Saturday, May 25, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்ஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ?

ஏம்மா ஒரு எலுமிச்ச சாதம் என்ன விலைம்மா ?

-

சூரியன் உதிக்கும் அதிகாலை பொழுதும், அந்தி மயங்கும் மாலை பொழுதும் பரபரப்பாக இருக்கும் மாநகராட்சி பூங்காக்களை அறியாத சென்னை மக்கள் யாரும் கிடையாது. நாம் போகும் அதிகாலை நேரத்திலும் கூட பூங்காக்கள் துப்புறவு செய்யப்பட்டு, சுத்தமாக இருப்பதை பார்த்திருக்கிறோம். செடிகளை பார்த்து ரசிக்கும் விதத்தில் வடிவமாக வெட்டிவிட்டு கோடையிலும் பசுமை மாறாமல் மனதை ஈர்க்கும் அழகை சேர்க்கும் இந்த உழைப்புக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? அந்தந்த பூங்காக்களின் ஒரு மூலையில் இருக்கும் புறா கூண்டு போல் உள்ள ஒரு கொட்டடியில் இருந்து கொண்டு வாழ்க்கையை ஓட்டும் இந்த ஜீவன்கள்தான் பூங்காக்களை பராமரிக்கிறார்கள். நாம் ரசிக்கும் பூக்களுக்கும், செடிகளுக்கும் உயிர் கொடுக்கும் அவங்களோட வாழ்க்கை எப்படி இருக்கும்?

பூங்காவின் ஓரத்தில் ஒரு ஆள் படுக்கும் அளவு கொண்ட ஒரு அறையும் அதில் மண்வெட்டி, செடி வெட்டும் கத்தரிக் கோல், தண்ணீர் விடும் குழாய், குப்பை அள்ளும் கூடை, தொடப்பம் என்று தளவாட சாமன்களுடன் அந்த சமையலுக்கு இரண்டொரு பாத்திரம், ஒரு கொடியில் துணிமணிகள், ஒரு பாய் தலயணையும் கூட இருந்தது. இதுதான் பூங்காவை பராமரிக்கும் பணியாளர் வாழும் இடம்.

இவர்களின் சமையலோ மரத்தில் ஒரு கோணியை பந்தல் போல் கட்டி அதுக்கு கீழே கல்லு வச்சு அடுப்புக் கட்டி சமைச்சுக்கணும். மாநகராட்சி பூங்காவில் வேலை செய்யும் அனைவருக்கும் இது பொருந்தும். இந்த இடத்தை பார்த்தால் ஒரு குடும்பம் வாழும் சூழ்நிலையில் இல்லாமல் பூங்காவை பராமரிக்க உதவும் மராமத்து சாமானை அடைத்து வைக்கும் இடத்தில் இந்த உயிர்களையும் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிந்தது.

அப்படி ஒரு பூங்காவை பராமரிக்கும் 70 வயது மதிக்கத்தக்க அம்மா ஒருவரை சந்தித்தேன். அவருக்கு ஒரு கண்ணுல பூ விழுந்து ஒரு பக்க கண் பார்வை தெரியாது. எலும்பும் தோலுமா பார்க்கவே பரிதாபமாக இருந்தார். ஒரு ஏக்கருக்கு குறைவில்லாமல் இருக்கும் அந்த பூங்காவை தனி ஒரு ஆளாக இருந்து கவனித்துக் கொள்கிறார். செடிகளின் ஓரத்தில் கூட ஒரு தூசியை தேடி எடுக்க முடியாத அளவு சுத்தமாக வைத்திருந்தார். இவரை பல தடவை பார்த்திருக்கிறேன். சொந்த நிலத்தில் பாடுபடும் அக்கறையோடு எந்நேரமும் ஏதாவது ஒரு மூலையில் எதாவது ஒரு வேலை செய்து கொண்டே தான் இருப்பார்.

அவரிடம் பேசும் போது குப்பையை அள்ளிக் கொண்டேதான் பேசினார். “எனக்கு ரெண்டு பிள்ளைங்க. ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆச்சு. அவங்க பொண்டாட்டி புள்ளைய கவனிக்கவே ஓடா தேய்றானுவொ, நாம எதுக்கு ஒருத்தருக்கு பாரமா இருக்கனுன்னு இந்த வேலைய பாக்குறேன். அஞ்சு வருசமா இந்த வேலை பாக்குறேன். முதல்ல பீச்சுல வேல பாத்தேன். பொறவு தி.நகர்ல வேல பாத்தேன். இப்ப இங்க வடபழனிக்கி வந்து மூணு வருசமா ஒரே எடத்துல வேல பாக்குறேன். மொதலாளி எந்த பூங்காவுக்கு மாத்தி விட்றாரோ அங்க வேல பாக்கணும்”.

