privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்மோடியின் அவசரச் சட்டம் - அதிர்ச்சியூட்டும் பின்னணி

மோடியின் அவசரச் சட்டம் – அதிர்ச்சியூட்டும் பின்னணி

-

நாடாளுமன்ற தேர்தல் முடிவின் பொருள் என்ன என மே 16-ம் தேதி வினவில் வெளியான பதிவு இப்படி முடிகிறது :

பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனை போலத் தெரிகிறது இந்த தீர்ப்பு. “இது தண்டனைதான்” என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்றுவார்.

தற்போது மோடி தனது உணர்த்தும் பணியினை ஆரம்பித்து விட்டார். ஆனால் மோடிக்கு கொடி பிடித்த அறிவுஜீவிகள் எத்தனை பேர் இதை உணர்வார்கள், தெரியவில்லை.

மோடி அமைச்சரவையின் முதல் முடிவே, “தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய் – TRAI) தலைவராக பணியாற்றுபவர்கள், பதவிக் காலம் முடிந்த பிறகு மத்திய, மாநில அரசு பதவிகளுக்கு நியமிக்கப்படக் கூடாது.” என்ற டிராய் சட்ட விதிமுறையை அவசர சட்டம் மூலம் மாற்றியதுதான். இதற்கு என்ன தலை போகும் அவசரம் என்று கேட்கிறீர்களா?

நிருபேந்திர மிஸ்ரா
நிருபேந்திர மிஸ்ரா

இப்படி சட்டத்தை திருத்தினால் இந்திய முதலாளிகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருக்கும் 70 லட்சம் கோடி ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டு வந்து விடலாம் என்று யாரோ மோடிக்கு சொல்லி விட்டதால் சூப்பர்மேன் மோடி வழக்கமான அதிகாரவர்க்க இழுபறிகளை உடைத்தெறிந்து அவசர சட்டம் போட்டு விட்டார் என்று மோடி ரசிகர்கள் பேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போட நினைக்கலாம்.

உண்மையில் அப்படி இல்லை. 2006-ம் ஆண்டு முதல் 2009 வரை டிராய் தலைவராக இருந்த நிருபேந்திர மிஸ்ரா என்ற உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரியை பிரதமரின் முதன்மை செயலராக நியமிக்க மோடி விரும்பியிருக்கிறார்.

மிஸ்ரா மீது மோடிக்கு அப்படி என்ன பாசம் என்று பார்க்கலாம். டிராய் என்பது 1990-களுக்குப் பிறகு நாட்டை அன்னிய நிறுவனங்களின் சுரண்டலுக்கு திறந்து விடும் மறுகாலனியாக்க கொள்கையின்படி தொலை தொடர்பு, பங்குச் சந்தை, மின்சாரம், தேசிய நெடுஞ்சாலை சாலை போன்ற துறைகளில் உருவாக்கப்பட்ட ஒழுங்கு முறை ஆணையங்களில் ஒன்று. துறை ரீதியான கொள்கை முடிவுகளை கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்யும் அதிகாரிகள் அல்லது நேரடியாக கார்ப்பரேட்டுகளின் பிரதிநிதிகள் எடுப்பதற்காக உருவாக்கப்பட்டவை இந்த ஒழுங்குமுறை ஆணையங்கள். நாடாளுமன்றம், அதிகார வர்க்கம், நீதிமன்றம் ஆகிய பாரம்பரிய அரசு அமைப்புகளுக்கு மேலாக முதலாளிகளுக்கு நேரடியாக சேவை செய்யும் கடப்பாடு உடையவை.

நிருபேந்திர மிஸ்ரா டிராய் தலைவராக பதவி வகித்த காலகட்டத்தில்தான் 2G அலைக்கற்றை ஒதுக்கீட்டில் டாடா, ஏர்டெல், அம்பானி முதல் டஜன் கணக்கிலான கார்ப்பரேட்டுகளுக்கு ரூ 1.76 லட்சம் கோடி மதிப்பிலான பொதுச் சொத்தை கொள்ளை கொடுப்பது நடத்தி முடிக்கப்பட்டது. மிஸ்ராவை கார்ப்பரேட்டுகள் நேசிப்பதற்கு இது ஒன்றே போதுமானதுதான்.

