Thursday, August 11, 2022
முகப்பு கட்சிகள் காங்கிரஸ் மோடி ஆட்சியில் ஆசாராம் பாபு கொலையும் செய்வார் !

மோடி ஆட்சியில் ஆசாராம் பாபு கொலையும் செய்வார் !

-

பாசம், அயோக்கியத்தனம் இரண்டிற்கும் புகழ் பெற்ற, ஆசாராம் பாபுவின் பெயரை யாரும் மறந்திருக்க முடியாது. ஆன்மீகம், ஆயுர்வேதம், இந்துமதம் எல்லாம் கலந்த, நவீன கார்ப்பரேட் சாமியாராக வலம் வந்தவர் அவர். இந்த பேர்வழியின் சிறுமிகள் மீதான பாலியல் வல்லுறவுகளும், கொலைகளும், ஹவாலா மோசடிகளும் ஒவ்வொன்றாக கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து வெளியானது. பிறகு அவரும், மகன் சாய் நாராயணும் கைது செய்யப்பட்டு  ஜோத்பூர் சிறையிலடைக்கப்பட்டு, தற்போது வழக்கு நடைபெற்று வருகிறது. மோடியின் நண்பரான ஆசாராம் பாபுவின் மீதான வழக்குகள், கொலைகார ஜயேந்திரனது வழக்கு போல புஸ்வாணமாகும் வாய்ப்பு நிறையவே இருக்கிறது.

அம்ருத் பிரஜாபதி
அம்ருத் பிரஜாபதி

பொறுக்கி ஆசாராம் பாபுவின் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக இருந்தவர் ஆசாராம் பாபுவின் முன்னாள் ஆயுர்வேத மருத்துவர், அம்ருத் பிரஜாபதி, வயது 55. இவருக்கு ஏற்கெனவே ஆசாராம் பாபு தரப்பில் இருந்து பலமுறை கொலைமிரட்டல்கள் விடுக்கப்பட்டிருந்ததால், இரண்டு போலீசாரைக் கொண்டு பாதுகாப்பும் கொடுக்கப்பட்டிருந்தது. கடந்த மே 23-ம் தேதி மதியம் பாதுகாவலர்கள் உணவு இடைவேளைக்காக சென்றிருந்த வேளையில் ராஜ்கோட்டில் தனது கிளினிக்கில் இருந்த வெளிவந்த அம்ருத் பிரஜாபதியை அங்கு நோயாளி போல வந்த ஆசாராம் பாபுவின் அடியாள் ஒருவர் சுட்டுக் கொன்றார். பிறகு அடையாளம் தெரியாத இன்னொருவருடன் சேர்ந்து அவர் மோட்டார் சைக்கிளில் தப்பி விட்டார்.

மருத்துவமனையிலும் பிறகு வீட்டிலும் சிகிச்சை பெற்றாலும் ஜூன் 10 அன்று பிரஜாபதி இறந்து போனார்.

பதிவுபெற்ற ஆயுர்வேத மருத்துவரான அம்ருத் பிரஜாபதி 15 (1990-2005) ஆண்டுகள், ஆசாராம் பாபுவுக்கு தனிப்பட்ட மருத்துவராக இருந்திருக்கிறார். இவரை வைத்துதான் ஆசாராம் பாபு தனது ஆயுர்வேத மருந்துகளை, சூரணங்களை, சிட்டுக்குருவி லேகியங்களை எல்லாம் அங்கீகாரம் பெற்று வெளியில் விற்பனை செய்ய முடிந்தது. ஆனால் ஆசிரமத்தில் நடக்கும் பாலியல் முறைகேடுகள், ஓபியம் பயிரிடுதல் போன்றவை கண்கூடாக தெரிய வரவே அங்கிருந்து பிரஜாபதி வெளியேறினார். வெளியில் வந்து இவற்றை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தவும் துவங்கினார்.

இதனால் ஆத்திரமடைந்த ஆசாராம் தரப்பு ஏழு முறை இவரை தாக்கியுள்ளனர். 2005-07 ல் ஆறுமுறை இவரது ஆயுர்வேத கிளினிக் முற்றிலும் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது. 2005-ல் ஆசாராம் பாபு ஆள்வைத்து இவரை கடத்தவும் செய்துள்ளார். ஆஸாராமுக்கு எதிரான முக்கிய அரசு சாட்சி இவர்தான். ஆசாராம் பாபுவுக்கு எதிராக சாட்சி சொல்ல முற்பட்டவர்களில் இதுவரை சூரத்தில் மாத்திரம் 3 பேர் தாக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் 16-ல் அரசு தரப்பு சாட்சியான தினேஷ் பவ்சந்தானி (39) என்பவர் மீது ஆசிட் அடித்தவர்கள் ஆசாராமின் பக்தர்கள்தான்.

