- மோடி அரசின் இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு தேசிய இன, மொழி அடையாளங்களை அழிக்கும் பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்பே!
- களம் புகுவோம், தமிழறிஞர் கால்டுவெல் என்ற வாள் உயர்த்தி உழைக்கும் மக்களின் தமிழ் மரபைக் காப்போம்!
என்ற முழக்கத்தின் கீழ் கடலூர் மாவட்ட புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி சார்பில் 25.09.2014 அன்று மாலை 5 மணி அளவில், கருத்தரங்கம் நடைபெற்றது.
பார்ப்பன பண்பாட்டு படையடுப்பை வீழ்த்த உழைக்கும் மக்களின் பறை இசையோடு நிகழ்ச்சி துவங்கியது. மாவட்டச் செயலாளர் தோழர் க கருணாமூர்த்தி தனது தலைமை உரையில், “சமஸ்கிருத வாரம், ஹிந்தி திணிப்பு ஆகியவை உழைக்கும் மக்களுக்கு எதிரான சமஸ்கிருதமய பண்பாட்டை மக்கள் மத்தியில் இறுக்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மத்தியில் மோடி அரசாங்கத்தால் செயல்படுத்தப்படுகிறது” என்று சுட்டிக் காட்டினார்.
“சமஸ்கிருதம் என்ற ஒரு செத்துப்போன மொழியை இந்தியாவின் தாய் மொழியென்று கூறுவது கடைந்தெடுத்த பொய், அது ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தது” என்று கூறி சமஸ்கிருதம் பற்றிய பொய் பிரச்சாரத்தை அம்பலப்படுத்தினார். தமிழறிஞர் கால்டுவெல் தனது மொழி ஆய்வு நூலின் மூலமாக இதை நிரூபித்துள்ளார் என்று கூறினார்.
1970-களில் ஹிந்தித் திணிப்புக்கு எதிராக நடந்த போராட்டத்தில் நமது மாவட்டத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்ற மாணவர் துப்பாக்கி சூட்டில் தனது உயிரை துறந்தார் என்று இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களின் போராட்ட வரலாற்றை கூறினார். “சமஸ்கிருத மொழி இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளுக்கும் தாய் மொழி என்று சொல்லிவிட்டு தமிழை வேசி மொழி என்று சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் பாட மறுக்கிறார்கள். அவர்கள் கூறுவது போல சமஸ்கிரும்தான் தமிழின் தாய்மொழி என்றால் சமஸ்கிருதமும் வேசி மொழி என்றுதான் பொருள் ஆகிறது. பார்ப்பனர்கள் இந்த வகையில் தங்கள் மொழியை இழிவு படுத்திக் கொள்ளலாம், ஆனால் நாம் நமது தமிழ் மரபை உயர்த்தி பிடித்து போராட வேண்டும்” என்ற விளக்கிக் கூறினார்.
இதனைத் தொடர்ந்து பெரியார் கல்லுரியைச் சேர்ந்த மாணவர் அ அரவிந்தவேல் தமிழ் மொழியைப் பற்றியும் அதன் உயர் பண்புகளையும் திருக்குறளின் அடிப்படையில் விளக்கினர். இது போன்ற மொழி திணிப்பிற்கு எதிராக போராட வேண்டும் என்று சக மாணவர்களை அறைகூவி அழைத்தார்.
இறுதியாக சிறப்புரை ஆற்றிய புதுவை பல்கலைக் கழக மாணவர் முருகானந்தம், “சமஸ்கிருதம் என்பது ஒரு செத்துப்போன மொழி. அதை திணிப்பதற்கு இன்று ஏன் மத்திய அரசு இவளவு தீவிரம் கட்டுகிறது என்றால் நாடு முழுவதும் இந்துத்துவா சிந்தனை வெறியை மக்கள் மத்தியில் கொண்டுவந்து சாதி, மதவெறியைத் தூண்டி உழைக்கும் மக்களை சுரண்டுகிறார்கள். இந்த சமஸ்கிருதமய பிற்போக்கு பண்பாட்டுக்கு எதிராக அன்று பெரியார் மற்றும் அம்பேத்கர் போன்றவர்கள் போராடியதால்தான் இன்று ஒரு சில தலைமுறையாவது கல்வி அறிவு பெற்று சமுகத்தில் உயர்ந்து இருக்கிறார்கள். ஐரோப்பாவிலிருந்து சிந்து சமவெளி வழியாக இந்த நாட்டுக்கு வந்தவர்கள் இங்கு பூர்வகுடிகளின் பண்பாட்டு, கலாசாரத்தை அழித்து அந்த மொழிகளின் வளத்தை களவாடி நமது உழைக்கும் மக்களை சாதிரீதியாக பிரித்து மன்னர்களை தமது கட்டுப்பாட்டில் வைத்து அதிகாரத்தை செலுத்தி வந்தனர். கோவில்கள் மூலமாகத்தான் தங்களது அதிகாரத்தை நிறுவினார்கள். தங்கள் மரபையே மறந்திருந்த மக்களுக்கு, கிறித்துவ மத பிரசாரத்துக்கு வந்த கால்டுவெல், தமிழ் மொழி ஆராய்ச்சியில் ஈடுபட்டு தமிழ் ஒரு பூர்வகுடி மொழி என்பதை ஆதாரபூர்வமாக நிறுவினார்.” என்று பார்ப்பன ஆதிக்கம் மற்றும் அதன் எதிர்ப்பு மரபுகளின் வரலாற்றை விளக்கினார்.
மேலும், சமஸ்கிருத பண்பாட்டில் உள்ள கேவலங்களையும், அயோக்கிய ஆபாசங்களையும் அவர் விளக்கினார்.
இன்று எந்த ஓட்டுச் சீட்டு அரசியல் கட்சிகளும் நடைமுறையில் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் கருத்துக்களை ஏந்தி பார்பனபண்பாட்டுக்கு எதிராக வலுவாக நின்று போராடுவதில்லை. மக்கள் கலை இலக்கியக் கழகம் முதலான புரட்சிகர அமைப்புகள்தான் இன்று பெரியாரின் வாரிசுகளாக களத்தில் நேரில் போராடுகின்றனர். உதாரணமாக திருச்சியில் உள்ள ஸ்ரீரங்கம் கோவிலில் கருவறைக்கு சென்று வழிபட முடியாது என்ற நிலையில் புரட்சிகர அமைப்புகளின் போராட்டத்தின் வழியாக தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் படங்களை கருவறைக்குள் வைத்து புகைப்படம் எடுத்து பத்திரிக்கைக்கு அளிக்கப்பட்டது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழில் தேவாரம், திருவாசகம் பாடப்பட்டது.
மாணவர்கள் அனைவரும் புரட்சிகர அமைப்புகளின் கீழ் மக்களை வர்க்க அடிப்படையில் திரட்டி போராடி சம்ஸ்கிருதத்தை வீழ்த்துவோம் என்று பேசினார்.
இறுதியாக நன்றி உரையுடன் கூட்டம் முடிவடைந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
இவண்
புரட்சிகர மாணவர்கள் இளைஞர் முன்னணி
கடலூர் மாவட்டம் .