privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபார்ப்பனிய பாசிசம்சிறுபான்மையினர்சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

சூரத் வழக்கு: நிரபராதிகளின் கொலைக் களமாக குஜராத்!

-

1993-ம் ஆண்டு சூரத்தில் நடந்த இரு குண்டு வெடிப்புகள் தொடர்பான வழக்குகளில், தடா சட்டத்தின் கீழ் பத்து முதல் இருபது ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட 11 முஸ்லிம்களை நிரபராதிகள் என்று கூறி ஜூலை 17-ம் தேதியன்று விடுதலை செய்திருக்கிறது உச்ச நீதிமன்றம். விடுதலை செய்யப்பட்ட 11 பேரில் ஒருவர் 78 வயதான முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி. மற்ற பலர் காங்கிரசு தொண்டர்கள்.

சூரத் காங்கிரசு அமைச்சர்
20 ஆண்டுகளுக்கு பின் 78 வயதில் நிரபராதி என்று விடுதலை – முன்னாள் காங்கிரசு அமைச்சர் முகமது சுர்தி.

இதேபோல, 2002 அக்சர்தாம் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர், ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேர் உள்ளிட்ட அனைவரையும் மே-16, 2014 அன்று நிரபராதிகள் என்று கூறி உச்ச நீதிமன்றம் விடுவித்ததும் வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தத் தீர்ப்பு மோடியின் வெற்றிக் கொண்டாட்டக் கூச்சலில் அமிழ்ந்து போனது.

தற்போது சூரத் வழக்கில் 11 பேரை விடுதலை செய்திருக்கும் உச்ச நீதிமன்றம், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுவது உள்ளிட்டு குற்றங்கள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை என்பதுடன், தடா சட்டத்தின் கீழ் (சித்திரவதை செய்து) பெறப்பட்ட வாக்குமூலங்களைத் தவிர வேறு சாட்சியங்கள் எதுவுமே இல்லை என்றும் கூறியிருக்கிறது. மேலும் தடா சட்டத்தின் கீழ் தண்டித்தக்க ஒரு குற்றத்தை பதிவு செய்வதற்கு முன், அதற்கு மாவட்ட கண்காணிப்பாளரின் ஒப்புதலைப் பெறவேண்டும் என்ற விதியை மீறி, மாநில அரசின் கூடுதல் தலைமைச் செயலரிடம் ஒப்புதல் பெற்றிருப்பது முறைகேடானது என்றும் கூறி அனைவரையும் விடுவித்திருக்கிறது. இது வெறும் முறைகேடல்ல; இந்தப் பொய்வழக்கு மாநில அரசுத் தலைமையால் திட்டமிட்டு போடப்பட்டிருக்கிறது என்பதற்கான நிரூபணம்.

சூரத் பொய்வழக்கு என்பது பானைச் சோறுக்கு ஒரு சோறு. 1990-களின் துவக்கம் முதல் இன்றுவரை இந்தியா முழுவதும் இப்படி சிறை வைக்கப்பட்டிருக்கும் அப்பாவி முஸ்லிம்கள் பல்லாயிரம் பேர். அவர்களில் சிலர்தான் இத்தகைய தீர்ப்புகளில் விடுவிக்கப்படுகின்றனர். உச்ச நீதிமன்றம் வரை சென்று வழக்காடி வெற்றி பெறுவதற்குள் அவர்கள் வாழ்க்கை அழிந்து விடுகிறது. வழக்காட முடியாத ஏழை முஸ்லிம்ளின் வாழ்க்கை சிறையிலேயே கழிகிறது. அவர்களது குடும்பங்கள் சின்னாபின்னமாகின்றன.

அதே நேரத்தில் இத்தகைய அநீதிகளை இழைத்த கிரிமினல் கட்சி ஆட்சியில் அமர்த்தப்படுகிறது. 2002 படுகொலையின் நாயகனை முதல்வராகவும், பிரதமராகவும் ஆக்குமளவுக்கு பெரும்பான்மை சமூகத்தின் “ஞாபகமறதி” முற்றியிருக்கிறது. எனவே, இந்த வழக்கின் பின்புலத்தை விளக்குவது அவசியமாகிறது.

