privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்

யாதும் – ஆர்.எஸ்.எஸ் , டிஎன்டிஜே விரும்பாத ஆவணப்படம்

-

யாதும் – முஸ்லிம் எதிர்ப்பு வரலாற்றுப் புரட்டைத் திரைகிழிக்கும் ஆவணப்படம்

முஸ்லிம் மக்களை ‘அந்நியர்களென்றும், அந்நிய மதத்தைப் பின்பற்றுகின்ற அவர்களுக்கு நாட்டுப்பற்றே கிடையாது’ என்றும் கடந்த 25 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் கும்பல் நடத்தி வரும் பொய்ப்பிரச்சாரம் பெரும்பான்மை சமூகத்தின் பொதுப்புத்தியில் ஆழப்பதிந்து விட்டது. இந்தப் பொதுக்கருத்தின் துணை இருக்கும் தைரியத்தில் போலீசு முசுலிம் இளைஞர்கள் மீது எண்ணற்ற பொய்வழக்குகளை தடையின்றிப் போடமுடிகிறது.

பொட்டல்புதூர் தர்கா
திருநெல்வேலிக்கு அருகில் உள்ள பொட்டல்புதூர் தர்கா

எங்கு குண்டுவெடிப்பு நடந்தாலும், “தான் அதற்குக் காரணமல்ல” என்பதை நிரூபிக்கும் நிலைக்கு ஒவ்வொரு முசுலிமும் தள்ளப்படுகின்றான். கோவை குண்டுவெடிப்பு முதல் அக்-ஷர்தாம், சூரத் வழக்குகள் வரை, எண்ணற்ற பொய் வழக்குகளில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான அப்பாவி முசுலிம் இளைஞர்கள் சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் வாழ்வைத் தொலைத்துள்ளனர். சுதந்திர தினம், குடியரசு தினம், டிசம்பர் 6 போன்ற நாட்களில் முசுலிம் ஒருவர், ரயிலிலோ பேருந்திலோ அச்சமின்றி பயணம் செய்ய முடியாது என்ற சூழல் உருவாக்கப் பட்டுவிட்டது. ஒட்டுமொத்த முசுலிம் சமூகத்தையும் பொது நீரோட்டத்திலிருந்து அச்சுறுத்தி அகற்றுவதில் பெரிய வெற்றியை இந்துமதவெறியர்கள் அடைந்துள்ளனர். இத்தகைய சூழலை உருவாக்கியதில், அவர்களால் திரித்துப் புரட்டப்பட்ட வரலாறுக்கு முக்கிய பங்கு உண்டு.

இதன் எதிர்விளைவாக, கணிசமான முசுலீம் இளைஞர்கள் – உயர் கல்வி கற்றவர்கள் கூட – அடிப்படைவாதத்தை நோக்கித் தள்ளப்பட்டிருக்கின்றனர். இசுலாமியர்களாகப் பிறந்த யாரும் தமது மதத்தையோ அல்லது மத கடுங்கோட்பாட்டுவாத அமைப்புகளையோ விமரிசிக்கக் கூடாது என்று தவ்கீத் ஜமாத் போன்ற அமைப்புகள் இசுலாமியர்களை மிரட்டுகின்றன. அவர்களை துரோகிகள் என்று தூற்றுகின்றன. இவ்வாறு முசுலிம் அடிப்படைவாதம் பெருகுவதைத்தான் இந்து மதவெறியர்களும் விரும்புகின்றனர். இரு தலைக் கொள்ளி எறும்பாக இசுலாமிய மக்கள் தவித்து வரும் இந்தச் சூழலில்தான், ‘யாதும்’ எனும் ஆவணப்படத்தை கோம்பை அன்வர் இயக்கி வெளியிட்டிருக்கிறார்.

