Wednesday, December 11, 2024
முகப்புகட்சிகள்அ.தி.மு.கஅம்மா மட்டுமா ஊழல்... ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்

அம்மா மட்டுமா ஊழல்… ஊடக மாமாக்களின் கட்டுரை காவியங்கள்

-

சொத்துக்குவிப்பு வழக்கில் – தண்டனைக் கைதியாக ஜெயலலிதா அறிவிக்கப்பட்ட அடுத்த கணத்தில் ஒரு அ.தி.மு.க.காரர் “என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!” என்றார் சஸ்பென்சாக.

அம்மா போஸ்டர்
“என்னமோ, விசயம் தெரியாம அம்மா மேல கைய வச்சிட்டானுங்க, என்னன்ன கதி ஆவப் போவுது, பாருங்க, இன்னமதான் கதையே இருக்கு!”

அது கட்சி வட்டத்தைத் தாண்டி தினமணி வைத்தி, தினத்தந்தி பாண்டே, தமிழ் இந்து சமஸ், சிற்பி பாலசுப்ரமணியன் என கதிகலக்கும் என கனவிலும் நினைக்கவில்லை! தெய்வமாயிற்றே! சந்து முனீஸ்வரன் சமஸ் முதல் ஜகஜ்ஜால கில்லாடி வைத்தி, பாதாள பைரவர் சிற்பி வரை அகிலாண்டேஸ்வரி, அகிலமே வியக்கும் ஊழல்புரீஸ்வரிக்குள் அடக்கம் என்பதை அம்மாவின் கைது காட்டிவிட்டது.

“தெய்வத்துக்கே தண்டனையா?” என்று போஸ்டர் அடித்து பொங்கிய ரத்தத்தின் ரத்தங்களும், “இடும்பைக்கு இடும்பை படுப்பர்!” என்ற வள்ளுவர் குறளை மாமிக்கு ஒட்டியாணமாக்கிய வைத்தியும், “அன்று நகைத்தாளடா – என் மாமனே அவளை என் ஆளாக்கினாய்” என்ற பாரதியின் பாஞ்சாலி சபதத்தை அம்மாவுக்கு பதவுரையாக்கிய சிற்பியும் ஒரே சாம்பிராணியின் இரு மணங்கள்.

“டேய்! அம்மாவ வெளியுல விடுங்கடா!” என்று சுற்றும் உருட்டுக்கட்டைகளின் உணர்ச்சிகளுக்கும், “மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்! என்னே சக்தி! அம்மாவை யார் நினைத்தாலும் கட்டைதான்!

திரைத்துறை ஆதரவு
“மெகா! கூட்டணி அமைத்தாலும் அம்மாவை வெல்ல முடியாது!” என்று கொக்கரிக்கும் அறிவாளிக் கட்டைகளுக்கும் ஒரே புத்திதான்

தூணில் இருந்தாலும், துரும்பில் இருந்தாலும், சிறையில் இருந்தாலும் தெய்வம் எல்லோரையும் பார்த்துக் கொண்டிருப்பதால் தன்னை எந்த அளவுக்கு வருத்திக் காட்டுகிறோமோ, அந்த அளவு தன் வருங்காலத்துக்கு நல்லது! என்பதை ஊழலின் பக்தர்கள் உணர்ந்தே இருக்கிறார்கள்! பேருந்து எரிப்பு, கடைகள் உடைப்பு, தீக்குளிப்பு சீன்கள், தீச்சட்டி, தீமிதி, அலகு குத்தல், மண்சோறு என எவ்வளவு சுதி ஏற்றினாலும் தெய்வத்துக்காக ஒரு டெங்கு கொசு கூட சாகாத போது வேறு என்னதான் செய்வது? கூலிக்கு ஒப்பாரியும் கட்டுப்படி ஆகாததால், தமிழகத்தையே மொட்டை அடித்த தாய்க்கு, தன்னால் ஆன காணிக்கையாக தலைக்கு ஒரு மொட்டை போட்டு பெயிலுக்கு மயிர்நீத்த கவரிமான்களாக கட்சிக்காரர்கள் உலா வருகிறார்கள்!

அம்மா லேப்டாப், அம்மா சைக்கிள், அம்மா உணவகம் என கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் தலையில் ‘அம்மா சிந்தனை’யை இறக்கிவிடும் வேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் அ.தி.மு.க. அல்லக்கைகள் மட்டுமல்ல, அதையும் தாண்டிய அறிவாளிகளும் நம்மிடம் பரப்பும் மர்மக்காய்ச்சல் “யார்தான் யோக்கியன்? யார்தான் ஊழல் செய்யல?”

அரசியலைப் பகுத்தறிய வாய்ப்பில்லாத மக்கள், அரசியலின் வர்க்கத்தன்மையை பரிசீலிக்க வழியின்றி அன்றாட வாழ்க்கையில் நெருக்கப்படும் மக்களின் இரக்க உணர்ச்சியையும் சுரண்டிக்கொள்ளும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளும் அ.தி.மு.க. திருடர்களைவிட கொடியவர்கள் தங்களை கட்சிசார்பற்றவர்களாகவும், வர்க்கச் சார்பற்றவர்களாகவும் காட்டிக்கொள்ளும் ஊடக, பத்திரிகை உலக பிழைப்புவாதிகள்.

வைத்தி - ஜெயா
திருடர்களைவிட கொடியவர்கள் தங்களை கட்சிசார்பற்றவர்களாகவும், வர்க்கச் சார்பற்றவர்களாகவும் காட்டிக்கொள்ளும் ஊடக, பத்திரிகை உலக பிழைப்புவாதிகள்.

“மக்களின் இரக்க உணர்ச்சியை சுரண்டுவதைவிட கேவலமான சுரண்டல் வேறில்லை!” என்று கார்ல்மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இந்தக் கேவலமான கேடிகளுக்கு கவுரமான பெயர் பத்திரிகையாளர்கள், சமூக விமர்சகர்கள், அறிஞர்கள் என்றால் கூட்டத்தில் செயின் திருடனுக்கே கோபம் வரத்தான் செய்யும்.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் அமலானபிறகு, அதனால் பயன்பெற்ற வர்க்கங்கள் “அரசியல்ல இதல்லாம் சாதாரணமப்பா!” என ஊழலில் சமத்துவம் பேச ஆரம்பித்துவிட்டது. கருணாநிதி குடும்பம் யோக்கியமா? 2ஜி என்ன? என இன்னொரு ஊழலை முன்னிறுத்தி மடக்குப்பிடி போடுவதன் மூலம் இவர்கள் சொல்லவரும் கருத்து என்ன? எதார்த்தத்தில் விஸ்வரூப வாகிணி ஜெயலலிதாவின் கொள்ளை அடிப்படையும் சகஜமாக எடுத்துவிட்டு போங்க! என்பதுதான் இவர்களின் ஊழல் சரக்கும்! இந்தக் கருத்து ஊழலை மக்கள் மீதும் திணிப்பதில் அ.தி.மு.க. காரனை விட அயோக்கியனாக களமிறங்கி வேலை செய்கிறார்கள் ஊடகப்பிறவிகள்.

