privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

சென்னை கட்டிட விபத்து : உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை !

-

அந்த மனிதர் ஐம்பதுகளின் இறுதியில் இருந்தார். அவர் அணிந்திருந்த போலீசு சீருடை கசங்கிப் போயிருந்தது. மருட்சியான முகத்தோடு தீயணைப்பு வண்டி ஒன்றின் பின்னே குழாயைப் பற்றியவாறு தளர்வாகச் சரிந்திருந்தார். நாங்கள் மவுலிவாக்கத்தில் இருந்தோம். அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்த சில மணி நேரங்களிலேயே வினவின் செய்தியாளர் குழு மவுலிவாக்கத்தை அடைந்திருந்தது. இந்தி தெரிந்த எமது தோழர் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்களைத் தேடிச் சென்றிருந்தார்.

மற்றவர்கள் இடிந்து போன கட்டிடத்தை நெருங்குவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தோம். அப்போதுதான் அந்தக் காவலரை கட்டிடத்திற்கு சற்று அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தீயணைப்பு வாகனம் ஒன்றின் பின், அரையிருளில் கண்டோம்.

“சார் உள்ளே எத்தனை பேர் இன்னும் மாட்டியிருக்காங்க?”

“தெரியலை தம்பி. ச்சே… எத்தினி ரத்தம்…இப்டி அநியாயமா சாவறதுக்காகவா இங்க வரணும். வாரம் பூரா கஷ்டப்பட்டு ஒழச்சிட்டு இன்னிக்கு பார்த்து கூலி வாங்க வந்திருக்காங்கபா… ச்சை என்ன மனுச வாழ்க்கை பாத்தியா” வறண்டு போய் கட்டிக் கொண்ட தொண்டையிலிருந்து வீசும் காற்றை எதிர் கொள்ள முடியாத திணறலுடன் வெளிப்பட்டது அவர் குரல். அதிர்ச்சியிலிருந்து மற்றவர்களைப் போல, எங்களைப் போல அவரும் மீளவில்லை.

”நீங்க உள்ளே இருந்தீங்களா?”

”ஆமாப்பா.. கண்ணால பார்க்க முடியலை. அதான் வந்துட்டேன்”

“எங்களை இடிந்த கட்டிடத்தின் கிட்டக்க எப்படியாவது கொண்டு போக முடியுமா?” கண நேரம் அவரது முகத்தில் ‘போலீசு’ தோரணை எட்டிப் பார்த்து விட்டு அகன்றது.

“அது முடியாதுப்பா.. எத்தினி ப்ரொட்டக்சன் போட்டிருக்கு பார்த்தீங்கள்ல? என் வயசுக்கு என்னாலேயே உள்ளெ சமாளிக்க முடியலை. நீயெல்லாம் பார்த்தா சின்ன வயசுக்காரனா இருக்கே. உனக்கு எதுக்குப்பா இந்த வேலை. போய்டு”

இடிந்து விழுந்த கட்டிடம்
இடிந்து விழுந்த கட்டிடம்

இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறும் வயதிலிருந்த அவர் ஏராளமான மரணங்களை சந்தித்திருக்க கூடும். கொல்லப்பட்டவர்கள், விபத்தில் இறந்தவர்கள், தற்கொலைகள் என்று எதிர்பாராத மரணங்களும், எண்ணிறந்த சாவின் வகைகளும் அவருக்குப் புதிதல்ல. என்றாலும், மவுலிவாக்கத்தில் சனி இரவு நடந்த சம்பவம் அவரை, அவரது முழு வாழ்க்கை பணியை சுனாமி போல புரட்டிப் போட்டிருந்தது.

***************************************************

”அன்னி போயிந்தி சார்… அன்னி போயிந்தி.. மா பிள்ளாலு.. மாயெம்மா..” அழுது அழுது புண்ணாகிப் போன தொண்டையில் இருந்து கரகரப்பாக வெளிப்பட்ட அந்தக் குரலில் எந்த நம்பிக்கையும் இல்லை: அழுகையும் ஆற்றலின்றி வற்றிப் போயிருந்தது. அவர் பெயர் சஞ்சீவ ரெட்டி. ஆந்திர மாநிலம் சிறீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். நாற்பது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். ஊரில் விவசாயம் பொய்த்துப் போய் பிழைக்க வழியற்றுப் போன நிலையில் உள்ளூர் ’ஆள் பிடிக்கும்’ காண்டிராக்டர் ஒருவர் மூலம் சென்னையில் கட்டுமானத் துறையில் வேலைகள் இருப்பதைக் கேள்விப்பட்டு ஐந்தாண்டுகளுக்கு முன்பு சென்னை வந்தவர் வெவ்வேறு இடங்களில் வேலை பார்த்து விட்டு ஓராண்டுக்கும் மேலாக இந்தக் கட்டிடத்தில் வேலை பார்த்து வருகிறார். மழலையாக தமிழ் பேசுகிறார்.

இடிந்து போன கட்டிடத்தின் காண்டிராக்டர், கட்டுமானப் பணிக்கு கூலியாட்களை அமர்த்தும் வேலையை இன்னொரு காண்டிராக்டருக்கு விட்டிருக்கிறார். அவர் வடமாநிலங்களிலும், ஆந்திரம், ஒரிசா போன்ற மாநிலங்களிலும் ’ஆள் பிடிக்கும்’ காண்டிராக்டர்கள் நெட்வொர்க் ஒன்றுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்திருக்கிறார். ‘இத்தனை உருப்படிகள் தேவை’ என்கிற தகவல் இங்கிருந்து போகும். அங்கே ’ஆள்பிடிக்கும்’ காண்டிராக்டர்களுக்கு ஆட்களைப் பிடித்து அனுப்புவதில் பெரிய சிக்கல்கள் இல்லை. உள்ளூரில் விவசாயம் முற்றாக பொய்த்துப் போன நிலையில் எந்த வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு வெளியூருக்குக் கிளம்ப மக்கள் குடும்பம் குடும்பமாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தற்போது நொறுங்கிப் போய்க் கிடக்கும் கட்டிடத்தில் மேஸ்திரியாக வேலை பார்க்கும் சஞ்சீவ ரெட்டியின் தினக் கூலி 700 ரூபாய். ஆனால், அது மூன்று கைகள் மாறி இவருக்குக் கிடைக்கும் போது 500 ரூபாயாக சுருங்கி விடுகிறது. சில வருடங்கள் வேலை பார்த்து சம்பாதித்த காசில் ஊரில் செத்துப் போன விவசாயத்திற்கு எப்படியாவது உயிரூட்டி விடலாம் என்கிற கனவில் மொத்த குடும்பத்தையும் இங்கே சித்தாள் வேலைக்காக அழைத்து வந்துள்ளார். மனைவியும் இரண்டு பிள்ளைகளும் கூலியை பெற்றுக் கொள்ள கீழ்தளத்தில் காத்திருந்த அதே சமயம் இவர் மேல் தளம் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சஞ்சீவ ரெட்டியின் மொத்த குடும்பமும் இப்போது பூமிக்கடியில். கொத்தடிமை வாழ்க்கையினூடாக அரை வயிற்றுக் கஞ்சியாவது கிடைத்துவிடும் என்ற கனவு – இதையெல்லாம் கனவாக விளிக்க முடியுமா – நொறுங்கிய கட்டிடத்தின் ஏதோ ஒரு மூலையில் உறைந்திருக்கும்.

அவரது காலில் அரை அடி நீளத்திற்கு வெட்டுக்காயம் இருந்தது அதிலிருந்து ரத்தம் வழிந்து உறைந்து போயிருந்தது. கட்டிடம் இடிந்து விழுந்த போது காங்க்ரீட் தூணிலிருந்த கம்பி வெட்டியதாகச் சொல்கிறார். இப்போது தீர்ந்து போன அழுகை திடீரென்று பெருக்கெடுத்து குமுறலோடு கொட்டத் துவங்கியிருந்தது. இந்த வெள்ளப் பெருக்கில் நாங்களும் அடித்துச் செல்லப்பட்டோம். ஒரு மனிதனின் நிர்க்கதியான அவலத்தை நேருக்கு நேர் சந்திக்கின்ற தருணங்களில் ஒரு செய்தியாளனுக்குரிய விழிப்பு நிலையெல்லாம் இங்கே செல்லுபடியாவதில்லை.

இடது கையால் அடிவயிற்றை தட்டிக் காண்பித்துக் கொண்டே வலது கையால் சாப்பிடுவது போல் சைகை செய்கிறார். ‘எல்லாம் இந்த வயித்துக்காகத் தான் நடந்தது’ என்பதை சைகையால் உணர்த்துகிறார். வயிற்றுப் பாட்டை குறிக்கும் இந்த படிமம் அசட்டுக் கவிஞர்களின் தேய் வழக்காக செல்வாக்கிழந்திருந்தாலும் உயிருடன் வதைபடும் நேரத்தில் அது கூறும் பொருள் பொதிந்த குறியீட்டை விளக்குவதற்கு எங்களிடம் வார்த்தைகள் இல்லை. இதயம் துளைக்கும் கவிதைகள் இப்படித்தான் கவனிப்பாரற்று இறைந்து கிடக்கிறது. மனைவியின் பெயரைச் சொல்லி ‘உன்னைக் கொன்று விட்டேனே பாவி’ என்று அரற்றுகிறார். ஆனால் கொன்றது அவரா? பழியும் பாவமும் அவருக்குரியதா?

