Sunday, June 26, 2022

மோடி அழுதார் !

-

சாதாரண மனிதர்கள் உணர்ச்சி வசப்படலாம், வரலாறு படைக்கின்ற அசாதாரணமான ‘மாமனிதர்’கள் உணர்ச்சி வசப்படலாமா?

குதுபுதீன்
குதுபுதீன் அன்சாரி

2002 குஜராத் இனப்படுகொலை. அகமதாபாத் வீட்டின் முன் உயிர்ப்பிச்சை வேண்டி அழுத கண்களும், பற்றிக் கொள்ள பிடிமானமின்றி கூப்பிய கைகளுமாய் தோன்றிய குதுபுதீன் அன்சாரியின் படம் உலகமெங்கும் பிரபலமானது நினைவிருக்கலாம். அந்த கண்ணீரின் துயரம் எத்தகையதொரு அவல நிலையிலிருந்து தோன்றியிருக்கும் என்பது வெறுமனே நினைவில் மட்டும் மீட்டிக் கொண்டு வரும் விசயமா? படம் வேறு பாடம் வேறு.

குதுபுதீன் அன்சாரியின் கையறு நிலை கோரிய கருணை, ஒரு விதத்தில் பார்ப்பனிய அடிமை சமூக அமைப்பில் சிக்கியிருக்கும் அடிமைகள், பிழைத்திருப்பதற்கு செய்ய வேண்டிய அன்றாட நடைமுறை. பசித்திருக்கும் ஏழைகளுக்கு பசி கிளப்பும் பண்ணையார்கள், உப்பரிகை மாளிகையின் முகடுகளில் நின்று காசுகளை வீசும் காட்சிகள் நமது  சினிமாக்களில் இன்றும் இடம் பெறுகின்றன.

தருமமும், கருணையும், வள்ளல் குணமும் பண்ணையார்களின் தயவில்தான் இந்தியாவில் விளக்கப்பட்டன. இந்த கருணைக் கடலில் துளி பங்கு வேண்டுமென்றாலும், குதுபுதீன் அன்சாரி போன்று அழுது அரற்றி தொழ வேண்டும். ஏழைகள் எனும் ஏதிலிகளின் போராட்டம் உரிமைக்காக அல்ல, கருணைக்காகவே நடந்தாக வேண்டும். ஆம். அன்சாரியின் கண்ணீரை கண்டு வருந்தியவர்கள் அனைவரும் பண்ணையார்கள் மீது கோபம் கொண்டிருக்க வேண்டியதில்லை. இது உணர்ச்சிகளின் குழப்பம் மட்டுமல்ல, உணர்ச்சிகள் தோற்றுவிக்கும் மனிதாபிமானத்தின் குழப்பமும் கூட.

சக மனிதரின் மீதான அபிமானம் அவர்களிடம் அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டிய சுதந்திரம், ஜனநாயகத்தின் அடிப்படையில் உருவாவதில்லை. அது மறுக்கப்படுவதால், அவர்களுக்கு வரும் துயரத்தினை, மறுப்பை ஆதிக்கமாக கொண்டிருக்கும் ஆளும் வர்க்கத்தின் அதிகாரம் சில நேரங்களில் பிழைத்துப் போ என்று மக்களுக்கு அருள் தரும். இதுதான் பார்ப்பனியத்தில் விதிக்கப்பட்டிருக்கும் அதிகபட்ச கருணையின்  ‘அறம்’. இந்த ‘அறத்தால்’ பயிற்றுவிக்கப்பட்டிருக்கும் மக்களிடம் அறச்சீற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

எனினும் அன்சாரி ஒரு பாமரன். ஏழை. தனது குடும்பத்தை பராமரிக்க இன்றும் கடின உழைப்பில் ஈடுபடும் மற்ற இந்தியர்களில் அவரும் ஒருவர். அவர் கண்ணீர் விடுவது அசாதாரணச் செயலல்ல. அடிமைகள் வீறு கொண்டு எழுவதை தவிர, அன்றாடம் செத்துப் பிழைப்பதெல்லாம் தவிர்க்கவியலாத விதி என்றே இந்த நாடும் மக்களும் கருதியாக வேண்டும். அதுவே கர்மபலன். கர்மத்தின் காரணங்களை ஆராயாமல் இருத்தலே பலனை சகித்துக் கொள்வதற்கான வழிமுறை.

மோடி அழுதார்இந்தியாவில் ஒரு பாமர ஏழையின் வாழ்வில் வீடு, வீதி, பொதுஇடங்கள், பொருளாதார மையங்கள், அரசியல் தளங்கள், பண்பாட்டு பிரதேசங்கள் அனைத்தும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்சினையை தோற்றுவித்துக் கொண்டே இருக்கின்றன. அதுவே மதவெறிக் கலவரம் எனும் போதும், அவனே ஒரு இசுலாமியன் எனும் போதும் ஏற்படும் கையறு நிலைக்கு போதிய விளக்கமளிக்கும் மொழிவளம் நம்மிடம் போதுமானதாக இல்லை. சொல்லில் விளக்க முடியாத ஒரு துயரத்தின் உளவியல் அது. அதனால் ‘பாவம்’தான் நம்மிடம் தோன்றும். இது வேறு வழியின்றி தொழிற்படும் ஒரு பாவனையின் சிக்கலும் கூட.

ஆனால் மோடி ஒரு பாமரன் அல்ல. பண்ணையார்களின் மரபில் உதித்த ஒரு நவீன பண்ணையார். அவர் மீது நாம் வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளைத் தாண்டி, ‘மோடி ஒரு உறுதியான நபர், கலங்காத ஆளுமை, பாரத மாதாவின் பெருமிதமான புத்திரன்’ என்றே ஊடகங்களும், சங்கபரிவாரங்களும் சான்றளிக்கின்றனர். ஆர்.எஸ்.எஸ் வரலாற்றில் ‘போர்க்குணம்’ கொண்ட மராட்டிய சிவாஜி, சாவர்க்கர், விவேகானந்தர் போன்றோரே, ஸ்வயம் சேவகர்களின் ஆதர்ச (முன்னுதாரணமிக்க) நாயகர்களாக போற்றப்படுகின்றனர். மோடி இதில் கடைசியாக சேர்த்துக் கொள்ளப்பட்டவர்.

