privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஉலகம்அமெரிக்காபகவானே இது அடுக்குமா ?

பகவானே இது அடுக்குமா ?

-

ரும் செப்டம்பர் மாதம் தன்னை வெள்ளை மாளிகையில் சந்திக்க வரும்படி அழைக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் அழைப்பிதழை அமெரிக்க வெளியுறவுத் துணை அமைச்சர் வில்லியம் பர்ன்ஸ் சென்ற வாரம் மோடியிடம் கொடுத்திருக்கிறார். விசா தராமல் விளையாடிய பகவனே இப்போது மனமிரங்கி தரிசனத்திற்கு நாள் குறித்தால் பக்தன் அடையும் பேரின்பத்திற்கு ஈடேது?

மோடி - ஒபாமா
பிரதமரானவுடன் மோடி மீது பொங்கும் அமெரிக்க பகவானின் கருணை.

ஒபாமாவின் அழைப்புக்கு நன்றி தெரிவித்த மோடி, சந்திப்பை தான் ஆவலுடன் எதிர்பார்ப்பதாகவும், அது இருதரப்பு உறவுக்கு புதிய உந்துதலையும் ஆற்றலையும் தரக்கூடியதாக இருக்கும் என்றும் கூறியிருந்தார். தன்னையும் ஒரு ஆளாக மதித்து, குற்றச்சாட்டுகளை மறந்து கூப்பிடும் பகவானின் பெருந்தன்மை நிச்சயம் மோடிக்கு பேராற்றலைக் கொடுக்குமென்பதில் ஐயமில்லை.

பிரதமரானவுடன் மோடி மீது பொங்கும் அமெரிக்க பகவானின் கருணை எத்தகையதாக இருக்கும் என்பதை புரிந்து கொள்ள சில ஆண்டுகள் பின் நோக்கி போக வேண்டியிருக்கிறது.

2002 குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகளில் சிக்கிக் கொள்ளாமல் நழுவி வந்த மோடியின் முயற்சிகளைப் பற்றி மும்பையில் இருக்கும் அமெரிக்க தூதரகம் வாஷிங்டனுக்கு அனுப்பிய கடித விபரங்களை தி ஹிந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் ‘தகவல் அறியும் சட்டத்தின்’ கீழ் இந்த தகவல்களை அமெரிக்க அரசிடமிருந்து தி ஹிந்து நாளிதழ் பெற்றிருக்கிறது. பகவான் தனது  திருவிளையாடல்களை பதிவு செய்திருப்பதும் பக்தர்கள் சம்பந்தப்பட்டவை என்றால் உடன் பகிரங்கமாக்குவதும் நல்ல விசயங்களே!

2010 டிசம்பர் மாதம் அமெரிக்க தூதரக அதிகாரிகள் குஜராத்துக்கு போய் வந்தது குறித்து 2011-ம் ஆண்டு ஜனவரி மாதம் அனுப்பிய அறிக்கையில், “2000 பேரை பலி வாங்கிய 2002-ம் ஆண்டு கலவரங்களுக்கு மோடி உடந்தையாக இருந்தார் அல்லது கண்டு கொள்ளாமல் இருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் அவரை விசா பெற தகுதியற்றவர் என்று அறிவித்திருந்தன” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அன்றைக்கு பகவான் இப்படி இருந்தது உண்மையா என்பதை பகவான் இன்றைக்கு எப்படி நடந்து கொள்கிறார் என்பதில் பாருங்கள்!

இஷான் ஜாஃப்ரி கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை பற்றி “மோடியை குற்றமற்றவர் என்று அறிவிக்க ஊடகங்கள் துடிப்பு” என்ற தலைப்பில் குறிப்பிட்டுள்ளது. “சிறப்பு புலனாய்வுக் குழுவின் முடிவு பற்றி அதிகாரபூர்வ செய்தி எதுவும் வெளியாவதற்கு முன்னரே மோடியின் அனுதாபி ஒருவர் இந்த செய்தியை கசிய விட்டிருக்கிறார்” என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்ட செய்தி ஒன்றைப் பற்றி தூதரகம் கூறியிருந்தது. பக்தன் இப்படி வெளிப்படையாக அழுகுணி ஆட்டம் ஆடுவது பகவானுக்கு குறையாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில் பகவான் ஆடினால் அது தொழில் முறையில் பாதுகாப்பாக இருக்கும்.

