privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்காங்கிரஸ் ஆட்சி மாற்றம் - நரியை விரட்டி கரடியை கட்டிப் பிடித்த கதை

ஆட்சி மாற்றம் – நரியை விரட்டி கரடியை கட்டிப் பிடித்த கதை

-

“ஆட்சி மாறுது! ஆட்கள் மாறுகிறார்கள்! நம் அவலம் மட்டும் மாறுவதில்லை ஏன்?”

என்ற தலைப்பில் மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகில் உள்ள செக்கானூரணியில் 26.07.2014 அன்று மாலை 6.30 மணியளவில் விவசாயிகள் விடுதலை முன்னணி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

தோழர் ஆசை தலைமையில் நடந்த இந்தப் பொதுக்கூட்டத்தில் உசிலை வட்டார வி.வி.மு. செயலாளர் தோழர்.குருசாமி, கம்பம் வட்டார வி.வி.மு. செயலாளர் தோழர். மோகன் ஆகியோர் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்கள். சென்னையைச் சேர்ந்த மக்கள் கலை இலக்கியக் கழக தோழர் துரைசண்முகம் சிறப்புரை வழங்கினார். இந்தப் பொதுக்கூட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தோழர் ஆசை
தோழர் ஆசை

தோழர் ஆசை தனது தலைமை உரையில், “இன்றைய ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள் அனைவரும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு சேவை செய்யும் புரோக்கர்கள். எனவே யார் புரோக்கர் வேலை பார்க்கவேண்டும் என்ற அங்கீகாரத்தை கொடுக்கும் விதமாகத்தான் இன்றைய தேர்தல் இருக்கிறது. அதனால்தான் நாங்கள் தேர்தலை புறக்கணிக்கச் சொல்கிறோம். யாரும் ஓட்டுப்போடாதீர்கள் என்று நாங்களும் எங்களுடைய தோழமை கட்சிகளும் பிரச்சாரம் செய்து வருகிறோம். தேர்தலை புறக்கணிப்போம், இந்த சமுதாயத்தை மாற்றி அமைக்க விவிமு தலைமையில் இணைந்து புதிய ஜனநாயகத்தை படைப்போம் வாருங்கள்” என்று பேசினார்.

தோழர் குருசாமி
தோழர் குருசாமி

தோழர் குருசாமி தனது உரையில், “ஒவ்வொரு பெற்றோரும் தன் பிள்ளைகளை தான் வேலை செய்யும் துறையில் பயிற்றுவித்து அதில் வேலை வாங்கித் தருவதையே தமது தலையாய விருப்பமாக வைத்துள்ளனர். ஆனால் விவசாயம் செய்து வரும் பெற்றோர்கள் தம் பிள்ளைகளை விவசாயத்திலிருந்தே வெளியேற்றுகிறார்கள். காரணம் நமது அரசும் ஆளும் வர்க்கமும் விவசாயத்தை நாளுக்கு நாள் திட்டமிட்டே அழித்து விவசாயிகளை தற்கொலைக்கு தள்ளி வருகிறார்கள். விவசாயிகளுக்கான கம்பீரம் வேறு எந்த தொழிலிலும் இல்லை எனவே விவசாயத்தை மீட்டெடுப்பதற்கு மக்களை திரட்டி இந்த அரசை வீழ்த்துவோம்.” என்று பேசினார்.

தோழர் மோகன் தனது உரையில், “நெசவுத்தொழிலிலும் விவசாயத்திலும் தலைநிமிர்ந்து இருந்த நமது நாடு இன்று சுயசார்பு இழந்து மறுகாலனியாகி வருகிறது. நாட்டுக்கே சோறு போட்ட விவசாயிகள் இன்று விவசாயத்தை விட்டே விரட்டி அடிக்கப்படுகிறார்கள். நிலத்தை கொடுத்து ஒப்பந்த விவசாயிகளாக மாற்றப்பட்டு வருகிறார்கள். நாடு அடிமையாவதை எதிர்த்து போராடக்கூடியவர்கள் விவசாயிகள் விடுதலை முன்னணி மற்றும் அதன் தோழமை அமைப்பைச் சேர்ந்த தோழர்கள்தான். நேர்மையும் துணிவும் இந்த புரட்சிகர அமைப்புகளில்தான் உள்ளது.

