privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைகுழந்தைகள்இன்னும் எத்தனை உதவும் கரங்கள்

இன்னும் எத்தனை உதவும் கரங்கள்

-

“தாய்மை, செவிலியர் என்றாலே நமக்கு ஒரு பெண்ணின் நினைவுதான் வரும். அது ஒரு ஆணிலிருந்தும் வெளிப்பட முடியும்” என்று அந்த அனுபவத்தில் தோய்ந்து பேசும் வித்யாகர், 1983-ஆம் ஆண்டு திரையரங்க வாசலில் வீசப்பட்ட ஒரு குழந்தையுடன் ஆரம்பித்த நிறுவனம் ‘உதவும் கரங்கள்’. இன்று சென்னை, கோவை நகரங்களில் ஐந்து கிளைகள் 1,700 உறுப்பினர்களுடன் வளர்ந்திருக்கும் அந்த நிறுவனம் சமூக சேவைக்கு ஆதரவளிக்க விரும்பும் மக்கள், நிறுவனங்களிடையே மிகவும் பிரபலம். மேலும் புதிதாகத் தொடங்கப்படும் சேவை அமைப்புகளைப் பதிவு செய்யப் பரிந்துரைக்கும் பொறுப்பையும் அரசு ‘உதவும் கரங்களு’க்கு வழங்கியுள்ளது.

உதவும் கரங்கள்“இப்படித்தான் வாழவேண்டும் என நானே திட்டமிட்டுக் கொண்டதல்ல என் வாழ்க்கை. இது அபாயகரமான, கடினமான, யாரும் நன்றி பாராட்டாத வேலை என்றாலும் யாராவது ஒருவர் செய்யவும் வேண்டும்” என்று கூறும் வித்யாகரும் ஆதரவற்ற பின்னணியிலிருந்து ஒரு முதியவரால் வளர்க்கப்பட்டவர்தான். கருநாடகத்தைத் தாயகமாகக் கொண்ட இவர் உளவியல், சமூகவியல், சமூக நலவியல், சட்டம் என சமூக சேவைக்குதவும் பல்துறைக் கல்வி முடித்தவர். அரசு தொழுநோய் மற்றும் மனநல மருத்துவமனைகளில் 3 ஆண்டுகள் பணியாற்றியிருக்கும் வித்யாகர் முக்கியமாக அன்னை தெரசாவின் கீழே சில மாதங்கள் பணிபுரிந்தது ஒரு திருப்புமுனையாக அமைந்தது.

சென்னை அரும்பாக்கத்தில் உதவும் கரங்கள் முதலில் ஆரம்பித்த இடம் இன்று அதன் தலைமை அலுவலகமாகவும் கைக்குழந்தைகளை மட்டும் பராமரிக்கும் இல்லமாகவும் பயன்படுகிறது. அங்கேயிருந்த வரவேற்பறையில் காத்திருத்தபோது மூன்று அட்டவணைகளைப் பார்த்தோம். முதலாவதில் குழந்தைகள், சிறுவர்கள், மூளை வளர்ச்சி குன்றியவர்கள், மனநோயாளிகள், எய்ட்ஸ் நோயாளிகள், சாகும் நிலையில் உள்ளவர்கள், ஊனமுற்றோர், கைவிடப்பட்ட பெண்கள் என உதவும் கரங்களில் பராமரிக்கப்படுபவரின் வகைகள் மற்றும் எண்ணிக்கையும், இரண்டாவதில் உதவும் கரங்களில் உடனடித் தேவை என்ற தலைப்பில் அரிசி, பால்பவுடர், போர்வை, மருந்துகள் என பொருட்பட்டியலும், மூன்றாவதில் நன்கொடைக்காக ஒரு நபரின் தினசரிச் செலவுப் பட்டியலும் இருந்தன. கூடவே உதவும் கரங்களின் உறுப்பினர்கள் தயாரித்திருந்த கைவினைப் பொருட்களும் விற்பனைக்கிருந்தன.

இந்தக் காட்சிகளுடன் அங்கேயிருந்த அசாதாரணமான அமைதியும் சேர்ந்து நமக்குக் குழப்பத்தையும், அயர்வையும் தந்தன. ஒப்பீட்டளவில் பிரச்சினைகளின்றி சகஜமான வாழ்க்கை வாழும் நமக்கு “சாகப் போகிறவர்கள்” என்ற கணக்கும், அதிலிருந்து எழும் அநாதைகள் குறித்த சித்திரமும் உதவும் கரங்களை மகிழ்ச்சிக்குரிய இடமாக உணர்த்தவில்லை.

ஒரு குழந்தையின் வளர்ப்புக்கே உலகப் பிரச்சினை போல் சலித்துக் கொள்ளும் சமூகத்தில் எத்தனைக் குழந்தைகள், நோயாளிகள், ஆதரவற்ற பெண்கள், அன்றாடச் சாவுகள், தினசரி வரும் புதிய சோகங்கள்… அங்கேயிருந்த 20 ஆண்டு வரலாற்றை யூகித்தபோது சற்றே பயமாகவும், பிரமிப்பாகவும் இருந்தது. முதல் பார்வையில் தோன்றிய இந்த உணர்ச்சியுடன் தொடங்கிய பயணம் உதவும் கரங்களின் திருவேற்காடு கிளையைக் கண்ட பிறகும், வித்யாகருடன் நடத்திய ஒரு விரிவான உரையாடலுக்குப் பிறகும் சற்றே தெளிவடைந்தது.

