privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகாருக்கு வரி போடு - ஆட்டோவுக்கு மானியம் வழங்கு !

காருக்கு வரி போடு – ஆட்டோவுக்கு மானியம் வழங்கு !

-

திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம் சார்பாக 15.06.2014 அன்று SRV கல்லூரி அருகே உள்ள சுருதி மஹாலில் 14-ம் ஆண்டு பொதுக்குழுவும், புதிய நிர்வாகிகள் தேர்வு, ஆண்டறிக்கை, நிதியறிக்கை சமர்பிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஆண்டு பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் :

1. பொது மக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அடாவடித்தனங்களில் ஈடுபடுவது, பொறுப்பில்லாமல் வண்டி ஓட்டுவது போன்ற குற்றச்சாட்டுகளை அரசு அதிகாரிகளாலும், நுகர்வோர் அமைப்பினராலும் சுமத்துப்படுவது அடிப்படையற்றது எனவும் ஒருதலைபட்சமான பார்வையிலானது எனவும் இப்பொதுக்குழு கருதுகிறது. ஒரு குவளை தேநீர் ரூ 7-க்கு விற்கும் நாட்டில் 1 லிட்டர் பெட்ரொலுக்கு ரூ 50 வரை வரிபோடும் நாட்டில் 1 லிட்டர் குடிதண்ணீரை அரசே ரூ.10 க்கு விற்கும் நாட்டில், 3,200-க்கும் மேற்பட்ட ஆட்டோ ஓட்டுனர்கள் கொண்ட திருச்சி நகரத்தில் நாள் ஒன்றுக்கு 10 சவாரியாவது எடுத்தால்தான் ரூ 500 வரை வருமானம் ஈட்ட முடியும். அதில் வண்டி வாடகை, எரிபொருள் செலவு, வண்டி பாரமரிப்பு, கந்துவட்டி போக எஞ்சிய தொகையில் தான் தமது குடும்பத்தை பராமரிக்க முடியும். இவ்வளவு நெருக்கடிக்கு மத்தியிலும் நேர்மையாகவே எமது சங்க உறுப்பினர்கள் செயல்பட்டு வருகின்றனர் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

2. கடந்த 3 ஆண்டுகளில் ஆட்டோ டிரைவர்களிடம் அத்துமீறல்கள், அடாவடித்தனங்களை கட்டவிழ்த்து விட்டதும் அதனை எமது சங்கம் எதிர்கொண்டு உயர் அதிகாரிகளிடம் போராடிய வகையில் நடந்த தவறுகளுக்கு காவல்துறையினர் மன்னிப்பும், வருத்தமும் தெரிவித்து இனி இதுபோன்று நடக்காது என உறுதியளித்துள்ளனர் என்பதை இப்பொதுக்குழு சுட்டிக்காட்டுகிறது.

3. அரசு அலுவலகங்களுக்கோ, காவல் நிலையங்களுக்கோ மக்கள் பொருத்தமான துணை இன்றி போக அஞ்சும் சூழ்நிலையில் தமது செல்ல பிள்ளைகளையும், வயது வந்த பெண்களையும் ஆண்டு முழுவதும், பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் ஆட்டோ டிரைவர்களை நம்பி அனுப்பி வைக்கின்றனர் என்பதும் மக்கள் எமது வண்டிகளில் தவற விட்ட பொருட்களை திரும்ப ஒப்படைத்தும் நற்சான்றிதழ் பெற்றுள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம். குறிப்பாக ஏர்போர்ட் கிளையில் ஆட்டோவில் சென்ற பயணி 1 லட்ச ரூபாய் கொண்ட கைபையை தவறவிட்டுள்ளார். அதனை திரும்ப ஒப்படைத்தது குறித்து கன்டோன்மென்ட் காவல்துறை உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்தனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

