privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்அ.தி.மு.கமின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து !

மின்சார வியாபாரிகளுக்கு ஜெயா வழங்கும் கறி விருந்து !

-

மிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு முடிந்த இரண்டொரு நாட்களிலேயே மீண்டும் மின் கட்டண உயர்வு வரப்போவதாக சங்கு ஊதப்பட்டு, மக்களின் மனவோட்டம் ஆழம் பார்க்கப்பட்டது.  தமிழகமோ இந்த எச்சரிக்கை மணிக்கு எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றாமல், தானுண்டு தன் வேலையுண்டு என்று வழமை போல அமைதி காத்தது.  ஒருவேளை, அம்மா உணவகம், அம்மா குடிநீர், அம்மா மருந்தகம் போல மலிவு விலை அம்மா மின்சாரம் அளிக்கப்படும் என்று தமிழர்கள் தமக்குத் தாமே ஆறுதல் கூறிக் கொண்டார்களோ என்னவோ!

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஜெயா அரசு மின் கட்டணத்தை 37 சதவீத அளவிற்குத்  தடாலடியாக உயர்த்திய பொழுது, அதற்கான முழுப் பழியும் தி.மு.க. மீது சுமத்தப்பட்டது.  முந்தைய தி.மு.க. அரசின் நிர்வாகத் திறமையின்மை காரணமாக மின் வாரியம் ஏறத்தாழ 50,000 கோடி ரூபாய் நட்டத்தில் சிக்கிக் கொண்டிருப்பதாகவும் அதனை மீட்கத்தான் அம்மா இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாகக் கூறி, மக்கள் மீது சுமத்தப்பட்ட மின் கட்டண உயர்வை ஜெயாவின் துணிச்சல் மிகுந்த நிர்வாக நடவடிக்கையாகத் தமிழகப் பத்திரிகைகள் சித்தரித்தன.

நியாயமாகப் பார்த்தால், மெச்சிக் கொள்ளப்பட்ட ஜெயாவின் திறமை மிகுந்த துணிச்சல்மிக்க இந்நடவடிக்கை மின்வாரியத்தின் நட்டத்தை கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும்.  ஆனால், உண்மையோ வேறு மாதிரியாக இருக்கிறது.  தி.மு.க. ஆட்சியின் இறுதியில் 45,000 கோடி ரூபாய் அளவிற்கு இருந்த தமிழக மின் வாரியத்தின் நட்டம் ஜெயாவின் மூன்றாண்டு கால ஆட்சியில் வருடத்திற்கு 10,000 கோடி ருபாய் என்ற அளவில் அதிகரித்து 75,000 கோடி ரூபாயைத் தொட்டுவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன.  கடந்த மூன்று ஆண்டுகளாக, முந்தைய தி.மு.க. ஆட்சியைவிடக் கடுமையான மின்வெட்டைத் தமிழக மக்கள் சந்தித்துவரும் வேளையில், மின் கட்டணம் 37 சதவீதம் அதிகரிக்கப்பட்ட பிறகும் மின் வாரியத்தின் நட்டம் அதிகரித்திருப்பது முரண்பாடான விந்தைதான்.

தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சியில் மின்வெட்டும் அதிகரித்திருக்கிறது; மின் வாரியத்தின் நட்டமும் அதிகரித்திருக்கிறது.  எனவே, தி.மு.க. ஆட்சியை விட அ.தி.மு.க. ஆட்சி நிர்வாகத் திறமையற்ற ஆட்சி என  இந்த விந்தைக்கு இயந்திரகதியில் விளக்கம் அளித்துவிட முடியாது.  ஏனென்றால், இப்படிபட்ட விளக்கம் நட்டத்திற்குப் பின்னுள்ள பல உண்மைகளை, குறிப்பாகத் தமிழக மின்வாரியத்தைத் திட்டமிட்டே திவாலாக்கி வரும் குற்றவாளிகளைத் தப்பவிடும் ஓட்டைகள் நிறைந்ததும் ஆகும்.

