Sunday, November 29, 2020
முகப்பு மறுகாலனியாக்கம் கார்ப்பரேட் முதலாளிகள் மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி !

மரபணு பயிர் அனுமதி: விவசாயத்தைத் தூக்கிலேற்றும் மோடி !

-

ந்திய விவசாயத்தில் இரண்டாவது பசுமைப் புரட்சியைக் கட்டவிழ்த்துவிடப் போவதாக பட்ஜெட்டில் அறிவித்திருக்கும் மோடி அரசு, அதனை “புரோட்டீன் புரட்சி” என அழைக்கிறது. அதாவது, மரபு சார்ந்த இந்திய விவசாயத்தை உயிரி தொழில்நுட்ப அடிப்படையைக் கொண்டு மாற்றியமைப்பதுதான் இந்த புரோட்டீன் புரட்சியின் அடிப்படையாகும். விவசாயத் துறையில் நான்கு சதவீத வளர்ச்சியைச் சாதிப்பதற்கும்; அதிகரித்துக்கொண்டே செல்லும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குவதற்கும், விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கும் இந்த மாற்றம் அவசியமென்று கூறி, மோடி அரசு இந்தப் புரட்சியை நியாயப்படுத்தியிருக்கிறது. குறிப்பாக, பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் மரபு சார்ந்த விவசாயத்தை அறிவியல் தொழில்நுட்ப அடிப்படையில் மாற்றியமைக்கப் போவதைக் குறிக்கும் விதத்தில் “ஆய்வகத்திலிருந்து விளைநிலத்துக்கு” என்ற முழக்கத்தை முன்வைத்திருக்கிறார்.

கத்தரிக்காய்
மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதைக் கண்டித்து ஹைதராபாத்தில் நடைபெற்ற போராட்டம் (கோப்புப் படம்)

இதுவொருபுறமிருக்க, விவசாய விளைபொருள் சந்தை அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வருவதை ஒழித்து, சந்தையைத் தனியார் வசம் ஒப்புவிக்கும் திட்டங்களும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் தேசிய பொது சந்தை ஒன்றை உருவாக்கப் போவதாக அறிவித்துள்ள மோடி அரசு, ஒழுங்குமுறை விற்பனைக்கூடச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைச் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறது. இந்தத் திருத்தங்கள் தனியார் சந்தை மற்றும் தனியார் விற்பனைக்கூடங்களை அமைப்பதை அனுமதிக்கும் நோக்கில் இருக்க வேண்டும் என்றும் கோடிட்டுக் காட்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், சிறு மற்றும் நடுத்தர வர்க்க விவசாயிகளை அடிப்படையாகக் கொண்டும், மரபு சார்ந்தும், ஓரளவிற்கு சுயேச்சைத் தன்மையோடும் இயங்கி வரும் விவசாயத்தையும்; அத்தியாவசிய விவசாய விளைபொருட்களின் விலைகளைத் தீர்மானிப்பது மற்றும் அவற்றைக் கொள்முதல் செய்வதில் அரசுக்குள்ள பாத்திரத்தையும் ஒழித்துக் கட்டி, இந்திய விவசாயத்தைப் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளின் பகடைக்காயாக மாற்றுவதுதான் மோடி அரசின் நோக்கமாகும்.

தேசிய பொதுச் சந்தையை உருவாக்கும் முதல் அடியாக நெல்லுக்கும் கோதுமைக்கும் மைய அரசு அறிவிக்கும் ஆதரவு விலையைக் காட்டிலும் கூடுதலாக போனஸ் அல்லது ஊக்கத்தொகையை மாநில அரசுகள் அறிவிக்கக் கூடாது என்ற உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது, மோடி அரசு. தமிழக அரசு சன்ன ரகத்திற்கு ரூ 70/-, சாதாரண ரகத்திற்கு ரூ 50/- என ஊக்கத் தொகை நிர்ணயித்திருக்கிறது. மோடி அரசு போட்டுள்ள உத்தரவை அமல்படுத்தினால் தமிழக விவசாயிகளிடமிருந்து சன்ன ரக நெல்லை ரூ 1,470/-க்குப் பதிலாக ரூ 1,400/-, சாதாரண ரக நெல்லை ரூ 1,410/-க்குப் பதிலாக ரூ 1,360/- என்ற விலையில் மட்டுமே கொள்முதல் செய்யமுடியும். நெல்லுக்கான ஆதரவு விலையை ரூ 2,500/- ஆக நிர்ணயிக்க வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் கோரி வரும் வேளையில், மோடி அரசோ கிடைப்பதையும் தட்டிப் பறிக்கும் உத்தரவை வெளியிட்டிருக்கிறது. கரும்புக்கு ஊக்கத் தொகை வழங்குவதையும் மாநில அரசுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என மைய உணவு அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கரும்பு ஆலை முதலாளிகளின் சார்பாக பேசியிருப்பதையும் இதிலிருந்து தனித்துப் பார்க்க முடியாது.

