privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகவிதைகருவாடாற்றுப்படை!

கருவாடாற்றுப்படை!

-

பூனையும் கருவாடும்
கோயம்பேடு கருவாடு விற்பனைக்கு தடைபோடு! என கவுச்சி வெறுத்த பூனைகள் கத்துகின்றன

கோயம்பேடு கருவாடு
விற்பனைக்கு தடைபோடு!
என
கவுச்சி வெறுத்த பூனைகள்
கத்துகின்றன,
சந்திலிருந்தும்
‘தி இந்து’ விலிருந்தும்.

மச்ச அவதாரம் எடுத்த
மகா விஷ்ணுவின்
மறு அவதாரமல்லவோ
கருவாடு!
மிச்ச அவதாரமாக
பன்றி வரை
பகவான் அவதரிக்க
இனிய கருவாட்டின் மேல்
இந்துவுக்கென்ன நோக்காடு!

வேதகாலத்தில்
நீங்கள் தின்று தீர்த்த
உயிரினம் போக
எங்களுக்கு எஞ்சியிருந்தது
இந்தக் கருவாடு,
அதுக்குமாடா
உங்கள் இடையூறு!

காய், கனிச் சந்தையில்
கருவாடு விற்கலாமா? என
வக்கணை பேசும் அக்கிரகாரமே!

தி இந்து அலுவலகத்தில் அசைவம் தடை
அலுவலகத்தில் யாருக்கும் அசைவமே கூடாதென அடுத்தவன் வயிற்றிலும் ‘நாமம்’ போடலாமா?

செய்திப் பத்திரிகை என்று
அரசு சலுகையை அள்ளிக் கொண்டு
விளம்பரத்திலும்
விலைக்கு செய்தி போட்டும்
நீ கடை நடத்தலாமா?

ஹோண்டா கார் விளம்பரத்துக்காக
பிள்ளையாரை டான்ஸ் ஆட விட்டு
நீ மட்டும்
‘ இந்துக்கள்’ மனதை
புண்படுத்தலாமா?

அனைத்துக்கும் மேலே
போதுமான அளவுக்கு
உன்னிடம்
புளிசோறு ‘ஸ்டாக்’ இருப்பதாலே
அலுவலகத்தில் யாருக்கும்
அசைவமே கூடாதென
அடுத்தவன் வயிற்றிலும்
‘நாமம்’ போடலாமா?

எதையுமே
அவாள் செய்தால் அனுபூதி
அடுத்தவன் செய்தால்
அதோ கதி!

அவர்கள் குலத்தையே அழித்தாலும்
வேள்வி,
நாம் கொஞ்சம் தின்றாலும் என்.வி.!

மற்றவர் ஆடினால்
சதிராட்டம், தாசியாட்டம்
அவர்கள் ஆடினால்
பரத நாட்டியம்!

அவர்கள் வயிற்றில் மலர்ந்தால்
கடல் புஷ்பம்,
நம் சட்டியில் மிதந்தால் மீன்!

பரத நாட்டியம்
மற்றவர் ஆடினால் சதிராட்டம், தாசியாட்டம் அவர்கள் ஆடினால் பரத நாட்டியம்!

சைவம் புழங்குமிடத்தில்
அசைவம் கூடாதெனில்
தமிழ் புழங்கும்
எம் தமிழ்நாட்டில்
சமஸ்கிருத புழக்கம் மட்டும்
மொழிக் கவிச்சியில்லையா?

‘தமிழால் இணைவோம்’ என்று
மொழியைக் காட்டி
காசைப் பறிப்பது,
‘கருவாட்டால்
பிரிவோம்’ என
சுத்தத்தைச் சொல்லி
இனத்தைப் பிரிப்பது,
இரண்டிலும்
இந்துவின் சங்கு, சக்கர லாவகம் பார்த்து
பெருமாளுக்கே கை நடுங்குது!

நாலாயிர திவ்ய பிரபந்தத்தின்
“அக்கார வடிசிலிலும்”
திருவரங்கரத்து நாச்சியாருக்கு
படைக்கப்பட்ட ரொட்டியிலும் மட்டுமல்ல
நாலாபுறத்திலும் காவிரிக்கரையின்
கருப்பஞ்சாறு புகையிலும்
கருவாட்டுக்குழம்பு மணத்திலும்
திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

கருவாட்டுக் குழம்பு
காவிரிக்கரையின் கருப்பஞ்சாறு புகையிலும் கருவாட்டுக்குழம்பு மணத்திலும் திளைத்துக் கிடந்தவன் திருவரங்கன்!