“எங்க அம்மா மட்டுந்தான் குற்றம் செஞ்சாங்களா? திட்டமிட்ட சதி!” என்று டீக்கடையில் பேசும் அ.தி.மு.க. பங்காளியின் குரல்தான், அங்கங்கே தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு விவாதிக்கும் அறிவுலக விற்பன்னர்களின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.

நீதிபதியை அர்ச்சிக்கும் போஸ்டர்
“எங்க அம்மா மட்டுந்தான் குற்றம் செஞ்சாங்களா? திட்டமிட்ட சதி!” என்று டீக்கடையில் பேசும் அ.தி.மு.க. பங்காளியின் குரல்தான், அங்கங்கே தொலைக்காட்சியில் உட்கார்ந்து கொண்டு விவாதிக்கும் அறிவுலக விற்பன்னர்களின் குரல்களிலும் எதிரொலிக்கிறது.

“கருணாநிதி, ஜெயலலிதா, எடியூரப்பா என்று அரசியல்வாதிகள் மட்டுமல்ல, அம்பானி, டாடா, அதிகாரிகள், கலெக்டர், தாசில்தார்கள், கார்ப்பரேட் முதலாளிகள் போன்ற ஊழல் கூட்டாளிகளையும் கைது செய்! சிறையில் அடை! சொத்துக்களை பறிமுதல் செய்!” என்ற நியாயமான தர்க்கமுடிவிற்கு வரவேண்டியவர்கள், எந்த சமூகப் பிரச்சனைகளையும் விவாதம் என்ற பெயரில் நீர்த்துப்போகச்செய்வது, அதன் அடிப்படையான விசயத்தை தொடாமலேயே திட்டமிட்டு திசை விலக்குவது என்ற நவரசங்களிலும் ஓட்டுப்பொறுக்கும் அரசியல்வாதிகளைவிட அபாயகரமானவர்கள் இந்தவகை ஊடக ஆதாயக் கும்பல்கள். கூலிக்கு ஒப்பாரி வைக்கும் கும்பலைவிட கொடியவர்கள் கூலிக்கு நிகழ்ச்சி நடத்தும் ஊடக வாடகை ஜென்மங்கள்!

சொத்துக்குவிப்பு வழக்கு என்று சொன்னால் கூட தெய்வகுத்தமாகி விடும் என்று ‘சொத்துவழக்கு’ என்ற சொல்லாட்சியால் வாளைச் சுழற்றும் ‘ஆயுத எழுத்து’ தினத்தந்தி பாண்டேவை, தினமணி வைத்தியின் எழுத்தாயுதம் எப்படி விஞ்சுகிறது பாருங்கள், “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்டிருக்கும் தண்டனை அவர் மீது பரவலாக அனுதாபத்தை ஏற்படுத்தியிருக்கிறதே தவிர, பெருமளவு கோபத்தையோ, வெறுப்பையோ ஏற்படுத்திவிடவில்லை என்பதுதான் யதார்த்த நிலைமை… ( 29.9.2014, தினமணி தலையங்கம்)”, ‘கொள்ளை ஆசை’ என்பது இதுதான் போலும்!

ஊரறிந்த ஊழலை குப்புற விழுந்து கும்பிடும் இந்த ‘ஜெயாசனத்திற்குப்’ பேர் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையாம்! எப்போதும் இழவு விழந்த மாதிரியே முகத்தை வைத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வத்தின் கஷ்டம் வைத்தி மாமாவுக்கு இல்லை, நாலு வார்த்தையை சுழட்டிவிட்டே நல்லபெயர் வாங்கும் தந்திரம் அவாளுக்கே உசிதம்!

ஜெயலலிதாவுக்கு சாமரம்
ஊரறிந்த ஊழலை குப்புற விழுந்து கும்பிடும் இந்த ‘ஜெயாசனத்திற்குப்’ பேர் நிமிர்ந்த நன்னடை, நேர் கொண்ட பார்வையாம்!

அப்துல்கலாமைப் போல அடிக்கடி பள்ளி கூடத்து பிள்ளைகளிடம் போய் அறம் ஒழுக்கம், என்று அலப்பறை கொடுக்கும் பத்திரிகா தர்மத்தின் பதியின் குரலை மேலும் கேளுங்கள்

“ஜெயலலிதாவுக்கு எப்போதும் ஒரு ராசியுண்டு, மிகப்பெரிய வெற்றிக்குப்பிறகு படுமோசமான தோல்வியும், படுமோசமான தோல்வியைத் தொடர்ந்து மிகப்பெரிய எழுச்சியும்தான் ஜெயலலிதா இயற்காட்சியின் (பினாமினன்) தனித்தன்மை. ஐந்துமுறை தமிழக முதல்வராகப் பதவி ஏற்றவர் என்கிற கருணாநிதியின் சாதனையை, மேல் முறையீட்டில் விடுவிக்கப்பட்டு, மீண்டும் முதல்வராவதன் மூலம் ஜெயலலிதா சமன் செய்தால் வியப்படையத் தேவையில்லை”.

ஜெயாவின் பரம்பரை ஜோசியரை விஞ்சிவிட்டது வைத்தியின் அருள் வாக்கு! சிந்தனைக்கான வாழ்க்கை மறுக்கப்பட்டிருக்கும் ஒரு அ.தி.மு.க. கூலியின் மண்சோறு வேண்டுதலுக்கும் கீழே இருக்கிறது நடுநிலை வேடமிடும் பத்திரிகையாளனின் பிழைப்பு! தெரிந்தே ஊழலுக்கு தீபதூபம் காட்டும் இந்த முதுகெலும்பு அற்ற வர்க்கம்தான் அரசியலை சாக்கடை என்றும், “ஐயம் நாட் இண்ட்ரஸ்டட் இன் பொலிட்டிக்ஸ்” என்றும் வசனம் பேசுவதும், வாய்ப்புக்கு காத்திருக்கும் ஊழலின் இன்னொரு வகைமாதிரிதான்.

