privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புகலைகதைசிறுகதை : கொழுப்பு

சிறுகதை : கொழுப்பு

-

நாளை (சனிக்கிழமை செப்டம்பர் 20, 2014) நடைபெறவிருக்கும், பார்ப்பனியத்தின் அசைவ உணவு மீதான தீண்டாமை குறித்த “கருவாடு” ஆவணப்படத்தின் வெளியீடு மற்றும் திரையிடல் நிகழ்வை முன்னிட்டு, புதிய கலாச்சாரம், மார்ச் 2000 இதழில் வெளியான கொழுப்பு சிறுகதையை வெளியிடுகிறோம்.

கொழுப்பு – சா. செல்வராசு

”சீக்கிரம் எழு புள்ள, அப்படியே அந்த சூரி கத்திய தேடி எடுத்துக்குடு!”

கொழுப்புபயந்துபோய் சடாரென எழுந்து உட்கார்ந்து கொண்டு, சற்று நேரம் குழம்பினாள் குள்ளச்சி. ஏதும் பேச முடியாமல் இருமல் முந்திக் கொண்டது.

”ராமசாமிக் கவுண்டரு மாடு சொக்கிருச்சாம், பாவம் சோளப் பயிர தின்னுட்டுக்கீது. வந்து எழுப்பி டீ வாங்கி குடுத்துட்டு சொல்லிட்டுப் போராரு. மாட்ட சீக்கிரம் எடுத்துரணுமாம்.”

”அடப்பாவத்த, யான மாதிரி அந்த மாட்ட வச்சிருந்தாரு. நேத்து கூட வாசலுக்கு சாணி எடுக்க போனப்போ பாத்தனே! பாவம் பெத்த புள்ள மாதிரில்ல வளத்தாரு கவுண்டரு” சொல்லி முடித்து குள்ளச்சி மூச்சு வாங்குவதற்குள், மாசிலான் குறுக்கிட்டான்.

”அதுக்கு என்ன செய்யச் சொல்றே? அது தலையெழுத்து நாம தின்னணுன்னு கீது, போ, போ, முதல்ல கத்தி எடுத்துக் குடு!”

மாடு உரிப்பதிலும், ஓர வஞ்சனை இல்லாமல் பங்கு போடுவதிலும் மாசிலானை விட்டா ஆள் கிடையாது.

விடிந்து ஏழு மணிக்கெல்லாம் புளியந்தோப்பில் கும்பல் கூடிவிட்டது. வேடிக்கை பார்ப்பவர்களும், தனக்கும் பாத்தியம் உண்டு என உத்திரவாதப்படுத்த வந்தவர்களுமாக தெருவே கூடியிருந்தது.

மாட்டினுடைய வாயில் பச்சை நிறத்தில் நுரைதள்ள, வயிறு தண்ணீர் நிரம்பிய பாரி போல ஊதிப் போய், மறுபக்கம் கத்தியைத் தீட்டிக் கொண்டிருந்த மாசிலானை முழுதும் மறைத்திருந்த்து. கால்களெல்லாம் விரைத்துப் போய் பெருத்து அம்மணமாகக் கிடந்தது. கண்கள் சாம்பல் பூத்து ஒரே திசையை நோக்கிக் குத்திட்டுக் கிடந்தன. வாய் மட்டும் மெல்லிய சிரிப்புடன் இருந்தது. வாயில் கிரசரில் சிக்கிய கரும்புச் சக்கை போல் சோளப்பயிர் வெளிப்பக்கம் தள்ளிக் கொண்டிருந்தது.

முன்னும் பின்னும், மூக்கிலும் வாயிலும் ஈக்கள் ஒரு பட்டாளமே மொய்த்துக் கொண்டிருந்தன. காதும், வாலும் செயலிழந்த இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட காக்கைகள் மூக்கையும், காதையும் நோண்டித் தின்று கொண்டிருந்தன, இதைத் துரத்த மாசிலானுக்கும் நேரமில்லை, மற்றவர்களுக்கும் அக்கறையில்லை. நுகத்தடிகள் போலக் கிடந்த விரைத்த பின்னங்கால்களில் சிறுவர்கள் ஏத்தம் விளையாட்டு விளையாடினார்கள்.

