Thursday, September 28, 2023
முகப்புசெய்திதாது மணல், கிரானைட் ஊழல் - HRPC பத்திரிகை செய்தி

தாது மணல், கிரானைட் ஊழல் – HRPC பத்திரிகை செய்தி

-

மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு

150-இ, ஏரிக்கரை சாலை, அப்போலோ மருத்துவமனை அருகில்,
கே.கே.நகர், மதுரை-20.
தொடர்புக்கு – 94434 71003, 9865348163.

பத்திரிகை செய்தி

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் புஸ்பா சத்தியநாராயணன் அடங்கிய அமர்வு கடந்த 11.09.2014 அன்று சகாயம் அய்.ஏ.எஸ் அவர்களை தமிழகத்தின் 32 மாவட்டங்களில் நடந்துவரும் கனிமக் கொள்ளை தொடர்பாக விசாரணை நடத்தி இரண்டு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்திரவிட்டுள்ளது.

மேற்படி உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. அதில், “ஏற்கனவே சட்டவிரோத கனிமக் கொள்ளையைத் தடுக்க மாநில, மாவட்ட அளவிலான தடுப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கிரானைட் முறைகேடுகள் தொடர்பாக பல்வேறு சிறப்பு விசாரணை குழுக்கள் அமைக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாதுமணல் கொள்ளை தொடர்பாக வருவாய்த்துறை செயலர் ககன் தீப் சிங் பேடி தலைமையிலான குழு விசாரணை நடத்தி வருவதாகவும், ஆற்று மணல் கொள்ளைக்கு அரசு செயலர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு ஆய்வுகள் நடந்து வருவதாகவும், எனவே சகாயம் தலைமையில் புதிய விசாரணை தேவையில்லை” என வாதிட்டது. தமிழக அரசின் விளக்கத்தை ஏற்க மறுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா அமர்வு தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் தமிழக அரசு சகாயம் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தராது. நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தாது என்ற நிலையே நீடிக்கிறது. நீதிபதி கிருபாகரன் “ஆயிரக்கணக்கான நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு மதிப்பதில்லை” எனத் தெரிவித்துள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக இன்றுவரை உச்சநீதிமன்ற உத்தரவை மதிக்காமல், சகாயம் விசாரணைக்கு அரசாணை பிறப்பிக்காமல், உதவிக்குழு ஏற்பாடு செய்யாமல் மீண்டும் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுத்தாக்கல் செய்துள்ளது. இப்பிரச்சனையில் தமிழக அரசின் நோக்கம் நேர்மையான விசாரணை நடக்கக் கூடாது என்பதே.

கிரானைட் கொள்ளை

மதுரை மாவட்டத்தில் நடந்த கிரானைட் கொள்ளை தொடர்பாக 90 குற்ற வழக்குகளில் பி.ஆர்.பி.உட்பட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 84 குவாரிகளில் விதிமீறல்கள் கண்டறியப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளியான பி.ஆர்.பழனிச்சாமி உள்ளிட்ட அனைவரும் பிணையில் வந்து விட்டனர்.

ஆனால் இன்று வரை

(அ) தமிழகத்தில் சட்டவிரோத கிரானைட் தொழில் மூலம் நடந்த ஊழலின் மொத்தத் தொகை எவ்வளவு? அரசுக்கு ஏற்பட்ட இழப்பு எவ்வளவு? ஊழல் பணத்தை பறிமுதல் செய்து, கிரானைட் அதிபர்களின் சொத்துக்களை முடக்க என்ன நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது? என்பவை பற்றி தமிழக அரசு தெரிவிக்கவில்லை.

(ஆ) கடந்த ஆகஸ்ட், செப்டம்பர் 2012-ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் மதுரை மாவட்ட எஸ்.பி தாக்கல் செய்த அறிக்கையில் கிரானைட் குவாரி உரிமையாளர்கள் மாநிலம் முழுவதும் 20,000 ஏக்கருக்கும் மேலான பல நூறுகோடி ரூபாய் பெறுமானமுள்ள நிலங்கள் வைத்திருப்பதாகவும், அந்நிலங்கள் வாங்கத் தேவையான பணம் எப்படி வந்தது? என விசாரித்து வருவதாகவும், மேலும் மத்திய கலால், சுங்கத் துறை, அமலாக்கத் துறை, தூத்துக்குடி, சென்னை துறைமுகக் கழகங்கள், கோல்டன், விமல், பிஎஸ்டிஎஸ் கப்பல் கம்பெனிகள் ஆகியோரிடமும் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

