privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகட்சிகள்பா.ஜ.கஆன்மீகக் கண்காட்சியில் அரசியல் பேசக் கூடாதாம் !

ஆன்மீகக் கண்காட்சியில் அரசியல் பேசக் கூடாதாம் !

-

ஹிந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நுழைவாயிலில் எந்த ‘தீவிரவாதி’யும் நுழையாமல் தடுப்பதற்காக, காவல்துறை அதிநவீன பாதுகாப்பு கருவிகளுடன் அனைவரையும் ஸ்கேன் செய்து அனுப்பிக் கொண்டிருந்தது. தீவிரவாதிகளே கண்காட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது போலீசு வெளியே ஸ்கேன் செய்து என்ன பயன்?

பரிசோதனை முடிந்து உள்ளே நுழைந்தால் வலப்பக்க அரங்கில் வந்தே மாதர்ர்ரம்……… என்று அச்சுறுத்திக் கொண்டிருந்தனர். அரங்கிற்கு கீழே பலர் அந்த பாடலுக்கு விரைப்பாக நின்று கொண்டிருந்தனர். அதில் ராணுவ உடை அணிந்த ஒரு அணியும் உண்டு. ஒருவேளை மோடிஜி இந்திய ராணுவத்தை அனுப்பி கண்காட்சிக்கு பாதுகாப்பு கொடுத்திருப்பாரோ என்று பார்த்தால், ராணுவ உடையில் வந்து நிற்பது பள்ளி மாணவர்கள் என்பதை அறிந்தோம். இந்தியாவின் அநீதியான காஷ்மீர் ஆக்கிரமிப்பு காரணமாக உயிரிழந்த இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய அந்த மாணவர்கள், கார்கில் சவப்பட்டி ஊழல் தெரிந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள்?

நாளைய பாரதம்ஆர்.எஸ்.எஸ் அரங்கத்துக்குள் ஹெட்கேவார், சாவர்க்கர், கோல்வால்கர் போன்ற இந்து ‘தலைவர்களின்’ படங்களை வைத்திருந்தார்கள். ஏதோ பாரிமுனை மொத்த சேட்டு வியாபாரிகள் போன்றிருந்த அந்த படங்களுக்காக, அரங்கத்தை கடந்து சென்றவர்களை எல்லாம் கையை பிடித்து இழுக்காத குறையாக, “வாங்கஜி புஷ்பாஞ்சலி செலுத்துவோம்” என்று உள்ளே இழுத்தார்கள்.

உள்ளே சென்றவர்களை “நமஸ்தேஜி, உள்ளே வாங்க”. “நீங்க எந்த ஊருஜி? எங்கள மாதிரி தேஷபக்தர்களை உங்க பகுதியில சந்திக்க விரும்புறீங்களா” என்று கேட்டு நச்சரித்தனர். அதாவது, அந்த பகுதியில் ஷாகா(ஆர்.எஸ்.எஸ் கிளை) ஆரம்பிக்க முயற்சிக்கிறார்களாம், “வேண்டாம்” என்று மறுத்தவர்களை “சரி, பூவாவது போடுங்கஜி” என்று புன்னகையுடன் கட்டளை இட்டனர். அவர்களெல்லாம் பிரிட்டீஷ் காலனியாதிக்கவாதிகளின் ரசிகர்கள் என்பதறியாத சிலர் ஏதோ பொட்டு வைத்த மகான்கள் என்று கடனுக்கு ரெண்டு பூ போட்டார்கள். ஆக அந்த பூ மரியாதை என்பதே ஒரு வித பரிதாபமான முறையில் வரவழைக்கப்பட்டதே.

பள்ளிக் குழந்தைகளுக்கு போட்டி நடத்துகிறோம் என்கிற பெயரில் சிறுவர்களை தனியே ஒதுக்கி வேதம் ஓதச் செய்து கொண்டிருந்தனர். ‘தமிழில் வேதம் ஓதினால் சாமி தீட்டாகிவிடும்’ என்பதால் ஓதுதலில் தமிழ் இல்லை போலும். அதே போல ‘பெண்கள் வேதம் ஓதினால் வேதமே தீட்டாகிவிடும்’ என்பதால் மாணவிகளும் இல்லை. ஆயினும் வேத மந்திர உச்சாடனம் கம்பீரமாகவே ஒலித்தது.

