Sunday, May 26, 2024
முகப்புமறுகாலனியாக்கம்ஊழல்காவிமயமாகும் நீதித்துறை - HRPC கண்டன ஆர்ப்பாட்டம்

காவிமயமாகும் நீதித்துறை – HRPC கண்டன ஆர்ப்பாட்டம்

-

மோடி அரசின் நீதித்துறை ஆணைய மசோதா ! நீதித்துறையை காவி மயமாக்கும் சதி !

தேசிய நீதித்துறை ஆணைய மசோதாவும், அதை அங்கீகரிக்கும் அரசியல் சட்டத்திருத்த மசோதாவும் மக்களவை, மாநிலங்களவையில் கடந்த 13, 14.08.14–ம் தேதிகளில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. மோடி அரசு முன் மொழிந்த மசோதாவை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை. நீதித்துறை ஊழலைப் பேசுவது போல மார்க்கண்டேய கட்ஜூ மூலம் விவாதத்தைத் தொடங்கி, ஊடகங்கள் மூலம் ஒரு மாத கால தொடர் பிரச்சாரம் செய்து, ஊழலை ஒழிக்கும் நோக்கத்துக்காகவே இம்மசோதா கொண்டுவரப்படுவது போல ஒரு கருத்தை உருவாக்கி, இந்த மசோதா மிக அவசரமாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

யோக்கிய சிகாமணி மார்க்கண்டேய கட்ஜூவின் நாடகம்!

கட்ஜூ சொன்ன நீதித்துறை ஊழல் தொடர்பான விசயங்கள் புதியவையல்ல. முன்சீப் கோர்ட் முதல் சுப்ரீம் கோர்ட் வரை ஊழலால் அழுகி நாறுவது மக்களும், வழக்கறிஞர்களும் நன்கு அறிந்ததுதான். பல்வேறு வழக்குரைஞர்களும், மனித உரிமை அமைப்புகளும், புரட்சிகர அமைப்புகளும்இதனை ஏற்கெனவே அம்பலப்படுத்தியுள்ளனர். இன்று வாய் கிழியப் பேசும் கட்ஜூ காங்கிரஸ் ஆட்சியில் நீதித்துறை ஆணைய மசோதா கொண்டுவரப்பட்ட போது வாய் திறக்கவில்லை. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளில் எட்டு பேர் ஊழல் பேர்வழிகள் என்ற பிரசாந்த் பூசனின் மனுக் குறித்து எதுவும் பேசியதில்லை. உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற ஊழல் நீதிபதிகள் மீது நாடாளுமன்றத்தில் இம்பீச்மென்ட் கொண்டுவந்தாலன்றி நடவடிக்கையே எடுக்க முடியாது என்ற அயோக்கியத்தனமான சட்டப்பாதுகாப்பு பற்றி எதுவும் பேசியதில்லை. “ஜெயலலிதா நீதித்துறையின் மாண்புகளை மதித்தார்” “ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு பற்றி எனக்கு எதுவும் தெரியாது” என்று ஆனந்த விகடன் பேட்டியில் அவர் சொல்லியிருப்பதிலிருந்தே அவருடைய யோக்கியதையையும் நோக்கத்தையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

நீதித்துறையை விழுங்குவதே ஆர்.எஸ்.எஸ்- பி.ஜே.பி.யின் நோக்கம்!

பன்னாட்டு நிறுவனங்கள், அம்பானி, அதானி, மிட்டல், டாடா, கலாநிதி மாறன் போன்ற முதலாளிகளின் சொத்துக்களை பல மடங்கு உயரச் செய்த தனியார்மயக் கொள்கையையும், பார்ப்பன மேலாதிக்கத்திற்கான வருணாசிரமக் கொள்கையையும் தங்கு தடையின்றி நிறைவேற்றவே பா.ஜ.க. இன்று அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ளது. உளவுத்துறை அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதர்கள், அரசு செயலர்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் அதிகாரிகள் எனப் பல மட்டங்களில் தங்களின் ஆட்களை நியமித்து வரும் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி-யினரின் அடுத்த இலக்கு நீதித்துறையைக் கைப்பற்றுவதாகும். பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் இந்திய பெரு முதலாளிகளுக்கு பொதுச்சொத்துகளையும் பொதுத்துறையையும் விரைவாக வாரிக்கொடுப்பதற்கு ஏற்ற விதத்தில் நீதித் துறையின் அதிகாரங்களைக் குறைத்து, டிராய், பசுமைத் தீர்ப்பாயங்கள், மின்சார ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக்கப்பட்டு முதலாளிகளுக்கு ஆதரவான நபர்கள் அங்கெல்லாம் பதவியில் அமர்த்தப்பட்டு விட்டனர். இதனை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகிறது மோடி அரசு.