(இ) கடந்த 20.09.2012-ல் DIRECTORATE OF VIGILANCE AND ANTI CORRUPTION A.D.S.P. மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் கிரானைட் ஊழலுக்கு உடந்தையாய் இருந்த அய்.எ.எஸ் அதிகாரிகள் மதிவாணன், காமராஜ், கனிம வளத் துறை துணை இயக்குநர் ராஜாராம் உள்ளிட்ட பலர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்ட எஸ்.பி.யும் கடந்த 15 ஆண்டுகளாக கிரானைட் குவாரிகள் தொடர்பான துறைகள் சார்ந்து பணிபுரிந்த அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

(ஈ) கடந்த 29.08.2012-ல் மதுரை மாவட்ட ஆட்சியர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் மேலூர் மற்றும் மதுரை வடக்குத் தாலுகா, பெரியாறு பாசனக் கால்வாய்ப் பகுதியில் 36 குளம், கண்மாய்கள், கால்வாய்கள் கிரானைட் முதலாளிகளால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், இப்பகுதிகளில் விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது.

(உ) கிரானைட் அதிபர்கள் மதுரை மற்றும் சென்னை உயர்நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகளை தாக்கல் செய்து விசாரணையை தாமதப்படுத்துகிறார்கள். தமிழக அரசும், இதற்கு உடந்தையாக உள்ளது.

மேற்கண்ட தமிழக அரசின் பதில் மனுக்கள் மனித உரிமை பாது காப்பு மையம், பத்திரிகையாளர் அன்பழகன், டிராபிக் ராமசாமி ஆகியோர் தாக்கல் செய்த பொது நல வழக்குகளின் காரணமாக வெளிவந்தவை.

தாது மணல் கொள்ளை

தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனின் தாது மணல் கொள்ளையை பற்றி ஆகஸ்ட், 2013-ல் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆசிஸ் குமார், வைப்பாறு, வேம்பார் மற்றும் பெரியசாமிபுரம் அருகேயுள்ள கடலோர கிராமங்களில் ஆய்வு செய்து, “வி.வி.மினரல்ஸ் நிறுவனம் அனுமதியின்றி 3 கி.மீ. தூரத்திற்கு கடற்கரை மணலையும், 2,39,712 மெட்ரிக் டன் அளவில் கனிமங்களையும் சட்டவிரோதமாக அள்ளி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது” எனத் தெரிவித்திருந்தார். உடனே அப்பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டார். பொது மக்களின் எதிரப்பின் காரணமாக தமிழக அரசு வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் ஆய்வு நடத்தப்பட்டு ஆய்வறிக்கை தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இன்றுவரை அவ்வறிக்கை வெளியிடப்படவில்லை. அதன்பின் திருநெல்வேலி, கன்னியாகுமரி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் சிறப்புக்குழு ஆய்வுக்கு உத்தரவிடப்பட்டு ஆய்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. விசாரணை நாடகத்திற்காக பேடி கமிட்டி அமைத்த தமிழக அரசே பேடி கமிட்டி அறிக்கையையும் முடக்க முயற்சிக்கிறது.

தாது மணல் கொள்ளை தொடர்பான வழக்கில் கடந்த 12.12.2013-ல் தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற சிறப்பு அமர்வு “15 நாட்களுக்குள் அனைவரும் பேடி குழுவிடம் மனுக்கள் அளிக்கலாம், அதன் பின் அவற்றை ஆராய்ந்து மிக விரைவில் அரசிடம் அறிக்கையை பேடி குழு வழங்க வேண்டுமெ”ன உத்தரவிட்டது. அதன்பின் 29.05.2014 அன்று W.P.8562/2014 வழக்கில் “ஒரு மாதத்தில் பேடி குழு அறிக்கையை தாக்கல் செய்ய வேணடும்” என்று மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி கருப்பையா அவர்கள் உத்தரவிட்டார். அதன்பின்பும் அறிக்கை வெளியிடப்படவில்லை. அதன்பின் மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பேடி அறிக்கையை வெளியிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில் வைகுண்டராஜனின் குவாரி உரிமங்கள் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட W.P. No.12862 to W.P.No: 12880 வழக்குகளில் நீதிபதி கர்ணன் தடை வழங்கியுள்ளதுடன், ஏற்கனவே குவாரிகளில் உள்ள தாது மணலை அள்ளிக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். அதன்பின் வைகுண்டராஜன் தாக்கல் செய்த W.P.19641 & W.P. 16716 வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.ராஜேந்திரன் ககன்தீப் சிங் பேடி குழு தனது அறிக்கையைத் தாக்கல் செய்ய இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட பல தாது மணல் நிறுவனங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட அளவை மீறி சட்டவிரோதமாக மணல் எடுத்துள்ளன. Tamilnadu Forest Act, 1882, The Mines and Minerals (Development and Regulation) Act1957, The Tamilnadu Minor Mineral concession Rules, 1959, The Tamilnadu Prevention of illegal mining, transportation and storage of minerals and mineral Dealers Rules, 2011, Environment (Protection) Act, 1986, Air (Prevention and Control of Pollution) Act, 1981, Water (Prevention and Control of Pollution) Act, 1997, Indian Penal Code, 1872, sections, 447, 201, 406, 420, 379, Sec.3 of TNPPDL ACT, Sections 124-A & 153-A of Indian Penal Code, Atomic Energy Act 1962, Atomic Energy Factory rules, Environment (Protection ) Act 1986, Atomic Energy (Factories) rules 1996 ஆகிய சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் மற்றும் விதிகளை மீறிய குற்றத்தையும் இழைத்துள்ளன.