தோழர் மோகன்
தோழர் மோகன்

பள்ளிக்குச் சென்று வரும்போது மழையில் நனைந்து நின்று இருக்கும் ஒரு மாணவனை பார்க்கும் போது அவன் மழைக்கோட்டு போட்டு நடந்து செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் விவிமு தோழ்கள். குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்தால் எந்த ஆட்சி வந்தாலும் நிலைமை இப்படித்தான் இருக்கும். விழித்து புரட்சிகர அமைப்புகளுடன் இணைந்து போராடினால்தான் நம் அவலம் மாறும்” என்று பேசினார்.

தோழர் துரைசண்முகம் தனது சிறப்புரையில், “பொதுக்கூட்ட தலைப்பில் போட்டுள்ளபடி காங்கிரசு ஆட்சியை விட மோடி ஆட்சி தனியார்மய கொள்கைகளை அமல் படுத்துவதிலும் விலைவாசி உயர்த்துவதிலும் முன்னோடியாக செயல்பட்டு வருகிறது. உழைக்கும் மக்களின் வாழ்க்கை பறிக்கப்பட்டதற்கு யார் காரணம் என்பதையும், உழவனை ஒழித்து உழவர்சந்தை மட்டும் யாருக்கு என்பதற்கான பதிலை எந்த அரசியல் கட்சியும் தருவதில்லை. நாங்கள் தான் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வர்க்க அடிப்படையில் மக்களை திரட்டி வருகிறோம். எங்களுடைய கருத்து இன்னும் முழுமையாக மக்களை சென்றடையாமல் இருக்கும் போதே ஆளும் வர்க்கம் எங்களைக்கண்டு பதறுகிறது, தோழர் மாவோ கூறியது போல ஒரு கருத்து மக்களை பற்றிக்கொண்டால் அது மாபெரும் சக்தியாக மாறும். அன்று இந்த ஆளும்வர்க்கம் தூக்கி எறியப்படும்.

தோழர் துரை சண்முகம்
தோழர் துரை சண்முகம்

மன்மோகன்சிங்கை மாற்றி மோடியை ஆட்சியில் அமர்த்தியது நரியை விரட்டி கரடியை கட்டிப்பிடித்த கதையாகி விட்டது என்று மக்களே புலம்ப ஆரம்பித்து விட்டார்கள். உலகவங்கி தலைவருக்கு பிடித்தமான மோடி அனைத்து பன்னாட்டு கம்பெனிகளுக்கும் எடுபிடி வேலை செய்யும் ஒரு புரோக்கர். அந்த வகையில் மோடி ஒரு புது சரக்கு, இதை ஆளும் வர்க்கம் இறக்குமதி செய்துள்ளது.

இந்தியாவின் சிறுதொழிலையும், விவசாயத்தையும் அழிந்து யாருடைய முன்னேற்றத்துக்காக மோடி பாடுபடுகிறார் என்றும் மக்களின் விடுதலைக்கும் நாட்டின் முன்னேற்றத்துக்கும் மாற்று தேர்தல்பாதை அல்ல என்றும் மக்களை ஒடுக்குவதில் மோடிக்கு டூப்புதான் இந்த லேடி என்றும் மாற்று பாதையாக மறுகாலனியாதிக்கத்தை எதிர்த்த புதிய ஜனநாயகப் பாதைதான் தீர்வு, அதற்கு அணிதிரள்வோம் என்றும் கூறி தன் உரையை நிறைவு செய்தார்.

இறுதியாக நடந்த ம.க.இ.க-வின் புரட்சிகர கலைநிகழ்ச்சி மக்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியது.

புரட்சிகர கலைநிகழ்ச்சி
ம.க.இ.கவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி

அனுபவி வாழ்க்கையை அனுபவி, அனுபவிக்க காசுயில்லைனா அம்மாவை அடகுவை!
தலைமுறை தலைமுறை வாழவைத்த சொந்த ஊரு!” என இன்றைய இளைய தலைமுறையினரை சீரழிக்கும் நுகர்வு கலாச்சாரம் பற்றி பாடல்களாக கேட்டது மிகவும் உற்சாகமாக இருந்தது என்று பலரும் கருத்து கூறியுள்ளார்கள்.

சிற்றூரான செக்கானூரணியில் இவ்வளவு மக்கள் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டது, ஆட்டோ, வேன் ஓட்டுநர்கள், சிறு வணிகர்கள், மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தகவல்
புதிய ஜனநாயகம் செய்தியாளர்
உசிலம்பட்டி