Saturday, May 10, 2025
முகப்புகட்சிகள்அ.தி.மு.கதனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் ?

தனியார் சட்டக் கல்லூரி தொடங்க தடை ஏன் ?

-

ங்கெங்கினும் கல்வி தனியார்மயம் கோலேச்சிக் கொண்டிருக்கும் போது, தனியார் சட்டக் கல்லூரிகளைத் தொடங்கத் தடை விதிக்கும் ஒரு மசோதாவை 30.07.2014 புதன் கிழமை அன்று தமிழக அரசு சட்டசபையில் தாக்கல் செய்திருக்கிறது.

குறைந்த செலவில் தரமான சட்டக் கல்வி வழங்கவும், சமூக-பொருளாதார ரீதியில் நலிவுற்ற பிரிவினருக்கு தரமான சட்டக் கல்வி அளிக்கவும் தனியாரால் முடியவில்லை என, சட்டத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தாக்கல் செய்த மசோதா கூறுகிறது. தற்போது அரசு சார்பில் தமிழகத்தில் 9 இடங்களில் சட்டக் கல்லூரிகள் இருக்கின்றன. மேலும் போதிய எண்ணிக்கையில் படிப்படியாக புதிய கல்லூரிகளை நிறுவவும் தமிழக அரசு முடிவு செய்திருக்கிறதாம்.

தற்போது வி.ஐ.டி, சாஸ்த்ரா, சவீதா ஆகிய மூன்று தனியார் பல்கலைக்கழகங்களின் சார்பிலும் சட்டப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. மசோதா நிறைவேறும் போது இம்மூன்றைத் தாண்டி புதிதாக தனியார் நிறுவனங்கள் துவங்க முடியாது.

பொறியியல், மருத்துவம், செவிலியர், ஆசிரியர் பயிற்சி, தொழில் நுட்பம், பள்ளிக் கல்வி என அனைத்து கல்வி வகைகளிலும் தனியார் மயத்தை பெருக்கெடுத்து ஓடச் செய்த அரசு சட்டக் கல்வியை மட்டும் இப்படி தரங்கெட்ட தனியாரிடமிருந்து காப்பாற்ற வேண்டிய அவசியம் என்ன?

தனியார் கல்வி
மழலையர் பள்ளி முதல் முனைவர் படிப்பு வரை தனியாருக்கு தாரைவார்த்து விட்டு கல்வி தனியார்மயம்தான் அரசின் கொள்கை என்பது உறுதிபடுத்தப்ட்ட பிறகு இந்த மசோதா நாடகம் எதற்காக?

பொறியியல் கல்லூரி கவுன்சிலிங்கில் பல்லாயிரக்கணக்கான காலி இடங்கள் மூலம் தனியார் கல்வி தவித்துக் கொண்டிருக்கும் நிலை சட்டத்திலும் வந்து விடக்கூடாது என்ற முன்னெச்செரிக்கையா? இல்லை சொத்துக் குவிப்பு வழக்கு, வருமான வரி வழக்குகள் போன்ற சில்லறைத் தொந்தரவுகளை சட்டத்தின் சந்து பொந்துகளிலெல்லாம் புகுந்து நிர்மூலமாக்கும் சாணக்கியத்தனத்திற்கு ஒரு தரம் வேண்டும் என்ற எதிர்பார்ப்பா?

தரமில்லாத சட்டக் கல்வி படித்து வரும் தீமைகளுக்கு, தரமற்ற பொறியியல், மருத்துவம் படித்துவிட்டு வரும் தீமைகள் குறைவானதா? இல்லை நாளையே ஏன் இன்றே கூட ஒரு முதலாளி, ‘கல்வி தனியார் மயம் எமது பிறப்புரிமை, சாஸ்த்ராவுக்கு சட்டம் கற்றுக் கொடுக்கும் உரிமை வேதாந்தாவுக்கு இல்லையா’ என்று வழக்கு போட்டால் உச்சிக்குடுமி மன்றம் அதை ஏற்காமல்தான் போய்விடுமா?

மழலையர் பள்ளி முதல் முனைவர் படிப்பு வரை தனியாருக்கு தாரைவார்த்து விட்டு கல்வி தனியார்மயம்தான் அரசின் கொள்கை என்பது உறுதிபடுத்தப்பட்ட பிறகு இந்த மசோதா நாடகம் எதற்காக? கும்பகோணம் பள்ளி தீ விபத்து வழக்கு முடிவடைந்த பிறகு தனியார் பள்ளிகளில் பாதுகாப்பு வசதிகள் சோதித்தறியப்படும் என்பதே அரசின் நிலை மட்டுமல்ல, மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது. அதே மக்கள் தனியார் பள்ளிகளை அரசு ஏற்று நடத்த வேண்டும் என்று கோருவதில்லை. காரணம் தரமில்லாமல் திட்டமிட்டே நலிவடைய வைக்கப்பட்டிருக்கும் அரசு பள்ளிகளை அவர்கள் விரும்பமாட்டார்கள். இந்த அரசு சதியிலிருந்து மக்கள் வெளியேறுவது எப்படி?

தமிழக அரசு போடும் நாடகத்தின் பலமே ‘கல்வி தனியார் மயமே யதார்த்தம்’ என்று கட்டமைக்கப்பட்ட உண்மையில் குடிகொண்டிருக்கிறது. தனியார் கல்வி நிறுவனங்களில் அதிக கட்டணம் கட்டமுடியாமல் அவதிப்படும் மக்கள் இதை புரிந்து கொண்டு “கல்வி நமது அடிப்படை உரிமை” என்று தனியார்மயத்திற்கு எதிராக போராடாத வரை மசோதாவோ, அரசு உத்திரவோ எதுவும் எதையும் கிழித்து விடாது.