குறிப்பாக அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்கு பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டதில் 1,95,300 டன் தோரியம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில், பல லட்சம் கோடியாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும். போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்குப் போடும் தமிழக அரசு வைகுண்டராஜன் மீது இன்றுவரை ஒரு வழக்கு கூடப் பதிவு செய்யவில்லை.

ஆற்று மணல் கொள்ளை

தமிழகத்தில் காவிரி, தாமிரபரணி, பாலாறு, வைகை, வெள்ளாறு, மணிமுத்தாறு, உள்ளிட்ட பல ஆறுகள் மணல் கொள்ளையர்களால் இன்று நாசமாக்கப்பட்டுள்ளன. தினமும் சுமார் 55,000 லாரிகள் ஆற்று மணல் எடுக்கப்படுகிறது. இதில் சட்டவிரோத மணல் கடத்தலில் கிடைக்கும் ஆண்டு வருமானம் மட்டும் ரூ 15,000 கோடி. அரசுக்கு ஏற்படும் இழப்பு ரூ 19,800 கோடி. இம்மதிப்பீடுகள் ஏற்கனவே ஊடகங்களில் வெளியானவை. ஆற்று மணல் கொள்ளையில் கடந்த 15 ஆண்டுகளாக ஏகபோகமாக இருந்தவர் ஆறுமுகச்சாமி. தமிழக அரசின் பொதுப் பணித்துறைதான் மணல் குவாரிகளை நடத்துவதாகச் சொன்னாலும் உண்மையில் தனியார் முதலாளிகளின் கட்டுப்பாட்டில்தான் ஆற்று மணல் உள்ளது. கேரளா, கர்நாடகாவில் ஆற்று மணல் எடுக்கத் தடை உள்ளதால் இம்மாநிலங்களுக்கு பெருமளவில் மணல் கடத்தப்படுகிறது. கிரானைட், தாது மணல் போலின்றி தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கொள்ளை நடக்கிறது. இதை எதிர்த்த நேர்மையான அதிகாரிகள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பல நூறு பேர் தமிழகத்தில் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமான நீதிமன்றத் தீர்ப்புகள் இருந்தாலும் அரசின் முழு ஆதரவோடு ஆற்று மணல் கொள்ளை நடந்து வருகிறது.

(1) தமிழகத்தில் கடந்த 25 வருடங்களாக ஈடே செய்ய முடியாத அளவில் ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் உள்ளிட்ட இயற்கை வளங்கள் கொள்ளை போயுள்ளது. இவ்வூழல் அலைக்கற்றை ஊழல், நிலக்கரி சுரங்க ஊழலைவிட பெரிதானது. மக்களின் பாதிப்புகள் பண மதிப்பால் அளவிட முடியாதது. ஏராளமாக சுரண்டப்பட்டு விட்டதால் தமிழகத்தில் இனி ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் எடுக்க நிரந்தரத்தடை விதிக்க வேண்டும்.

(2) சிறப்பு விசாரணை அதிகாரி சகாயம் அவர்களின் கீழ் பணியாற்ற சிறப்பு புலனாய்வுக்குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டு இக்குழு செயல்பட உரிய கால அவகாசம், உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படுவதுடன் சகாயத்திற்கும் அவரது குடும்பத்திற்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.

(3) தமிழகத்தில் சட்டவிரோத தாது மணல், ஆற்று மணல், கிரானைட் குவாரி தொடர்பாக இது வரை நடத்தப்பட்ட அனைத்து விசாரணை அறிக்கைகளையும், பேடி குழுவின் அறிக்கையையும் தமிழக அரசு உடனே சகாயம் அவர்களிடம் அளிக்க வேண்டும்.

