மோடியின் அரசு பயணிகளின் ரயில்வே கட்டணத்தை 14.2% அதிகரித்துள்ளது. சரக்கு கட்டணத்தை 6.5% உயர்த்தியுள்ளது. கூடவே பயணிகளின் சீசன் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளனர். பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவு என்பதால் அன்றாடம் நகரங்களுக்கு வேலைக்கு சென்று வர ரயிலில் சீசன் டிக்கெட்டுகளை மக்கள் பயன்படுத்தி வந்தனர். ரயில் கட்டண உயர்வு காரணமாக அவர்களது மாத பட்ஜெட்டில் பெரிய அளவில் துண்டு விழும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

ஏற்கெனவே பாஜக அரசு சமையல் எரிவாயு விலையை மாதந்தோறும் அதிகரிக்கப் போவதாக தங்களது கொள்கை அறிவிப்பை வெளியிட்டிருந்தார்கள். இம்மாத துவக்கத்தில் டீசல் விலையும் உயர்த்தப்பட்டது. இப்போது கூடுதலாக ரயில் கட்டண உயர்வு சாமான்ய மக்களின் தலையில் வந்து இடியாய் விடிந்திருக்கிறது. கேட்டால் ‘இது ஏற்கெனவே காங்கிரசு எடுத்த முடிவு, நாங்கள் தேர்தலுக்காக ஒத்திப் போடப் பட்ட இக்கட்டண உயர்வை இப்போது அமல் படுத்துகிறோம்’ என்று பாஜக இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்துகிறது. சரி, காங்கிரசு அரசின் முடிவு என்றால் இவர்கள் எதற்கு தேர்தலில் போட்டியிட்டார்கள்? கட்சியையே காங்கிரசில் இணைத்திருக்கலாமே?
முன்னர் மதுரை-சென்னை 2 ம் வகுப்பு படுக்கைக் கட்டணம் ரூ 227 ஆக இருந்தது. இப்போது ரூ 38 அதிகரித்துள்ளது. இதுபோக சாதாரண வகுப்பு கட்டணமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. அரசு பேருந்து கட்டணமோ ரூ 325. தனியார் பேருந்தெல்லாம் சாமான்ய மக்களால் நினைத்தே பார்க்க இயலாது. திருச்சிக்கே ரூ 1000 வரை வசூலிக்கும் சொகுசுப் பேருந்துகள் எல்லாம் உள்ளன. அதுவும் கிராக்கி இருக்கும் சனி, ஞாயிறு என்றால் இன்னும் கூடுதல் கட்டணம் எல்லாம் வசூலிக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்த பிறகுதான் மக்கள் உயிரே போனாலும் ரயிலில் கம்பியை பிடித்துக் கொண்டாவது பயணித்து தொலைப்பது என்ற முடிவுக்கே வருகிறார்கள். ரயில் பயணத்தையும் தெரிவு செய்கிறார்கள்.
முன்னர் ரயிலில் ரூ 5-க்கு 20 கிமீ பயணம் செய்ய முடிந்தது, அதனை தற்போது 15 கிமீ ஆக சுருக்கி உள்ளார்கள். சென்னை போன்ற பெரு நகரங்களில் ஓடும் மின்சார ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்களில் கட்டணமும், சீசன் கட்டணமும் இருமடங்கு முதல் நான்கு மடங்கு வரை அதிகரித்துள்ளது.
சென்னை கடற்கரை-கிண்டி வரை முன்னர் ரூ 5 என இருந்த கட்டணம் இப்போது ரூ 10 ஆக மாற்றப்பட்டுள்ளது. முன்னர் இந்த தூரத்திற்கு ரூ 85 ல் சீசன் கட்டணம் இருந்து வந்தது. தற்போது இது ரூ 300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. முன்னர் 15 தடவை பயணிப்பதற்கான கட்டணம் மட்டுமே சீசன் டிக்கெட்டாக வசூலிக்கப்பட்டது. அதனை இப்போது 30 தடவையாக உயர்த்தியுள்ளனர்.

