privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஒரு வரிச் செய்திகள் – 04/07/2014

ஒரு வரிச் செய்திகள் – 04/07/2014

-

vinavu news 5செய்தி: மணிக்கு 160 கி.மீ., வேகத்தில் ரயிலை இயக்கி ரயில்வே சாதனை – டில்லி ஆக்ரா இடையே வெற்றிகர சோதனை ஓட்டம்.

நீதி: 150 கி.மீ வேக ரயிலுக்கு 10 கி.மீ வேகத்தை கூட்டியதெல்லாம் சாதனை என்றால் விலைவாசி உயர்வை ராக்கெட் வேகத்தில் கொண்டு சென்ற காங்-பாஜக அரசுகள் வேதனை அடையாதா?

~~~~~~~~~~~

செய்தி: குழந்தைகள் இறப்பை தடுக்கும் வகையில் 3 புதிய  தடுப்பூசிகள் அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக அளிக்க  உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

நீதி: பின்னாளில் கலவரங்களில் சாகாமல் காப்பாற்றப்படுவதற்கு, இசுலாமியர்கள் குழந்தைகளாக இருக்கும் போதே ஏதும் தடுப்பூசி இருக்கிறதா பிரதமர் அவர்களே?

~~~~~~~~~~~~

செய்தி: ஜம்மு காஷ்மீருக்கு முதல் முறையாக செல்லும் பிரதமர் மோடி, வைஷ்ணோ தேவி ஆன்மீகத் தலத்தை இணைக்கும் காட்ரா – டெல்லி ரெயிலை துவக்கி வைக்கிறார்.

செய்தி: ஜம்முவில் இந்து பக்தர்களின் புனிதப் பயணத்திற்கு ஆவண செய்யும் மோடிக்கு, இந்திய ராணுவத்தால் வாழ்விழந்த காஷ்மீர் மக்கள் முழு அடைப்பு நடத்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். புனிதத்தை விட பாவத்தின் அளவு அதிகம் இல்லையா?

~~~~~~~~~~~

செய்தி: கேரள கவர்னராக இருக்கும் ஷீலா தீட்சித் டெல்லி முதலமைச்சராக இருந்த போது அவரது 4 படுக்கையறை பங்களாவில், 31 ஏசி இயந்திரங்களையும், 25 ஹீட்டர்களையும், 15 கூலர்களையும், 12 சுடு நீராக்கிகளையும், 16 காற்று தூய்விப்பான்களையும் பயன்படுத்தியிருக்கிறார்.

நீதி: முதலமைச்சராக வாழ்வதன் பெருமை என்னவென்பதை இந்த சிறுமை பட்டியல் விளக்குகிறது.

~~~~~~~~~~

செய்தி: இளைஞர்களை கவரும் பொருட்டு இந்திய விமானப்படை, ‘Guardians of the Skies’ (GOTS) –  “விண்ணின் பாதுகாவலர்கள்” எனும் செல்பேசி முப்பரிமாண வீடியோ கேமை அறிமுகப்படுத்தியிருக்கிறது.

நீதி: நாட்டுக்காக தியாகம் செய்யுங்கள் என்று இளைஞர்களை கவர முடியாது என்பது உண்மையென்றாலும், விமானப்படை வீடியோ கேமை வெளியிட்டு இளைஞர்களை இழுக்கிறது என்றால் நாளையே படையில் சேருபவன் எப்படி ஐயா தியாகம் செய்வான்?

~~~~~~~~~~~

செய்தி: அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையை கட்டுப்படுத்த, அனைத்து மாநில உணவு அமைச்சர்கள் கூட்டத்தை, மத்திய அரசு இன்று நடத்துகிறது.

நீதி: டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு கட்டணம் உயர்வு, ரயில் கட்டண உயர்வு அனைத்தும் நிறைவேற்றி விட்டு எதற்கையா இந்தக் கூட்டம்? நடத்தாமலிருந்தால் சமோசா – தேநீர் செலவாவது மிச்சமாகுமே?

