்க்கு வித்திருக்காங்க. இதுக்கு என்ன சொல்லுவ?” என்று அணுகுண்டை வீசியிருக்கிறார். பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பதாக நண்பனுக்கு காய்ச்சலே வந்துவிட்டது. அவனைப் பொறுத்த வரை ஏழைகள்தான் பணம் வாங்கி ஜனநாயகத்தை காலி செய்கிறார்கள் என்ற ஆய்வு முடிவை அவன் சார்ந்த நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அதிகாரிகள் இரக்கமின்றி காலி செய்து விட்டார்கள்.

”தேர்தல் அதிகாரிங்களா?”

அவர் மிக தெளிவாகவும்,உறுதியாகவும், “தேர்தல் வேலையில் ஈடுபட்ட அதிகாரிங்களே தான்” என்று சொல்லியிருக்கிறார்.

“தேர்தல் கமிஷன் ஆட்களா? அப்படிப்பட்டவங்கள எப்படி சார் தேர்தல் கமிஷன் வேலைக்கு எடுத்தாங்க” என கேட்டிருக்கிறான்.

”தேர்தல் கமிஷன் ஆட்கள் இல்லப்பா. தேர்தல் பணியில் ஈடுபட்டவங்க” என்று விளக்கியிருக்கிறார்.

என் நண்பன் தேர்தல் கமிஷன் என்பது தனியான பல ஊழியர்களை கொண்ட ஒரு துறை என்று தான் இது வரை நினைத்திருக்கிறான்.

தபால் ஓட்டுகள் எண்ணிக்கை
தபால் ஓட்டுகள் எண்ணிக்கை (கோப்புப் படம்).

நான் இடையில் புகுந்து, “தேர்தல் கமிஷன் என்பது தனியாக இருந்தாலும், அதில் நாடு முழுவதும் ஒரு 1,000 பேர் வேலை செய்யலாம். ஒவ்வொரு முறை தேர்தல் நடக்கும் போதும், அது தன் வேலைகளுக்காக அந்தந்த மாநில அரசு ஊழியர்களையும், போலிஸ் துறையையும், மத்திய அரசு ஊழியர்களையும், ஆசிரியர்கள் போன்றவர்களையும்தான்  வேலை செய்ய அழைத்துக் கொள்ளும்” என்று விளக்கினேன். டொரண்டில் சுடச் சுட உலக/உள்ளூர் சினிமாக்களின் புத்தம் புதிய காப்பிகளை தரவிறக்கம் செய்யும் தொழில் நுட்ப கில்லியான என் நண்பனுக்கு இது தெரியவில்லை. அவன் தனியாக தேர்தல் கமிஷன் எனும் துறையில் ஆயிரக்கணக்கான நேர்மையான் அதிகாரிகள் கீழ்மட்டம் வரை வேலை செய்து தேர்தலை நேர்மையாக நடத்துவார்கள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறான். அவனைப் போலவே பலரும் உள்ளனர்.

நம் அரசு அலுவலகங்களில் 100, 500 என்று லஞ்சம் வாங்குபவர்கள், பிள்ளைகளுக்கு பொறுப்பாக பாடம் சொல்லிக் கொடுக்காமல், சம்பளம் மட்டும் குறியாக  வாங்கி அதை வட்டிக்கு விடும் ஆசிரியர்கள் போன்றவர்கள்தான் கூடுதல் வருமானத்துக்காக தேர்தல் பணிகளில் ஈடுபடுகிறவர்கள்.

பொறுமையாக கேட்ட என் நண்பன், “என் வீட்டு சொந்தக்காரரும் இதைத்தான் சொன்னார். சரி உனக்கு தபால் ஓட்டுன்னா என்னன்னு தெரியுமா?” என்று கேட்டான்?

நான் தெரியும் என்றேன். “தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருக்கும் ஊழியர்கள், போய் அவர்கள் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்த முடியாது என்பதால் அவர்கள் பணியிடத்தில் இருந்தபடி மேலதிகாரி ஒப்புதலுடன், தபாலில் வாக்கு செலுத்தலாம். இவை மாத்திரம் வாக்கு சீட்டு வடிவத்தில் இருக்கும்” என்றேன்.

