Friday, March 21, 2025
முகப்புமறுகாலனியாக்கம்விவசாயிகள்ONGC-ஐ எதிர்த்து வலங்கைமானில் வி.வி.மு பொதுக்கூட்டம்

ONGC-ஐ எதிர்த்து வலங்கைமானில் வி.வி.மு பொதுக்கூட்டம்

-

  • டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கவரும் மீத்தேன் திட்டத்தை ரத்து செய்!
  • காவிரி மேலாண்மை வாரியத்தையும,ஒழுங்குமுறை ஆணையத்தையும் உடனடியாக அமைத்திடு!
  • விளை நிலங்களை மலடாக்கி, மக்களின் உயிருக்கு உலைவைக்கும் ONGC-ன் எண்ணெய் எரிவாயுத் துரப்பண பணிகளை கைவிடு!

ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து டெல்டா மாவட்டம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை விவசாயிகள் விடுதலை முன்னணி முன்னெடுத்து வருகிறது. மீத்தேன் எடுப்புத் திட்டத்திற்கு எதிராக கடந்த மே 1-ம் தேதி கிரேட் எஸ்டர்ன் எனர்ஜி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடியதன் தொடர்ச்சியாக, “கீழிருந்து கட்டி எழுப்பப்படும் மக்கள்திரள் எழுச்சிகளின் மூலம் கார்ப்பரேட் பகற்கொள்ளையர்களை விரட்டியடிப்போம்” என்கிற முழக்கங்களை முன்வைத்துடெல்டா பகுதி முழுவதும் வட்டார அளவில் விவசாயிகளை ஒருங்கிணைத்து போராட்டக் குழுக்களை கட்டியமைத்து வருகிறது விவசாயிகள் விடுதலை முன்னணி.

இதற்காக உருவாக்கப்பட்டுள்ள மீத்தேன் திட்ட எதிர்ப்பு போராட்டக் குழுவின் சார்பாக கடந்த 19.07.2014 அன்று மாலை 06.30 மணியளவில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டாரத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.

டெல்டா மாவட்டங்களின் பிற பகுதிகளில் ஓரளவிற்காவது மீத்தேன் எதிர்ப்புப் போராட்டங்கள் நடந்து வந்த சூழலில் வலங்கைமான் பகுதியில் விவசாயிகளின் எதிர்ப்புப் போராட்டங்கள் ஏறத்தாழ இல்லை என்று கூறுமளவுக்குத்தான் இருந்தது. இந்நிலையில் மீத்தேன் எடுப்புத்திட்டத்தின் பின் உள்ள கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளையும், அதற்கு ஆதரவாக அரசும் சதித்தனமான முறையில் காவிரி நீரை தரமறுத்து, டெல்டாவை காய வைத்து பன்னாட்டு-உள்நாட்டு தரகுமுதலாளிகளுக்கு தாரை வார்ப்பதை அம்பலப்படுத்தி விவசாயிகளை இதற்கெதிராக செயல்படத்தூண்டும் வகையில் போராட்டக்குழுவில் இணைத்து கிராமந்தோறும் கமிட்டிகள் உருவாக்கப்பட்டன. எறும்பு ஊரக்கல்லும் தேயும் என்பதைப்போல விடாப்பிடியாக எமது அடுத்தடுத்த முயற்சிகளின் காரணமாக கிராமக்குழுக்களை ஒருங்கிணைத்து வலங்கைமான் ஒன்றியக்குழுவும் ஜனநாயகப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்டது.

வலங்கைமான் ஒன்றியம் முழுவதிலுமுள்ள கிராமங்களில் சுவரெழுத்துப்பிரச்சாரங்கள், நூற்றுக்கணக்கான சுவரொட்டிகள்,ஆயிரக்கணக்கான துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு விவசாயிகளை உணர்வூட்டினர் எமது தோழர்கள். கிராமம் கிராமமாக மெகாபோன் மூலமாக பொதுக்கூட்டத்தை ஒட்டி விளம்பரம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ஆர்வம் காட்டாமல் ஒதுங்கியிருந்த பெரு விவசாயிகளும்,நிலவுடைமையாளர்களும் தோழர்களின் இடைவிடாத உணர்வுபூர்வமான முயற்சிகளை அங்கீகரித்து தம்மையும் போராட்டக்குழுவில் இணைத்துக்கொண்டனர். நாற்று நடுமிடம், களைபறிப்பு, நூறுநாள் வேலை நடைபெறும் இடம், தேநீர்கடை எனப் பார்க்குமிடமெல்லாம் தோழர்களின் அரசியல் பேச்சுக்களால் பட்டித்தொட்டி எல்லாம் மீத்தேன் திட்ட எதிர்ப்புணர்வை விசிறியெழச் செய்தோம்.

