கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள பேரூர்கடா என்கிற பகுதியைச் சேர்ந்த சல்மான் என்கிற இசுலாமிய இளைஞர் தேச துரோக குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 20-ம் தேதி அன்று நள்ளிரவில் போலீசாரால் எந்தக் காரணமும் குறிப்பிடாமல் இழுத்துச் செல்லப்படும் சல்மான், தொடர்ந்து மூன்று நாட்களுக்கு “பயங்கரவாதியைப்” போல் பல இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

அதிர்ச்சியடைந்த சல்மானின் பெற்றோர் தங்கள் மகனின் நிலை என்ன, எங்கே வைக்கப்பட்டுள்ளான், அவன் செய்த குற்றம் என்ன என்பதை அறிய மறுநாள் முழுவதும் அலைந்து திரிந்துள்ளனர். போலீஸ் தரப்பில் அவர்களுக்கு எந்தப் பதிலும் தரப்படவில்லை. ஆகஸ்டு 21-ம் தேதி மாலை “தேசிய கீதத்தை அவமதித்த” காரணத்தின் பேரில் சல்மான் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்த போலீசார், பின்னர் முகநூலில் தேசத்திற்கு விரோதமான தகவல்களை சல்மான் பரிமாறியதாகச் சொல்லி தேச துரோக குற்றத்தையும் இணைத்துக் கொண்டனர்.
ஒரு பயங்கரவாதியைப் போல் நடத்தப்படுவதற்கு காரணமாக கூறப்பட்ட சல்மானின் தேசதுரோகச் செயல் என்ன?
கடந்த 18-ம் தேதி சல்மானும் அவரது ஆறு நண்பர்களும் (அதில் இருவர் பெண்கள்) கேரள மாநில அரசுக்குச் சொந்தமான திரையரங்கு ஒன்றிற்குச் சென்றுள்ளனர். அங்கே திரைப்படம் துவங்குவதற்கு முன் தேசிய கீதம் போட்டிருக்கின்றனர். தேசிய கீதம் திரையில் ஓடிய சமயத்தில் சல்மானும் அவரது நண்பர்களும் அமர்ந்தே இருந்துள்ளனர். இதைக் கவனித்த இந்துத்துவ காலிகள் சிலர் சல்மான் தேசிய கீதத்தை அவமதித்து விட்டதாக அங்கேயே கலாட்டா செய்து போலீசிடமும் புகார் தெரிவித்துள்ளனர்.
சல்மானின் அடையாளம் அவர் இசுலாமியர் என்பதல்ல. திருவனந்தபுரத்திலும் அவர் வசிக்கும் பகுதியிலும், கல்லூரியிலும், நண்பர்கள் வட்டத்திலும் அவருக்கு வேறு அடையாளம் இருந்தது. சல்மான் நண்பர்கள் வட்டாரத்தில் மட்டுமின்றி அதிகார வர்க்கத்தினரிடையேயும் அறியப்பட்ட மனித உரிமை ஆர்வலராக இருந்தார். கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி திருவனந்தபுரத்திலுள்ள அரசுத் தலைமைச் செயலகத்தின் முன் ஊஃபா சட்டத்திற்கு எதிரான போராட்டம் ஒன்றில் பங்கெடுத்திருந்தார். மேலும், மனித உரிமை மீறல் தொடர்பான சில மேடை நாடகங்களிலும் பங்கேற்றிருந்தார். அவரது முகநூலில் பதிந்திருக்கும் அனேகமான நிலைத் தகவல்கள், போலீசாரின் அதிகார அத்துமீறலைக் கண்டிப்பதாகவே உள்ளன.
திரையரங்கில் ’தேசிய கீதத்தை’ அவமதித்து வெளியேறிய சல்மான், அவரது பெண் நண்பர் ஒருவர் “தேசியக் கொடியின் நிறத்தில் உள்ளாடை தேவை” என்பதைப் போல வெளியிட்டிருந்த முகநூல் நிலைத்தகவல் ஒன்றிற்கு விருப்பம் தெரிவித்திருந்த தேச ‘துரோக’த்தையும் செய்திருந்தார். இத்துடன் அவர் ஒரு இசுலாமியராகவும் இருக்கவே போலீசார் அவர் மேல் தேச துரோக குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளனர்.
தேசிய கீதம் குறித்து இந்தளவுக்கு அக்கறை காட்டி தம் கட்டும் அதிகார வர்க்கம் ஏன் அரசுத் திரையரங்கில் மட்டும் தேசிய கீதத்தை ஒலிக்க விடுகிறது? ஏன் தனியார் திரையரங்கில் ஒலித்துக் கொண்டிருந்த தேசிய கீத ரிக்கார்டை உருவிப் போட்டது?
ஏனென்றால், திரையரங்குகளில் தேசிய கீதம் வாசிக்கப்படும் போது மக்களே அதை மதிக்கவில்லை. தேசமே அடிமையாகும் போது தேசிய கீதத்திற்கு மட்டும் என்ன மதிப்பிருக்க முடியும்? ஆகவே சுதந்திரமாக வெளியே தம்மடிக்க சென்று விட்டனர். எனவே தான், முன்பு தனியார் திரையரங்குகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்பதாக இருந்த விதிமுறையைத் தளர்த்தினர். ”தேசியப் பெருமிதத்திற்கு அவமரியாதை நேர்வதைத் தடுக்கும்” 1971-ம் ஆண்டின் சட்டம் ‘யாரெல்லாம் தேசிய கீதம் இசைப்பதற்கு இடையூறு செய்கிறார்களோ அவர்களெல்லாம் தண்டனைக்குரியவர்கள்” என்று சொல்வதன் படி பார்த்தால், முதலில் தண்டனைக்குரியவர்கள் தனியார் திரையரங்குகளில் தேசியகீதம் இசைக்கப்படுவதை தடுத்த அதிகாரிகள் தான்.