***************************************************

நாங்கள் கட்டிடத்தின் நேர் எதிரே சாலைக்கு எதிர்புறம் நின்றிருந்தோம். மூடப்பட்ட கடை ஒன்றின் முன்புறமாக தள்ளாடிக் கொண்டிருந்த தகரக் கூரையின் கீழ் பத்துக்குப் பத்து இடத்தில் சுமார் ஐம்பது பேர்கள் வரை ஒடுங்கிக் கிடந்தார்கள். இவர்களெல்லாம் நொறுங்கிக் கிடக்கும் கட்டிடத்தின் கீழ் மாட்டிக் கொண்டிருப்பவர்களின் நெருங்கிய உறவினர்கள். செய்தி கேட்டு சென்னை மாநகரத்தின் பல்வேறு இடங்களிலிருந்து பதறி ஓடி வந்தவர்கள். அவர்களும் இந்த நகரின் மர்மமான கட்டிடங்களை கட்டுவதற்கு விதிக்கப்பட்ட அடிமைகள்தான். எல்லோரும் அடர்த்தியான தெலுங்கு பேசுகிறார்கள்.

அவர்கள் பேசிய மொழி எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் பேசிய மொழி அவர்களுக்குப் புரியவில்லை. ஆனாலும் எங்களுக்குள் அது தடை போடுவதாக இல்லை. துயரத்தின் மொழியை பகிர்ந்து கொள்வதற்கும் புரிந்து கொள்வதற்கும் மொழியியலின் ஆய்வுக்குரிய பேச்சு மொழிகள் நிபந்தனை அல்ல.

சஞ்சீவ ரெட்டி எங்களோடு பேசிக் கொண்டிருந்த போது வயதான ஒருவர் நெருங்கி வந்தார். அவர் கண்கள் ஈரக்கசிவுடன் வெறிச்சோடி இருந்தன. சஞ்சீவ ரெட்டியின் தோளில் ஆதரவாக தட்டிக் கொடுத்தார் ஒரு உள்ளூர்வாசி பெரியவர். தமிழில் பேசினார்.

”யோவ் ரெட்டி.. அந்த ஆண்டவன் கைவிட மாட்டான்யா. உன் பிள்ளைங்களுக்கும் பொண்டாட்டிக்கும் ஒன்னும் ஆயிருக்காதுய்யா. போலீசு போயிருக்கில்லே உயிரோட கொண்டாந்திருவாங்க பாரு”

சஞ்சீவ ரெட்டியின் உடல் குலுங்கத் துவங்கியது. அந்தப் பெரியவரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு வாயில் எச்சில் வடிய மீண்டும் பெருங்குரலெடுத்து அழத் துவங்கினார்.

பெரியவர் நம்மிடம், “நீங்க என்ன பத்திரிகையா சார்? நான் இங்க ஓட்டல்ல சர்வரா வேலை பாக்கறேன் சார். நாலரைக்கு பில்டிங் நொறுங்கிரிச்சி சார். அப்பலேர்ந்து இங்க தான் இருக்கேன். போலீசு அஞ்சி மணிக்கு மேல வந்திச்சி. மொதல்ல வந்த போலீசு டிராபிக்கை தான் பாத்தாங்க. அப்பால ஆறு மணிக்குத் தான் தண்ணி பீச்சி அடிக்கிற வண்டி வந்திச்சி. நாங்க கொஞ்ச பேரு சேர்ந்து எங்க கண்ணுக்குத் தெரிஞ்சவங்களை வெளியே இட்டாந்துட்டோம் சார். அப்பலேர்ந்து எல்லாரும் இங்க தான் இருக்காங்க ஒருத்தரும் பச்சைத் தண்ணி கூட குடிக்கலை சார்” என்றார்.

ஆந்திரத்திலிருந்து விரட்டப்பட்ட கட்டிடத் தொழிலாளியின் துயரத்தை சுமப்பதற்கு தமிழ் தொழிலாளிகள் யாரும் கேட்டுக் கொள்ளாமலே இங்கே ஓடி வந்திருந்தார்கள். ஆனால் அவர்களை இனவெறி சார்ந்து பிரிப்பதற்கு துடிக்கும் இனவாதிகளுக்கு இந்த தொழிலாளி வர்க்க தோழமை ஒரு விசயமல்ல.

நாங்கள் சஞ்சீவ ரெட்டியிடம் திரும்பினோம் “அண்ணா எதாவது சாப்பிட குடிக்க வாங்கி வரவா?” என்றோம்.

“அய்யோ… மன சாப்பாடு… உயிரு… அன்னி லோப்பல்லே உந்தி பாபு…” என்று கதறியழத் துவங்கினார். அவரது துயரத்தை குறைக்க அந்த ஓட்டல் தொழிலாளி கொடுத்த நம்பிக்கையூட்டும் வார்த்தைகள், முயற்சிகள் எங்களிடம் இல்லையோ? சாவின் கோட்டைக்குள் முழு குடும்பத்தை பறிகொடுத்தவரிடம் சாப்பிடக் கேட்பது சரியல்லதான். என்றாலும் அவரது துயரத்தை பின் தொடரும் தோழமைகளில் போலிஸ்காரர், ஓட்டல் தொழிலாளி, கடைக்காரர்கள், குடியிருப்பு மக்கள், தோழர்கள் பலரும் உண்டு. இந்த சமூகக்கூட்டிணைவு சஞ்சீவ் ரெட்டியின் இழப்பை மீட்டு வராமல் போகலாம்: இருக்கும் வாழ்க்கைக்கு கொஞ்சம் நம்பிக்கை அளிக்குமா, அதுவும் அத்தனை நிச்சயமில்லை. ஒரு தனிமனிதனை தவிக்க விடும் இந்த சமூக அமைப்பிலிருந்து மீட்பு வழிகளுக்கு இடமெங்கே?

***************************************************

நேரம் இரவு பத்தைக் கடந்திருந்தது. தகரக் கூரையின் கீழ் ஒடுங்கி இருந்தவர்களின் அழுகுரல் மெல்ல மெல்ல தேய்ந்து உறைந்து போயிருந்தது. உணர்ச்சிகள் மரத்துப் போன நிலையில் உள்ளே மாட்டிக் கொண்டிருந்த தமது உறவினர்களின் பெயர்களை மாத்திரம் திரும்பத் திரும்ப உச்சரித்துக் கொண்டிருந்தனர். சிலர் தளர்ந்து போய் சரிந்திருந்தனர். யாருக்கும் எந்த தகவலும் தெரியவில்லை.

மீட்கப்பட்ட பிணங்களை ராமச்சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியானது. மருத்துவமனை நிலவரத்தை அறியச் சென்ற எமது தோழர் அங்கே எந்த அனக்கமும் இல்லை என்றார்.

அங்கே நிலவிய சூழலை எப்படி விவரிப்பது என்றே புரியவில்லை. அந்த மக்களுக்கு மொழி தெரியாது என்பதோடு இது போன்ற சந்தர்ப்பங்களில் யாரிடம் போய் என்ன கேட்பது என்கிற விவரங்களும் தெரியவில்லை. அதிகாரிகளும் மக்களை அண்டவிடாமல் தடுப்பது எப்படி என்பதைக் குறித்து மட்டுமே கவலை கொண்டவர்களாக நடந்து கொண்டனர். இவர்களிடம் தகவல் தெரிவிக்க எந்த ஏற்பாடுகளும் செய்யப்படவில்லை. எதிர்பட்ட அதிகாரிகளிடம் விசாரித்தால் அவர்களுக்கும் எந்த விவரமும் தெரியவில்லை. அதற்குள், இத்தனை பிணங்கள் வந்தது அத்தனை பிணங்களைக் கண்டு பிடித்து விட்டார்கள் என்பது போன்ற செவிவழி வதந்திகள் அவ்வப் போது பரவிக் கொண்டிருந்தன.

கதறி அழும் கட்டிடத் தொழிலாளி
கதறி அழும் கட்டிடத் தொழிலாளி

நமக்குப் பிரியமானவர்கள் மரணத்தைத் தழுவி நம்மை விட்டுப் பிரிந்து செல்லும் தருணங்கள் ஒன்றும் புதிதல்ல. ஆனால், தங்கள் ரத்த சொந்தங்களின் நிலை என்னவானது என்று கூட தெரியாமல் என்ன செய்யதென்றும் யாரிடம் கேட்பதென்றும் தெரியாமல் கையறு நிலையில் அல்லாடிக் கொண்டிந்த அந்த மக்களின் பரிதவிப்பு இதயத்தைப் பிசைவதாக இருந்தது.

திடீர் திடீரென்று ஆம்புலன்ஸ் வேன்கள் காதை கிழிக்கும் சப்தத்தோடு விரைந்தன. ஒவ்வொரு முறை ஆம்புலன்சுகள் விரையும் போதும், தகரக் கூரையின் கீழ் இருந்தவர்களிடம் இருந்து பெரும் குரலில் ஒப்பாரிச் சத்தம் வீறிட்டது. உள்ளே மாட்டியிருந்தவர்களின் செல்போன் எண்களை வெளியே இருந்தவர்கள் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டே இருந்தனர். அந்த அழைப்புகள் எல்லாம் எதிமுனையில் பதிலின்றி அணைந்து போய்க் கொண்டேயிருந்தன.

சிலர் அழுத களைப்பாலும் பசியாலும் சுருண்டு விட்டனர். நாங்கள் அருகாமையில் காவல் துறை அமைத்திருந்த தற்காலிக கட்டுப்பாட்டு அறையில், அறிவிப்புகள் செய்து கொண்டிருந்த அதிகாரியை அணுகினோம்.