இந்த ஆதர்ச மாமனிதர்களெல்லாம் அழுதார்களா என்பதை விட அவர்கள் கண்ணீர் விட முடியாத கரும்பாறை உறுதியைக் கொண்டவர்கள் என்றே ஆர்.எஸ்.எஸ் குழுமம் கதை பரப்புகின்றது. இன்னும் கொஞ்சம் வரலாற்றை பின்னோக்கி பார்த்தால் அல்லது ரத்து செய்து விட்டு பார்த்தால் புராண ‘வரலாற்றி’லும் இத்தகையோரே கம்பீரமாக அமர்ந்திருக்கின்றனர். கீதை அருளிய கிருஷ்ணனோ, ஷத்திரியர்களை கொஞ்சம் கொல்ல வரம்புடன் வேட்டையாடிய பரசுராமனோ, கதாயுதத்துடன் வேங்கையாக சுற்றிய பீமனோ கூட அழுகை என்றால் என்னவென்றே அறியாத மாமனிதர்கள்தான். ராமன் சீதைக்காக அலைந்து திரிந்த போது சில சொட்டு கண்ணீர் துளிகளை சிந்தியிருந்தாலும் அதற்கு பிராயச்சித்தமாக அவளை உயிரோடு புதைத்துக் கொன்று விட்டான். ஆகவே, இவர்கள் அழுத தருணங்கள் கூட அடக்கிய பெருமிதத்தின் நீட்சியாகவே இருப்பதால், அது வெறுமனே அழுகை மட்டுமல்ல. இது மோடிக்கும் பொருந்தும்.

மகாபாரதமும், ராமாயணமும் எண்ணிறந்த கதைகள், பாத்திரங்கள், சம்பவங்கள், இடைச்செருகல்களுடன் படைக்கப்பட்டாலும் அவற்றின் ஒரு வரி நீதி என்ன? அல்லது அறம்தான் என்ன?

இந்த உலகின் உணர்ச்சிகளையும் அந்த உணர்ச்சிகளை தோற்றுவித்து கட்டுப்படுத்தும் உணர்வுகளும் ஆள்வோரால் மட்டுமே தீர்மானிக்கப்படும். அதை கேள்வியின்றி பின்தொடருவதே ஆளப்படுவோரின் கடமை. இந்தக் கடமையை அனிச்சையாக செரித்துக் கொண்டு நடமாடும் போதுதான் மக்கள் தமது வாழ்க்கையை நடத்திக் கொள்ளும் சலுகையினை ஏதோ கொஞ்சமாவது பெறுகிறார்கள். மீறி கேட்பவர்களுக்கு கதைகளும், நீதிகளும், தண்டனைகளும், வரலாறாய், எச்சரிக்கையாய், அறிவிப்பாய் தெரிவிக்கப்படும். கூத்து முதல் டிஜிட்டல் வரை இன்றும் புராணங்கள் உயிர் வாழ இந்த ஆளும் வர்க்க நீதியே அடிப்படை. அவற்றை கேட்காமலேயே பின்தொடர்வது நமது தெரிவின் பாற்பட்டதல்ல.

சாவார்க்கர்
சாவார்க்கர்

எந்த சோப்பை, பற்பசையை வாங்க வேண்டுமென நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்று  மனப்பால் குடித்தாலும் உங்கள் மூளையின் சேமிப்பு மடல்களில் அவை யாரோ சிலரால் ஏற்கனவே திணிக்கப்பட்டு உத்தரவிடுகின்றன. புராணங்களின் அறமும் அப்படித்தான், இரண்டறக் கலந்து உங்களது சொந்த தத்துவமாக, வழிகாட்டியாக காட்டிக் கொள்கின்றன. இது சுயசிந்தனை இல்லை என்ற பிரச்சினையின் பாற்பட்டதல்ல. சுயமே யாரால், எப்படி வடிவமைக்கப்படுவது குறித்த பிரச்சினை.

ஆகவே புராணங்கள் முன்வைக்கும் மாமனிதர்கள் ஆளப்படும் மக்களை சாமர்த்தியமாக எப்படி பிடிக்குள் வைத்திருக்கிறார்கள் என்பதிலிருந்தே அவர்களது மாமனித பெரு நடவடிக்கைகள் வியந்தோதப்படுகின்றன. ராமன் காலத்தில் அது ஏகபத்தினி விரதமாக இருக்கலாம். மோடியின் காலத்தில் அது ஏழைகளுக்காக அழுவதாக இருக்கலாம். ஒழுக்கங்களின் பெருவியப்பு சாதனைகள் நேற்று போல இன்றிருக்க தேவையில்லை.

இதையே பார்ப்பனியம் ஸ்ருதி – ஸ்மிருதி என்று வகுத்து வைத்திருக்கிறது. எளிய விளக்கத்தின் படி ஸ்ருதி நிலையானது, அடிப்படை ‘அறங்’களையும், தத்துவங்களையும், எப்போதும் மாற்ற முடியாது, மாற்றக் கூடாது என்பதால் அவை ஸ்ருதி. அந்த ஸ்ருதியின் நடைமுறை சார்ந்த விதிகள், நடவடிக்கைகள் ஸ்மிருதி என்று அழைக்கப்படுகின்றது. இது காலந்தோறும் மாறிக்கொண்டே இருக்கும்,

இவற்றுக்கு இன்னும் பல்வேறு விளக்கங்களை பார்ப்பனிய சித்தாந்தவாதிகள் அளிக்கிறார்கள். இறைவன் அருளிய நேரடி குரல் ஸ்ருதி என்றும், ஞானிகளின் நினைவில் கூறப்படுபவை ஸ்மிருதி என்றும் கூறுகிறார்கள். இது குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் கூட பொருந்தும். இது போக இன்னும் பல விளக்கங்களும் ஒன்றை ஒன்று மறுத்தவாறும் இருக்கின்றன. நாம் இந்த வியாக்கியானங்களுக்கும் சிக்கி விவாதிக்க வேண்டியதில்லை.

ஒரு சமூக பயன்பாட்டில் ஸ்ருதி, ஸ்மிருதியின் பொருள் என்ன? இருப்பவன், இல்லாதவன் என்று, உலகம் உடைமை வர்க்கங்களாய் பிரிக்கப்பட்ட பிறகு அந்த வேறுபாட்டை அரசு, அரசன், படை, தருமம் கொண்டு விதி போல நிலை நிறுத்த வேண்டியிருக்கிறது. இப்படி பிரிந்திருப்பதே நிலையானது என்பதால் அது ஸ்ருதி என்றால், அந்த மாறா நிலையை, மாற்றக் கூடாத நிலையை அமல்படுத்தும் அல்லது ஒடுக்குமுறை மூலம் நிலைநாட்டும் வன்முறையை ஸ்மிருதி என்றும் அழைக்கலாம்.

அந்த வன்முறையின் வடிவங்கள், விளக்கங்கள் நேற்று போல இன்றிருத்தல் தேவையில்லை. அதைத்தான் ஸ்மிருதி, மாறுவது என்கிறார்கள். ஆனால் ஸ்மிருதியின் வடிவங்கள் மாறுமே அன்றி உள்ளடக்கம் மாறாது. அது போல ஸ்ருதியின் உள்ளடக்கம் மாறாதே அன்றி அதன் விளக்கங்கள் காலந்தோறும் மாறலாம். இப்படி இரண்டிலும் மாறும், மாறாது என இரண்டும் சேர்ந்தும் பிரிந்தும் இருக்கின்றன.