பெண் தொழிலாளி. 1“காலையில அஞ்சு மணிக்கு எந்திரிச்சு மொதல்ல நட பாதைய பெருக்குவேன். பெரியவங்க வெளையாட்டு தெடல பெருக்கி தண்ணி தெளிப்பேன். பிள்ளைங்க வெளையாட்டு எடத்த பெருக்குவேன். இதுக்கே மணி பத்தாயிரும். பொறவு புல்லுல உள்ள குப்பைங்கள பொறுக்கிட்டு தண்ணி விட ஆரம்பிச்சேன்னா மணி 3 ஆயிரும். அப்பால ரெண்டு மொடக்கு கஞ்சி தண்ணிய குடிச்சுட்டு சாயந்தரம் சனமெல்லாம் வர்றதுக்கு முன்னாடி திரும்ப நடபாதைய ஒரு மொற பெருக்கிட்டு மிச்சமீதி இருக்குற செடிக்கி தண்ணி விடனும். 8 மணிக்கி பூங்காவ பூட்டிட்டு அதுக்கு பொறவு நான் குளிச்சு துணி தொவச்சு சாப்புட்டுட்டு படுக்க மணி ஒம்பது பத்தாயிரும்.”

இதற்கிடையில் பூங்கா வாசலில் ஒருவர் அந்த அம்மாவை அதிகார தோரணையில் கூப்பிட்டார். அந்த அம்மா அருகில் போனதும் “என்ன ஆடி அசஞ்சு தேரு மாறி வர்ரே”ன்னு  திட்டின அவரு மறுவார்த்தை பேசரதுக்குள்ள,

“என்னாய்யா பேச்சு பேசுரறீங்க, மூணு நாளா மிசினு வெட்டுன குப்பையெல்லாம் குனிஞ்ச தல நிமுறாம பெருக்கி அள்ளிக் கொட்டிட்டு கெடக்குறேன். நிமுறவும் முடியல. காலு மரத்துப் போயி நடக்கவும் முடியல. உயிர் போறா மாறி இருக்கு. என் வலி எனக்குதான் தெரியும். படி அளக்குற மொதலாளி நீங்க, கூப்புட்டா ஓடி வரனுன்னு நெனைக்கிறீரு குத்தமில்ல. அதுக்காக? கண்ண மூடி கண்ணு தொறக்கறதுக்குள வந்து நிக்க நானென்ன காத்தா, கரண்டா? நானொன்னும் படுத்து கெடந்துட்டு வரல. இடுப்பொடிய வேல செஞ்சுட்டு வர்ரேன்”னு தன்மானத்தோடு பேசியது மகிழ்ச்சியா இருந்தது.

தன் வேலையை காப்பாத்திக்கவும், சம்பள உயர்வுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் தன்மானத்தை விட்டுக் கொடுத்து வாழும் ‘பெரியவங்க’ளுக்கு இந்த அம்மாவோட தன்மான உணர்ச்சி புரியுமா தெரியல.

“இவ்வளவு வேலைகளுக்கு நடுவுல எப்ப சமைப்பிங்க சாப்புடுவிங்க?” என்று அந்த அம்மாவிடம் கேட்கும்போது மனதை வதைக்கும் படி பதில் சொன்னார்.

“என்னத்த பெரிய சமையலு! மத்தியானம் ஒரு நேரம் கொஞ்சம் அரிசி போட்டு வடிப்பேன். அதயே மறுநாளு காலையில வரைக்கும் தின்னுக்குவேன். இப்ப காலையில தின்னுக்கலான்னு கொஞ்சம் கஞ்சித் தண்ணி வச்சிருந்தேன். இன்னைக்கி பாரு ரோடு கூட்ற அம்மா வந்து நீராகாரம் (சோத்துத் தண்ணி) இருந்தா கொஞ்சம் உப்புப் போட்டு குடும்மான்னுச்சு. பாவம் நாலு மணிக்கி எந்திருச்சு ரோடு கூட்ட வந்துருப்பா, விக்கிற வெலவாசில ஒரு டீ கூட குடிச்சுருக்க மாட்டாளேன்னு இருந்த ரெண்டு கரண்டி சோத்துல ஒரு கரண்டி அள்ளிப் போட்டு தண்ணிய ஊத்தி குடுத்தேன். பசி மயக்கத்துல கண்ண மூடிக்கிட்டு மடக்கு மடக்குன்னு குடிச்சா. நம்ப மென்னுதின்னு துப்புன குப்பையதானே எடுக்குறான்னு ஜனங்க யாரும் எரக்கப்பட்டு ரெண்டு கஞ்சி குடுக்காதுங்க. கல்நெஞ்சம் படச்சதுங்க.”