“சார், இவங்க ஏதும் சாப்பிடலை. பக்கத்தில கடைகளும் இல்லை. நீங்க கொஞ்ச நேரத்துக்கு முன்னே சாப்பாட்டு பார்சல் வந்திருக்குன்னு அறிவிப்பு வெளியிட்டீங்களே, இவங்களுக்கு ஏதாவது ஏற்பாடு செய்ய முடியுமா” என்று கேட்டோம்.

”ஹல்லோ.. யாரு நீ. இங்கே என்ன பண்ணிகிட்டு இருக்கே? அந்த பார்சல் எல்லாம் இங்கே ட்யூட்டியில் இருக்கிறவங்களுக்கு வந்தது. உனக்கு அக்கறைன்னா நீயே எதாவது பார்த்து செய்துக்கோ” என்று விரைப்புக் காட்டினார். இதுதான் கட்டுப்பாட்டு அறையின் ‘கருணை’ என்றால் சஞ்சீவி ரெட்டிகள் இன்னும் பல நாட்கள் அழவேண்டியிருக்கும்; அழுவார்கள்.

காவல்துறையின் ‘கருணை’ அறை சூட்டை சகிக்காமல் வெளியேறிய போது இந்த சமூகத்தை என்றாவது கட்டுப்படுத்தக் கூடிய மக்கள் தமது வேலைகளை யாரும் சொல்லாமலே செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். அக்கம் பக்கதிலிருந்த உள்ளூர்வாசிகள் சிலர் ரொட்டிகள் கொண்டு வந்தனர். தொழிலாளர்களில் சிலரே தங்களுக்குள் இருந்த பணத்தை சேகரித்து பழச்சாறு வாங்கி வந்திருந்தனர்.

தொழிலாளர்கள் சிலர் தங்களுக்குள் ஒழுங்குபடுத்திக் கொண்டு நிலவரத்தை எதிர் கொள்ளும் தயாரிப்பில் இருந்தனர். அதில் சிறீகாகுளத்தை அடுத்த மோதுகவலசா என்கிற கிராமத்தைச் சேர்ந்த திலீஷ்வர் ஓரளவு தமிழ் பேசினார். திலீஷ்வர் 26 வயதான இளைஞர். கடந்த பதினோரு ஆண்டுகளாக சென்னையில் தான் இருக்கிறார். சென்னையைச் சுற்றி வெவ்வேறு இடங்களில் கட்டுமான கூலியாக வேலை பார்த்து விட்டு தற்போது நொறுங்கிய கட்டிடத்திற்கு அருகில் உள்ள மற்றொரு கட்டிடத்தில் வேலை பார்த்து வந்திருக்கிறார்.

சம்பவம் நடந்த சமயத்தில் அருகாமை கட்டிடத்தின் உள்ளே திலீஷ்வர் வேலை பார்த்துக் கொண்டிருந்ததாகவும், அப்போது கூலி வாங்குவதற்காக நொறுங்கிப் போன கட்டிடத்தின் தரைத்தளத்திற்கு தனது அண்ணனும் அண்ணியும் சென்றார்கள் என்றார். கட்டிடம் இடிந்தது குறித்து அவரிடம் கேட்டோம்.

”அப்போ நாலரைக்கு மேல இருக்கும் சார். திடீர்னு இரும்பு உடையறா மாதிரி சத்தம் கேட்டது. நாங்க நின்ன கட்டிடம் லேசா அதிர்ந்த மாதிரி இருந்தது. வெளியே எட்டிப் பார்த்தோம். பக்கத்தில எங்க அண்ணனும் அண்ணியும் இருந்த கட்டிடம் அப்படியே கீழே இறங்கி நொறுங்கிப் போச்சு சார். இப்ப அண்ணும் அண்ணியும் அதுக்கு கீழ தான் மாட்டிக் கிடக்கிறாங்க சார். யார்ட்ட எல்லாமோ கேட்டுப் பாத்தேன் சார் ஒன்னும் சொல்ல மாட்டேங்குறாங்க” என்றார்.

கட்டிடத்தின் உள்ளே எத்தனை பேர் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேட்டோம்.

“கூலி வாங்க போனவங்க மட்டும் எப்படியும் நூறு பேருக்கு மேல இருக்கணும் சார். அது தவிற சிலர் அதே கட்டிடத்தில் வேலை பார்த்துகிட்டும் இருந்தாங்க சார்”

“இந்த கட்டிடங்களில் வேலை செய்கிறவர்கள் எல்லாம் எங்கே தங்குகிறீர்கள்?”

“இதோ இப்ப இடிஞ்சி போயிருக்கே.. இதே கட்டிடத்தோட கிரவுண்ட் புளோரில தார்பாய் கட்டி அங்கேயே தான் தங்கியிருப்போம். ரெண்டு கட்டிடத்திலயும் சேர்த்து முன்னூறு பேருக்கு மேல வேலை செய்யறோம் சார். சாயந்திரம் வந்த மழை நைட்டு வந்திருந்தா மொத்தமா எல்லோரும் குளோஸ் ஆயிருப்போம் சார்” என்றார்.

திலீஷ்வருக்கு ஊரில் கொஞ்சம் நிலம் இருந்தது. பக்கத்தில் பெரிய அணைக்கட்டு ஒன்றைக் கட்டுவதற்காக அவரது விவசாய நிலத்தை பறித்திருக்கிறார்கள். அந்த கிராமத்தில் பெரும்பாலானோர் விவசாயத்தை மட்டும் நம்பியே வாழ்ந்தவர்கள். எல்லா விவசாய நிலமும் பறிபோன பின், மக்கள் அங்கே வாழ வழியின்றி நகரங்களுக்கு அத்துக் கூலிகளாய் போய் விட்டனர். அந்த ஒரு கிராமத்தில் இருந்து மட்டும் சுமார் 40 பேர் இந்தக் கட்டிடத்தில் கூலி வேலைக்காக வந்து அங்கேயே தங்கியிருந்துள்ளனர்.

***************************************************

நேரம் நள்ளிரவைக் கடந்திருந்தது. மக்கள் சாரி சாரியாக வேடிக்கை பார்க்க வந்து குவிந்தவாறே இருந்தனர்.

நாங்கள் எப்படியும் கட்டிடத்தை அடையும் வழியைக் கண்டுபிடிக்க சந்து பொந்துகளில் நுழைந்து அதன் பின்பகுதியை அடைந்தோம். இங்கும் வழியில்லை. இடிந்து விழுந்த இடத்தை காவல்துறை சுற்றி வளைத்திருந்தது. அவர்கள் அறியாமல் உள்ளே நுழைவது சாத்தியமில்லை.

கட்டிடத்தின் பின்பகுதியில் சற்றுத் தொலைவாக இருந்த குடியிருப்புப் பகுதியில் ஆங்காங்கே மக்கள் கொத்துக் கொத்தாகத் திரண்டிருந்தனர். எல்லோரின் முகங்களில் மரண பீதி. நொறுங்கிய கட்டிடமானது ஒரே கட்டுமான அமைப்பின் இரட்டை கோபுரத்தில் ஒன்று. அதற்கு மிக நெருக்கமாக இன்னொரு பதினோரு அடுக்கு கட்டிடம் நின்று கொண்டிருக்கிறது. மழையால் நெகிழ்ந்து போன மண்ணில் இந்தக் கட்டிடமும் இரண்டு அடி ஆழத்துக்கு உள்ளே இறங்கி விட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். எந்த நேரமும் இரண்டாவது கட்டிடம் விழலாம், விழுந்தால் தங்களது வீடுகளும் நொறுங்கிப் போகலாம் என்கிற அச்சம் அவர்களிடம் நிலவியது.

திலீஷ்வர்
திலீஷ்வர்

“இந்த இடமே ஒரு காலத்துல கழனி சார். போரூர் ஏரி இருக்கில்லே… அதோட தொடர்ச்சியா இதே இடத்துல ஒரு ரெட்டேரி இருந்தது, தாமரைக்குளம்னு சொல்லுங்க. பின்னே அதுக்கு தண்ணி வர்ற வழியெல்லாம் அடைஞ்சி கொஞ்சம் கொஞ்சமா ஏரி புறம்போக்கு நிலமாச்சு. அதுக்கு பக்கத்துல அம்பேத்கர் நகர்னு ஒரு சின்ன சேரி இருந்தது. அப்புறம் சில வருசத்துக்கு முன்னே அதை ஆக்கிரமிப்புன்னு சொல்லி விரட்டி அடிச்சாங்க. அதுக்கு பக்கத்திலேயேதான் இந்த இடம். இதுக்கெல்லாம் எங்கே யார்கிட்டே அனுமதி வாங்கினான், எதுவுமே தெரியலை சார். ஆனா, பெரியளவுல அரசியல் செல்வாக்கு உள்ளவங்க மாதிரி தெரியுது. ஏரி மண்ணுக்கு மேலே எப்படி பதினோரு அடுக்கு மாடி கட்டினான்..” நடுத்தர வயது மனிதர் ஒருவர் படபடத்தார்.

ஐ.டி நிறுவனத்தைச் சேர்ந்த குரு பிரசாத் அந்த கூட்டத்தில் இருந்தார். வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் குருபிரசாத் தனது குடும்பத்தோடு கிண்டியில் தங்கி இருக்கிறார்.