தமிழ் முஸ்லிமாகிய இயக்குநர், தனது வேர்களையும் அடையாளத்தையும் தேடிப் புறப்படும் பயணத்தில் நம்மையும் உடன் அழைத்துச் செல்கிறார். எவ்விதமான கருத்துப் பிரச்சாரமும் இல்லாமல் வரலாற்றுத்தரவுகளையும் சான்றுகளையும் மட்டும் நம் முன்வைக்கிறார் அன்வர். இவற்றின் வழியாகவே உண்மையை வாசகன் உணர்ந்து கொள்ளச் செய்துவிடுகிறார் இயக்குநர். இதுதான் இந்த ஆவணப் படத்தின் மிகப்பெரும் வலிமை.

பொட்டல்புதூர் தர்காவினுள்
பொட்டல்புதூர் தர்காவினுள்

இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் எல்லோரும், தில்லி சுல்தான்களால் வாள் முனையில் மதம் மாற்றப்பட்டவர்கள் (எனவே அந்நியர்கள், துருக்கர்கள், துலுக்கர்கள்) என்று உருவாக்கப்பட்டுள்ள பொதுக்கருத்தை இப்படம் கேள்விக்குள்ளாக்கி உடைக்கிறது.

பாபர் வருகைக்கு 5 நூற்றாண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்ட ராஜராஜ சோழனின் தஞ்சைப் பெரிய கோவிலின் கல்வெட்டு ‘துருக்கன் அகமது’வைப் பதிந்துள்ளதும், அக்கோவில் கட்டப்படும் முன்பே உறையூரில் (இன்றைய திருச்சியின் ஒரு பகுதி) வாழ்ந்து மறைந்த நத்தர் வலி எனும் இறைநேசரின் தர்ஹாவும், ஆழ்வார் திருநகரியில் காணப்படும் அராபி வணிகர்களின் மரக்கலங்களின் புடைப்பு சிற்பங்களும் ஆர்.எஸ்.எஸ் பரப்பி வரும் திரிக்கப்பட்ட வரலாற்றை மறுத்து, தென் இந்தியாவில் இஸ்லாம் பரவிய வரலாற்றைச் சொல்கின்றன. நறுமணப் பொருட்களின் வழித்தடம் வழியாக அரபு நாடுகளிலிருந்து மலபார், சோழமண்டலக்கரை வழியாக கேரளம், தமிழ்நாட்டிற்கு இஸ்லாம் வந்ததை கண்முன்னே காணக்கிடைக்கும் ஆதாரங்களை எடுத்து வைத்து நிறுவுகிறது ‘யாதும்’.

தமது வழிபாட்டு இடங்களை உருவாக்கிய இஸ்லாமியர்கள் அந்தந்தப் பகுதியில் நிலவிய கட்டடக்கலை வடிவங்களிலேயே மசூதி, தர்ஹாக்களைக் கட்டியுள்ளதை பல்வேறு ஆதாரங்களுடன் அன்வர் நிறுவுகிறார். கேரளத்தில் கொல்லம் ஓடு வேய்ந்த கட்டிடங்களாகவும், தமிழகத்தில் திராவிடபாணிக் கட்டுமானங்களாகவும் காட்சியளிக்கின்றன அன்று கட்டப்பட்ட முஸ்லிம் பள்ளிகள்.

தர்காக்களில் வழிபட அனைத்து மக்களும் சென்றுவருவதையும், கோவில்கொடை போன்றே சிலம்பம், தவில், நாதஸ்வரத்துடன் தமிழ்நாட்டில் நடத்தப்படும் சந்தனக்கூடு விழாக்களையும் தமிழ் முஸ்லிம்களின் கலாச்சாரமாகப் பதிந்திருக்கிறார் அன்வர்.

அஞ்சுவண்ணம் கல்வெட்டு
கன்னியாகுமரி மாவட்டத்தின் களக்காட்டுக்கு அருகில் உள்ள ஏர்வாடியில் கண்டெடுக்கப்பட்ட அஞ்சுவண்ணம் கல்வெட்டு – அஞ்சுவண்ணம் தெருவில் வாழ்ந்து வந்த முஸ்லீம்களை குறிப்பிடுகிறது.