சாணக்கிய நீதி
“சாம, தான, பேத, தண்ட” – சாணக்கிய நீதி

இதையே சாணக்கியர் அர்த்தசாஸ்திரத்தில் “சாம, தான, பேத, தண்ட” என்று விளக்குகிறார். ஒடுக்குமுறையை நிலைநாட்ட அமைதி வழி, தானம் கொடுத்து வழிக்கு வரவைத்தல், ஒதுக்கி,பிரித்து எச்சரிக்கை விடுத்தல் இறுதியில் தண்டனை, போர் மூலம் செய்தல் – இவையே இந்த நான்கிற்கும் தரப்படும் விளக்கம்.

இன்னும் எளிய முறையில் சொன்னால் அடிக்கிற மாட்டை அடித்தும், பாட்டு கேட்கிற மாட்டை பாடியும் பால் கறத்தல் என்றும் சொல்லலாம். சாம, தான, பேத, தண்ட முறையினை மகாபாரதத்தில் கிருஷணனே பல முறை செய்து பார்த்திருக்கிறான். அளிக்கப்பட்டுள்ள விதிமுறைகளை வைத்து ராஜிய பரிபாலன விளையாட்டை இந்த நான்கு ஆயுதங்கள் மூலம் விளையாடுவதில் அவன் கைதேர்ந்தவனாக இருந்திருக்கின்றான். இந்த முறைகளின் பேதங்களை மறந்து வறட்டுத்தனமாக செய்தால் அந்த ஒடுக்குமுறையின் மூலம் ஆளும் அரசன் தேவையின்றி பலவற்றை இழப்பான். அது அரசனுக்கு மட்டுமல்ல அவனைச் சார்ந்து வாழும் ஆளும் வர்க்கத்தின் இழப்பாகவும் மாறுகிறது.

மோடி தான் பிரதமர் பதவி ஏற்புக்காக அழுததும், இனக்கலவரத்தில் இசுலாமிய மக்களின் அழுகையை அலட்சியப்படுத்தியதற்கும், ஊடகங்களுக்கு விளம்பரங்கள் மூலம் கொட்டிக் கொடுத்ததும், வைகோ முதலான தமிழ் விபீடணர்களை பிரித்து ஒதுக்கியதும், சாணக்கியனின் “சாமா, தான, பேத, தண்ட” வழிமுறைகளின் சில பிரயோகங்கள்.

ஆகவே மோடியின் அழுகை இங்கே இந்த விதத்தில் தேவைப்படுகிறது. 2002 இனப்படுகொலையில் குஜராத்தின் முழு முசுலீம் சமூகமுமே அழுது அரற்றிக் கொண்டிருந்த போது மோடியின் கண்கள் இரக்கமற்ற பெருமிதத்தின் ஒளியில் மின்னிக் கொண்டிருந்தன. “ஒரு நாய் அடிபட்டாலும் வருந்துவேன்” என்று இன்று ‘பெருந்தன்மையாக’ சொன்ன மோடி அன்று நரவேட்டையை கட்டளையிட்டு இயக்கினார். கோத்ராவின் எதிர்வினை என்று ‘அடக்கப்படும்’ இந்துமதவெறியின் கோரத்தாண்டவத்தை நியாயப்படுத்தினார்.

இந்தியாவின் பிரதமராக பதவியேற்பேன் எனும் நிலை அவரை உணர்ச்சிவசப்பட வைத்தது போல 2000 முசுலீம் மக்களின் உயிர்ப்பலி மோடியின் இதயத்தை அசைத்தோ, இல்லை தொட்டுவிடக்கூடவோ செய்யவில்லை. சி.ஐ.ஏ.வின் உயர் அதிகாரிகள் தமது அழகான வீடுகளில் அமர்ந்து கொண்டு அலங்காரமான மனைவியையும், துறுதுறுப்பான குழந்தைகளையும் கொஞ்சிக் கொண்டு இருக்கும் போதே, தென்னமெரிக்காவில் போராடும் மக்களை குண்டு வைத்து கொல்லும் கட்டளைகளை அனுப்பிக் கொண்டிருப்பார்கள். தன்னில்லத்தில் அன்பே உருவாக வாழ்பவர்கள் தொலைதூரத்தில் இரக்கமே இல்லாமல் ஆடுகிறார்கள் என்பது உண்மையில் ஒரு முரண்பாடல்ல.

இந்த இல்லற அன்பு இவ்வளவு வசதிகளுடன் தொடர வேண்டுமெனில் அங்கே அவ்வளவு இரக்கமின்றி கொலை செய்ய வேண்டும். ஆகவே நாம் கருதுவது போல அவர்கள் கருதிக் கொள்வதில்லை. ஆரியப் பெருமை பேசிய இட்லர் ஏனைய மக்களை காட்டுமிராண்டிகள் என்று கருதவில்லையா? இந்த உலகில் அன்பு, பாசம், காதல் அனைத்தும் இப்படி வர்க்கம் சார்ந்தே வேறு வேறு உணர்ச்சிகளைக் கொண்டிருக்கின்றன. இலக்கியவாதிகள் சொல்வது போல இவற்றுக்கு உலகு தழுவிய அல்லது காலம் கடந்த பொதுமையோ ஒற்றுமையோ இல்லை.

நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் பாரதிய ஜனதா எம்.பி.க்கள் கூட்டத்தில், கடந்த செவ்வாய்க் கிழமை (20.05.2014) பேசிய நரேந்திர மோடி உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கியது திட்டமிட்ட ஒன்றா இல்லை தற்செயலாக நடந்த ஒன்றா?

இதையே இப்படியும் விளக்கலாம். மன்மோகன் சிங்கை மறுகாலனியாக்கத்தை அமல்படுத்த இலாயக்கற்றவர் என்று வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த ஆளும் வர்க்கங்கள் அதை திட்டமிட்டே முடிவு செய்தன. அந்த இடத்திற்கு மோடியை கொண்டு வரவும் அவர்கள் திட்டமிட்டே காய் நகர்த்தினார்கள். ஆனாலும் அந்த தகுதியைப் பெற்ற மோடி முதல் முறை முதலமைச்சராய் வந்தது தற்செயலானதுதான். கேசுபாய் பட்டேல் கோஷ்டியை வீழ்த்த அன்று ஒரு கோஷ்டிக்கு தலைமை தாங்கும் வாய்ப்பை வரலாறு தற்செயலாகவே மோடிக்கு அளித்தது.

இன்று திட்டமிட்ட முறையில் அவர் பிரதமராக உருவானாலும் அந்த தற்செயல் வாய்ப்பு மட்டும் கிடைக்கவில்லை என்றால் பாரதப் பேரரசின் பேரரசராக சிம்மாசனத்தில் அமரும் வாய்ப்பு அவருக்கு கிட்டியிருக்காது. அந்த தற்செயல் விபத்துதான் இங்கே திட்டமிட்ட முறையில் கொஞ்சம் கண்ணீரை வரவழைத்திருக்கிறது. ஆகவே இது கிளிசரின் கண்ணீராக இருக்கும் என்று புறந்தள்ள முடியாது. பந்தயக் குதிரை போல திட்டமிட்டு வளர்க்கப்படும் ராஜகுமாரர்களை விட தற்செயலாக மாறிய ராஜகுமாரர்கள் கொஞ்சம் உணர்ச்சிவசப்படுவார்கள். அந்த உணர்ச்சி ஒரு வாய்ப்பற்ற பாமரன் திடீரென்று மாபெரும் பணக்காரனாக அமர்த்தப்பட்டதால் வரும் பெரு மகிழ்ச்சியின் உணர்ச்சி. அதை வெறும் ஆனந்தக் கண்ணீர் என்று பார்ப்பதும் போதுமானதல்ல. பேரானந்தக் கண்ணீர் என்றால் சரியாக இருக்குமோ?