4. சொந்த கோரிக்கைகளுக்காக மட்டும் அல்லாமல் சமூக அக்கறையுடனும் எமது தோழமை அமைப்புகளான புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட அமைப்புகளுடன் இணைந்து தாதுமணல்கொள்ளைக்கு எதிராகவும், அணுஉலை எதிர்ப்பு போராட்டம், மின்சார தட்டுப்பாடு, முல்லைபெரியாறு அணை பிரச்சனை, ஈழமக்களுக்கான உரிமை போராட்டம், சமச்சீர் கல்விக்கான போராட்டம் உள்ளிட்ட பொதுமக்களுக்கான கோரிக்கைகளுக்காகவும் எமது சங்கம் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு இருக்கிறது என்பதை இப்பொதுக்குழு மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

5. ஆட்டோ ஓட்டுனர்களுக்கான கட்டணத்தை அரசு தீர்மானிக்கும் போது கோடிக்கணக்கான மக்களின் அத்தியாவசிய பெட்ரோல் டீசல் விலையை தனியார் முதலாளிகள் தீர்மானிக்க மத்திய அரசு அனுமதித்ததை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. உடனடியாக இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும் கோருகிறோம்.

6. ஆட்டோக்கான கட்டணத்தை தீர்மானித்து அதனை கண்காணிக்கவும் அதிகாரிகளை நியமிப்பதும் பல பகுதிகளில் நடந்துள்ளது. ஆனால் அரசே 1 லிட்டர் பெட்ரோல் மீது கலால்வரி, சேவைவரி, விற்பனைவரி, மாநிலவரி உள்ளிட்ட மறைமுக பல்வேறு வரிமூலம் ரூ 50 வரை வரிபோட்டு சுரண்டுவதை இப்பொதுக்குழு கண்டிக்கிறது. பலமுனை வரியை ரத்து செய்து நேரடி வரியை கொண்டு வர வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வழியுறுத்துகிறது.

7. பொது போக்குவரத்துக்கான பேருந்து, ஆட்டோக்களுக்கு மானிய விலையில் பெட்ரோல், டீசல், கேஸ் வழங்க வேண்டும் எனவும், நட்சத்திர ஹோட்டல்கள், சொகுசு கார் உள்ளிட்டவைகளுக்கு கூடுதல் கட்டணங்களில் பெட்ரோல், டீசல் வழங்க வேண்டும் எனவும் இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

8. எட்டாம் வகுப்பு படித்தால் தான் பேட்ஜ் பெறமுடியும் என்ற அரசின் முடிவை பழைய ஓட்டுனர்களுக்கு அதாவது, 2010க்கு முன் உள்ள ஓட்டுனர்களுக்கு பொருந்தாது என அறிவிக்க வேண்டும் என இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

9. பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப அவ்வப்போது மீட்டர் கட்டணத்தை உயர்த்தும் வகையில் அரசு மீட்டரை இலவசமாக பொருத்தி தர வேண்டும் என இப்பொதுக்குழு கோருகிறது. டாஸ்மாக் உள்ளிட்ட போதை பொருட்களை தடை செய்ய வேண்டும்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஓட்டுனர்களும் தோழமை அரங்கினரும் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர்.

புதிய நிர்வாகிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டவர்கள் விபரம் :

மாவட்ட தலைவர் : S.கோபிநாத்

மாவட்ட துணை தலைவர் : S.மணி

செயலாளர் : V.மணலிதாஸ்

அமைப்புசெயலாளர் : A.சுரேஷ்

பொருளாளர் : K.செல்வராஜ்

உதவி செயலாளர்கள் : சக்திவேல், பொன்னுசாமி, சசிகுமார்

ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இக்கூட்டத்தினை ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சிறப்பு தலைவர் ப.தர்மராசு தலைமையேற்று நடத்தினார். நன்றியுரை தோழர்.மணி கூறினார். இக்கூட்டத்தில் ம.க.இ.க மையக் கலைக்குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

தகவல் :
ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம்,
இணைப்பு: புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சிமாவட்டம்.