ட்சி அரசியல் எல்லாம் ஊழல், பக்கச்சார்புடையது, நடுநிலை சிந்தனையாளர்கள், நடுவாந்திர ஜனநாயகவாதிகள் என்று பாவனை காட்டும் சமூக விமர்சகர்களையும் ஜெயாவின் ஊழல் வழக்கும், தண்டனையும் சேர்த்தே அம்பலமாக்குகிறது. தமிழ் இந்துவில் கட்டுரை எழுதும் சமஸ், ஜெயாவின் தீர்ப்பை ஒட்டி “எங்களுக்கு என்ன தண்டனை குன்ஹா?” என்று தெய்வத்திடம் வேறு மாதிரி வருத்திக்காட்டுகிறார்.

கையும் களவுமாக பிடிபட்ட திருடனை பரணில் உட்கார வைத்துவிட்டு, திரண்டு வந்த மக்களிடம் நீங்கள் யோக்கியமா? என திகைக்கவைக்கும் தத்துவ விசாரணையில் நாஞ்சில் சம்பத்தையே அணுக்கத் தொண்டராக்கிவிட்டார் சமஸ்! தனது கட்டுரையில், ஊழலை ஒரு சமூகப் பிரச்சனையாக நீட்டி முழக்கி மக்களின் மனசாட்சியை உலுக்கும் சமஸ், கடைசிவரை கண்ணுக்கு முன்னே எழுந்தருளியிருக்கும் ஊழல்தெய்வம் ஜெயலலிதாவின் பொது அமைதிக்கு பங்கம் வராமல், பொதுமக்கள்தான் இந்த நிலைக்கு காரணம் என்று அறச்சீற்றத்தை அம்மாவுக்கு அடக்கமாக இறக்கி வைப்பதில் இந்துவின் எடைக்கு எடை சமஸ் கச்சிதமாக பொருந்துகிறார்.

இந்து ராம் - ஜெயா
அறச்சீற்றத்தை அம்மாவுக்கு அடக்கமாக இறக்கி வைப்பதில் இந்துவின் எடைக்கு எடை சமஸ் கச்சிதமாக பொருந்துகிறார்.

கட்சி அரசியல், பக்கச்சார்புக்கெல்லாம் அப்பாற்பட்ட அறிவாளிகளாக காட்டிக்கொள்ளும் வகையினரை ஒத்த சமஸ் இவைகளோடு தனது வர்க்கச் சார்பையும் காட்டிக்கொண்டதற்கு நாம் கட்டாயம் நன்றி சொல்லத்தான் வேண்டும். நடப்பில் ஜெயாவின் ஊழல் தண்டனையை ஒட்டி கட்டுரை எழுத வந்தவர், முத்தாய்ப்பாக, இந்த கடையடைப்பு, கலவரச் சூழலில் அதிக கட்டணம் கேட்ட ஆட்டோக்காரர், பால் கவரை கூடுதல் விலைக்கு விற்ற கடைக்காரர் இவர்களை குறிப்பாக அடையாளப்படுத்தி இப்படி இருக்கும் நாட்டில், இதற்கான அடிப்படைகளாய் விளங்கும் மக்களுக்கு என்ன தண்டனை? என்று உழைக்கும் மக்கள்தான் முக்கிய குற்றவாளிகள் போல் தீர்ப்பை எழுதுகிறார் ஆளும்வர்க்க சேஷ்ட குமாரன்!

இவருக்குத் தெரியாதா? ஊழலின் ஊற்றுக் கண்கள், அதை உருவாக்கும் ஆளும் வர்க்க, அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், கார்ப்பரேட் முதலாளிகள் என்பது. இவர்கள் அடிபணியும் இந்த மொத்த முதலாளித்துவ அரசியல் கட்டமைப்பே ஊழலில் புழுத்து நாறும்போது, மக்களையும் ஊழல்படுத்தி வழிக்கு கொண்டுவரும் இந்த அரசுக் கட்டமைப்பில், கடைக்கோடியில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்தை சமப்படுத்துவதன் மூலம், “அம்மா மட்டுமா ஊழல்” என்ற அ.தி.மு.க. கழிசடைகளின் சித்தாந்த வார்ப்புதான், பக்கா வர்க்கச்சார்புள்ள சமஸ்சும் என்பதை புரியவைத்த தெய்வத்தின் பராக்கிரமமே பராக்கிரமம்!

மஸ் போன்ற சமர்த்தான சமூக விமர்சன கர்த்தாக்களின் கதியே இப்படி எனில், சகல வழிகளிலும் நுண்மாண் நுண்புலத்தோடு ஆராய்ந்து பிழைக்கத்தெரிந்த அறிஞர்களின் வல்லமையை நம்மால் அளக்கவே முடியாது, இந்தக் கூட்டத்தில் அடக்கவே முடியாமல் ஜெயாவின் கைதுக்காக தினமணியின் நடுபக்கத்தில் அங்கப்பிரதட்சனம் செய்த அறிஞர் சிற்பி பாலசுப்ரமணியன்.

அண்ணன் சாதாரண ஆள் இல்லை! கொங்கு மண்ணின் தங்கத் தமிழறிஞர், வானம்பாடி இயக்கத்தின் முன் தேதியிட்ட முற்போக்காளர்! கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் போராட்டம், சிறு தொழிலாளர்கள் போராட்டம், விசைத்தறி தொழிலாளர் போராட்டம் எதிலுமே பொத்துக்கொண்டு வராத அறிஞரின் ‘சிந்தனை அலைகள்’ ஜெயலலிதாவின் கைது ‘சிந்தனை அலைகளை’ எழுப்பியுள்ளதாக சீற்றம் கொள்கிறார்.

குற்றமும் தண்டனையும்” என்ற தஸ்தோவ்ஸ்கியின் நாவல் தலைப்பையே அம்மாவின் கைது பற்றிய தனது கட்டுரைக்குச் (1.10.2014, தினமணி) சூட்டுகிறார் எனில் அறிஞரின் சர்வதேச அறிவின் ஆழ, அகலத்தை ஆராய்ந்து நம்மால் மீளவும் முடியுமோ? “கர்நாடக நீதி மன்றத்தின் தீர்ப்பு, நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு” என்று நம்மை அதிர்ச்சி அடைய வைக்கிறார் சிற்பி.