“ஏய்….. யார்ரா அவன்? போயி..(ங்)கொப்பன ஒரு நல்ல ஏத்தமா வாங்கிக் குடுக்கச் சொல்லி ஆடுறா. அதுக்கு மாட்டுக்காலுதான் கெடச்சிச்சா?”

அதற்குள் மற்றொருவன் வாலின் நுனியில் உள்ள முடிகளைப் புடுங்கிக் கொண்டிருந்தான்.

“டேய், டேய், டேய்! ஏன்டா பாவம் அப்படிப் புடுங்குற. ஓணான் புடிக்கனுன்னா உங்க அக்கா தலையில இதவிட நீளமா இருக்கும், போய்புடுங்குடா! ஆளப்பார்ரா…. ஆள!”

“ஏம்பா மாசிலான் என்னைக்கப்பா நீ அறுத்து பங்கு போட்டு குடுக்கறது. நேத்து செத்ததுப்பா, சீக்கிரம் பாரப்பா. இதுக்குன்னே பல பேரு சம்பாதனைய உட்டுட்டுக்கூட காத்துக் கெடக்குறாங்க.”

“பெரிசு! கொஞ்சம் பொறுமையா இரு. விடிய நாலு மணிலிருந்து ஆளப்புடிச்சி, மரத்தத் தேடி,கயித்தத் தேடி தூக்கினு வந்து போட்டினுகீது, நோகாம இன்னேரத்துக்கு வந்து பெரிய சேட்டு மாதிரி பங்கு கேக்கற, போயி ஒரு ஓரமா ஒக்காரு, பங்கு போட்டுட்டு கூப்புடறேன். ஒக்கார முடிலென்னா படுத்து தூங்கு, பங்கு போட்டுட்டு எழுப்புறே(ங்)”

பெரியவருக்கு வாய்திறந்ததே தப்பா போச்சுடா என்றாகி விட்டது.

இளம் வெயில் சுர்ரென்று சுட்டது. கத்தியைத் தீட்டி முடிப்பதற்குள் மாசிலானுக்கு வியர்த்து விட்டது. சட்டையைக் கழட்டி பக்கத்திலிருந்த கொப்பில் மாட்டிவிட்டு, பீடியை வேகமாகப் பற்ற வைத்தான். வேட்டியைப் பின்பக்கமாக வாங்கி இறுக்கமாகச் செருகிக் கொண்டான்.

நாலு மைனர்களைக் கூப்பிட்டு, மாட்டை மல்லாக்காகப் பெறட்டி, நாலு கால்களையும் எதிரெதிர் திசையில் இழுத்துப் பிடிக்கச் செய்தான் மாசிலான்.

என்னவோ செய்யப் போகிறார்கள் என்று சிறுவர்கள் மிரட்சியுடன் விழிகளை அகல விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தனர். முன்னங்கால்களுக்கிடையில் இருந்த பந்து போன்ற பகுதியில் பதமாகத் தீட்டிய கத்தியை வைத்து அழுத்தி லாகவமாக ஒரு கீறல். பாதிப் பழுத்த மாதுளம்பழம் போலப் பிளந்து சிரித்தது அந்த இடம்.

“சும்மா சொல்லக் கூடாதுப்பா, கவுண்டரு இந்த மாட்டுக்கு நல்ல தீனி போட்டாருப்பா. அதனாலதான் இவ்வளவு பசையா இருக்கு”, பெருமிதத்தோடு புன்சிரிப்புடன் நிமிர்ந்து, நின்றிருந்த கூட்டத்தை ஒரு நோட்டம் விட்டான் மாசிலான். இந்த நல்ல கொழுப்புக் கறி கிடைக்க காரணமே நான்தான் என்பது அவன் பார்வையிலேயே தெரிந்தது.

“நல்ல சைன் தோலுப்பா. பாத்துக்கீறு, ஓட்ட உழுந்துரப் போகுது. நாலு தப்பட்டைக் கட்டலாம்”. பெரியவர் எச்சரிக்கைப்படுத்தினார்.