தமிழக விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதற்குத் தேவைப்படும் கூடுதல் நிதி 100 கோடி ரூபாய்தான். இதனை வைத்துப் பார்க்கும்பொழுது மாநில அரசுகள் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவதால் ஒன்றும் குடிமுழுகிப் போகப் போவதில்லை என்பதை யாரும் புரிந்துகொள்ள முடியும். தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை இந்த ஆண்டும் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் ஜெயா அறிவித்திருந்தாலும்,ஜெயாவின் “மைண்ட் வாய்ஸில்” பேசிவரும் தினமணி, “இப்படிப்பட்ட ஊக்கத் தொகைகளை வழங்குவதால்தான் அரிசியின் விலை சந்தையில் கூடிக் கொண்டே போவதாக” எழுதி மானிய வெட்டை நியாயப்படுத்தியிருக்கிறது.

இந்த ஊக்கத்தொகை வெட்டைத் தொடர்ந்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி, கத்தரிக்காய், கடுகு, கொண்டைக்கடலை உள்ளிட்ட 15 உணவுப் பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட சோயாபீன்ஸிலிருந்து தயாரிக்கப்பட்ட சமையல் எண்ணெயை இறக்குமதி செய்து விற்கும் உரிமத்தை மான்சாண்டோ, பாயர், பி.ஏ.எஸ்.எஃப். ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு வழங்கவும் அனுமதி அளித்து உத்தரவிட்டிருக்கிறது மரபணு பொறியியல் ஒப்புதல் கமிட்டி.

மரபணு பயிர் எதிர்ப்பு போராட்டம்
முந்தைய காங்கிரசு அரசு கொண்டு வந்த உயிரி தொழில்நுட்ப ஒழுங்குமுறை ஆணைய மசோதாவை எதிர்த்து தில்லியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்)

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மரபணு மாற்றம் செய்யப்பட்ட கத்தரிக்காயைக் கள ஆய்வு செய்வதற்கான அனுமதியை எதிர்த்து நாடெங்கும் விவசாயிகளின் போராட்டங்கள் நடந்ததையடுத்து அம்முடிவை விலக்கிக் கொண்ட காங்கிரசு ஆட்சியாளர்கள், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்குப் புதிய அனுமதி எதுவும் தரப் போவதில்லை என்று வாய்வழி உத்தரவாதத்தையும் அளித்தனர். எனினும், தமது ஆட்சியின் இறுதிக் காலத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட அரிசி உள்ளிட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்வதற்கு அனுமதி அளிக்க மன்மோகன் அரசு எடுத்த முடிவு, இந்த ஆட்சியில் நடைமுறைக்கு வந்திருக்கிறது.

சொன்ன சொல்லைக் காப்பாற்றுவார்கள் என நம்பியிருந்த விவசாயிகளின் முதுகில் குத்திய துரோகச் செயல் இது. மேலும், மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களைக் கள ஆய்வு செய்யும் அனுமதி வழங்குவதைத் தடைசெய்யும் வழக்கினை உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள தொழில்நுட்ப வல்லுநர் குழுவைச் சேர்ந்த பெரும்பான்மை உறுப்பினர்கள் கள ஆய்வுகளுக்கு பத்தாண்டு காலம் தடை விதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்துள்ளனர்; இப்பிரச்சினை தொடர்பாக கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட நாடாளுமன்ற நிலைக்குழுவும் கள ஆய்வுகளுக்குத் தடைவிதிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்திருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி இந்த அனுமதி அவசர அவசரமாக அளிக்கப்பட்டிருக்கிறது.