ராஷ்ட்ரியா சேவிகா சமிதிவேதத்திற்கு லாயக்கற்ற பெண் பிள்ளைகளுக்கு கோலம் போடுவது, கும்மி அடிப்பது, பல்லாங்குழி விளையாடுவது என்று தனி விளையாட்டுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இது தவிர குடும்பப் பெண்களுக்கு பயிற்சி அளிக்கிறார்களாம். அது என்ன? விளக்கு பூஜைதான். குத்து விளக்கு ஏற்றும் பயற்சி மூலம் பெண்கள் தமது அடிமைத்தனங்களையும், பிரச்சினைகளையும் சடுதியில் களைந்து கொள்ளலாமாம். ஏன், நீண்ட கூந்தலை தலை வாருவது, மருதாணி, நகப் பூச்சு, பூ சூடுதல், நகை அணிதல் போன்ற சிருங்காரங்களையும் பயிற்சியாக கொடுத்து பெண்ணினத்திற்கு பெருமை சேர்த்திருக்கலாமே?

அடுத்து, அடக்கம் செய்து பல நூற்றாண்டுகளாகிப் போன சமஸ்கிருதத்திற்கு ஒரு ஸ்டால். நவீன அறிவியல் அனைத்துமே வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்பட்டிருப்பதாக புளியைப் போட்டு விளக்கிகொண்டிருந்தது சமஸ்கிருத பாரதி என்கிற அந்த அரங்கு. சில்வர் நைட்ரைட்டுகே சவால் விடும் வகையில் தங்களது யாக வலிமையின் மூலமாக மழையை வரவழைப்பதாக கூறி வடிவேல் பாணியில் வசூல் செய்து கொண்டிருந்தனர் சில கனவான்கள்.

சங்க பரிவாரம்“இது சமஸ்கிருதத்தை அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் முயற்சி. நமது முன்னோர்கள் என்ன சொன்னார்கள், ஒரு கண்ணில் தமிழையும், மற்றொரு கண்ணில் சமஸ்கிருதத்தையும் வைக்கச் சொன்னார்கள். ஆனால் நாம் ரெண்டு கண்களையுமே மூடிவிட்டு இங்கிலீஷில் பேசிக் கொண்டிருக்கிறோம். நாம் சமஸ்கிருதத்தை கற்றுக் கொள்ளாததால் தான் கோவிலில் உச்சரிக்கும் மந்திரத்திற்கு அர்த்தம் புரியவில்லை. அது தான் பிரச்சினைக்கு காரணம்” என்று பேசிக் கொண்டிருந்தார் ஒரு அறிஞர். சம்ஸ்கிருதம் படித்து, மந்திரம் கற்று பயிற்சி முடித்து அர்ச்சக மாணவர்கள் சாதியில் பார்ப்பனர்கள் இல்லை என்பதற்காக வேலையற்று நிர்க்கதியாக இருக்கிறார்களே, ஏனென்று கேட்பதற்கு வந்த மக்களுக்கு தெரியாது. இந்த தெரியாததுதான் ஆர்.எஸ்.எஸ்-ன் பலம்.

செத்துபோன சமஸ்கிருதத்தை சூத்திரர்களோ பஞ்சமர்களோ கொல்லவில்லை. அடிமைகளுக்கு ஏது நீதிபதி பதவி? பெரும்பான்மை மக்கள் பேசக்கூடாது என்று தடைவிதித்து சம்ஸ்கிருதத்தின் சாவை துரிதப்படுத்தியவர்களே இன்று அதை பேசுமாறு கோருவது வேடிக்கை. தமிழகத்தின் பெரும்பான்மை மக்கள் பேசும் தமிழை கோவிலுக்குள் அனுமதிக்காமல் தீட்டு என்று ஒதுக்குகின்ற பார்ப்பனிய தீண்டாமைக்கு எதிராக போராடாமல், இவர்களே வழக்கொழியச் செய்த சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுப்பதற்காக ஆர்.எஸ்.எஸ் இவ்வளவு முக்குகிறது என்றால் இது யாருக்கான அமைப்பு?