கடந்த மே 6, 2014 அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம் லோதா தலைமையிலான நீதிபதிகள் குழுவால் (கொலீஜியம்) பரிந்துரைக்கப்பட்ட முன்னாள் அரசு தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்தின் நியமனத்தை மோடி அரசு நிராகரித்தது. இதைத் தொடர்ந்து ஜூன் 25-ம் தேதி கோபால் சுப்பிரமணியம் நீதிபதி நியமனத்துக்கான தனது ஒப்புதலை திரும்பப் பெற்றுக் கொண்டார். சோராபுதீன் ஷேக் போலி மோதல் கொலை வழக்கில் தான் நீதிமன்றத்தின் நண்பராக செயல்பட்டதால்தான் மோடி அரசாங்கம் தன் மீது களங்கம் கற்பித்து, அவதூறு பரப்பும்படி உளவுத்துறையை மோடி அரசு பயன்படுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார். அதன் பின்னர் கோபால் சுப்பிரமணியன் இடத்தில் மோடியின் வழக்கறிஞர் உதய் லலித் உச்சநீதிமன்ற நீதிபதியாக்கப்பட்டுள்ளார். குஜராத் படுகொலை வழக்கில் குற்றவாளிகளுக்கும், மோடி அரசுக்கும் ஆதரவாக ஆஜரான வழக்குரைஞர்களே சொலிசிட்டர் ஜெனரல், அட்வகேட் ஜெனரல் உள்ளிட்ட பதவிகளில் அமர்த்தப்பட்டிருக்கன்றனர். இதற்கெல்லாம் வழக்குரைஞர்கள் மத்தியிலிருந்து எந்த எதிர்ப்பும் வராததை சாதகமாக்கிக் கொண்டு, அடுத்த தாக்குதலை தொடுத்திருக்கிறது மோடி அரசு.

நேற்று அன்னா ஹசாரே, இன்று கட்ஜு !

நீதித்துறை ஊழல் பற்றி கட்ஜூ அரங்கேற்றியிருக்கும் நாடகத்துக்கும் அலைக்கற்றை ஊழல் விவகாரத்தின் பின்புலத்தில் அன்னா ஹசாரே நடத்திய ஊழல் எதிர்ப்பு நாடகத்துக்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. அன்னாவின் பின்புலத்தில் ஆர்.எஸ்.எஸ் இருந்தது. அன்று மோடிக்கு நற்சான்று கொடுத்தார் ஹசாரே. இன்று ஜெயலலிதாவுக்கு நற்சான்று கொடுக்கிறார் கட்ஜு. தமிழ்நாடுதான் ஊழலின் உறைவிடம் என்பது போலவும், வட இந்திய, ஆதிக்க சாதி நீதிபதிகளெல்லாம் யோக்கிய சிகாமணிகள் போலவும் ஒரு தோற்றம் இந்த விவாதத்தின் மூலம் திட்டமிட்டே உருவாக்கப்படுகிறது.

தனியார்மயம், தாராளமயம் என்ற மக்கள் விரோத கொள்கையின் மூலம் மக்களின் வாழ்வாதாரங்களையும் பொதுச்சொத்துகளையும் கார்ப்பரேட் முதலாளிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் பகற்கொள்ளையடிக்கும் பிரச்சினையை பின்னுக்கு தள்ளிவிட்டு, அரசியல்வாதிகளின் ஊழல் மட்டும்தான் ஒரே தேசியப் பிரச்சினை என்று சித்தரித்தார் அன்னா ஹசாரே. மூலமுதல் திருடர்களான கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சொந்தமான ஊடகங்கள் அன்னா ஹசாரேயை விளம்பரப்படுத்தின. தற்போது கட்ஜு விசயத்தில் நடப்பதும் அதுதான்.