தமிழிலக்கிய வரலாற்றை எழுதியவர்கள் மறைத்து வந்துள்ள ஒரு பகுதியையும் தொட்டுக் காட்டியுள்ளார் – அது, இஸ்லாமியர்கள் தமிழுக்கு செய்த பணி. ‘ஆயிரம் மசாலா’ எனும் கேள்வி பதில் நூலில் தொடங்கி, கிஸ்ஸா, நாமா, முனாஜாத் போன்ற புதிய இலக்கிய வடிவங்களை இஸ்லாமியர்கள் தமிழுக்கு அறிமுகம் செய்ததையும், தமிழ் இசைக்கு இசுலாமியர்களின் பங்களிப்பையும் கவிஞர் அப்துல் ரகுமானின் பேட்டி வழியாகவும் குமரி அபுபக்கரின் பாடல்கள் வழியாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

இப்படத்தினை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பெரும் சிரமங்களுக்கிடையே எடுத்துள்ள அன்வர், கத்திமீது நடப்பது போன்ற செயலைச் செய்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் எனலாம். நீ தமிழனா, முஸ்லிமா என்றெல்லாம் கேட்கப்படும் கேள்விகளுக்கு “யாதும்” என்று விடை தந்திருக்கிறார் இயக்குநர். ஒருசார்பாக எதனையும் சொல்லாமல் பார்வையாளர்களின் சிந்தனையைக் கிளறிவிடும் வகையில் ”இவையெல்லாம் வரலாற்று ஆதாரங்கள். நீங்களே அவற்றிலிருந்து உணர்ந்து கொள்ளுங்கள்” எனச் சொல்லாமல் சொல்லியுள்ளது இப்படம்.

இப்படத்தில் குறிப்பிடப்படும் இரண்டு விசயங்கள் வரலாற்றை எப்படிப் பார்க்கவேணடும் என்று புரிந்து கொள்வதற்கான வாய்ப்பை நமக்குத் தருகின்றன.

  • பதினாறாம் நூற்றாண்டில் வடகேரளத்தின் சாமோரின் மன்னர் ஆண்ட பகுதியை கைப்பற்ற வந்த போர்த்துகீசியர்களை முறியடித்தவர் குஞ்ஞாலி மரைக்காயர் எனும் படைத் தளபதியாவார். அவரின் துணையோடு அந்நியப் படையெடுப்பை முறியடித்த சாமோரின் (சாமுத்ரி) மன்னர், மீனவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை முஸ்லிமாக மாற்றவேண்டும் என்று அரசாணை ஒன்றைப் பிறப்பித்திருக்கிறார் என்பதைக் கூறுகிறார் கேரளத்தைச் சேர்ந்த ஒரு வரலாற்று ஆய்வாளர்.
  • திருவிளையாடல் புராணத்தில் வரும் பிட்டுக்கு மண்சுமந்த படலத்தை மதுரையில் இருக்கும் புட்டுத்தோப்பு திருவிழாவில் சடங்காக ஆண்டுக்கு ஒரு முறை நடத்துகின்றனர். இதற்காக அமைக்கப்பட்டுள்ள மண்டபம் கீழ்த்தளத்தில் திராவிடக் கட்டடக்கலையையும் மேல்தளத்தில் இஸ்லாமிய பாணியையும் (பெர்சியன்) பின்பற்றிக் கட்டப்பட்டுள்ளது. இந்த விழாவில் பாரம்பரிய உரிமையாக தீர்த்தத் தொட்டிக்கு வேலி அடைப்பவர் முகைதீன் பிச்சை எனும் முஸ்லிமாவார்.

ஆவணப்படம் கூறும் குறிப்பிட்டுச் சொல்லிடும் இவ்விரண்டு விசயங்களையும் நாம் எவ்வாறு புரிந்து கொள்வது?