~~~~~~~~~~~

செய்தி: மவுலிவாக்கம் கட்டிட விபத்து பற்றி விசாரிக்கவும், வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவும் முன்னாள் நீதிபதி ரெகுபதி தலைமையில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

நீதி: இந்த கண்துடைப்பு கமிஷன் கண்டு பிடிக்கப் போகும் வழிமுறை என்ன? இனி கட்டிடம் கட்ட கமிஷனை வாங்கும் அதிமுக அமைச்சர்கள்  பூமி பூஜைக்கு செல்ல மாட்டார்கள் என்பதா?

~~~~~~~~~~~

செய்தி: கச்சத்தீவுப் பிரச்னையில் காங்கிரஸ் கூட்டணி அரசின் நிலைப்பாட்டை, பாரதிய ஜனதா தலைமையிலான அரசும் பின்பற்றுவது ஏற்கத்தக்கது அல்ல என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.

நீதி: இந்துமதவெறியர்களுடன் கூட்டணி வைத்த உங்களையே எவரும் ஏற்காத போது பாஜக நிலையை நீங்கள் ஏற்றாலோ, ஏற்காவிட்டாலோ, ஏப்பம் விட்டாலோ எங்களுக்கு என்ன?

~~~~~~~~~~~~

செய்தி:  தர்மபுரி மாவட்டம், நத்தம்காலனியில் இன்று நடைபெறும் இளவரசன் நினைவுதின நிகழ்ச்சியில் அஞ்சலி செலுத்துவதற்கு அரசியல் கட்சிகளுக்கு அனுமதி கிடையாது என்று சென்னை  உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதி: ஆமாம், நத்தம் காலனியை எரிப்பதற்கு சாதி வெறியர்களுக்கு அனுமதி உண்டு. எரித்ததை எதிர்ப்பதற்கு தலித் மக்களுக்கு அல்ல!

~~~~~~~~~~~

செய்தி: பேய் பிடித்ததாக கூறி தொழிலாளி தலையில் உறவினர்கள் 3 அங்குல அளவுக்கு தலையில் இறங்கிய ஆணியை, பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் அகற்றினார்கள்.

நீதி: உறவினர்களின் தலையில் இருக்கும் பார்ப்பனிய மூடநம்பிக்கை எனும் ஆணியை அகற்றும் மருத்துவர்கள் பற்றாக்குறை என்பதை ஒத்துக் கொள்கிறீர்களா?

~~~~~~~~~~

செய்தி: திரிணாமூல் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தபாஸ் பாலின் பாலியல் வன்புணர்ச்சி மிரட்டல், இந்திய அளவில் பிரபலமாக அனைத்து ஊடகங்களில் அடிபடுவதால், “தங்களுக்கு எதிராக தவறான தகவலோடு பிரச்சாரம் செய்யப்படு”வதாக மம்தா பானர்ஜி கூறியிருக்கிறார்.

நீதி: எனில் ஊடகங்களால் பிரபலமான ஆட்டோ சங்கருக்கும், டாக்டர் பிரகாஷுக்கும் இந்த நீதி பொருந்துமில்லையா தீதி?

~~~~~~~~~~

செய்தி: தபாஸ் பால் “ரேப் மிரட்டல்” என்று பேசியது நாக்கு பிறழ்வால்தான் என்று அவருக்கு ஆதரவு தெரிவித்தார், குடியரசுத் தலைவரின் மகனும் காங்கிரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான அபிஜித் முகர்ஜி.

நீதி: ரப்பர் ஸ்டாம்பின் பிள்ளை இப்படி தப்பு தப்பாகத்தானே பேசும்?

~~~~~~~~~~~~

செய்தி: தமிழக காங்கிரஸில் இருக்கும் முக்கியத் தலைவர்கள் அனை வருமே மாநில தலைவர் பதவி கேட்டு கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆளாளுக்கு ஒரு மேலிடத் தலைவரை பிடித்து காய் நகர்த்தி வருகின்றனர்.

நீதி: ஓட்டுப் போட நாலு பேர் இல்லேனாலும், நாற்காலி சண்டைக்கு நாலு பேர் இருக்கான் பாரு!

~~~~~~~~~~~~

செய்தி: இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்க அதிபர்களாக இருந்தவர்களிலேயே ஒபாமாதான் மிக மோசமான அதிபர் என்று கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

நீதி: 2-ம் உலகப் போருக்கு பிந்தைய அனைத்து அமெரிக்க அதிபர்களும் மோசம் எனும் போது, அதில் சுமாரான மோசம், மீடியமான மோசம், பயங்கர மோசம் என்ற பாகுபாடு மோசமில்லையா?

~~~~~~~~~~~~

செய்தி: வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல்.பெரீஸ் அடுத்த வாரம் இந்தியா வருகிறார்.

நீதி: போனவாட்டி ‘நெக்லஸ்’ வாங்குன சுஷ்மா இந்த வாட்டி ஒட்டியாணம் வாங்குவாரா?

~~~~~~~~~~~~~