அப்படியே தனியார் திரையரங்குகளில் மீண்டும் தேசிய கீதத்தை ஒலிக்கச் செய்தாலும் ‘அஞ்சரைக்குள்ள வண்டி’, ’மாயக்கா’ போன்ற ஷக்கீலாவின் திரைக்காவியங்கள் துவங்குவதற்கு முன் தேசிய பெருமிதத்தை எழுச்சியுறச் செய்த குற்றத்தை இழைத்தவர்களாகவே கருதப்படுவார்கள். ஆபாசப் படங்களுக்கும் தேசிய கீதம் போடவேண்டுமென்றால் பிறகு இணையத்தின் நீலப்பட தளங்களுக்கும் அதை அமல்படுத்தலாமே? தற்போது ஷகீலா திரைப்படங்கள் வருவது அரிதாகி விட்டாலும், வெளிவந்து கொண்டிருக்கும் திரைப்படங்களில் வரும் குத்தாட்டங்கள் ஷகீலா படங்ககளுக்கே சவால் விடுப்பதாகவே இருக்கின்றன என்பது வேறு விசயம்.
தேசியக் கொடியை அவமரியாதை செய்த குற்றத்தைப் பொருத்தவரை, இந்தியாவிலேயே தேசிய பெருமிதம் அதிகபட்சமாக பொங்கி வழியும் ஒரே இடம் கிரிக்கெட் மைதானம் தான். மைதானங்களில் உயர் வர்க்க குலக்கொழுந்துகளின் முகரைகளிலும், முதுகு மற்றும் மார்புகளிலும் தேசிய கொடியின் வண்ணங்கள் சீப்பறுந்து சீரழியும் காட்சிகள் நமக்குப் புதிதில்லை. தேசிய கொடியின் வண்ணத்தில் உள்ளாடை கிடைக்குமா என்று கேட்டதற்கு விருப்பம் தெரிவித்தது தேச துரோகம் என்றால், கொடியைத் தன் சளியொழுகும் மூஞ்சியில் வரைந்து கொண்டும், கொடியால் விசிறிக் கொண்டும் மைதானத்தில் அமர்ந்து 20-20 கிரிக்கெட்டை ரசிக்கும் திருமதி. அம்பானியையும் ப்ரீதி ஜிந்தாவையும் எத்தனை முறை கைது செய்யலாம்?
காலனிய ஆட்சியாளர்களால் 1860-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தேச துரோகச் சட்டம் எனப்படும் IPC 124 Aவின் படி பார்த்தால், ‘சட்டப்படி அமைந்த இந்திய அரசாங்கத்தை வெறுப்பது” குற்றமாகிறது. இந்த வரையறையின் படி பார்த்தால், ஒட்டுமொத்த காஷ்மீர் மாநிலத்தையும், ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களையும், தண்டகாரண்யா, கூடன்குளம், ஜெய்தாபூர், விதர்பா என்று நாடெங்கும் பரவலாக அரசாங்கத்தை எதிர்ப்பவர்கள் அனைவரையும் உள்ளே தள்ள வேண்டியிருக்கும். ’இந்திய அரசே ஒழிக’ என்பதும் ’தேச துரோக’ குற்றமாகி விடும். 99% சதவீத மக்களின் செயல் தேச துரோகமென்றும் எஞ்சிய 1% கொழுப்பெடுத்தவர்களே தேசபகதர்கள் என்றும் சொல்கிறது ஆங்கிலேயன் போட்ட சட்டம்.
சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் எனும் பெயரில் பெரும் நிலப் பிரதேசங்களையும், தண்ணீர் தனியார்மயத்தின் கீழ் ஆறுகளையும், பன்னாட்டு சுரங்க நிறுவனங்களிடம் மலைகளையும், வங்கி இன்சுரன்சு துறைகள் தனியார்மயமாக்கல் என்கிற பெயரில் மக்களின் சேமிப்பையும், இராணுவத்துறையில் அந்நிய முதலீட்டுக்கு அனுமதி என்ற பெயரில் இராணுவத்தையும் – ஆகமொத்தத்தில் முழு நாட்டையும் கூறுகட்டி விற்பது தேசபக்தியில் சேர்த்தியா என்பது பற்றி வெள்ளைக்காரன் சட்டங்கள் ஏதும் போட்டுள்ளானா, நமக்குத் தெரியவில்லை; ஏனெனில், என்னதான் சுதேசிகளாக இருந்தாலும் தேச பக்தி அல்லது துரோகம் என்று வரும் போது காலனிய எஜமானர்கள் கழித்துச் சென்ற அளவுகோல்களைத் தானே பயன்படுத்தியாக வேண்டியுள்ளது?
நாட்டின் இறையாண்மையை விற்பது தேசபக்தி, பொருளாதார நடவடிக்கை என்றும் அதை எதிர்ப்பது தேசத் துரோகம் என்றும் சட்டங்களைக் கொண்டிருக்கும் ஒரு நாட்டில் சல்மான்கள் கைது செய்யப்படாமலிருந்தால் தான் அதிசயம். சமகாலத்தில் தேசத்தை விற்றதன் மூலம் புகழ்பெற்ற ‘தேசபக்தர்களின்’ பெயர் பட்டியலைப் பார்த்தால், நாமெல்லாம் தேச துரோகிகளாக இருப்பதே உத்தமம்!
எனவே, தேச துரோகிகளாக மாறுவோம் – தேசத்தைக் காப்போம்!