“ஆறு மணிக்கு வாட்ஸப்லே ப்ரெண்டு மெசேஜ் பண்ணான் பாஸ். ரியலி ஷாக்ட் யு நோ. இதே அபார்ட்மெண்ட்லே தான் ப்ளாட் வாங்க ப்ளான் இருந்தது. கார்பெட் ஏரியா தௌசண்ட் ப்ளஸ் ஸ்கொயர் பீட் சொன்னான். நானும் வொய்பும் வந்து கூட பார்த்தோம். இண்டீரியர் எல்லாம் ரிச்சா இருந்தது. பில்டரோட ஆஃபர் கூட அட்ராக்டிவா தான் இருந்தது. பட், ஏரியா கொஞ்சம் ரிமோட்.. ட்ராபிக்.. இன்னும் பல ரீசனால அந்த ப்ளான் ட்ராப் ஆகிட்டு. தேங்க் காட். ஒருவேளை வாங்கி குடி வந்த பின்னே நடந்திருந்தா… மை குட்நெஸ், நெனச்சே பாக்க முடியலை” கையிலிருந்த சிகரெட்டை உறிஞ்சி விட்டுத் தூர எறிந்தார். கண்ணெதிர் துயரத்தை விட சொந்த வீடும், பலியாக இருந்த வாழ்க்கை கனவும் காப்பாற்றப்பட்டது அவருக்கு ஒரு ஆசுவாசத்தை தந்திருந்தது.

குருபிரசாத்தை கவர்ந்த ‘ரிச் இண்டீரியர்’, ‘ஆஃபர்’ (நொறுங்கிய கட்டிடத்தின் விளம்பர வீடியோ)

“ஆர் யூ ப்ரம் ப்ரெஸ்??”

”பிரிண்ட் இல்லை. இணைய பத்திரிகை. வினவு டாட் காம் அப்படின்னு ஒரு தளம்”

“ஐ சீ… இதெல்லாம் நல்லா எக்ஸ்போஸ் பண்ணுங்க பாஸ். ஹ்யூமன் லைஃபுக்கு ஒரு வேல்யுவே இல்லை பாத்தீங்களா. இனிமே அபார்ட்மெண்ட் ப்ளாட்னாலே அவனவன் தெறிச்சி ஓடிடுவான். யாருக்கு நம்பிக்கை வரும் சொல்லுங்க. இதுல இன்வெஸ்ட் பண்ணிட்டு உயிரைக் கையில பிடிச்சிட்டு இருக்கிறத விட தனி வீடு பெஸ்ட். ஆல்சோ… நம்ப டமில் நாட் கவர்மெண்ட் சுத்த யூஸ்லெஸ் பாஸ். இவ்ளோ நடந்திருக்கு.. பாருங்களேன் குச்சிய வச்சி ட்ராபிக்கை டைவர்ட் பண்ணிட்டு இருக்கான் நம்ப பொலீஸ் டிபார்ட்மெண்ட். இதே வேற நாடா இருந்தா இண்டர்நேஷனல் லெவல்லே இஷ்யூ பெரிசாயிருக்காது?” அடுத்த சிகரெட்டை உதட்டில் பொருத்திக் கொண்டு நம்மிடம் பதில் எதிர்பார்த்து முகம் நோக்கினார். பதில் இல்லாததை உணர்ந்து, தானே தொடர்ந்தார்..

”இல்ல… நான் ஏன் சொல்றேன்னா.. நாளைக்கு பாருங்க பி.எம் வர்றாரு. இங்கே இத்தனை போலீசை குவிச்சி வைச்சிருக்காங்களே அப்ப அவரோட விசிட்டுக்கு பொலீஸ் ஃபோர்ஸ் கம்மி ஆய்டாதா? அதுக்கு சொல்ல வந்தேன்…”

கட்டிடம் கட்டிய தொழிலாளிகள் உயிரோடு சமாதியாக்கப்பட்டதோ, அவர்களது உறவினர்கள் அழுவதற்கு கூட ஆற்றலற்று இருப்பதோ எதுவும் அவரது இதயத்தை தீண்டக் கூட இல்லை. அமெரிக்காவில் வாழ முடியாமல் இந்தியா எனும் சுடுகாட்டில் சிக்கிக் கொண்ட அந்த கனவான், மோடிக்காக மட்டும் கவலைப்பட்டார்.

அந்தச் சூழலைக் கவ்வியிருந்த மரணத்தின் வாசம் அளித்த துயரத்திற்கு மத்தியில் ஒருவர் இப்படியும் பேசுவாரா என்று சிலருக்குத் தோன்றலாம். இங்கே குரு பிரசாத் பேசியதைத் தவிர எதையும் நாங்கள் சேர்க்கவில்லை. மேலும், தெலுங்கு பேசும் தொழிலாளிகள் பலர் உயிரோடு சமாதியாக்கப்பட்டு, உறவினர்கள் செய்வதறியாது கதறிக் கொண்டிருக்கும் பொழுது, அதே தெலுகு தேச மண்ணில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாயும் ராக்கெட்டை பார்க்க மோடி சென்றிருக்கிறார். இந்திய வல்லரசு கவுரவத்தின் பின்னே இத்தகைய நரபலிகள் தேவையாயிருப்பது இந்துத்துவத்திற்கு முரண்பாடல்ல.

குருபிரசாத்தின் வர்க்க கவலையின் வெளிப்பாடு அளித்த அருவெறுப்பு குமட்டிக் கொண்டு வந்தது. தலைக்கேறிய ஆத்திரத்தால் ஏதும் ரசாபாசங்கள் விளைந்து விடாமல் தவிர்க்க நாங்கள் அந்த இடத்திலிருந்து நகர்ந்தோம்.

தமிழ் செல்வன்
கட்டிட இடிபாடுகளில் சிக்கி வெளியில் வந்த மதுரை திடீர் நகரைச் சேர்ந்த தமிழ் செல்வன்

பெருங்கொலை ஒன்றின் கோரத்தாண்டவம் நடந்து முடிந்து விட்டது. நூற்றி சொச்சம் உயிர்களின் நிலை என்னவென்பது இன்னும் தெரியவில்லை. முதலாளித்துவ பத்திரிகைகள் அடுத்த சில நாட்களுக்கு இழவையே சென்டிமென்ட் சென்சேஷனாக கொண்டாடிக் கல்லா கட்டுவார்கள். நடுப்பக்க கவர்ச்சி உடல்களின் பின்னேயிருந்து கொண்டே வாசன்கள் மற்றும் வரதராஜன்களின் கருணை தலைநீட்டும்.

கட்டிடம் கட்டிய நிறுவனம் குறித்த ‘இரகசியத்’ தகவல்களை சுவாமி வம்பானந்தா காரசாரமாக கடைவிரிப்பார். அந்த முதலாளி எந்தெந்த நட்சத்திர விடுதிகளில் கூத்தடித்தான் என்கிற விவரங்களை கழுகார் பீராய்ந்து வாசகர்களிடம் விற்றுத் தீர்ப்பார். இந்த சில நாட்களுக்கு ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் பம்மிப் பதுங்கிக் கொண்டு பச்சாதாபங்களுக்கு வழிவிடும்.

கட்டிடத்திற்கு சிஎம்டிஏ அனுமதி கொடுத்ததில் முறைகேடில்லை என்ற செய்தி ஏற்கனவே வெளியாகிவிட்டது. கட்டிடம் கட்டுவதற்கான பொருட்கள் குறித்து மட்டும் இனி விசாரிப்பார்களாம். இடியினால்தான் கட்டிடம் இடிந்து விழுந்தது, எங்கள் தரப்பில் தவறில்லை என்று முதலாளிகள் தெரிவித்திருக்கின்றனர். இதை வானியல் ஆராய்ச்சி மையமே காறித் துப்பியிருக்கிறது. போலிசார் போட்டிருக்கும் வழக்குகளின் படி குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் கட்டிட முதலாளிகளுக்கு இரண்டு ஆண்டுகள்தான் சிறை.

எல்லாம் பெயரளவிற்கான வழக்குகள்தான். வழக்கின் விவரங்களை ஒரு சில நாட்கள் அல்லது வாரங்கள் வரைதான் ஊடகங்கள் பின் தொடர்வார்கள்; பின் மறப்பார்கள்; மறக்கடிப்பார்கள். மீண்டும் ஒரு பேரிடர் காலத்தில் அச்சடிப்பதற்காக எஞ்சிய ’அனுதாபங்களை’ இரும்புப் பெட்டிக்குள் வைத்து பூட்டி வைப்பார்கள். ஊடகங்களால் பேணி வளர்க்கப்படும் மக்களின் அரசியலற்ற அனுதாபங்களும் மெல்ல மெல்ல வடிந்து பின் நின்று போகும். மீண்டும் ஒரு சுபதினத்திலிருந்து ரியல் எஸ்டேட் விளம்பரங்கள் ‘தாம்பரத்திற்கு மிக அருகே இருபதே லட்சத்தில் 2பி.எச்.கே ப்ளாட்டுகள்’ கிடைப்பதை தம்பட்டம் போடும்.