விவேகானந்தா கேந்திரத்தின் கடையில் உயரமாக ஒரு பாத்திரம் வைத்து சமையலறை கழிவுகளை கரைத்து ஊற்றினால் அதிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று விளக்கிக் கொண்டிருந்தார் ஒருவர். அந்த பாத்திரத்தில் ஊற்றுவதற்கு தேவையான அளவு சமையலறைக் கழிவுகள் சாதாரண மக்கள் வீடுகளில் ஒரு போதும் கிடைக்காது. பெரும் பண்ணையார்கள், முதலாளிகள், மடங்கள், பணக்காரர்கள் வீடுகளில்தான் தின்றது போக, கழித்தது போக நிறைய கழிவுகள் இருக்கும். எனவே, இத்தகைய குப்பை சேவை கூட சாதாரண ‘இந்துக்களுக்கு’ கிட்டிவிடாது. எளிய மக்களுக்கு சேவை செய்தால் கணக்கில் கம்மியாகத்தான் வருமென்பதால் விவேகானந்தா கேந்திரம் காஸ்ட்லியான ஹிந்துக்களுக்கு மட்டும் சேவை செய்கிறது போலும்.

கன்னியாகுமரிக்கு அருகில் மீனவர் பகுதிகளில் பல ஏக்கர் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த கேந்திரம் மீனவ மக்களுக்கு என்ன செய்கிறார்கள் என்று விசாரித்ததும் உள்ளே அழைத்துப் போனார் அரங்கத்தில் இருந்தவர்.

ராமேஸ்வரத்தில் மீனவர் வீடுகளுக்கு சூரிய தகடுகள் பொருத்திக் கொடுப்பதாக புகைப்படங்களைக் காட்டினார். “சரி, மீனவ மக்களுக்கு என்ன செய்கிறீர்கள், கடலில் மீன் பிடிக்கப் போகும் போது இலங்கை கடற்படையினரால் சுடப்படுகிறார்கள், மீன் பிடி தடைக்காலத்தில் உதவி தேவைப்படுகிறது. இதற்கு என்ன செய்கிறீர்கள்” என்று கேட்டால், “அவர்கள் வீடுகளுக்குப் போய் வீடுகளையும், தெருக்களையும் சுத்தமாக பராமரிக்க சொல்லிக் கொடுக்கிறோம்” என்றார். இவர்களைப் பொறுத்த வரை மீன் என்றாலே நாத்தம், குப்பை, கழிவு. மீனவர் வீடுகள் என்றாலே ஏதோ அநாகரிகமான குடியிருப்புகள். உழைக்கும் மக்களுக்கு சேவை செய்வதாக கிளம்பும் அம்பிகள் எவ்வளவு வன்மத்துடன் நமது மக்களை பார்க்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சோறு.

அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து என்று ஒரு பெரிய கடை விரிக்கப்பட்டிருந்தது. அமைப்புக்கு ஒரு தமிழ் பெயர் கூட வைக்காமல் தமிழ்நாட்டில் கடை விரித்திருந்தார்கள். க்ராஹக் என்றால் நுகர்வோர் என்று பொருளாம்.