ஜூனியர் புஷ்ஷோடு போட்டியிட்ட அல் கோர் கூட உண்மையில் பந்தயக் குதிரை போல வாஷிங்டன் ஆளும் வர்க்கத்தால் திட்டமிட்டு வளர்க்கப்பட்ட ராஜதந்திரிதான். ஆனால் அவரை விட எந்த அறிவுமற்ற ஒரு மைனர் குஞ்சான புஷ்ஷே போதுமென்று அமெரிக்க மக்களும் முதலாளிகளும் முடிவு செய்தது வரலாறா, விபத்தா? ஏதோ ஒன்று. புஷ்ஷின் காலத்தில்தான் அமெரிக்காவின் 21-ம் நூற்றாண்டுக்கான முக்கியமான ஏகாதிபத்திய நடவடிக்கைகள் அமலுக்கு வந்தன. அதன் விரிபொருளை புரிந்து கொள்ளும் அளவுக்கு புஷ்ஷுக்கு அறிவோ, ஆற்றலோ கிடையாது. ஆப்கானோ இல்லை நைஜிரியாவோ நாடுகளா இல்லை கண்டமா என்று பிரித்தறியும் பொது அறிவு கூட அந்த மாங்கா மடையனுக்கு இல்லை. ஆனாலும் புஷ் ஆப்கான் போருக்கு முன் உரையாற்றிய போது அவரது போர்க்குணத்திற்காக கைத்தட்டல் வாங்காமல் இல்லை. ஒரு முட்டாளே பாசிஸ்டாக வந்தமர்ந்தாலும் அவனை ஒரு வீரன் போன்று சித்தரிக்காமல் ஆளும் வர்க்கம் இருப்பதில்லை. அவர்களது மேடைக்கு ஒரு கழுதை வந்தாலும் அது குதிரைதான்.

ஆர்.எஸ்.எஸ். கையில் சிக்கிய வரலாறும், அது குதிரை என்று போற்றப்பட்டாலும் கழுதை வாயில் சிக்கிய காகிதம்தான். “பீகாரிகளாகிய நீங்கள் உலகத்தையே வென்ற அலெக்சாண்டரை கங்கைக் கரையில் வைத்து முறியடித்த மாவீரர்கள்” என்று பீகார் பொதுக்கூட்டத்தில் மோடி பேசினார். பஞ்சாபின் சட்லெஜ் நதிக்கரையோடு வந்தவழியே திரும்பிப் போன அலெக்சாண்டர், எப்போது கங்கைக்கரையில் நம்மோடு சண்டை போட்டான்? என்று ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு வரும் சந்தேகம் கூட மோடிக்கு கிடையாது. பாசிஸ்டுகள் முட்டாளாக மட்டும் இருப்பதில்லை, தாம்தான் அறிவாளிகள் என்றும் நம்புகிறார்கள்.

கிருஷ்ணன்இந்த நம்பிக்கையும் அவர்களால் சொந்தமாக பெறப்பட்ட ஒன்றல்ல. மோடிக்கு உரை எழுதிய மாபெரும் அறிஞர் கூட்டம் உருவாக்கிய மாயை அது. பாரதத்தில் கிருஷ்ணனுக்குரியதாக கூறப்படும் மதிநுட்பங்கள் கூட உண்மையில் வெண்ணெய் திருடி, கோபியர் சேலையை ஒளித்து வைத்த ஒரிஜினல் கிருஷ்ணனது சாமர்த்தியங்கள் அல்ல. அவை பார்ப்பன சித்தாந்தவாதிகளால் காலந்தோறும் ஏற்றி நுழைக்கப்பட்ட ஒரு கற்பனை. தனது அச்சங்களையும், ஆயுதங்களையும் கொடுத்து கடவுளை உருவாக்கிய ஆதிகால மனிதன் போல, பார்ப்பனர்களும், ஷத்திரியர்களும் தமது அரசாளும் நடவடிக்கைகளின் சரி தவறுகளை பரிசீலித்து அதாவது ஒடுக்குமுறையின் சாமர்த்தியத்தை புனைந்துரைத்து கிருஷ்ணனது பாத்திரத்தை வடிவமைத்தார்கள்.

கண்ணன் இப்படி இருந்தான் என்பதை விட இப்படி இருக்க வேண்டும் என்பதே அவர்களது உள்ளக் கிடக்கை. ஆளும் வர்க்க மேடைகளில் கண்ணன்கள், புஷ்கள் என்று யார் வேண்டுமானாலும் வரலாம், ஆடலாம், பாடலாம். ஆனால் அவர்களை எப்படி வாசிப்பது என்று பார்ப்பனியம் நமக்கு பயிற்றுவிக்கிறது. அதனால்தான் மோடி ஒரு போராளியாக நம்மிடம் பொருத்தமின்றி இருந்தாலும் திணிக்கப்படுகிறார்.

இதை அம்பி ஒருவரின் வாயாலேயே பார்ப்போம்.

இணையத்தில் ஆர்.எஸ்.எஸ்-ன் அறிஞர் படையாக தங்களைத்தாமே நியமித்திக் கொண்ட செல்ப் ஜெனரல்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களை நாம் நாகரீகமாக அறிவடியாட்கள் என்று அழைப்போம். அதில் ஒருவர் ஜடாயு, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இப்படி பகிர்ந்திருந்தார்.

“ராமனுக்கு அனுமன் போல நரேந்திர மோதிக்கு அமித் ஷா. தருமத்தின் தனிமை தீர்ப்பான் !” என்று நான் முன்பு ஃபேஸ்புக்கில் எழுதியிருந்தேன். ஓரளவு இலக்கியப் பரிச்சயம் உள்ளவர்கள் “தருமத்தின் தனிமை தீர்ப்பான்” என்பது கம்பனின் புகழ்பெற்ற வரி என அறிந்திருக்கலாம். துணையின்றித் தனியாக இருந்த தர்மத்தின் வடிவங்களான இராம லட்சுமணர்களுக்குப் பேருதவியாக அனுமன் வந்து சேர்ந்தான் என்பது அதன் பொருள்.

அந்த ஒருவரிப் பதிவு குறித்து வினவு இணையதளம் இவ்வாறு எழுதியுள்ளது.

// நீதி: பயங்கர புகழ் மோடி, மர்மப் புகழ் அமித் ஷா உடனான கூட்டணி இல்லை என்று தருமம் தனிமையில் கேவிக் கேவி அழுததாம், கருமம், கருமம்! //

வழிந்தோடும் வசையைத் தவிர வேறு எந்த வகை இலக்கியத்தையும் அறியாத புரட்சித் தோழர்களுக்கு உருப்படியாகத் திட்டும் அளவுக்குக் கூட நான் எழுதிய வரி புரியவில்லை என்பதில் எனக்கு ஆச்சரியமும் இல்லை.”