செங்கல்பட்டிலிருந்து சென்னைக்கு முன்னர் ரூ 15ல் வர முடிந்தது. அது முப்பது ரூபாயாகவும் மாற்றப்பட்டுள்ளது. திருவள்ளூரிலிருந்து சென்னைக்கு இப்போது பத்து ரூபாயில் வருவது இனி இருபது ரூபாயாகவும் இருக்கும். அரக்கோணத்திலிருந்து சென்னை மூர்மார்க்கெட்டுக்கு ரூ 15லிருந்து ரூ 30 ஆக கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. காலாண்டுக்கு எடுக்கப்படும் சீசன் டிக்கெட் எனில் இந்தக் கட்டண உயர்வு மிகவும் அதிகமாக இருக்கும்.
சென்னையை சுற்றியிருக்கும் கிராமப்புற பகுதிகளில் இருந்து சென்னைக்கு விவசாய விளைபொருட்களை அன்றாடம் கொண்டு வந்து விற்கும் சிறு விவசாயிகள், சென்னையை சுற்றியிருக்கும் கிராமங்களுக்கு வீட்டு உபயோகப் பொருட்களை விற்பனை செய்ய போகும் வியாபாரிகள், செங்கல்பட்டு, காட்பாடி போன்ற சிறு நகரங்களில் இருந்து அன்றாடம் சென்னைக்கு வந்து போகும் தினக் கூலிகள், மாணவர்கள் எனப் பல பிரிவினருக்கும் இந்த சீசன் கட்டணத்தை நான்கு மடங்கு உயர்த்தியது தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று.
நகரங்களுக்குள் இருக்கும் அதிக வாடகை, விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் புறநகரப் பகுதிகளுக்கு சென்று குடியேறுகின்றனர். ஆனாலும் அன்றாட வேலைகளுக்காக நகரங்களுக்கு சென்று வர வேண்டிய கட்டாயத்திலும் இருக்கின்றனர். வேறு வழியில்லாததால் இக்கட்டண உயர்வை சகித்துக் கொள்ள பழகியிருக்கிறார்கள். மறுபுறமோ பேருந்து கட்டணக் கொள்ளை காரணமாக மக்கள் தெரிவு செய்வதற்கான ஒரே வாய்ப்பாக ரயில் பயணம் மட்டும்தான் இருக்கிறது. தமிழகத்திலும் பேருந்து கட்டணம் மோடியின் அன்புச் சகோதரி 2011-ல் ஆட்சிக்கு வந்த பிறகுதான் கடுமையாக உயர்த்தப்பட்டது.
ஏறக்குறைய சென்னை மற்றும் புறநகர்ப் ரயில்களில் தினசரி 10 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இவர்களில் 80 ஆயிரம் பேர் சீசன் டிக்கெட் வைத்திருப்பவர்கள். முன்னரே இவர்கள் குறைவான தொகையில் சீசன் டிக்கெட் எடுத்திருப்பினும், மீதித் தொகையை பரிசோதகர் மூலம் வசூலித்து விடுவோம் என தற்போது ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
ஆண்டுக்கு 28 லட்சம் டன் அளவுள்ள பொருட்கள் இந்திய ரயில்வே மூலமாக நாட்டின் பல பகுதிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சிமெண்டு, பெட்ரோலியம், உணவுப் பொருட்கள், உரங்கள் என இந்த பட்டியல் மிக நீண்டது. தற்போது சரக்கு கட்டணத்திற்கு 3% சேவை வரியும் விதித்திருப்பதன் மூலம், நேரடியாக அது மக்களிடையே விலைவாசி உயர்வாக வந்துதான் முடியும்.

மோடி வந்தால் நிர்வாகம் நன்றாக இருக்கும், நாடு விரைவாக பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையும், வல்லரசாகும் என்றெல்லாம் சொல்லிதான் தேர்தலில் வெற்றி பெற்று வந்தது பாஜக. ஆனால் ஏற்கெனவே காங்கிரசு திட்டமிட்ட கட்டண உயர்வைத்தான் தாங்கள் அமல்படுத்துவதாக சொல்கிறார்கள் பொன்.ராதாகிருஷ்ணனும், சதானந்த கவுடாவும். பயணிகள் ரயில் போக்குவரத்தில் ரூ 900 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகவும், செலவுகளை சமாளிக்கவே கட்டண உயர்வு என்றும் கூறியிருக்கிறார்கள். தற்போது பயணிகள் ரயிலுக்காக அரசு ஆண்டுதோறும் ரூ 26,000 கோடியை மானியமாக அளித்து வருகிறது. இப்போது இந்தத் துறையிலும் அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்க அரசு பரிசீலித்து வருவதாக ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா கூறியிருக்கிறார்.
ஆசியாவிலேயே பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வே துறையை நேரடி அந்நிய முதலீடு, கட்டண உயர்வு மூலமாக தனியார் முதலாளிகளுக்கு தாரை வார்க்க பார்க்கிறது மோடி அரசு. அதனால்தான் ஜேட்லி இந்த கட்டண உயர்வை நியாயப்படுத்த நமக்கு உலக தரத்திலான ரயில் வேண்டுமா? இல்லையா? என்பதை முடிவு செய்ய வேண்டும் என்கிறார். பெரும்பான்மை மக்கள் மலிவு காரணமாகவே ரயிலில் பயணிக்கிறார்களே அன்றி சொகுசு வசதிகளை ஏதிர்பார்த்து அல்ல. அது சதாப்தியிலும், ஏசி கோச்சுகளிலும் மட்டுமே பயணிக்கும் மக்களுக்கான கவலை. அந்த வகையில் ஜேட்லி மட்டுமல்ல முழு பாஜ கட்சியுமே மேட்டுக்குடியின் நலனைத்தான் பிரதிபலிக்கிறது
இந்தக் கட்டண உயர்வு வரும் 25-ம் தேதி முதல் அமலாகும் என மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா அறிவித்துள்ளார். ரயில் கட்டண உயர்வு ஒரு கடினமான முடிவு என்ற போதிலும் அது ஒரு சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவுதான் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு கட்டண உயர்வு ஒரு கசப்பு மருந்து என்கிறார் வெங்கையா நாயுடு. சரியான நேரத்தில் தரப்படும் மக்களுக்கான மருந்துதான், கட்டண உயர்வு என்றால் அதற்கு பெயர் மருந்தல்ல, விஷம்.
தொழிலாளிகளும், நடுத்தர மக்களும் இந்த கட்டண உயர்வால் தமது மாத சம்பளத்திலிருந்து சில பல நூறு ரூபாய்களை எடுத்து ஒதுக்கவேண்டும். மற்ற செலவுகளைப் போல ரயில் கட்டணம் தேவையில்லை என விலக்கி வைக்க முடியாது. வேலைக்கு போய் சம்பாதிப்பதற்கே இது அடிப்படையாக இருக்கிறது. அதனால்தான் எப்படியும் மக்கள் வழிக்கு வருவார்கள் என அரசு துணிந்து இந்த கட்டண உயர்வை அறிவித்திருக்கிறது.
போராட்டம் ஒன்றே வழி என உணரும்போது மட்டுமே மக்கள் இந்த ரயில் டிக்கெட் உயர்வுக்கு எதிராகவும் போராட முடியும்.