“நாங்க பல ரிட்டையர்ட் ஆபிசர்ஸ் எல்லாம் இதில இருக்கோம். உங்களுக்கு என்ன பிரச்சனைன்னாலும் நாங்க கையில எடுத்து தீர்த்து வைப்போம். அதுக்காக, உங்க வீட்டில மிக்சி ஓடலை, ஃபேன் ரிப்பேர் போல இல்லாம, கணிசமான பேருக்கான பிரச்சனையா இருக்கணும்” என்று கொள்கை விளக்க பிரகடனம் செய்தார் அங்கு இருந்த பெருசு ஒருவர். பதவியில் இருக்கும் போது அதிகார வர்க்கமாக மக்களை கசக்கிப் பிழிந்த இந்த ஜாம்பவான்கள் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்கிறார்கள் என்று கேட்டால்,

சென்னை மாநகர பேருந்துகளின் கட்டணத்தை ஒழுங்குபடுத்தினார்களாம், சென்னை மாம்பலம் காய்கறி சந்தையில் புழக்கத்தில் இருந்த சட்டவிரோத எடைக் கற்களை பறிமுதல் செய்து தவறிழைத்தவர்களை தண்டித்தார்களாம், தாம்பரத்தில் நில்லாது சென்ற சோழன் எக்ஸ்பிரசை நின்று செல்லுமாறு உத்தரவிட வைத்தார்களாம், சேலம் இரவு ரயிலை சூப்பர் ஃபாஸ்ட் வகையிலிருந்து எக்ஸ்பிரஸ் வகைக்கு மாற்றினார்களாம் (அதன் மூலம் டிக்கெட்டுக்கு ரூ 20 பயணிகளுக்கு மிச்சமானதாம்). இப்படி இவர்களது நுகர்வோர் நலன்கள் எல்லாம் மாம்பலத்து ‘மக்களுக்காக’ தாம்பரம் ‘சான்றோர்களுக்காக’ மட்டுமே இருந்தன.

கிராஹக் பஞ்சாயத்து
அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத்து

மேலும் நடவடிக்கைகளும் சாதாரண சிறு வணிகர்கள் மேல் இருந்தன. அம்பானி, டாடா, அதானி போன்ற முதலைகள் மீது நடவடிக்கைகள் எடுப்பீர்களா என்று கேட்டால் அவர் முறைத்து பார்த்தார். மக்கள் சேவையில் அரசியலை கலக்காதீர்கள் என்று பேசினார். கோயம்பேடு கருவாடு விற்பனை கூட இவர்களால் புகார் எழுதி தி இந்து பத்திரிகையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கலாம்.

கூடவே, சென்னையில் ஆட்டோக்களில் மீட்டர் பொருத்த ஏற்பாடு செய்ததும் இவர்கள்தானாம். “நாங்க ஆர்ப்பாட்டம், போராட்டம்னெல்லாம் போக மாட்டோம். நேரா மினிஸ்டரா பார்த்து பேசினோம். மீட்டர் இல்லாம ஆட்டோ ஓடறதால கஷ்டங்களை பத்தி அமைச்சர் செந்தில் பாலாஜிகிட்ட எடுத்துச் சொன்னோம். ஆட்டோகாரங்க எதிர்ப்பாங்களேன்னு கேட்டார். கடைசியில, அவர சம்மதிக்க வச்சி மீட்டர் கொண்டு வர வைத்து விட்டோம்”, என்றார்கள். இது மட்டும் ‘அம்மா’ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டால் அடுத்த ஆண்டு கண்காட்சிக்கு இடமே கிடைக்காது. பொதுப் போக்குவரத்தின் கஷ்டங்களை சொல்லி அதை தீர்த்து வைத்தால் ஆட்டோவுக்கு அவசியமே இல்லையே, ஏன் அமைச்சரை பார்க்கவில்லை என்றதும் அவர் பதிலேதும் சொல்லவில்லை. பொதுவில் கண்காட்சியில் கேள்வி கேட்பவர்களை அவர்கள் எங்கேயும் விரும்புவதே இல்லை.

வெளியே வந்த போது ஆடிட்டர் குருமூர்த்தி எதிரில் வேகமாக வந்து கொண்டிருந்தார். பேசலாம் என்று அருகில் சென்றோம்.

குருமூர்த்தி
“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது”

“உங்க கட்டுரைகளை எல்லாம் ரெகுலரா படிப்பேன், ரெண்டு நாளைக்கு முன்னாடி எழுதின தினமணி கட்டுரையை கூட படித்தேன். ஒரு சின்ன சந்தேகம்.” என்ன என்று கூட கேட்கவில்லை சொல்லுங்க என்பதை போல தலையை மட்டும் ஆட்டினார்.