“தருமத்தின் தனிமை தீர்ப்பான்” என்ற கம்பனது புகழ் பெற்ற வரியை, ராமனைப் போன்ற மோடி எனும் தருமகீர்த்தி புத்திரனின் தனிமையை அனுமன் போன்ற அமீத்ஷா உதவி செய்து தீர்ப்பார் என்பதின் இலக்கிய நயம் நமக்கு புரியவில்லையாம். போகட்டும்.

ராமன்முசாஃபர்நகர் கலவரத்தில் பழி தீர்ப்போம், முசுலீம்களை பாகிஸ்தானுக்கு விரட்டுவோம் என்று பகிரங்கமாக முழங்கிய அமீத் ஷாவையும், அவரது பாஸான மோடியையும் கம்பனது கவிச்சுவையோடு ஒப்பிட்டு பார்ப்பது இவர்களே சொல்லக்கூடிய அளவில், கம்பனை படித்தவர் செய்யக்கூடிய காரியமா?

புரியும்படிச் சொன்னால் ஷகிலா படத்தின் ‘விழுமியங்களை’ சாக்ரடீஸின் தத்துவஞானக் கேள்விகளோடு ஒப்பிட்டு விளக்கினால் படிப்பவருக்கு வாந்தி வருமா, பேதி வருமா? அல்லது அதே கம்பனது கவித்துவத்தை ஒப்பிட்டு விஜயகாந்தும், அர்ஜூனும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பந்தாடுவதை வைத்து ஒரு வெண்பாதான் பாட முடியுமா?

கம்பன் அவனது காலத்தின் படிமங்களை, விழுமியங்களை ஆகச்சாத்தியமான முறையில் அதீத கற்பனை வளத்தோடு சிக்கென்ற வார்த்தைகளோடு பாடினான் என்றாலும் அந்த கவிவித்தை ஆள்வோரின் அறத்தை பற்றி நின்றே அழகு காட்டுகிறது. அதை ரசிப்பது என்பது உங்களது வரலாற்று உணர்வின் தரத்தை பொறுத்தது. அந்த ‘தரம்’ நம்மிடமில்லை. ஒருவேளை அந்த கவித்திறனை ரசித்தே தீருவேன் என்று அடம் பிடிப்போர் அத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். நீட்டித்து மோடிக்கும், பாடிக்கும் நீட்டினால் அது கைப்புள்ளயின் கதியைத்தான் வந்தடையும்.

பம்பை நதியின் அழகை வருணிக்க வந்த கம்பன், எளிய சொற்களைக் கொண்டு பெரும் பொருள் ஆழத்தை காட்டும் சான்றோர் போல, பம்பை நதி அதி ஆழத்தில் உள்ள பாதாள உலகத்தை அருகில் காட்டும் தெளிவுடன் ஓடுகிறது என்கிறான். இதை மோடியின் உரையில் பீகாருக்கு அலெக்சாந்தர் படையெடுப்பு உளறலோடு ஒப்பிட்டு எளிமையாக, ஆழமாக பேசும் சான்றோர் போல பேசினார் என்று பாராட்ட முடியுமா?

அப்படித்தான் ஜடாயு உள்ளிட்ட அடியாட்கள் முதல் கார்ப்பரேட் ஊடகங்கள் வரை மோடியின் ஆளுமையை கற்பனைக்கும் எட்டாத உயரத்தில் பறக்க விடுகின்றன. பாரதக் கிருஷ்ணனது யோக்கியதையை நாம் நேரில் பார்க்க வாய்ப்பில்லை என்றாலும் இன்றைய பாரதத்தில் நரேந்திர மோடியின் வார்த்தைகளை வசியம் செய்து மறைக்க முடியாது. மோடியோ, புஷ்ஷோ திணிக்கப்பட்ட பாசிச முட்டாள்கள் என்பதை ஒருவேளை கம்பனே இன்று உயிரோடு இருந்தாலும் தனது கவித்துவ திறனை வைத்து மறைக்க முடியாது. மறைப்பவர்களின் ரசனை என்ன என்பதை ஷகிலா படங்களை பார்த்தும், சாக்ரடீஸை படித்தும் புரிந்து கொள்க.

பாராளுமன்ற அரங்கில் பேசிய மோடி “நாம் ஜனநாயகத்தின் கோயிலில் இருக்கிறோம், புனிதமாக பணியாற்றுவோம்” என்று ஆரம்பித்தார். இந்த கோவிலில் ஹரேன் பாண்டியா, இஷ்ரத் ஜஹான், வன்சாரா போன்றோருக்கு என்ன நடந்தது என்பதறிவோம், முதலிருவர் மோடியின் பெருமை காக்க பலியிடப்பட்டார்கள். பின்னவர் பெருமை காக்கத் தவறியதால் தண்டிக்கப்பட்டார். ஜனநாயகக் கோவிலின் பெருமையும், புனிதமும் இந்த அழுகுணி ஆட்டங்கள் நடத்தித்தான் காப்பாற்றப்படவேண்டும் என்றால் அதை செய்துதான் ஆக வேண்டும்.

இதில் சரி, தவறு, நீதி, அநீதி, ஒழுக்கம், மீறல் என்று பார்க்க முடியாது. அதுதானே கீதை, கிருஷ்ணன்? ராஜிய பரிபாலனங்களை இருமைகளின் விதியால் எளிமைப்படுத்தி பார்க்கக் கூடாது என்பதே பார்ப்பனியத்தின் ராஜதருமம். அதுவும் ஒடுக்குபவனுக்கு அத்தகைய இருமைக் குழப்பம் வரவே கூடாது.

“என் வாழ்நாளில் நான் எப்போதுமே பதவிக்கு முக்கியத்துவம் அளித்ததில்லை. பதவியைவிட என் பார்வையில் பொறுப்புகளே முக்கியத்துவம் வாய்ந்தவை.” – என்றார் மோடி. இது வழக்கமான ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர்கள் கூறும் ஒரு உத்தி. அதாவது ஜனநாயகத்தை உரிமையாக கோரினால், ‘இவர்கள் பதவி முக்கியமல்ல, பொறுப்பே முக்கியம்’ என்பார்கள். அப்படி பதவியும், பொறுப்பும், அதிகாரமும் வேறு வேறாக பிரிந்திருக்கிறதா என்ன?

ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் ஸ்வயம் சேவகர்கள் வாக்களித்து தமது தலைவர்களையும், பிரச்சாரகர்களையும் தேர்வு செய்வதில்லை. ஹெட்கேவார் மரணத்திற்கு முன் கோல்வால்கரை நியமித்தார், கோல்வால்கர் சாவதற்கு முன் தேவரசை நியமித்தார். இந்த ஆதீன நடைமுறைதான் இன்றும் சங்க பரிவாரங்களில் தொடர்கிறது. மோடியைப் பொறுத்த வரை இந்த ஆதீன முறையில் பதவிக்கு வந்தாலும் அது ஆர்.எஸ்.எஸ் ஆண்டிகள் மட்டும் முடிவு செய்யவில்லை. ஆளும் வர்க்கமும் சேர்ந்தே முடிவு செய்திருக்கிறது.