ஊழல், மதவெறித் தாக்குதல்கள், தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்முறைகள், பாலியல் குற்றங்கள், போலீசின் அத்துமீறல்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரவர்க்கத்தினரின் மெகா ஊழல்கள், தனியார்மயக் கொள்கையின் விளைவாக நடக்கும் இயற்கை வளக்கொள்ளைகள் போன்ற பல பிரச்சினைகள் தொடர்பான வழக்குகளில் நீதித்துறை செய்திருப்பதென்ன? கொத்து கொத்தாக தலித் மக்கள் கொல்லப்பட்ட வழக்குகளில் குற்றவாளிகள் மொத்தமாக விடுவிக்கப்பட்டிருக்கின்றனர். வோடபோன் நிறுவனத்தின் பல்லாயிரம் கோடி வரி ஏய்ப்பு நீதிமன்றத்தால் நியாயப்படுத்தப் பட்டிருக்கிறது. நர்மதை அணைக்காக பல இலட்சம் பழங்குடி மக்கள் மாற்று இடம் கூடத் தரப்படாமல் துரத்தப்படுவதை உச்ச நீதிமன்றம்தான் சாத்தியமாக்கியது. பல ஊழல் அரசியல்வாதிகளையும் அதிகாரிகளையும் விடுவித்தது மட்டுமல்ல, தற்போது ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கை இத்தனை ஆண்டு காலம் இழுப்பதற்கு உச்சநீதிமன்றம்தான் துணை நின்றிருக்கிறது. சிதம்பரம் கோயிலை தீட்சிதர் வசம் ஒப்படைத்ததும், தகுதி வாய்ந்த பார்ப்பனரல்லாத அரச்சகர்க மாணவர்களை தெருவில் நிறுத்தியிருப்பதும், பாபர் மசூதிதான் இராமன் பிறந்த இடம் என்று தீர்ப்பளித்திருப்பதும் இந்த நீதித்துறைதான். அநீதியான இந்த தீர்ப்புகள் அனைத்தும் சட்டப்படிதான் வழங்கப்பட்டிருக்கின்றன. அவ்வளவு ஏன், பிரேம்குமார் எஸ்.பி தனக்கு இழைத்த வன்கொடுமைக்கு எதிராக நல்லகாமன் என்ற இராணுவ வீரர் 25 ஆண்டு வழக்கு நடத்தி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்ற நீதியை, எவ்வித விசாரணையும் இன்றி இரண்டே நிமிடத்தில் ரத்து செய்தவர் ஊழலற்ற உத்தமர் என்று பீற்றிக் கொள்ளும் இதே கட்ஜுதான்.

இந்த நீதித்துறை அமைப்பு மக்களுக்கு நீதி வழங்கவில்லை என்ற மையமான உண்மையை கட்ஜு வேண்டுமென்றே திசை திருப்புகிறார். நீதித்துறையில் புறையோடியிருக்கும் ஊழலை ஒழிப்பது பற்றிக்கூட யோக்கியமான முறையில் அவர் பேசவில்லை. மாறாக சில ஊழல் நீதிபதிகள் மட்டும்தான் பிரச்சினை போலவும், அவர்களால்தான் நீதித்துறை கெட்டுவிட்டது போல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி மோடி அரசு நீதித்துறையை கைப்பற்றிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கிறார்.

இந்த மசோதா நிறைவேறினால் ?

1993-ம் ஆண்டு மூன்று நீதிபதிகள் வழக்கில் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நீதிபதிகள் நியமனத்தில் “கொலீஜியம் முறை” கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நியமன முறையில் நீதிபதிகளின் மீதான மக்களின் கண்காணிப்பு என்பதற்கான வாய்ப்பு அறவே கிடையாது. ஐ.ஏ.எஸ் – ஐ.பி.எஸ் அதிகார வர்க்கத்தைப் போல மக்கள் மீது திணிக்கப்படுபவர்களாகவே நீதிபதிகளும் இருக்கிறார்கள். இதிலும் ஏராளமான ஊழல்கள் ! ஆளும் கட்சித் தலையீடு, சாதி, பணம் என்று எல்லா முறைகேடுகளும் நீதிபதிகள் நியமனத்தில் நிரம்பியிருப்பது நாம் அறியாததல்ல. இதில் நீதித்துறையும் அரசும் கூட்டுத்தான். நீதித்துறை சுதந்திரம் என்று சொல்லப்படுவதன் உண்மை நிலை என்ன என்பது வழக்குரைஞர்கள் அறியாததல்ல.