“பொருளாதார கொள்கையில் காங்கிரஸ் என்ன செய்ததோ அதையே தான்  பா.ஜ.க-வும் இப்போது செய்கிறது, ஆனால் நீங்க காங்கிரசை மட்டும் எதிர்த்துவிட்டு பா.ஜ.கவை ஆதரித்து எழுதுவது வாசகர்களை ஏமாற்றுவதாகாதா,” என்றதும்,

“வேறு வேலை இருக்கு இப்ப அதைப்பத்தி பேச முடியாது” என்று விறுவிறுவென்று நடந்தார். அரங்கங்களில் இருக்கும் சாதா அம்பிக்களாவது பேச ஆரம்பித்து ஒரு கட்டத்தில்தான் முறித்துக் கொண்டனர். ஆனால் ஸ்பெஷல் அம்பியான குருமூர்த்தியோ துவக்கத்திலேயே முன்னறிந்து துண்டித்தார். பேசி, எழுதுவதில் மட்டுமல்ல, பேச்சை துண்டிப்பதிலும் ஒரு சாமர்த்தியம் வேண்டுமல்லவா?

கண்காட்சியை நிர்வாக அலுவலக கடையில் ஒருவர் நோட்டிஸ்களுடன் நின்றிருந்தார். “என்ன சார், கண்காட்சியில சாதி சங்கங்களை எல்லாம் சேர்த்திருக்கீங்க, இந்துக்களை பிளவுபடுத்தறத நீங்க ஆதரிக்கிறீங்களா?” என்று கேட்டதும்,

“அப்படி உங்களுக்கு கருத்து இருந்தா தாராளமா சொல்லுங்க, நம்ம குருமூர்த்தி சார் இருக்காரே, அவருதான் இந்த கண்காட்சிய ஏற்பாடு செய்றவரு”

“ஓ, இந்த சுதேசி இயக்கம் எல்லாம் நடத்துவாரே”

“ஆமாமா, நான் கூட அதிலே எல்லாம் வேலை செஞ்சிருக்கேன்”

“என்ன பலன் சார், இப்போ மோடி அரசு வந்ததும் அன்னிய முதலீடுதான் வளர்ச்சின்னு நாட்டை வெளிநாட்டு கம்பெனிகளுக்கு திறந்து விடுறாங்களே, அதை எதிர்த்து குருமூர்த்தி போராடலையே, ஆதரிக்கிறாரே?”

“அதெல்லாம் உடனே செய்ய முடியாது சார். நேரம் பார்த்து தேவைப்படும் போது அதை ஆரம்பிப்போம்.” என்றார். நாட்டு மக்களுக்கு நேரம் சரியில்லை, அவர்களது உணர்வு மட்டம் வளர்ந்து நேரத்தை நல்லதாக்க முனைந்தால் இவர்கள் கடும் அடக்குமுறை நடவடிக்கைகள் எடுப்பார்கள் போலும்! அதைத்தான் உடனே செய்ய முடியாது என்று அவர் கூறியிருக்கலாம்.

முந்தைய ஆண்டு கண்காட்சி புகைப்படங்களை ஆல்பமாக வைத்திருந்தார்கள். அதைப் புரட்டி பார்த்தால் தினமலர் பத்திரிகை செய்திகள் நிறைய இருந்தன.

“என்ன சார், தினமலர கொஞ்சம் தட்டிக் கேட்கக் கூடாதா. அவன் போடற ஆபாச படங்கள்லாம் இந்து ஆன்மீக இமேஜூக்கு நல்லதா, கெட்டதா?.”

“ஆமா சார், அவங்க அப்படித்தான். இப்போ ரெண்டு மூணு குரூப்பா பிரிஞ்சிட்டாங்க. அதனால நமக்கும் சப்போர்ட் குறைவுதான். தினமணி, இந்து பத்திரிகை எல்லாம் நல்லா கவர் பண்றாங்க” என்று பார்ப்பனிய ஊடக தருமத்தை விளக்கினார்.