1992, டிசம்பர் 6-ம் தேதியன்று பாபர் மசூதி இடிக்கப்பட்டவுடனேயே, நாடு முழுவதும் முஸ்லிம்கள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு பாரதிய ஜனதா திட்டமிட்டிருந்தது. மறுநாள், டிசம்பர் 7-ம் தேதியன்று, மசூதி இடிப்பைக் கண்டித்து சூரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பு கல்வீச்சு மற்றும் தீவைப்பில் ஈடுபட்டது. அடுத்த கணமே 2000-க்கும் மேற்பட்ட ஆயுதம் தாங்கிய இந்து மதவெறிக் குண்டர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலைத் தொடங்கினர். முஸ்லிம் மக்கள் தப்பியோட முடியாவண்ணம் தெருக்களில் தடையரண்கள் எழுப்பப்பட்டன. முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பு கொடுக்கும் இந்துக்களும் கொல்லப்படுவார்கள் என்று கோயில் ஒலிபெருக்கிகளிலிருந்து அர்ச்சகர்கள் அறிவித்தனர். அடுத்த 6 நாட்கள் நீடித்த இந்தத் தாக்குதலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் சில இந்துக்களும் கொல்லப்பட்டனர். எண்ணற்ற முஸ்லிம் பெண்கள் கும்பல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டனர். சொத்துகள் கொள்ளையிடப்பட்டன. சுமார் 20,000 பேர் உள்ளூரிலேய அகதிகளாகி முகாம்களில் சரணடைந்தனர். கலவரத்துக்கு முன்னர் வாக்காளர் பட்டியல் எடுப்பது போல முஸ்லிம் வீடுகளை இந்து வெறியர்கள் அடையாளம் கண்டு வைத்திருந்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அன்று சூரத்தில் நடந்த கொடூரங்களை, இன்று நரேந்திர மோடிக்கு கூஜா தூக்கும் பெண் பத்திரிகையாளர் மது கிஷ்வாரின் “மனுஷி” என்ற பத்திரிகை விரிவாகப் பதிவு செய்திருக்கிறது. (மனுஷி, ஜன-ஏப், 1993)

1990-94 காலகட்டத்தில் சிமன்பாய் படேல் தலைமையிலான ஜனதா தளம்(குஜராத்), ஜனதா தளம், காங்கிரசு ஆகியவற்றின் கூட்டணி அரசு ஆட்சியில் இருந்தது. சூரத் குண்டுவெடிப்பு என்பது 1993 ஜனவரி மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடந்தன. இவற்றில் ஒரு பள்ளிச் சிறுமி கொல்லப்பட்டாள். 30 பேர் காயமடைந்தனர். ஜனவரியில் நடந்த குண்டுவெடிப்புக்காக 22 முஸ்லிம்கள் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். இரண்டு ஆண்டுகளுக்குப் பின் அவர்கள் அனைவரையும் நிரபராதிகள் என்று விடுவித்தது நீதிமன்றம். 1995-இல் பா.ஜ.க. ஆட்சி வந்தது. ஏப்ரலில் நடந்த குண்டுவெடிப்புக்காக காங்கிரசு அமைச்சர் சுர்தி உள்ளிட்ட 11 பேரை கைது செய்த போலீசு, ஜனவரி குண்டுவெடிப்புக்கும் சேர்த்து இவர்கள் மீது வழக்கு போட்டது. 2008-ல்தான் தடா நீதிமன்றம் இதனை விசாரித்து தண்டனை விதித்தது. அந்த தீர்ப்பைத்தான் தற்போது உச்ச நீதிமன்றம் ரத்து செய்திருக்கிறது.

அத்வானி - மோடி
பாபர் மசூதி இடிப்பு : சூரத் உள்ளிட்டு நாடெங்கும் முஸ்லீம் எதிர்ப்பு கலவரத்தைத் தூண்டிய அத்வானிக்கு மோடி அன்று அல்லக்கை.