சோவுடன் ஜெயா
“கர்நாடக நீதி மன்றத்தின் தீர்ப்பு, நடுநிலையாளர்களையும், சிந்தனையாளர்களையும் மிகுந்த கவலைக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கி இருக்கிறது என்பது தெளிவு”

குவார்ட்டரை ஏத்திக்கொண்டு ரோட்டுக்கடையை எத்தி உதைக்கும் அ.தி.மு.க. போதைகளே மக்களை அதிர்ச்சிக்கும், சிந்தனைக்கும் உள்ளாக்கும் போது, மெத்தப்படித்த சிற்பியால் படிப்பவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க முடியாதா என்ன? அதுசரி இந்த நடுநிலையாளர்கள், சிந்தனையாளர்களை எங்கே போய் தேடுவது டாஸ்மாக் கடையிலா? தேவையில்லை நாங்களே நடமாடும் சரக்குதான் என்பதுதான் சிற்பியின் அற்புதம்!

எந்தவிதமான முறைமைகளும் நீதிநெறி வழி முறைகளையும் பின்பற்றாமல் சொத்துக்களை குவித்த ஜெயலலிதாவிற்கு “வெறும் சட்டங்களின் இரக்கமற்ற சிட்டகங்களைத் தாண்டி கருணையும் இயற்கை நீதியும் கலந்த அணுகுமுறையாக இருக்க வேண்டும்…” என்றும் மனுதர்ம நீதியை சுட்டிக்காட்டி ‘வருண வேறுபாடுகளுக்கு ஏற்ப நியாயங்களும் வகுப்பிட்டிருந்தன’ என்று அளந்துகொட்டி ஆகவே வரலாற்று வழியில் பார்ப்பனரை தண்டிக்கக் கூடாது, தண்டனையும் கருணையாக இருக்கவேண்டும் என்பதுதான் இந்த கருப்புப் பார்ப்பனரின் கடைந்தெடுத்த கருத்துப் பொழிவு!

மக்களுக்காகப் போராடுபவர்களை பொய் வழக்கில் கைது செய்வது, முதல் முறையாகவே குண்டர் சட்டத்தை பிரயோகிப்பது, விசாரணைக் கைதியாகவே சிறைக் கொட்டடியில் அடைப்பது என்பதை அமல்படுத்தும் அம்மாவின் ஆட்சிக்கு எதிராக எந்த அற உணர்ச்சியும் தோலில் உறைக்காத அறிஞருக்கு, கேள்வி கேட்க ஒரு நாளாவது மனிதனாக மாறாத மா-சிந்தனையாளருக்கு ஊழல் வழக்கில் சட்ட, விசாரணை, நீதி பரிபாலன அடிப்படையில் தண்டிக்கப்பட்டிருக்கும் அம்மாவுக்காக மட்டும் அற உணர்வு வருகிறது எனில் இது வர்க்கப் பாசமா? வாழ்நலன் யோக்கியதையா? இல்லை வருங்கால வைப்பு நீதியா? என்பதெல்லாம் பட்டிமன்றக் கேள்விகள்.

தமிழைப் பேசிப் பிழைத்த இடங்களில் எல்லாம் “அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாவதும்” என்ற சிலப்பதிகார வசனங்களைப் பேசி கைதட்டல்கள் வாங்குவது, ஒரு ஊழல் கொள்ளைக் கூட்டத்துக்காக பாஞ்சாலிசபதம் போடுவது, என்று படம் காட்டுவதில், இரட்டை வேடத்தில் எம்.ஜி.ஆரையே விஞ்சிவிட்டார் இந்த நாடோடி மன்னன்!

ஊழல் செய்தது உண்டா? இல்லையா? என்ற எதார்த்தக் கேள்விக்கு முன் ஜெயலலிதாவின் கட் அவுட்டை நிற்க வைக்க முடியாது என்று தெரிந்து கொண்ட இந்த அறிஞர், முதலில் அதற்கு பதில் சொல்லாமல், “தேர்தல்களத்தில் அடுக்கடுக்காக அசைக்க முடியாத வெற்றிகளைப் பெற்றதால், காவிரி பிரச்சனை, முல்லைப் பெரியாறு போன்ற பிரச்சனையிலும், ஈழத்தமிழர் பிரச்சனையிலும் தமிழகத்தில் போராளித் தன்மை மிக்கத் தலைவராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதால், ராஜபக்சேவும் குதூகலிக்கும் வண்ணம் கர்நாடக நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது என்று ஜெயலலிதாவின் சீலைத்துணியில் முளைகட்டிய தானியமாக முளைத்து வெளிக்கிளம்புகிறார்.

jaya-god-page

“அறுபத்தாறு கோடி ரூபாய் அளவுக்கு மீறிச் சம்பாதித்தார்கள், என்று குற்றம் சாட்டி, நூறு கோடிரூபாய் அபராதம், நான்கு ஆண்டு சிறை, ஆறாண்டு தேர்தல் தடை என்ற கொடூரமான தீர்ப்பை – ஒரு அரசியல் தலைவரின் எதிர்கால அழித்தொழிப்பை நல்ல உள்ளங்கள் நிச்சயமாக ஏற்காது” என்று தமிழகத்தையே தழு தழுக்க வைக்கிறார் அறிஞர்.

அம்மா குவார்டருக்கு சைடிஸ்சாக ஒரு ஊறுகாய் மட்டையை தட்டி விடுவது போல கடைசியாக “ஊழல் கண்டிப்பாக தண்டிக்கப்படவேண்டும், ஆனால் தண்டனை டிராஸ்கியின் படுகொலை போல அரசியல் பழிவாங்கலாக தாழ்ந்து போகலாகாது” என்று ஒரு மட்டரகமான பிட்டு வேறு! போகிற போக்கில் தனது முட்டாள்தனத்தின் மேதமையைக் காட்ட ‘டிராஸ்கி படுகொலை’ என்று அவதூறை அள்ளி வீசி அம்மாவின் உண்மை விசுவாசியாக சர்வதேச போர்ஜரி வேலை வேறு!

ஊரறிந்த கொள்ளைக்கும்பலுக்கு உரையாசிரியான பிறகு சிற்பிக்கு செதுக்கத் தெரியாமலா போய்விடும்! பாசிச தாய்க்கு பல்லக்கு தூக்கும் பட்டத்துக் கூலிக்கு சோசலிச அரசை போகிற போக்கில் புரணி பேசுவதை விட பேசாமல் அம்மா ஒப்பாரிக்கு ஆள்பிடிக்க போகலாம்!