“இங்கன பெரும்பாலும் அய்யருமாருங்க வீடுங்கதான் அதிகம். நானும் இங்கன மூணு வருசத்துக்கு மேல வேல பாக்குறேன். யாரும் ஒரு நாள் ஒரு வாயி சோறு போட்டது கெடையாது. அம்மாச, கிருத்திகன்னா எதுத்த வீட்டு மாமி காக்கைக்கு வைக்கிற அளவுக்கு இத்தினியோண்டு சோறு குடுக்கும். அது என் வயித்து மூலைக்கு கூட பத்தாது. ரெண்டு தடவ வெக்கங்கெட்டு போயி வாங்கிட்ட, பொறவு கூப்புட்டா சாப்புட்டேன்னு சொல்லி புடுவே. பூங்காவுக்கு நித்தமும் வர்ரதுங்க கூட எதையாவது திண்ணுட்டு திங்க முடியாம அப்புடியே பாக்கெட்டோட போட்டுட்டு போவுமே தவிர இந்தான்னு கொடுக்காதுவ, ஈவு எறக்கமெத்த சனம் என்னத்த செய்ய.”

இப்படி பேசிக்கொண்டிருந்த அம்மா தயக்கத்தோட மெதுவாக கேட்டார், “எலும்பிச்ச சாதம் கடையில என்ன வெல இருக்கும்மா”.

“20 ரூவா இருக்கும்மா. எதுக்கு கேக்குறீங்க.”

“மிசினு வந்து வெட்டுன புல்ல ரெண்டு நாளா பெருக்கி அள்ளிக் கொட்றேன் இன்னும் பாதி வேல கூட முடியல. ரெண்டு நாளா தண்ணி கஞ்சி குடிச்சு நாக்கு செத்துக் கெடக்கு. இன்னைக்காவது கொழம்பு வப்போன்னு நெனச்சேன் முடியல. அதான் ஒரு பொட்டலம் எலும்பிச்ச சாதம் வாங்கி சாப்புடலான்னு கேட்டேன். நீ இந்த வெல சொல்ற ஒரு வேளக்கி 20 ரூவாய்க்கி சாப்புட்டா நமக்கு கட்டுப் படியாகாது. அரைக் கிலோ இட்லி மாவு வாங்கவே ஒரு வாரம் யோசிச்சேன். 20 ரூவா இருந்தா ரெண்டு நாள் பொழப்ப ஓட்டிருவேன்.” என்றார்.

சம்பளம் பத்தி கூறும் போது “வாங்குற 3600 சம்பளத்த வச்சுகிட்டு கண்டதுக்கும் ஆசப்பட முடியுமா? சாப்பாட்டு சாமான், குளிக்க, தொவைக்க, பாத்தரம் கழுவ சோப்பு, தலைக்கி எண்ண, மாத்தர மருந்துன்னு எத்தன செலவு இருக்கு. கையில கெடச்சதெல்லாம் செலவு பண்ணிட்டு பின்னாடி வேல இல்லாம, கை கால் விழுந்துருச்சுன்னே வையி; வெறும் கையோட போய் நின்னா பிள்ளைங்களுக்குதானே கஷ்டம். அவங்களுக்கு ஒரு தொந்தரவு தராம நம்ம பாதைய நாமளே பாத்துக்கனும்”, என்றார்.

ஒரு எலுமிச்ச சாதத்துக்கும், ஆழாக்கு இட்லி மாவுக்கும் அந்தம்மா தயங்குற ஊருலதான் பிசா, பர்கரு, தலப்பாகட்டு எல்லாம் பெருக்கெடுத்து ஓடுது. பெட்டிக் கடையிலயே அமெரிக்க சிப்சு வகைங்களெல்லாம் சரம் சரமா தொங்குது. செட்டிநாடு, மதுரை, திண்டுக்கல்லு, தஞ்சாவூருன்னு எல்லா ஊரு சுவையும் ஓட்டல் ஓட்டலா கிடைக்கிது. ஒத்த ரூபாய பாத்து செலவு பண்ற இந்த அம்மாவுக்கும், காந்தி நோட்ட வீசி ஜீரணம் ஆகாம வாந்தி எடுக்குற கூட்டத்துக்கும்தான் எவ்வளவு வேறுபாடு?