***

1983-ல் உதவும் கரங்களை ஆரம்பிக்கும் போதிருந்த மனநிலைக்கும், இப்போதிருக்கும் மனநிலைக்கும் முரண்பாடு இருக்கிறதா என்ற கேள்விக்கு, அது எப்படி இல்லாமல் போகும் என்று சலிப்புடன் திரும்பிக் கேட்டார் வித்யாகர். அது தான் விரும்பியதை விரும்பியபடி செய்ய முடியாமல் போனது, செய்து கொண்ட சமரசங்கள், அருகி வரும் தொண்டர்கள், அதிகரித்து வரும் பிரச்சினைகள் போன்ற நடைமுறைச் சிக்கல்கள் மட்டுமல்ல, உண்மையில் அனாதைகளை உற்பத்தி செய்யும் சமூக நிலைமைகள் மாறாமல் அவர்களில் ஒரு சிலருக்கு மறுவாழ்க்கை கொடுத்து விட முடியாது என்ற கொள்கைப் பிரச்சினையும் கூட.

“நாங்கள் தொண்டூழியம் செய்து தூய்மைப்படுத்திக் கொள்வதற்காக ஏழைகளைப் படைத்த இறைவனுக்கு நன்றி” எனும் தெரசாவின் பிரபலமான கூற்றை வித்யாகர் ஏற்றுக் கொள்ளவில்லை. “சமூகத்தால் பராமரிக்க முடியாதவர்கள் யாரும் இல்லை எனும் நிலை வரவேண்டும், உதவும் கரங்கள் என்னுடன் அழிந்து போகவேண்டும்” என்பதையே அவர் பல நேர்காணல்களில் கூறியிருக்கிறார். “1983-இல் 30 அநாதைச் சிறுவர் இல்லங்கள் மட்டுமே இருந்தன. இன்று 180 சிறுவர் இல்லங்களும், 200 முதியோர் இல்லங்களும் இயங்க, சுமார் 1500 அமைப்புகள் என்னிடம் பரிந்துரைச் சான்றிதழுக்கு விண்ணப்பித்திருக்கின்றன. இது போன்ற அமைப்புகள் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன” என்று கூறும் வித்யாகர் தனது விருப்பத்திற்கு நேரெதிராக இருக்கும் யதார்த்தத்தை மறுக்கவில்லை.

உதவும் கரங்கள்இருப்பினும் இதே யதார்த்தம் வித்யாகரின் விருப்பத்தைத் தலை கீழாக நிறைவேற்றவும் செய்கிறது. மூன்றாம் உலக நாடுகளைக் கபளீகரம் செய்யும் உலகமயமாக்கம், கோடிக்கணக்கான மக்களை வேரும் விழுதுமில்லாமல் நாதியற்றவர்களாக்கியிருக்கின்றது. இவர்கள் எல்லோரையும் சேவை நிறுவனங்கள் பராமரிக்க முடியாது என்பதை விடப் பராமரிக்க மறுப்பதில் தான் அவற்றின் குறைந்தபட்ச சேவையே தொடரமுடியும். ‘தட்டுங்கள் திறக்கப்படும்’ என்ற நிலை எங்கேயும் இல்லை.

அதனால்தான் அன்றாடம் ஈசலைப் போலப் பெருகி வரும் அநாதைகள், அரசு மருத்துவமனை, சீர்திருத்தப் பள்ளி, சிறை, குப்பை பொறுக்குவது முதல் ஏனைய உதிரித் தொழில்களில் ஈடுபடுவோர் சாலையோரச் சிறுவர்கள் போன்றே வாழ்க்கையைத் தள்ளுகிறார்கள். எனவே, எல்லாச் சேவை நிறுவனங்களும் புதியவர்களைச் சேர்ப்பதற்குப் பல கட்டுப்பாடுகளையும், வரம்புகளையும் வைத்திருக்கிறார்கள்.

மேலும் பல்வேறு காரணங்களினால் உருவாக்கப்படும் ஆதரவற்றோரை நம்பிக்கையளித்து மறுவாழ்வு கொடுப்பது என்பதும் அநாதைகளை உற்பத்தி செய்யும் சமூக வாழ்க்கையை மாற்றாமல் சாத்தியமில்லை. ஆதலால், அநாதைகளுக்கு அடிமைகளுக்குரிய வாழ்வைத் தவிர வேறு எதுவும் கொடுக்க முடிவதில்லை. கூடவே, இன்றைய சேவை நிறுவனங்கள் பிரச்சினைகள் அதிகம் இல்லாத – மனவளர்சியற்ற குழந்தைகளுக்குக் கல்வி போன்ற குறைவான எண்ணிக்கையிலிருக்கும் உட்பிரிவினரைத்தான் விரும்புகின்றனர். குற்றம் நடந்த இடம் எங்கள் ஸ்டேசன் எல்லையில் வராது என போலீசு தட்டிக் கழிப்பது போல சேவை நிறுவனங்கள் பிறரைக் கைகாட்டி விட்டுக் கதவை அடைத்து விடுகின்றன.

உதவும் கரங்களின் எதிர்காலத்திட்டங்கள் கூட புற்றுநோய் மருத்துவமனை, மனவளர்ச்சி குன்றியவருக்குச் சிறப்புக் கல்வி மையம், பிண ஊர்தி வாங்குவது, ஊரகச் சத்துணவுத் திட்டம் போன்று குறிப்பான – பிரச்சினையில்லாத பிரிவினருக்கு உதவுவதாகவோ அல்லது பணம் திரட்டினால் செய்ய முடியும் என்றோதான் இருக்கிறது. மாறாக, நூற்றுக்கணக்கான அனாதைகளைக் காப்பாற்ற பல ஊர்களில் இல்லங்கள் தொடங்குவதாக இல்லை.

