கம்போடியாவின் தலைநகர் நாம் பென்-இல் உள்ள பிரதமரும், சர்வாதிகாரியுமான ஹூன் சென் வீட்டை நோக்கி ஒரு பேரணி. அதில் கலந்து கொண்ட கிராட்டி மாகாணம், ஸ்நோல் மாவட்டத்தின் ஒரு கிராமத்தை சேர்ந்த நிலம் பறிக்கப்பட்ட விவசாயிகள் 300 பேர் மீது அரசு பாதுகாப்பு படைகள் மின்சார லத்திகளால் கடந்த திங்கள்கிழமை (18-08-2014) தாக்குதல் நடத்தியுள்ளனர்.
காலை 8 மணிக்கு நடந்த இந்த தாக்குதலில் நான்கு வயது குழந்தைக்கு தலையில் அடிபட்டுள்ளது. பிரம் சந்தா என்ற நாற்பத்தி ஐந்து வயது பெண்ணின் குழந்தை அது. அதுவரை தாயை கடுமையாக அடித்து கீழே தள்ளி மின்சார ஷாக் வைக்க முயன்ற போலீசார், குழந்தையின் தலைப்பகுதியில் காயம் கடுமையாக இருக்கவே விட்டுவிட்டனராம். ஆனால் மொத்தமாக நடந்த தாக்குதலில் பத்து பேர் வரை படுகாயம் அடைந்துள்ளனர்.
மக்களிடமிருந்து ஏறக்குறைய 1,500 ஹெக்டேர் விளைநிலத்தை (1652) மிளகு மற்றும் மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை பயிரிடுவதற்காக தென்கொரியாவில் இருந்து செயல்படும் ஹரிஸான் விவசாய அபிவிருத்தி கழகம் என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு மாவட்ட இணை ஆளுநர் சாம் நால் பிடுங்கிக் கொடுத்துள்ளார். ஏறக்குறைய 1987 முதல் இந்த இடங்களில் விவசாயம் செய்து வந்த இம்மக்களை ஒரேயொரு புகார் மூலம் இந்நிறுவனம் விரட்டியடித்துள்ளது. அதாவது சட்டவிரோதமாக தங்கள் நிலத்தில் பயிர் செய்கிறார்கள் என்று.
25 ஆண்டுகளாக கம்போடிய பிரதமராக உள்ள ஹூன் சென், 2013-ல் நடந்த தேர்தலிலும் வெற்றி பெற்றார். தனது 74வது வயது வரை அதாவது 2026 வரை பிரதமராக தொடருவேனென அதிகாரபூர்வமாக அறிவித்து விட்டார். அப்படித்தான் கம்போடியாவை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல முடியுமாம். மேற்படி கிராமத்தில் இருந்த 1500 ஹெக்டேர் விளைநிலத்திற்கும் முறையான பட்டாவை 2013 தேர்தலுக்கு முன்னர் 2012-ல் தான் விவசாயிகளுக்கு அரசாங்கம் கொடுத்தது.
இப்போது, “பன்னாட்டு விவசாய கம்பெனி வந்தவுடன் உள்ளூர் அதிகாரிகள் மக்கள் நலனில் போதிய அக்கறை செலுத்தவில்லை” என்றும், “நிலத்தை அளப்பதற்காக முன்வந்த மாணவ தன்னார்வ தொண்டர்கள் திறமையாக செயல்பட முடியாவிடில் பதவி விலகுங்கள்” என்றும் செவ்வாய்க்கிழமை (19-08-2014) நடைபெற்ற அதிகாரிகளுக்கான உணவுப் பாதுகாப்பு பயிற்சிப் பட்டறையில் பேசிய பிரதமர் எச்சரிக்கை விடுத்து நாடகமாடியிருக்கிறார். இவ்வளவிற்கும் மேற்படி நிறுவனத்தின் பெரும்பங்கை கையில் வைத்திருப்பவர் அவரது அமைச்சரவையில் தொழில்துறை, சுரங்கத் துறை, மின்துறை அமைச்சர் சூய் செம்-ன் மனைவி தான். அவரது நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க விரும்பாத ஹூன் சென் உள்ளூர் அரசியல்வாதிகள், மாணவர்கள் மீது பழியைப் போட்டு தப்பிக்க பார்க்கிறார்.
“மக்களது பிரச்சினைகளை தீர்க்க முடியாக அலுவலர்கள் எல்லாம் வீட்டுக்கு போகலாம்” என்று பயிற்சிப் பட்டறையில் திட்டவட்டமாக சொல்லி விட்டார் சென். அந்த வகையில் ‘அவரால் தான் தங்களது நிலத்தை மீட்டுத் தர முடியும்’ என்று அவரது வீடு நோக்கி ஊர்வலம் வந்த மக்களின் கணக்குப்படி அவர்தான் முதலில் பதவி விலகிட வேண்டியவராக இருக்கிறார். ஆனால் அதற்கு இன்னும் ஒரு பன்னிரெண்டு ஆண்டுகள் நிலத்தை இழந்த விவசாயிகள் கொலை பட்டினி கிடக்க வேண்டும்.
இரண்டு வாரங்களுக்கு முன் நிலத்தை மீட்பதற்காக தலைநகருக்கு வந்த 90 குடும்பங்களும், கடந்த வெள்ளிக்கிழமைக்குள் பிரச்சினையை தீர்த்து வைத்து தங்களது நிலங்களை திரும்பித் தர வேண்டும் என்று அரசுக்கு கெடு வைத்திருந்தனர். இதற்காக அங்குள்ள கட்டுமானப் பணிகள் நடக்கும் இடமொன்றில் கூடாரங்களை அமைத்து இந்த விவசாயிகள் தங்கியிருந்தனர். எதிர்க்கட்சியான தேசிய மீட்புவாத கட்சியினர் அவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கி போராட்டத்தை தூண்டுவதாக ஆளும் கம்போடிய மக்கள் கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர்.
