privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திகருத்துரிமையை பறிக்கும் காவி பயங்கரவாதத்தை கண்டிப்போம் !

கருத்துரிமையை பறிக்கும் காவி பயங்கரவாதத்தை கண்டிப்போம் !

-

தென்னிந்திய புத்தகப் பதிப்பாளர் மற்றும் விற்பனையாளர் சங்கமும், கன்னியாகுமரி மாவட்ட அரசு நிர்வாகமும் சேர்ந்து நடத்தும் நாகர்கோயில் புத்தகக்கண்காட்சியில் கீழைக்காற்று வெளியீட்டகமும் இடம்பெற்றுள்ளது.

காவி பயங்கரவாதம்
நாடு முழுக்க ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா சக்திகளின் ஜனநாயக விரோத நடவடிக்கைகள்

அரசியல், வரலாறு, சமூகஅறிவியல், தமிழியல் ஆய்வுகள், பெரியார் அம்பேத்கர் படைப்புகள் போன்ற பல தலைப்புகளில் ஆன நூல்களை வழக்கம் போல வாசகர்கள் வரவேற்று வாங்கிச் செல்வதோடு, எம்மை பாராட்டி ஊக்குவித்தும் வருகின்றனர். இதைக் கண்ணாறப் பார்த்து கடுப்பான சிவசேனாவைச் சேர்ந்த சிலர், அரங்கில் நுழைந்து நோட்டமிட்டு, ”இந்து என்று சொல்லாதே! ராமன் பின்னே செல்லாதே!” கவிதை நூலும், ”ராமன் தேசிய நாயகனா? தேசிய வில்லனா?” என்ற புதிய கலாச்சாரக் கட்டுரை நூலும் இந்துக்கள் மனதை புண்படுத்துவதாகவும், இவைகளை வைக்கக் கூடாது என்றும், புத்தகங்களை அனுமதியின்றி செல்போனில் படம் பிடித்தும் அரங்கில் பணியாற்றிய தோழரிடம் மிரட்டியுள்ளனர்.

தோழரோ, அச்சுறுத்தலுக்கு பணியாமல் “நூற்றுக்கணக்கான இந்துக்கள் விரும்பி வாங்கிச் செல்லும் இந்த நூல்களை, ஆயிரக்கணக்கான இந்துக்கள் மறு பதிப்பாக படித்து பாதுகாக்கும் இந்த நூல்களை எடுக்க முடியாது” என மறுத்துப் பேசியுள்ளார்.

அடுத்து ஒரு நாள் கழித்து காவிக் கும்பல் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன” அரங்கிற்கு சென்று அங்கிருக்கும் பெரியார் நூல்களைப் பார்த்து எரிச்சலாகி “அர்த்தமற்ற இந்து மதம்” (மஞ்சை வசந்தன்), கி. வீரமணியின் “கீதையின் மறுபக்கம்” நூல்களை வைக்கக் கூடாது என மிரட்டி கலாட்டா செய்துள்ளனர். அந்த அரங்கின் தோழர்களும், “உன் விருப்பத்திற்கு ஆட முடியாது” என எதிர்த்துப் பேசியுள்ளனர். சென்ற ஆண்டும் இந்தக் கும்பல் கலாட்டா செய்து மக்களிடம் தனிமைப்பட்டு போனது.

வாசகர்களுக்கு இடையூறின்றி புத்தகக் காட்சியை நடத்தி, பதிப்பகங்களுக்கு பாதுகாப்பு தர கடமைப்பட்ட மாவட்ட நிர்வாகம் கருத்துரிமைக்கு எதிராக வன்முறை செய்யும் கும்பலை கைது செய்து நடவடிக்கை எடுக்காமல், பதிப்பகங்களிடம், “பார்த்து நடந்து கொள்ளுங்கள், அவர்கள் இந்த ஊரில் இப்படித்தான் !” என பயங்கரவாதிகளுக்கு பணிந்து போகுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஒருவருக்கு ஒரு நூலை படிக்க விருப்பமில்லை என்றால் புறக்கணிக்கும் உரிமை உண்டு, ஆனால் பிறர் படிப்பதற்கான உரிமையை தடைசெய்யும் அதிகாரம் உனக்கு கிடையாது என சட்டப்படி பாசிஸ்டுகளின் அடாவடித்தனத்தை கண்டிக்க வேண்டிய நிர்வாகம் தயங்குவது சரியல்ல.