முதலீடு இல்லாமல் இலாபம் கிடைக்கும் தொழிலாகச் சேவை நிறுவனங்கள் மாற்றப்பட்டதும் அவை அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது. ஏழைகளை உருவாக்கும் வகையில் பல நிபந்தனைகள் போட்டு ஏழை நாடுகளுக்குக் கடன் கொடுக்கும் உலக வங்கி, வறுமை ஒழிப்புக்கும் கொஞ்சம் பணம் ஒதுக்கத் தவறுவதில்லை. உலக அளவில் இப்படி வரும் ஏராளமான பணத்தைப் பெறுவது மட்டுமே சேவை நிறுவனங்களில் ஒரு போட்டியைத் தோற்றுவித்துள்ளது. அரசிடம் அங்கீகாரம் கோரியிருக்கும் ஒரு சேவை நிறுவனம், அரசு ஆய்வாளர் சோதிக்க வரும்போது மட்டும் 10 குழந்தைகளை 10,000 ரூபாய் வாடகைக்குக் (!) கேட்டதை வேதனையுடன் குறிப்பிட்டார் வித்யாகர்.

“துன்பப்படும் ஒரு மனிதனை கடவுளே கைவிட்டு விட்டாலும் நாங்கள் விடமாட்டோம்…” என்று உதவும் கரங்களின் விளம்பரங்கள் கூறினாலும், இங்கும் கடவுளே வந்தாலும் சேர்ந்து கொள்வது சுலபமல்ல. குப்பைத் தொட்டி, கோவில், மருத்துவமனை வளாகங்களில் வீசப்படும் பச்சைக் குழந்தைகளைக் காப்பாற்றுவதையே இந்நிறுவனம் தலையாய கடமையாகக் கொண்டுள்ளது. இதைத்தவிர ஏதோ ஒரு உறவு இருக்கும் குழந்தைகளோ, உறவில் வளர்ந்து விட்டு இடையில் வரும் சிறுவர்களோ இங்கு சேர்க்கப்படுவதில்லை. “மந்தை மாதிரி குழந்தைகளைச் சேர்க்க முடியாது. படுக்கை காலியாக இல்லையென்றால் இல்லையென்றுதான் சொல்ல முடியும்” என்று வித்யாகரும் நேர்மையாக ஒத்துக் கொள்கிறார். அதேபோன்று ஆதரவற்ற பெண்கள், மனநலமில்லாதோரும் கூட எவ்விதச் சார்பும், பிரச்சினைகளும் இல்லாதவர்களே சேர்க்கப்படுகிறார்கள்.

இன்று 1,700 பேரைக் காப்பாற்றும் உதவும் கரங்களின் இருபது வருட வளர்ச்சியில் ஆண்டுக்கு 85 பேர் மட்டும் சராசரியாக அதிகரித்திருக்கிறார்கள். எனில், இடம் மறுக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதனினும் மிக அதிகமிருக்கும் என்பதை விளக்கத் தேவையில்லை. மேலும் தற்போதைய எண்ணிக்கைதான் உதவும் கரங்களின் அதிகபட்சத் தாங்குதிறன். இதைத் தாண்டி பெரிய அளவில் உதவும் கரங்களினால் உதவ முடியாது என்பதே உண்மை.

உதவும் கரங்களின் முக்கியக்கிளையான ‘சாந்திவனம்’ சென்னையை அடுத்த திருவேற்காட்டில் உள்ளது. இங்கே சுமார் 800 பேர் பராமரிக்கப்படுகின்றனர். இதனருகே உதவும் கரங்களால் நடத்தப்படும் இராமகிருஷ்ணா வித்யா நிகேதன் என்ற சுமார் 1700 மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடமும் உள்ளது. அருகாமை கிராமங்களிலிருந்து பெரும்பான்மையான மாணவர்கள் வருகிறார்கள். உதவும் கரங்களின் 300 பிள்ளைகள் இங்கு படிக்கின்றனர். காந்தியின் சபர்மதி ஆசிரமத்தை எதிர்பார்த்துச் சென்ற நமக்கு ‘சாந்திவனத்’தின் நட்சத்திர விடுதிச் சூழ்நிலை மிகுந்த ஆச்சரியத்தைத் தந்தது.

உதவும் கரங்கள்பெரிய நிறுவனங்களை நினைவுபடுத்தும் வரவேற்பறை, ஒவ்வொரு பிரிவினருக்கும் பல பெரிய கட்டிடங்கள், விசாலமான சாப்பாட்டு அறைகள், கருத்தரங்க அறை, நூலகம், கைவினைத் தொழிற்கூடங்கள், மும்மதக் கோவில்கள் அனைத்தும் அதீதச் சுத்தம் – அமைதி – அழகுடன் காணப்பட்டன.

தலைமை அலுவலகத்தில் அவசரத் தேவைகளை அரிசி, பால் பவுடர் என்று எழுதி வைத்திருந்தார்களே, இங்கு இவ்வளவு ஆடம்பரமா என்ற கேள்வி எல்லோருக்கும் எழும். அநாதைகளைப் பிச்சைக்காரர்கள் போல நடத்த வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால் இங்கே பிள்ளைகளுக்குத் தரப்படும் பராமரிப்பு வசதி மிக அதிகம். குழந்தைகளுக்காகக் கட்டிடங்களா, அந்தக் கட்டிடங்களுக்காகக் குழந்தைகளா என்ற அளவிற்கு அங்கே அநாதைகளுக்கும் – ஆடம்பரங்களுக்கும் முரண்பாடு இருந்தது.