உண்மையில் அவர்களது இளைஞர் அணியினர் கட்சி கட்டளையையும் மீறி விவசாயிகளை சந்தித்து உணவுப் பொருட்களையும், போர்வைகளையும் நேரில் சென்று தந்திருக்கின்றனர். தலைநகரின் பெரும்பாலான மக்களும் இப்போராட்டத்திற்கு தார்மீக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
2003லிருந்து ஏறக்குறைய 21 லட்சம் ஹெக்டேர் விளைநிலங்களை இப்படி தனியாருக்கு தாரை வார்த்த வகையில் அங்குள்ள 4 லட்சம் மக்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர். அப்படி நிலத்தை பறிகொடுத்த மக்கள் வரிசையாக தலைநகருக்கு வந்து இழப்பீடுகளை பெற்றுச் சென்ற வண்ணமிருக்கின்றனர். வான் சொபாத் என்ற மனித உரிமை ஆர்வலர் இவர்களுக்கு தங்க இடமளித்து வருகிறார். அவருக்கு அரசு தரப்பில் இருந்து மிரட்டல்கள் வந்தவண்ணம் இருக்கின்றன.
கம்போடிய மக்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லா மெங் கின் நிறுவனமான சுகாகு இங்க்-உடன் அரசு போட்டுக் கொண்ட ஒப்பந்தப்படி 8 கோடி டாலருக்கு 99 ஆண்டுகளுக்கு 133 ஹெக்டேர் பரப்பளவில் தலைநகரத்தில் இருக்கும் போயங் காக் ஏரி குத்தகைக்கு விடப்பட்டது. ஏறக்குறைய 4,252 குடும்பங்கள் அங்கிருந்து 20 கிமீ தொலைவில் நகரத்திற்கு வெளியே தூக்கியடிக்கப்பட்டார்கள். 2007-ல் இந்த ஒப்பந்தம் கையெழுத்தான போது மூன்றுவித நட்ட ஈடுகளில் ஒன்றை தெரிவு செய்ய மக்கள் பணிக்கப்பட்டார்கள். ஒன்று 20 கிமீ தூரத்தில் ஒரு வீடு, இன்னொன்று வேறு ஏதாவது ஒரு இடத்தில் அரசு விரும்புகையில் ஒரு அடுக்குமாடி குடியிருப்புடன் 500 டாலர் நட்ட ஈடு, இல்லாவிடில் 8500 டாலர் நட்ட ஈடு.
இதை வாங்கிக் கொண்டு வெளியேறிய மக்கள் தாங்கள் இழந்த நிலத்திற்கும், இந்த தொகைக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது என்பதை பிபிசிக்கு செவ்வியாக தெரிவித்திருந்தனர். நாம் பென் நகரத்தின் 11 சதவீத அடித்தட்டு மக்கள் இப்படி வெளியேற்றப்பட்ட பகுதிகள் கம்போடியாவின் செம்மஞ்சேரிகள் தான் என்பதை அந்தப் பேட்டிகள் உறுதி செய்கின்றன. இந்த நிறுவனத்துக்கு 2013 பிப்ரவரியில் கம்போடிய நிதி அமைச்சகம் நாட்டின் வறுமையை குறைக்க பாடுபட்டதாக சொல்லி விருது கொடுத்தது தான் காலக் கொடுமை.
அரசு சார்பாக பாதிக்கப்பட்டவர்களிடம் யாரும் மனுக்களை வாங்க கூடாது என்று பிரதமர் எச்சரித்துள்ளார். இந்த தடியடிக்கு முன்னர் எதிர்க்கட்சி எம்பிக்கள் இருவர் வெளியில் வந்து மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கியிருக்கின்றனர். ஆளும் கம்போடிய மக்கள் கட்சி கேம்ரூஜ் இயக்கத்தில் இருந்து பிரிந்த வியட்நாமிய ஆதரவு பெற்ற போலி கம்யூனிஸ்ட் கட்சி. இந்தியாவில் நந்திகிராமில் நிலத்தை பறிப்பதை எதிர்த்த மக்களை, போலீசு குண்டர்களுடன், இணைந்து தாக்கிய, பெண்களை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய தொண்டர்களைப் பெற்ற மார்க்சிஸ்டுகளின் கூட்டணி ஆட்சிக்கு கூட இடது சாரி முன்னணி என்றுதான் பெயர். போலிகள் எங்கிருந்தாலும் கொள்கையால், நடைமுறையால் ஒன்றுபடுகிறார்கள் என்பதற்கு கம்போடியாவும் நமக்கு ஒரு சாட்சி.
இருப்பினும் இந்த செய்தியை ஊடகங்களில் பிரபலமாக்கி பேசும் மேற்குலக ஊடகங்கள், விவசாயிகளின் நிலங்களை பறிப்பதற்கு அடிப்படையான பன்னாட்டு நிறுவனங்கள், உலகமயத்தை ஆதரிக்கின்றனர் என்பதே உண்மை. அதனால்தான் இந்த சம்பவம் போலிசின் தடியடி என்பதாக மட்டும் சுருக்கி பார்க்கப்படுகிறது.
மறுகாலனியாக்கத்தில் இந்தியா, கம்போடியா என்று வேறுபாடு இல்லை. இதை உணர்ந்து போராடாத வரை விவசாயிகளுக்கும் விடியல் இல்லை.
ஹூன் சென் வீட்டின் முன்பு…