இதற்கிடையே பெயருக்குப் போடப்படும் வலுவற்ற வழக்குகளில் இருந்து அதிகாரிகளும் முதலாளியும் வெளியே வந்து விடுவார்கள். நீதி மன்றத்தில் கண்கள் இரண்டும் கட்டப்பட்ட அந்தப் பேதைப் பெண் ஏந்தியிருக்கும் தராசின் ஒரு தட்டில் அச்சடித்த காந்திக் காகிதப் பொதிகள் ஏற்றப்பட்டு அது அளிக்கும் விசையில் அதன் எதிர் தட்டில் கிடத்தப்படிருந்த சிறீகாகுளத்தைச் சேர்ந்த தெலுங்கு பேசிய பிணங்கள் விசிறியடிக்கப்படும். டவாலியின் கால்களுக்குக் கீழே இருக்கும் குப்பைத் தொட்டிக்குள் கிடக்கும் கசங்கிய கேஸ் கட்டுகளிடையே அந்தப் பிணங்கள் வீழ்ந்து பின் கரைந்து போகும்.

ஆனால், இந்தக் கொலைக் குற்றத்தை செய்யத் தூண்டிய ஒரு பெரும் கும்பல் எந்த சட்ட ரீதியான அல்லது அறவியல் ரீதியிலான அழுத்தங்களுக்கும் ஆட்படவே மாட்டார்கள். அவர்கள் தான் குருபிரசாத் போன்ற உயர்நடுத்தர வர்க்க அற்பர்கள். ஊருக்கு வெளியே இருபத்தி சொச்சம் லட்சங்களில் ‘சீப்பாக’ ப்ளாட்டுகளை வேட்டையாடும் இந்த வர்க்கம் தான் கொலைகார முதலாளிகளின் லாப வெறிக்கான அடிப்படையாக அமைகிறார்கள்.

இவர்கள் போன்றவர்களை திருப்தி படுத்தும் வகையில் தான் தரமற்ற நிலத்தில், தரமற்ற கட்டிடங்களை சல்லிசான விலைக்கு கட்டி அப்பாவித் தொழிலாளிகளின் உயிர்களை பலி வாங்குகிறார்கள். இந்தக் கட்டுரையை எழுதும் வேளையில் இந்த மவுலிவாக்கத்தில் இடிந்த கட்டிடத்தின் கீழ் ஒருவேளை உயிருடன் இருக்கும் ஏதாவதொரு உடலில் உயிரைத் தக்கவைப்பதற்கான இறுதிகட்டப் போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கலாம் – அல்லது அது இந்தக் கணத்தில் நின்றும் போயிருக்கலாம். ஆனால், நாளும் நாளும் தமிழகமெங்கும் கட்டுமானப் பணிகளில் போதிய பாதுகாப்பு வசதிகள் ஏதுமின்றி விபத்துகளை எதிர் கொண்டு உயிர்களைத் தொலைக்கும் சம்பவங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.

உலகமயமாக்கத்தின் பெயரால் செயற்கையாக பெருக்கப்படும் நகரமயமாக்கம் பொருளாதாரம் எனும் அடிப்படையிலும் நமது மக்களுக்கு பெருங்கேடு, வாழ்வாதாரம் எனும் நோக்கிலும் சீர்கேடு. இறுதியில் பெருநகரங்களின் சூதாட்ட வாழ்க்கையின் தேவைகளுக்காக கட்டப்படும் இந்த கட்டிடங்கள் இன்று மழையில் விழுந்தது போல என்றாவது ஒரு நாள் பொருளாதார நெருக்கடியில் கைவிடப்படும் அல்லது விலை இறங்கும்.

அதுவரை முகமற்ற அந்தத் தொழிலாளிகளின் கண்ணீர் வடிந்து கொண்டே இருக்கும். அதனால் என்ன? ஆறுதலாய் வரும் ஒவ்வொரு வார்த்தைக்கும் குமுறி அழும் சஞ்சீவ ரெட்டியின் கண்கள் உங்களை சில கணங்களேனும் தொந்தரவுக்குள்ளாக்கியிருந்தால், மன்னித்துக் கொள்ளுங்கள். பார்த்த மாத்திரத்தில் எழும் கருணைக்கு ஆயுள் குறைவு என்பதால் உங்களது வார இறுதி கேளிக்கைகளுக்கு எந்த தடையுமில்லை. உலகக் கோப்பையா, பீர் பார்ட்டியா, வெள்ளிக் கிழமை சினிமா ஜமாவா…….குறையொன்றுமில்லை கொண்டாடுங்கள்!

– வினவு செய்தியாளர் குழு

    • nidhishraja,

      விதியல்ல, நம் கண் முன்னால் நடந்து கொண்டிருக்கும் கொடுமைகள்.

      அந்த கொடுமைகளைக் கண்டு கையறுநிலையில் புலம்பி,மனம் வெதும்பி, இதயம் வெடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விதி வலியது. மறுபுறம் அவ்விதிகளுக்கு எதிராக இந்த கொடுமைகளை உரமாகக் கொள்வதன் மூலமாக பாட்டாளிவர்க்கம் முன்னெப்போதுமில்லாத வகையில்,வழியில் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியும்.

      இதற்க்கான மூலக் காரணம் யாதென்று கண்டறிந்த வகையில், அதற்கான சித்தாந்தமும் கைவசம் உள்ள நிலையில் கம்யூனிஸ்ட்கள் மட்டுமே அவர்களை , சமூக மாற்றத்தை நோக்கி முன்னெடுத்து செல்ல முடியும்.

  1. தாங்கொண்ணாத் துயரம், சொல்லொண்ணாத் சோகம், அதிகார வர்க்கத்தை நோக்கி எழுதவியலா அளவில் எழும் கோபம் போன்ற ரணகணங்களுக்குமிடையில் குரு பிரசாத் போன்ற அற்பர்களில் அற்பமான பெசுகளை கேட்கும் அவலநிலையை எண்ணி கையறு நிலையே ஏற்படுகிறது.

    இதயம் மரத்துவிட்ட நிலையில் தான் வாழவேண்டிய சூழலில் இருக்கிறோம்.

  2. // இந்தக் கொலைக் குற்றத்தை செய்யத் தூண்டிய ஒரு பெரும் கும்பல் எந்த சட்ட ரீதியான அல்லது அறவியல் ரீதியிலான அழுத்தங்களுக்கும் ஆட்படவே மாட்டார்கள். அவர்கள் தான் குருபிரசாத் போன்ற உயர்நடுத்தர வர்க்க அற்பர்கள். ஊருக்கு வெளியே இருபத்தி சொச்சம் லட்சங்களில் ‘சீப்பாக’ ப்ளாட்டுகளை வேட்டையாடும் இந்த வர்க்கம் தான் கொலைகார முதலாளிகளின் லாப வெறிக்கான அடிப்படையாக அமைகிறார்கள். இவர்கள் போன்றவர்களை திருப்தி படுத்தும் வகையில் தான் தரமற்ற நிலத்தில், தரமற்ற கட்டிடங்களை சல்லிசான விலைக்கு கட்டி அப்பாவித் தொழிலாளிகளின் உயிர்களை பலி வாங்குகிறார்கள். //

  3. ஆம், நுகர்வு கலாச்சாரத்துக்கு அடிமைகளாகியிருக்கும் அந்த கணவான்களின் சுயநலம் நம்மில் கோவத்தை ஏற்படுததவில்லை எனில், அது அந்த இறந்துபட்ட மக்களுக்கு நாம் செய்யும் துரோகமாகும். தேவைக்கு மேலாக தின்று தெறித்து பின் அதன் பெரும்பகுதியை மலமாக கழிக்கும் இந்த கழிசடை கனவான்களின் பெயரால் தான் வளர்ச்சி என்று அதிகாரவர்க்கமும் ஆளும் வர்க்கமும் தன்னுடைய 56 இன்ச் மார்பை தட்டுகிறது .

    தேவைக்கு மீறிய இந்த உற்பத்தி(வளர்ச்சி) தேவைக்கு மீறிய இழப்பை(புற்றுநோய்) ஏற்படுத்துகிறது . ஒருபுறம் அதிகபடியான பொருளுற்பத்தியும்(இங்கே கட்டடம்) மறுபுறம் அதை செரிப்பதற்கான வாய்ப்பை ஒரு சிறிய கூட்டத்திற்கு மட்டுமே வழங்குவதன் மூலம் இந்த அரசமைப்பு முன்பெப்போதும் இல்லாத அளவு சிதைந்து நொறுங்குகிறது.
    அந்த சிதறல்களை ஒன்று விடாமல் பொருக்கி எடுத்துப் பாடைக் கட்டுவதன் மூலம் மட்டுமே இது போன்ற கொடுமைகள் நிகழாமல் தடுக்க முடியும்.
    இறந்துபட்ட நமது நேசத்திற்குரிய அந்த ஏழைக் கட்டிடத் தொழிலாளிகளுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
    .

  4. இப்படி எதத்தனை நிகழ்வுகல் நடந்தாலும்,நம் தேசம் மார போவது இல்லை, அதிகார வர்கம் அதிகம் ஆகி கொன்டேதான் இருக்கும்

  5. கைக்கூலித்தனமாக எழுதுவதை வினவு தவிர்க்க வேண்டும்… எல்லோருக்கும் மன பாரத்தை தரக்கூடிய சம்பவம் இது….இதையும் கேவலமாக ஜ.டி கம்பெனி, மோடி, வீக் எண்டு பார்ட்டி, பீர்… அப்படி இப்படின்னு எழுதுவது விபசாரித்தனமாக உள்ளது…. அவனவன் இஷ்டப்பட்டு தான் இந்த வேலைக்கு வரான்….. பில்டிங் விழுந்தா அதுக்கு தப்பு செய்த எல்லோரையும் தண்டிக்கலாமே தவிர, தேவையில்லாத எழுத்தெல்லாம் ஏன்??? மும்பை தாஜ் ஓட்டலில் தீவீரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோதி இறந்தது எல்லாம் பணக்காரன்னும், மேல்குடி மக்களும் தான்..அதில் யாரும் “விவசாயம் பொய்த்து” ஊரு விட்டு ஊரு வந்த எவனும் சாகவில்லை…… பாதிப்பு என்பது எல்லா இடங்களிலும், எல்லா மக்களையும் தாக்கு, அப்பொழுது நம்மால் முடிந்த உதவியை செய்வதுதான் மனிதத்தன்மை…அதைவிட்டு இப்படி நரவலை தின்னும் ஜன்மங்களை போல இதுலேயும் ஆதாயம் தேடும் வினவை என்ன சொல்வது??? வெட் கமாயில்லை????????