ஆளும் வர்க்கம் அளித்திருக்கும் பொறுப்பினை நிறைவேற்றுவதைத் தவிர பதவிகள் முக்கியமல்ல என்றும் நாம் விளங்கிக் கொள்ளலாம். அதனால்தான் மன்மோகன் சிங் விரட்டப்பட்டு மோடி வரவழைக்கப்பட்டிருக்கிறார். நாளை மோடி போய் இன்னொரு  கேடியும் வரலாம். அந்த நிலை வரக்கூடாது என்பதால்தான் மோடி தனது வார்த்தைகளில் தினமும் 36 மணிநேரம் உழைப்பேன், ஐந்தாண்டுகளுக்கு அறிக்கை கொடுப்பேன் என்று ஏகப்பட்ட வாக்குறுதிகளை அளிக்கிறார்.

மோடிக்கு பதவி முக்கியமில்லை என்றால் அவர் ஆறுமாதங்களாக நாடு முழுவதும் விமானத்தில் சுற்றி வந்த போது குஜராத்தின் முதலமைச்சர் என்ற பொறுப்பை சரியாக ஆற்ற முடியவில்லை அல்லவா? அப்போதே ஒரு புதிய முதலமைச்சரை தெரிவு செய்யாமல் போன காரணம் என்ன? ஒருவேளை பிரதமர் போட்டியில் தோற்றால் குஜராத்தின் ஆதீன பதவி வேண்டும் என்ற பொறுப்புதானே அதை செய்ய விடாமல் தடுத்திருக்கும்.

இன்று கூட ஆனந்தி பென் என்ற 73 வயது ஆபத்தில்லாத பாட்டியை தனது முதலமைச்சர் பதவியில் நியமித்திருக்கிறார் என்றால் மோடியின் பொறுப்புணர்ச்சிக்கு அளவே இல்லை என்பதை நாம் ஒத்துக் கொள்ள வேண்டும். அடுத்த மாநில சட்டமன்ற தேர்தலில் இந்த பாட்டி போய் இன்னொரு பூட்டன் வருவார். பாசிஸ்டுகள் தமது அருகில் இப்படிப்பட்டவர்களைத்தான் வைத்துக் கொள்வார்கள் என்பது மோடிக்கு மட்டுமல்ல நமது லேடிக்கும் பொருந்தும்.

christ-last-temptation“அரசு என்பது ஏழை மக்களைப் பற்றிச் சிந்திப்பதாக இருக்க வேண்டும். ஏழைகளுக்கு செவிசாய்க்க வேண்டும் அவர்களுக்காகவே இயங்க வேண்டும். எனவே, புதிய அரசு ஏழைகளுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது.” – என்று மோடி பேசிய போது தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருந்த அதானியும், அம்பானியும், அமெரிக்க தூதர்களும் கள்ளச் சிரிப்பு சிரித்திருப்பார்கள். தங்களைப் போன்ற ‘ஏழை’களுக்கு மோடி எனும் ஏழைக்காவலன் கிடைத்திருப்பதை வைத்து அந்த முதலாளித்துவ ஏழைகள் நன்றிக்கடனாய் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தால் கூட ஆச்சரியமல்ல.

“அத்வானி அவர்கள் பேசியபோது “இந்த முறை மக்களவைத் தேர்தலின் பொறுப்புகளை ஏற்று பா.ஜ.க-வுக்குக் கருணை செய்திருக்கிறார் மோடி” என்றார். அத்வானிஜி, நீங்கள் மீண்டும் இந்த வார்த்தையை உபயோகிக்காதீர்கள். (மோடியின் குரல் கம்மி, கண்களிலிருந்து நீர் வழிய ஆரம்பிக்கிறது.)

ஒரு மகன் தனது தாய்க்குச் செய்யும் பணிவிடையை அவருக்குச் செய்யும் கருணை எனக் கூற முடியாது. தாய்க்குப் பணிவிடை செய்யக் கடமைப்பட்டவர் மகன். எனவே, எனது தாயான இந்தக் கட்சிக்கு நான் கருணை செய்ததாகக் கூற முடியாது.”

மோடி குறிப்பாக அழுத இடம் இதுதான். தாதாக்கள் தமது சமூக நடவடிக்கைகளில் எத்தகைய கொடூரங்களைக் கொண்டிருந்தாலும் அவர்களுக்கிடையான உறவில் மட்டும் இத்தகைய உணர்ச்சிகள் பெருக்கெடுத்து ஓடும். ஏனெனில் தாதாக்கள் எவரும் குட்டி தாதாக்களால் தெரிவு செய்யப்பட்டு பொறுப்பாக்கப்பட்டு வருவதில்லை.அது அதிகாரத்தை கைப்பற்றிக் கொள்ளும் சாமர்த்தியத்தால் வருவது.

“கர்த்தரே என்னை ஏன் கைவிட்டு விட்டீர்” என்று ஏசுநாதர் கூட சிலுவையில் அறைந்த தருணத்தில் அழுதார். அது, தான் கொண்டிருந்த நன்னெறிகளுக்கு இறுதியில் இதுதான் தீர்வா என்று தளர்வுற்ற நேரம். மோடியோ இசுலாமிய மக்களை சிலுவையில் அறைந்ததால் அரசனானவர். அதனால் சிலுவையில ஆணி அடித்த ஒருவனுக்கு இத்தகைய பெரும் பதவியா என்று அவர் ஒரு கணம் நினைத்திருக்கக் கூடும்.

இங்கே ஏசுநாதர் இறுதியில் வந்தது தற்செயலானது என்பதோடு முடித்துக் கொள்கிறோம்.

 1. Nice article. Philosophical encounter to Modi’s acting.
  Modi did all possible things to remove Advani from his competition to become the PM candidate. On the day election results announced Advani said similar to this.. “We need to analyze the role of Modi in this victory..”. Now he is crying inside. But on stage Modi is crying.

  Both Modi and Advani are great actors. We have seen many typical Tamil, Telugu political films with such scenes.