“என்னது… நாலு தப்பட்டையா? இந்த தடவ தோலு நமக்கு இல்லபா. கவுண்டரு தோல மட்டும் வித்து அவருகிட்டசேக்கச் சொல்லிட்டாரு”

“ஏய்…என்னடா தமாஷ் பண்றியா? என்ன விளையாட்டா பண்ற”, ஊர் ஏஜமான் அதட்டினார்.

“நிஜமாதாம்பா சொல்றேங். தோல தர்றதா சத்தியம் பண்ண பிறகுதான் மாட்டையே தொட வுட்டாரு. கவுண்டரு, தெரியுமா?”

“நீ எப்படிடா இதுக்கு ஒத்துக்கின. இது உனக்கு மொறைய மீர்றதா தெரிலியா? அப்படின்னா நாளைக்கு கவுண்டமாரு சாவுக்கு எந்த வாத்தியத்தை அடிப்ப. எல்லாரும் இப்படியே தோல வாங்கிக்கினா தொழில் எப்பிடிடா செய்யறது.”

“உனக்கும், எனக்கும் தெரியுது, இது அந்த கவுண்டருக்கு தெரியலியே! என்ன பண்றது, ஏதோ தோலாவது வித்துக் குடுத்தா புண்ணாக்கு செலவாவது மீறுமேன்னுதான்…” இழுத்தான் மாசிலான்.

மாசிலானின் சப்பகட்டு எஜமானுக்கு நியாயமாகப்படவில்லை.

“என்னமோ பண்ணுங்கடா. எனக்கென்னவோ பழையமொறைய மாத்தறது கொஞ்சமும் புடிக்கல.”எஜமான் புலம்பினார்.

“என்னை என்ன பண்ணச் சொல்றீங்க.சொத்து கவுண்டருது. வாய் கூசாம தோல கேட்டுட்டாரு வேற வழி எனக்குத் தெரில” மீண்டும் மாசிலான் அதே பல்லவியை முனகினான்.

“டேய்! என்னடா பெரிய புடுங்கி மாதிரி பேசற. இன்னிக்கி தோல கேக்குறாரு, நாளைக்கு…நல்ல சைஸ் கறியா பாத்து யாருக்கும் தெரியாம எடுத்து வைய்யின்னுவாரு. அப்புறமா வீட்டுல கொஞ்சம் பிரச்….சனை, நீயே கறிய பெற..ட்…டி ஹி…ஹி…ஹின்னுவாரு. என்ன செய்யப் போறே? இதா பாரு…இப்படியே போனா நாம நாமளா இருக்க முடியாது.”

எங்கேயோ தப்பு நடந்து விட்டதாகப்பட்டது மாசிலானுக்கு. இருந்தாலும் வாக்குறுதியைக் காப்பற்றணும்னு கருதினான் மாசிலான்.

“அதெல்லா(ங்) சரிதா(ங்)…. பேசாம நமக்குச் சொல்லாம கவுண்டரே மாட்ட பொதச்சிட்டிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க?”

இப்படி ஒரு குண்டைப் போட்டு விட்டு, கழுத்தில் கத்தியை வைத்தான் மாசிலான். அப்போது முதுகுவரை தோல் கழட்டப்பபட்டிருந்தது. “ஆமாண்டா! ரொம்ப புத்திசாலின்னு நெனப்போ, பதினாறு ஊரு கிராமத்த கூட்டி கவுண்டர கைகட்ட வச்சிருவே(ங்). நாக்க அடக்கிப் பேசு. இதுக்கு மேல பேசினா மரியாதை கெட்டுரும். சாதி கெட்டவன்தான்டா இப்பிடிப் பேசுவான்” எஜமானுக்குச் சூடேறிவிட்டது.