ரதம்
ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

இந்து ஆன்மீக கம்பெனிகளை ஒரு சுற்றுச் சுற்றினால் சாதி சங்கங்கள், கார்ப்பரேட் மடங்கள், கல்வி நிறுவனங்கள், என்ஜிவோக்கள் தவிர ஆர்.எஸ்.எஸ் கும்பலைச் சேர்ந்த ராஸ்ட்ரிய சேவிகா சமிதி, லிங்க பைரவி, வேத விஞ்ஞான ஆராய்ச்சி நிலையம், அகில பாரதீய க்ராஹக் பஞ்சாயத், ஹிந்து ஜன ஜாக்ருதி ஸமிதி, ஸனாதன் ஸன்ஸ்தா, சமஸ்கிருத பாரதி, சேவாலயா, பாரத் விகாஸ் பரிஷித், வனவாசி சேவா கேந்திரம் என்று ஹவானா தீவு காக்டெயில் போக கலந்து அடித்திருந்தனர். என்றாலும் எங்கும் ‘இந்து’ உணர்வு ஓடிக் கொண்டிருந்தது.

சரி சந்தைக் கடைகளை பார்த்துவிட்டோம் அடுத்து சந்தைக்கு வந்தவர்களை சந்திக்கலாம் என்று வாயிலருகே வந்தோம். நடுத்தரவர்க்கத்தை தவிர வேறு எந்தப் பிரிவும் இந்த கண்காட்சிக்கு வரவில்லை என்று சொல்லலாம். எதிரே ஒருவர் வந்தார், அறிமுகப்படுத்திக்கொண்டு பேசினோம்.

“கண்காட்சியை பத்தி என்ன நினைக்கிறீங்க சார், இது எந்த வகையில் இந்து மதத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்”.

இவர் அக்ரஹாரத் தமிழர் எனவே அவரின் தாய் மொழியான ஆங்கிலத்தில் தான் துவங்கினார்.

“நீங்க பாத்தீங்கன்னா, எனக்கு இந்த நாட்ல வாழவே பயமா இருக்கு, போன வாரம் கூட பாருங்க அம்பத்தூர்ல ஒருத்தரை துடிக்கத் துடிக்க வெட்டி கொன்னுருக்காங்க பாவிங்க, ஆனா போலீஸ் வேற ஏதோ காரணம் சொல்லுது, நேராவே சொல்றனே, ஐ வோட் பார் பி.ஜே.பி, நான் ஆர் எஸ் எஸ் கருத்துக்களோட உடன்படுறேன். நான் பதினஞ்சு வருஷம் குஜராத்ல இருந்தேன். ரெண்டாயிரத்து ரெண்டுக்கு முன்னால நான் இருந்த ஏரியா பூரா முஸ்லீம்ஸ் தான் அதிகம். அங்க இருக்கவே பயமா இருக்கும்! ஆனா அதுக்கப்புறம் பாருங்க அங்க எந்த பிரச்சனையும் இல்ல. இங்க இன்னும் அஞ்சு வருஷத்துல இந்த மாதிரி ஈவேன்ட்லாம் நம்மால நடத்த முடியுமான்னு சந்தேகமா இருக்கு.”

“ஏன் சார் ? ஏன் அப்டி சொல்றீங்க…”

“நோ, ஐ எம் சீரியஸ்லி டெல்லிங், குறிப்பா தமிழ்நாடு அண்ட் கேரளால முஸ்லீம்ஸ் அதிகமாய்டே வர்றாங்க நான் சென்னைக்கு வந்தப்புறம் எய்ட் டைம்ஸ் என்ன மதம் மாத்த ட்ரை பண்ணங்க. நாம தான் நம்ம மதத்தையும் கல்ச்சரையும் காப்பாத்தணும். ஒற்றுமையா இருக்கணும்.”