சென்னை பூங்கா 1
சென்னை பூங்காக்களில் காலை நடைப் பயிற்சியில் மக்கள்

சென்னையில மட்டும் 260 மாநகராட்சி பூங்காக்கள் உள்ளது. இந்த பூங்காக்களை பராமரிக்க மூன்று வட்டாரங்களாக பிரித்து மூன்று தனி தனி முதலாளிகளுக்கு 12.61 கோடி டெண்டர் விடப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு கீழ் பராமரிக்கப்படும் இந்த பூங்காக்களில் விதவைகள், பிள்ளைகளால் கைவிடப்பட்ட பொற்றோர்கள், சின்ன பிள்ளைகளுடன் நிற்கதியாய் ஆதரவற்றவர்களாய் இருப்பவர்கள் என்று எதிர்த்து கேள்வி கேட்க முடியாத படி வாழ்க்கையில் தூக்கி எறியப்பட்டவர்களே இந்த வேலையில் இருக்கிறார்கள். அவங்க கடந்த கால கிராமத்து வாழ்க்கையில மட்டுமில்ல, இப்போதைய பட்டணத்து வாழ்க்கையிலயும் கொத்தடிமைங்கதான்.

முன்பு பூங்காக்களை பராமரிக்க மாநகராட்சி ஊழியர்கள் இருந்தார்கள். அவர்கள் சரிவர பராமரிக்க வில்லை என்று கூறி, அவர்கள் வாழ்க்கையில் மண்ணள்ளி போட்டு விட்டு, மற்ற எல்லா துறைகளையும் தனியாருக்கு தாரை வார்த்த மாறி பூங்கா பராமரிப்பு வேலையையும் தனியாருக்கு கொடுத்துள்ளது அரசு.

தின்னுட்டு உடம்பு பெருத்துப் போச்சுன்னு பூங்காக்களுக்கு நடக்க வார ஆபிசருங்களுக்காக பராமரிக்கப்படும் பூங்காக்களுக்கு இருக்கும் மரியாதை கூட இந்த தொழிலாளிங்களுக்கு இல்லை. பனித்துளியில இருக்குதுடா உலகம்ணு கவிதை எழுதர எழுத்தாளருங்களெல்லாம் சென்னை பூங்காக்கள்ள குந்திக்கிணு ‘உலக’ இலக்கியமெல்லாம் படைச்சிருக்கோம்ணு அவங்களே சொல்லக்கிறாங்க. ஆனால உலக இலக்கியத்த எழுதுனவங்க எல்லாரும் செடி கொடிக்கு கண்ணீர் விட்ட மாதிரி அதுக்கு தண்ணி ஊத்துனவங்களுக்கு விடல. ஏன் பாக்க கூட இல்ல.

இந்த பூங்காக்கள் இன்று பெரும்பாலும் தேகப் பயிற்ச்சி, நடை பயிற்சி, தியானம், யோகா என்று நடுத்தர வர்க்கத்தின் உடல் குறித்த கவலை தீர்க்கும் இடமா மாறி வருதுது. ஓட்டல்ல தீனி, பார்க்குல நடைன்னு இந்த முரண்பாடு என்னைக்குமே முடியாது.

நகர்ப்புறங்களில் வாழும் மக்கள், நெருக்கமான வீடுகளுக்கு மத்தியில் இறுக்கமான சூழ்நிலையில் இருப்பதால், ஒரு காற்றோட்டமான, மரம் செடிகளுடன், இயற்கையோடு இளைப்பாற, பேசி மகிழ என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது பூங்கா. ஆனால் அதை பராமரிக்கும் ஊழியர்களுக்கு, இவ்வளவு அழகான இயற்கைக்கு மத்தியில் கக்கூசு போன்ற கொட்டடியில் ஒரு எலுமிச்சை சாதத்திற்கு கூட வழியில்லாத கொத்தடிமை வாழ்க்கை தான் கிடைத்துள்ளது.

மனுசனை மறந்துட்டு இயற்கையை ரசிக்கிறவங்களுக்கும், ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோவுக்கும் வேறுபாடு இல்லேங்கறேன். என்ன சொல்றீங்க?