மேலும் அமெரிக்காவின் ஹார்வர்டின் ஜான் எஃப் கென்னடி அரசாங்கத்துக்கான கல்லூரியில் (college of Government) மேல்படிப்பு பயின்ற மிஸ்ரா நிதி அமைச்சகத்திலும், வாஷிங்டனில் உள்ள இந்திய தூதரகத்திலும், உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகளை நிறைவேற்றும் பணியில் இருந்தவர். உலக வங்கி, ஆசிய வளர்ச்சி வங்கி, நேபாள அரசு இவற்றுக்கு ஆலோசகராகவும் பணியாற்றி வருகிறார்.

கல்யாண் சிங்
பாபர் மசூதி இடிப்பை நடத்திய பா.ஜ.கவின் கல்யாண் சிங்

இவற்றுக்கு மேலதிகமாக உத்தர பிரதேச மாநிலத்தில் பாபர் மசூதியை இந்து மதவெறி கும்பல் சட்டவிரோதமாக இடித்துத் தள்ள ஏற்பாடு செய்து கொடுத்த கல்யாண் சிங் அரசின் முதன்மை செயலராக பணியாற்றியவரும் இந்த மிஸ்ராதான். மசூதி இடிப்பிற்கு 2 மாதங்களுக்கு முன்பு டெல்லிக்கு மாற்றப்பட்டு நோய்டா தொழிற் பேட்டை ஆணையத்தின் தலைவராக விவசாய நிலங்களை பிடுங்கும் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

எனவே ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சேவை, இந்துத்துவ அரசியலுக்கு உறுதுணை என்று இரட்டைத் தகுதி கொண்ட மிஸ்ராதான் தனது முதன்மை செயலர் ஆக வேண்டும் என்று மோடி விரும்பியதில் ஆச்சரியமில்லைதானே.

அப்படி ‘பாதுஷா’ மோடி முடிவு செய்த பிறகு பார்த்தால், டிராய் தலைவராக இருந்த நிருபேந்திர மிஸ்ராவை டிராய் சட்ட விதிமுறையின்படி மத்திய அரசு பதவி எதற்கும் நியமனம் செய்ய முடியாது என்று தெரிந்ததாம். ஒழுங்குமுறை ஆணையங்களின்  தலைமைப் பொறுப்பில் இருப்பவர்கள் பதவி ஆசைக்கு மயங்கி ஊழலில் இறங்கி, முதலாளிகளின் நலனுக்கு பாதகம் விளைவித்து விடக் கூடாது என்ற அக்கறைதான் டிராய் சட்டத்தின் இந்த விதிமுறையின் அடிப்படை..

ஆனால், கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்ய மிஸ்ராதான் சரியான ஆள் என்று இந்துத்துவ மோடி விரும்புவதை யார் மறுத்து விட முடியும்? ’60 கோடி வாக்காளர்களின் ஒருமித்த தேர்வாக’ பிரதமர் ஆனவராச்சே! சட்ட அமைச்சகம் அவசர அவசரமாக அவசர சட்டத்தை தயாரித்து கொடுக்க, மோடியின் அமைச்சரவை சட்டத்தை திருத்த ஒப்புதல் அளித்து விட்டது. இப்படி ஒரு அடியாள் அதிகாரியை நியமிப்பதற்கே அவசர சட்ட திருத்தம் கொண்டு வந்தால் மற்ற நடவடிக்கைகளுக்கு என்னவெல்லாம் நடக்கும்?