அம்ருத் பிரஜாபதி ஆர்ப்பாட்டம்
ஆசாராம் பாபுவுக்கு எதிராக அம்ருத் பிரஜாபதி ஆர்ப்பாட்டம் நடத்திய போது…

இச்சம்பவங்கள் அனைத்திலும் தாக்கியவர்கள் ஆசாராம் பாபுவின் ஆசிரமத்தை சேர்ந்த சதக்குகள் என்று போலீசே சொல்கிறது. ‘மத்தியில் நம்மவாள் ஆட்சி வந்து விட்டது’ என்ற மிதப்பில் அநேகமாக அனைத்து சாட்சிகளையும் ஆசாராம் பாபுவின் கோஷ்டியினர் சாகடித்து விடுவார்கள். இப்போது சூரத் போலீசார் எஞ்சியிருக்கும் ஏழு அரசு தரப்பு சாட்சிகளுக்கு பாதுகாப்பு தர முடிவு செய்துள்ளதாக கூறி வருகின்றனர். குஜராத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டதாக காங்கிரசு கட்சி கூறியிருக்கிறது. என்றாலும் இந்துமதவெறியர்கள் மத்தியிலும், மாநிலத்திலும் ஆள்வதால் ஆசாராம் பாபுவின் வழக்கில் உண்மையை சொல்ல முன்வந்த சாட்சிகள் இல்லாதொழிக்கப்படுவதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது.

2002-05 இடைவெளியில் சூரத்தை சேர்ந்த இரு சகோதரிகளை தனது ஆசிரமத்தில் வைத்து ஆசாராம் பாலியல் வல்லுறவுக்குள்ளாகிய சம்பவத்தை வெளியானதை தொடர்ந்து அவரையும், அவரது மகன் நாராயண் சாயையும் எதிர்த்துப் போராடி வருகிறார் பிரஜாபதி. சம்பவத்தன்று சுடப்பட்ட நிலையிலும் மரண வாக்குமூலமாக தான் சந்தேகப்படும் ஐந்து நபர்களின் பெயரையும், செல்பேசி எண்களையும் போலீசாரிடம் பிரஜாபதி கொடுத்திருக்கிறார். எனினும் ராஜ்கோட் போலீசார் யாரையும் கைது செய்யவில்லை என்கிறார் அவரது மாமா மோடி பிரஜாபதி. உண்மையில் போலீசார் சம்மன் அனுப்பி நேரில் ஜூன் 7, 13 ஆகிய தேதிகளில் விசாரணைக்கு வருமாறு கூறிய பிறகும் சம்பந்தப்பட்ட ஐந்து பேர்களில் யாரும் காவல்நிலையத்திற்கு வரவில்லை என்கிறது போலீசு தரப்பு. இதையே சமான்யமானவர்கள் வராமல் இருந்திருந்தால் சும்மா விட்டு வைத்திருக்குமா போலீசு?

அம்ருத் பிரஜாபதி
கொடூரமாக தாக்கப்பட்டு படுகாயமடைந்த அம்ருத் பிரஜாபதி

”நாங்கள் பலமுறை முன்னரே எடுத்துச் சொல்லியும் போலீசார் எங்களுக்கு நேர இருந்த ஆபத்தை தடுக்க முடியவில்லை. உள்ளூர் போலீசார் மீது எனக்கு நம்பிக்கையில்லை. எனது கணவரது கொலைக்கு உயர்மட்ட விசாரணை வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளார் அவரது மனைவி சரோஜ் பிரஜாபதி, அவரும் ஒரு ஆயுர்வேத மருத்துவர்.

இதற்கிடையில் பிரஜாபதி குறிப்பிட்ட ராமச்சந்திர தாக்கர், விகாஸ் கெம்கா, மெக்ஜி படேல், காண்டி படேல், அஜய் ஷா ஆகிய ஆசாராம் பாபுவின் அடியாட்கள் ஐவரும் தங்களை போலீசார் கைது செய்யாமல் இருக்க ராஜ்கோட் விரைவு நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். இவர்களது முன்ஜாமீன் மனுவை ஜூன் 27-ம் தேதி வரைக்கும் நீதிபதி பாரத் உபாத்யாய் வரை தள்ளி வைத்திருக்கிறார்.