–    சரசம்மா

 1. அன்புள்ள சரசம்மா அவர்களுக்கு,

  உங்கள் கிராம உலாப் பதிவுகள் அருமை.

  இதை உங்களுக்கு சொல்லவேண்டும் என்று நீண்ட நாட்கள் நினைத்திருந்தேன். இன்று தான் முடிகிறது.

  இப்பதிவின் கடைசி 3-4 பத்திகளிலில் நடை மாறுகிறதே, பரிச்சயமானதாகவும் இருக்கிறதே என்று யாரிது என்று சற்று கீழே பார்த்தால் நம்ம சரசம்மா. நகரிலும் உலா விட ஆரம்பித்துவிட்டீர்கள். உங்கள் பதிவுகளை ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறேன்.

 2. அட! இன்னைக்குத்தானா இந்த விடயம் உங்களுக்கு தெரிய வந்தது? யார் கிட்டேயும் சொல்லிடாதீங்க சார்.

 3. indha paetti edukumbodhu andha ammavukku edhavadhu vaangi kodutheengalaa? or selavukku edhavadhu kaasu kodutheengalaa? If u did any of this i salute u… Idhula edhuvumae pannaama just paetti mattum eduthuttu vandhu irundheenganaa, neengalum andha park la poravangalum onnu thaan…

 4. excellent article, பாவம் இரண்டு பயல்களை பெற்றும் வளர்த்தும் இவர்களின் துயர் துடைக்க அவர்களுக்கு தோன்றவில்லை என்னும்போது, இன்றைய இளையதலைமுறை இனரின் பாசம் எவ்வாறெல்லாம் பெற்றோர்களை பரிதவிக்கவைக்கிறது என்பதை புரியமுடிகிறது. காலம் ஒரு காசு வாங்காத ஆசான், இன்று இவர்கள் தங்களுடைய பெற்றோருக்கு பரிதவிக்க வைப்பதை காட்டிலும் நாளை இவர்களை இவர்களின் குழந்தைகள் பரிதவிக்கசைவர் என்கிற எண்ணம் ஒவ்வொரு வாரிசுக்கும் வரவேண்டும். கருவறையில் இடம் கொடுத்த தாய்க்கு தன வீட்டின் இருட்டறையில் தங்க கூட நாதி இல்லையா என்ற எங்கோ படித்த கவிதை நினைவுக்கு வருகிறது.

 5. //மனுசனை மறந்துட்டு இயற்கையை ரசிக்கிறவங்களுக்கும், ரோம் எரியும் போது பிடில் வாசித்த நீரோவுக்கும் வேறுபாடு இல்லேங்கறேன். என்ன சொல்றீங்க?// உண்மைதான் தோழர்

 6. தன் வேலையை காப்பாத்திக்கவும், சம்பள உயர்வுக்காகவும், பதவி உயர்வுக்காகவும் தன்மானத்தை விட்டுக் கொடுத்து வாழும் ‘பெரியவங்க’ளுக்கு இந்த அம்மாவோட தன்மான உணர்ச்சி புரியாது.
  புரிய வச்சாலும் ஏறாது.

 7. “மனிதனை மறந்துவிட்டு இயற்கையை ரசிக்கமுடியுமா”?

  மறந்தநிலை தான். இன்றையநிலை.

  சரசம்மாவின் ஒரு கண்ணீர்துளி கூடா சமுத்திரத்தில் கலந்திடும் நாள்யொன்று வரும்.

 8. சரசம்மா அவர்களே. எனக்கு அம்மா இல்லை ஆனால் என்னை வளர்த்தது படிக்க வைத்தது எல்லாம் என்னுடைய அம்மாயீ, எப்படி என்றால் ஒருநாள் நீங்கள் வினவவில் எழுதியதை போல,-கதிர் அடித்தபின்பு அதில் கிடைக்கும் கருக்கை சேகரித்து அதில் கிடைக்கும் நெல்லை எடுத்து அரைத்து வாழவைத்தால் அந்த தாய்.உங்களின் பல கட்டுரைகள் நான் படிக்கும் பொழுது என்னுடைய பழைய நாட்களில் வாழ்வது போல இருக்கு.நான் தற்பொழுது பொறியாளராக வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறேன், என் மாத சம்பளத்தில் பெரும் பகுதியை மார்க்ஸ்ட் கமுனிஸ்ட் கட்சி நடத்தும் Dr.அம்பத்கர் கல்வி வேலைவாய்ப்பு மையத்துக்கு கொடுத்து வருகிறேன். வளர்க ம க இ க மக்கள் பணி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க