Friday, June 14, 2024
முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

ஆன்மிகக் கண்காட்சியா, நுகர்வு கலாச்சார சாட்சியா ?

-

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி அனுபவங்கள் – 4

ந்து ஆன்மீக கண்காட்சியில் உதவி பலகை மேசையில் இருந்தவரை அணுகினோம்.

“இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சியின் நோக்கம் என்ன சார்?” என்றோம்.

இந்து ஆன்மீக சேவைக் கண்காட்சி
இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்

“நமது நாடு பழம்பெருமைமிக்க நாடுஜி. இந்து ஆன்மிகத்தில் புதைந்துள்ள இயற்கை வழிபாடு, ஜீவராசிகளை வழிபடுவது, நதிகளை வழிபடுவது, பெற்றோர்கள், ஆசிரியர்களை தெய்வமாக போற்றுவது, பெண்களுக்கு மரியாதை செய்யும் விதத்தில் கன்னி பூஜை, சநாதன தர்மத்தை பின்பற்றுவது, நாட்டுப் பற்றை அதிகரிக்கும் விதத்தில் பாரதமாதாவையும், பரம்வீர் சக்கரா விருது பெற்றவர்களையும் ஆராதனை செய்வது இதுதாங்கஜி இந்த ஈவென்டோட தீம்” என்று ரியல் எஸ்டேட் விளம்பரங்களில் வரும் சீரியல் ஆக்டர் போலவே விளக்கம் அளித்தார்.

காவிரி நதியை பூஜை போடும் உரிமை கர்நாடக ஜிக்கு மட்டும்தானே என்று கேட்ட போது அரசியல் செய்யதீர்கள் என்றார் அந்த ஜி.

ஹலோ எஃப்.எம் 106.4-ன் கடைக்குப் போனோம். ரேடியோவிற்கும் ஆன்மீகத்திற்கும் என்ன சம்பந்தம்? “நீங்க எதுக்கு பாஸ் இங்கே ஸ்டால் போட்டிருக்கீங்க” ஸ்டாலில் இருந்தவரிடம் கேட்ட போது,

“நாங்க இதுக்கு ஸ்பான்சர் பன்னியிருக்கோம் பாஸ் அதனால எங்களுக்கும் ஒரு ஸ்டால் கொடுத்திருக்காங்க” என்றார்.

“சரிங்க ஆனா உங்களுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்” என்றோம்.

ஹலோ எஃப்எம்
“ஒரு சம்பந்தமும் இல்லைங்க”

“ஒரு சம்பந்தமும் இல்லைங்க” என்றார்.

“சரி இங்கே மக்கள் வர்றாங்களா” என்றோம்.

“வர்றாங்க, பேசுறாங்க.”

“எதுக்கு வர்றாங்க, என்ன சொல்றாங்க?”

“எங்க எஃப்எம் மின் நிகழ்ச்சிகளை பத்தி கருத்து சொல்றாங்க. என்ன மாதிரியான நிகழ்ச்சிகளை நடத்தலாம்னு ஆலோசனை சொல்றாங்க” என்றார். இந்து தர்மத்துக்கு காசு, ரேடியோ தர்மத்துக்கு கருத்துக் கேட்பு என்று பரஸ்பர ஆதாயத்தோடு பட்டையைக் கிளப்பினார்கள்.

இஷேத்ரா பன்னாட்டு உறைவிடப் பள்ளி சார்பாக ஒரு கடை போட்டிருந்தார்கள். “பாரத தருமத்தை இயற்கையான முறையில் சொல்லிக் கொடுக்கிறோம். படிப்பு என்றால் பாடப் புத்தகத்தில் மட்டும் கிடைப்பதில்லை. அதற்கேற்ற சூழல், முறையாக பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியர்கள், நூலகங்கள், விளையாட்டு வசதிகள் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட பள்ளிதான் எங்களுடையது. 60 ஏக்கர் நிலத்தில் அமைந்த பள்ளியில் நமது பாரம்பரிய சூழலில் குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். சுத்த சைவ உணவுதான் போடுகிறோம்; யோகா, தியானம் சொல்லித் தருகிறோம்” என்றார்.

“இதற்கெல்லாம் எவ்வளவு ஃபீஸ்?”