மார்ச் 2010-ல் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு மோடியை அழைத்திருந்தது.

“குறைந்தபட்சம் ஒரு வன்முறை நிகழ்விலாவது அவரது ஈடுபாடு குறித்த கேள்விகளை மோடி எதிர் கொள்ளவிருக்கிறார்” என்று குறிப்பிட்ட தூதரகம் அவர் புலனாய்வுக் குழுவின் அழைப்பை ஏற்றுக் கொள்வாரா என்றும் கேள்வி எழுப்பியிருந்தது. பகவானே ஒரு த்ரில்லர் விறுவிறுப்பில் காத்துக் கொண்டிருந்தார் போலும்.

ஜெர்மனியில் மோடி
பிரிக்ஸ் மாநாட்டுக்கு போகும் வழியில் ஜெர்மனியில் இறங்கிய மோடி

“பிப்ரவரி 2002 முதல் இன்று வரை கோத்ராவைத் தொடர்ந்த வன்முறை தொடர்பாக தன்னை எந்த புலன் விசாரணை அமைப்பும் விசாரிப்பதை தவிர்த்து வந்திருக்கிறார். சிறப்பு புலனாய்வுக் குழு முன்பு அவர் ஆஜராவாரா என்பது சந்தேகத்துக்குரியது, அப்படி ஆஜரானாலும் விசாரணை எவ்வளவு சீரியசாக நடத்தப்படும், குறிப்பாக முக்கியமான பிப்ரவரி 27, 2002 கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பது குறித்து விசாரிக்கப்படுமா” என்றும் அமெரிக்க தூதரகம் சந்தேகம் தெரிவித்திருந்தது. வரம் வாங்கி பக்தர்களே பின்னர் சதாம் மாதிரி எல்லை மீறிவிடுவதால் இப்போதே ஏதாவது கால்கட்டுகள் போட்டு விட்டால் பின்னர் பெட்டிப்பாம்புகளாக இருப்பார்களே!

“மோடி இன்னமும் பல்வேறு சட்ட வழிமுறைகளை பயன்படுத்தி சிறப்பு புலனாய்வுக் குழுவின் முன்பு ஆஜராவதை தவிர்க்க முயற்சிப்பார். இதுவரை செய்து வந்தது போலவே 2002 நிகழ்வுகளில் அவரது பங்களிப்பைப் பற்றிய கேள்விகளையும் விசாரணைகளையும் வெற்றிகரமாக தடுத்து விடுவார்” என்று குறிப்பிட்டிருந்தது. மோடியின் சாமர்த்தியத்தை பகவானே வியந்து பாராட்டுகிறார்.

அவருக்கு அனுப்பப்பட்ட சம்மன் குறித்து வேண்டுமென்றே தவறான தகவலை பரப்பும் நோக்கத்துடன் மோடி நடந்து கொண்டார் என்றது அமெரிக்க தூதரகம். சிறப்பு புலனாய்வுக் குழுவின் சம்மனைத் தொடர்ந்து ஒரு வாரம் அமைதி காத்த மோடி “மார்ச் 21-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு அலுவலகத்துக்கு போகவில்லை. மாறாக, மார்ச் 22-ம் தேதி தன்னை 21-ம் தேதி விசாரணைக்கு அழைக்கவேயில்லை என்று குஜராத் மக்களுக்கு ஒரு வெளிப்படையான கடிதம் எழுதினார். சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு தான் ஆஜராகாததை விமர்சிப்பவர்கள், “குஜராத்தை திட்டமிட்டு அவமதிக்கிறார்கள்” என்றும் அவர் கூறியதை அமெரிக்க தூதரக செய்தி சுட்டிக் காட்டியிருக்கிறது. இது நம்ம உத்தியாச்சே என்று பகவான் பரவசமடைந்திருக்கலாம்.

ஆனால், “ஒரு வழியாக மார்ச் 27-ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு மோடியை 8 மணி நேரத்துக்கும் மேல் விசாரித்தது” என்று மார்ச் 2010 தேதியிட்ட இன்னொரு கேபிள் தெரிவிக்கிறது. பரவாயில்லை பகவான் எதிர்பார்த்த மாதிரி பக்தன் விசாரணைக்காவது போயிருக்கிறார்.

