Saturday, May 10, 2025
முகப்புமறுகாலனியாக்கம்கல்விவிருதை மாநாட்டுத் தீர்மானங்கள் - நீங்களும் இணைந்தால் நிஜமாகும்!

விருதை மாநாட்டுத் தீர்மானங்கள் – நீங்களும் இணைந்தால் நிஜமாகும்!

-

 

மாநாட்டு தீர்மானம் 11. கல்வி வியாபாரத்தை தடைசெய்து மத்திய மாநில அரசு சட்டம் இயற்றவும், ஆரம்பக் கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய்மொழியில் அனைவருக்கும் அரசே வழங்க பெற்றோர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் ஒருங்கிணைந்து போராட வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

2.அனைத்து தனியார் பள்ளிகளையும் அரசு பள்ளிகளாக அறிவித்து மாணவர்கள் சேர்க்கை, ஆசிரியர் நியமனம் போன்றவற்றை அரசே செயல்படுத்த வேண்டும் என இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

3. 25 சதவீத இலவச ஒதுக்கீடும், கல்விக் கட்டணம் என்ற பெயரில் அதற்காக வழங்கப்படும் மக்கள் வரிப்பணமும் தனியார் பள்ளிகளை பாதுகாக்கவே. இதைக் கைவிட்டு அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த நிதி ஒதுக்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாக கேட்டுக் கொள்கிறது.

4. கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மீறும் எவருக்கும் சிறைத் தண்டனை உண்டு. ஆனால் இதுவரை ஒரு வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. கல்வித்துறை அதிகாரிகள்தான் புகார் கொடுக்க வேண்டும் என்ற இந்தப் பிரிவை நீக்கி பாதிக்கப்பட்ட பெற்றோர்கள், மாணவர்கள் புகார் கொடுக்கலாம் என்று புதிய சட்டதிருத்தம் கொண்டுவர மத்திய அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

5. அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தனியார் பள்ளிகளில் சென்று பகுதிநேர வேலை செய்தாலோ அல்லது கணவன்/மனைவி பெயரில் பள்ளிக்கூடம் நடத்தினாலோ அவர்களை நிரந்தரப் பணிநீக்கம் செய்ய வேண்டும் என இம்மாநாடு தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறது.

மாநாட்டு தீர்மானங்கள் 26. அரசு ஊழியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில்தான் சேர்க்க வேண்டும் என உத்திரவிட தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

7. சமச்சீர் பாடத்திட்டம் அமல்படுத்திய பிறகும் தனியார் பள்ளிகள் மெட்ரிகுலேசன் என்ற பெயரைப் பயன்படுத்திக் கூடுதல் கட்டணம் வசூலித்து வருகின்றன. தமிழக அரசு காலம் தாழ்த்தாது மெட்ரிக் என்ற பெயரைப் பயன்படுத்த தடைவிதிக்க வேண்டும் என இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

8. அரசு தொடக்கப் பள்ளிகளில் இந்த கல்வியாண்டே மழலையர் பிரிவு தொடங்க வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு கேட்டுக் கொள்கிறது.

9. அரசுப்பள்ளியில் தாய் மொழியில் படித்த மாணவர்களுக்கே அரசு மருத்துவக் கல்லூரி, அரசு பொறியியல் கல்லூரி, அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் இயற்ற வேண்டும் எனத் தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக் கொள்கிறது.

10. ஜப்பான், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட பெரும்பான்மையான நாடுகளில் ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை தாய் மொழியில் தான் கற்பிக்கப்படுகிறது. இதுதான் விஞ்ஞானபூர்வமான முறை என நிருபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அமல்படுத்தும் தமிழக அரசின் முடிவை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. தமிழக அரசு ஆங்கிலவழிக் கல்வி அறிவிப்பை கைவிட வேண்டும் என இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

11. தொடக்கப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு ஏப்ரல் 30 வரை வகுப்புகள் நடத்தப்படுகிறது. கோடை காலத்தில் குழந்தைகள் சிரமப்படுகின்றன. ஆகையால் மார்ச் மாதத்திலேயே விடுமுறை அளிக்க வேண்டும் என இம்மாநாடு ஒரு மனதாக தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

12. அரசுப் பள்ளிகளில் உரிய கட்டமைப்பு இல்லாத சூழலிலும் அர்ப்பணிப்போடு பாடம் நடத்தி அதிக தேர்ச்சி கொடுக்க பாடுபடும் அரசு பள்ளி ஆசிரியர்களை இம்மாநாடு மனதார பாராட்டுகிறது.

13. அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர், போதிய வகுப்பறை, சுகாதாரமான குடிநீர், போதுமான கழிப்பறை வசதி, விளையாட்டு மைதானம், ஆய்வுக் கூடம், நூலகம், சுற்றுச்சுவர், போதிய ஊழியர்கள் ஆகிய கட்டமைப்பு வசதிகள் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் ஆய்வு செய்து, அதற்கு தேவையான நிதியை ஒதுக்கீடு செய்து போர்க்கால அடிப்படையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசை இம்மாநாடு ஒருமனதாகக் கேட்டுக்கொள்கிறது.

14. கடலூர் மாவட்டத்தில் அனைத்து வட்டங்களிலும் மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கத்தை இந்த ஆண்டுக்குள் உருவாக்குவது, அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் மாநிலத்திலேயே கடலூர் மாவட்டத்தை கல்வியில் முதல் மாவட்டமாக உயர்த்த நமது மாணவர்களின் கல்வி உரிமைக்கான பெற்றோர் சங்கம் பாடுபடுவது எனத் தீர்மானிக்கிறது.