தனது தேர்தல் அறிக்கையில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களின் கள ஆய்வுகளுக்குத் தடை விதிப்போம் எனச் சவடால் அடித்த பா.ஜ.க., அதிகாரத்தில் உட்கார்ந்தவுடனேயே தட்டைத் திருப்பிப் போட்டு பன்னாட்டு விதை கம்பெனிகளுக்குச் சாதகமாகத் தட்டுகிறது. இந்த அனுமதிக்கு எதிர்ப்பு எழத் தொடங்கியவுடன், சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டிவிடும் குசும்புப் பேர்வழி போல, “இம்முடிவு அரசின் முடிவல்ல; தன்னதிகாரம் கொண்ட கமிட்டியின் முடிவு” எனக் கூறி, மோடி அரசைத் தப்ப வைக்க முயலுகிறார்.

அப்படியென்றால், இந்த நாட்டை ஆள்வது யார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசா? அல்லது நிபுணர்கள் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஏகாதிபத்திய அடிவருடிக் கும்பலா? கோடிக்கணக்கான விவசாயிகளின் உரிமையைவிட, மக்களுடன் எவ்விதத் தொடர்புமேயில்லாத நிபுணர் கமிட்டிகள், ஏகாதிபத்திய நிறுவனங்களிடம் இலஞ்சம் வாங்கிக்கொண்டு எடுக்கும் முடிவைத்தான் இந்த அரசு அமல்படுத்தும் என்றால், இது ஏகாதிபத்திய கைக்கூலி அரசு என்பதைத் தவிர வேறென்ன?

இந்த அனுமதியை ஆதரிக்கும் கைக்கூலி வல்லுநர்கள் அனைவரும், “இந்தியாவில் ஏழைகளின் பட்டினியைப் போக்குவதற்கு மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை அனுமதிக்க வேண்டும்; இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது ஏழைகளுக்கு மட்டுமல்ல, அறிவியலுக்கும் எதிரானது” எனச் சாமியாடுகிறார்கள். ஏழைகளின் பட்டினிக்கு காரணம் தானிய உற்பத்தி போதிய அளவு இல்லை என்பது அல்ல.

இந்திய விவசாயிகள், தாம் கடன்பட்டாவது ஒவ்வொரு ஆண்டிலும் 100 கோடி டன் அரிசியை, 95 கோடி டன் கோதுமையை, 170 கோடி டன் காய்கறிகளை, 40 கோடி டன் சிறு தானியங்களை, 18 கோடி டன் பருப்பு வகைகளை உற்பத்தி செய்கிறார்கள். இவற்றைச் சமச்சீரான முறையில் விநியோகிக்கும் கொள்கையை வகுத்துச் செயல்படுத்த அரசு மறுப்பதுதான் இந்தியாவில் இன்னமும் பட்டினி நிலவுவதற்கான அடிப்படையாகும். 66 கோடி டன் உணவு தானியங்களைத் தனது கையிருப்பில் வைத்திருக்கும் அரசு, அதனை மானிய விலையில் மக்களுக்கு வழங்க மறுப்பதுதான் ஏழைகளின் பட்டினிக்கு காரணம்.

marabanuபடம் : ஓவியர் முகிலன்

பருத்தி சாகுபடியில் மரபான விதைகளிடத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த மான்சாண்டோ கம்பெனியின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தி விதைகளைப் புகுத்திய பிறகு உற்பத்தியும் பெருகவில்லை; பருத்தி விவசாயிகளின் ஏழ்மையும் ஒழியவில்லை. மாறாக, மரபு சார்ந்த பருத்தி விதைகள்தான் ஒழிக்கப்பட்டன; மான்சாண்டோ கம்பெனியின் விதைகளின் விலைகள்தான் உயர்ந்துகொண்டே போனதே தவிர, விவசாயிகளின் வருமானம் உயரவில்லை. அம்மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால் ஆந்திராவிலும், மகாராஷ்டிராவின் விதர்பாவிலும் விவசாயிகளின் தற்கொலைச் சாவுகள் அதிகரித்தன. இவைதான் கைமேல் கண்ட பலன்.

அறிவு நாணயத்தோடு சிந்திக்கக்கூடிய பல அறிவியலாளர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கு எதிரான கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, இந்தக் கள ஆய்வுகளை விதை கம்பெனிகளும் அவர்களது கைக்கூலிகளாகச் செயல்படும் பல்கலைக்கழகங்களும், பேராசிரியர்களும்தான் நடத்துகிறார்கள். எனவே, இந்த ஆய்வுகள் அனைத்துமே ஒருதலைப்பட்சமானவை; மேலும், இவ்வாய்வுகள் வெளிப்படைத்தன்மையோடும் நடத்தப்படுவதில்லை. இவ்விதைகளை ஆதரிக்கும் அரசுகள், அதிகார வர்க்க கமிட்டிகள், அறிவியலாளர்கள் அனைவரும் மான்சாண்டோ போன்ற விதை கம்பெனிகளின் ஆய்வறிக்கைகளைத்தான் கிளிப் பிள்ளை போலச் சொல்கிறார்கள்.