ஜான் கெர்ரி
ஜான் கெர்ரி

அமெரிக்காவுக்கு அடிபணிவதில் மோடியும் அமைச்சரவை சகாக்களும் ஒத்த கருத்துடையவர்கள் என்பதற்கு சான்றாக வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய-அமெரிக்க பொருளாதார உறவை $500 பில்லியன் அளவுக்கு அதிகரிப்பது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை செயலர் (அமைச்சர்) ஜான் கெர்ரியுடன் தொலைபேசியில் பேசியிருக்கிறார். பாதுகாப்புத் துறை, இணைய வணிகம், காப்பீடு துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிக்கவும், இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை தீவிரமாக நடைமுறைக்கு கொண்டு வருவதையும், அமெரிக்கத் தரப்பு வலியுறுத்துகிறது. அதாவது இவற்றினை வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்ற உத்திரவை அமெரிக்கா நினைவுபடுத்துகிறது. பதிலுக்கு சுஷ்மா சுவராஜ், தெற்காசிய நாடுகளின் தலைவர்களுடன் மோடி நடத்திய பேச்சு வார்த்தை விபரங்களையும் கெர்ரியிடம் விளக்கியிருக்கிறார். அதாவது அமெரிக்காவின் நலனில் தங்களது எலும்புத்துண்டுகளை காணும் இந்திய தரகு முதலாளிகளின் வர்த்தக நலனுக்காகவே இந்த தெற்காசிய தலைவர் சந்திப்பு என்பதை  பணிவுடன் விளக்கியிருப்பார்.

நிருபேந்திர மிஸ்ரா நியமனம், முசாஃபர் நகர் கலவர குற்றவாளி சஞ்சீவ் பலியானை அமைச்சர் ஆக்கியது என்று முதலாளித்துவ அறிஞர்கள் போற்றும் நாடாளுமன்ற, அரசியல் சட்ட மரபுகளை எல்லாம் தன் தலையில் எஞ்சியிருக்கும் மயிருக்கு சமமாகக் கூட மதிக்காமல் மோடி நடந்து கொள்வதைப் பார்த்து உயர்படிப்பு படித்து, அமெரிக்காவில் எல்லாம் பணி புரிந்த அம்பிக்கள் சிலருக்கு வயிற்றில் புளி கரைக்க ஆரம்பித்திருக்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற பி.எஸ் ராகவன் என்ற முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது வலைப்பதிவில் ஒரு தனிநபரை பதவியில் அமர்த்துவதற்காக ஒரு அவசர சட்டம் பிறப்பிப்பது என்பது இதுவரை கேள்விப்படாத ஒன்று என்று புலம்பியிருக்கிறார்.

மோடி“நிருபேந்திர மிஸ்ராவிடம் அப்படி என்னதான் இருக்கிறது, 62 வருஷத்துக்கு முன்பு ஐ.ஏ.எஸ்சில் சேர்ந்த நான் இது வரை வந்த எல்லா அதிகாரிகளையும் பார்த்து விட்டேன். இந்த ஆளுக்கு அப்படி எந்த ஸ்பெஷல் தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை” என்று வயிறு எரிகிறார். “மோடியோ அவரது உதவியாளர்களோ கொஞ்சம் முயற்சித்திருந்தால் நிருபேந்திர மிஸ்ரா போன்ற அரை டஜன் அதிகாரிகளை கொண்டு வந்து நிறுத்தியிருக்கலாம்” என்று மோடிக்கு வகுப்பு எடுக்கிறார். மோடியாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டு லேடியாக இருந்தாலும் சரி, ‘ஒரு விஷயத்தை நினைச்சிட்டா அதற்கு மாறா அவங்க பேச்சையே அவங்க கேட்க மாட்டாங்க’ங்கறது இந்த அறிவாளிக்கு தெரியவில்லை. மேலும் இது மோடியின் தனிப்பட்ட முடிவு மட்டுமில்லை, தரகு முதலாளிகளின் சேவைக்கு பொருத்தமான நபர் என்ற ஆளும் வர்க்கத்தின் முடிவாகவும் இருக்கிறது. அந்த வகையில் மிஸ்ராவின் ‘சேவைகளை’ ஏற்கனவே பார்த்திருக்கிறோம். அதுவும் ராகவனுக்கு தெரியவில்லை.

தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய சட்டத்தை ஒரு தனி மனிதருக்காக திருத்துவதன் மூலம் மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி, ஒழுங்குமுறை ஆணையங்களின் புனிதத்தையே மோடி குலைத்து விட்டிருக்கிறார் என்றும் வருத்தப்படுகிறார் ராகவன்.

குஜராத்தில் இந்து மத வெறியர்கள் அப்பாவி முஸ்லீம் பெண்களையும், குழந்தைகளையும் படுகொலை செய்வதை கண்டு கொள்ளாமல் இருக்கச் சொன்னதிலிருந்து, ஹரேன் பாண்டியா முதல், இஷ்ரத் ஜகான், சொராபுதீன் ஷேக் வரை பலரை போலி மோதல் கொலையில் தீர்த்துக் கட்டுவதை வழி நடத்தியதிலிருந்து, பெங்களூரைச் சேர்ந்த பெண்ணை ஒட்டுக் கேட்க உளவுத் துறையை பயன்படுத்தியது வரை நூற்றுக் கணக்கான வழிகளில் இந்த மோடி என்ற கேடி செய்த கட்டுடைப்புகள் எல்லாம் இந்த ஐ.ஏ.எஸ் அறிவாளிக்கு தெரியாததன் காரணம் என்ன?

டாடாவின் நானோ கார் தொழிற்சாலைக்கு 900 ஏக்கர் நிலத்தை ஒரே வாரத்தில் ஒதுக்கியது, 2000 கோடி ரூபாய் முதலீடுக்கு 20,000 கோடி ரூபாய் குறைந்த வட்டியில் நீண்ட கால கடன் அளித்தது ஆரம்பித்து, அதானி, அம்பானி, சுசுகி என்று உள்நாட்டு வெளிநாட்டு முதலாளிகளை குளிப்பாட்டி மோடி உருவாக்கிய முன்உதாரணங்களை வியந்து போற்றியவர்கள்தான் இந்த அறிவுஜீவிகள்.

ஜி.எல்.சிங்கால்
ஜி.எல்.சிங்கால்

நிருபேந்தர மிஸ்ரா நியமனம் குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியோ, “நாடாளுமன்றம் ஜூன் 4-ம் தேதி கூடவிருக்கையில் அவசர சட்டம் மூலம் முதன்மை செயலரை நியமித்தது தேவைதானா” என்று மென்மையாக விமர்சிக்கிறது. “நாங்கள் ஆட்சியில் இருந்த போது உணவு பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு போன்றவற்றுக்கு அவசர சட்ட வழியை பயன்படுத்திய போது இதே பா.ஜ.க எங்களை எதிர்த்தது” என்கிறார் காங்கிரசின் அஜய் மாக்கன். காங்கிரஸ் இந்த அவசர சட்ட திருத்தம் கொண்டு வருவதை எதிர்க்கவில்லை. மாறாக, அவர்கள் கொண்டு வந்த போது பா.ஜ.க எதிர்த்ததைத்தான் சுட்டிக் காட்டுகிறார்கள்.

கடைசியாக, குஜராத் படுகொலைகள் உள்ளிட்ட சி.பி.ஐ விசாரணைகள், உச்ச நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்கு நடத்துவது அனைத்தும் பிரதமர் மோடியின் கட்டுப்பாட்டில் வந்திருக்கின்றன. இந்நிலையில் குஜராத்தில் இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலை வழக்கில் கைதாகி தற்காலிக பதவி நீக்கம் செய்யப்பட்ட ஜி.எல்.சிங்கால் என்ற காவல்துறை உயர் அதிகாரியை மீண்டும் பணியில் சேர்க்க மோடியின் விசுவாசி ஆனந்திபென் அரசு முடிவு செய்துள்ளது. ஜி.எல் சிங்கால் இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலைக் குற்றவாளி மட்டுமின்றி, மோடிக்காக இளம் பெண் ஒருவரை அமித் ஷா உத்தரவு படி வேவு பார்ப்பதையும் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் மே 16-ம் தேதி வெளியான தீர்ப்பு ஒன்றில் உச்சநீதிமன்றம் ஜி.எல். சிங்காலை கடுமையாக விமர்சித்திருக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத் காந்திநகரில் உள்ள அக்சர்தாம் கோயிலில் 33 பேர் கொல்லப்பட்ட பயங்கரவாத தாக்குதல் வழக்கின் இறுதித் தீர்ப்பில் ஜி எல் சிங்கால் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடிக்க முயற்சி செய்யாமல்,  அப்பாவி முஸ்லீம்களை பிடித்து சித்திரவதை செய்து, ஒப்புதல் வாக்குமூலம் பெற்று தூக்குத்தண்டனை வாங்கி கொடுத்திருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது.