ஒரு வட்டச் செயலாளராக இல்லாமயே என்னமா பிட்டப் போடுறான்யா, என்று அதிர்ச்சியடையும் அ.தி.மு.க. தொண்டனை விஞ்சத் துடிக்கும் சிற்பி பாலசுப்ரமணியம் அவர்களே நீங்கள் அம்மாவை இழந்து தவிக்கும் தவிப்பு எங்களுக்கும் புரிகிறது. எதற்கு இத்தனை விதமாக எழுதிப்புலம்பல், இலக்கிய தம்கட்டல்கள்… ஐந்து லிட்டர் மண்ணெண்ணெய் கேனும், ஒரு வத்திப்பட்டியும் உங்களுக்கு கிடைக்கவில்லையா என்ன! யார் தடுத்தார்கள்?

சிற்பி மட்டுமா? இன்னும் பல சிந்தனையாளர்களும் நம்மைத் துரத்துகிறார்கள்… மக்களே, சுற்றிப் பாருங்கள், அம்மா மட்டுமா ஊழல்?… இதோ வரிசையில் அறிஞர்கள்!

– துரை.சண்முகம்

  1. அந்த சமஸ் கட்டுரை படிக்கிரப்பவேநெனெச்சேன் என்னடா இந்தாளு லூசு மாதிரி படிக்கிறநம்மளையே குத்தவாளி ஆக்கிட்டான் அப்படின்னு. இப்ப தெரியுது அந்தாளு ஜிங் ஜக் பார்ட்டின்னு ! மானங்கெட்ட பார்ப்பானுங்க புத்தி ! வினவுக்கு ஒருநன்றி !

  2. இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்ட ‘தி ஹிந்து’ வில் வெளிவந்த சமஸின் பதிவிற்கு அங்கே இரண்டுமுறை கருத்து பதிந்திருந்தேன்.அந்த கருத்துக்கள் இங்கேயும் பொருத்தமாக இருக்கும் என்பதால் இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்……..

    (1) அறத்தைப் பற்றி மக்களுக்கு பாடம் நடத்தி, அந்த மக்களையே (தன்னையும் சேர்த்து) குற்றவாளியுமாக்கி தனக்கு தீது நிச்சயம் வராது என்கிற பாதுகாப்பு போர்வையில் எழுதுவது எந்த மாதிரியான அறம் சமஸ்? பத்திரிக்கையாளருக்கென உள்ள அறத்தின் படி இன்றைக்கு வழங்கப்பட்ட தீர்ப்பையும்,அது கட்சி வேறுபாடின்றி பொதுப் பதவிக்கு வருகின்றவர்களுக்கான நேர்மையான கடப்பாட்டை கோருவதையும் விவரித்து எழுதுங்கள். மக்களை குற்றவாளியாக்கி அதிகாரமிக்கவர்களை தப்புவிக்கும் முயற்சிக்கு துணை போகாதீர்கள். இப்படி ஒரு தீர்ப்பு வந்த பின்னும் அதனை ஏற்க மறுக்கும் வன்முறைப் போக்கை விமர்சியுங்கள்.இது தான் பத்திரிக்கையாளரின் அறமாக இருக்க வேண்டும்.

    (2)அறம் என்பது தமிழகத்தில் கிட்டத்தட்ட ஒரு பழைய பஞ்சாங்கம் என்பதாக கருதும் நிலை வந்து விட்டது.நேற்று வக்கீல் ஒருவர் எப்படியெல்லாம் (பொய்யாக) வாதுரை செய்தால் இந்த வழக்கை உடைக்கலாம் என்று வெளிப்படையாக ஓர் தொலைக்கட்சி கலந்துரையாடலில் பேசிக்கொண்டிருந்தார்.ஓட்டுக்கு பணம் வழங்கி அறம் கொன்றவர்களை, பணத்திற்காக தம் கிட்னியையும் விற்க வேண்டிய கையறு நிலையில் நிற்கும் மக்களோடு சமன் செய்வது எந்த வகையில் சரி சமஸ் அவர்களே? பணம் வாங்கி கொண்டு ஒட்டாளிப்பதாலேயே அரசதிகாரம் கைமாறுகிறது என்பது சோம்பலான மற்றும் பிழையான கணிப்பு. அப்படியே நடப்பதாக இருந்தாலும் அந்த நிலையில் மக்களை வைத்திருக்கவே விரும்பும் இந்த கட்சிகள் தான் இதற்கு பொறுப்பு.மக்களை குற்ற உணர்வுக்கு ஆளாக்குவதை விட கட்சிகள்,தலைவர்களையே இங்கு குற்றம் சாட்ட வேண்டும். 50 ஆண்டு காலத்தில் கம்யுனிஸ்டுகளே ஒரு நல்லகண்ணுவைத் தான் முன்னிறுத்த முடிகிறது.அவரது தனி மனித தூய்மை,எளிமை கூட அவரது கட்சியின் திசை வழியில் மாற்றம் கொண்டு வரவில்லை. சிறுதாவூர் நிலபறிப்பிற்கு வழக்கு போட்டு விட்டு அதே தலைமையின் கீழ் தானே கூட்டணி வைக்கிறார்கள்?

  3. இதில் இன்னொன்றையும் விட்டு விட்டீர்கள். தினமணியில் இரா.சோமசுந்தரம் எழுதியிருக்கிறார்

    ““முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை ஊழல் தடுப்பு சட்டத்தின்படி தண்டனை அளித்துள்ள சிறப்பு நீதிமன்றம் செய்தது சரியென்றால், எந்த நிரூபணமும் சாட்சியும் அவசியமில்லை, வெறும் அனுமானமே போதும் என்று சொல்லி, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணனையும் தண்டித்திருக்க வேண்டுமே? அவர் அரசியல்வாதி அல்ல என்பதால் தண்டிக்க முடியாது.”

    எதையும் எதையும் எவ்வளவு சாதுரியமாக இணைத்து எழுதுகிறார் பாருங்கள். இவர்களெல்லாம்தான் சமீப காலங்களாக ஊழலுக்கு எதிராக பொங்கி எழுந்தவர்கள்.

  4. If he wants to vomit his hatred against Karunanidhi,Dinamani Vaithi has a battalion of writers like Pazha.Nedumaaran,Pazha.Karuppaiah,Nellai Kannan,Tindivanam Ramamurthi etc.He has to tell them the dates only.They will come forward with their essays full of hatred.In the present context,he prepares another battalion including Sirpi Balasubramaniyam,Ira.Somasundaram etc.Ira.Somasundaram has submitted his post graduate essay (second)recently.