மிஸ்கல் பள்ளி
கோழிக்கோடு, குட்டிச்சிறாவில் உள்ள மிஸ்கல் பள்ளி

சாமுத்ரியின் காலத்தில் இந்து-முஸ்லிம் பகையோ, ஏன் இந்து மதம் எனும் கருத்தோ இன்றுள்ள அர்த்தத்தில் உருவாகிடவில்லை. இந்து என இன்று அறியப்படும் பெரும்பான்மை சமூகம் ஒரே மதமென உருவாகியிருக்கவில்லை. பல்வேறு சாதிகளும், அவைகளின் தனித்தனி வழிபாட்டு முறைகளுமே இருந்தன. சாமுத்ரிக்கும் குஞ்ஞாலி மரைக்காயருக்கும் இருந்த நெருங்கிய உறவு கூட சாமுத்ரிக்கும் மீனவர்களுக்கும் இருந்ததில்லை. மேலும் குடும்பத்தில் ஒருவர் முஸ்லிமாக மாறச்சொல்லி சாமுத்ரி மன்னன் மீனவர்களுக்கு உத்தரவிட்டிருப்பதற்கு காரணம் வலுவான போர்ப்படையை, மரைக்காயரின் தலைமையில் கட்டி, தனது அரசதிகாரத்தைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்லாமை கருவியாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் என்பதே.

இதனை மத நல்லிணக்கம் என்றோ, இந்து மன்னரின் பெருந்தன்மை என்றோ கருதுவது அபத்தம். மீனவர்கள் முஸ்லிமாக மாறுவதால் இந்து மதத்தினரின் எண்ணிக்கை குறைவது பற்றி இன்று இராம. கோபாலன் குமுறுவது போன்ற சிந்தனையே பதினாறாம் நூற்றாண்டில் கிடையாது. இந்தப் பதற்றம், காலனியாட்சியாளர்கள் ஒன்றுபடுத்தப்பட்ட இந்தியாவை உருவாக்கிய பின்னர், இந்து என்று பெயர் சூட்டியதற்குப் பின்னர், இன்னின்னாரெல்லாம் இந்து என்று சட்டரீதியில் வரையறுத்ததற்குப் பின்னர் உருவானது. கஜினியின் சோமநாதபுரப் படையெடுப்பை எதிர்த்துப் போரிட்டவர்களில் உள்ளூர் முஸ்லிம்கள் இருந்ததாக ரோமில்லா தபார் குறிப்பிடுவதையும், சிவாஜியின் படையில் முஸ்லிம்கள் இருந்ததையும் இந்தக் கோணத்தில்தான் பார்க்க வேண்டும்.

குஞ்ஞாலி மரைக்காயர் இந்தியாவின் முதல் கடற்படைத் தளபதி என்று போற்றப்படுபவர். அன்று தனது ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மீனவர்களை முஸ்லிமாக மாறச்சொன்ன சாமுத்ரி மன்னன், பின்னர் போர்த்துகீசியர்களுடன் சேர்ந்து கொண்டு, குஞ்ஞாலி மரைக்காயரைக் காட்டிக் கொடுக்கவும் தயங்கவில்லை என்பதையும் இங்கே நினைவிற்கொள்ளவேண்டும்.

ஆழ்வார்திருநகரி கந்தூரி
ஆழ்வார்திருநகரி கந்தூரி

மதுரை புட்டுத்திருவிழாவில் தீர்த்தத் தொட்டிக்கு வேலி கட்டுபவர் முஸ்லிமாக இருப்பது மக்களிடையே நிலவி வந்த சமூக உறவுக்கான ஒரு சான்று. நிலப்பிரபுத்துவ சமூகத்தில் கோவில்கள், திருவிழாக்கள் ஒவ்வொன்றிலும் பல்வேறு சாதிகளுக்கும் கடமைகளும் உரிமைகளும் வரையறுக்கப் பட்டு வட்டார அளவில் விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சேவை சாதியினரின் பங்களிப்பை உறுதிப்படுத்திட திருவிழாக்களில் அவர்களைக் கவுரவிக்கும் ‘சுதந்திரங்கள்’ ( சுதந்திரம் = தானியமாகவோ, பணமாகவோ அளிக்கப்படும் சிறப்பு ஊதியம்) இருந்தன. கைவினைஞர்களும் இவ்வாறு திருவிழாக்களோடு பிணைக்கப்பட்டிருந்தனர். அச்சாதியினர் மதம் மாறியபோதிலும் அவர்களின் மதமாற்றத்தை, அன்றைய சமூகம் (இந்து மதம் எனும் கருத்துருவாக்கம் உருவாகும் முன்னர் இருந்த சாதிய சமூகம்) பெரிதாக கருதவில்லை. கைவினைஞர்கள் மதம் மாறினாலும் அதே நிலவுடைமைக்கால உறவுகள் நீடித்தன என்பதையே முகைதீன் பிச்சையின் குடும்பம் இன்னமும் புட்டுத்திருவிழாவில் சேவை செய்து கவுரவத்தைப் பெற்றுக் கொள்வது காட்டுகிறது.