ஆனால், மோடியோ பா.ஜ.கவோ அதைப் பற்றி கவலைப்படப் போவதில்லை. அதே தீர்ப்பில் அக்சர்தாம் தாக்குதல் வழக்கில் அப்பாவி முஸ்லீம்கள் மீது பொடா சட்டத்தின் வழக்கு தொடர்வதற்கு குஜராத் உள்துறை அமைச்சர் அலட்சியமாக ஒப்புதல் கொடுத்திருப்பதை உச்சநீதிமன்றம் விமர்சித்திருக்கிறது. அப்போது குஜராத் உள்துறை அமைச்சராக பொறுப்பு வகித்தவர் வேறு யாருமில்லை, இப்போதைய பிரதமர் நரேந்திர மோடிதான். மோடியே பிரதமர் ஆகி விட்டதால் அவருக்கு அடியாளாக இருந்த சிங்காலை மீண்டும் பதவியில் அமர்த்துவதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது.

பார்ப்பனப் பாசிஸ்டுகளைத் தண்டிக்கத் தவறிய பிழைக்கு, இந்திய மக்கள் தமக்குத் தாமே வழங்கிக் கொண்ட தண்டனைதான் பா.ஜ.கவின் தேர்தல் வெற்றி என்பதை மக்களுக்கு உணர்த்தும் பொறுப்பை மோடி நிறைவேற்ற ஆரம்பித்து விட்டார். புரிந்தவர்கள் மாற்றிக் கொள்ளட்டும்.

–    செழியன்

மேலும் படிக்க

  1. நிருபேந்து மிஸ்ராவைப் பத்தி எழுத வந்த இடுகை ஊரெல்லாம் சுத்தி மோதிய வசைபாடுகிறதே.

    2ஜி நடந்தபோது டிராய் சேர்மனாக இருந்த மிஸ்ராவின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி புரட்சியாளன் ஆண்டிமுத்து ராசா தன்வயப் போக்கில் நடந்து கொண்டார்.

    இதை விடுத்து அரை உண்மைகளை மட்டும் எழுதி நிறுவனமாக்கப்பட்ட மதச் சார்பாளர்களைப் போல் நடந்து கொள்கிறீர்களே!

  2. நிருபேந்திர மிஸ்ரா போன்ற அதிகாரவர்க்க புலிகள் சாதாரண மக்களுக்காக ஒரு மயிரையும் புடுங்கபோவதில்லை. ரயில் கட்டணத்தை உயர்த்துவதை தவிர வேறுவழி இல்லை என சதானந்த கவுடா கூறிவிட்டார். டீசல் விலை உயர்த்தப்பட்டுவிட்டது.முந்தைய காங்கிரஸ் அரசால் அம்பானிக்கு இரு மடங்காக உயர்த்தி கொடுக்கப்பட்ட இயற்கை எரிவாய்வுக்கான விலைபற்றி நல்லவர் மோடி வாய் திறக்கவே இல்லை. கேடியே ஆனாலும் மோடிதான் வேண்டும் என்று கூப்பாடு போட்ட அம்பிகளின் டவுசர் கிழிய தொடங்கிவிட்டது.இன்னும் அய்ந்து ஆண்டுகளில் குப்புறபோட்டு மிதிக்கிற மிதியில் மோடியின் டுபாக்கூர் வளர்ச்சி பாதை நன்றாக தெரியும்.