“ஆமாம் இதுவும் என் வீட்டு ஓனர் சொல்லி தெரிந்து கொண்டேன். என் வீட்டு ஓனர் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டிருக்கிறார். அதில் தபால் ஓட்டுக்கள் எண்ணும் போது 200-க்கு 50 ஓட்டுக்கள் செல்லாதவை என நிராகரிக்கப்பட்டுள்ளன. அனைத்தும் தெலுங்கு தேசம் கட்சிக்கு விழுந்த ஓட்டுக்கள். அங்கே வந்த தெலுங்கு தேசம் கட்சி ஏஜென்ட், யாரையோ அசிங்க அசிங்கமாக திட்டத் தொடங்கி விட்டாராம்”

”சரி தான். தங்கள் கட்சிக்கு வந்த ஓட்டுகள் செல்லாதவையாக இருந்தால் கோபம் வரத் தானே செய்யும். அதுவும், படித்த அரசு ஊழியர்களே செல்லாத ஓட்டுக்கள் போட்டால் நிச்சயம் கோபம் தலைக்கு ஏறும்”

“அது தான் இல்லை. அவர் அந்தந்த இடங்களில் வேலை செய்த தம் கட்சிக்காரர்களை தான் திட்டியுள்ளார்.”

“ஏன்?”

“ஒவ்வொரு அரசு அதிகாரியிடமும் போய் தனித் தனியாக விலை பேசி தபால் ஓட்டுக்களை வாங்கி இருக்கிறார்கள். ஒரு ஓட்டுக்கு குறைந்த பட்சம் ரூ 2,000 முதல் ரூ 4,000 வரை வாங்கிக் கொண்டு அரசு ஊழியர்கள் விற்றுள்ளார்கள். பலர் ஓட்டுக்களை தெலுங்கு தேசம் கட்சிக்கு போட்டுவிட்டு, வாக்குச் சீட்டில் அதில் மேலதிகாரி கையெழுத்து வாங்கி சமர்த்தாக கொடுத்திருக்கிறார்கள். அவை அனைத்தும் செல்லும். சில ஊழியர்கள், விசுவாசம் அதிகமாகி, கட்சிக்காரர்களிடமே ஓட்டுச் சீட்டை கொடுத்து விட்டார்கள். ஆனால் தெலுங்கு தேசம் கட்சிக்கு டிக் அடிக்க தெரிந்த கட்சிக்காரர்களுக்கு அதில் மேலதிகாரி (கெஸ்டட் ஆபிஸர் ) கையெழுத்து வாங்க வேண்டும் என்ற அறிவில்லை. அவை அனைத்தும் காசு கொடுத்தும் செல்லாதவை ஆகிவிட்டன” என்றான்.

எனக்கே கொஞ்சம் தூக்கி வாரி போட்டது. இந்த அரசு ஊழியர்கள் தான் தேர்தலை நேர்மையாக நடத்தி இருப்பார்கள் என்று நினைத்து ஜனநாயக கோவிலுக்கு ஐந்து  வருடத்திற்கொரு முறை விரதமிருந்த என் நண்பனுக்கு கடவுளும் ஃபிராடு, பூசாரியும் கேடு என்ற அறிவு வந்திருப்பது ஒரு சிறு மகிழ்ச்சி.

“பாருடா உங்கள் தேர்தல் லட்சணத்த” என்று நான் சிரித்தேன்.

அவன் “அது பரவாயில்லைடா, நான் என் ஓனருகிட்ட, நீங்க ஏதும் காசு வாங்கலையான்னு கேட்டேன்” என்றான்.

“ஆமாம், அவர் எவ்வளவு வாங்கினாராம்”

வீட்டு ஓனர் ”இந்த விஷயம் எனக்கு தெரியாமலேயே நடந்திடுச்சி. தெரிஞ்சா நான் ஒரு 3,000 ரூபா தேத்தியிருப்பேன். ஆனா அடுத்தமுறை நிச்சயம் ஒரு 4000-ஆவது தேத்திடனும்” என்றிருக்கிறார்.

கோபமான என் நண்பன் அவரிடம் ”சார் நீங்களுமா இப்படி பேசுறீங்க. அவங்க எதுக்கு இவ்வளவு காசு செலவு பண்றாங்கன்னு யோசிச்சிங்களா. புது ஆந்திராவுக்கு தலை நகர் உருவாக்கணும். தலை நகர் உருவாக்குறதுன்னா, எவ்வளவு கட்டுமான வேலைகள், எவ்வளவு ரியல் எஸ்டேட், எவ்வளவு கான்டிராக்ட். கோடிகள் விளையாடும். 3,000 முதல் போட்டு கோடிகள் சம்பாதிப்பாங்க.” என்று சிறு பிரசங்கம் நடத்தியிருக்கிறான்.