“சராசரியா வருஷத்துக்கு ரூ 1.25 லட்சம் வரும்”

ishetra
பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா

“என்னங்க இது பாரத தருமத்தை சொல்லிக் கொடுக்கறதுக்கு இவ்வளவு பணமா. நம்ம நாட்டோட எல்லாக் குழந்தைகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் படி இலவச கல்வி எல்லாம் இல்லையா?”

“அதெல்லாம் எனக்கு தெரியாதுங்க. அங்க நிக்கிறாங்களே அவங்கதான் இதுக்கு நிர்வாகி, போய் கேட்டுக்கோங்க” என்று நழுவி விட்டார். பாரம்பரிய இந்து ஞானமரபின் கல்விக்கு ஒன்றேகால லட்சமெல்லாம் ஒரு விசயமே இல்லை.

வழியில் இரு பள்ளி மாணவர்கள் தட்டில் டம்ளரோடு தண்ணீரை நீட்டினர். அப்போது தாகம் இல்லாததால் வேண்டாம் என்று கூறிவிட்டு நடந்தோம்.

“தம்பி இங்கே வாங்க தண்ணியை எடுத்து குடிங்க” என்றார் ஒரு அந்த ஸ்டாலில் இருந்த பெண்மணி.

சரி குடித்துவிடுவோம் என்று எடுத்து குடிக்கப்போகும் போது ‘ஓம் நமச்சிவாயா’ன்னு சொல்லிட்டு குடிங்க என்றார். எதிரில் ஒரு பள்ளி மாணவர் கூட்டம் வந்துகொண்டிருந்தது, அதில் ஒரு மாணவன் தண்ணீரை குடிப்பதற்கு முன்பு ஓம் நமச்சிவாயாவுக்கு பதிலாக ‘ஜெய் ஆஞ்சநேயா’ என்றான்.

அது என்ன டயலாக் என்று அவனிடமே கேட்டோம்.

“சும்மா ஒரு தமாஷுக்கு தான்”

“அது என்ன ஜெய் ஆஞ்சநேயா.”

“அது ஒரு தெலுங்கு பட டயலாக்ண்ணா”.

“என்ன டயலாக்”

“ஒரு தெலுங்கு படத்துல டிரெய்ன் மேல ஏறி பாலகிருஷ்ணா ஃபைட் பண்ணிட்ருப்பாரு. அப்ப எதிர்ல இன்னொரு ட்ரெய்ன் வரும் அது பக்கத்துல வரும் போது அதை தடுத்து நிறுத்துறதுக்காக கையை நீட்டி ஜெய் ஆஞ்சநேயான்னு சொல்லுவாரு டிரெய்ன் அப்படியே நின்னுடும், செம்ம காமெடி அது, அந்த டயலாகை தான் சொன்னேன்” என்றான்.

அடுத்து ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ என்கிற ஸ்டால். ஸ்டால்காரர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளரிடம் புலம்பிக்கொண்டிருந்தார்.

“எப்ப பார்த்தாலும் எனக்கு சின்ன ஸ்டாலா தான் தர்றா, வர்றவங்கள் எல்லாம் என்ன இவ்வளவு சின்னதா இருக்குன்னு கேக்குறாங்க நிர்வாகத்திடம் கொஞ்சம் சொல்லுங்கோ, அடுத்த முறையாவது கொஞ்சம் பெருசா வேணும்” என்று தனக்கு சின்ன கடை ஒதுக்கப்பட்டது குறித்து புலம்பிக் கொண்டிருந்தார்.

பக்கத்து ஸ்டாலில் ஒருவர் தினசரி நாம் எப்படி எப்படி எல்லாம் நடந்துகொள்ள வேண்டும் என்று விளக்கிக்கொண்டிருந்தார். அது என்ன ஸ்டால் என்று பார்த்தால் அதன் பெயர் ‘ஸனாதன் ஸன்ஸ்தா’ நாமும் அருகில் போய் நின்று கொண்டோம்.

 • எப்படி குளிக்க வேண்டும்
 • பெண்கள் முடியை அவிழ்த்து விடக்கூடாது, முடிந்து வைக்க வேண்டும், அதை எப்படி முடிய வேண்டும்.
 • எந்த திறப்பு விழாவாக இருந்தாலும் அதை ரிப்பன் வெட்டி திறக்காமல் இந்து முறைப்படி தேங்காய் உடைத்து திறக்க வேண்டும்.
 • ஒரு விழாவில் விளக்கேற்றும் போது மெழுகுவர்த்தியை பயன்படுத்தாமல் திரி விளக்கை பயன்படுத்தி விளக்கேற்ற வேண்டும்
 • குழந்தைகளின் பிறந்த நாட்களை கொண்டாடும் போது கேக் வெட்டி கொண்டாடாமல் பலகையில் உட்காரவைத்து இந்து முறைப்படி கொண்டாட வேண்டும்.
 • பேண்ட், ஷர்ட் போன்ற வெளிநாட்டு உடைகளை அணியாமல் நமது பாரம்பரிய உடைகளை அணிய வேண்டும்