“ஒரே மதம்னு சொல்றீங்க, ஒத்துமையா இருக்கணும்னு சொல்றீங்க ஆனா உள்ளே பார்த்தால் ஐம்பது சாதி சங்கங்கள் ஸ்டால் போட்ருக்காங்க, இதிலேயே இந்து ஒற்றுமை இல்லையே சார் ?”

“ஸீ, அப்படிதான் இருப்பாங்க ஆனா முஸ்லீம்சுக்கு எதிரா ஒரு பிரச்சனைன்னா ஒன்னா சேர்ந்துப்பாங்க, நீங்க முசாபர் நகர்ல இதை பாத்திருக்கலாம். நமக்கு எதிரிகள் முஸ்லீம்ஸ் அண்ட் கிருஸ்டியன்ஸ் தான். இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான், பட் அன்டச்சப்ளிட்டி தப்பு.”

“தமிழ்நாடும் கேரளாவும் மட்டும் ஏன் இப்படி இருக்குன்னு நினைக்குறீங்க ?”

அம்பேத்கர் ஸ்டால்
“இந்த சாதிகளில் ஒரு சாதி அழிஞ்சு போனாலும் இன்னொரு சாதி மூலம் நம்ம மதம் இருக்கும்ல அதனால சாதி நல்லது தான்”

“இங்க இருக்குற ஷத்ரியா கேஸ்ட், எல்லாம் ச்சப்பாஸ், இங்க இருக்குற லோ கேஸ்ட் கூட சண்ட போடுவானுங்க, ஆனா முஸ்லீம்ஸ்சை ஒன்னும் பண்ண மாட்டானுங்க. இங்க ஆட்சி பன்றவங்க எல்லாம் டெரர்ரிஸ்ட் சார், கருணாநிதி ஈவன் ஜெயலலிதா இவங்க ரெண்டு பேரும் எல்லா தீவிரவாதிகளுக்கும் சப்போர்ட் பண்ணுறாங்க. இந்த ரெண்டு மாநிலமும் முஸ்லிம் கொடுமையில் இருந்து தப்பிச்சுட்டாங்க அதனால் அவங்களைப் பத்தி தெரியல! “

“பீஜேபீ…” என்று ஆரம்பிப்பதற்குள் பதில் சொல்லத் தொடங்கி விட்டார்.

“ஒரே மாசத்துல இத செய்யல அத செய்யல அப்டீன்னா எப்டி சார்… ஹி இஸ் நாட் சூப்பர் மேன்…”

“சார் நாங்க அதை கேட்கவில்லை அவங்க ஆட்சில மத்த மதங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா ?”

“ஆகாதுங்க, சீ, வோட் பாலிடிக்ஸ்னு வந்துட்டாலே, எல்லார் வோட்டும் வேணும் அதனால அவங்க கூட ஒன்னும் பண்ண முடியாது, காங்கிரஸ் மாதிரி ஒரு தேசதுரோக கட்சிக்கு மோடி எவ்வளவோ பரவாயில்லை.“

தேசபக்தர் மோடியின் ஆட்சியில் பாதுகாப்பு துறையில் 100% அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட இருப்பதை பற்றி கேட்ட போது சத்தியமா எனக்கு விசயமே தெரியாதே, என்று சூடத்தை தேடினார்.

“உங்க பசங்களை கூட்டிட்டு வந்திருக்கீங்களா?”

“பையனை கூப்பிட்டேன், வந்தான் ஆனா அவனுக்கு இதிலெல்லாம் இன்ட்ரெஸ்ட் இல்ல அதனால பாதியிலேயே போய்ட்டான். இப்ப எம்.எஸ்.சி பயோடெக் பண்றான்.”

“இந்து ஆன்மீக கண்காட்சின்னு பெயர் வச்சுருக்காங்க ஆனா உள்ளே மதத்தை பத்தி ஒண்ணுமே இல்லையே நிறைய கடைங்க தான் இருக்கு, இதை எப்படி பாக்குறீங்க ?”