(4) 2 ஜி ஊழல் வழக்கு போல் தாதுமணல், ஆற்று மணல், கிரானைட் குவாரி தொடர்பான அனைத்து வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான சிறப்பு அமர்வில் (SPECIAL BENCH) மட்டுமே விசாரிக்கப்பட வேண்டும்.

(5) கனிம வளக்கொள்ளை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகள், அரசியல் வாதிகள் தொழிலதிபர்கள் ஆகியோரின் சொத்துக்களை பறிமுதல் செய்வதுடன் டெல்லி 2ஜி வழக்கு, பெங்களூர் சொத்துக்குவிப்பு வழக்கு போல் தனி நீதிமன்றம் அமைத்து உயர் நீதிமன்ற கண்காணிப்பில் தினந்தோறும் வழக்கு விசாரணை நடத்தப்பட வேண்டும்.

(6) ஆற்றுமணல், தாதுமணல், கிரானைட் கொள்ளை தொடர்பான அனைத்து விசாரணை அறிக்கைகளையும், ஆவணங்களையும் தமிழக அரசு மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.

(7) சகாயம் போன்ற நேர்மையான, திறமையான அதிகாரிகளால் மட்டும் ஊழலை வெளிக்கொண்டு வந்து, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தர முடியாது. இயற்கை வளக் கொள்ளைக்கெதிரான தீவிரமான மக்கள் போராட்டம் மட்டுமே சகாயம் குழு செயல்பட உறுதுணையாக இருக்கும். நீதிமன்ற உத்தரவை அமுல்படுத்த வைக்கும். ஆகவே தமிழக மக்கள் அவரவர் ஊர்களில் இயற்கை வளக் கொள்ளைக்கு எதிராகப் போராட வேண்டும் என மனித உரிமை பாதுகாப்பு மையம் வலியுறுத்துவதுடன் முழு அதரவு அளிக்கும்.

மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் கிரானைட், தாது மணல் கொள்ளைக்கெதிராக உண்மை அறியும் குழு, ஆர்ப்பாட்டம், மறியல், பொதுக்கூட்டம், பொதுநல வழக்குகள் எனப் போராடி வருகிறோம். தாதுமணல் மற்றும் கிரானைட் குவாரிகளில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள், பாதிக்கப்பட்ட மக்களின் பேட்டிகள் அடங்கிய குறுந்தகடுகள் வெளியிடுகிறோம்.

மாநில ஒருங்கிணைப்பாளர்
(சி.ராஜு)
மனித உரிமை பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு.

25.09.2014

னித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் 25-9-2014 காலை 10-30 மணியளவில் மதுரை செய்தியாளர் அரங்கத்தில் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அனைத்து தொலைக்காட்சி மற்றும் செய்தி ஊடகத்தினர் கலந்து கொண்டனர். மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜு, மதுரை மாவட்ட துணைச் செயலாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மற்றும் விவசாயிகள் விடுதலை முன்னணி உசிலை வட்டச் செயலாளர் தோழர் குருசாமி, நீர்வள பாதுகாப்பு மற்றும் ஊழல் எதிர்ப்பு இயக்கத்தலைவர் சோமசுந்திரம் மற்றும் மேலூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

கிரானைட் குவாரிகளால் பாதிக்கப்பட்ட மதுரை மாவட்ட பகுதி மக்களை நேரில் சென்று ஆய்வு நடத்திய போது எடுத்த வீடியோ காட்சிகளும், தாது மணல் குவாரிகளால் ஏற்படுத்தப்பட்ட பாதிப்புகளை கடலோர மீனவ மக்களுடன் பல இடங்களுக்கு சென்று எடுத்த வீடியோ ஆதாரங்களும் குறுந்தகடாக பத்திரிகையாளர்கள் மத்தியில் வெளியிடப்பட்டது. அனைத்து பத்திரிகையாளர்களும் ஆர்வமுடன் கேள்வி கேட்டனர்.

“2 ஜி ஊழல், நிலக்கரி சுரங்க ஊழலை விடப் பல மடங்கு பெரியது ஆற்றுமணல், தாது மணல், கிரானைட் ஊழல். தேசிய அளவில் இயற்கை வளக்கொள்ளைக்கு எதிராக நிகழ்ந்த விவாதம் தாது மணல், ஆற்று மணல், கிரானைட் கனிம கொள்ளைக்கு எதிராக நடைபெறவில்லை. ஊழல் அதிகாரிகளை, தொழிலதிபர்களை, அரசியல்வாதிகளை பாதுகாக்கவே தமிழக அரசு முயற்சிக்கிறது. அதனால்தான் சகாயம் விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ததும், வழக்கு தள்ளுபடி ஆன பிறகும் சகாயம் விசாரணைக்கு உரிய நடவடிக்கை எடுக்காமல், மறுபடியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பதும் நடக்கிறது. கனிமவளக் கொள்ளைக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடும் போது மட்டுமே சகாயம் விசாரணை முழுமையாக நடைபெறும் சூழலை தமிழக அரசு உருவாக்கும்” என்று வலியுறுத்தி இந்த பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தபட்டது.