என்றெல்லாம் விளக்கிக்கொண்டிருந்தார். ஆனால் அவரே ஜீன்ஸ் பேண்ட் தான் அணிந்திருந்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“நீங்க மட்டும் ஏன் ஜீன்ஸ் போட்டிருக்கீங்க”

“சில தவிர்க்கமுடியாத நேரங்களில் இப்படி இருக்க வேண்டியிருக்கிறது” என்றார். “மற்றபடி நமது பாரம்பரிய உடைகளை உடுத்துவது தான் சரியானது.” என்றார். “சரிங்க ஜி நீங்களே பின்பற்ற முடியாத ஒன்றை மற்றவர்களுக்கு உபதேசிப்பது சரியா” என்றால், “இந்து தர்மத்துக்கு உதவுவது எதுவுமே தப்பே இல்லை” என்றார். குற்றமனசு இல்லாமல் செய்யும் எதுவுமே தவறு இல்லை என்ற சதுரங்க வேட்டை வசனம் நினைவுக்கு வந்தால் கம்பெனி பொறுப்பில்லை.

பசு பாதுகாப்புக்காக பல கடைகள் இருந்தன.

“கால்நடைகள் அழிந்தால் விவசாயமே அழிந்து விடும். நம் ஊரிலிருந்து ஆண்டிற்கு 5000 டன் அளவிற்கு இறைச்சிக்காக கேரளாவிற்கு மாடுகள் கடத்தப்படுகின்றன. இவற்றை கண்காணித்து, தடுக்க வேண்டிய விலங்குகள் நல வாரியம் எதுவுமே செய்வதில்லை. நாங்கள்தான் கால்நடைக் கடத்தல்களை செக்போஸ்ட்டில் தடுத்து நிறுத்தி வருகிறோம்” என்றார் ஒரு பசுப் பாதுகாப்பு ஸ்டால்காரர்.

“உண்மை தான் சார் ஆனால் நீங்கள் பசுக்களுக்காக மட்டும் தான் பேசுகிறீர்கள், மற்ற விலங்குகள் பாவம் இல்லையா” என்றோம்.

“சரிதான் ஆனால் பசு தான் உலகத்தின தாய், அதன் பயன்பாடு தான் அதிகம்”.

“இல்லையே இந்த நாட்டின் முதுகெலும்பு விவசாயிகள் தான் என்று காந்திஜி கூறியுள்ளார். அந்த விவசாயிகளுக்கு உதவியாகவும், பயன்படுபவையாகவும் இருப்பவை காளை மாடு, எருமை மாடு, ஆடு, கோழி, நாய்கள் போன்ற விலங்குகள் தானே அன்றி பசு இல்லையே”

“இப்படி எல்லாம் விதண்டாவாதம் செய்துகொண்டிருந்தால் பதில் கூற முடியாது, எங்களுக்கு பசுதான் முக்கியம்”.

பசுக்களை காக்கும் இந்த மனிதாபிமானிகள் அதன் சாணி, மற்றும் மூத்திரத்திலிருந்து தயாரிக்கப்பட்ட பை ப்ரோடக்ட்கள் மற்றும் மூர் மார்கெட்டில் கூறு பத்து ரூபாய் என்று வாங்கி வந்த பாசிமணி ஊசி மணிகளையும் அங்கே விற்றுக் கொண்டிருந்தனர். அமெரிக்காவில் செட்டிலான என்ஆர்ஐ அம்பிகளிடம் காசு வாங்கிக் கொண்டு பசுக்களை ஜீவகாருண்யத்துடன் பராமரிப்பதாக கூறும் இவர்கள் தம் வாழ்நாளில் பசு மாட்டை தொட்டது கூட கிடையாது. பால் கறப்பது, சாணி அள்ளுவது, மாட்டை குளிப்பாட்டுவது என்று பசுக்களை பராமரிப்பது என்று அனைத்தையும் செய்வது நமது உழைக்கும் வர்க்கத்தை சேர்ந்த குமார் அண்ணன் தான். கண்காட்சிக்கு கொண்டு வந்திருந்த மாட்டை பராமரிப்பதற்கு அவரை கூடவே அழைத்து வந்திருந்தார்கள்.