அடியாட்களில் ஒருவனான கெம்கா என்பவன், அதே நாளில் டெல்லியில் இருந்து அகமதாபாத் ரயிலில் வந்ததற்கான டிக்கெட்டை சமர்ப்பித்துள்ளான். அந்த டிக்கெட்டில் விகாஸ் என்ற அவனது முதல் பெயர்தான் இருக்கிறது. மேக்ஜி படேல் அதே நேரத்தில் தான் ஒரு இழவு வீட்டில் இருந்ததாக சொல்லி புகைப்படம் ஒன்றை சமர்ப்பித்துள்ளான். காண்டி படேலும் அகமதாபாத்தில் நடைபெற்ற மத விழாவில் தான் அப்போது கலந்து கொண்டதாக சொல்லி செல்பேசி அழைப்புகளின் பதிவைக் கொடுத்துள்ளான். இவற்றையெல்லாம் பார்க்கும் போது அடியாட்கள் பக்காவான சதித்திட்டத்தில் இயங்கியுள்ளது தெரிய வருகிறது.

கூட்டுச்சதி நடைபெறவில்லை என்பதற்கான ஆதாரங்களாக நீதிபதிகள் இவையனைத்தையும் ஏற்றுக்கொண்டனர். எனினும் அரசு கூடுதல் வழக்கறிஞர் அவர்களை பிணையில் விடக் கூடாது என வாதிட்டார். பிரஜாபதி கொலையாவதற்கு முன் சூரத்தில் இருமுறையும், அகமதாபாத்தில் ஒரு முறையும் இதே அடியாட்களால் தாக்கப்பட்டுள்ளதை நீதிபதிகளுக்கு அவர் சுட்டிக்காட்டினார். போலீசாரோ ராஜ் படேல் என்பவர்தான் சுட்டார் என்று கதை கட்டுகிறார்கள்.

சரோஜ் பிரஜாபதி
சரோஜ் பிரஜாபதி

பதின்ம வயது சிறுவர்களான திபேஷ் வகீலா, அபிஷேக் வகீலா ஆகிய சகோதரர்கள் இருவரும் 2008 ஜூலை 5-ம் தேதி அகமதாபாத் குருகுலப் பள்ளியில் இருக்கும் ஆசிரமத்தில் மர்மமான முறையில் இறந்து போன பிறகு ஆசாராம் மீது பல குற்றச்சாட்டுகளை பிரஜாபதி முன்வைத்தார். தங்களது பிள்ளைகள் நரபலி தரப்பட்டுள்ளதாக அச்சிறுவர்களின் பெற்றோர்கள் கூறியதை தொடர்ந்து, அவர்களுடன் மருத்துவர் அம்ருத் பிரஜாபதியும் இணைந்து ஆஸ்ரமுக்கெதிராக போராடத் துவங்கினார். இது பற்றி அமைக்கப்பட்ட திரிவேதி கமிசன் அறிக்கையை வெளியில் கூட விடாமல் ஆசாராம் பாபுவை பாதுகாத்தவர் இப்போதைய பிரதமரும் அப்போது குஜராத் முதல்வராகவும் இருந்த மோடி.

அந்த கமிசனில் ஆஜராகி தாந்திரிக் வித்யா முறையை தினசரி ஆசாராம் பின்பற்றியது பற்றி சாட்சி சொல்லியிருந்தார் பிரஜாபதி. இது ஆசாராமுக்கெதிரான மிக முக்கியமான அரசு சாட்சியாகும்.

ஆசாராம் பாபு பிரதமர் மோடியின் தனிப்பட்ட நண்பரும் கூட. குஜராத்தில் முதல்வராக முதன்முதலில் பொறுப்பேற்ற பிறகு தான் நடத்திய முசுலீம் படுகொலைகளுக்கு பின்னர் இவரது ஆசிரமத்திற்காக பல ஏக்கர் நிலங்களை இலவசமாக வழங்கினார் மோடி. கங்கையை காப்பாற்றுவதற்காக தற்போது அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள உமாபாரதியின் ஆதர்ச குருவும் ஆசாராம் பாபு தான். பழைய காங்கிரசு அரசு முதல் தற்போதைய பாஜக அரசு வரை இருவருமே ஆசாராம் பாபுவுக்கு சாமரம் வீசுவதில் ஒருவரோடொருவர் போட்டி போட்டுக் கொண்டு நிற்கின்றனர். சிறையில் குளிப்பதற்கு கங்கை நீர், விசேச உணவு வகைகள், சொகுசு கட்டில், இரண்டு உதவியாளர்கள் என சிறைச்சாலையில் அவருக்கு தரப்படும் சலுகைகளை உச்சநீதி மன்ற நீதிபதிகளே கண்டித்துள்ளனர்.

