privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்இதர கட்சிகள்பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

பச்சமுத்து தர்பாரில் கிளாப் அடிக்கும் சீமான்

-

பாராளுமன்ற தேர்தலை ஒட்டி  நடந்த நாம் தமிழர் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் பேசிய சீமான், தேர்தலுக்கு பிறகு புலிபாய்ச்சல் என்ற வேலைத் திட்டத்தை வைத்து சீறிப்பாயப் போவதாக அறிவித்திருந்தார். புலிக்குட்டி எதுவும் சீறிப்பாய்வது போல தெரியவில்லை. ஆனால், சீமானை பற்றி பல பூனைக்குட்டிகள் தான் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார். பச்சமுத்து ஏழை மாணவர்களை படிக்க வைக்கிறாராம்.

உலகமே காறி துப்பும் ஒரு கல்விக் கொள்ளையனான பச்சமுத்துவை பற்றி எஸ்.ஆர்.எம் மாணவர்களிடமோ இல்லை பணம் கட்டிய பெற்றோர்களிடமோ கேட்டால் வண்டிவண்டியாக சொல்வார்கள். ஆனால் கூச்சமே இல்லாமல் ஒரு கல்விக் கொள்ளையனை போற்றி புகழ்கிறார் சீமான்.

ஒரு வேளை பச்சமுத்து புலி ஆதரவளாரக இருப்பாரோ என்று நீங்கள் எண்ணினால் இந்த வீடியோவை பார்ப்பது அவசியம்.

புலிகளையும் பிரபாகரனையும் வண்டி வண்டியாக கழுவி கழுவி ஊற்றுகிறார் பச்சமுத்து. ‘என் அண்ணன் பிரபாகரன்’ என்றும் ‘இடப்புறத்தில் விழுந்த உணவைக் கூட சாப்பிடாத மானப் புலி பரம்பரை நாங்கள்’ என்றும் பேசித்திரியும சீமான் இதைக் கேட்டபிறகு என்ன செய்திருக்கவேண்டும். நரம்புகள் புடைக்க, ரத்தம் சூடேறி வாங்கடா தம்பிகளா என்று கூறி புதிய தலைமுறையையும், எஸ்.ஆர்.எமையும் முற்றுகையிட்டு மன்னிப்பு கேள் என்று போராடியிருக்க வேண்டும்.

சீமான், பொன்னார், பச்சமுத்து
புலிப்பார்வை என்ற திரைப்பட வெளியீட்டு விழாவில் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பச்சமுத்துவுடன் ஒரே மேடையில் கலந்துகொண்டு பேசிய சீமான், ‘பெருமகனார் – பெருந்தமிழர்’ பச்சமுத்துவின் வள்ளல் தன்மையை விதந்தோதி புகழ்ந்துள்ளார்.

சீமான் கேட்காமல் இருந்திருக்க மாட்டார். “ஏன்யா, என் தலைவனைப் பழித்துப் பேசினாயாமே” என்று கோபப்பட்டு சீறியிருப்பார். பிறகு, பாரிவேந்தர் பேசிய பஞ்சாயத்து டீல் சீமானுக்குப் பிடிச்சுப் போயிருக்க கூடும். யார் கண்டது?

ஏன் பாரிவேந்தரை எதிர்க்கவில்லை என்று நாம் கேட்டால், “நான் ஈழம் சென்றபோது…” என்று ஆரம்பித்து,  “அங்கு மறைவிடத்தில் அண்ணன் எனக்கு பயிற்சியளித்தபோது…” என்று நீட்டி “தம்பி நன்றாக கேட்டுக்கொள், பச்சமுத்து நம்ம அண்ணன் அவரை கண்ணீர் வராமல் நீதான் பார்த்துக் கொள்ள வேண்டும்.” என்று தலைவர் சொன்னார் என்று எதையாவது அடித்து விடுவார்.