“ஏன்டா! பொழப்பத்தவங்களே… ஆகிற காரியத்த பேசு! ஏன்டா இப்படிக் கத்துறீங்க, கவுண்டரு பொதச்சிருவாரோ? இது நடக்குற காரியமா! போங்கடா” அவரு ஒரு பக்கமும், அவரு பொண்டாட்டி புள்ளைங்க ஒரு பக்கமும் புடிச்சி, மாட்ட தூக்கிக் கொண்டு போய் ஊருக்கு வெளியே பொதச்சிருவாரா? இது நடக்குற காரியமா! போங்கடா” இன்னொரு பெருசு அறைந்து கூறியது.

“ஏம்பா மாசிலா(ங்)… அந்த அரியாகொளத்தாரு பங்கு போட்டாச்சா?”

“ஆமான்டா! மொதல்ல உங்களுக்குத்தான்டா அவசரம். அந்தப் பக்கமா ஒக்காரு. கூப்பிடுறேன்” வருபவர்களெல்லாம் மாசிலானை வேலை செய்ய விடாமல் தொல்லை கொடுத்தனர்.

அரியா குளத்தார் எனபவர்கள் குடியேறியவர்கள். உள்ளூரில் பெண்ணெடுத்து சம்பந்தி ஆனவர்கள். இவர்கள் மாடு தூக்க, மேளம் வாசிக்க வரமாட்டார்கள். பங்காளிமார்கள் சேர்க்கவும் மாட்டார்கள்.

“ஏம்மா! சீக்கிரம் கொஞ்சம் பங்கு போட்டு குடுப்பா, ஊரிலிருந்து எங்க மகளும்,மருமவனும் வந்திருக்காங்க. பத்து மணி ரயிலுக்குப் போணுமாம். ஏதோ அதுக்குள்ள இந்த கறியாவது வெச்சி போட்டு அனுப்பலாம்” பரிதாபத்தோடு கேட்டான் முனுசாமி.

“ஏன்டா ஏதாவது உனக்கு அறிவு கீதா! இதையா மருமவனக்கு போடப் போற. ஒரு கோழி கீழி அடிச்சி போடுவியா…”

“நீ இருக்கப்பவம்பா! கோழியும் அடிப்ப, யானையைக்கூட அடிச்சிப்போடுவ. நாங் கூலிக்காரன், இப்படி ஏதாவது மாடு, கீடு செத்தாத்தான் கதி”

“ஏம்பா இவன மொதல்ல அனுப்புப்பா. பாவம் பொலம்பி தொலையுறான்” பரிதாபப்பட்டார் தர்மலிங்கம்.

கொஞ்ச நேரத்தில் மாடு, உரிச்ச கோழி மாதிரி ஆனது. பத்துமடத் தோலை விரித்து மல்லாந்து கிடந்த்து. ஊதிப்பெருத்த, உப்பிக் கிடந்த வயிற்றில் தீட்டிய கத்திமுனை லேசாகப்பட்டதுதான் தாமதம், விஷக்காற்று கலந்து துர்நாற்றத்தோடு குப்பென்று காற்று பீறிட்டு வெளியேறி மாசிலான் மூக்கை துளைத்துச் சென்றது.

“நேத்து சாயந்திரம் செத்தது, நாத்தம் வராம என்ன செய்யும்?” மாசிலான் நாற்றத்தைச் சமாளித்துக் கொண்டு சமாதானம் செய்தான். நாற்றம் அந்த தோப்பையே சூழ்ந்தது. சுற்றியிருந்தவர்கள் மூக்கைப் பிடித்தும் பிடிக்காமலும் முகம் சுளித்தனர்.

சாணி கரைத்து வாசலில் தெளித்தது போல விரிந்து கிடந்த தோலின் மீது ரத்தமும், ஈழையும் பிறவும் திட்டுத்திட்டாக உறைந்து கிடந்தன. அதன் மீது பிறந்த மேனியுடன் சிறுவர்கள் சறுக்கி விளையாடிக் கொண்டிருந்தனர். மாசிலான் விரட்டியதில் ஒரு சிறுவன் சறுக்கி தோலின் மீதே விழுந்து குய்யோ…வென்று கத்தினான். அவனோட அம்மா ஓடிவந்து தன் மகனைத் தூக்கிக்கொண்டாள்.