மெர்க்கல் - மோடி
மோடிக்கு மெர்க்கலுடன் “டின்னர்” சாப்பிடும் வாய்ப்பு இல்லை.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த பா.ஜ.கவின் தேசிய செய்தித் தொடர்பாளர், “மோடி ஒரு பொறுப்பான குடிமகனாக கௌரவமாக நடந்து கொண்டார். இது கட்சிக்கு எந்த அவமானமும் இல்லை” என்று சப்பைக் கட்டியதை குறிப்பிட்டு விட்டு, அப்போதைய சட்ட அமைச்சர் காங்கிரசின் வீரப்ப மொய்லி, “இது போன்ற ஒரு நிலையில் மோடி மாட்டிக் கொண்டது துரதிர்ஷ்டகரமானது. ஆனால் யாரும் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை இது காட்டுகிறது” என்று சொன்னதை குறிப்பாக சுட்டிக் காட்டியிருக்கிறது அமெரிக்க தூதரகம். பாருங்கள் காங்கிரசு கூட பாஜகவின் இந்துத்துவத்திற்கு எதிரிகள் இல்லையென்று பகவானே படம் பிடித்திருக்கிறார்.

இந்நிலையில் வரும் செப்டம்பரில் அமெரிக்க அதிபரை சந்திக்கப் போகும் மோடி, “அப்பாடா, ஒரு வழியாக தப்பித்து விட்டேன்” என்று பணிவோடு நடந்து கொள்வார். “எங்கள் ‘மனித உரிமை’ கவலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்து விட்டு உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறோம். அதற்கேற்ப வேலை செய்ய வேண்டும்” என்று அமெரிக்கா அவருக்கு உத்தரவிடும். அதன்படி பகவான் மூக்கில் விரலை வைக்கும்படி மோடியின் உலகமய நடவடிக்கைகள் புயல் வேகத்தில் நடக்கும்.

இதற்கிடையில் பிரேசில் சொகுசு சுற்றுலா நகரமான போர்ட்டலிசாவில் நடைபெறவிருக்கும் பிரிக்ஸ் அமைப்பின் 6-வது உச்சிமாநாட்டில் கலந்து கொள்ள செல்லும் வழியில் மோடி ஜெர்மன் தலைநகர் பெர்லினில் ஒருநாள் தங்கியிருக்கிறார். ஜெர்மனியின்  பிராங்க்பர்ட் வழியாக பயணிப்பது என்ற திட்டத்தை ஜெர்மன்  அதிபர் ஏஞ்சலா மெர்க்கலுடன் சந்திப்புக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று பெர்லினில் ஒரு நாள் தங்கி போவது என்று மாற்றியிருக்கிறார் மோடி. ஏஞ்சலாவைப் பார்க்கப் போனது பகவானுக்கு பிடிக்குமா, வெறுக்குமா?

ஆனால், மெர்க்கல் ரியோ டி ஜெனிராவில் ஜெர்மன் அணி பங்கு பெற்ற உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியை பார்க்க போய் விட்டிருக்கிறார். ஜெர்மனி கால்பந்தில் வெற்றி பெறுவதை பார்க்கப் போவது, மோடி போன்ற அடிமையை சந்திப்பதை விட முக்கியமானது என்று மெர்க்கல் கருதியிருக்கலாம். ஜெர்மன் பகவானே மோடிக்காக காத்திருக்கவில்லை என்றால் உண்மையில் பக்தர்களின் யோக்கியதை என்ன?

பெர்லினில் பிராண்டன்பெர்க் கேட் அருகில் உள்ள ஒரு ஹோட்டலில் தங்கியிருந்த மோடிக்கு மெர்க்கலுடன் “டின்னர்” சாப்பிடும் வாய்ப்பு கிடைக்கா விட்டாலும், உலகக் கோப்பை இறுதிப் போட்டியை பார்ப்பதற்கு திரண்டிருந்த ஆயிரக் கணக்கான ஜெர்மன் ரசிகர்களை அவர் கண்டு கழித்திருப்பார் என்கிறது தி ஹிந்து செய்தி. பாருங்கள் கடைசியில் இந்துத்துவா தலைவனுக்கு பகவானுடன் ஒரு டின்னர் சாப்பிடவோ, சம்சாரிக்கவோ கூட வாய்ப்பில்லை. வல்லரசாகி என்ன பயன்?

மேலும் படிக்க…