குஜராத்தில் பாரதிய ஜனதா மட்டுமின்றி, காங்கிரசு, ஜனதா, ராஷ்டிரிய ஜனதா உள்ளிட்ட கட்சிகள் அனைத்துமே இந்துவெறிக் கட்சிகளாகத்தான் இருந்திருக்கின்றன. சூரத் குண்டுவெடிப்பில் ஒரு உயிர் போனதற்காக 11 நிரபராதிகள் தண்டிக்கப்பட்டனர். ஆனால் 1992-ல் 200 பேரைக் கொன்று இந்துவெறியர்கள் நடத்திய கலவரத்துக்காக எத்தனை பேர் தண்டிக்கப்பட்டிருக்கின்றனர்? ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. (மறந்துவிட்ட கலவரங்கள், இந்தியன் எக்ஸ்பிரஸ், 17.12.2009)

கலவரத்தை விசாரிப்பதற்காக டிசம்பர் 1993-ல் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி பி.எம்.சவுகான் தலைமையில் ஒரு விசாரணைக் கமிசன் அமைக்கப்பட்டது. ஜூன் 1996 வரை அந்தக் கமிசனுக்கு ஊழியர்களே நியமிக்கப்படவில்லை. இந்த நிலையிலும் 30.6.1997-க்குள் 1300 சாட்சிகளை விசாரித்து பதிவு செய்துவிட்ட சவுகான், தனது அறிக்கையை வெளியிட மாநில அரசிடம் மேலும் 4 மாத காலம் அவகாசம் கேட்டார். கால நீட்டிப்பு தரமுடியாதென்று மறுத்து கமிசனைக் கலைத்துவிட்டது வகேலா தலைமையிலான ராஷ்டிரிய ஜனதா அரசு.

இம்முடிவை எதிர்த்து மறைந்த வழக்குரைஞர் முகுல் சின்கா குஜராத் உயர் நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்தார். எதிர் வழக்காடிய வகேலா அரசு, “1992 கலவரத்துக்குப் பின்னர் தற்போது மாநிலத்தில் மத நல்லிணக்கமும் அமைதியும் நிலவுகிறது. இத்தகைய சூழ்நிலையில், கலவரம் நடைபெற்ற சூழல் குறித்த விசாரணையில் ஈடுபடாமல் இருப்பதே நல்லது. அத்தகைய விசாரணை மீண்டும் இரு பிரிவினருக்கிடையே துவேசத்தை தூண்டிவிடும்” என்று கூறி கமிசனைக் கலைத்ததை நியாயப்படுத்தியது.

இந்த வக்கிரமான வாதத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது. “காலம் ஓடி விட்டது. மக்கள் அந்த கருப்பு நாட்களை மறந்து விட்டார்கள். அதை மீண்டும் கிளற வேண்டாம் என்று அரசு கூறுவது சரிதான்” என்று சொல்லி முகுல் சின்காவின் மனுவைத் தள்ளுபடி செய்துவிட்டது குஜராத் உயர் நீதிமன்றம். (9.3.98)

இப்படித்தான், 2002 குஜராத் படுகொலையையும் மறந்து விடச் சொல்கிறார்கள். அரங்கேற்றப்படும் குண்டு வெடிப்பு நாடகங்கள், போலி மோதல் கொலைகள் – ஒவ்வொன்றிலும் நிரபராதிகள் தண்டிக்கப்படுகிறார்கள். இந்த நிரபராதிகளின் வாழ்க்கையை அழித்த இந்து மதவெறியர்களும், பொய் வழக்கு போட்ட போலீசு அதிகாரிகளும், பொய் சாட்சியங்களின் அடிப்படையில் அவர்களைத் தண்டித்த நீதிபதிகளும் கூண்டிலேற்றப்படுவதில்லை. மறந்து விடச் சொல்கிறார்கள். எத்தனை அநீதிகளைத்தான் மறக்க முடியும்?

– அழகு
______________________________
புதிய ஜனநாயகம், ஆகஸ்ட் 2014
______________________________