சற்று யோசித்தவர், தனது பையை திறந்து காட்டுகிறார். “நானே சில மெடிசின்ஸ் வாங்கத்தான் வந்தேன். அண்ட் எக்கோ டூரிசம் பத்தி விசாரிச்சுட்டு போலாம்னு, பாருங்க எல்லாத்துலயும் இப்டி நெகட்டிவே பார்க்கக் கூடாது. எதோ நாலு விஷயம் மதத்தை பத்தி மக்களுக்கு போய் சேர்ந்தா அதுவே போதும்.”

அவர் தெரிந்து கொண்ட அந்த நாலு விஷயங்கள் என்னவாக இருக்கும்? சாதி வெறி, முசுலீம் எதிர்ப்பு, மோடி ஆதரவு, பார்ப்பனிய சடங்கு போன்றவை அன்றி வேறென்ன?

பள்ளி வேன்
பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர்.

அன்று விடுமுறை என்பதால், பல்வேறு தனியார் பள்ளிகளிலிருந்து மாணவ மாணவிகள் ஆயிரக்கணக்கில் சீருடைகளுடன் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டனர். ஆன்மிகத்தின் பெயரில் மதவெறி எப்படி சுலபமாக பள்ளிக் குழந்தைகளிடம் கொண்டு செல்லப்படுகிறது? நடுத்தர வர்க்கத்திடம் மட்டுமல்ல பிஞ்சு நெஞ்சங்களிலும் இந்து பாசிசத்தை விதைப்பது இப்படித் தான். இது தமிழகம் தானா என்று ஒரு கணம் கிள்ளிப்பார்த்துக்கொள்ளும் அளவிற்கு குழந்தைகளை கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருந்தனர். ஒவ்வொரு ஸ்டாலிலும் குழந்தைகளுக்கேற்ற மொழியில் மதவெறி நஞ்சை ஊட்டிக்கொண்டிருந்தனர்.

கண்காட்சி என்கிற பெயரில் நடத்தப்பட்ட இது, சங்கப்பரிவார பாசிச கும்பலுக்கு ஒரு விசிட்டிங் கார்ட். பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும், இந்து நடுத்தர வர்க்கத்தின் மனதிலும் மதவெறியை விதைக்க ஆர்.எஸ்.எஸ் கும்பலுக்கு வாய்த்த களம். இந்த கண்காட்சி முழுவதும் மதவெறியை தூண்டும் வாசகங்களும், காட்சிகளும், படங்களும், விளக்கவுரைகளும் நிரம்பி வழிந்தன. ஒன்றுமே தெரியாத ஒருவன் இந்த அரங்குகள் அனைத்தையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு திரும்பினாலே அவன் இந்துவெறியனாக மாறி விடுவான்.

ஆதிக்க சாதி வெறி சங்கங்களை திரட்டி, ஒன்றுபடுத்தி அதை முசுலீம் எதிர்ப்பாக மாற்றி, நடுத்தர வர்க்கத்தின் நுகர்வு கலாச்சாரத்தை மனதில் கொண்டு ‘சேவை’ செய்து அவர்களையும் மதவெறிக்குள் கொண்டு வந்து மொத்தத்தில் தமிழகத்தில் ஒரு கலவரத்திற்கான மனத்தயாரிப்பை கருத்துக்கள் காட்சிகள் பேரில் செய்கிறது இந்து ஆன்மீக மற்றும் சேவை கண்காட்சி.

பாஜக ஆட்சி நடைபெறுவதால் வரும் ஆண்டுகளில் இதே அணுகுமுறை இன்னமும் தீவிரமாக நடைபெறும். தமிழகம் அமைதிப்பூங்காவாக நீடிக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் அதை களத்தில் காட்டாவிட்டால் ஆர்.எஸ்.எஸ்-ன் இந்தி பேசும் மாநிலங்களின் பிற்போக்குத்தனம் பிரச்சினைகள் அனைத்தும் இங்கேயும் அமலாக்கப்படும். என்ன செய்யப் போகிறோம்?

–    முற்றும்.

–    வினவு செய்தியாளர் குழு.

  1. ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
  2. வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
  3. ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி
  4. ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?