அசாராம் பாபு
ஆசாராம் பாபு பொறுக்கி மட்டுமல்ல கொலைகார கிரிமினலும் கூட!

ஆசாராம் பாபு அப்பாவி, உண்மையான துறவி என்கிறார் பிரவீன் தொகாடியா. அவரது கைதை இந்து மதத்திற்கெதிரான தாக்குதல் என்கிறார் அசோக் சிங்கால். உமா பாரதியோ இதனை காங்கிரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று அப்போதே சொன்னார். ஆனால் இப்போது அம்ருத் பிரஜாபதியை பழிவாங்கி உலகத்தை விட்டே அனுப்பி தனக்கெதிரான சாட்சிக்கு தீர்ப்பெழுதி இருக்கிறார் ஆசாராம் பாபு.

ஆசாராம் பாபு ஒரு சாதாரண குதிரை ஜட்கா வண்டி ஓட்டுபவனாக வாழ்வைத் துவங்கி எப்படி எளிதில் பல நாடுகளில் 400-க்கும் மேற்பட்ட கிளைகள், 50-க்கும் மேற்பட்ட ஆசிரமங்கள், 1000-க்கும் மேற்பட்ட சமிதிகள், 10 லட்சம் பக்தர்கள் என தனது சாம்ராஜ்யத்தை விரிவடைய செய்ய முடிந்தது என்பதைத் தான் நாம் முதலில் பரிசீலிக்க வேண்டும். அரசியல் பிரமுகர்கள், பெருமுதலாளிகள், அதிகாரிகளின் பினாமியாகவும், ஹவாலா மூலமும் தான் இது சாத்தியமானது. பொதுவாக சங்கராச்சாரி துவங்கி நித்தியானந்தா வரை இதுபோன்ற சாமியார்கள் தவறுகள் செய்து மாட்டும்போது அவர்கள் செய்த கொலை, பாலியல் முறைகேடுகள் மட்டும்தான் ஒரு பரபரப்பிற்காக மட்டும் ஊடகங்களால் முன்னிறுத்தப்படுகிறது. ஆனால் அவர்களது கிரிமினல் குற்றங்கள், நில அபகரிப்பு, ஊழல், ஹவாலா போன்ற குற்றங்களை யாரும் பெரிதாக கண்டுகொள்வதில்லை.

சட்டம் கூட டிரஸ்டு என்ற அடிப்படையில் இவர்களை காப்பாற்றுவதால் கார்ப்பரேட் சாமியார்கள் சொத்து மற்றும் வருமான வரிகளில் இருந்து தப்பித்துக் கொள்கிறார்கள். காவிக்கும்பல், ஆளும்வர்க்கம், ஓட்டுப் பொறுக்கிகள், போலீசு, நீதிமன்றம், ஊடகங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தங்களுக்கெதிரான எல்லா வழக்குகளிலிருந்தும் எளிதில் தப்பி விடுவர். அந்த வகையில் அம்ருத் பிரஜாபதி போல சாட்சி சொல்ல முன்வரும் ஒரு சிலரை போட்டுத் தள்ளிவிட்டு, ஆதாரத்தை முறையாக மறைத்து விட்டால் ஆசாராம் பாபுவும் புனிதர் பட்டம் பெற்று விடுதலையாகும் நாள் வெகு தொலைவில் இல்லை. வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?

–    கௌதமன்.

  1. வரதராசப் பெருமாளை சாட்சியாக வைத்து சங்கரராமனை கொன்ற சங்கராச்சாரி நிராபராதியாக விடுதலையாகும் போது நம் நாட்டில் ஆசாராம் பாபு மாத்திரம் நீதிமன்றத்தால் யோக்கியனாகி விடுதலை பெற முடியாதா என்ன?—-முடியாது என்றே பேச்சுக்கே இடமில்லை..இவர்களை காப்பாற்றுவதற்க்குத்தான் மோடி பிரதமர் அவதாரம் எடுத்து இருக்காரே…….

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க