‘இவங்ககிட்ட சம்பளமெல்லாம் எதிர்பாக்க முடியாது தம்பி, சாப்பாடு போடுவாங்க அப்பப்ப செலவுக்கு காசு கொடுப்பாங்க அவ்வளவு தான்’ என்றார் குமார். பசுவுக்கு கருணை காட்டும் ஜிக்கள் மனிதர்களுக்கு காட்டமாட்டார்கள் என்பது ஆச்சரியமல்லவே?

காளை மாடுகளை துன்புறுத்தும் நிலப்பிரபுத்துவ காட்டுமிராண்டி விளையாட்டான ஜல்லிக்கட்டை ஆதரிக்கக்கோரும், ஆன்மீக ஜல்லிக்கட்டு என்கிற ஸ்டாலுக்கு அருகில் வந்தோம். அங்கே இருந்தவரிடம்,

“ஆன்மீகத்திற்கும் ஜல்லிகட்டிற்கும் என்ன சார் சம்மந்தம், ஆன்மீக ஜல்லிக்கட்டு என்றால் என்ன” என்றோம்.

“ஆன்மிகத்திற்கும் ஜல்லிக்கட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை சார், ஆன்மீகம்னு ஒரு வார்த்தையை சேர்த்துக்கொண்டால் தான் ஸ்டால் கொடுப்போம்னு சொன்னாங்க, அதற்காக தான் ஆன்மீக ஜல்லிக்கட்டுன்னு போட்ருக்கோம்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“அதுமட்டுமில்லைங்க எங்க குடும்பத்திற்கே பெரியார் மீதும், கம்யூனிஸ்டுகள் மீதும் பெரிய மரியாதை இருக்கு. மக்களுக்கு ஜல்லிக்கட்டைப் பற்றியும், அதன் மரபை பற்றியும் விழிப்புணர்வூட்டுவதற்காக தான் இது போன்ற கண்காட்சிகளில் ஸ்டால் போடுகிறோம் அதற்கு இந்து, ஆன்மீகம் என்கிற முகமூடிகள் தேவைப்படுகிறது. மற்றபடி ஆன்மீகத்திற்கும் இதற்கும் தொடர்பில்லை” என்று ஆர்.எஸ்.எஸ் கும்பல், கண்காட்சிக்கு ஆள் பிடிக்கும் வித்தையை அறியத்தந்தார்.

அதையடுத்து, பாழடைந்த பழைய மண்டபங்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கின்ற ரீச் என்கிற அமைப்பின் (நன்கொடைகளுக்கு வரி விலக்கு உண்டு) ஸ்டாலுக்கு சென்றோம்.

‘பழமை மாறாமல் கோவில்களை புனரமைக்க வேண்டுமா எங்களை அழையுங்கள் நாங்கள் வருகிறோம்’ என்று விளம்பரம் வேறு. இந்திய நகரங்களில் குளிர்காலம் வந்தால் ஒண்ட இடமின்றி ஏழைகள் இறந்து கொண்டிருக்கும் போது பாழடைந்த பழைய ஹைதர் காலத்து கட்டிடங்கள் எல்லாம் இருப்பதால்தான் என்ன பயன்? இது தவிர வெஜிடேரியன் ஒன்லி போர்டு போல ஐ சப்போர்ட் வெஜிடேரியன், உப்பு போடாமல் சாபிடுவோர் சங்கம், பானி பூரி லவ்வர்ஸ் போன்ற பக்கோடா என்.ஜி.ஓ கள் எல்லாம் நோட்டீஸ்களில் வரி விலக்கு உண்டென ஆன்மீக பொருட்களை விற்றுக் கொண்டிருந்தனர்.