  5. …’டிராஸ்கி படுகொலை’… தினமணிக் கட்டுரையில் கண்டதிலிருந்து சற்று குழப்பமாக இருந்தது .இக் கட்டுரை படித்த பின்பு தெளிவாகி விட்டது.
    ஆனால் இப்போது இனம் புரியாத இன்னொரு கேள்வி வாட்டுகிறது,பதில் அளியுங்கள்…”இவ் உலகம், அறிவாளிக்கா? முட்டாளுக்கா?”
    ஆதிகாலத்திலிருந்து இன்று வரை- தர்மத்தின் வெற்றிகளை,கண்ணில் வரலாறு காட்டினாலும், அதர்மம் அதிகமாக ஆட்டம் போடுகிறதே…எப்பொழுது இதற்கு முழுவதுமாக முடிவு கட்ட? நான் இருக்கும் தலை முறையில் இதற்கு முடிவு கண்டால் என் மரணம் கூட எனக்கு இனிக்கும்.எனக்கு மட்டுமல்ல,என் போன்ற அனைவருக்கும்.

  6. தர்மம் வென்றது என்பார்களே ஒழிய அது யாருடைய தர்மம் என்றும் பார்க்கவேண்டும்! வல்லான் வகுத்ததே வழி என்னும் மனிதகுல கோட்பாட்டின்படி, வரலாறு ஜெயித்தவர்களால் மட்டுமே எழுதப்படுகிறது! அதற்குள் ஜெயா தண்டிக்கபட்டுவிட்டதாகவோ,நீதி வென்றுவிட்டதாகவோ நான் கருதவில்லை! இன்னும் நிறைய பாக்கியிருக்கிறது! ஜெயா ஒருவர் தண்டிக்கபடுவதால், அராஜகம் அடங்கப்போவதில்லை! அவரை ஆணவத்தின் உச்சிக்கு அழைத்து சென்று, அவரின் எல்லா தவறுகளுக்கும் சப்பைகட்டு காரணங்களை உருவாக்கி, மீண்டும் மீண்டும் அவர் தவறிழைக்க காரணமானவர்கள் மக்களால் இனங்காணப்பட்டு, ஒதுக்கப்படாதவரை மக்களுக்குநீதி கிடைத்து விட்டதாக நாம் கருத முடியாது!

    எல்லோரும் உச்சனீதி மன்ற தீர்ப்பை எதிர்பார்த்திருகிறோம்!

    • உச்சநீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழ்கங்கியது! மீண்டும் பட்டணத்தில் பூதம்?

  7. துரை.சண்முகம் அவர்களின் கவிதையை விட கட்டுரைகள் சூப்பர். அறிஞர் பெருமக்களுக்கு 🙂 சரியான சாட்டையடி.

  8. சந்தடி சாக்கில் கருணானிதியின் பெயர் தவ்றியும் அடிபடாமல் ……பலே

  9. What is the problem with Samas article? Yes, we all corrupted. We all give or take bribes. More than half of the tamilnadu population got money from ADMK and DMK. Why all your ‘ulaikkum vargam” voted for ADMK in 2001, 2011 and 2014. Why people choose ADMK and DMK again and again.

    Samas article does not justifies JJ corruption. It simply ask for change is common people attitude.
    You should also have mentioned Vikatan articles. Why the ‘PARAPPANA’ magazine justified the sentence? According to you, all ‘PARPPANA’ organizations support JJ.

    Please have some ‘logic’ ‘ethics’ when you write. Dont vomit all your nonsense.

  10. ////ஓட்டுக்கு பணம் வழங்கி அறம் கொன்றவர்களை, பணத்திற்காக தம் கிட்னியையும் விற்க வேண்டிய கையறு நிலையில் நிற்கும் மக்களோடு சமன் செய்வது எந்த வகையில் சரி சமஸ் அவர்களே? ///

    This is the attitude problem. All not the people are in this situation.Do you think all 6+ crore people are selling kidneys? when you talk about the TN state, you should take account of all the people. When it comes to taking money from the political parties, there is NO inequalities. it could be lower caste, upper caste, poor or middle class or upper middle…everyone..
    And, the most stupid this is they vote for them.
    Who are these ADMK and DMK cadets? are they not Tamils? Are they not part of us? All these people attitude towards corruption show us the ‘true culture’ of Tamil’s. Almost 2/3 of the population, belongs to political parties, are corrupted minds. You cannot categorize them by caste, financial status etc…It could be a farmer, weaver, school teacher, or software engineer…Most of their minds corrupted.

  11. துரோகமும் தண்டனையும்

    ”ஊழல் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும் ஆனால் தண்டனை, டிராட்ஸ்கியின் படுகொலை போல அரசியல் பழிவாங்கலாகத் தாழ்ந்து போகலாகாது” சிற்பி பாலசுப்பிரமணியத்தின் தினமணி கட்டுரை இவ்வாறாக முடிகிறது. செல்வி ஜெயலலிதாவிற்க்கு சாமரம் வீசிக்கொண்டே
    கம்யூனிஸ்ட் துரோகி டிராட்ஸ்கியின் மரணத்தை ”அரசியல் பழிவாங்கல்” என்று ஏகாதிபத்திய கூலிகள் புனைந்த கதையை மீண்டும் புனைகிறார்.

    யார் இந்த டிராட்ஸ்கி ? …. ரஸ்யாவில் புரட்சி நடந்து ஆட்சி அதிகாரத்தை கம்யூனிஸ்ட் கட்சி பிடிப்பதற்க்கு சற்று முன்தான் கட்சியில் இணைந்தார். சோவியத்தின் முதல் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தார். ஜெர்மனியுடன் நடந்த யுத்தத்தை நிறுத்த சமாதான தூதராக ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார் ,ஆனால் சோவியத் அரசின் தீர்மானத்திற்க்கு எதிராகவே செயல்பட்டார், யுத்தத்தை தொடருமாறு தூண்டினார். பின்பு டிராட்ஸ்கி பாதுகாப்புத்துறை கமிசாராக இருந்தார், அந்த சமயத்தில் செஞ்சேனை வீரர்களிடம் சர்வதிகாரப் போக்குடனும், இறுமாப்புடனும் செயல்பட்டார். அதைவிட பழய ஜாரின் ராணுவ நிபுணர்களை துதிபாடினார்

    சோவியத் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் ” இடதுசாரிகுழு” ஒன்றினை புகாரின், ஜீனோவிவ், காமனேவ் போன்ற தலைவர்களின் கூட்டுடன் டிராட்ஸ்கி உருவாக்கி சோவியத்துக்கு எதிராக பல்வேறு சதி வேலைகளை செய்து வந்தார். மக்களை தன் பக்கம் திரட்ட நாடு முழுவதும் சுற்றிவந்தார். மக்களிடம் தீப்பொறி பறக்க பேசிப்பார்த்தார். ” பழய போல்ஷ்விக்குகள் பிற்போக்காளர்களாகி விட்டனர் இளைஞர்களே என் பக்கம் வாருங்கள்” என்று பிதற்றிப்பார்த்தார். மக்கள் டிராட்ஸ்கியை நிராகரித்து விட்டனர்.