நம்முடன் சுற்றிக் காட்டிய உதவும் கரங்களின் உதவியாளரோ அங்குள்ள குழந்தைகள், அறைகள் என்று உயிருள்ளவைக்கும், உயிரற்றவைக்கும் வேறுபாடு இல்லாத வேகத்தில் ஒரு சுற்றுலா வழிகாட்டி போலப் புள்ளி விவரங்களை ஒப்பித்தார். மனிதகுலத்தின் மனச் சுமைகளை மொத்தமாய்ச் சுமப்பது போன்று காட்சியளிக்கும் அநாதைகள் இல்லத்தை ஒரு காட்சிச்சாலை போல எப்படி வருணிக்க முடியும்? ஒரு தொண்டர் நம்மை “ஃபீடிங் பார்ட்டியா, நன்கொடை தருபவர்களா?” என்று கேட்டார். அப்போது தான் புரிந்தது. அங்கு நாம் பார்த்த தோற்றங்களும், கேட்ட வார்த்தைகளும் உதவும் கரத்திற்கு நன்கொடை தரும் புரவலர்களுக்காக வடிவமைக்கப்பட்டு பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறது.

உதவும் கரங்களின் அன்றாடச் செலவு சுமார் ரூ 60,000 முதல் 80,000 வரை எனும்போது அதன் ஆண்டு செலவுத்திட்டம் ரூ 2 கோடியைத் தாண்டுகிறது. இவ்வளவு பெரிய தொகை இல்லாமல் நிறுவனம் இயங்காது என்ற உண்மை அந்தத் தொகையை வசூலிப்பதற்கேற்றவாறு செயல்படவேண்டும் என்று செயற்கையாய் மாறிக் கொள்கிறது. நன்கொடை திரட்டுவதற்கான முயற்சிகளை உதவும் கரங்கள் மிகுந்த முனைப்புடன் மேற்கொண்டு வருகிறது.

பெரிய நிறுவனங்களின் விளம்பர உத்தியின் தரத்துக்கு இணையாக உதவும் கரங்களின் துண்டறிக்கைகள், செய்தி ஏடுகள், வித்யாகரின் வரலாறு, குழந்தைகளின் கதைகள், பிரபலங்களின் பாராட்டு முதலியவை பல்வேறு பிரிவினரிடையே விநியோகிக்கப்படுகின்றன. ஒரு குழந்தையின் மொத்தச் செலவை ஏற்றுக் கொண்டு பெயரளவு தந்தை / தாயாக இருப்பது, ரூ 50,000 செலவில் கணினி வாங்கிக் கொடுப்பது, ஒரு வகுப்பறை கட்டுவதற்கான 1,50,000 ரூபாய் கொடுத்தால் புரவலர் பெயர் வகுப்பில் பொறிக்கப்படும் என பல நன்கொடைத் திட்டங்கள் அதில் அடக்கம்.

ஒரு துண்டறிக்கையில் குழந்தைகளின் சிறு பிராயம் மற்றும் வளர்பருவப் புகைப்படங்களைப் போட்டு, அவர்களின் பின்னணியை – குப்பைத் தொட்டியா, கள்ள உறவா, எய்ட்ஸா என்று விவரித்து உதவி செய்யக் கோருகிறார்கள். மற்றொன்றில், வித்யாகரே குப்பைத் தொட்டியில் ஒரு குழந்தையை எடுக்கும் படம் உள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட குழந்தைகளின் மனம் புண்படுமே என்பதைவிட இப்படித்தான் புரவலர்களிடம் காசு வாங்க முடியும் என்பதே பரிசீலனைக்கு உரியது.

உதவும் கரங்கள்உதவும் கரங்களின் எந்த விளம்பரமும், அநாதைகளையும், அபலைகளையும் உருவாக்கிய புரவலர்களையும் உள்ளிட்ட சமூகத்தின் மீது விமரிசனம் செய்து உதவிகளைக் கடமையாய் உணருங்கள் என்று கேட்கவில்லை; தனித்தனிக் கதைகள் மூலம் உருவான அநாதைகள் மீது சற்றுக் கருணை காட்டுங்கள் என்று இறைஞ்சியோ, எங்களது தரமான சேவையைப் பார்த்தாவது உதவுங்கள் என்றோதான் கேட்கிறது. இந்த அணுகுமுறைதான் உதவும் கரங்களில் இருக்கும் அபலைகளிடம் அடிமைத்தனத்தையும், தாழ்வு மனப்பான்மையையும், பார்க்க வரும் புரவலர்களிடம் குற்ற உணர்வுக்குப் பதில் பெருமிதக் கருணையையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

இதுபோக அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் நன்கொடை திரட்டுவதற்கென்றே அலுவலகங்கள் வைத்திருக்கும் உதவும் கரத்திற்கு வெளிநாடு இந்தியர்களிடமிருந்தும் கணிசமான பணம் வருகிறது. “உதவும் கரங்கள் தொடங்கி 15 வருடங்கள் வரை வெளி நாட்டிலிருந்து பணம் வாங்குவதில்லை என்றிருந்தேன். தற்போது அதிகரித்து வரும் தேவை, விலைவாசி உயர்வு காரணமாக வாங்கத் தொடங்கியிருக்கிறோம். எங்களைப் போன்ற சேவை நிறுவனங்கள் பல இந்தியாவின் வறுமையை வெளிநாடுகளில் விற்றுக் கொண்டிருக்கிறோம்” என்று ‘தவிர்க்க இயலாத’ மாற்றத்தை வித்யாகர் ஏற்றுக் கொள்கிறார். ‘சாந்திவனத்’தின் ஆடம்பரமும், அமைதியும் கூட வெளிநாட்டுப் புரவலர்களின் அழகியலுக்கேற்ப உருவாகியிருக்கலாம்.

