privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புபோலி ஜனநாயகம்அதிகார வர்க்கம்தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் !

தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் !

-

கிரானைட், தாதுமணல் வரிசையில் சேருகிறது செம்மண் !
தஞ்சையை மிரட்டும் செம்மண் கடத்தல் மாஃபியாக்கள்!

சோழ மண்டலத்தில் (தஞ்சை) வளர்ந்து வரும் “குட்டி வைகுண்டராஜன்” சிங்.துரை பற்றி சமீபத்தில் தி இந்து தமிழ் (அக் 6) நாளேடு செய்தி வெளியிட்டிருந்தது. செம்மண் கொள்ளை பற்றிய செய்தி என்பதால் நேரில் சென்று பார்வையிட முடிவு செய்து கிளம்பினோம்.

தஞ்சை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள வல்லம் பேருந்து நிலையத்திற்கும் சாஸ்த்ரா பல்கலைக் கழகத்திற்கும் இடையே நேர் பின்புறம் சுமார் 20 கி.மீ சுற்றளவில் எங்கு பார்த்தாலும் செம்மண் பிரதேசமாக காட்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தையும் உள்ளடக்கியுள்ள பல்வேறு கிராமங்கள் கடந்த 10 ஆண்டுகளாக செம்மண் கடத்தல் மாஃபியாக்களால் மூச்சுத் திணறிக் கொண்டிருக்கின்றன. வல்லம், திருக்கானூர்பட்டி, அற்புதாபுரம், மஞ்சப்பேட்டை, ஆனைநகர், சென்னம்பட்டி , நாட்டாணி, வல்லம் புதூர், தச்சன்குறிச்சி , கல்லுப்பட்டி , முன்னையம் பட்டி , குருவாடிப்பட்டி , செல்லப்பன்பேட்டை , செங்கிப்பட்டி , ஆச்சம்பேட்டை, மலையப்பட்டி உள்ளிட்ட கிராமங்கள் அவற்றில் சில. மழையற்று வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக இருந்தாலும் நிலத்தடி நீரைக் கொண்டு அற்புதமாக புன்செய் பயிர்களை விளைவிக்கும் பாரம்பரிய விவசாய அனுபவத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர் இப்பகுதி விவசாயிகள்.

தஞ்சையிலிருந்து கந்தர்வகோட்டை செல்லும் வழியில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது இருபுறமும் நெல், வாழை, மரவள்ளிக்கிழங்கு உள்ளிட்டவை பயிரிடப்பட்டுள்ள பசுமையான காட்சிகள் ரியல் எஸ்டேட் பிளாட் – கொடிக்கம்பங்களால் ஆங்காங்கே சிறை வைக்கப்பட்டிருந்தன.

ரியல் எஸ்டேட் சிறை

அரைமணி நேர பயணத்தில் அற்புதாபுரம் வந்தவுடன் வலதுபுறமாக “ராயல் குவாரி” என்ற பெயர் பலகை மேரி அன்னை படத்துடன் எங்களை வரவேற்றதால் உள்ளே நுழைந்தோம்.

ராயல் குவாரிக்கு செல்லும் வழி

சுமார் 500 மீட்டர் சென்றவுடன் இடது புறமாக மிகப் பெரிய செம்மண்குவாரி ஒன்று தென்பட்டது. சுமார் 30 அடி ஆழத்துக்கு மேல் ஒட்ட சுரண்டப்பட்ட அந்த செம்மண் குவாரியை பார்த்ததும் பகீர் என்றிருந்தது. மேலிருந்து கீழ் , கீழிருந்து மேல் என குவாரியின் உள்ளே இறங்கி பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

அங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்த சிறுவர்களிடம் விசாரித்த போது, இது “செல்வம் குவாரி” என்றனர். “அடுத்தடுத்து போய் பாருங்க இதைவிட பெரிசெல்லாம் இருக்கு” என்றதால் ஆர்வமிகுதியால் அங்கிருந்து வேகமாக கிளம்பினோம். அங்கே சென்ற போது இருபுறமும் ஏக்கர்கணக்கில் பரந்து விரிந்து கிடந்த குவாரிகள் ஆளரவமற்று எங்களை அச்சுறுத்தின. இதற்கு முன் நாங்கள் பார்த்த “செல்வம் குவாரி” தான் இருப்பதிலேயே மிகவும் சிறியது என்பது அதற்கு உறைத்தது. அங்கிருந்து கிளம்பி சற்று தூரம் சென்றபோது “சிங் குவாரி செல்லும் வழி” என்ற பெயர் பலகை எங்களுக்கு வழிகாட்டியது.