 2. படிக்க ஆரம்பித்தவுடனே இலக்கிய இன்பம் இனித்திறங்கியதை மனம் மணமாய் கூறியது,பின்புதான் உனர்ந்தேன் அது ஜடாயு-வின் மீது சாட்டையை சுழற்ற என்று…, எனினும் சுழற்றியது குறைவுதான் ஆனால் அடி ஒவ்வொன்றும் அதிரடி.ஜடாயு பேஸ்புக்கில் இதற்கும் இலக்கிய ரசம் பிழிந்துவிடப்போகிறார் இலக்கியம் சக்கையாகி விடும். தமிழை முதலில் இந்துவெறீயர்களீடமிருந்து விடுதலை செய்ய வேண்டும்.பாடபுத்தகங்களீடமிருந்து இந்துத்துவத்தை விரட்ட வேண்டும்.பின்பு எழுதுவோம் ஒர் இலக்கியம் அது ஆபாசத்தை அழித்தொழித்து கடவுளை அறீவியலுக்கு பலி கொடுத்து பொதுவுடைமையை அறீவிப்பதாய் அமையட்டும்

 3. எங்க அடிச்சா மக்கள் எப்படி விழுவார்கள் என்பதை நன்றாக அறிந்த மகா நடிகன் இந்த மோடி..மக்களும் அப்படியே இவர் அழுவதை பார்த்து ச்ச என்ன மனுஷன்யா இந்த மோடினு அறிவு இல்லாமல் யோசிக்கறாங்க.

 4. Hinduism proposes the best route to attain Moksha and for gods sake don’t bring caste-ism. Its like open source and lets you to customize its practices yet helps you to adhere to the principles.

  You may agree with the above statement or not. We can debate in length on this, But I hope, you agree that it will not force non-Hindus to convert to Hinduism. Hinduism is intertwined with our culture. Millions of people believe in Hinduism. It is our responsibility to safe guard and cleanse Hinduism. Even Buddhism is an extracted filtered form of Hinduism. There are many admirers of Hinduism (Just check – http://en.wikipedia.org/wiki/The_Tao_of_Physics)

  We need a leader who can support us in this endeavour. He is not perfect, but we have turned into the right direction. Lets explore this option and try to rein Modi when he goes out of control.

  And for Gujarat riots,lets be pragmatic. I don’t think Modi ordered goons to take out the foetus and kill. He did not lead army of people and charged Muslims. He might have let them to kill Muslims to punish them but he wouldn’t have imagined that people would do worse things in mass hysteria. Tehelka exposed that many BJP leaders who orchestrated the riots were stunned by the scale of killings and rapes.

  It is Modi’s miscalculated reaction to Godra killings which went horribly wrong. Just because 2000 muslims were killed, we can’t ignore the murder of 50 hindus. IT IS NOT THE NUMBERS THAT MATTERS HERE.

  These kind of articles will keep you away from people. Instead focus in connecting with people, talk about environmental issues, labour problems. Then you will gain confidence. Anything that is directly imported and used as-is in India won’t suit us – be it capitalism or communism

 5. மோடியின் சில துளி கண்ணீருக்குள் இவ்வளவு புராண,இதிகாச,வரலாற்று,விஞ்ஞான,வேடிக்கை,வினோத,விளையாட்டுக்கள் இருக்கிறது என்று இப்போது தானே புரிகிறது.புரிந்தும் புரியாமல் இருக்கிறது.கட்டுரையின் சில பகுதிகள் உயர்ந்த கவித்துவ நடையில் இருக்கிறது.ஒரு தரை டிக்கெட்[அரசியலில்] மோடிக்கு இவ்வளவு உயர்ந்த நடை பொருந்தவில்லை.மீண்டும் படிக்கும் விருப்பமும் எழவில்லை,மோடியானதால்.ஆர்வம் ஏற்பட்டால் மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு கருத்து சொல்லலாம்.எஸ்ராவ் கருத்துகள் சுய முரண்பாடுகளுடன் இருக்கிறது.அவருடைய கருத்துகளை அவரே ஒரு முறை படித்துப் பார்க்கலாம்.

 6. // ”சரி… உங்களைப் போன்றோரின் பிரசாரங்களையும் மீறி மோடி பிரதமர் ஆகிவிட்டால்..?”

  ”எந்தக் காரணத்தால் மோடி குஜராத்தில் வெற்றி பெற்றாரோ, அதே காரணத்தால் அவரால் இந்தியாவில் வெற்றிபெற முடியாது. இந்து மதவெறி, முஸ்லீம் எதிர்ப்பு… என்ற அவரது குஜராத் ஃபார்முலா, தேசிய அளவில் உதவாது. ‘மோடி மேனியா’ என்பது, நகர்ப்புற நடுத்தர வர்க்கத்திடம் மட்டும்தான் இருக்கிறது. நகர்ப்புற உழைக்கும் வர்க்கம் மற்றும் கிராமப்புற மக்களிடம் இது எடுபடவில்லை. ஆக, தனிப் பெரும்பான்மை என்பதை பா.ஜ.க-வால் கனவிலும் நினைக்க முடியாது. கூட்டணி ஆட்சி அமைக்கலாம் என்றால், அதற்கு நரேந்திர மோடிதான் வில்லன். ஆகவே, மோடியின் பிரதமர் கனவு நிறைவேறும் வாய்ப்பு மிகவும் குறைவு. இது நிறைவேற வேண்டுமெனில், மிகக் கேவலமான சந்தர்ப்பவாதிகளாக மற்ற அரசியல் கட்சிகள் மாற வேண்டும். அதற்கான வாய்ப்பு இல்லை என்றும் சொல்ல முடியாது!”//

  அதெல்லாம் சரி, ஏதேச்சையாக தேடியதில் மருதையன் அவர்களின் மேற்கண்ட பதில் விக்டன் தளத்தில் படிக்க நேர்ந்தது. இப்ப என்ன சொல்ல போறீங்க ! ? தனிப் பெரும்பான்மையாவே வந்துட்டாரே ! காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் வண்ணம்தானுங்க !

  • kurumuni,

   [1] ஒரு சிறிய ஆனால் கொள்கை பிடிப்பு உள்ள இயக்கம் ம க இ க மட்டுமே தமிழகத்தில் மோடி மதவாதத்துக்கு எதிராக முழு வீச்சுடம் மக்களீடம் பிரச்சாரம் செய்து உள்ளது உங்கள் காமாலைக் கண்களுக்கு தெரியவீல்லையா ?

   [2]இந்தியா முழுவதும் அடித்த மோடி அலை தமிழகத்தில்,மேற்கு வங்கத்தில்,ஓடிஸாவில் அடிக்காதது ஏனோ ?

   //காமாலைக் கண்ணுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் வண்ணம்தானுங்க !

  • kurumuni,

   [1]2000 கோடி தேர்தல் செலவு செய்தும் மோடி நண்பர் ,IJK தலைவர் ,SRM முதலாளி பச்சமுத்து என்ற பாரிவேந்தர் மண்ணை கவ்வியது ஏன் ?

   [2]கன்னியாகுமரியில்[மதம்] பொன்னரும் ,தருமபூரியில்[சாதி] அன்பும் வெல்வது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே !

   • அடடா சரவணா!!

    //கொள்கை பிடிப்பு உள்ள இயக்கம் ம க இ க மட்டுமே தமிழகத்தில் மோடி மதவாதத்துக்கு எதிராக முழு வீச்சுடம் மக்களீடம் பிரச்சாரம் செய்து உள்ளது //

    இதுனாலத்தான் இங்கே பிஜேபி ஜெயிக்க முடியாம அம்மா அத்தனை சீட்டு ஜெயிச்சாங்களோ..!!

