privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசமூகம்சாதி – மதம்தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் - வன்னியர்) புரட்சிகர மணவிழா !

தர்மபுரியில் சாதி மறுப்பு (தலித் – வன்னியர்) புரட்சிகர மணவிழா !

-

லித், வன்னிய சாதிகளைச் சேர்ந்த இளவரசன் – திவ்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டதையும், இதை ஒட்டி பாமக தலைமையில்ஆதிக்க சாதி வெறியர்கள் தலித் மக்களின் வீடுகளை எரித்து சூறையாடியதையும் தமிழக மக்கள் அறிவார்கள். அதனைத் தொடர்ந்து தர்மபுரியில் சாதிய உணர்வு, முரண்பாடு தீவிரமடைந்தது. சாதி பெருமிதம் கொள்ளாமல் இருந்தவர்கள் கூட சாதிய கருத்துகளுக்கு ஆட்பட்டனர், சாதி வெறிக்கு பலியாகினர்.

சாதி கடந்து உழைக்கும் மக்களை ஒரே வர்க்கமாக அணிதிரட்டுவது தான் இப்பகுதியில் இயங்கிவரும் புரட்சிகர அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியின் கொள்கை, நடைமுறை. மேலே குறிப்பிட்ட சாதிவெறி தாக்குதலுக்கு பிறகும் வர்க்க ஒற்றுமையை கட்டியமைக்கும் அவசியத்தை மக்களிடம் பிரச்சாரமாக கொண்டு சென்றோம்.

சாதி என்பது இந்த சமூகத்தை பீடித்திருக்கும் நோய், அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றால் முதலில் சமூகத்தை நேசித்து அக்கறை கொள்ள வேண்டும். மேலும் சமூகம் சீரழிகிற போது அதை மாற்றியமைக்கும் அறிவியல் விதிகளை புரிந்திருப்பதோடு, அதை நடைமுறையில் சாதிக்க துணிவும் தியாகமும் தேவை. இவற்றை ஒருங்கே கொண்ட அமைப்பு தான் விவசாயிகள் விடுதலை முன்னணி.

வி.வி.மு தோழர்கள் தமது பிள்ளைகளை சாதி மறுத்து பள்ளிகளில் சேர்ப்பது போன்ற நடவடிக்கைகளை செய்து சாதியை மனதளவில் கூட நினைக்காமல் வாழ்ந்து வருகின்றனர். அதே போல பல சாதி மறுப்பு திருமணங்களை தர்மபுரி மாவட்டத்தில் நடத்தி வருகிறோம்.

எனினும் இளவரசன் மரணத்திற்குப் பிறகு தர்மபுரி மாவட்டத்தில் சாதிய கருத்துக்கள் மேலோங்கியுள்ள இன்றைய நிலையில் சாதி மறுப்பு புரட்சிகர மணம் புரிவது என்பது முக்கியத்துவம் வாய்ந்தது.

விவசாயம் அழிந்து வாழ வழியின்றி தர்மபுரி மக்கள் நாடோடிகளாவது இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையை எந்த ஓட்டுக்கட்சி அரசியல்வாதியாலும் மாற்றிவிட முடியாது. ஆனால் எரிகிற வீட்டில் பிடுங்கியது வரை ஆதாயம் என்ற வகையில் மக்களிடம் நிலவும் மூடத்தனமான சாதி உணர்வைத் தூண்டிவிட்டு அதையே தனது பிழைப்புக்கு மூலதனமாக மாற்றி வருகின்றனர், சாதியை வைத்து பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகள். உழைக்கும் மக்கள் ஒற்றுமையுடன் இருக்கும் போது மட்டுமே ஓட்டுச்சீட்டு சதிகாரர்களின் இந்த சூழ்ச்சியை புரிந்து கொள்ள முடியும். எனவே மக்கள் ஒற்றுமையின் அவசியம் இன்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் ஒரு அங்கமாகத் தான் 27.06.2014 அன்று தர்மபுரி மாவட்டம், பொன்னாகரம் பகுதியில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தினோம்.

சொல்லப்படுகிற வன்னிய சாதி ம்ற்றும் தலித் சாதி பின்னணியாகக் கொண்ட மணமக்கள் மணக்கோலம் பூண்டனர். மணமகன் தோழர் கோபிநாத், பொன்னாகரம் வட்டம் கரியம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர். மணமகள் தோழர் ஜெயந்தி கரியம்பட்டிக்கு அருகில் உள்ள கள்ளிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர். தோழர் கோபிநாத் விவசாயிகள் விடுதலை முன்னணியின் வட்டாரச் செயலாளர். இவர்கள் தங்களுக்குள் ஒருவருக்கொருவர் காதலித்துக் கொண்டது மட்டுமல்ல, இந்த சமூகத்தையும் காதலித்தனர். சமூக மாற்றத்திற்காக போராடிவரும் விவசாயிகள் விடுதலை முன்னணியின் முன்னணித் தோழர்களாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகின்றனர். இருவீட்டு உறவினர்கள் முன்னிலையில் இத்திருமணம் நடைபெற்றது என்பது தான் இதன் சிறப்பு.

மாலை 5.00 மணிக்கு தந்தை பெரியார் சிலைக்கு உறவினர்களும் தோழர்களும் புடை சூழ மணமக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பறை இசை முழக்கத்துடன் ”வர்க்க ஒற்றுமையை கட்டியமைத்து சாதியை ஒழிப்போம்” என்ற பேனர் முன் செல்ல, மணக்கோலத்தில் இருந்த மணமக்களைப் பின் தொடர்ந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட தோழர்களும் உறவினர்களும் ஊர்வலமாக வந்தனர். இந்த கண்கொள்ளாக் காட்சியை கடைவீதியில் இருந்த ஆயிரக்கணக்காண மக்கள் ஆச்சரியத்தோடும், மகிழ்ச்சியோடும் கவனித்தனர். இவ்வாறு ஒரு கிலோமீட்டர் மணமக்கள் ஊர்வலமாக சென்று அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

பிறகு திருமண மண்டபத்திற்கு வந்து உணவு விருந்தை முடித்துக் கொண்டு மாலை 6.00 மணிக்கு இருவீட்டார் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் இனிதே நடந்தேறியது. 1500-க்கும் மேற்பட்ட மக்கள் இத்திருமணத்தில் சாதி கடந்து கலந்து கொண்டனர். மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தலைமை தாங்க, மக்கள் கலை இழக்கிய கழகத்தின் கவிஞர் துரை சண்முகம் திருமணத்தை நடத்தி வைத்து சிறப்புரை ஆற்றினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

சடங்கு, சம்பிரதாயம், தாலி, சாதி, தட்சணை, மொய் ஏதுமின்றி நடைபெற்ற இத்திருமணம் தர்மபுரி மக்களிடையே புரட்சிகர தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அழைப்பிதழ்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இப்படிக்கு,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
தர்மபுரி (மாவட்டம்).