ஒரு ஸ்டாலில் எக்கோ டூரிசம் போவதற்கு சாவு வீட்டில் சங்கீதத்தை ரசிக்கும் மனநிலையுடன் நடுத்தரவர்க்கம் கூட்டம் கூட்டமாக பதிவு செய்து கொண்டிருந்தது. மூன்று இரவு, இரண்டு பகலில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை 560 புண்ணிய திருத்தலங்கள், 300 புண்ணிய தீர்த்த குளியல்கள் என அடுத்த உத்தராஞ்சல் பயங்கரத்திற்கு ஆட்களைத் திரட்டி கொண்டிருந்தனர் ஓம் யாத்ரா என்கிற ஆன்மீக சுற்றுலா கம்பெனியார். சேவைத்துறையில் இந்துமதத்தையும் சேர்த்துவிட்டால் நமது ஜி.டி.பி எகிறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

temple-worshippersஅடுத்து அக்க்ஷர்தம் கோவிலின் ஸ்டால். அருகில் சென்றதுமே “அக்க்ஷர்தம் கோவிலை பற்றி கேள்விப்பட்ருக்கீங்களா, மொத்தம் 105 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டிருக்கு. அதில் 35 ஏக்கர் கோவில். கோவில் முழுவதும் தங்கம். வெளியே கண்காட்சி அது இது என்று, ஸ்ரீ மாருதி நகர், சென்னைக்கு மிக அருகாமையில் அமைந்திருக்கிறது, பத்தே நிமிடத்தில் ரெயில் நிலையம், அருகிலேயே மருத்துவமனை” என்று ரியல் எஸ்டேட் தரர்களை போல கோவிலைப் பற்றி அவர் விளக்கிக்கொண்டிருந்தார்.

இந்த கோவில் டெல்லியில் இருக்கிறது. மொத்தம் உள்ள 105 ஏக்கரில் 35 ஏக்கர் தான் கோவில், மீதம் உள்ள இடம் முழுவதும் கண்காட்சியாம். என்ன கண்காட்சி என்றால் கல்யாண ஆல்பம் மாதிரி ஒன்றை திறந்து காட்டினார், அதில் பலவகையான சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கின்றன. பிறகு பூங்காக்கள். உள்ளுக்குள்ளேயே ஒரு தியேட்டர் இருக்கிறது, அந்த தியேட்டரில் வருடம் முழுவதும் ஒரே படம் தான் ஓடுமாம். ‘bhagavan mystic india’ என்பது தான் படத்தின் பெயர். ஸ்வாமி நாராயண் என்கிற அந்த கோவிலில் உள்ள கடவுள் தான் படத்தின் ஹீரோ. மேலும் உலகம் முழுவதும் உள்ள தண்ணீர் அனைத்தையும் கொண்டு வந்து அங்குள்ள குளத்தில் கொட்டி வைத்திருக்கிறார்களாம். கோவிலுக்கு செல்வதற்கு தான் காசு இல்லை. மற்ற எழுபது ஏக்கரையும் சுற்றிப் பார்க்க வேண்டுமானால் துட்டு வேண்டும்.

“அந்தப் படத்தை நீங்கள் இங்கிருந்தே கூட பார்க்கலாம் எங்களிடம் DVD இருக்கிறது வாங்கிக்கொள்ளுங்கள்” என்று நைசாக நீட்டினார், “வேண்டாம்” என்று கிளம்பினோம்.

ஒரு செயற்கையான மரத்தில் பலவகையான அட்டைகளை கட்டி தொங்கவிட்டிருந்தனர். அது என்ன என்று சென்ற போது தான் அது பேசும் மரம் என்றனர்.  அது மெதுவாக பேசி கொண்டிருந்தது. மரத்திற்குள் ஸ்பீக்கர் வைத்திருக்கிறார்கள். “இந்த உலகம் என்னால் தான் இயங்குகிறது. இங்கே நடப்பவை அனைத்தும் என்னால் தான் நடக்கிறது. இந்த அரங்கில் கூறப்படுபவை அனைத்தும் எனக்காகவே கூறப்படுகின்றன. சநாதன தர்மம் தான் சரியானது, சநாதன தர்மம் என்பது பிறருக்கு உதவி செய்வது தான்” என்று பேசிக்கொண்டிருந்தது. கண்காட்சியில் பங்குபெறும் நிறுவனங்கள், மற்றும் ‘பாரதமாதாவை’ பிளந்தெறிந்துகொண்டிருக்கும் கார்ப்பரேட்டு கம்பெனிகளின் பெயர்களை எல்லாம் அதில் எழுதி தொங்கவிட்டு அதற்கு சனாதன தர்ம விருட்சம் என்று பெயரிட்டுள்ளனர்.

treeஇந்து ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு ‘ஸ்பான்சர்’ செய்த கார்ப்பரேட்டுகளின் பட்டியலில் இந்தியாவை கூறு போட்டு பன்னாட்டுக்கு விற்றுக் கொண்டிருக்கும் டால்மியா, பி.கே.பிர்லா, லார்சன் & டியூப்ரோ, எஸ்ஸார், டிவிஎஸ், பஜாஜ், முருகப்பா குழுமம் போன்ற இந்திய தரகு பெரு முதலாளிகளோடு, ஐ.பி.எல் சூதாட்ட புகழ் இந்தியா சிமென்ட்ஸ், சொல்வதெல்லாம் உண்மை புகழ் ஜீ டிவி ஆகிய நிறுவனங்களும் உண்டு.