வல்லத்தை சேர்ந்த சிங்காரம் என்பவரின் மகன் சிங்.துரை 1980-களின் இறுதியில் ஒரே ஒரு ஜே.சி.பி எந்திரத்தின் மூலம் மண் வெட்டத் துவங்கி இன்று “சோழமண்டலத்தின் குட்டி வைகுண்டராஜன்” எனுமளவுக்கு ‘உழைப்பால் உயர்ந்தது’ எப்படி சாத்தியமானது என்பதை அங்கிருந்த குவாரிகள் குறிப்பால் உணர்த்தின. தினசரி இரவு பகலாக வெட்டி எடுக்கப்படும் செம்மண், டிப்பர் லாரிகளில் கொண்டு செல்லப்படுவதால் கிராமப்புற சாலைகள் மூச்சுத்திணறி, நொறுங்கி சிதறிக் கிடந்தன. 1.27 ஹெக்டேர் (சுமார் 3.5 ஏக்கர் மட்டும் ) நிலத்தில் ( 2013 -15 வரை ) வெறும் 3 மீட்டர் ஆழம் வரை மட்டுமே அனுமதியளிக்கப் பட்டிருக்கும் நிலையில் பல பத்து ஏக்கரில் சுண்ணாம்பு பாறை வரைக்கும் சுரண்டிக் கொண்டிருந்தன சிங் துரைக்கு சொந்தமான ஜே.சி.பி. எந்திரங்கள்.

சிங் குவாரி

இவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 20 ஆண்டுகாலமாக இந்த தொழிலில் தனி காட்டு தர்பாரை நடத்தி வருகிறார் சிங்.துரை. வெட்டி எடுக்கப்பட்டதையும், வெட்டிக் கொண்டிருந்ததையும் புகைப்படம் எடுத்த போது அதன் முழு பரிமாணத்தையும் புகைப்படத்தில் அல்ல, வீடியோவில் தான் காட்ட முடியும் என்பதை உணர்ந்தோம். 360o சுற்றளவுக்கும் சுரண்டப்படுவதை படம் பிடிக்க முடியாமல் எங்களோடு சேர்ந்து கேமராவும் திணறியது.

நாங்கள் புகைப்படம் எடுப்பதை கவனித்த சில ஜே.சி.பி.ஆபரேட்டர்கள் உடனே செல்போனை எடுத்து காதில் வைத்துக் கொண்டு யாருக்கோ தகவல் சொல்ல ஆரம்பித்தனர். நிலைமையைப் புரிந்து கொண்டு எடுத்த புகைப்படங்களுடன் அவசரம் அவசரமாக புறப்பட்ட ¾ மணி நேர பயணத்தில் குவாரிகளை விட்டு வெளியே வந்து ஆசுவாசப் படுத்திக் கொண்டோம். இவ்வளவு நாட்களாக இப்படியொரு பகற்கொள்ளை இங்கே நடப்பது குறித்து தெரியாமல் இருந்திருப்பதை நினைத்த போது வெட்கமாகத் தான் இருந்தது .

நாளிதழ்களில் செய்தி வந்ததை அடுத்து 7 துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் குழு அதிரடி ஆய்வு – கலெக்டர் உத்தரவு என்று செய்தி வந்திருந்தாலும் ஒரு கண்துடைப்பிற்காகக் கூட அவர்கள் செம்மண் கொள்ளையை நிறுத்தி வைக்க தயாராக இல்லை என்பது புரிந்தது. தினசரி சுமார் 200 டிப்பர் லாரிகளில் செம்மண் கொண்டு செல்லப்படுகிறது.