தமிழக மின்வாரியத்தின் நட்டம் 75,000 கோடி ரூபாயாக அதிகரித்து விட்டது என்ற செய்தி வெளியாவதற்கு சற்று முன்னர்தான் மின்வாரியத்தில் ஏறத்தாழ 24,000 கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழ்த் தேசிய பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட எட்டு அமைப்புகள் பத்திரிகையாளர்கள் கூட்டம் நடத்தி பகிரங்கமாகக் குற்றஞ்சுமத்தின.  அதனைத் தொடர்ந்து பி.ஜி.ஆர். எனர்ஜி லிமிடெட் என்ற நிறுவனத்தால் மட்டுமே தமிழக மின்வாரியத்திற்கு ஏறத்தாழ 4,000 கோடி ரூபாய் அளவிற்கு நட்டமேற்பட்டிருப்பதைத் தக்க ஆதாரங்களோடு அம்பலப்படுத்தினார், தமிழ்நாடு மின் பொறியாளர் சங்கத் தலைவர் சா.காந்தி.  மின் நிலையங்களை நிறுவும் அனுபவமே இல்லாத இந்த உப்புமா கம்பெனியிடம்தான் வழுதூர் மின் நிலையத்தை நிறுவும் பணியும் மேட்டூர் அனல் மின் நிலையத்தின் விரிவாக்க நிலையத்தை அமைக்கும் ஒப்பந்தமும் முந்தைய தி.மு.க. அரசால் ஒப்படைக்கப்பட்டன.  அதனின் விளைவுதான் இந்த 4,000 கோடி ரூபாய் நட்டம் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி.

வழுதூர் மின்நிலையத்தில் 2007 நவம்பரில் 62 மெகாவாட் மின்னுற்பத்தியும் 2008 ஏப்ரலில் 92 மெகாவாட் மின்னுற்பத்தியும் தொடங்கியிருக்க வேண்டும்.  ஆனால், ஒப்பந்ததாரராகிய பி.ஜி.ஆர்.நிறுவனத்தின் கத்துக்குட்டித்தனம் காரணமாக 14.06.2009 அன்றுதான் அம்மின்நிலையத்தில் 92 மெகாவாட் மின்னுற்பத்தி தொடங்கப்பட்டது.  எனினும், அடுத்த ஓராண்டிலேயே அம்மின்நிலையம் படுமோசமாக பழுதடைந்தது.  ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட, மிகவும் தரங்குறைந்த டர்பைன் இயந்திரங்களை இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்து இம்மின் நிலையத்தை அமைத்ததுதான் இத்துணை கோளாறுகளுக்கும் காரணம் எனச் சுட்டிக் காட்டியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி.

மின் கட்டணம் 18.1.2010-இல் பழுதடைந்த வழுதூர் மின்நிலையம் 485 நாட்கள் கழித்து 11.5.2011 அன்று மீண்டும் மின் உற்பத்தியைத் தொடங்கியது.   பி.ஜி.ஆர். நிறுவனம் பழுதடைந்த டர்பைன் இயந்திரத்தை மாற்றித் தர முன்வராததால், மின்வாரியமே 100 கோடி ரூபாய் செலவழித்து மின் நிலையத்தை இயக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது.  இதுவொருபுறமிருக்க, மின் உற்பத்தி நடக்காத இக்காலக்கட்டத்தில், தமிழக மின்சார வாரியம் இந்திய எரிவாயு ஆணையத்திடம் செய்து கொண்டிருந்த ஒப்பந்தப்படி, அந்த ஆணையத்திடமிருந்து வாங்க வேண்டியிருந்த இயற்கை எரிவாயு கட்டணத்தில் 80 சதவீதத்தைத் தண்டத் தொகையாகச் செலுத்த வேண்டியிருந்தது.  இந்த வகையில் தினம் ஒரு கோடி ரூபாய் வீதம் மின் நிலையம் இயங்காத 485 நாட்களுக்கும் 485 கோடி ரூபாயை தமிழக மின்சார வாரியம் தண்டத் தொகையாக அளித்தது.