பத்திரிகையாளர்கள், கிரானைட், மற்றும் தாது மணல் கொள்ளை வீடியோ ஆதாரங்கள் பற்றி கேள்வி கேட்டனர். சட்டத்திற்கு புறம்பாக பல இடங்களில் தாது மணல் கொள்ளையிடப்பட்ட காட்சிகள் கடற்கரையே உடைத்தெடுக்கப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

“நீதிமன்றம் கனிம கொள்ளையர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழஙகியுள்ளது என்பதற்கு என்ன ஆதாரம்” எனக் கேட்டனர். “மதுரையில் இரு நீதிபதிகள் ஒரு வழக்கை விசாரிக்கும் போது சென்னயில் ஒரு நீதிபதி தாது மணல் கிரானைட் குவாரி முதலாளிகளுக்கு ஆதரவாக தடை உத்திரவு வழங்குகிறார். அதற்கு தமிழக அரசு உதவுகிறது” என்பதை கூறினோம்.

“நீதிமன்றத்தைக் குறை கூறிக்கொண்டே தலைமை நீதிபதி சிறப்பு அமர்வு விசாரிக்க வேண்டும் என கேட்கிறீர்களே” என்ற கேள்விக்கு, “இயற்கை கனிமவளக் கொள்ளைக்கு எதிராக மக்கள் போராட்டம், சகாயம் விசாரணை முழுமையாக நடப்பது, கனிமக்கொள்ளை தொடர்பான உரிய ஆதாரங்கள் மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டு பொது விவாதம் போன்றவை நடைபெற்றால் நீதிமன்றம் கனிமக் கொள்ளையர்களை தண்டிப்பதற்கு வாய்ப்பு உண்டு” என பதிலளிக்கப்பட்டது.

சுமார் ஒரு மணிநேரம் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட அனைவரும் இறுதி வரை இருந்து பத்திரிகை செய்தி மற்றும் கிரானைட் தாது மணல் கொள்ளை ஆவணப்படங்களை பெற்றுச் சென்றனர். செய்தியாளர்கள் சந்திப்பு பலனுள்ளதாக இருந்தது என பலரும் கருத்து தெரிவித்தனர்.

பத்திரிகை செய்திகள்

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

தகவல் :
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்,
மதுரை

  1. நாடு என்பதன் வரையறையே இன்று இந்த கேடுகெட்ட முதலாளிகளும் அவர்களின் கைக்கூளிக்களுமான இந்த அரசியல்வியாதிகள் மாற்றி விட்டார்கள். நாடு என்பது அதில் வாழும் அனைத்து உயிர்கள் மற்றும் அவைகளுக்குத் தேவையான இயற்க்கை வாழிட சூழல் சேர்ந்தது. அதை மாற்றி, நாடு என்பது வெறும் மூலதனம் என்பதாக மாற்றி விட்டார்கள். ஆறு,கடல்,மணல்,நிலக்கரி,எண்ணெய் என்று அனைத்தயும் காசாகி விட்டனர். தேவைக்கு மிகுதியாக பொருளுற்பத்தி செய்தல்,அதற்காக இயற்க்கை வளங்களை ஓட்டச் சுரண்டுதல் அதன் மூலம் சுற்றுசூழலை மாசாக்குதல் இது தான் இன்றைய ஆளும் வர்க்கங்களின் நிலைப்பாடு.

    முதலாளிகள் தொழில் செய்கிறார்கள், வேலை வாய்ப்பை பெருக்குகிறார்கள் என்று கூப்பாடு போடுகிறவர்கள் இதற்க்கு பதில் சொல்லட்டும். இந்த பண முதலைகளின் வாழ் போல தானே இந்த அரசியல் வியாதிகள் இருக்கிறார்கள் என்பதை இந்த கட்டுரை சொல்கிறதே. அனைத்து உயிர்களுக்கும் பொதுவான இந்த இயற்கையை இந்த நாசகாரர்களுக்கு கொடுத்தது யார்? புவிப் பரப்பில் வாழும் அனைத்து உயிர்களின் சாட்சியாக யார் கொடுத்தது? நெஞ்சில் நேர்மை திறமிருந்தால் சொல்லட்டும் அவர்களின் அடிபொடிகள்.

    நன்றி.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க