  3. “அதிகார வர்க்கப் புலிகள் சாதாரண மக்களுக்காக செய்வது” என்றால் என்ன? தெருவோரத்தில் நின்று சிவப்புக் கொடி பிடிப்பதா?

    பிரதம மந்திரியின் Principal Secretary தன்னுடைய வேலையைச் செய்யும்போது, திட்டங்கள் நிறைவேற்றப் படும்போது பலன் சாதாரண மக்களைத்தானப்பா சென்றடைகிறது !

    • ஆமாமப்பா……அம்பானி அதானி போன்ற பரம ஏழைகளை யார்தான் காப்பாத்தறது

    • ஊரான் ஊட்டு புள்ளைகளுக்கு பெயர் வைக்க ஆசை படும் மணவை சிவா,

      [vinavu readers ref:
      https://www.vinavu.com/2014/05/28/comody-time-karnataka-newborns-given-modi-name-by-bjp-leader/#respond%5D

      [1]siva, சிகப்பு வண்ணத்தை கண்டால் உங்களுக்கு அவ்வளவு ஒவ்வாமையா ?

      [2]பாபர் மசூதியை இந்து மதவெறி கும்பல் சட்டவிரோதமாக இடித்துத் தள்ள ஏற்பாடு ,நோய்டா தொழிற் பேட்டை ஆணையத்தின் தலைவராக விவசாய நிலங்களை பிடுங்கும் பணி,ஏகாதிபத்திய நிறுவனங்களுக்கு சேவை, என்று இவ்வாறு எல்லாம் “சாதாரண மக்களுக்கு” சேவை செய்த நிருபேந்திர மிஸ்ரா அவர்களீன் அடுத்த திட்டம் என்ன சிவா ?

      [3]பிரதம மந்திரியின் நிருபேந்திர மிஸ்ரா,Principal Secretary தன்னுடைய வேலையைச் செய்யும்போது,நிருபேந்திர மிஸ்ரா அவர்களீன் அடுத்த திட்டம் என்ன சிவா ?

      //பிரதம மந்திரியின் Principal Secretary தன்னுடைய வேலையைச் செய்யும்போது, திட்டங்கள் நிறைவேற்றப் படும்போது பலன் சாதாரண மக்களைத்தானப்பா சென்றடைகிறது !//

  4. Indian Democracy is going towards falling side:
    —————————————————————————–

    vinavu,

    [1]என்ன வினவு நீங்க கணக்கில் ரொம்ப வீக்கா ?

    மொத்த வாக்காளர்கள் : 81.45 கோடி

    வாக்கு அளித்தவர்கள் : 60 கோடி

    மோடி[BJP] பெற்ற வாக்குகள் :17.15 கோடி

    ### by percentage out of votes polled , Modi[BJP] got : 31%

    ### by percentage out of total no of votes, Modi[BJP] got :17.5 * 100 / 81.45 = 21.49 %

    //60 கோடி வாக்காளர்களின் ஒருமித்த தேர்வாக’ பிரதமர் ஆனவராச்சே!

  5. மோடி என்ன செய்தாலும் குறை சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் நமக்கு முழு நேரத் தொழில். இருக்கட்டும். வேண்டுகோள் : முப்பத்தைந்து ஆண்டுகள் மேற்கு வங்கத்திலும் விட்டு விட்டு கேரளாவில் பல உதிரிக் கட்சிகளுடன் சேர்ந்தும் ஆட்சி நடத்தியபோது சில/பல திட்டங்கள் தீர்வுகள் கொண்டு வந்திருப்பர் என்று நம்புகிறேன். அவைகளைப் பற்றியும் அவற்றின் வெற்றி, பலன்கள் குறித்தும் திராவிடக் கும்மிகளில் அலுத்துப்போன தமிழக கிணற்றுத்தவளைகளுக்கு சொல்லுங்களேன். வாரம் ஒரு பதிவையாவது positive விஷயங்களுடன் எதிர் பார்க்கிறேன் .செய்வீர்களா?செய்வீர்களா?

Leave a Reply to guru பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க