இவ்வாறு போட்ட மூலதனத்துக்கும் (385 கோடி ரூபாய்) மேலாக 585 கோடி ரூபாயைச் செலவழித்து இயக்கப்பட்ட வழுதூர் மின் நிலையம் ஜூன் 2012-இல் மீண்டும் பழுதடைந்தது.  இப்பழுதுகள் நீக்கப்பட்டு ஜனவரி 2013 முதல் மீண்டும் மின்உற்பத்தி தொடங்கிவிட்டதாகத் தமிழக அரசு அறிவித்தாலும், அம்மின் நிலையம் முழுத் திறனோடு இயங்கவில்லை.  92 மெகாவாட்டுக்குப் பதிலாக 67 மெகாவாட் மின்சாரம்தான் அம்மின் நிலையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.  வழுதூர் மின்நிலையத்தில் தமிழக மின்வாரியம் அடைந்த நட்டம் முழுவதையும் ஒப்பந்தப்படி பி.ஜி.ஆர். நிறுவனத்திடமிருந்து பெற்றிருக்க வேண்டும்.  ஆனால், இந்நட்டம் முழுவதும் மின்வாரியத்தின் தலையில் சுமத்தப்பட்டு, பி.ஜி.ஆர். நிறுவனம் தப்ப வைக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அனல் மின்நிலைய விரிவாக்கப் பணிகள் பி.ஜி.ஆர். நிறுவனத்திடம் ஜூன் 2008-இல் ஒப்படைக்கப்பட்டது.  இவ்விரிவாக்க மின்நிலையம் செப்.2011-இல் மின்னுற்பத்தியைத் தொடங்க வேண்டும் என்றும், அதன் பின் தாமதமாகும் ஒவ்வொரு மாதத்திற்கும் பி.ஜி.ஆர். நிறுவனம் மின் வாரியத்திற்கு மாதமொன்றுக்கு 107 கோடி ரூபாய் நட்ட ஈடாக தர வேண்டும் என்றும் ஒப்பந்த விதிகள் கூறுகின்றன.  ஆனால், இவ்விரிவாக்க மின்நிலையம் செப்.2011-க்குப் பிறகு ஒன்பது மாதங்கள் கழித்து மே 2012-இல்தான் சோதனை ஓட்டத்தைத் தொடங்கியது.  இந்த மின் நிலையம் அக்டோபர் 2013-இல் முழு உற்பத்தியைத் தொடங்கிவிட்டதாகச் சொல்லப்பட்டாலும், பிப்.2014-இல் பழுதடைந்து இன்றுவரை உற்பத்தியைத் தொடங்கவில்லை.

ஒப்பந்தப்படி மின் உற்பத்தியைத் தொடங்காமல் கடந்த 31 மாதங்களாக மேட்டூர் விரிவாக்க மின் நிலையம் முடங்கிப் போய் நிற்பதற்கு பி.ஜி.ஆர். நிறுவனத்தின் அனுபவமின்மையும், சீனாவைச் சேர்ந்த தாங்க் ஃபெங்க் என்ற நிறுவனத்திடமிருந்து தரமற்ற இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்பட்டு பொருத்தப்பட்டிருப்பதும்தான் காரணமெனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறார், பொறியாளர் சா.காந்தி.  இந்த 31 மாத காலத்திற்கான தண்டத் தொகையான 3,200 கோடி ரூபாயை பி.ஜி.ஆர். நிறுவனத்திடமிருந்து மின் வாரியம் பெற்றிருக்க வேண்டும்.  அதற்கு மாறாக, இத்தொகை மின் வாரியத்தின் நட்டக் கணக்கில் சேர்க்கப்படுகிறதென்றும்,  இவ்வுண்மைகளைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கூட யாரும் கேட்டுப் பெறமுடியாதவாறு தொழில் இரகசியம் என்ற பெயரில் அ.தி.மு.க. அரசால் பாதுகாக்கப்படுகிறதென்றும் அம்பலப்படுத்தியிருக்கிறார், அவர்.