    //கன்னியாகுமரியில்[மதம்] பொன்னரும் ,தருமபூரியில்[சாதி] அன்பும் வெல்வது என்பது சிறு குழந்தைக்கு கூட தெரியுமே !//

    இத்தனை கட்சிகள் பிரிந்து போட்டிப் போட்டா அம்மாதான் எல்லா சீட்டும் ஜெயிப்பாங்கன்னு நேத்து பொறந்த குழந்தைக்கே தெரியுமே..

    தமிழ்நாட்டுல ஜெயிக்கலையே.. ஒரிசாவில ஜெயிக்கலையே.. வங்காளத்துல ஜெயிக்கலையேன்னு கூவுறதுக்கு முன்னே மேலே குருமுனி என்ன சொல்லி இருக்காருன்னு பார்த்துக்கோணும். மோடி தனி மெஜாரிட்டியில ஜெயிச்சு பிரதமராயி, மருதையன் மாதிரியான அரசியல் பு’ளி’களோட கணிப்புல கரியை பூசிட்டாரு. இதுதான் சாரம். இதை விட்டுட்டு அங்க கெலிக்கலையே, இங்க கெலிக்கைலேயேன்னு ஊளையிட்டா, அந்த மாநிலத்துக்கு எல்லாம் கம்னியூஸ்டு காரங்களா பிரதமரு?! காங்கிரஸ் காரணம், விலைவாசி காரணம்னு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும் பிஜேபி ஜெயிச்சதுக்கு மோடி தான் காரணம். அதுக்கு பெரும்பான்மையான மக்கள் மோடி மீது வச்ச நம்பிக்கைதான் காரணம். அந்த நம்பிக்கை இல்லேன்னா மூணாவது தேசிய கட்சியான கம்னியூஸ்டுதானே ஜெயிச்சு இருக்கணும்.? காணாமப்பூட்டே.. !!

    • Ramchand,

     [1]1967 when the Congress won 283 seats with a 40.8 percent of the total votes polled.

     [2]The big wave election of 1977 saw the Janata Party sweep to power with 295 seats with 41.3 percent of the total votes polled.

     [3]Now in 2014 , With just 31 percent vote share, the BJP has managed 282 seats.

     |———————-What a great people support Modi has!———————–|

     Thanks to first post :

     http://www.firstpost.com/politics/bjps-31-percent-vote-share-modi-mandate-or-freak-event-1547825.html

     //பிஜேபி ஜெயிச்சதுக்கு மோடி தான் காரணம். அதுக்கு பெரும்பான்மையான மக்கள் மோடி மீது வச்ச நம்பிக்கைதான் காரணம்//

    • Ramchand,

     [1]If the BJP claims that the election was a referendum on Modi then they will fall victim to the argument that 69 percent of the voters voted against Modi.

     Thanks to first post :

     http://www.firstpost.com/politics/bjps-31-percent-vote-share-modi-mandate-or-freak-event-1547825.html

     //மோடி தனி மெஜாரிட்டியில ஜெயிச்சு பிரதமராயி, மருதையன் மாதிரியான அரசியல் பு’ளி’களோட கணிப்புல கரியை பூசிட்டாரு. இதுதான் சாரம். //

     • சரவணன்,

      //The big wave election of 1977 saw the Janata Party sweep to power with 295 seats with 41.3 percent of the total votes polled.//

      ஆமா, இந்த புள்ளிவிபரத்தைக் கொடுக்கிறதுக்கு நீங்க 1950 க்கும் 77க்கும் தான் போகணும். அன்றைக்கு நடந்த மிசா கொடுமைகள், காங்கிரஸ் தவிர அத்தனை அரசியல் கட்சிகளிடையே, நாட்டு மக்களிடையே உண்டான கொந்தளிப்பு அப்படி ஒரு சதவீதத்துல மாற்று அரசு அமையக் காரணமாச்சு. மாற்று அரசு ரொம்ப நாள் நீடிக்கலைங்கிறது அடுத்த விசயம். அதுக்கு பிறகு தனிப்பெரும்பான்மையோட காங்கிரஸ் மட்டும்தான் ஒண்ணு இரண்டு முறை ஆட்சி அமைச்சு இருக்கு. ஒவ்வொரு மாநிலத்துலயும் மாநிலக் கட்சிகள் பெரிதாக வளர்ந்து இருக்கக்கூடிய இந்த காலக்கட்டத்துல தனி மெஜாரிட்டியே கேள்விக்குறிங்கிறதுதான் கடந்த மூணு நாலு எலக்சன்ல நாம பார்த்தது.

      இன்னைக்கு கூட்டணிக்கட்சிகள் ஆதரவு இல்லாம ஆட்சியைப் பிடிப்போம்னு பிஜேபியே நினைச்சுப் பார்த்து இருக்காது.

      //If the BJP claims that the election was a referendum on Modi then they will fall victim to the argument that 69 percent of the voters voted against Modi.//

      ஹஹ்ஹா, நீங்க ஜெயிச்ச கட்சியோட மொத்த ஓட்டு சதவீதம், ஜெயிக்காத மத்த கட்சிகள் அனைத்தோட மொத்த ஓட்டு சதவீதம்னு பிரிச்சு இப்படி ஒப்பிட்டு பார்த்தீங்கன்னா இந்த ஜனநாயக நாட்டுல இது வரைக்கும் ஜெயிச்ச அத்தனை கட்சிகளுக்குமே எதிர் ஓட்டுகள்தான் அதிகம். அது அசெம்பளி எலக்சனாகட்டும், லோக்சபா எலக்சனாகட்டும்.. தமிழ்நாட்டுல அம்மாவுக்கு எதிரா வாக்களிச்சவங்கதான் அதிகம்னு வரும். ஆட்சி வேண்டாம்னு சொல்லிடலாமா?

      31 சதவீதமோ, 21 சதவீதமோ.. கட்சிக்கு தனி மெஜாரிட்டி இருக்கு. தனிப்பட்ட முறையில கட்சியில அவருக்கு பெரிய செல்வாக்கும் இருக்கு. இனி அடுத்த 5 ஆண்டுக்கு அவர்தான் பிரதமர். ஒரிஸ்ஸாவுக்கும் அவர்தான் பிரதமர், தமிழ்நாட்டுக்கும் அவர்தான் பிரதமர். அவரை கொஞ்சம் தொந்திரவு பண்ணாம செயலாற்ற விட்டுப் பார்ப்போம். நான் பிஜேபி காரன் இல்லை. ஆனா மோடிக்கு ஓட்டு போட்டவன். மாற்றத்தைக் கொண்டு வரக்கூடிய நபர்னு ஆல்டர்நேட்டிவா வேறு யாரையும் பார்க்க முடியலை. நாளைக்கே மாற்றங்கள் நடந்துடும்னு எதிர்பார்க்கிற குழந்தையும் இல்லை நானு. ரெண்டு மூணு வருடங்கள் பொறுத்திருந்து பார்க்கலாம். சரியில்லையா.. உங்க இடத்துல இருந்து நானும் விமர்சிப்பேன்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க