வரலாற்றுப் போக்கில் மக்களிடையே முகிழ்த்திருக்கும் இத்தகைய இணக்கமான உறவுகள் தொடர்வதைக்கூட இன்றைய இந்து, முஸ்லிம் மதவெறியர்கள் சகித்துக் கொள்ள மறுக்கிறார்கள். இந்து அல்லது முஸ்லிம் என்ற மத ரீதியான வரையறைக்குள் மக்களின் பண்பாட்டையும், வாழ்க்கையின் எல்லா விதமான நடவடிக்கைகளையும் அடக்குவதற்கு முயற்சிக்கிறார்கள்.

திராவிட பாணிக் கட்டிடக் கலையே தமிழ்முஸ்லிம்களின் கட்டிடக்கலையாக இருந்ததை அன்வர் சொல்லும்போது, இக்கட்டிடங்கள் எழும்பிய காலத்தில் வஹாபியிச முல்லாக்களோ, தவ்ஹீத் ஜமா அத் களோ உருவாகியிருக்கவில்லை என்பது நற்பேறு என்றே தோன்றுகிறது. அக்காலத்தில் சீனத்தில் பரவிய இஸ்லாம், சீனக் கட்டிடப் பாணியில் இருந்ததைப் போன்றே இங்கும் இயல்பாக இம்மண்ணின் கலை வடிவத்தையே வரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் இன்று தூய இஸ்லாம் பேசும் வஹாபி அடிப்படை வாதம், இவற்றுக்கு எதிதராக பத்வா பிறப்பிக்க கூடும்.

****

ஆழ்வார்திருநகரி கந்தூரி
ஆழ்வார்திருநகரி கந்தூரி

ந்திய துணைக்கண்டத்தில் இஸ்லாம் பரவிய வரலாற்றிலிருந்து சூஃபி ஞானிகளைப் பிரித்துப் பார்க்க முடியாது. சூஃபிகளின் இசைப்பாடல்கள், அவர்களது எளிய வாழ்க்கைமுறை, அவர்களில் பலர் ஒடுக்கப்பட்ட சாதிகள் மற்றும் சேவைச்சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தது போன்ற காரணங்கள் இஸ்லாம் பரவுவதில் பெரும் பங்கு ஆற்றியிருக்கின்றன.

இந்தியாவில் மட்டுமல்ல பாகிஸ்தானிலும் – குறிப்பாக பஞ்சாப், சிந்து மாநிலங்களில் – ஏராளமான இஸ்லாமியர்கள் சூஃபி மார்க்கத்தில் பற்றுள்ளவர்களே. இந்த தர்ஹா வழிபாடும், சந்தனக்கூடு போன்ற விழாக்களும் முஸ்லிம்களிடம் மட்டுமல்ல அனைத்து மதத்தினரிடமும் செல்வாக்கு செலுத்துகிறது. தமிழகத்தில் சுற்றுலா செல்லும் மக்கள் சிக்கல் முருகனுக்கு ஒரு கும்பிடு, நாகூர் தர்ஹாவுக்கு ஒரு கும்பிடு, வேளாங்கண்ணிக்கும் ஒரு கும்பிடு என்பதைத்தான் நடைமுறையில் வைத்திருந்தனர். இன்றும் அது தொடரத்தான் செய்கிறது. ஆத்தங்கரை பள்ளிவாசல் முதல் ஆஜ்மீர் தர்ஹா வரை இதுதான் நடப்பு.