    கிரிஸ்டின்ஸ்கி என்பவர் சோவியத்தின் வெளியுறவுத்துறையின் துணை அமைச்சராக இருந்த போது சோவியத்தின் இராணுவ நடவடிக்கை பற்றி ஜெர்மனிகு உளவு கூறுவதன் மூலம் அந்த அரசிடமிருந்து 20,00,000 தங்க மார்க்குகளை பெற்றனர். இந்த கிரஸ்டின்ஸ்கி டிராட்ஸ்கியின் சதிக்கும்பலைச் சேர்ந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது. டிராட்ஸ்கியும் அவரது சதிக்கும்பலுமே உலக வரலாற்றில் ஐந்தாம் படை வரலாற்றை படைத்தனர். இது பின்னால் பாசிச ஹிட்லருக்கு பல விதங்களில் உதவியாக இருந்தது.

    டிராட்ஸ்கி சோவியத் அரசில் பல்வேறு உயர் பதவிகளைப் பெற்றுக்கொண்டே சொந்த நாட்டுக்கும், மக்களுக்கும் , கட்சிக்கும் துரோகம் செய்துகொண்டே இருந்தார். 1924 ல் ‘அக்டோபரின் பாடங்கள்’ என்ற தலைப்பில் தனது முந்தய கட்டுரைகளையும், உரைகளையும் தொகுத்து நூலாக வெளியிட்டான். அதில் லெனினிசத்க்கு மாற்றாக டிராட்ஸ்கியிசத்தை கொண்டுவர முயற்ச்சித்தார். கட்சியின் மீதும் லெனின் மீதும் படுமோசமான பழிகளை சுமத்தினார். உலக வரலாற்றில் ஆகச்சிறந்த உயர்ந்த ஜனநாயக அரசை மிகவும் கொச்சைப் படுத்தினான். இந்த கேடான கருத்துக்களுக்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு வந்தது. கட்சியின் மத்திய குழுவில் இது பற்றி விவாதிக்கப்பட்டது, டிராட்ஸ்கியை மத்திய குழுவிலிருந்தும், அரசியல் தலைமை குழுவிலிருந்தும் மட்டுமின்றி கட்சியிலிருந்தே நீக்க வேண்டும் என பெரும்பான்மை உறுப்பினர் கூறினர். ஆனால் ஸ்டாலின் இதை ஏற்க்கவில்லை ராணுவம் மற்றும் கப்பல்படை விவகாரங்கள் துறையின் மக்கள் கமிசார் பதவியிலிருந்து நீக்குவது மட்டும் போதும் என்றார். லெனினிசக் கோட்பாடுகள் மீதான தாக்குதலை டிராட்ஸ்கி முழுமையாகவும் நிபந்தனையின்றியும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ஸ்டாலின் அழுத்தமாக எச்சரித்தார். டிராட்ஸ்கியிசத்தை சித்தாந்த ரீதியாக நொறுக்கப்பட வேண்டும் என்பதை ஸ்டாலின் நிரூபித்தார். டிராட்ஸ்கியை கட்சியிலிருந்து் வெளியேற்றும் முடிவை ஸ்டாலின் விரும்பவில்லை. இந்த நிகழ்வு முதலாளித்துவ ஜனநாயக நாடுகளில் காணமுடியாதது. எவ்வளவு உயர்ந்த ஜனநாயக முடிவு.

    சோவியத் நாட்டிற்க்கும், கட்சிக்கும் பல்வேறு துரோகங்களை டிராட்ஸ்கி செய்த போதும் எச்சரிக்கையுடனும், விமர்சனத்தோடும் மன்னிக்கப்பட்டார். ஆனால் டிராட்ஸ்கி எந்த வித்ததிலும் திருந்தவே இல்லை, 1928 ஜனவரியில் சோவியத் சீன எல்லையில் உள்ள அல்மா அட்டாவுக்கு டிராட்ஸ்கி நாடு கடத்தப்பட்டார். குடும்பத்துடன் தங்க வீடு கொடுக்கப்பட்டது. தனிப்பட்ட மெய்க்காப்பாளர்களை வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டது. கடிதபோக்குவரத்துக்கும், தனி நூலகத்திற்க்கும், ஆவணகாப்பகம் வைத்துக்கொள்ளவும், அங்கு டிராட்ஸ்கி நண்பர்களையும், ஆதரவாளர்களையும் சந்ந்திகவும் அனுமதிக்கப்பட்டது. சோவியத் அரசால் கடுமையின்றி நடத்தப்பட்டார். உலகின் வேறு எந்த நாட்டிலாவது இம்மாதிரி துரோகிகளை நடத்துவார்களா? இந்தக் கட்டத்திலும் டிராட்ஸ்கி திருந்தவில்லை. முன்னைவிட தீவிரமாக சோவியத்துக்கு எதிரான சதி வேலைகளில் தலைமை தாங்கினார். சோவியத் அரசு தனது பிரதிநிதியின் மூலம் டிராட்ஸ்கியை மீண்டும் எச்சரித்தது, அதை அவர் பொருட்படுத்தவில்லை. டிராட்ஸ்கி மீது வழக்கு தொடரப்பட்டது. 1929 ஜனவரி 22ல் டிராட்ஸ்கி சோவியத் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

    ”பொதுவாக நாடு கடத்தப்படுதல் என்றால், மங்கி மறைந்து போவது என்பது பொருள். ஆனால் டிராட்ஸ்கியின் நிலைமை நேர்மாறாக இருந்தது. மனிதத் தேளாகிய அவர் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்த போதிலும், அவருடைய கொடுக்கு சோவியத் யூனியனைக் கொட்டிக் கொண்டே இருந்தது. டிராட்ஸ்கி சர்வதேச சதியில் வாழ்ந்து வந்தார்” என்று ஐசாக் எப்மாகாசன் ‘கொந்தளிப்பான ஆண்டுகள் (turbulent years ) என்ற நூலில் டிராட்ஸ்கியை படம் பிடித்துக் காட்டுகிறார்.