சுய வருமானத்திற்காக உதவும் கரங்கள் உருவாக்கியிருக்கும் ஒரு வணிக நிறுவனம் ‘காயத்ரி தோட்டக்கலை’ ஆகும். பங்களாக்களுக்கும், பெரும் நிறுவனங்களுக்கும் உள்ளரங்கு – வெளியரங்கு தோட்டம், செயற்கை ஊற்று – நீர்வீழ்ச்சி – நீச்சல் குளம் என்று இதுவும் ஐந்து நட்சத்திர விடுதிகளை அழகுபடுத்தும் மேட்டுக் குடிச் சேவையாகும். மலிவான இலவச உடலுழைப்பை உதவும் கரங்களின் உறுப்பினர்கள் – வேலை செய்வது அவர்களது மன ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் – வழங்க, காயத்ரியின் தலைமை நிர்வாகிகள் ஐந்து இலக்கச் சம்பளத்தில் நவீன கார்களில் பறக்கிறார்கள்.

“நான்கு பேரிடம் கையேந்துவதை விட நாமே சம்பாதிப்பதற்கு முயன்றால் என்ன என்றுதான் ஆரம்பித்தோம்” என்கிறார் வித்யாகர். உதவும் கரங்கள் தனது சொந்தக் காலில் நிற்பதற்குக் கூடச் சாதாரண மக்களுக்குச் சேவை செய்யும் ஒரு தொழிலை ஆரம்பித்திருந்தால் அது ஆதரவற்றோர் மீது பெரும்பான்மை மக்கள் உணர்வுபூர்வமாக நெருங்குவதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கும். ஆனால் ‘காயத்திரி’யின் கதை முற்றிலும் வணிகக் கணக்கில் மேட்டுக்குடியின் ஆதாயத்தை எதிர்பார்த்து மட்டும் நடத்தப்படுகிறது. மேலும் இந்த அணுகுமுறை ஆதரவற்றோரைக் காப்பாற்றுவதில் உள்ள சிக்கல்களைத் தீர்ப்பதைவிட, அவர்களை வைத்து நடத்தும் தொழிலின் சிக்கல்களைத் தீர்ப்பதாகவே மாறும்.

கூடவே சேவைபுரியும் தொண்டர்கள், வணிகம் புரியும் நிர்வாகிகள் என்று பிளவும் ஏற்படும். இதில் யாருக்கு மதிப்பும், அதிகாரமும் வரும் என்பதை விளக்கத் தேவையில்லை. மேலும் இத்தகைய தொழில் – வணிகம் நடத்தவேண்டும் என்ற அவசியமில்லாமலேயே எல்லாச் சேவை நிறுவனங்களிலும் குறிப்பிட்ட வளர்ச்சிக்குப் பிறகு நிர்வாகிகளே தலைமைக்கு வருகிறார்கள்.

உதவும் கரங்கள் ஆரம்பித்த வித்யாகரே தற்போது களப்பணிகள் மட்டும் அதிகம் பார்ப்பதாகவும், உயர் பதவிகளில் ஓய்வு பெற்ற அதிகாரிகள் பலர் ஒரு குழுவாக அமைத்து உதவும் கரங்களின் நிர்வாக வேலைகளுக்குப் பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவித்தார். நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டும் என்று தொழில் முறையில் இயங்கும் இக்குழுவைவிட அநாதைகளைக் கடைத்தேற்றும் களப்பணியாளர்களுக்கு முக்கியத்துவம் இருக்க வாய்ப்பில்லை. 1,700 பேர்களுக்கு உணவும் உடையும் கொடுத்துப் பராமரிப்பதற்கான நிறுவன – நிர்வாக வேலைகளின் அவசியம், அதே 1,700 பேர்களின் தனிப்பட்ட வாழ்க்கை – சிந்தனை முன்னேற்றத்தைக் கவனிக்கும் களப்பணி வேலைகளை இரண்டாம்பட்சமாக்கி விடுகிறது.

உதவும் கரங்கள்“மலரும் பூக்கள் அனைத்தும் இறைவனைச் சேர்வதில்லை. அதேபோல எல்லோரும் சேவை செய்ய முன்வருவதில்லை. இது ஒரு தவம் போன்றது” எனத் தொண்டர்களின் பற்றாக்குறையைத் தெரிவிக்கிறார் வித்யாகர். மேலும் முன்பை விட தொண்டர்கள் எண்ணிக்கை குறைந்திருப்பதாகவும் தெரிவித்தார். நிறுவன வளர்ச்சிக்கு நேரெதிராக இருக்கிறது தொண்டர்கள் பற்றாக்குறை.

உதவும் கரத்திற்குத் தொண்டு செய்ய விரும்புபவர்கள், முதலில் சிறிது காலம் தங்கிப் பயிற்சி பெற வேண்டும். அதில் அவர்களது விருப்பம் உறுதியானால் தொண்டராக ஏற்கப்படுவார்கள். திருமணம் செய்து கொண்டு நீடிப்பதைப் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. தொண்டர்களின் பொறுப்புக்கேற்றவாறு ஊக்கத்தொகை உண்டு. மொத்தத்தில் தொண்டர்களுக்கான கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, ஊதியம் பெறும் ஊழியர்கள் என்ற நிலையை நோக்கி உதவும் கரங்கள் செல்கிறது. அப்படியும், தொண்டர்கள் தேவைப்படும் அளவில் இல்லை.

