privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புஅரசியல்ஊடகம்வெள்ள அபாயம்: தி இந்துவின் விராட் கோலி விக்ஸ் நிவாரணம்

வெள்ள அபாயம்: தி இந்துவின் விராட் கோலி விக்ஸ் நிவாரணம்

-

ரோமாபுரி நீரோ மன்னனை விட மவுண்ட்ரோடு மகா விஷ்ணு அபாயகரமானவர். தீப்பிடிக்கும் போது பிடில் வாசிப்பதும், பெட்ரோல் ஊற்றுவதும் ஒன்றில்லை அல்லவா?

இன்று திங்கள் – 18.08.2014 தேதியிட்ட தி இந்து (தமிழ்) அச்சுப் பதிப்பின் முதல் பக்கத்தை பாருங்கள். மேலே இரண்டு தலைப்பு செய்திகள், அதன் ஓரத்தில் பீகார் வெள்ளம் குறித்த ஒரு புகைப்படம். அந்த சின்ன புகைப்படம், வெள்ளத்தின் துயரத்தை ஆழமாக உணர்த்துவதற்கு போதுமானதாக இல்லை. போகட்டும்.

தி இந்து
ரோமாபுரி நீரோ மன்னனை விட மவுண்ட்ரோடு மகா விஷ்ணு அபாயகரமானவர்.

பாதிக்கும் கீழே இரண்டு செய்திகள், ஒன்று – தமிழக மீனவர் படகுகளை விடுவிக்க முடியாது எனும் இலங்கை அமைச்சரின் செய்தியும், இரண்டு, வடமாநிலங்களில் கன மழை தொடர்வதால் ஏற்பட்டிருக்கும் வெள்ள அபாயம் குறித்த செய்தியும் வெளியாகியிருக்கின்றன. இதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா?

மீனவர் பிரச்சினையில் இலங்கையின் அடாவடித்தனத்தை செய்தியாக வெளியிட்டவர்கள், அது குறித்து மத்திய அரசின் செய்திகளை போடவில்லை. வெள்ள அபாயம் குறித்த செய்தியில் உ.பி மாநிலத்தில் 28 பேர் பலி, உ.பி, பீகாரில் வெள்ள அபாயம், மத்திய அரசு நடவடிக்கைகள், காஷ்மீரில் 3 பெண்கள் பலி, இறுதியில் வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை எல்லாவற்றோடும், பாஜகவினரை நிவாரணப் பணியில் ஈடுபடுமாறு கூறும் அமித் ஷாவின் செய்தி, மத்திய அரசு உதவி செய்வதாக கூறும் ராஜ்நாத் சிங்கின் செய்தியும் வெளியாகியுள்ளது.

பீகார், உ.பி இரண்டிலும் மாநில அரசாங்கங்கள் உள்ளதையோ அவை எடுத்த நடவடிக்கைகள் குறித்தெல்லாம் ஒன்றும் இல்லை. இது தமிழ் இந்துவின் பாஜக விசுவாசம் என்று வைத்துக் கொள்ளலாம்.

ஆனால் இந்த இரண்டு செய்திகளையும் யார் படித்தாலும் அவர்கள் நிறைய குழம்பி போவார்கள். அல்லது இந்த செய்திகளின் உள்ளே பாதிக்கும் மேற்பட்ட இடத்தை கைப்பற்றிக் கொண்டு ஊடுருவியிருக்கும் விக்சின் விளம்பரத்தை படித்தே ஆக வேண்டும்.

தொலைக்காட்சியில் விளம்பர இடைவேளைகள் போடும்போது நமது மக்கள் சாமர்த்தியமாக வேறு சானல்களை மாற்றியோ இல்லை சிறுநீர் கழிக்கச் சென்றோ சமாளித்து விடுவார்கள். இவற்றை ஆய்வு செய்து பிறகு குறிப்பிட்ட நிகழ்ச்சி நடக்கும் போதே கீழே பெட்டியில் குறுக்கிடும் விளம்பரங்களை காட்ட ஆரம்பித்தார்கள். இணையத்தில் இது கொடிகட்டி பறக்கிறது.