பிரபாகரனை பற்றி அவர் கூறி வரும் கதைகளை நம்பும் ஆக்சன் திரைப்பட ரசிகர்கள் கூட்டம் இருக்கும் வரை இதுபோன்ற கதைகளுக்கு பஞ்சமிருக்காது. பிராபகரனை தான் சந்தித்த போது நடந்தாக கூறும் கதைகளை தம்பிமார்கள்
யாராவது தொகுத்து புத்தகமாக போட்டால் காந்தி தொகுதிகளைவிட அதிகமான தொகுப்புகளை பெறமுடியும் என்பது மட்டும் நிச்சயம்.

“வணக்கத்திற்குரிய ஐயா பெருந்தமிழர் பாரிவேந்தர்” என்ற அடைமொழியுடன் கூழைக் கும்பிடு போட்டு மண்டியிடுகிறார் இந்த மண்டியிடாத மானத்துக்கு சொந்தக்காரர். சுற்றுலா வந்த புத்த பிக்குகளை தாக்கிய ‘வீரம்’ பச்சமுத்துவின் முன்னால் இருக்கும் இடம் தெரியாமல் ஒளிந்துகொண்டது ஏன் என்று எந்த தம்பியும் சீமானிடம் கேள்வி எழுப்பவில்லை.

பாரிவேந்தர்  கல்வியை விற்பனை சரக்காக்கும் ஒரு கல்வி கொள்ளையன். தமிழ் மாணவர்களை சுரண்டுபவர். நரவேட்டை மோடியை ஆதரித்தவர். இத்தனைக்கும் மேலாக சீமான் தன் தலைவராக கூறும் “பிரபாகரன் தான் ஈழ இன அழிப்புக்கு முக்கிய காரணம். பிரபாகரன்தான் ஈழத்தை பற்றி பேசுகிறார். மக்கள் பேசவில்லை. மக்களை மனித கேடயமாக பயன்படுத்தினார்” என்று பேசியிருப்பவர். ‘இத்தகையவரின் கூட்டத்திற்கு செல்கிறோமே, நாலு பேரு காறி துப்புவானே’ என்ற அச்சம் கூட இல்லாமல் போகிறார் என்றால், வலுவான காரணம் எதுவும் இல்லாமல் அண்ணன் இதைச் செய்வதற்கு வாய்ப்பே இல்லை.

“இலங்கையுடன்யாரும் அன்னந்தண்ணி புழங்கக்கூடாது” என்று மற்றவர்களுக்கு செய்த நாட்டாமையை, இவர்கள் யாரும் பெருந்தமிழர் பெருமகனாருக்கு செய்யவில்லை. தமிழகத்திலிருந்து சினிமா துணை நடிகர்கள் யாரும் இலங்கைக்கு செல்கிறார்களா என்று விமான நிலையங்களில் ஸ்லீப்பர் செல் போட்டு இவர்கள் கண்காணித்துக் கொண்டிருந்த காலத்தில் “எஸ்.ஆர்.எம் லங்கா” என்று இலங்கை அரசுடன் இணைந்து பல்கலைக்கழகம் அமைத்துக் கொண்டிருந்தார் பச்சமுத்து.

வழக்கமாக ஓலைப்பாயில் நாய் மூத்திரம் போனதை போல சத்தம் நிக்காமல் பேசும் திறமை வாய்ந்த வீரர்கள் யாரும் அப்போது ஒரு வார்த்தை கூட பேசவில்லை.

வைகோ, சீமான், நெடுமாறன்சீமானை மட்டும் நாம் குறை சொல்லமுடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பித்து இன்று வரை பச்சமுத்துவுடன் கூட்டணியில் இருக்கிறார் தன்மான சிங்கம் வை.கோ. பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கிரேக்கத்தில் நடந்தது எல்லாம் நினைவில் வைத்திருக்கும் வை.கோவுக்கு, சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபாகரன் மீது பாரிவேந்தர் காறிதுப்பியது மறந்து விட்டது.