வலங்கைமான் ஒன்றியத்தில் அனுமதி கேட்டவுடன் உள்ளுர் போலீசார் உடனடியாக கொடுத்துவிட்டனர். 30 அல்லது 40 பேர் மட்டுமே வருவார்கள் என்று கருதி பாதுகாப்புக்குக் கூட போலீசாரை அனுப்பிவைக்கவில்லை. உளவுப்பிரிவுப் போலீசார் மட்டும் 4 பேர் வந்திருந்தனர். ஆனால், பொதுக்கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திற்கெல்லாம் சாரைசாரையாக விவசாயிகள் டாடா ஏஸ், டிராக்டர் உள்ளிட்ட வண்டிகளில் வந்து குவிந்தனர். சுமார் 600-க்கும் மேற்பட்ட விவசாயிகள், வணிகர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துக்கொண்டனர்.

மீத்தேன் திட்ட எதிர்ப்புப் போராட்டக்குழுவின் திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர்.கு.ம.பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்கூட்டத்தில் வலங்கைமான் ஒன்றியத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி திரு.ரமேஷ் முன்னிலை வகித்தார். வலங்கைமான் ஒன்றிய அமைப்பாளர் திரு.சின்னத்துரை பேசும்போது, “ONGC-க்கு எதிராக நீங்கள் மட்டும்தான் தீவிரமாக எதிர்ப்புப் பிரச்சாரம் செய்கிறீர்கள். அவ்வாறு செய்யாமல் இருப்பதற்கு உங்கள் தலைமைக்கு என்னவேண்டுமோ அதை நாங்கள் செய்துகொடுக்கிறோம்” என்று ONGC தரப்பிலிருந்து பேரம் பேச ஆட்கள் வீடு தேடி வந்ததையும், “விவசாயத்திற்கும் மக்களுக்கும் துரோகம் செய்து என்னால் நிம்மதியாக இருக்கமுடியாது, நீங்கள் நினைப்பதைப் போன்ற இயக்கம் இதுவல்ல” என்று முகத்தில் அடித்தாற்போல் பேசி திருப்பி அனுப்பியதை பொதுக்கூட்டத்தில் பகிரங்கப்படுத்தினார்.

டெல்டா மாவட்ட தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர்.மாரிமுத்து , கம்பம் வட்டார வி.வி.மு. செயலர் தோழர். மோகன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

இறுதியாக ம.க.இ.க மாநில இணைச்செயலர் தோழர்.காளியப்பன் பேசுகையில், அம்மா உப்பு, அம்மா உணவகம், அம்மா மருந்தகம், அம்மா தண்ணீர் என தனியார் வியாபாரிகளின் விற்பனை ஏஜெண்டு போல அரசு செயல்படுவதை எள்ளி நகையாடினார். விவசாயத்தை அழித்துத்தான் வளர்ச்சி என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது. இத்திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு எதிராக மட்டுமல்ல அவர்களின் அடியாள்படையாக உள்ள இந்த மத்திய-மாநில அரசுகளுக்கு எதிரானதாகவும் இருப்பதால் டெல்டா பகுதி விவசாயிகள் இதனை எதிர்த்து வாழ்வா சாவா போராட்டத்தை நடத்த வேண்டும் என்று உணர்வூட்டிப் பேசியதை விவசாயிகள் உணர்ச்சி பொங்க கைதட்டி ஆரவாரித்தனர்.

அடுத்து நடந்த கலைக்குழுவினரின் எழுச்சிகரமான பாடல்களும் கலைநிகழ்ச்சியும் விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பை பெற்றது. துவக்கம் முதல் இறுதிவரை கூட்டம் கலையாமல் இருந்தது. பொதுக்கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பல விவசாயிகள் தங்கள் பங்களிப்பாக நிதியுதவியை ரூ.1000, ரூ.2000 என மேடையேறி வழங்கி தம் ஆதரவை வெளிப்படுத்தினர்.

பொதுக்கூட்டத்தைப் பார்த்த அப்பகுதி வணிகர் ஒருவர், “மு.க. ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்தபோது கூட 200 பேர்தான் வந்திருந்தனர். அதுவும் பிரியாணி, சரக்கு வாங்கித்தந்து தான் அழைத்து வந்தனர். ஆனால்,உங்கள் பொதுக்கூட்டத்திற்கு காசு எதுவும் கொடுக்காமலேயே எப்படி இவ்வளவு பேரைத் திரட்டினீர்கள்” என்று ஆச்சரியமாக கேட்டு பாராட்டினார்.

கார்ப்பரேட் முதலாளிகளை விரட்டியடிக்க விவசாயிகளை அணிதிரட்டும் எமது முயற்சியில் மிக சிறப்பானதொரு நிகழ்வாக இப்பொதுக்கூட்டம் அமைந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல்

விவசாயிகள் விடுதலை முன்னணி,
திருவாரூர் மாவட்டம்.
தொலைபேசி 7502607819

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க