பி.ஜி.ஆர். போன்ற தனியார் காண்டிராக்ட் கம்பெனிகளின் சட்டவிரோதமான, ஊழல் நிறைந்த மோசடிகளைக் காட்டிலும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் மின் கட்டணம், திறன் கட்டணம்  என்ற பெயரில் தமிழ்நாடு மின்சார வாரியத்தைச் சட்டபூர்வமாகக் கொள்ளையடித்து வருவதுதான் அவ்வாரியத்தை மீளமுடியாத நட்டத்தில் தள்ளி விட்டிருக்கிறது.  அரசு நிறுவனங்கள் உற்பத்தி செய்து விநியோகிக்கும் மின்சாரத்தின் அடக்க விலையையும் தனியார் மின் உற்பத்தி நிறுவனங்களிலிருந்து வாங்கப்படும் மின்சாரத்திற்கு நிர்ணயிக்கப்பட்டிருக்கும் கட்டணத்தையும் ஒப்பிட்டாலே மின் துறையில் கார்ப்பரேட் பகற்கொள்ளை சட்டபூர்வமாகவும் தங்குதடையின்றியும் பல ஆண்டுகளாக நடந்துவருவதைப் புரிந்துகொண்டு விடலாம்.

தமிழக மின் வாரியத்தின் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செயப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி அடக்க விலை ரூ.2.30; நீர் (புனல்) மின்சாரத்தின் அடக்க விலை 0.30 பைசா; மத்திய மின் தொகுப்பிலிருந்து வழங்கப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் சராசரி அடக்க விலை ரூ.3.30 என்றிருக்கும்பொழுது தமிழகத்திலுள்ள ஜி.எம்.ஆர். பவர் நிறுவனத்திடமிருந்து தமிழக மின் வாரியம் பெறும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை ரூ.10.41 எனத் தமிழ்நாடு மின்னுற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டாஞ்சேட்கோ) நிர்ணயித்திருக்கிறது.  இதுபோல பிள்ளைபெருமாநல்லூர், சாமல்பட்டி மற்றும் சமயநல்லூரில் அமைந்திருக்கும் தனியார் மின் நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் ஒரு யூனிட் மின்சாரத்தின் விலை முறையே ரூ.8.55, ரூ.10.18, ரூ.10.96 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அப்பாற்பட்டு ஜி.எம்.ஆருக்கு ரூ.147 கோடி, அப்போலோ மருத்துவக் குழுமத்துக்குச் சோந்தமான பிள்ளைபெருமாள் நல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ.292 கோடி, சாமல்பட்டி மின் நிறுவனத்துக்கு ரூ.108 கோடி, சமயநல்லூர் மின் நிறுவனத்துக்கு ரூ.110 கோடி ரூபாய் 2013-14 ஆம் ஆண்டுக்கான திறன் கட்டணமாகச் செலுத்த  வேண்டும் என டாஞ்சேட்கோ நிர்ணயித்திருக்கிறது.  திறன் கட்டணம் என்பது தனியார் மின் உற்பத்தியாளர்களிடமிருந்து வாங்கப்படும் மின்சாரக் கட்டணத்திற்கு அப்பாற்பட்டு, அவர்களுக்கு  ஆண்டுதோறும் மின்சார வாரியம் செலுத்த வேண்டிய கப்பத் தொகையாகும். தனியாருடான ஒப்பந்த காலம் முடியும் வரை மின்சாரம் வாங்கினாலும் வாங்காவிட்டாலும் இந்த திறன் கட்டணத்தை மின்சார வாரியம் செலுத்த வேண்டும்.