தற்போது மோடி அரசு கொண்டு வந்திருக்கும் மசோதாவின்படி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அவருடன் உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் இருவர், மத்திய சட்ட அமைச்சர் மற்றும் இரு தகுதிவாய்ந்த நபர்கள் என ஆறு நபர்கள் ஆணையத்தில் பதவி வகிப்பார்கள். தலைமை நீதிபதி, பிரதமர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் ஆகியோர் தகுதி வாய்ந்த நபர்களைத் (EMINENT PERSONS) தோ்ந்தெடுப்பர். உதாரணமாக தகுதிவாய்ந்த நபர்களாக சுப்பிரமணியசாமியும், சோ.ராமசாமியும் நியமிக்கப்படலாம். எந்தவொரு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதிபதியின் நியமன உத்தரவையும் தகுதி வாய்ந்த இரு உறுப்பினர்கள் எதிர்த்தால் நியமனம் செய்ய இயலாது என இச்சட்டம் கூறுகிறது. தலைமை நீதிபதி பணி மூப்பின் வாயிலாக நியமிக்கப்படுவதையும் இச்சட்டம் மாற்றுகிறது. மத்திய அரசு நீதிபதிகளின் நியமன அதிகாரம் கொண்ட அமைப்பாக இச்சட்டம் மூலம் மாறுகிறது.

ஆளும் கட்சியின் கொள்கையை எதிர்ப்பவர்கள் கூட இனி நீதிபதியாக முடியாது. நீதிபதி நியமனத்துக்கு உளவுத்துறை அறிக்கை ஒரு அடிப்படையாக இருக்கிறது. ஏற்கனவே ஐ.பி.யில் 50 சதவீதம் பேர் பார்ப்பனர்களாகவும், ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களாகவுமே உள்ளதால் என்ன நடக்கும் என்பதை எளிதில் நாம் யூகிக்கலாம். மேலும் மாநில அளவிலான நீதித்துறை ஆணையங்கள் அமைவதும் மறுக்கப்பட்டுள்ளது. தற்போது 275 உயர்நீதிமன்ற நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் மேற்படி இடங்களில் ஆர்.எஸ்.எஸ்-பி.ஜே.பி ஆட்கள் விரைந்து நியமிக்கப்படுவர். இந்த சட்டம் அமலானால், இன்னும் 20 வருடங்களுக்கு மோடி அரசால் நியமிக்கப்படும் நீதிபதிகளே உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவும், தலைமை நீதிபதியாகவும் வருவார்கள். ஏட்டளவில் இருக்கும் மதச்சார்பின்மையும் இத்தகைய நீதிபதிகளின் தீர்ப்புகளால் ரத்து செய்யப்பட்டு, எல்லா துறைகளிலும் இந்து ராஷ்டிரம் சட்டபூர்வமானதாக்கப்பட்டுவிடும்.

குஜராத் படுகொலை தொடர்பான வழக்குகள் ஒரு சிலவற்றில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டிருக்கும் நிலையைக் கூட இனி எதிர்பார்க்க முடியாது. சாதி ஒடுக்குமுறை தொடர்பான வழக்குகளுக்கும் இதே கதிதான் ஏற்படும். இந்த மசோதா நிறைவேறினால், ஏற்கனவே ஆர்.எஸ்.எஸ் சொல்லி வருவதுபோல் 25 ஆண்டுகளுக்கு அவர்கள் ஆட்சிதான் நடக்கும். அது சர்வாதிகாரமாகத்தான் இருக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தற்போதே இணைய தளங்களில் மோடிக்கு எதிராக எழுதுவோர் கைதுசெய்யப்படுகிறார்கள், தாக்கப்படுகிறார்கள். ஜனநாயகம், உரிமை பேசுவோர் ஒடுக்கப்படுகிறார்கள். பெயரளவில் இருக்கும் கருத்துரிமை கூட இனி இல்லாமல் போய்விடும்.

ஏற்கெனவே இந்தித் திணிப்பு, சமஸ்கிருத திணிப்பு, பாடத்திட்டங்களில் வரலாற்றுப் புரட்டு என்று மோடி அரசின் பார்ப்பன இந்து மதவெறி நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடங்கி விட்டன. அதன் தொடர்ச்சிதான் இந்த மசோதா. இதனை எதிர்த்து முறியடிப்பதற்கான முதல் குரல் தமிழகத்திலிருந்து எழும்ப வேண்டும். ஜனநாயகத்தை நேசிக்கும் எல்லோரும் இதில் பங்கேற்க வேண்டும்.

