Monday, May 5, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விமது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?

மது விற்கும் அரசு மழலையர் பள்ளி துவங்காதா ?

-

  • அரசு ஆரம்ப பள்ளிகளில் மழலையர் வகுப்புகளை இந்தக் கல்வியாண்டே தொடங்கி நடத்து!
  • தனியார் பள்ளி முதலைகளின் கட்டண பகற்கொள்ளையை தடுத்து நிறுத்து!!

என்ற முழக்கத்தின் அடிப்படையில் தமிழகம் தழுவிய அளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மையம் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

ஏற்கனவே அறிவித்தபடி சென்னை பள்ளி கல்வி இயக்ககத்தை 30/05/2014 அன்று காலை 11 மணியளவில் மனித உரிமைப் பாதுகாப்பு மைய உறுப்பினர்கள் முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

குழந்தைகள் கலந்து கொண்டு, “சாராயம் விற்கும் அரசுக்கு மழலையர் பள்ளிகள் துவங்க வக்கில்லையா?” என எழுச்சியுடன் முழக்கமிட்டதை மக்கள் நின்று கவனித்தனர்.

தோழர் வழக்குரைஞர் பார்த்தசாரதி தலைமையேற்று, தனியார் பள்ளிகளின் வரைமுறையற்ற கொள்ளையை அம்பலப்படுத்தியும், காசு இருந்தால் தான் கல்வி என்ற புதிய மனுநீதியை கண்டித்தும், குழந்தைகள் மீது அதிக பாடங்களை சுமத்தி வதைப்பதை சுட்டிக் காட்டியும், அரசு பள்ளிகளில் மழலையர் பள்ளிகள் துவங்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியும் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

காவல்துறை குழந்தைகள் உட்பட அனைவரையும் கைது செய்தது. பல ஊடகங்கள் ஆர்ப்பாட்டத்திற்கு வந்திருந்து செய்தி சேகரித்து வெளியிட்டனர்.

நமது கோரிக்கைகளை ஒரு மனுவாக தயாரித்து, மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் குழு ஒன்று கல்வி இயக்குனரை சந்தித்து, கொடுக்க சென்ற பொழுது, அவர் இருக்கையில் இல்லை. அதற்கு அடுத்த நிலையில் இருந்த முதன்மை கணக்காளரை (Chief Accounts Officer) சந்தித்து மனு தரப்பட்டது. வருகிற திங்கள்கிழமை அன்று கல்வி இயக்குநரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாகவும் கூறினர். இனி அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை மனித உரிமைப் பாதுகாப்பு மையம் முன்னெடுத்து வருகிறது!


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

தமிழக அரசே ! தமிழக அரசே !
அரசு ஆரம்ப பள்ளிகளில்
மழலையர் வகுப்புகளை
தொடங்கி நடத்து ! தொடங்கி நடத்து !

மழலையர் பள்ளிகள் பெயராலே
தனியார் பள்ளி முதலைகளின்
கட்டண பகற்கொள்ளையை
தடுத்து நிறுத்து! தடுத்து நிறுத்து!

பெட்ரோல் விலையுடன் போட்டிபோட்டு
ஆண்டுக்காண்டு எகிறுது
கல்விக்கட்டண விலைவாசி
இனி காசிருந்தால்தான் கல்வி கிடைக்கும்
தனியார் கொள்ளையின் மனுநீதி.

சாராயம் விற்கும் அரசுக்கு
மழலையர் பள்ளிகள் நடத்துவதற்கு
வக்கில்லையாம் ! வக்கில்லையாம் !
சாராயம் விற்ற கிரிமினல்களோ
இன்றைய கல்வித் தந்தைகளாம்!

ஒழித்துக்கட்டுவோம் ! ஒழித்துக்கட்டுவோம் !
காசிருந்தால்தான் கல்வியென்ற
மனுநீதியை நிலைநாட்டும்
தனியார் பள்ளி கொள்ளையர்களை
ஒழித்துக்கட்டுவோம் ! ஒழித்துக்கட்டுவோம் !

கல்வி மக்களின் பிறப்புரிமை
பிச்சையல்ல கெஞ்சிப்பெற
உழைக்கும் மக்களின் கல்விஉரிமையை
நிலைநாட்டுவோம்! நிலைநாட்டுவோம்!

ஆயிரக்கணக்கில் பணத்தைக்கொட்டி
தனியார் பள்ளி முதலைகளிடம்
பிள்ளைகளை சேர்க்கும் பெற்றோர்களே
தனியார் மழலையர் பள்ளிகளின்
லட்சணம் என்ன தெரியுமா.?

8-க்கு 10 இடம் கொண்ட
கழிப்பறை அளவுதான் வகுப்பறை
கறிக்கோழிக்கு போடுகின்ற
ஊசியே இன்றைய ஆங்கிலக்கல்வி
கோழிப்பண்ணையில் கறிக்கோழிகளை
ஊதிப்பெருக்கும் வளர்ச்சிதான்
தனியார் பள்ளிகள் புகட்டுகின்ற
செக்குமாட்டு கல்விமுறை!

மழலைகளின் சிந்தனையை
மலடாக்கும் கல்விமுறையை
ஒழித்துக்கட்ட போராடுவோம்

தாய்மொழியுடன் விஞ்ஞானப்பூர்வ
இலவசமான கட்டாயக்கல்வியை
மழலையர் வகுப்புகளில்
அரசு வழங்க போராடுவோம்.

 

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது கிளிக் செய்யவும்]

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
சென்னை.
9842812062