ஒருவர் தனது சொந்த வாழ்க்கையை ஒரு பொதுநலனுக்கு அர்ப்பணிக்க விரும்புவது பிரச்சினையில்லை. ஆனால் அந்த அர்ப்பணிப்பைத் தொடருவதுதான் பிரச்சினை. இங்கே ஒரு தொண்டரைச் சுற்றியிருக்கும் சூழல் என்ன? முடிவேயில்லாத அநாதை அபலைகளின் கண்ணீர்க் கதைகள், கதறல்கள், பொறுமையைச் சோதிக்கும் மனநோயாளிகள், அடுத்தது யாரெனக் காத்திருக்கும் பிண ஊர்தி வண்டி, இடைவெளியே இல்லாத பராமரிப்பு வேலைகள் இன்னபிறச்சூழலில் ஒரு மனிதன் உடைந்து போவதோ, கல்லாகி இறுகுவதோ, விலகிச் செல்வதோ ஆச்சரியமல்ல.

90-களில் ஆரம்பத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்காகக் ‘கருணாலயம்’ கிளையை ஆரம்பித்த போது, பல தொண்டர்கள் முன்வராத நேரத்தில், மதுரையில் அரசு வேலையை ராஜினாமா செய்து தொண்டரான சுந்தரி என்பவர் அந்த எய்ட்ஸ் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டார். அவரே இன்று உதவும் கரத்தில் இல்லை எனில் நிலைமையைப் புரிந்து கொள்ளலாம்.

ஒரு தொண்டர் அவரது அர்ப்பணிப்பை, அவர் மட்டுமே தக்கவைத்துக் கொள்ளப் போராடும் இந்தத் தனி மனித முயற்சி பொதுவில் வெற்றி பெற வாய்ப்பில்லை. மாறாக அவரது அர்ப்பணிப்பு, சமூக நடைமுறை பொறுப்புடன் பிணைக்கப்படும்போதே தொடரவும், போராடவும் இயலும். அநாதைகள் – அபலைகளை இரக்கமின்றி உருவாக்கும் இந்தச் சமூக அமைப்பின் மீது கோபம் கொண்டு போராடும் ஒருவரே அனாதைகளுக்கான தனிப்பட்ட தேவைகளையும் இறுதிவரை செய்ய முடியும். ஆனால் சேவை நிறுவனத் தொண்டர்களுக்கு இந்த வாய்ப்பில்லை என்பதாக தொண்டர்களாக ஆரம்பிக்கும் வாழ்க்கை விரைவில் முடிகிறது அல்லது ஊதியம் பெறும் ஊழியர் வாழ்க்கையாக மாறுகிறது.

வித்யாகரைப் பொறுத்தவரை இந்தத் தொண்டர்களின் சேவையைப் பலரறிய வைப்பதன் மூலமும், பத்திரிக்கை நேர்காணல்கள், விழாக்களில் அறிமுகப்படுத்தியும் உற்சாகப் படுத்துகிறார். இந்தப் பணியில் தொடர்ந்து ஈடுபட அவரை உற்சாகப்படுத்துவது எதுவென்ற கேள்விக்கு ‘குழந்தைகள்’ என்றார். உண்மையில் உதவும் கரங்கள் என்ற நிறுவனமே அவர் பார்த்துப் பராமரித்த குழந்தை என்பதால், அந்தக் குழந்தையை விட்டுவிட்டு வெளியேறும் பேச்சுக்கே இடமில்லை. மற்றபடி தொண்டர்கள் பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கிறார்கள்?

சொந்த வாழ்க்கை வாழ முடியாத பல அபலைப் பெண்கள் உதவும் கரத்தில் பராமரிப்பு வேலைகளைச் செய்கிறார்கள். வருடம் ஒருமுறை வீட்டிற்குச் சென்று வரும் இவர்களுக்கு இங்கே கிடைக்கும் வாழ்க்கைக்கான கைம்மாறாக அவ்வேலைகள் செய்கிறார்கள். இரண்டாவதாக உதவும் கரத்திலேயே வளர்ந்த பெண்கள் தொண்டர்களாக இருக்கிறார்கள். ஏனைய பராமரிப்பு வேலைகள், சமையல், கட்டிடங்கள், பொருட்களைச் சுத்தம்செய்வது, துணி துவைப்பது, குழதைகளைப் பராமரிப்பது போன்றவை இல்லத்தில் இருக்கும் அனைவருக்கும் வயது, உடல்திறன், கல்விக்கேற்ப பிரித்துக் கொடுக்கப்படுகிறது. மேல்சாதி – மேல்தட்டு வர்க்கப் பின்னணி கொண்ட, வீட்டை விட்டு வெளியேறிய முதியவர்கள் சிலரும் அலுவலக, நிர்வாக வேலைகளைச் செய்கிறார்கள். மொத்தத்தில் வேறுவழியின்றி ஆதரவற்றோர் தம்மையே பராமரித்துக் கொள்வதுதான் உதவும் கரத்தின் யதார்த்தம்.

தொண்டர்களின் கதை இதுவென்றால் அங்கிருக்கும் ஆதரவற்றவர்களின் நிலை என்ன? ‘கோகுலத்தில்’ ஆரம்பப் பள்ளி படிக்கும் குழந்தைகள், ‘பாசமலர்களில்’ கைக்குழந்தைகள், ‘மொட்டுகள் மானசா’வில் மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள், ‘தாயகத்தில்’ மனநிலை பாதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளிப் பெண்கள், ‘குட்டி பாப்பாவில்’ எய்ட்ஸ் குழந்தைகள் என ஒவ்வொரு கட்டிடத்திலும் ஒவ்வொரு பிரிவினர் இருக்கின்றனர்.