இவற்றுக்கெல்லாம் மேலாக, மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளால், அவ்வுணவுகளை உண்பதால் மனிதர்களுக்கும், கால்நடைகளுக்கும், பிற தாவரங்களும் தீராத கேடுகள் உண்டாகும் என்பதை நிரூபிக்கும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. பிரேசிலில் பி.டி.சோயாவைப் பயன்படுத்தியவர்களுக்கு வயிற்றுப்போக்கு, அஜீரணம், தோல் அரிப்பு, தலைவலி உள்ளிட்ட ஒவ்வாமை நோகள் ஏற்பட்டு, அதனால் பி.டி.சோயா திரும்பப் பெறப்பட்டது.

மரபணு மாற்றப்பட்ட பயிர்களைத் தொடர்ந்து உட்கொண்டால் சிக்கில் செல் அனீமியா என்ற நோ ஏற்படும். இதனால் ரத்த சிவப்பணுக்கள் மாற்றம் அடைந்து ரத்தக் குழாக்குள் நுழையமுடியாத நிலை ஏற்படும் என இங்கிலாந்து ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். சுற்றுப்புறச் சூழல் மருத்துவத்துக்கான அமெரிக்க கழகம், “மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவுகளால் உயிரினங்களின் நோய் எதிர்ப்பு ஆற்றல், இனவிருத்தி செயல்பாடுகள், மன நலம் ஆகியவற்றில் கடும் விளைவுகளை ஏற்படும்” எனக் குறிப்பிட்டு, இப்பயிர்களுக்குத் தடைவிதிக்கக் கோரியிருக்கிறது.

இப்படிப்பட்ட அபாயங்களைக் கொண்ட மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகளை இந்தியாவில் அனுமதிப்பது, நமது பாரம்பரிய, பல்லுயிர்த் தன்மைகளைக் கொண்ட விதைகளை முற்றிலுமாக ஒழித்துக் கட்டும் அபாயத்தைக் கொண்டிருக்கிறது. இந்த அனுமதி சிறுகச்சிறுக இந்திய விவசாயத்தில் நிலவிவரும் சுயேச்சைத்தன்மையை ஒழிப்பதோடு, நமது சுயசார்பான உணவு உற்பத்தியையும் ஒழித்துக் கட்டும். சிறு, குறு, நடுத்தர விவசாயிகளைப் பன்னாட்டு நிறுவனங்களின் கொத்தடிமைகளாக மாற்றும்.

கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியாளர்கள் அவுரிச் செடியைப் பயிரிடக் கோரி இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியதை எதிர்த்து விவசாயிகளின் கலகம் வெடித்ததைப் போல, மரபணு மாற்றம் செய்யப்பட்ட பயிர்களுக்கும், அதனைத் திணிக்க முயலும் ஏகாதிபத்திய கைக்கூலிகளுக்கும் எதிராக விவசாயிகளின் கலகம் வெடிக்க வேண்டும். இக்கலகம் அன்றி, வேறு வழிகளில் இந்திய விவசாயிகளுக்கும் மக்களுக்கும் நியாயம் கிடைத்துவிடாது.

– திப்பு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________

  1. பெருத்த நாசத்தையும் பேரழிவையும் உண்டாக்கபோகும் இந்த நச்சு விவசாயத்தை எல்லாம் ஒன்று கூடி எதிர்க்க வேண்டும். விவசாயத்தை நாசம் செய்வது சர்வநாசம் என்பதும் இந்த பாவிகளுக்கு தெரியும். ஆனால் என்ன ஆனாலும் தான் தப்பி நாட்டைவிட்டு ஒடிவிட தயாராயிருக்கும் கறுப்பு ஆடுகள் தான் இதை செய்வது. பாதிக்கப்படப்போவது நடுத்தர சாமானிய மற்றும் ஏழை மக்கள் தாம்.

Leave a Reply to ராஷித் அஹமத் பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க