  6. விபத்தில் மரணக் குழியில் கிடப்பவர்களை “ச்சே பாவம்பா” என நாய்குட்டிக்கு காட்டுவதற்கொப்பான கருணையையும், அந்த குடியிருப்பு முழுமை பெற்ற பின் இந்த விபத்து நடந்திருக்குமானால் என்று ஊகத்தின் அடிப்படையில் ஒரு திகிலையும் குரு பிரசாத் போன்ற பல்வேறு மனிதர்களும் ஊடகங்களும் வெளிப்படையாக தெரிவிக்கின்றனர் . அவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அவ்வாறு திகிலடைகின்றனர் என கருத முடியவில்லை.ஏன் அவர்கள் தரும் எண்ணிக்கையின் படியே பார்த்தாலும் 150 பேரின் உயிர் லேசானதா என்ன?

  7. அறிவு கெட்ட இந்தியனே ஆதாயம் தேடும் வினவு போல் எனக்கு தெரியவில்லை ஆதங்கப்படும் வினவு போல் தெரிகிறது. நீ கோபப்படுவதை பார்த்தால் எந்த வர்க்கத்துக்கு கோவம் வர வேண்டுமோ அந்த குட்டி முதலாளித்துவ வர்க்கத்துக்கு சரியாகவே வந்திருக்கிறது. அந்த பேச்சுக்கள் உன்னை குத்துவது போல் அமைந்தது தான் உன் சினத்துக்கு காரணமோ….? நகரமயமாக்கலின் விளைவு தானே இது அவர்கள் ஒன்றும் தவறாக சொல்லிவிட வில்லையே…! சென்னையை சுற்றி இருந்த ஏராளமான ஏரிகளை பிளாட்டுகளாக்கி அதை விற்று இப்பிடி குட்டி முதலாளிகளுக்கு பிளாட் பிளாட்டாக கட்டி விற்கும் வரை கணக்கிட்டால் ஏராளமான சமூக விரோதிகள் கணக்கில் வருவார்கள். அரசு அதிகாரிகளில் துவங்கி ரியல் எஸ்டேட் மாஃபியாக்கள் வரை. சென்னையிலேயே கட்டிடத் தொழிலாளிகள் இல்லையா பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் அதிலும் விவசாயம் பொய்த்து போய் வந்தவர்கள் திக்கற்று வந்தவர்கள் அவர்களுடையதுதான் உண்மையான சோகம் இடிந்து விழுந்ததில் கட்டிட முதலாளிக்கும் தான் சோகம் இருக்கிறது ஆனால் சரியான பக்கம் எது என கூறுவதில் எந்தத் தவறும் இருப்பதாக தெரியவில்லை

    //பில்டிங் விழுந்தா அதுக்கு தப்பு செய்த எல்லோரையும் தண்டிக்கலாமே தவிர//

    தப்பு செஞ்சது யார் யார்னு சொல்லு பார்ப்போம்.

    //மும்பை தாஜ் ஓட்டலில் தீவீரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோதி இறந்தது எல்லாம் பணக்காரன்னும், மேல்குடி மக்களும் தான்//

    வாரே வா… என்ன ஒரு ஒப்பீடு…. இது வரை எத்தனை துப்பாக்கி சூடு நடந்திருக்கிறது பணக்காரர்களுக்கு. ஏழை மக்களுக்கு எத்தனை வித வித மான சாவு என கணக்கிலேடுப்போமா…. இனப்படுகொலை மதப்படுகொலை சாதிப்படுகொலை உலகமயமாக்கலினால் விவசாயி தற்கொலை என கணக்கிலேடுப்போமா சொல்லு….?

    //நரகல்,விபசாரித்தனம்,ஜென்மம்//

    என்ன ஒரு உத்தமமான பேச்சு நீ….. நீ மனிதத்தன்மையை பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

  8. இந்தியன்

    // மும்பை தாஜ் ஓட்டலில் தீவீரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தியபோதி இறந்தது எல்லாம் பணக்காரன்னும், மேல்குடி மக்களும் தான்..அதில் யாரும் “விவசாயம் பொய்த்து” ஊரு விட்டு ஊரு வந்த எவனும் சாகவில்லை…… பாதிப்பு என்பது எல்லா இடங்களிலும், எல்லா மக்களையும் தாக்கு, அப்பொழுது நம்மால் முடிந்த உதவியை செய்வதுதான் மனிதத்தன்மை //

    பேஷ் உங்களுடைய மனிததன்மை என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது.

    அதுவும் உங்க ஓப்பீடு இருக்குதே அருவருப்பாக இருக்கிறது.

    கொஞ்சமாவது புத்தியென்று ஒன்று இருந்தால் ஏன் நாம இப்படி சிந்திக்கிறோம் யோசிச்சு பாருங்க.

  9. “இப்போது தீர்ந்து போன அழுகை திடீரென்று பெருக்கெடுத்து குமுறலோடு கொட்டத் துவங்கியிருந்தது. இந்த வெள்ளப் பெருக்கில் நாங்களும் அடித்துச் செல்லப்பட்டோம். ஒரு மனிதனின் நிர்க்கதியான அவலத்தை நேருக்கு நேர் சந்திக்கின்ற தருணங்களில்…”

    கட்டுரையை படிக்கும் போதே நேரில் பார்க்காத நாங்களும்தான் வெள்ளப் பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டோம்.

  10. மிகவும் வருத்தத்திற்கு உரிய செய்தி . நீதி கிடைக்காது எனபது நிதர்சனம் .

    விகடன் அரசாங்கத்தின் தவறை மறைத்து கட்டுரை வெளியிட்டு இருக்கிறது. குறைந்த விலையில் வீடு வேண்டும் எனபது மோகமாம் .

    குறைந்த விலை எனபது தவறு அந்த விலை கொடுக்கும் நிலையில் தான் பெர்ம்பான்மையான மக்கள் இருக்கிறார்கள் . மக்களிடம் வரி வாங்கும் அரசு அதற்கு உரிய சேவையை தரவேண்டும் . மக்களே பொறியாளர் போல சோதித்து வாங்க வேண்டும் என்றால் அரசாங்கம் எதற்கு ?

  11. மதவாதிகள் எவ்வாறு எல்லா விசயங்களையும் மதத்தோடு சேர்த்தே பேசுகிறார்களோ, எழுதுகிறார்களோ, சிந்திக்கிறார்களோ அது போல நீங்களும் செய்கிறீர்கள்! இதை குறை என்று சொல்லமுடியாது…. காரணம் அவர்களுக்கு மதம் என்ற ஒரு அடையாளம் இருக்கிறது., நீங்கள் வினவு என்ற அடையாளத்தில் இருக்கிறீர்கள்! அவ்வொளவுதான்!

    ( விபத்துதான் என்றால் ஒன்றும் செய்யமுடியாது, அவர்களுக்காக வருந்துவதை தவிர., காரணம் கண்டு பிடித்தால் எதிராளிகளுக்கு கொஞ்சம் பணம் செலவாகும் அவ்வளவுதான்., இதனை நீங்களும் நானும் சேர்ந்துதான் உருவாக்கினோம்)

  12. இந்தியன் என்பவருக்கு “சரியாக சொன்னீர்” என ஒருவர் ஆதரவு தெரிவித்துள்ளார். அப்படியெனில் இதே கருத்துடன் நிறைய பேர் இருக்கிறார்கள் போலும். விமர்சனங்களுக்கு அஞ்சி வராமல் ஒளிந்துள்ளனர்.

    “உங்கள் பீர் பார்ட்டிக்கு தடையில்லை” என்ற தலைப்பு சரியா… என யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போதுதான் தெரிகிறது. மிகச்சரி என்று.
    //பார்த்த மாத்திரத்தில் எழும் கருணைக்கு ஆயுள் குறைவு என்பதால்//
    சரியான பொருத்தமான வாசகம்.

    • why you people think as if all IT people are going to weekend parties? I am regular devotee going to ashrams. we also pray for labourers. why you people think we celebrate on their sufferings? what a sadistic outlook?

      Uyir uyir dhaane…..idhula enna yezhainaa mattamaa nenapaalaa? paavam, avaa enaa pannuvaa? they are poor people earning a livelihood by hardwork. why you think we dont care for them? i may not go the site and help them because it is a physicall tiring task for me but my prayers and sympathy will be with them

      i am very fed up yaar.