சீமான் அப்படிப்பட்ட ஞாபக மறதிக்காரர் அல்ல. “பெருமதிப்புக்குரிய ஐயா பாரிவேந்தர் அவர்கள் நம்முடைய நட்பு சக்தி, அன்னார் அவர்களை எதிர்த்து களமாட போவதில்லை” என்று கட்சி செயற்குழுவில் அறிவித்தார். சீமானைப்போல அதிகமான நட்புசக்திகளை கொண்டவர்களை இந்த பூலோகத்தில் எவரும் பார்க்க முடியாது.

காடுவெட்டி குரு இவருக்கு நட்புசக்தி, பா.ம.க தூண்டி விட்ட சாதி வெறியால் கொல்லப்பட்ட இளவரசனின் நத்தம் காலனி மக்களும் நட்புசக்தி, பெருமகனார் பால்தாக்கரே நட்புசக்தி, யாசின்மாலிக்கும் நட்புசக்தி, குஜராத்தின் கடனை அடைத்து மிச்ச பணத்தை உலக வங்கியில் டெபாசிட் செய்திருக்கும் மோடி நட்புசக்தி, இலை மலர்ந்தால் ஈழத்தை மலரவைக்கும் அம்மாவும் நட்புசக்தி, இடிந்தகரை மக்களும் நண்பர்கள், வைகுண்டராஜனும் நண்பன், கத்தி லைக்காவும் நண்பன், ‘நண்பனுக்கு நண்பன் எனக்கும் நண்பனே’ என்ற சசிகுமார் தத்துவப்படி ராஜப்க்சேவும் நண்பன்.

அப்போ யாருதான்யா எதிரி என்று கேட்கிறீர்களா?

தம்பிமார்கள் முகநூல் வாயிலாகவே யூரின் டெஸ்ட் செய்து யார் யார் மலையாளி, தெலுங்கன் என்று கண்டுபிடித்து முத்திரை குத்தி  வைத்திருக்கிறார்கள். ஆகவே, நமக்கு எதிரிகளே இல்லையே என்று தமிழினம் கவலை கொள்ளத் தேவையில்லை.

இதுநாள் வரை பச்சமுத்துக்கு தமிழினவாதிகள் ஆதரவளித்து வந்தது புதிய தலைமுறையில் முகம் காட்டத்தான் என்று பாமரத்தனமாக எண்ணியிருந்தோம். ஆனால், மேற்கண்ட நிகழ்ச்சியில் பேசிய சீமான் தனக்கும் பச்சமுத்துவுக்குமான டீல் என்ன என்பதை இலைமறைகாயாக வெளியிட்டார். அதாகப்பட்டது எம்பெருமான் பச்சமுத்து தன் கல்லூரி நிகழ்ச்சிக்கு சீமானை அழைத்திருக்கிறார். இருவரும் அருகருகே அமர்ந்து அளவளாவிக் கொண்டிக்கும் போது, யாருக்கும் கேட்காமல் சீமானின் காதருகே வந்திருக்கிறார் பச்சமுத்து.

வந்து, “நீங்கள் (ஏழை) மாணவர்களை அனுப்பி வையுங்கள் நான் படிக்க வைக்கிறேன்” என்றாராம். அன்றிலிருந்து இவரும் அனுப்பி வைக்க வைக்க அவரும் படிக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். எத்தனை சீட், என்ன என்று எந்த விவரமும் கூறவில்லை. பெருந்தமிழர் என்பதால் பெரிய எண்ணிக்கையில்தான் இருக்கும் என்று ஊகிக்கலாம்.

இதே போலத்தான் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜன் இல்ல திருமண விழாவிற்கு சென்று  சிறப்பித்து வந்தார். ராஜபக்சேவின் நண்பர்களான லைக்கா குழுமம் தயாரித்திருக்கும் கத்தி படத்தையும் ஆதரிக்கிறார். இது குறித்து கேள்வி எழுப்பியவர்களிடம் “எதிர்க்க முடியாது, என்னான்ற? படத்தை தடுத்துப்பார் என்று நான் எதிர் போராட்டத்தில் ஈடுபட்டால் என்ன செய்துவிடமுடியும் உங்களால்?“ என்று கத்தி பட முதலாளிகளின் சார்பில் வாதாடும் வழக்கறிஞர் போல சீறுகிறார் சீமான்.