“சும்மா இரு மாசிலா(ங்) பிள்ள ஏதோ ஆசையா சறுக்கி வெளையாடுறான்… மெரட்டுறியே! பிள்ள பயந்த போச்சி! யாரு டீ, செல்லம்…மாசிலானா? அவன அடிச்சரலாம் வா….”அரவணைத்து கன்னத்தில் வழிந்த மாடு ரத்தத்தோடு முத்தமிட்டாள்.

இன்னும் சில சிறுவர்கள் தோலின் மேல் உறைந்து கிடந்த ரத்தத்தில் உள்ளங்கைகளை நனைத்து, ஒருவர் முதுகில் ஒருவர் அப்பி விளையாடிக் கொண்டிருந்தார்கள்.

அன்றையப் பொழுதில் செத்தமாடு தெருவையே திருவிழாக் கோலமாக்கிவிட்டது.

“சாயந்திரம் நேரத்துல வந்துருவேங்….பங்கு போட்டதும் கறிய வாங்கிவை. வரும்போது மெளகா செலவு வாங்கி மூடி வச்சிராதே! அடுப்புல கொஞ்சம் சூடு பண்ணிவைய்யி. இல்லன்னா கெட்டுடும்”, என்று மனைவியிடம் எச்சரித்து விட்டு வேலைக்கு போனான் ஒரு தெருவாசி.

“ஏம்பா மாசிலான் பிச்சையில ஏதாவது கீதா பாரூப்பா, உட்ராதே!” ஊர் எஜமான் நினைவுபடுத்தினார்.

மாசிலான் திடீரென நினைவுக்கு வந்தவனாக நுரையீரல், இதயம் இவைகளை லாவகமாக விரல்களால் விலக்கிவிட்டு, கணையத்தைத் தேடிப் பிடித்து திரும்பத் திரும்ப பித்தநீர்ப்பையை அழுத்ததிப் பார்த்தான், ஆனால் ஒன்றும் தென்படவில்லை என்பதை உதட்டைப் பிதுக்கிக் காட்டினான்.

நூறு மாடுகளில் ஒன்று இரண்டில்தான் கோ ரோஜனம் கிடைக்கும். நாட்டு மருத்துவர்களிடம் இதற்கு நல்ல மவுசு. 5 கிராம் கிடைத்து விட்டாலே 500 வரை விலை போகுஉம். அன்றைக்கு மாசிலான் கொடுத்து வைத்தது அவ்வளவுதான்.

கொம்புகள் தூக்கி எறியப்பட்டவுடன், பங்குகள் போடப்படன. அவரவர் பங்கை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு நடையைக் கட்டினர்.

முகத்தில் கோபக் கனலோடு ஒருவர், ஒரு சிறுமியின் கைகளைப் பிடித்து தரதரவென இழுத்துக் கொண்டு மாடு அறுத்த இடத்திற்கு வந்தார். சிறுமியின் கையில் ஒடுங்கிப் போன அலுமினியச்சட்டி அதில் ஒரு பங்கு கறி.

“ஏய்! எவன்டா இந்த பங்க எம்புள்ள கிட்ட போட்டனுப்பனவன். வெறும் எலும்பும் கொடலும் தான் எனக்கா? அவ்வளவு கேவலமா எம்புள்ள! போங்கடா… உங்க கறியும் நீங்களும்….” என்று கறியைத் தூக்கி குப்பையில் வீசி எறிந்தார்.

ரொம்ப நாளைக்கப்புறம் கிடச்ச கறியிலேயும் அப்பன் மண்ணைப் போட்டுட்டானே என்று, குப்பையிலிருந்த கறியையும், அப்பனையும் மாறி மாறிப் பார்த்து அழுதது அந்தப் பிள்ளை.

கடைசிப் பங்கை எடுத்த பையன், “ஏம்பா ஏம்பங்குல கொஞ்சம் கொழுப்பு போடுப்பா” என்று கேட்டான்.