  13. விமர்சனங்களுக்கு நன்றி…. இந்த விசயத்தில் இப்பொழுது செய்ய முடிவதும், எல்லோரும் செய்து கொண்டிருப்பதும் “உதவி” மட்டுமே… இதுலேயும் காசு பார்ப்பதும், ஆதாயம் தேடுவதும் பத்திரிக்கைகாரன் மட்டுமே….. இந்த கட்டிடம் ஏன் விழுந்தது என்பதை இங்கே மறுபதிப்பு வெளியிட்ட எந்த மாங்காவும் முடி செய்ய முடியாது… இதனை ஆய்வு செய்து அறிவியல் ஆய்வறிக்கை வெளியிட அரசு சாரா அமைப்பாக இருந்தாலும் 15 நாள் தேவைப்படும்… அதற்க்குள் வீரு கொண்டு கட்டுரை வெளியிட்டு ( பொய்யும் புரட்டுமாக) அதையும் உண்மை என்று நம்பி சின்னப் பசங்க சினப்பட்டு காகித புலிகளாக மாறி இருப்பது, வினவு எழுதிய கட்டுரையைவிட காமெடியாக உள்ளது….கட்டிடம் விழுந்ததுக்கு காரணம் முதலாலித்துவமா அல்லது முட்டாள்தனமா என்ப_____________தைத்தான் வினவும், இந்த சின்னப்ப்சங்களும் எல்லா விசயத்திலும் ( கூடங்குளம் முதல், ஈழம் வரை !!!) செய்து கொண்டிருக்கிறார்கள்….. மறுபதிப்பு எனும் துணுக்குகள் வரவேற்க்கப்

    • // இந்த விசயத்தில் இப்பொழுது செய்ய முடிவதும், எல்லோரும் செய்து கொண்டிருப்பதும் “உதவி” மட்டுமே//

      எதார்த்தத்திலிருந்து அணுகுறாராமா….? பிரச்சினைக்கான மூல வேரை பார்க்காமல் துண்டு துண்டாக பார்ப்பதும் அதிலிருந்தே மற்றவர்களை அணுகுவதும் தவறு.

      // இதுலேயும் காசு பார்ப்பதும், ஆதாயம் தேடுவதும் பத்திரிக்கைகாரன்//

      இதுல வினவு என்ன ஆதாயமோ காசோ பார்த்துச்சு என சற்று தெளிவுபடுத்தினால் நல்லது. சும்மா பத்திரிக்கை பத்திரிக்கை என எழுத்து வியாபாரிகளான ஜூவி நக்கீரன் போன்றே எண்ணிக்கொண்டு பேசக்கூடாது.

      // இதனை ஆய்வு செய்து அறிவியல் ஆய்வறிக்கை வெளியிட அரசு சாரா அமைப்பாக இருந்தாலும் 15 நாள் தேவைப்படும்//

      இந்த கட்டுரை எழுதுன ரெண்டே நாள்ல வினவு காசு பாக்குதுன்னு நீங்க ஆய்வு செஞ்சு சொல்லலியா…..? இது மட்டும் எப்பிடி.

      // சின்னப் பசங்க சினப்பட்டு//

      தனது உண்மையான பெயரை கூட வெளியிட தயங்கும் “பெரிய” மனிதர் என்னை சிறுவன் என்கிறார்.

      //கூடங்குளம் முதல், ஈழம் வரை//

      இப்பிடி நீங்களாவே வாய கொடுத்து நீங்க யாருன்னு அம்பலப்படுறீங்களே….. ஹும்ம்ம்…..

  14. கட்டிட விபத்தை நேரில் பார்த்தவன் என்ற முறையில், வினவு கருத்தில் எந்த வில்லங்கம் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. விபத்தில், தாயை, தந்தையை, துணைவியை, மற்றும் குழந்தையைப் பறிக்கொடுத்த பஞ்சைபாராரிகளான உழைக்கும் மக்கள், “தங்கள் சொந்தங்கள் எங்கே?” என்று, மொழி தெரியாமல் அங்குமிங்கும் அலைமோதிய அவலம் இன்னும் கண்ணைவிட்டு மறையவில்லை.

    அங்கு பாதுகாப்புக்கு என்று திரிந்துக்கொண்டிருந்த 2,000ம் போலீசில் 20 போலீசை ஒதுக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு, உறவினர்களுக்கு, விவரமோ, ஆறுதலோ சொல்ல எந்த…. புடுங்கி அதிகாரிகளும், அமைச்சர்களும் முயலவில்லை. இக்கும்பல் தங்கள் முகத்தை டிவியில் காட்டுவது எப்படி? என்பதில்தான் முண்டியடித்தது.

    அதேபோல்தான், மேல்தட்டு நடுத்தர வர்க்கம், ஓசியில், ஒரு ‘லைவ் ஷோ’ காணும் பரவசத்தில் அங்கு, சுற்றிசுற்றித் திரிந்துக் கொண்டிருந்தது. அதில் ஒருவரைத்தான் வினவு சரியாக இனம் கண்டு ஆளைக்காட்டியிருக்கிறது. தாங்கள் நிர்வாணமாக மாட்டிக் கொண்டோமே என்ற பதட்டம், “இந்தியன்” போன்றவர்களின் மறுமொழியில் அப்பட்டமாக தெரிகிறது. பாவம்! ஒப்பனை இல்லாமல் கண்ணாடியை பார்க்கவே பதறும் கும்பல் இது.

    • Sri S M,

      Please wake up to reality . I cannot even imagine how someone will come and see the scene for timepass. It is too cruel to put this allegation. Is it a sin to be Rich or live a luxurious life?

      We also serve humanity and even animals.

      The cries of poor touches the heart in all calamities. The language of soul is eternal. This Guru Prasad is a nice fictional character that gives the touch of ‘Siru Kadhai’ to the article. Ananda Vikatanla/Kalaimagala kudungo prizaavadhu varum.

      but again i am not devaluing the human life and suffering of the labourers, but dont think only you have sympathy and all rich people are heartless.

    • Dear S M,

      It is very cruel to say that upper middle class enjoyed the scene as a live show. This cannot be true. How can someone be so heartless?

      You think we rich have no heart?

      I also help humanity and even animals. And the cries of the Heart of labourers will need no language to communicate. I may not directly go and help but to say that we are heartless is baseless. Is being rich and leading luxurious life a sin?

      Also this Guru Prasad is a fictional character. I am not devaluing the suffering but nalla prize kodukalaam siru kadhai maadiri irukku indha article. Guru Prasad character kadhaikku sigaram vachadhu pola naa irukku. Kalaimagal magazinela publish pannungo first prize varum.

  15. குரு பிரசாத் என்பவர் தனி நபரல்ல.இரண்டு ஆண்டுகளுக்கு முன் அன்னா கசரே கும்பலில் இருந்து கார்ப்பரேட் ஊழல் தவிர்த்து பிற ஊழல்களை மட்டும் எதிர்த்து டீ பிரேக் போராட்டங்கள் நடத்திய மேட்டுக்குடி வர்க்கத்தின் பிரதிநிதி.பின்நாளில் அன்னாகசாரே போணி ஆகாததால் மோடியின் சீடர்களாய் மாறியவர்கள்.

  16. சென்னை கட்டட விபத்து – உங்கள் வெட்டி நியாயத்துக்கு தடை இல்லை.

    பில்டிங் ஸ்ட்ராங்க் தான். பேஸ்மெண்ட் தான் வீக். அதற்கு அனுமதி கொடுத்த அதிகாரியே முதல் குற்றவாளி.

    கட்டிடம் இருப்பது போரூர் ஏரி 5 கிமீக்குள். இடி/மின்னல்/மழை காரணமா?! இல்லை. கட்டிடம் தரக்குறைவாக கட்டப்பட்டதா?! இருக்க வாய்ப்பு குறைவு. ஏனென்றால், அருகிலேயே இன்னொரு புதிய கட்டிடம் அப்படியே நிற்கிறது. இப்போதெல்லாம், கட்டிட தொழில்நுட்பம் முதிர்ச்சி அடைந்து, அனைத்து கட்டிடங்களும் பக்காவாக, ஒரே சிஸ்டத்தில் கட்டப்படுகின்றன. எனவே இதில் பிரச்சனை இருப்பது வாய்ப்பு கம்மி.

    இந்த இடம், 11 மாடிகளை தாங்கக்கூடியதா?! இதுதான் பிரச்சனைக்குறிய விஷயம். இங்கு கட்டிடம் எழுப்ப அனுமதி வழங்கிய அதிகாரி & தொடர்பான அமைச்சகம் & முதல் அமைச்சர். இவர்கள் மூவரே இதற்கு முக்கிய காரணம்.

    இதே போரூர் ஏரிக்கு அருகில், இதேபோல் 5கிமீ தொலைவில் தான் என் உறவினர் வசிக்கும் அபார்ட்மெண்டும் இருக்கிறது. 4 மாடி கட்டிடம். கட்டி 1 ஆண்டு தான் ஆகிறது. சிலமாதமுன்பு, மழை பெய்தபோது, இடித்த இடி மின்னல் பட்டு, மொட்டைமாடியில் லேசாக பாளம் பிளந்துவிட்டது. உடனே, பில்ட்ரிடம் சண்டைபோட்டு, மின்னல் தாங்கி வைக்கப்பட்டது. இது 4 மாடி என்பதால் தாங்கியிருக்கக்கூடும்.

    இங்கு 11 மாடி கட்ட அனுமதி தந்த அரசும் அதிகாரிகளுமே இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    ஈரப்பதம் உள்ள நிலத்தில் கட்டிடம் கட்ட உரிமை கோரிய கட்டிட அதிபர் கைது எந்தளவு முக்கியமோ, அதே போல் அனுமதி அளித்த அதிகாரியும் தயவுதாட்சண்யமின்றி சிறையில் அடைக்கப்பட வேண்டும். இதுவே அவருக்கு தண்டனை.

