அம்மாவை இழிவுபடுத்திய ராஜபக்சேவுக்கு கண்டனம்!
அன்றாடம் பெண்களை இழிவுபடுத்தும் இந்தக் கவிக் காக்கைகளை
சகித்துக்கொள்வது எங்ஙனம்?
“மங்கையரின் கூந்தலுக்கு இயற்கையிலேயே வாசம் உண்டா?” என்று மன்னனுக்கு எழுந்த சந்தேகத்தைவிட சிக்கலானது, “தமிழ்த் திரையுலகத்தினர்க்கு இயற்கையிலேயே ரோசம் உண்டா?” என்பது! சமுதாயத்தில் எது நடந்தாலும், காவிரி, ஈழத்தமிழர் என பேருக்கு ஒரு பிட்டை போட்டுவிட்டு, அதுவும் ஆள்பவர்களுக்கு உறுத்தாத வகையில், ஆபத்தில்லாமல் ‘ஹிட்டு’ கொடுக்கும் இந்த காக்கா கூட்டம் இன்று மாலை (07.08.2014) 5 மணியளவில் சென்னை, சர்.பி.டி. தியாகராயர் அரங்கில் (அம்மாவை இழிவுபடுத்திய ராஜபக்சேயைக் கண்டித்து) திரைக்கவிஞர்களின் சிறப்புக் கூட்டத்தை நடத்தவிருப்பதாக அறிவித்துள்ளது.
‘இவ்வளவு லேட்டாக கத்துவதே அம்மாவை இழிவுபடுத்துவதாகும்!’ என்று யாராவது போட்டுக் கொடுத்து விடுவார்களோ, என்ற பயத்தில் சத்தம் சற்று அதிகமாகத்தான் இருக்கும். ‘அளவு சுத்தமாக காலில் விழுவது யார்?’, ‘ஆவி நடுங்க விழுவது யார்?’ என்பதையெல்லாம் உளவுத்துறை நோட்டமிட வாய்ப்பிருப்பதால், விழுந்து கும்பிடுவதில் கரை வேட்டிகளையே விஞ்சும் அளவுக்கு கவிஞர்களின் ‘வேகம்’ இருக்கும் என்பதில் சந்தேகமில்லை!
தமிழகத்தின் நிலமும், வளமும், தாழ்த்தப்பட்ட தமிழச்சிகளின் மானமும் சூறையாடப்படும் போதெல்லாம், வாயை வாடகைக்கு பாட்டெழுத விட்டுவிட்டு, குத்துப்பாட்டுக்கு குப்புறப்படுத்து யோசிக்கும் இந்த தமிழின இழிவுகள், அம்மாவின் இழிவை துடைக்கப் புறப்பட்டிருக்கிறார்களாம்!
“சும்மா இருந்தால் அம்மாவின் கோபத்திற்கு ஆளாக நேரிடும்” என்ற அச்சத்தில் சில காக்கைகள், “இந்த நேரத்தில் கத்தினால் ஏற்கனவே விரட்டிவிட்ட போயசின் கைகள் ‘கண்டு கொள்ளும்’ வாய்ப்பு கிடைக்கும்” என்ற ஆசையில் சில அண்டங் காக்கைகள், “தீவிரமாய் முண்டியடித்தால் திவசச்சோறாவது கிடைக்கும்” என்று புதிதாய் பொரிந்த கோடம்பாக்கத்து குஞ்சுகள் புடைசூழ, சினிமாவில் பாட்டெழுதி பிழைக்கும் அனைத்து காக்காய்களும் தி.நகர் செல்கின்றன. இதைப் பார்த்து திகிலாகி, இழிவை துடைத்துக்கொள்ளும் விதமாக, ஒரிஜினல் காக்கைகள் இரண்டு நாளைக்கு சென்னையை விட்டே வெளியேறுகின்றன!
“சினிமாக்காரங்க, ஜால்ரா இதெல்லாம் தெரிந்த விசயந்தானே!” என்பதாக மட்டும் இதை பார்க்கமுடியாது! சீரழிந்த இந்த பிழைப்புவாதிகள்தான் தீபாவளி, பொங்கல், கல்யாணம், கருமாதி என்று எல்லா நாட்களிலும் தொலைக்காட்சியில் உட்கார்ந்துகொண்டு, மக்களுக்கு, ஒரு புதிய தலைமுறைக்கு ‘கருத்து’ சொல்லும் பொழுதுபோக்கும் அலைவரிசையாக தலையில் வந்து இறங்குகிறார்கள். இந்தத் தறுதலைகள் உருவாக்கும் ரக ரகமான பிழைப்புவாதப் பண்பாட்டின் கவர்ச்சியை கண்டிப்பதும், இதன் பக்கம் சும்மா ஒரு ‘சேஞ்சுக்காக’ என்று போய் சிக்கிக்கொள்ளும் ‘உணர்வாளர்களை’ தடுப்பதும் நம் தேவையாக இருக்கிறது.
இப்படியெல்லாம், முன் அறுதியிட்டு சொல்வது ரொம்ப ஓவராக படுகிறது என்று நினைப்பவர்கள் போய் எட்டிப்பாருங்கள், எந்தக் கூச்சமும் இல்லாமல், பிழைப்பதற்கு ‘சிறகடிக்கும்’ காக்கைகளின் தவிப்பை, இதை முழுமையாகச் சொல்லத் தெரியாத எங்கள் அறியாமையை நீங்கள் கண்டிக்கக்கூடும்!
அன்றாடம் ஆணாதிக்க வெறியோடு பெண்களின் உடலை கொத்துக்கறிபோட்டு பாட்டெழுதியும், “இவளுக இம்சை தாங்க முடியல” என்று பொறுக்கித்தனத்தில் ‘புலமை’ காட்டியும் பெண்களை இழிவுபடுத்துவதையே நகைச்சுவை, நடனம், பாட்டு என்று பிரித்து மேயும் இந்த சினிமா விலங்குகள் அம்மாவை இழிவுபடுத்தியதற்கு எதிராக சினம் வந்து கத்துவதை உங்களால் சகிக்கமுடியுமா? முதலில் அம்மாவாலேயே நம்ப முடியுமா? உங்கள் அனுபவத்தையும் பகிருங்கள்!
– சுடர்விழி
[…] நன்றி:வினவு […]
“அம்மாவை இழிவுபடுத்திய ராஜபக்சேவுக்கு”
Can you write back in VINAVU, What was actually posted about JJ & MODI in defence WEBSITE of Srilanka.So much of howling and barking about that.