குழந்தைகள் நம்மைப் பார்த்த உடனேயே எதுவும் கேட்காமல் கை குலுக்கிச் சுய அறிமுகம் செய்துவிட்டுப் போய் விடுகிறார்கள். புரவலர்களுக்காக வடிவமைக்கப்பட்ட செயற்கையான பழக்கம் என்பதோடு ஒவ்வொரு நாளும் பலரிடம் செய்ய வேண்டியிருப்பதால் சலிப்பும் இருக்கிறது. அனைவரும் தங்கள் பெயருடன் வித்யாகர் பெயரையும் சேர்த்துச் சொல்கிறார்கள். அப்பா என்று அழைக்கிறார்கள். அப்பா தனக்கு வாங்கிக் கொடுத்த உடை, நகை பற்றி மகிழ்கிறார்கள். இளம் பெண்களோ அப்பா தமக்கு மணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கிறார்கள்.

மற்றபடி இவர்களது வாழ்க்கை….? வசதிகள் நிறைந்த சிறை வாழ்க்கை தான். நாள் முழுவதும் பராமரிப்பு, கல்வி, விளையாட்டு, கைவினைப் பயிற்சி, நாட்டியம் என்றிருந்தாலும் வெளியுலகைப் பார்க்காத, பார்க்க முடியாத ஏக்கம் இருக்கிறது. தங்கள் வாழ்க்கை இதுதான் என்பதையும், புரவலர்கள் மூலமே வாழ்கிறாம் என்பதும் அவர்களுக்குத் தெரிகிறது. பள்ளியில் படிக்கும் ஏனைய குழந்தைகளின் பெற்றோர்களைப் பார்க்கும் உதவும் கரத்தின் குழந்தைகளுக்கு எது மகிழ்ச்சியான வாழ்க்கை என்பதும் தெரியாததல்ல. ஆள் ஆரவம் அதிகம் கண்டிராத எய்ட்ஸ் குழந்தைகளோ தங்களைத் தூக்கிக் கொஞ்சுமாறு கண்கள், கைகளால் சாடைகாட்டி வற்புறுத்துகிறார்கள்.

அனாதைகளின் தாழ்வு மனப்பான்மையை அகற்றி, தன்னம்பிக்கையையும், வாழ முடியும் என்ற உணர்வையும் எப்படித் தருகிறீர்கள் என்றதற்கு, “ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் பட்டுப்பாவாடை, ஏதாவது ஒரு நகை பரிசளிக்கிறேன். இதுவரை 25 பெண்களுக்கு திருமணம் செய்து கொடுத்திருக்கிறேன். இவையெல்லாம் அவர்களுக்கு ஏனையோரைப் போல வாழ முடியும் என்ற நம்பிக்கை கொடுக்கும்” என்றார் வித்யாகர்.

காதலும், தாய்மையும் உயிரியல் ரீதியாகவும், குடும்பம், சமூகக்குழுக்கள் உளவியல் ரீதியாகவும் சக மனிதனை நேசிப்பதற்கு அடியெடுத்துக் கொடுக்கின்றன. இவை மறுக்கப்படுவதால்தான் அநாதைகளே உருவாகின்றனர். சேவை நிறுவனங்களின் சூழ்நிலையில் உயிருக்கும் குறைந்த பட்ச வாழ்க்கைக்கும் மட்டுமே அவர்கள் உத்தரவாதம் பெறுகின்றனர். இது காரியவாதம், உதிரித்தனம் கலந்த அடிமைத்தனத்தை உருவாக்குகின்றது. வாழ்வதற்கே அடிக்கடி நன்றிக்கடன் செலுத்த வேண்டியிருக்கும் வாழ்க்கையில் பொதுவான ஆளுமை வளர்வதற்கோ, அர்த்தமுள்ள வாழ்க்கையின் கனவுக்கோ வழியில்லை.

நகை, உடை, திருமணம் போன்றவை கடைத்தெருவை ஆசையுடன் நோக்கும் ஏழைச் சிறுமியின் இயலாமை உணர்வையே அதிகரிக்கும். உதவும் கரங்களை ஒரு பொருட்காட்சியைக் காணச் செல்லும் குதூகலத்துடன் பார்க்க நவீன கார்களில் வந்திறங்கும் மேட்டுக்குடிக் குடும்பமும், அவர்கள் தரும் ஆடம்பர – பழைய துணியும் இல்லத்துப் பிள்ளைகளின் தன்னம்பிக்கையை அல்ல, தாழ்வுமனப்பான்மையைத்தான் தூண்டி விடுகின்றன.

இதுபோல இந்தியன் ஏர்லைன்ஸ், டி.வி.எஸ், கிளாக்ஸோ, கன்னிமரா – உட்லண்ட்ஸ் ஓட்டல்கள் இன்னபிற நிறுவனங்கள் தங்களது மீந்துபோன உணவை உதவும் கரத்திற்குத் தொடர்ச்சியாக வழங்குகிறார்கள். அன்றாடம் எளிய உணவு உண்ணும் பிள்ளைகள், இவர்களின் ஆடம்பர உணவை அவ்வப்போது ருசிக்கும் போதும் மேற்கண்ட விளைவே ஏற்படும். எனவே எளியோர் வலியோரைச் சார்ந்தும், இறைஞ்சியும் வாழவேண்டும் என்ற யதார்த்தம் வலிமையான ஒரு வாழ்க்கைக் கண்ணோட்டத்தை அநாதைகளுக்கு வழங்கி விடாது.

இந்த மறுவாழ்வு கொடுக்கும் பிரச்சினை, பிறவி அபலைகளை விட இடையில் அபலைகளாக மாறியவர்களுக்கு அதிகம். இல்லத்தின் கட்டுப்பாடும், எளிய வாழ்க்கையும், அடிமை மனமும் அவர்களுக்கு உறுத்துகின்றது. பம்பாய் சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்த வந்த பெண்கள் இங்கு இருக்கும் கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை பிடிக்காமல், உதவும் கரங்கள் தந்த மறுவாழ்வு வசதிகளை விரும்பாமல் திரும்பிச் சென்றதை வித்யாகரே நினைவு கூர்கிறார்.