இப்போது அச்சு ஊடகங்களிலும் இதைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லா ஊடகங்களுக்கும் விளம்பரங்களை தரும் முதலாளிகள்தான் புரவலர்கள் என்பதால் அவர்களுக்குத்தான் முதல் மரியாதை. ஊரறிந்த இந்த உண்மையில் புரவலர்களின் பிச்சையை அதிகப்படுத்த ஊடக முதலாளிகள் தினுசு தினுசாக விளம்பரங்களை புகுத்தி அல்லது திணித்து கட்டணத்தை அதிகரிக்கிறார்கள்.

வழக்கமாக ஒரு செய்தி முடிந்த பிறகோ இல்லை தனிப்பக்கத்திலோதான் இந்த விளம்பரங்கள் அச்சு ஊடகங்களில் இருக்கும். ஆனால் தற்போது செய்திகளுக்குள்ளேயே விளம்பர வாசகங்களை அதுவும் வண்ணத்தில் கொட்டை எழுத்தில் போட்டு, படங்களையும் புகுத்தி விடுகிறார்கள். இன்றைய இந்துவில் மழை வெள்ளம், மீனவர் பிரச்சினையை படிக்கும் எவரும் விராட் கோலிக்கு அவரது அம்மா தடவி விடும் விக்ஸ் ஜெல் படத்தை பார்த்து விட்டு,. “என்னோட வலிகளைப் பத்தியும் என் அம்மாவுக்குத் தெரியும்” எனும் கொட்டை எழுத்து விளம்பர வண்ண வரியை படித்து திகைப்பார்கள்.

சிறிய கருப்பெழுத்தில் மீனவர், வெள்ள அபாய வலிகளை போட்டுவிட்டு பெரிய நீல எழுத்தில் விக்ஸ் வலியை பார்த்தால் என்ன நினைப்பார்கள்? ஒருக்கால் மீனவர், வெள்ள துயரங்கள் தொடர்பாக விராட் கோலி ஏதோ அறிக்கை விட்டு ஆறுதல் சொல்லியிருப்பாரோ என்று கூட நினைக்கலாம். வாசகங்களும் அப்படித்தான் இருக்கிறது. ஏழு வலிகள், தாயன்புமிக்க ஒரு ஆறுதல் எனும் விக்சின் அந்த விளம்பரம் அம்மா மகன் சென்டிமெண்டோடும், விராட் கோலியின் கிரிக்கெட் கவர்ச்சியோடும் கச்சிதமாக இணைக்கப்பட்டிருக்கிறது.

இங்கிலாந்தில் டக் அவுட்டாகி ஃபார்மில் இல்லையென்றாலும் விராட் கோலியின் வலியை நினைத்து உருகும் வாசகர்கள், உ.பி, காஷ்மீரில் மழையால் இறந்த மக்கள் குறித்தோ, இல்லை தமிழக மீனவர் பிரச்சினை குறித்தோ கவலைப்படுவார்களா என்ன?

வார இதழ்களில் கூட விளம்பரங்களையே செய்திகள் பாணியில் வெளியிட்டு விட்டு கடைசியில் படிக்க முடியாத அளவில் விளம்பரம் என்று போடுவார்கள். தி இந்துவோ விளம்பரம், செய்திகளுக்கு இனி வேறுபாடு இல்லை என்று ஒரு புது கேவலத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது.

செய்திகளுக்கிடையில் விளம்பரங்கள் எனும் காலம் போய் இனி விளம்பரங்களுக்கு இடையில் கொஞ்சம் செய்திகள் என்று கொண்டு வந்து விட்டார்கள்.

வட மாநிலங்களின் வெள்ள அபாயம் எனும் எழவு செய்தியில் இப்படி ஒரு ஜெல் விளம்பரத்தை பீர் பார்ட்டி போல போடும் சாமர்த்தியமெல்லாம் மவுண்ட் ரோடு மகா விஷ்ணு தவிர யாருக்கு வரும்?