அதனால்தான் “தர்ஹாக்களுக்கு செல்லாதீர்” என இந்து முன்னணி இந்து மக்களைக் கோருகின்றது. அத்துடன் “மாடனைக் காடனை வணங்கும் அறிவிலிகளை”, சமஸ்கிருதமயமாக்கப்பட்ட பார்ப்பன இந்து மதத்துக்கு மதமாற்றம் செய்கிறது. “முஸ்லிம் பக்கீரான ஷிர்டி சாய்பாபாவை வழிபடக்கூடாது” என இந்துக்களுக்கு துவாரகா சங்கராச்சாரி சமீபத்தில் உத்தரவிட்டுள்ளார். இதனை சாய்பாபா பக்தர்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர். வாரணாசியிலேயே சங்கராச்சாரியின் உருவப்படங்களை எரித்துள்ளனர்.

இன்னொரு பக்கம், வஹாபிகளும், தவ்ஹீத் ஜமா அத் போன்ற அடிப்படைவாத இயக்கங்களும் “தர்ஹாக்கள் இஸ்லாமல்ல” என்று அவற்றை ஒழிக்க வேண்டும் என்றும் கூச்சலிடுகிறார்கள். இடிக்கிறார்கள். இவர்களை இந்து பார்ப்பன கும்பலின் ஜாடிக்கேத்த வஹாபி மூடி என்று சொல்லலாம்.

கோம்பை தாமிர பட்டயம்
வலங்கை சாதியினரால் தமது பெண்கள் கடத்திச் செல்லப்படுவதைத் தடுத்த முஸ்லீம்களுக்கு நன்றி கூறும் இடங்கை சாதியினர் – கோம்பை தாமிர பட்டயம்.

சூஃபி மார்க்கம், தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு போன்ற “ஹராம்களை” ஒழிக்கத் துடிக்கும் வஹாபியிசம் உலகெங்கும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை உறுதி செய்ய வேலை செய்கிறது. இஸ்லாம் பரவிய நாடுகளில் 19-ம் நூற்றாண்டு வரை இந்தத் தூய்மைவாதம் இருந்ததில்லை. சர்வதேசிய ஒற்றை அடையாளமாக இஸ்லாமை உருவாக்கிடும் நோக்கில் செயல்படும் இந்த அடிப்படை வாதமே, ஏகாதிபத்தியம் உருவான 19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலத்தில்தான் உருவானது. இன்று இதன் புரவலராக இருப்பது சவுதி அரேபியா.

‘இந்து’ மதம் என்று இன்றைய பொருளில் அழைக்கப்படும் மதமும், இதே காலகட்டத்தில் ஒரு மையப்படுத்தப்பட்ட அரசை உருவாக்கிடும் போக்கில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் சட்டரீதியாக உருவாக்கப்பட்ட ஒன்றுதான். இதுவே தங்களின் ஆதிக்கத்துக்கு உகந்ததாய் இருப்பதை உணர்ந்த பார்ப்பன, பனியா கும்பல் இந்து-இந்தி-இந்தியா என்பதை உயர்த்திப் பிடிக்கிறது.

தர்ஹா வழிபாடு, சந்தனக்கூடு, சூஃபி மரபு போன்றவை இந்து முஸ்லிம் உழைக்கும் மக்களிடையே இயல்பாக நிலவும் நல்லிணக்கத்தைப் பேண உதவி செய்வதாலும், இந்து வேறு, முஸ்லிம்வேறு என்று பிரிப்பதற்கான வாய்ப்பைத் தடுப்பதாலும், இருதரப்பு மதவெறியர்களுமே இதனை எதிர்க்கின்றனர்.

இவர்கள் யாருக்கும் ‘யாதும்’ ஆவணப்படம் நிச்சயமாக உவப்பாய் இருக்காது. வெளிப்படையான பிரச்சாரம் எதுவும் இல்லாமல், இப்படம், பெரும்பான்மை மதத்தினர் மத்தியில் திரிக்கப்பட்ட வரலாறு உருவாக்கியிருக்கும் சித்திரத்தைக் கலைத்துப் போடுவதோடு, முஸ்லிம் அடிப்படைவாதிகளின் கனவையும் கலைத்துவிடுகின்றது. அந்தவகையில் இப்படம் ஆக்கப்பூர்வமான பங்கினைச் செய்துள்ளது.