    சென்னை மற்றும் தமிழகமெங்கும் இதுபோல் நீர்நிலைகள், வலுவற்ற நிலப்பரப்புகள் மேல் கட்டடம் கட்ட தரப்பட்ட அனுமதிகளை, தேடிக்கண்டுபிடித்து, அரசே ரத்து செய்யவேண்டும். மக்களிடம் முதல்வர் பொதுமன்னிப்பு கேட்கவேண்டும். இதுவே அரசு பெறவேண்டிய தண்டனை.

    இதை வலியுறுத்தி ஒரு கட்டுரை எழுதுவதே, வினவு செய்யவேண்டிய காரியம்

    ஆம் பகல்கனவு தான். ஆனால் நடக்கவேண்டும்.

  17. ஒரு ஃப்ளாட் 80லட்சம் என விலை வைத்து விற்கும் இந்த அபார்ட்மெண்ட்டில், காசு மிச்சம் செய்யவேண்டி சிமெண்டை குறைத்து, மணலை அதிகமாக்கி, போடவேண்டிய அஸ்திவாரத்தை குறைத்து, தரக்குறைவாக கட்டடம் கட்டி, காசு மிச்சம் பார்த்திருக்க வாய்ப்பு இருக்கிறதா என்ன?!

    80 லட்சத்திலேயே நல்ல லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கும். எனவே தரக்குறைவான கட்டடம் என்பது நம்பும்படியாக இல்லை. 11மாடிகள், ஈரப்பதம் இருக்கக்கூடிய, வலுவற்ற, ஏரிக்கு அருகிலுள்ள நிலமே மூல காரணம். காசு கொடுத்து அனுமதி வாங்கிய கட்டிட முதலாளி சிறைக்குள். இனி அனுமதி வழங்கியவரும் அரசுமே தண்டனை அனுபவிக்கவேண்டியவர்கள்.

    கருணாநிதி மேல் வரும் கோபம், மக்களுக்கு ஜெயலலிதா மேல் குறைவாக வருவதே பிரச்சனை. இதற்காக, ஒட்டுமொத்த மக்களையும் திட்டி வினவு ஒரு கட்டுரை எழுதவேண்டும். அதுதான் இன்றைய தேவையும் கூட. யார் ஆள்கின்றனர் என்கிற பாரபட்சமின்றி விமர்சிக்கும் தைரியம் மக்களிடம் இல்லை. ஜெ விஷயத்தில், சற்று நடுநிலை தவறுகிறார்கள் மக்கள்.

  18. People who work in IT companies are also labours(Highly paid).. There is no organisation or party to fight for them or support them. Is this sin being a middle class trying to own a house?

  19. //Unless we fix corruption in Govt offices, such crimes would continue to happen in our society.

    // it is as if Govt officers himself asked the builder to built that structure. It is indeed the company owners pribe the officers to do favour and it become so mutual that now a days it is very difficult to find who is governtment officer and who is private owner. All in one avathar.

    • Hiranandani group company CEO tried the same corrupt real estate practice in Singapore, got arrested.
      If Govt administration is good no corrupt businessman can follow wrong business practice.

  20. இந்தமாதிரி ஒரு இழவில்கூட கூடவே அரசியலைக் கலந்து கம்யூட்டர் பையன்களை கருவறுக்கும் வினவை எப்படிப்பாராட்டுவதென்றே தெரியவில்லை [ஒருவேளை எழுதியதே ஒரு கம்யூட்டர் ஆள் தானோ?]

  21. நிலவரத்தை விவரித்ததற்கு நன்றி .

    ஆனாலும் இதில் இந்துத்துவம் எங்கே வந்தது நண்பரே?

    (தெலுங்கு பேசும் தொழிலாளிகள் பலர் உயிரோடு சமாதியாக்கப்பட்டு, உறவினர்கள் செய்வதறியாது கதறிக் கொண்டிருக்கும் பொழுது, அதே தெலுகு தேச மண்ணில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாயும் ராக்கெட்டை பார்க்க மோடி சென்றிருக்கிறார். இந்திய வல்லரசு கவுரவத்தின் பின்னே இத்தகைய நரபலிகள் தேவையாயிருப்பது இந்துத்துவத்திற்கு முரண்பாடல்ல.)

    நீங்கள் நிலவரம் சேகரிக்க சென்றதைவிட எங்கும் இந்துத்துவம் தேடியே அலைகிறீர் போலிருக்கிறது.

    எங்கேயோ இருந்து தகவல் கேள்விப்பட்ட எங்களைபோன்ற பலரும் கட்டிட தொழிலாளிகள் இடிபாடுகளில் சிக்கி இறந்துவிட்டார்கள்,காயம் பட்டார்கள்.உறவுகளை இழந்து நிலை குலைந்துள்ளர்கள் என்றுதான் வருத்தப்பட்டோம்.
    ஆனால் அதை நேரிலேயே கண்ட உங்களுக்கு மட்டும் அங்கே தெலுங்கர்கள், இந்துத்துவம் போன்றவை தெரிந்திருக்கிறது. ராக்கெட் ஏவப்படுவது கர்னாடக மாநிலத்தில் இருந்திருந்து மோடி ஒருவேளை கர்நாடகா சென்றிருந்தால் அப்பொழுது உங்கள் விமர்சனம் எப்படி இருந்திருக்கும் நண்பரே?சும்மா திரைப்படங்களுக்கு பாடல் எழுதுவதுபோல எகனை மொகனையாக எழுதுவதில் மட்டும் கவனம் கொள்ளாதீர்கள்.

    இந்துக்கலேனும் ஆறு குளம் ஏரி உட்பட இயற்கையை கடவுளாக வழிபட்டு காத்துவந்தார்கள்.
    சில பகுத்தறிவு பகலவன்களின் வெளிச்சத்தில் விழுந்த விட்டில்பூசிகல்தான் கடவுள் மறுப்பு பிரசாரத்தால் இயற்கையின் மீதிருந்த மரியாதையை கெடுத்தார்கள்.

    அதன்பிறகுதானே இத்தகைய ஆகிறமிப்புகளும் அராஜகங்களும்.

    அங்கே சென்றபோதும் உமக்கு குருபிரசாத்தும் இந்துத்துவமும் தான் கண்ணில் பட்டது இல்லையா?

    பெரும்பாலும் சாதி மதத்திற்கு எதிரானவர்கள் போல காட்டிக்கொள்பவர்கள் தான் இறந்தவர்களிடமும் சாதி மதம் பார்த்து விமர்சிக்கிறார்கள்.
    சமுக நீதி காப்பாளர்கள் எனும் போர்வையில் வரும் உங்களைபோன்றோரால்தான் சமுதாயத்தில் வேறுபாடுகளும் மக்களுக்கிடையேயான வெறுப்பும் அதிகம் பரவுகிறது.

    • வேலுமணி சரவணகுமார்,

      [1]கட்டிடம் கட்ட ஏரிப் பகுதி நிலத்தை தேர்ந்தெடுத்த கட்டிட நிறுவன முதலாளிகளிருந்து, விதிமுறைகளை தளர்த்தி தேவையான அனுமதிகளை வழங்கிய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும அதிகாரிகள், நகர்ப்புற வளர்ச்சித் துறை செயலர்கள், துறை அமைச்சர் வைத்தியலிங்கம் மற்றும் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆகியோர் அடங்கிய ஜெயலலிதா தலைமையிலான தமிழக அரசு இந்த கட்டிடம் இடிந்து விழுந்த குற்றச் செயலுக்கான முதன்மை குற்றவாளிகள்.

      [2]ஆமாம் ஆமாம் இவர்கள் எல்லாம் ஈ வே ராமசாமியீன்[பெரியார் அவர்களீன் ] பகுத்து அறிவு கொள்கையை பின்பற்றும் புடம் போட்ட தங்கங்கள் அல்லவா ? 🙂

      //இந்துக்கலேனும் ஆறு குளம் ஏரி உட்பட இயற்கையை கடவுளாக வழிபட்டு காத்துவந்தார்கள்.
      சில பகுத்தறிவு பகலவன்களின் வெளிச்சத்தில் விழுந்த விட்டில்பூசிகல்தான் கடவுள் மறுப்பு பிரசாரத்தால் இயற்கையின் மீதிருந்த மரியாதையை கெடுத்தார்கள்.//

  22. ஒரு சாரார் அரசை குறை கூறுகிறோம்
    இன்னொரு சாரார் அதிகாரிகளை,
    இன்னும் சிலர், கட்டிட அதிபரை.
    வினவு, மத்தியதர மக்களின் நுகர்வு வெறியை.

    இப்படி ஆளாளுக்கு குறை சொல்லும்நேரத்தில், இடிபாடுகளுக்கிடையில், அடியில் இன்னமும் சிலர் உயிரோடோ பிணமாகவோ இருக்கின்றனர் என நினைக்கும்போது……

  23. இதெல்லாம் ஒரு துயரமா?… ஐயா கருணாநிதி முதுகுவலியுடன் பிரச்சாரம் செய்தாரே! அப்றம் அம்மா அவர்களுக்கும் ஏதோ ஒரு வலி என்று அப்போது பேப்பரில் படித்தேன். அதுதானே மிகப்பெரிய வலி இதெல்லாம் வலியா? வறுமையும் வலியும் வாழக்கையைத் தேடுபவர்க்குத் தான் வசதியுடன் வாழ்பவர்க்கல்ல

Leave a Reply to Indian பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க