குறிஞ்சி நிலக்கடவுள் முருகனுக்கு
காட்டுப் பன்றி படையல் போட்டது
திணைவாழ்க்கை,
பாண்டிக்கோயில் கறிசோறும் தின்று
அழகர்கோயில் துளசி தீர்த்தமும் குடித்து
கருவாட்டுக்குழம்பும், சுருட்டும்
கருப்பண்ணசாமிக்கு படைப்பது எம் வழக்கம்.

முறுக்கும், சீடையும் தின்றுவிட்டு
ஒரு வேலையும் இல்லாமல்
சும்மா உட்கார்ந்து
குடல் நாறுவது உன்சாமி,
முழு ஆட்டையும் தின்றுவிட்டு
மூலைக்கு ஒருவராய்
வேலைக்குப் போறவருடன்
வேட்டைக்குப் போவது எம்சாமி!

சிறுபாணாற்றுப் படையா
பெரும்பாணாற்றுப் படையா
இல்லை கருவாட்டுக் கடையா என
வியக்குமளவுக்கு
வெண்சோறும், எயினர் வீட்டு
கருவாட்டு புளிசாறும்
மணக்கும் காட்சிகள்
இலக்கிய சாட்சிகள்.

இறைச்சி
சுத்த அசைவமாய் சத்தானது சங்க இலக்கியம்!

நண்டும், நத்தையும்
மீனும், கருவாடும்
உடும்பும், பன்றியும்,
கோழியும், மடையானும்

ஆடும், மாடும், உரித்துத் தின்று
சுத்த அசைவமாய்
சத்தானது சங்க இலக்கியம்!

ஆமை புழுக்கியும்
சாமை வதக்கியும்
ஆய்ந்து வளர்ந்தது அகநானூறு
நற்றிணை, நல் குறுந்தொகை
திணைக்களம் ஏற்ற தெரிவால்
உணவுப்புனிதம் ஒழித்தது
எங்கள் வரலாறு!

பொருநராற்றுப்படை சீரில்
நாங்கள்
பொரித்து எடுத்த இறைச்சியின்
ஓசையும் உள்ளது
அர்த்தசாஸ்திரத்திலேயே
இறைச்சிக்கேற்ற எண்ணெய் அளவு பற்றிய
பக்குவம் உள்ளது!
‘பாரத விலாஸ்’ பருப்பெல்லாம்
இங்கே வேகாது
வேதங்களின் அசைவ உணவை
அடுக்கினால்
பாரில்
முனியாண்டிவிலாசே பத்தாது!

மீன்கள்
மீன்கள் துள்ளிடும் எம் பட்டினப்பாலை

அயிரை, ஆரல், இரால்
சுறா, விறால், வாளை
குரவை, கெண்டை என
மீன்கள் துள்ளிடும்
எம் பட்டினப்பாலை

தாழை முள்ளும்
வாளை முள்ளும்
தரித்தது எங்கள்
நெய்தல் சாலை.

”திருக்கண்ணபுரத்து செங்கண் மாலுக்கு
தன் காதலைச் சொன்னால்
இரு நிலத்தில் உன் பேடையோடு
இன்பம் எய்த
மீன் கவர்ந்து நான் தருவேன்” என
திருமங்கையாழ்வார் பாசுரத்திலும்
மீன் வாடை உண்டு!

மூலஸ்தானத்தில் மூத்திர நெடி
மூலஸ்தானத்தில் உங்கள் மூத்திர நெடிதாங்காமதானே பெருச்சாளி கூட கோயிலை விட்டே ஓடுது!

சைவம் சுத்தம்
அசைவம் அசுத்தமென்று
எவன்டா சொன்னது?
எங்கள் சாமிகளில் பெரும்பான்மை
கருவாடு தின்பது.

மூலஸ்தானத்தில்
உங்கள்
மூத்திர நெடிதாங்காமதானே
பெருச்சாளி கூட
கோயிலை விட்டே ஓடுது!

பெரும்பான்மை படி
இது இந்து நாடல்ல,
கருவாடு!

பார்ப்பான் சுத்தம்
சூத்திரன் அசுத்தம்!
சமஸ்கிருதம் சுத்தம்
தமிழ் அசுத்தம்!
பால் சுத்தம்
மாட்டுக்கறி அசுத்தம்!
பரம்பரை
அர்ச்சகர் சுத்தம்
இடஒதுக்கீடு அசுத்தம்!
தட்சணை சுத்தம்
தரும் தாழ்த்தப்பட்டவர் அசுத்தம்!