அதை கேட்டு அவர் முகம் வாடி விட்டது, எதையோ யோசித்தவராக தலை குனிந்திருக்கிறார்.

என் நண்பனுக்கு ஒருவராவது திருந்தி விட்டார் என்று ஒரு மகிழ்ச்சி.

அவர் மெல்ல “நீங்க சொல்றது சரி தான் பாபு, நான் இதை யோசிக்கல. எவ்வளவு பணம், எவ்வளவு கான்டிராக்ட், பல நூறு கோடிகள் கொள்ளையடிச்சிடுவாங்க.. ஒரு பத்தாயிரம் ரூபா கொடுத்தாதான் தான் என் தபால் ஓட்ட போடுவேன்” என்று ஒரே போடாக போட்டிருக்கிறார்.

பிறகு என் நண்பனுக்கு போலி ஜனநாயகம் குறித்து மாங்கு மாங்குவென்று விளக்கம் கேட்கும் அவசியமில்லாமலேயே வீட்டுக்கு வெளியே இருந்த புளியமரத்தடியில் ஞானம் பிறந்தது.

இதுதான் என் நண்பன் தேர்தல் மாயையில் இருந்து விடுபட்ட கதை.

சரி, விடுங்கள். நீங்கள் ஞானம் பெற்றவரா இல்லை யானை பெற்றவரா?

–    ஆதவன்

 1. நான் நினைச்சேன் இது தமிழ்நாட்டுக்கே உரிய பெருமைன்னு கடைசியில் இது இந்திய முழுக்க பரவி நம்ம திருமங்கல சூத்திரம் ( Thirumangalam Formula ) பெரும் வெற்றி அடைந்து இருக்கிறது.

 2. முதன்முதலில் தேர்தல் என்று இந்திய ஜனனாயகம் முகிழ்விட்ட காலத்திலிருந்தே ஓட்டுக்கு பணம் கொடுப்பதுநடந்து கொண்டுதான் உள்ளது! அப்போது சாப்பாடும், ஒன்று அல்லது இரண்டு ரூபாய் கொடுக்கப்பட்டது! பெரும்பாலும் ஏழைகளுக்கே பணம் கொடுத்துநல்ல வோட்டும், பிற்காலத்தில் கள்ள வோட்டுகளும் வாங்கப்பட்டன! பணத்துடன், வெற்றிலை, பாக்கு சகிதம் கோவில் முன்னிலைய்ல் சத்தியம் பெறப்படும்!

  காலம் மாறினாலும், மக்கள் மனப்பாண்மை மாறவில்லை!

  ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன ?

 3. வெகு நிதர்சனமான உண்மை ……. எல்லா பிரச்சினைகளுக்கான அடிப்ப்டை ……. இயல்பாகவே ந்ம் ஒவ்வொருவரிடமும் குடி கொண்டுள்ள நியாயத்திற்கு புறம்பாக நடப்பதை தவறாக கருதாத நமது குணம் …….ஓட்டுக்கு பணம் வாஙுகுவது குற்றம் என்பதை அறிந்த நம்மில் பலரும் வளமான நிலயிலும் கை நீட்டி காசு வாஙகுவதை ஒரு போதும் தவறாக கருத வில்லை……. ஒரே காரணம் தான் ……..ந்மது சமூக அமைப்பு, பணத்தை எந்த வழியில் வேண்டுமானாலும் ச்ம்பாதி ……..ப்ண்மே நமது தாரக மந்திரம் என்பதை காலம் காலமாய் கற்று தருகிறது …… அடுத்தவர் மேல் குற்ற்ம் வேகமாய சாட்டும் நாம் …..நம்முடய தவறை ஒரு போதும் தவறாக நாம் கருதுவது இல்லை ……நேர்மை அவசியம் இல்லை, பணமே அவ்சியம் என்னும் உலகில் நம்மை விட பன்னூரு மடஙுகு கிரிமினல் ஆற்ற்ல் படைத்த அரசியல் வாதியிடம் நேர்மையை எதிர் பார்ப்பது ” என் வீட்டிற்கு வரும் போது என்ன கொண்டு வருவாய் — உன் வீடடிற்கு வந்தால் என்ன கொடுப்பாய்” என்னும் கடைந்து எடுத்த சுயநலம் தவிர வேறு ஏதும் இல்லை ……….