seeman-puli

அடுத்து இவர் முன்வைக்கும் வாதம் தான் நகைச்சுவையின் உச்சம். இந்தக் காட்சியில்தான்  உண்மையிலேயே ஹீரோ என்ட்ரி ஆகிறார். “நானும் விஜயும் சண்டை போட வேண்டும். இது தான் இவர்களின் நோக்கம். ஈழ ஆதரவாளர்களை விட விஜய் ரசிகர்கள் அதிகம். படத்தை நிறுத்தணும் என்று சொன்னால் அவன் ரசிகர்கள் எதிரிகளாகி விடுவார்கள். தேவையற்ற சிக்கல் ஏற்படும்” என்கிறார். இந்த டீலுக்கான பின்புலம் மற்றுமொரு தருணத்தில் வெளியாகலாம்.

அடுத்ததாக அவர் கூறுவது  “கருத்தைத்தான் பார்க்கணும், யார் எடுத்தார்கள் என்று பார்க்கக்கூடாது”  இதுதான் முக்கியமான லா பாயின்ட். பணப்பற்றாளரும், சாதிப் பற்றாளரும், ஆர்.எஸ்.எஸ் பற்றாளரும், சமஸ்கிருதப் பற்றாளரும், தமிழ்ப்பற்றாளருமான பொள்ளாச்சி மகாலிங்கத்துக்கு விருதளித்து கொண்டாடியவர் நெடுமாறன். அப்புறம் விளார் நடராசன் (சசிகலா) சேர்த்து வைத்திருந்த தமிழ் மக்களின் பணத்தில் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டியவர். இதையெல்லாம் ஏனென்று கேட்காத தமிழ் கூறும் நல்லுலகம் தன்னை மட்டும் வறுப்பது ஏன் என்பது சீமானின் ஆதங்கம்.

சீமானை முகநூல் மூத்திரச்சந்துகளில் பலரும் அடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் சந்தடி சாக்கில், வை.கோவின் தம்பிகளும்  முக்காடு போட்டுக் கொண்டு சேர்ந்து அடிக்கிறார்கள். இந்த அநீதியை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும்?

கத்தி விவகாரத்தில் அண்ணன் நெடுமாறனைக் கலந்தாலோசித்து விட்டுத்தான் முடிவெடுத்ததாக பண்பலை வானொலிப் பேட்டியில் ஒரு “பிட்”டைப் போட்டிருக்கிறார் சீமான். அன்று இதே போன்ற ஒரு சூழ்நிலையில் சிவகாசி ஜெயலட்சுமி பொங்கி எழுந்ததன் விளைவாகத்தானே “ஏட்டு முதல் எஸ்.பி வரை” என்ற இலக்கியம் வெளியானது!

ஆகவே, இது தனக்கு மட்டுமே நேர்ந்த அவலம் என்று சீமான் வருந்தத் தேவையில்லை. ‘பெருந்தமிழர்’ தமிழுக்காக விருது வழங்கும் விழாவில் வைகோ கலந்து கொள்ளப் போகிறார். பல அறிஞர்களுக்கு விருது கொடுக்கப்போகிறார் பாரி வேந்தர். நாளைக்கு இதெல்லாம் வரலாற்று பாடத்துல வரும். மாணவர்கள் எல்லாம் நோட்ஸ் எடுப்பாங்க.

பாரிவேந்தர் ஈந்த கார்களின் மீது படரும் முல்லைக்கொடிகளின் எண்ணிக்கை போகப்போக, கூடும். அப்புறம் “அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா” என்று ஆகிவிடும்.

அறத்துக்கு அத்தாரிட்டியான ஜெயமோகனே வேந்தர் ஈந்த காரின் மீது படர்ந்திருக்கும் போது, சீமானை மட்டும் தாக்குகிறார்களே!

கவுண்டமணி சொன்னதுபோல, சத்திய சோதனை தான்!

– ரவி