மறுகாலனியாக்க காலகட்டத்தில் அனைத்தும் நுகர்ந்து எறியப்பட வேண்டிய பண்டங்கள் தான் அதற்கு மதமும் விலக்கல்ல. இந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி என்கிற இந்த அரங்கு ஒரு நுகர்வுக்கான காடு என்பதை சனாதன மரத்தின் ஸ்பான்சர் விழுதுகளே அறிவிக்கின்றன. கல்வி நிறுவனங்களும், கட்டுமான நிறுவனங்களும் என்ன ஆன்மீக உணர்வை வளர்க்கவா இங்கே ஸ்டால் போட்டிருக்கிறார்கள்? அருண் எக்ஸ்செல்லோவுக்கும் ஆன்மீகத்துக்கும் என்ன சம்பந்தம்?

இந்த கண்காட்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கும் தரகு முதலாளித்துவ நிறுவனங்கள் அனைத்தும் ஏகாதிபத்திய பன்னாட்டு நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்த நாட்டின் கனிம வளங்களை எல்லாம் கொள்ளையடிக்கும் பினந்தின்னி கழுகுகள். எஸ்ஸார் என்கிற தரகு முதலாளித்துவ கார்ப்பரேட் கம்பெனி ஒரிசாவிலும், சட்டீஸ்கரிலும் நிலக்கரியையும், இரும்புத் தாதுக்களையும் வெட்டி எடுப்பதற்கு வெறியுடன் அலைந்துகொண்டிருக்கிறது. அதுவும் இந்த ஆன்மீக சேவைக் கண்காட்சிக்கு ஸ்பான்சர் செய்திருக்கிறது. அதேநேரம் கண்காட்சி அரங்கில் ஆர்.எஸ்.எஸ் சின் வனவாசி சேவா கேந்திரம் பழங்குடிகளின் உரிமைகளுக்காக ஸ்டால் போட்டிருக்கிறது.

எப்படிப்பட்ட கைக்கூலித்தனம்? ஒரிசாவையும், சட்டீஸ்கரையும் குடைந்தெடுக்கப் போகின்ற கம்பெனியிடம் காசு வாங்கிக்கொண்டு அதனால் சாகப்போகின்ற பழங்குடிகளுக்கான அமைப்பையும் இவர்களே நடத்துவார்களாம். ஆகா எப்பேர்பட்ட தேஷபக்தி!

–    தொடரும்.

–    வினவு செய்தியாளர்கள்.

முந்தைய பகுதிகள்

 1. ஒரு பஞ்சாங்க கோஷ்டியின் உளறல் !
 2. வாங்கோ நீங்க ஐயரா ஐயங்காரா ?
 3. ஆன்மீக வியாபாரிகளின் அடிதடி
 1. முன்பே எதிர்பார்த்ததுதான்….
  இனிமேல் பரிகார கோமம்,பசுமாடு கோமியம் இவையெல்லாம்
  பிரிக்கமுடியாத அம்சமாக மாறி விடும்…..
  ஆனாலும் என்ன?
  பெரியார் திடல் வீரமணி சுவாமிகள் தன் பணம் உண்டு,அதை பாதுகாக்க பல வழிகள் உண்டு…
  கொர்ர் கொர்ர்ர்

 2. வீரமணியை விடுங்கள். மக்களாகிய நாம் என்ன செய்கின்றோம்?

  • அப்பப்ப பதிவு போடுகிறோம்….
   மற்றபடி சோத்துக்கு வழி என்ன என்று தேடுகிறோம்

 3. இது தொடர்பான அணைத்து லின்குகளுகளும் இதன் எல்லா பகுதிகளிலும் கிடைத்தால் வசதியாக இருக்கும் . அதாவது முதல் கட்டுரையின் முடிவிலேயே அதன் தொடர்ச்சியான அணைத்து பதிவுகளின் லிங்கும் தரப்பட்டால் படிப்பவர்களுக்கு வசதியாக இருக்கும்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க