இனி உதவும் கரத்திற்கு ஆதரவளிக்கும் புரவலர்களைப் பார்க்கலாம். “எங்களுக்குப் பண உதவி செய்பவரின் நோக்கத்தையோ, பின்னணியையோ மதிப்பீடு செய்ய முடியாது” என்று எச்சரிக்கையுடன் பேசுகிறார் வித்யாகர். ஏற்கெனவே மீந்துபோன உணவு தரும் நிறுவனங்களைப் பார்த்தோம். மேலும் இந்நிறுவனங்களில் பணியாற்றும் உயர் சம்பளப் பிரிவினர் வருமான வரி விலக்கிற்காக உதவும் கரத்திற்கு நன்கொடை தருகின்றனர். சென்னையின் வசதியான நட்சத்திர மருத்துவமனைகள் உதவும் கரங்களின் உறுப்பினர்களுக்காகச் சலுகை விலையில் சிகிச்சையளிக்கின்றன. இதே மருத்துவமனைகள்தான் பெரும்பான்மை மக்களுக்கு மருத்துவச் சிகிச்சையை எட்டாத உயரத்தில் வைத்திருக்கின்றன.

சென்னைக்கு வரும் பிரபலங்கள், முக்கியப் புள்ளிகள் தவறாமல் உதவும் கரங்கள் போன்ற இல்லங்களுக்கும் வருவார்கள். “உதவும் கரத்திற்கு வந்து இதயத்தைச் சிலிர்க்க வைக்கும் ஒரு அனுபவம்” என்று ஐஸ்வர்யா ராயின் விளம்பரம் அவர்களின் துண்டறிக்கையில் இருந்தது. உலக அழகிக்கும் உதவும் கரங்களுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்ட போது, “நான் அவரைக் கூப்பிடவில்லை, உலக அழகியானதும், பெப்சி நிறுவனத்துடன் செய்திருக்கும் ஒப்பந்தப்படி ஒரு அநாதை இல்லத்துக்கு வரவேண்டுமாம். நான் ஒரு நிபந்தனை போட்டேன். எய்ட்ஸ் விழிப்புணர்வுக்காக ஒரு எய்ட்ஸ் குழந்தையைத் தூக்கி முத்தமிடுவது போல புகைப்படம் எடுக்க வேண்டும். அந்த அம்மா பம்பாயில் தனது மருத்துவர்களுடன் ஆலோசித்து தயக்கத்துடன், அரைகுறை மனதுடன் ஒப்புக் கொணடார்” என்று பிரபலங்களின் கருணையைப் போட்டுடைத்தார் வித்யாகர்.

உதவும் கரங்களுடன் நீண்டு விட்ட நமது பயணத்தை இத்துடன் முடித்துக் கொள்வோம். மீண்டும் பழைய காட்சிகள்…. சாகப் போகிறவர்கள் கணக்கு, அரிசி உடனடித் தேவை, ஆடம்பரக் கட்டிடங்கள், ஹலோ அங்கிள் – குழந்தைகள் அறிமுகம், காலைச் சுற்றும் எய்ட்ஸ் குழந்தைகள், ஒரு கட்டிடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்த அந்த ஊனமுற்ற சிறுமி, அப்பா திருமணம் செய்வார் என்று ஆசையுடன் சொன்ன அந்தப் பெண், வாசனைத் திரவியத்தில் குளித்து வந்த அந்த அமெரிக்க இந்தியக் குடும்பம், சுற்றுலா பாணியில் விவரித்த அந்த உதவியாளர், நேரம் செல்லச் செல்ல உதவும் கரங்களின் அனைத்துப் பரிமாணங்களையும் வாழ்க்கை அனுபவத்தையும் பகிர்ந்து கொண்ட வித்யாகர்….

வெளியேறினோம். இந்தச் சமூக அமைப்பின் கொடுமைகளுக்குப் பயந்து கொண்டு தாங்களே கட்டிய அந்த மாபெரும் சிறையில் தங்களேயே பிணைத்துக் கொண்டு கைதிகளாக வாழும் அந்தக் குழந்தைகளை, மக்களை நினைக்கும்போது கண்ணீர் வருகிறது. இந்த மாயச் சிறையிலிருந்து அவர்களை விடுவிக்க வேண்டிய கடமைக்காக ஈரம் கசிந்த கண்கள் மெல்ல மெல்ல சிவக்க ஆரம்பித்தது.

– செய்தியாளர்கள் உதவியுடன் இளநம்பி
______________________________
புதிய கலாச்சாரம், பிப்ரவரி 2004
______________________________

  1. மிகவும் மனவளிமையோடும், நடுநிலையோடும், செய்தி தர்மத்தோடும் இவ்வளவு ஆழமான கருத்தினை பதிவு செய்த இளநம்பி அவர்களுக்கும் வினவு.காமிற்கும் தலைவணங்குகின்றேன்…

    அதிசய மனிதர் வித்யாகர் அவர்களுக்கு எனது வீர வணக்கம்…

    இந்தச் சமூக அமைப்பின் கொடுமைகளுக்குப் பயந்து கொண்டு தாங்களே கட்டிய அந்த மாபெரும் சிறையில் தங்களேயே பிணைத்துக் கொண்டு கைதிகளாக வாழும் அந்தக் குழந்தைககள் மக்கள்- இந்த வரிகளை வாசிக்கும்போது கலங்கித்தான் போனேன்…

Leave a Reply to paraman பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க