 4. தேர்தல் ஆணையம் வரையறை செய்த செலவு உச்சவரம்புக்குள் தற்போது வெற்றிபெற்றுள்ள எம்.பிக்கள் (மோடி உட்பட)செலவு செய்து வெற்றிபெற்றவர்கள் என நேர்மையாளர்களால் நிச்சயம் ஏற்றுக்கொள்ள முடியாது.போலி ஜன நாயகத்தை தாங்கி பிடித்திருக்கும் உலுத்துப் போன தூண் தான் தேர்தல் ஆணையமும்.இதில் மக்களை மட்டும் குறை சொல்வதில் நியாயமில்லை.குற்றப்பின்ணணி உடைய எம்.பி க்களின் கட்சிவாரியான புள்ளிவிவரம் கூட நம் ஜனநாயகத்தின் மாண்பை (!) வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

 5. இது வேலூர் தொகுதியில் நடந்தது. எனக்குத் தெரிந்த ஒருவர் வீட்டில் மொத்தம் நான்கு வாக்குகள். பா.ஜ.க. சார்பில் கொடுத்தது தலா ரூ.300 வீதம் மொத்தம் ரூ1200. அ.தி.மு.க சார்பில் கொடுத்தது தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ800. இருப்பதோ நாக்கு வாக்கு. யாருக்கு எத்தனை வாக்கு போடுவது என்பதில் குழப்பம்தான். இருந்தாலும் நடு நிலை எடுத்து தாமரைக்கு இரண்டு வாக்கும் இரட்டை இலைக்கு இரண்டு வாக்கும் என போட்டு தர்மத்தை நிலை நாட்டி இருக்கிறார்கள். இவர் ஒன்றும் அன்றாடம் காய்ச்சி அல்ல. பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் மாதம் ரூ40000 ஊதியம் பெறும் ஊழியர்.

  தமிழகமே திருமங்கலமாக மாறுமா? (http://hooraan.blogspot.in/2014/03/blog-post_29.html)என முன்பு எழுதி இருந்தேன். இப்பொழுதுதான் தெரிகிறது இந்தியாவே திருமங்கலமாக மாறி வருகிறது என்று.

 6. பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது என்பது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது.நான் முதன்முதலில் வாக்களித்த 1989 சட்டமன்ற தேர்தலில் எங்கள் நண்பர் குழாம் தீவிரமாக தேர்தல் பணியாற்றியது,தேர்தலுக்கு முதல் நாள் வீடு வீடாக சென்று கதவு சீட்டுகளை [ door slip ] கொடுத்து வாக்கு சேகரித்து கொண்டிருந்தோம்.உடன் வந்த கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் ஒரு வெள்ளை தாளில் சில வீடுகளின் முகவரிகளை எழுதி பட்டியல் ஒன்றை உருவாக்கியவாறு வந்தார்.அந்த வீடுகளில் மட்டும் தாழ்ந்த குரலில் ”சாயங்காலம் வர்றோம்.ஓட்டுக்கு பத்து ரூவா மேனிக்கு காசு தரோம்.மறக்காம நம்மளுக்கு போட்டுருங்க” என்று சொல்லிக் கொண்டே வந்தார்.

  இந்த தேர்தலில் நடந்த ஒரு கூத்து.தேர்தலுக்கு மறுநாள் எங்கள் அலுவலக வாயிலில் முறைவாசல் செய்து கொண்டிருந்த மூதாட்டியிடம் ‘கேட்டேன்

  ”என்ன ஆயா நேத்து ஓட்டு போட்டியா”

  போட்டேம்பா

  யாருக்கு போட்ட ஆயா.

  அத்த ஏம்பா கேக்குற.அம்மா கட்சிக்காரங்க துட்டு குட்த்தாங்க. விஜயகாந்த் கட்சிக்காரங்களும் துட்டு குட்த்தாங்க. ரெண்டு பேர்கிட்டயும் கை நீட்டி வாங்கிட்டமே.யாருக்கு போடுறதுன்னு கொயப்பமா ஆயிட்சி.கட்சீல ரெண்டு பேருக்கும் பொதுவா அருவாள் ல போட்டம்பா’

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க