வை.வெங்கடேசன், மாநாட்டுக் குழுத்தலைவர்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு, விருத்தாசலம், தொடர்புக்கு 9345067646

_________________________________________

பேரணியில் எழுச்சியுடன் முழங்கிய முழக்கங்கள்!

மத்திய மாநில அரசுகளே
தடை செய் தடை செய்
கல்வி வியாபாரத்தை தடை செய்
அமல்படுத்து அமல்படுத்து
அனைவருக்கும் இலவசக் கல்வியை அமல்படுத்து

மாநாட்டுத் தீர்மானங்கள் 7கல்வி பெறுவது மாணவன் உரிமை
கற்றுக் கொடுப்பது அரசின் கடமை
பிச்சையல்ல பிச்சையல்ல, இலவசக்கல்வி பிச்சையல்ல
சட்டம் போடு சட்டம் போடு
அனைத்து தனியார் பள்ளிகளையும்
அரசு ஏற்க சட்டம் போடு

சாராயம் விற்ற ரவுடியெல்லாம்
கல்வி வள்ளல் ஆகிட்டான்
கல்வி கொடுத்த அரசாங்கம்
சாராயம் விக்குது சாராயம் விக்குது
மானக்கேடு வெட்ககேடு

கொள்ளையடிக்கிறான் கொள்ளையடிக்கிறான்
தனியார் பள்ளி தாளாளர் எல்லாம்
மாணவர்களை பணயமாக்கி
கட்டணக் கொள்ளையடிக்கிறான்.
வேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது
கல்வித் துறையும் காவல் துறையும்
வேடிக்கை பார்க்குது வேடிக்கை பார்க்குது

போராட்டம் இது போராட்டம்
மாணவர்களுக்கான போராட்டம்
கல்விக்கான போராட்டம்
HRPC போராட்டம், பெற்றோர் சங்கப் போராட்டம்

வெல்லட்டும் வெல்லட்டும்

அனுமதியோம் அனுமதியோம்

தனியாருக்குத் தாரை வார்க்கும்
அரசுப் பள்ளிகளை அழிக்க நினைக்கும்
தனியார்மயத்தை அனுமதியோம்.

முறியடிப்போம் முறியடிப்போம்
அரசுப் பள்ளிகளை அழிக்க வரும்
தனியார்மயத்தை முறியடிப்போம்.

சுதந்திர தின கொண்டாட்டமா
67 ஆண்டு பெருமை பேசுறான்
எல்.கே.ஜி.க்கு 50000

யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்

கல்வி கற்பது மாணவன் உரிமை
தாய்ப்பால் குடிப்பது குழந்தையின் உரிமை
கல்வி என்பது சேவையடா
கல்வி என்பது சேவையடா
அனுமதியோம் அனுமதியோம்
கல்வியை விற்பதற்கு
அனுமதியோம் அனுமதியோம்

வித்து புட்டான் வித்து புட்டான்
நாட்டையும், வீட்டையும்
கேக்காம வித்து புட்டான்
எல்லாத்தையும் வித்து புட்டான்

கட்டபொம்மன், திப்பு சுல்தான்
சின்னமலை, மருது பாண்டி
தியாகத்திற்கு பதில் சொல்
தமிழக அரசே பதில் சொல்
தனியார்மயத்தை ஆதரிக்கும்
அரசியல் கட்சிகளே பதில் சொல்

ஏமாத்துறான் ஏமாத்துறான்
சுதந்திரம்னு சொல்லி சொல்லி
மிட்டாய் கொடுத்து ஏமாத்துறான்
யாருக்கடா சுதந்திரம்
வெங்காய சுதந்திரம்
அரசுப் பள்ளியில் படித்தவன் எல்லாம்
ஐ.ஏ.ஏஸ். ஆகியிருக்கான்
தாய் மொழியில் படித்தவர் எல்லாம்
தலைமைப் பதவிக்கு போயிருக்கான்

பெற்றோர்களே பெற்றோர்களே
துள்ளி விளையாடும் பிள்ளைகளை
மார்க் எடுக்கும் எந்திரமாக
மனப்பாடம் செய்யும் மெசினாக
தனியார் பள்ளி மாத்துறான், கட்டணக் கொள்ளை அடிக்கிறான்.
புறக்கணிப்போம், புறக்கணிப்போம் தனியார் பள்ளிகளை புறக்கணிப்போம்
பாதுகாப்போம் பாதுகாப்போம் அரசுப் பள்ளிகளை பாதுகாப்போம்
முறியடிப்போம் முறியடிப்போம்
தனியார்மயக் கல்வியை
முறியடிப்போம் முறியடிப்போம்

அரசுப் பள்ளி நமது பள்ளி
தாய்மொழிக் கல்வி நமது கல்வி
காசு பெரிதா மானம் பெரிதா?
தாய் மொழியா? அந்நிய மொழியா?
பெற்றோர்களே சிந்திப்பீர்
ஆங்கிலம் படித்தால் அடிமைப் புத்தி
தமிழ் என்றால் தன்மானம்

அமல்படுத்து அமல்படுத்து தமிழக அரசே அமல்படுத்து
அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும், தாய்மொழிக் கல்வியை அமல்படுத்து

வெல்லட்டும் வெல்லட்டும்
கல்வி உரிமை போராட்டம் வெல்லட்டும் வெல்லட்டும்
மாணவர்கள் போராட்டம் வெல்லட்டும்

போராட்டம் இது போராட்டம்
HRPC போராட்டம் பெற்றோர் சங்கம் போராட்டம்
வெல்லட்டும் வெல்லட்டும்

_______________________________________________________

தகவல்: மனித உரிமைப் பாதுகாப்பு மையம், விருத்தாசலம்