“இருந்ததே அவ்வளவுதாம்பா! வேணுன்னா ஏம் பங்கைப் பாரு” என்று எடுத்துக் காட்டினான், மாசிலான். கூடத்திலிருந்து ஒரு குரல் வந்தது. “மாட்டுக்காரன் மாட்டுக்கு அழுவுறான்! பறையன் கொழுப்புக்கு அழுவுறான்!”

– இதைக் கேட்டதும் மாசிலான் கூனி்குறுகிப் போனான். தலை குனிந்தான் தனக்குரிய பங்கை வேண்டா வெறுப்பாக எடுத்துக் கொண்டு போர்க் களத்தை விட்டு வெளியேறினான்.

பொழுது சாய்ந்து விட்டது. பறவைகளும் ஆடு, மாடுகளும் தங்கள் இருப்பிடத்தைத் தேடிக் கொண்டிருந்தன. வேலைக்குப் போன குள்ளச்சி இன்னும் வீடு திரும்பவில்லை.

“பொழுது இருட்டிடுச்சி இன்னும் கழனியிலே என்னத்த புடுங்குறா….” மனசுக்குள் குள்ளச்சியைத் திட்டிக்கொண்டான் மாசிலான். ஆறு மாதத்திற்கு முன் குள்ளச்சிக்கு வாரம் இரண்டு முறை மாட்டு ஈரல் தரச் சொல்லியிருந்தார் டாக்டர். காசநோய் அப்பதான் குணமாகும். அவளுக்காக இரண்டு துண்டு ஈரலை மாசிலான் மறைத்து வைத்திருந்தான். தனது தொழில் தருமத்துக்கு இழுக்கு வந்ததை உணர்ந்து உள்ளுக்குள் நொந்து கொண்டேதான் அதைச் செய்தான்.

நினைவுகளில் மூழ்கியிருந்த மாசிலானைத் தீடீரென எழுப்பியது ஒரு குரல். “தாத்தா பாட்டி செக்கிருச்சாம்! ஏதோ விஷக் கெழங்க பாட்டி பச்சையா தின்னுட்டு சொக்கி மயங்கி விழுந்திருச்சாம்” முனியம்மாள் பதடத்துடன் சொன்னதும், பதறிப் போய் ஓடினான் மாசிலான்.

குள்ளச்சியைச் சற்றி சிறு கும்பல். நாடியைப்பிடித்துப் பார்த்த நாட்டு வைத்தியர் மாசிலானத் தனியாகக் கூப்பிட்டு ஏதோ கிசுகிசுத்துவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடந்தார்.

வாய் பிளந்து, வயிறு ஒட்டி, கண்கள் சாம்பல் பூத்து திறந்து வெறுமையாகக் கிடந்தன. குள்ளச்சியைக் கட்டிலில் போட்டு நான்கு பேர் வீடு சேர்த்தனர்.

தெருவில் கறிவேப்பிலை மணத்துடன் உப்புக்கறி வாசம் மூக்கைத் துளைத்தது. வீசப்படும் எலும்புக்காக தெரு நாய்கள் எல்லைச் சண்டையில் ஈடுபட்டிருந்தன. தலையில், எண்ணெயறியாத பிள்ளைகளின் வாய், முகமெல்லாம் கொழுப்புப் பசை வடிந்திருந்த்து.

குள்ளச்சிக்காக மறைத்து வைத்திருந்த ஈரலை மாசிலான் வெளியே எறிந்தான். எறிந்த மாத்திரத்தில் கவ்விய நாய்கள் சண்டையிட ஆரம்பித்தன.

மாசிலான் மனதை சோகம் கவ்விக் கொண்டது. குள்ளச்சியைக் கட்டிக் கொண்டதிலிருந்து எத்தனையோ காட்சிகள், சம்பவங்கள் அவன் மனத்தில் ஓடின. அப்படியே சரிந்து போய் மரத்தடியில் குந்தினான்.

ஒப்பந்தப்படி தோல் பணத்தை வாங்க கவுண்டர் அனுப்பிய ஆள் தொலைவில் வேகமாக வந்து கொண்டிருந்தான்.
_____________________________
புதிய கலாச்சாரம், மார்ச்-2000
_____________________________