இவ்வகையில், பார்ப்பன இந்து மதவெறி பாசிஸ்டு நரேந்திர மோடியின் நீதித்துறை நியமன மசோதாவை எதிர்த்து கண்டன ஆர்ப்பாட்டம் 25.08.2014 அன்று காலை 10.00 மணிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையின் முன்பு நடைபெற்றது. வழக்கறிஞர் சே.வாஞ்சிநாதன் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார்.

நீதித்துறையை காவிமயமாக்கும் மோடி அரசின் ஆர்.எஸ்.எஸ் உடனான கூட்டுசதியை அம்பலப்படுத்தும் வகையில் பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன. சுமார் 40 வழக்கறிஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். மோடி அரசின் நீதித்துறை மீதான தாக்குதலைக் கண்டித்து வழக்கறிஞர்கள் பலர் உரையாற்றினர்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், மனித உரிமைப்பாதுகாப்பு மையத்தைச் சேர்ந்த வழக்கறிஞருமான மு.திருநாவுக்கரசு அவர்கள் பேசும்போது, “நீதித்துறையின் மீதுதான் மக்களுக்கு ஓரளவு நம்பிக்கை இருக்கிறது. அந்த நம்பிக்கையையும் மோடி அரசின் நீதித்துறை ஆணைய மசோதா பறிக்கிறது. இதன்மூலம் இந்தியா முழுவதிலுமுள்ள உயர்நீதிமன்றங்களில் 275 நீதிபதி பதவிகளுக்கான காலியிடங்களை ஆர்.எஸ்.எஸ் காரர்களால் நிரப்பி நீதித்துறையை காவிமயமாக்க முயற்சிக்கின்றனர். “நெருங்குதடா! இருள் நெருங்குதடா! காவிஇருள் நெருங்குதடா!” என்ற ம.க.இ.க.வின் பாடல் வரிகள் நினைவுக்கு வருகின்றன. இதை நாம் அனுமதித்தோமேயானால் இன்னும் 20 ஆண்டுகள் வரை நீதித்துறை மோடியின் கட்டுப்பாட்டில் இருக்கும. எனவே இச்சதியை முறியடிக்க வழக்கறிஞர்கள் நாடுமுழுவதும் அணி திரண்டு போராட வேண்டும். மதுரையில் பற்றியிருக்கும் இந்தத் தீப்பொறி நாடுமுழுவதும் பரவவேண்டும்” என்று தனது கருத்தை பதிவு செய்தார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் தலைவரும், வழக்கறிஞருமான பீட்டர் ரமேஷ்குமார் அவர்கள் பேசும்போது, “இந்திய பாராளுமன்றத்தில் 33% கிரிமினல்கள் உள்ளனர். இந்தக் கிரிமினல்களால் தேர்வு செய்யப்படும் நீதிபதிகளின் யோக்கியதை எப்படி இருக்கும் என்பதை விளக்கித் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை. இந்த மசோதாவிற்கு எதிராக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றங்களில் வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேறுமானால் அது உயர்குடிப்பிறப்பாளர்கள் என்று சொல்லிக் கொண்டு திரியும் பார்ப்பனர்களுக்கு மட்டுமே பயனுள்ளதாக இருக்கும்” என்று விளக்கிப் பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் இக்பால் அவர்கள் பேசும் போது, “நீதித்துறை ஊழல் நிறைந்ததாக மாறிவிட்டது. ஊழலுக்கு எதிராக போராட வேண்டியது நமது கடமை. இந்த சட்டம் ஊழலை ஒழித்து விடுமா? இவர்களால் தேர்வுசெய்யப்படும் நீதிபதிகள் எப்படி செயல்படுவார்கள் என்பது தெரியாதா? அரசியல்வாதிகள் தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகளிலிருந்து தப்பிக்கவே இந்த சட்டம் பயன்படும். அதனால் தான் இந்த மசோதாவை ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் யாரும் எதிர்க்கவில்லை. இந்தப்போராட்டம் ஒரு ஆரம்பம் தான், இந்த மசோதா வாபஸ் பெறப்படும்வரை இப்போராட்டம் தொடரும்” என்று குறிப்பிட்டார்.

மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் வின்சென்ட் அவர்கள் பேசும் போது, “பா.ஜ.கவிற்கு தேவையான ஆட்களை ஆர்.எஸ்.எஸ் தேர்வு செய்து அனுப்பிக் கொண்டிருக்கிறது. அதேபோல பா.ஜ.க வுக்கு தேவையான உத்தரவுகளை வழங்குவதற்கு தேவையான நீதிபதிகளை தேர்ந்தெடுத்து அனுப்புதற்கே இந்த ஆணையம் அமைக்கப்படவுள்ளது. மக்கள் இலவசங்களைக் கண்டு ஏமாறுகிறார்கள். இந்தநிலை மாற போராட வேண்டும். மோடி அரசின் இந்த நீதித்துறை ஆணைய மசோதாவை எதிர்த்துப் போராடியதின் மூலம் நாம் இன்று ஒரு மிகப்பெரிய எதிர்ப்பை பதிவுசெய்திருக்கிறோம்” என்று தனது கருத்தைப் பதிவு செய்தார்.

சமநீதிவழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான திரு.ராஜேந்திரன் அவர்கள் பேசும் போது, “இந்தவருடம் நீதித்துறை ஆணைய மசோதா, அடுத்த வருடம் ராமர் கோயில் எல்லாமே ஆர்.எஸ்.எஸ்-ன் திட்டப்படி நடக்கிறது. இந்த மசோதா நிறைவேறினால் இனிமேல் ஆர்.எஸ்.எஸ் வக்கீல்கள் மட்டுமே நீதிபதிகளாக முடியும்.” என்று மோடி அரசின் எதிர்கால மக்கள் விரோத போக்கு எவ்வாறிருக்கும் என்பதைப் பற்றி விளக்கிப்பேசினார்.

சமநீதிவழக்கறிஞர் சங்கத்தின் உறுப்பினரும், மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான திரு.கதிர்வேல் அவர்கள் பேசும் போது, “குஜராத் படுகொலையை முன்னின்று நடத்தியவரான மோடி போன்ற ஒருவர் பிரதமராவது என்பது இந்தியாவில் மட்டும் தான் நடக்கும். எனவே ஆர்.எஸ்.எஸ். பஜ்ரங்தள் ஆகிய அமைப்புகளுக்கு எதிராக முன்பை விட அதிகஅளவில் போராட வேண்டிய தேவை தற்போது எழுந்துள்ளது” என்று நமது நாட்டின் தற்போதைய நிலைமையையும் மக்களுக்கு இருக்கும் கடமையையும் பற்றி விளக்கிப்பேசினார்.

மதுரை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு.ரத்தினம் அவர்கள் பேசும் போது, “எல்லா இடங்களிலும் ஆர்.எஸ்.எஸ் ஊடுருவல் அதிகமாக இருக்கிறது. எல்லா அலுவலகங்களிலும், நீதிபதிகளின் அறைகளிலும் பல்வேறு சாமி படங்களை வைத்து பூஜை நடைபெறுகிறது. மேல்மருவத்தூர், திருப்பதி கோவில்களுக்கு சென்று ஊழலில் சேர்த்த பணத்தை காணிக்கையாக போட்டு விடுகின்றனர். அம்பேத்கர் சமஸ்கிருதம் படித்தார். அதனால் தான் அவரால் பார்ப்பனர்களின் யோக்கியதையை அம்பலப்படுத்தமுடிந்தது. நாம் அம்பேத்கரின் நூல்களைப் படிக்காமல் இருப்பதை நினைத்து வெட்கப்படவேண்டும்.

காந்தி பிறந்தமண் என்பதால் குஜராத்தில் மட்டும் மதுவிலக்கு இருக்கிறது. இந்தியா முழுவதும் மதுவிலக்கு கொணடு வரமுடியுமா. நாம் அறிவை ஆயுதமாக்கி ஒருபடையாக எழுவோம், நம்மால் முடியும். ஒரு புதிய சமூகத்தை கட்டமைக்க முடியும். அம்பேத்கரும், இடதுசாரிகளும் அதைத்தான் செய்தார்கள். இந்த சமூகம் வேகமாக சீரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதை மாற்ற நாம் கற்றுக்கொள்ள வேண்டும். அத்தோடு பிறருக்கு கற்பிப்பதற்கும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இந்த பாசிசக் கும்பலுக்கு எதிராக போராட நாம் நமது அறிவை ஆயுதமாக்குவோம்” என்ற அனுபவப்பூர்வமான பேச்சு அனைவரையும் கவர்ந்தது.

உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்க பொறுப்பாளரான வழக்கறிஞர் அப்பாஸ் அவர்கள் பேசும் போது, “பா.ஜ.க சிறுபான்மை இனத்தைச் சர்ந்த மக்களுக்கு மட்டுமல்ல அனைத்து இந்து சமூக மக்களுக்கும் எதிரி. ஆனால் அது எப்போதும் பார்ப்பானுக்கு கீழே மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களை வைத்திருக்கிறது. இதைத்தான் மனுதர்மம் என்று கூறுகின்றனர். விரைவில் பா.ஜ.க தலைவர்கள் அக்கட்சியை ஆதரிக்கும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இதே கொடுமையை திணிக்கும்.” என்று குறிப்பிட்டார்.

ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்டத் துணைச்செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் பேசும் போது, “இது நீதித்துறை சார்ந்த பிரச்சனை மட்டுமல்ல இது மக்கள் பிரச்சனையும் கூட கட்ஜூ சொன்ன, நீதித்துறை ஊழல் புதியது அல்ல. ஆனால் இவர் உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போதோ காங்கிரஸ் ஆட்சிக்காலத்திலோ இப்பிரச்சனை தொடர்பாக பேசியதே இல்லை. ஆனால் தற்போது மோடியுடன் சேர்ந்து கொண்டு இப்போது திடீரென பேசுகிறார். அதுவும் தமிழகம் மட்டுமே நீதித்துறையில் தலையிட்டதாகவும் மற்ற மாநிலங்களில் உள்ள அரசியல்வாதிகள் எல்லாம் யோக்கியமாக இருந்து வந்ததைப்போலவும் பேசியுள்ளது மற்றும் ஜெயலலிதா நீதித்துறையை மதித்து நடப்பவர் என்று நற்சான்றிதழ் வழங்கியுள்ளது உள்ளிட்ட செயல்கள் கட்ஜுவின் யோக்கியதையை வெளிச்சம் போட்டுகாட்டுகிறது. மேலும் இதுபோன்று திடீர் விவாதத்தை திட்டமிட்டு ஊடகங்களில் ஒளிபரப்பச்செய்து உடனடியாக அவசரஅவசரமாக இந்த மசோதாவைத் தாக்கல் செய்வதில் இருந்தே இது நீதித்துறையை காவி மயமாக்கும் முயற்சி என்பது பட்டவர்த்தனமாகியுள்ளது. இதை எதிர்த்துப் பெரியார் பிறந்த மண்ணிலிருந்து போராட்டத்தை தொடங்குவோம்” என்று நீதித்துறை ஆணைய மசோதா தாக்கல் செய்துள்ளதன் பின் ஒளிந்திருக்கும் உண்மைகளை விளக்கினார்.

இறுதியாக ம.உ.பா.மையத்தின் மதுரை மாவட்ட துணைத் தலைவரும் மதுரை மாவட்ட நீதிமன்ற வழக்கறிஞருமான பா.நடராஜன் அவர்கள் சமூக முக்கியத்துவம் வாய்ந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துப் பேசினார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதஉரிமைப் பாதுகாப்பு மையத்தின் மதுரை மாவட்டக்கிளையின் வழக்கறிஞர்கள் பா.வெங்கடேசன், எஸ்.லூயிஸ், எஸ்.ராஜசேகர், சி.ராஜசேகர், டீ.அஸ்வின், எம்.பாசில், சு.கருணாநிதி, பினயகாஸ், பி.சரணவச்செல்வி, சி.மன்மதன் ஆகியோர் உள்ளடங்கிய சுமார் 40 வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர். இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 75 பேர் கலந்து கொண்டனர். இப்போராட்டம் வழக்கறிஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
————————————————————–

தகவல்
மனித உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
மதுரை மாவட்டக்கிளை.
தொடர்புக்கு – 9865348163, 9443471003.

 1. மோடி என்ற அரக்கனையும் பா ஜ க அதன் கூட்டத்தையும் அடக்க செங்கொடி பின் செல்லும் காலம் வந்துவிட்டது, காவிகளை தமிழ்நாட்டை விரட்ட நேரம் கனிந்துவிட்டது

 2. சுப்ரமணிய சாமி வழக்கறிஞர் கிடையாது. பொருளாதார பேராசிரியர் மட்டுமே.