“யாதும்” ஆவணப்படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இஸ்லாமிய மக்களுக்கு எதிரான பொய்களில் சிக்குண்டு கிடக்கும் இந்துக்களையும், தவ்ஹீத் போன்ற அடிப்படைவாத அமைப்புகளின் செல்வாக்கிற்கு ஆட்பட்டு வரும் இசுலாமியர்களையும் தவறான பார்வையிலிருந்து இப்படம் விடுவிக்கும்.

ஒருபுறம் நாட்டை அந்நிய ஏகபோக நிறுவனங்களுக்கு தாரை வார்த்துக் கொண்டே, இந்த மண்ணோடு ஒன்றிப்போன முசுலிம் மக்களை அந்நியர்களாக சித்தரிக்கும் இந்து மதவெறியர்களின் நடவடிக்கை, எத்தகையதோர் கீழறுப்பு வேலை என்பதை உணர்ந்திட இப்படம் துணைபுரியும்.

_____________________

பின்குறிப்பு:

தமிழ் எழுத்தாளர் ஜோ டி குருஸ், இப்படத்தில் மீனவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இருந்த நல்லுறவிற்கு சாட்சியமளித்துள்ளார். (அது அவர் மோடி பக்தராக மதம் மாறுவதற்கு முன்னரே எடுக்கப்பட்ட பேட்டி) மஸ்கோத் அல்வா விற்பதற்கு தங்கள் ஊருக்கு வரும் முஸ்லிம் வியாபாரிகளை சாச்சா, சாச்சி என அழைத்துப் பழகியதாக தனது மலரும் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் ஜோ.டி.குருஸ். அதே வாய்தான் இன்று முஸ்லிம்களைக் கொன்றுகுவித்த மோடியை ஆதரித்து மேடையேறிப் பிரச்சாரம் செய்கிறது. இந்த அசம்பாவிதத்துக்கோ அசிங்கத்துக்கோ இயக்குநர் பொறுப்பாக முடியாது.

________________

கோம்பை எஸ். அன்வர் – அறிமுகக் குறிப்பு

“அசைட்” என்று சென்னையை மையமாகக்கொண்டு வெளிவந்த ஆங்கிலப் பத்திரிகையில் ஃபிரீலான்ஸ் பத்திரிகையாளராகவும், புகைப்படக் கலைஞராகவும் தனது ஊடகப் பயணத்தை துவக்கியவர் கோம்பை எஸ். அன்வர்.

இன்று “வரலாற்றை” பதிவு செய்வதை தனது முக்கியப் பணியாகக் கருதுகிறார். ஆய்வாளராக தென்னிந்திய முஸ்லிம் வரலாற்றை ஆய்வு செய்யும் அவர், குறிப்பாக பெரிதும் தவறுதலாக எழுதப்பட்ட, புரிந்து கொள்ளப்பட்ட, முஸ்லிம் வரலாற்றில் கவனம் செலுத்துகிறார். கி.பி 1600-ல் இருந்து கி.பி 2000 வரையிலான சென்னை வரலாற்றைத் தொகுத்தளிக்கும் “Madras Gazateer Project”-ல் அவரும் ஒரு பங்களிப்பாளர். அண்மையில் தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது வருடத்தைக் கொண்டாடும் நோக்கோடு “பெரிய கோவில்” பற்றிய குறும்படங்களை இந்திய தொல்லியல் துறைக்காக எடுத்திருக்கிறார்.

__________________

– செங்கதிர்

__________________

யாதும்..

வேர்களையும் அடையாளத்தையும் தேடி ஒரு தமிழ் முஸ்லீமின் வரலாற்றுப் பயணம்
ஒளிக்குறுந்தகடு, விலை: ரூ 200

யாதும் ஆவணப்படம் குறித்து மேலும் அறிந்திட Yaadhum

ஆவணப்பட முன்னோட்டம்