தனியார் மின் உற்பத்தியாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 24 சதவீதத்திற்கு மேல் உத்தரவாதமான இலாபம் கிடைக்கும்படியும் அவர்கள் போட்ட மூலதனத்தை நான்கைந்து ஆண்டுகளுக்குள் திரும்ப எடுக்கும்படியும் மின்சாரக் கட்டணமும் திறன் கட்டணமும் நிர்ணயிக்க வேண்டும் என்றவாறு மின்சாரச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு, இப்பகற்கொள்ளை நிறுவனமயமாக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தின் மொத்த மின் தேவையில் வெறும் 12 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செயும் தனியார் மின் உற்பத்தியாளர்கள் இந்த அநியாயமான கட்டண நிர்ணயம் காரணமாக மின் வாரியத்தின் வருமானத்தில் ஏறத்தாழ முப்பது முதல் முப்பந்தைந்து சதவீதத்தைக் கைப்பற்றிக் கொள்கின்றனர்.

தமிழக மின்சார வாரியம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி 2003-04 ஆம் ஆண்டில் தனியாரிடமிருந்து 1,317 கோடி யூனிட்டுகள் மின்சாரம் பெறப்பட்டிருக்கிறது.  இது 2008-09 ஆம் ஆண்டில் 2,114 கோடி யூனிட்டுகளாக அதிகரித்திருக்கிறது.  இதே காலகட்டத்தில் மின் வாரியம் அடைந்த நட்டம் 2003-04 ஆம் ஆண்டில் 1,110 கோடியிலிருந்து 2008-09 ஆம் ஆண்டில் 7,131 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. எந்தளவிற்குத் தனியாரிடமிருந்து மின்சாரம் வாங்குவது அதிகரிக்கிறதோ அதற்கு நேர்விகிதத்தில் மின் வாரியத்தின் நட்டமும் அதிகரித்திருக்கிறது என்பதுதான் இப்புள்ளிவிவரத்திலிருந்து நாம் புரிந்துகொள்ள வேண்டிய உண்மையாகும்.

மின்சார வாரியம் நட்டத்தில் இருக்கும் நிலையிலும் தனியாரிடமிருந்து அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதற்கு ஏற்றபடியே ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.  குறிப்பாக, ஜி.எம்.ஆர். நிறுவனத்துடனான 15 ஆண்டு ஒப்பந்த காலம் முடிந்த பிறகும் அந்நிறுவனத்திடமிருந்து யூனிட் ஒன்றுக்கு ரூ.10.41 கொடுத்து மின்சாரம் வாங்கவும், ரூ.147 கோடி திறன் கட்டணம் செலுத்தவும் டாஞ்சேட்கோ முடிவெடுத்திருக்கிறது.  இப்படி அதிக விலை கொடுத்து மின்சாரம் வாங்குவதைக் கேள்விக்குள்ளாக்கினால், தீவிரமான மின்வெட்டைப் பொதுமக்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றவாறு அடாவடித்தனமாகப் பதில் அளித்து இப்பகற்கொள்ளை நியாயப்படுத்தப்படுகிறது.

மின் கட்டணம் 2இப்படி ஒருபுறம் அதிக விலை கொடுத்துத் தனியார் முதலாளிகளிடமிருந்து வாங்கப்படும் மின்சாரம், மறுபுறம் மானிய விலையில் தனியார் தொழிற்சாலைகளுக்கும், ஐந்து நட்சத்திர கேளிக்கை விடுதிகளுக்கும், கேளிக்கை பூங்காக்களுக்கும் அளிக்கப்படுகிறது.  இவர்களுக்கு சந்தை விலையில் மின்சாரத்தை விற்பதற்கு மாறாக, மானிய விலையில் மின்சாரம் வழங்குவதாகப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்படுகின்றன.  வளர்ச்சியின் பெயரால் நியாயப்படுத்தப்படும் இந்தச் சலுகையின் சுமை முழுவதையும் மக்கள் ஏற்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உருவாக்கப்படுகிறது.