    நாடு கடத்தப்பட்ட டிராட்ஸ்கி 1929 பிப்பரவரி 13-ல் கான்ஸ்டான்டிநோபிளுக்கு வந்தார். முதலாளித்துவ பத்திரிக்கைகள் டிராட்ஸ்கியை ‘சிவப்பு நெப்போலியன்’ என்று வருணித்து வரவேற்றன. அங்கு அவர் தனது சதி வேலைகளின் தலைமையகத்தை ஏற்ப்படுத்திக்கொண்டார். டிராட்ஸ்கிக் கும்பலுக்கு நிடி உட்ப்பட பல்வேறு உதவிகள் பல்வேறு நாட்டிலிருந்தும் கிடைத்தன. சோவியத் பற்றிய பல்வேறு ரகசியங்களை எதிரிகளுக்கு விற்பனை செய்தார் டிராட்ஸ்கி.
    1933-ல் டிராட்ஸ்கி எதிரிகளின் ஏடுகளில்; ”ஸ்டாலினின் அதிகாரத்தை கட்சியின் மூலமோ சோவியத் காங்கிரஸ் மூலமோ அகற்ற முடியும் என்பது சிறுபிள்ளைத்தனமானதாகும். இவர்களை அகற்ற இயல்பான அரசியல்சாசன வழி முறைகள் என்பது இனி சாத்தியமில்லை….. வன்முறை மட்டுமோ சாத்தியம்…”
    சோவியத் தலைவர்களை சதியின் மூலம் தீர்த்துக்கட்ட பகிரங்க அழைப்பு விடுத்தார்.

    ஜெர்மன் நாஜிக்கட்யின் துணைத் தலைவரான ஹெஸ் என்பருக்கும் டிராட்ஸ்கிக்கும் நடைபெற்ற பேச்சு வார்த்தையின் மூலம் டிராட்ஸ்கியவாதிகள் சோவியத் ரஷ்யாவில் அதிகாரத்தை பிடிப்பதற்க்கு உதவுவதன் மூலம், சோவியத்தின் உக்ரையினை ஜெர்மனிக்கு கொடுப்பது, ஜெர்மனியின் தொழில்-வியாபாரம் போன்றவற்றுக்கு ரஷ்யாவில் சலுகைகளை தருவது மற்றும் போர்காலங்களில் ஜெர்மனிக்கு உதவுதல் என்ற ஒப்பந்தம் செய்யப்பட்டது. டிராட்ஸ்கி எப்பேர்ப்பட்ட நபர் என்பது விளங்குகிறதா???

    1934 டிசம்பர் 1-ல் லெனின் கிராடு கட்சியின் செயலாளரும், ஸ்டாலினின் நெருங்கிய தோழருமான கிரோவ் டிராட்ஸ்கிஸ்ட்டுகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்- இது போன்று பல முக்கிநபர்கள் பல்வேறுமுறைகளில் கொல்லப்பட்டனர். ஸ்டாலின் உட்பட பல தலைவர்களையும் தீர்த்துக்கட்ட தீர்மானிக்கப்பட்டது. சதிகள் பலவும் சோவியத் அரசால் கண்டுபிடிக்கப்பட்டு வழக்கு நடத்தி தண்டிக்கப்பட்டது.

    டிராட்ஸ்கியின் ” உயர்ந்த அரசியல்” வழிமுறைகளை இத்துடன் முடித்துக்கொண்டு அவனது ”தரம் தாழ்த” மரணத்தை பார்க்கலாம். மெக்சிகோவில் இருந்த டிராட்ஸ்கியிடம் சில்வியா ஏஜ்லாப் என்ற அமெரிக்கப்பெண் பிராங்சாக்சன் என்பவனை செயலாளராக தொண்டு செய்யும் படி அறிமுகம் செய்தாள்.

    டிராட்ஸ்கி பிராங் சாக்சனை சோவியத்துக் செல்லுமாறும் அங்கு செஞ்சேனையிடையே சீர்குலைவை உண்டாக்கி, போர்க்கருவிகள் உற்பத்தியாகும் ஆலைகளில் முட்டுக்கட்டை போடவேண்டும் என்று உத்தரவிட்டார், சாக்சன் செல்லவில்லை.

    ஆனால் 1940 ஆகஸ்ட் 20-ல் பிராங் சாக்சன் டிராட்ஸ்கியின் மண்டையைக் கோடாரியால் பிளந்துவிட்டான். மெக்சிகோ போலீசு சாக்சனை கைது செய்தது, சாக்சனின் வாக்குமூலவாது;
    ” நான் சில்வியா ஏஜ்லாப் என்ற பெண்ணை மணம் செய்ய விரும்பினேன். டிராட்ஸ்கி அந்தத் திருமணத்தைத் தடுத்தார். அதன் காரணமாக எங்கள் இருவருக்கும் பகைமை ஏற்ப்பட்டது. எனவே, அவளுக்காக என்னையே தியாகம் செய்யத் தீர்மானித்தேன்.
    ”தொழிலைளி வர்க்கத்தின் விடுதலைப் போருக்குத் தலைமை தாங்கும்உத்தனைப் பார்க்க நினைத்தேன், ஆனால் பழிவாங்க வேண்டுமென்ற தனது இச்சையை நிறைவேற்றிக் கொள்வதற்காகவும் தன் அற்பத்தனத்தையும் வெறுக்கத்தக்க திட்டங்களையும் மறைப்பதற்க்காகவும், தொழிலாளி வர்க்கத்தின்
    போராட்டத்தைப் பயன்படுத்தக் கருதும் சுயநலவாதியின் முன் நிற்பதைக் கண்டேன். அவர் தங்கியிருக்கின்ற மாளிகை யாருடைய பணத்தினால் கட்டப்பட்டிருக்கலாம் என்ற கேள்வியை என்னையே கேட்டுக்கொண்டேன் அவரை அடிக்கடி பார்க்கவந்த ஒரு பெரிய அன்னிய வல்லரசின் பிரதிநிதியே அக்கேள்விக்கு விடை தரமுடியும்”.

    டிராட்ஸ்கியின் செயலின் மூலமே தரம் தாழ்ந்த சாவு தண்டனையானது. இதில் அற்ப பாலசுப்பிரமணியம் கூறுவது போல அரசியல் பழிவாங்கல் எங்கிருந்து வந்தது?

    #இந்த வரலாற்று உண்மைகள் ” மாபெரும் சதி” என்ற ஆய்வு நூலில் (மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் இ.கான்- இருவரும் அமெரிக்க முதலாத்துவ எழுத்தாளர்கள்) உள்ளது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க