பார்ப்பனியம்
கட்டுக்கதைகளும் கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

இப்படி – கட்டுக்கதைகளும்
கட்டளைகளுமே பார்ப்பனிய மொத்தம்!

அம்பிகளே
உங்களுக்கு கருவாடுதான் நாறுது
எங்களுக்கு
பார்ப்பன கலாச்சாரமே நாறுது!
‘மோருஞ்ஜா’ நக்கும் ஓசையில்
தயிர்கவுச்சி தாங்காமல்
பசுமாடு மூக்கைப் பொத்தும்,

பளபளக்கும்
உங்கள் ”லெதர்பேக்கு, செருப்பு
பர்சின் வெறிகொண்ட வேட்டையைப் பார்த்து
பிறந்த கன்றுக்குட்டியும்
பீதியில் கத்தும்

இனிய திருக்குறள்
பொதுவில் இருக்க
வலிய பகவத்கீதையை
வாரிசுகளின் வாயில் திணிக்கும்
சாதிய நாற்றம்
சகிக்கக் கூடியதா?
முகநூலில் உலகமே
முகம் காட்டும் காலத்திலும்
பூணுலில் அகம் காட்டும்
பொல்லாத சாதிவெறியை
கருவாடும் தாங்குமோ?

கருவாடு வகைகள்
நெஞ்சனைய வஞ்சிரம், நினைத்ததும் நா சுரக்கும் காரப்பொடி, ஓட்டாம்பாறை, சூரையும், மாசியும் யாரையும் இழுக்கும்.!

ஜனநாயக சுத்தம்
சற்றாவது உண்டா?
”தமிழ் நீசபாஷை
தமிழன் சூத்திரன்” என்று
தாளித்துக் கொட்டினாலும்
சங்கராச்சாரி படத்தை வைத்திருக்கும்
சர்சூத்திரன் இன்னும் உண்டு,
பார்ப்பன சர்வாதிகாரத்தை திருத்திய
பெரியார், அம்பேத்கர் படம்
ஒரு பார்ப்பனர்
வீட்டிலாவது உண்டா?

கோயம்பேட்டில்
கருவாடு விற்பதே
அபச்சாரமென்றால்
எங்கள் கோயில்களில்
சமஸ்கிருதம் விற்பது
அநீதியன்றோ!

கத்திரிக்காய் மட்டுமல்ல
நெத்திலியும்
எமக்கு சுத்தமாய்ச் சேரும்
இன்னும் எத்தனை வகை வேண்டும்
எங்கள் உழைப்பவர் தாழ்வாரம்
‘இந்துவே’ எட்டிப்பாரும்,
நெஞ்சனைய வஞ்சிரம்,
நினைத்ததும் நா சுரக்கும்
காரப்பொடி, ஓட்டாம்பாறை,
சூரையும், மாசியும்
யாரையும் இழுக்கும்.!

ஒழுங்காக நடந்து கொள் தி இந்து
கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’ கொஞ்சம் சங்கு சதையும் வயல் நத்தையும் தின்று பார் உன் மூலச்சூடும் அடங்கும்!

கானாங்கெழுத்தியும்,வவ்வாலும் வேண்டாம்
என்குமோ மனம்?
கெட்ட பார்ப்பனியம் பழகியதால்
சுட்ட கருவாடானது இனம்!

திவலைகள் உரசும்
மழைக்கால இரவில்
கவலை மீனில் உயிர்
கரையும், சிலிர்க்கும்!
சுறாவும், திருக்கையும்
எம் இரத்தத்தில் கலந்து
பிள்ளைபெற்ற பெண்ணின் மார்பில் சுரக்கும்!

சென்னாகுன்னி கருவாட்டுப்பொடிக்கு
இட்டலி ஆவி பறக்கும்,
கெளுத்தி, உளுவை
கண்ணாடிக்கெண்டையைப் பார்த்தால்
சுவை மொட்டுகள் வாய் திறக்கும்!
உடும்பும், நண்டும்
உலை கொதிக்க
உழைப்பின் வலிகள் அடங்கும்,
கண்ணெரிச்சல் தாங்காத ‘இந்துவே’
கொஞ்சம் சங்கு சதையும்
வயல் நத்தையும் தின்று
பார்
உன் மூலச்சூடும் அடங்கும்!

-துரை.சண்முகம்