சாதி அமைப்பை நியாயப்படுத்தும் “மனுதர்மம்”, “சதுர்வர்ணம் நமா திருஷ்டம்” என்று தீண்டாமையை பரப்பும் பகவத் கீதை போன்ற சட்டத்திற்கு எதிரான பல ஆர்.எஸ்.எஸ் நூல்களை பெரும்பான்மை உழைக்கும் மக்களை புண்படுத்தக் கூடியது என்று புறக்கணிக்க வேண்டிய அரசு, பெரியார், அம்பேத்கர் போன்ற மக்கள் தலைவர்களின் சிந்தனைகளையே எதிர்க்கும் பிற்போக்கு பாசிஸ்டுகளுக்கு துணைபோவது தவறு என அறிவுறுத்துகிறோம்.

மேலும், இந்த கண்காட்சியின் துவக்கத்திலேயே விழா மேடையில் இந்து மதவெறியைத் தூண்டும் விதமாகவும், இசுலாமியப் பெண்களை பயங்கரவாதிகளாக காட்டும் விதமாகவும் நாடகங்கள் நடைபெற்று, பின்பு நிர்வாகிகள் சிலரே கண்டித்துள்ளனர். எனவே துவக்கத்திலேயே இந்த புத்தகக் காட்சியை காவிப் பயங்கரவாதிகள் தமது நோக்கத்திற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளது தெரிகிறது.

பல்வேறுபட்ட கருத்துக்களையும், ஆய்வுகளையும், சமூக விமர்சனங்களையும் மக்களிடம் கொண்டு சென்று ஜனநாயகப் பண்புகளையும், சமூக அறிவையும் வளர்ப்பது தான் புத்தகக் காட்சிகளின் தேவை. இதற்கு இடையூறு செய்பவர்களை தடுப்பதும், தண்டிப்பதும் நிர்வாகத்தின் கடமை எனக் கருதுகிறோம்.

நடைபெறும் சம்பவங்களை ஏதோ இரண்டு புத்தக வெளியீட்டாளர்களுக்கு மட்டும் நடந்ததாகப் பார்க்க முடியாது. நாடு முழுக்க ஆர்.எஸ்.எஸ் இந்துத்வா சக்திகள் அறிவியல், பகுத்தறிவு, சமூக ஆய்வுகள் போன்ற சிந்தனைகளை முன்னிறுத்தும் எழுத்தாளர்களைத் தாக்குவது, பென்குவின் வெளியிட்ட வென்டி டோனிகரின் “இந்துக்கள் : ஒரு மாற்று வரலாறு” என்ற நூலை முடக்குவது, தனது அடாவடித்தனத்தால் ஜனநாயகக் கருத்தோட்டங்களின் மீது தாக்குதல் நடத்தி பணிய வைப்பது என்ற இந்து மதவெறி பாசிஸ்டுகளின் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதியாக இதைப் பார்த்து, மதவெறியர்களுக்கு எதிரான ஜனநாயகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, அனைத்து ஜனநாயக சக்திகளும் இதைக் கண்டிக்க வேண்டும். சாதி, மதவெறிக்கு எதிராகப் போராடிய பெரியார், அம்பேத்கர் நூல்களுக்கே எச்சரிக்கை விடும் சக்திகளை தண்டித்து அப்புறப்படுத்த வேண்டும்.

இருபது ஆண்டுகளாக தமிழக வாசகர் களத்தில் பல்வேறு மாற்று அரசியல் கருத்துக்களையும், முற்போக்கு சிந்தனைகளுக்கான பல எழுத்தாளர்களின் வெளியீடுகளையும் பரவலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முன்னிற்கும் கீழைக்காற்றின் மீதான், கருத்துரிமைக்கு எதிரான இந்த இந்துமதவெறி பாசிச போக்கை அனைத்து தரப்பு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள், சமத்துவம் வேண்டும் தமிழக மக்கள், அரசியல் இயக்கங்கள் கண்டிக்க வேண்டுமென்றும் உரிமையோடு கோருகிறோம்.

இவண்

கீழைக்காற்று.
_________________________________
கீழைக்காற்று,
பதிப்பகம் மற்றும் விற்பனையகம்,
10, அவுலியா தெரு, எல்லீசு சாலை
சென்னை – 600 002
Ph : 044 – 28412367

சிவசேனாவுக்கு கண்டனம்