தமிழகத்தில் நிலவும் மின்வெட்டை எதிர்வரும் ஜூன் 1 முதல் முழுமையாக ரத்து செய்யப் போவதாக ஜெயா வெளியிட்டுள்ள அறிக்கையை இந்தப் பின்னணியிலிருந்து பரிசீலித்தால்தான் தமிழக மின்வாரியத்தை மீளமுடியாத படுகுழிக்குள் தள்ளிவிட ஆளுங்கும்பல் தயாராகி விட்டதையும், தமிழக மக்கள் மீது பெரும் மின் கட்டணச் சுமையை ஏற்றிவிட அவர்கள் நரித் தந்திரத்தில் இறங்கியிருப்பதையும் புரிந்துகொள்ள முடியும். கடுமையான மின்வெட்டு நிலவும் சமயத்தில் மின் கட்டணத்தை மீண்டும் உயர்த்தினால் பொதுமக்களின் வெறுப்பைச் சம்பாதிக்க வேண்டியிருக்கும் என்பதாலேயே வெளிச்சந்தையில் மின்சாரம் வாங்கும் முடிவை எடுத்திருக்கிறது, ஜெயா அரசு.  இந்நடவடிக்கையால் மின்வெட்டு முழுமையாக ரத்தாகிறதோ இல்லையோ, மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான குறுக்குவழியில் ஜெயா அரசு இறங்கியிருக்கிறது என்பதே உண்மை.

மின்வெட்டை முழுமையாக நீக்குவதற்காக 3,800 மெகாவாட் மின்சாரத்தை வெளிச்சந்தையிலிருந்து பெறுவதற்கு ஒப்பந்தங்கள் போட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள ஜெயா, அம்மின்சாரத்தை என்ன விலைக்கு வாங்கப் போகிறோம் என்பதைத் தெரிவிக்காமல் விட்டிருப்பது தற்செயலானது அல்ல.  வெளிச்சந்தையில் வணிக மின் உற்பத்தியாளர்களிடமிருந்து நீண்ட கால அடிப்படையில் மின்சாரம் வாங்க ஒப்பந்தம் செய்வது புலி வாலைப் பிடித்துக் கொண்டு ஓடுவதற்கு ஒப்பானது.  ஜி.எம்.ஆர். போன்ற சுயேச்சையான மின் உற்பத்தியாளர்கள் கந்துவட்டிக் கொள்ளையர்களை ஒத்தவர்கள் என்றால், வணிக மின் உற்பத்தியாளர்கள் மீட்டர் வட்டி கொள்ளைக் கும்பலைப் போன்றவர்கள்.  இந்த மின் உற்பத்தியாளர்கள் மின்சாரத்தின் விலையைச் சந்தையில் நிலவும் தேவையைக் கொண்டு, சந்தை சூதாட்ட விதிகளின்படிதான் தீர்மானிப்பார்கள்.  மேலும், மின்சார உற்பத்திக்கு மூலப் பொருளாகப் பயன்படும் நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றைச் சர்வதேச விலைக்குத்தான் உள்நாட்டிலும் விற்க வேண்டும் என முதலீட்டாளர்கள் கோரி வரும் நிலையில் ஒப்பந்த காலம் முழுவதும் மின்சாரத்தின் விலை உயராமல் இருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.

தனியாரிடமிருந்து பெறப்படும் மின்சாரத்தின் கட்டணம் நிலையானதாக இருக்காது என்பதால்தான், ஆண்டுக்கொருமுறை மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் விதிகளை உருவாக்கி வைத்திருக்கிறது.  இதன்பொருள் மின்சாரம் என்பது அரசாங்கம் அளிக்கக் கடமைப்பட்டுள்ள அத்தியாவசிய சேவை கிடையாது, மாறாக, அதனை இலாபம் ஈட்டக்கூடிய சரக்காகப் பாவிக்க வேண்டும் என்பதுதான்.  மின்துறையில் புகுத்தப்பட்டுள்ள தனியார்மயம் ஒன்று அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் அல்லது இருட்டிலும் புழுக்கத்திலும் வாழப் பழகிக் கொள்ள வேண்டும் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் நிலைக்குத் தமிழக மக்களைத் தள்ளிவிட்டிருக்கிறது.

செல்வம்.
________________________________

புதிய ஜனநாயகம், ஜூன் 2014

________________________________