 3. ஊழல் நீதிபதிகளாக இருந்தால் பரவாயில்லை ,அவர்கள் “வெஜ் ஒன்லி” யாக இருக்க வேண்டும்.வெளியில் கருப்பு அங்கியும் உள்ளே காவி அங்கியும் அணிந்திருக்க வேண்டும்.இண்டியன் பூணூல் கோடும்,மனுதர்மமும் கற்றிருக்க வேண்டும்.

 4. நீதித்துறை நியமன ஆணையத்தில் நியமன உறுப்பினர்களாக நியமிக்கபப்படுபவர்கள் வழக்கறிஞர்களாகவோ நீதிபதிகளாகவோ இருக்க வேண்டிய கட்டாயமில்லை.எந்தக் குதிரையாக இருந்தாலும் அவர்கள் பிரதமர்,சட்ட அமைச்சர்,எதிர்க்கட்சித் தலைவர் இவர்களால் தேர்ந்தெடுக்கப் படுவார்;அவருக்கு வீட்டோ அதிகாரம் உண்டு.இது தான் காவி தர்மம்.அவன்[ர்] கஞ்சாகுடியனாக இருக்கலாம் ,காமவெறியனாக இருக்கலாம் ஏன் கொலைகாரனாகக் கூட இருக்கலாம்.அவன்[ர்] சாமியாராக இருந்தால் மட்டும் போதும் காலில் விழுந்து வணங்க வேண்டும்.இது தான் இந்து தர்மம்.அண்மை எடுத்துக் காட்டு:காஞ்சி சங்கராச்சாரி வழக்கில் மேல் முறையீடு தேவை இல்லை என்று அரசு வழக்கறிஞர் கூறியிருப்பது.

 5. மோடி ஆட்ச்சியில் அமர்ந்த நாள் முதல் இந்தியவில் பாசிசம் தலை விரித்து ஆட தொடங்கிவிட்டது என்பது உழைக்கும் மக்களன நாம் அணைவரும் அறிந்த ஒரு செய்தி இந்தி தினிப்பு,சஸ்கிருத வாரம்,பட்ச்சட்தாக்கள்,ரயில் கட்டன உயர்வு இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இந்த மக்கள் விறோத செயல்கள் மூலமாக மோடி தன்னை ஒரு பாசிஸ்ட்டு என்று வெளிப்படையாக அறிவித்து கொண்டார். ஆனால் இந்த பாசிஸ்ட் மோடி அரசிசு நீதிதுறை ஆணைய மசோதாவின் மூலம் பாசிஸ்ட்டுகளின் தலைவன் ஹிட்லரை மின்ஞ்சும் அலவிற்க்கு போய்கொண்டு இருக்கிறது என்பதைதான் நாம் தெறிந்து கொள்ளவெண்டும்.

  ஹிட்லரின் ஆட்சியில் ராணுவ அமைச்சர் பதவியை ஹிட்லரே ஏற்றுக்கொண்டார் ஆனால் இந்தியாவின் பாசிஸ்ட்டு மோடி இந்தியாவில் உள்ள அணைத்து துறைகளையும் இந்துமத பயங்கரவதிகளின் குடாரமான ஆர்.எஸ்.எஸ் சிடம் ஒப்படைத்து வருகிறார்ன் இந்த இந்துமத பாசிச அரசை முறியடிக்க வேண்டும் என்றால் சமுக ஆர்வளர்களும்,ஜனநாயக சக்திகளம்,உழைக்கும் மக்களும்,மாணவர்-இளைஞர்களும் புரட்சிகர அமைப்பிமைபின் கீழ் அணிதிரண்டு போராட வேண்டும். அப்போதுதான் நாம் இந்த காவி இருளை விரட்டி ஒலிமையமான புதிய ஜனநாய அரசை நிறுவ முடியும் .

  இந்த சுழலில் நாம் தெறுந்துகொள்ள வேண்டியது பாசிஸ்ட்டு ஹிட்லரின் தாக்குதலை பற்றியும். சோவியத் மக்களை வைத்து ஹிட்லரை விழ்த்திய தோழர் ஸ்டலினை பற்றியும்.

  எழுத்து பிழைகள் இருக்கும் மண்னித்து கொள்ளுங்கள் தோழர்களே

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க