அதிகாரிகள் ஆய்வு

ரெய்டுக்குப் போன அதிகாரிகளில் குறிப்பாக கோட்டாட்சியர் எஸ் தேவதாஸ் போஸ் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குநர் சம்பத் ஆகியோர் சிங் துரைக்கு மிகவும் விசுவாசமானவர்களாம். சம்மந்தப்பட்ட அரசு அலுவலகங்களிலிருந்து எந்தவொரு கோப்பு நகர்ந்தாலும் சிங் துரைக்கு தகவல் பறக்குமாம். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக எத்தனையோ புகார்கள் அளிக்கப்பட்டும் எந்த மாவட்ட ஆட்சியரும் இந்த சட்டவிரோத செம்மண் மாஃபியாக்களின் குவாரிகளை மூட நடவடிக்கை எடுக்கவில்லை. அரசு அதிகார வர்க்க குற்றவாளிகளின் துணையும் ஆசியும் இத்தொழிலில் கொடி கட்டி பறந்துள்ளது என்பதற்கு இது ஒன்றே சாட்சியாகும். செம்மண் கடத்தல் பற்றி நாளிதழ்களில் சந்தி சிரித்த பிறகு 3 லாரிகள் பிடிபட்டு தண்டம் விதிக்கப்பட்டுள்ளதாக பத்திரிக்கைகளுக்கு செய்தி கொடுத்துள்ளனர் அரசு அதிகாரிகள். தினசரி 200 லாரிகள் செம்மண் அள்ளிச் செல்லும் போது 3 லாரிகளை மட்டுமே பிடிக்க முடிந்திருக்கிறது என்றால் அதிகாரிகள் வீசிய வலையில் எவ்வளவு பெரிய ஓட்டை இருந்துள்ளது என்பதை உங்களின் முடிவுக்கே விட்டு விடுகிறோம்.

சுமார் 30 க்கும் மேற்பட்ட குவாரிகள் செயல்பட்டு வருவதால் ஆங்காங்கே இருந்த கிராமப்புற விவசாயிகளிடம் அது குறித்து கேட்டபோது, “எங்கள் வயலுக்கு அருகிலேயே 100 அடி, 200 அடி ஆழம் வெட்டி விடுவதால் நிலத்தடி நீர் வறண்டு விடுகிறது. வயலுக்கு பாய்ச்சும் நீரும் வற்றிப்போய் விவசாயமே செய்ய முடியாமல் ஆகிவிட்டது. நிலத்தை உழும் போது எந்த நேரமும் நிலச்சரிவு ஏற்படலாம் என்பதால் சிலர் தாங்களாகவே நிலத்தை விற்று விடுகின்றனர், விற்காதவர்களிடம் குவாரிகாரர்களே மிரட்டி வாங்கிய சம்பவங்களும்” உண்டு என்றனர் திருக்கானூர்பட்டிகாரர்கள். இந்த தொழில் லாபகரமாக இருப்பதால் சிங் குவாரிக்கு போட்டியாக பலரும் இதில் புதிதாக இறங்கியுள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

“இங்கிருந்து 10 கி.மீ சென்றால் நல்லா உயரமான மேட்டுப்பகுதிகள் உள்ளன. ஆளரவம் இல்லாத அங்கெல்லாம் ரியல் எஸ்டேட் பிளாட் போட்டிருக்காங்க. இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும் அங்கே பிளாட் வாங்க யாரும் வரமாட்டங்கனு அவங்களுக்கு தெரியும். புதுசா தோண்டப் போகிற குவாரிகளுக்கு விற்றால் நல்ல விலை போகும் என்பதால் மலபார் சிட்டி, மங்களம் போன்ற ரியல் எஸ்டேட் காரங்க நிலங்களை வளைத்துப் போட்டிருப்பதாகக் கூறினார்” கல்லுப்பட்டி விவசாயி ஒருவர்.

தஞ்சையைப் பொறுத்தவரை PWD காண்டிராக்ட், நகராட்சி பாதாள சாக்கடைத் திட்டம் , கோயில் – குளம் தூர் வாருதல் என சிங் துரையின் சாம்ராஜ்யம் தான் கொடிகட்டிப் பறக்கிறது. ஆம் உண்மையிலேயே சிங் துரை கும்பல் “எர்த் மூவர்ஸ்” (பூமியை புரட்டுபவர்கள்) என்பது புரிந்தது. இந்த செம்மண் கடத்தல் மாஃபியாக்களுக்கு எதிராக தஞ்சை – புதுகை தழுவிய அளவில் சுவரொட்டிகள் ஒட்டி எதிர்ப்பு இயக்கம் நடத்தி வருகின்றனர் மக்கள் கலை இலக்கியக் கழகம் – விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள்.

சுவரொட்டி பிரச்சாரம்

செம்மண் கொள்ளை குறித்து மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் தஞ்சை மாவட்ட வழக்கறிஞர் சதிஷ்குமாரிடம் கேட்டபோது “கடந்த 10 ஆண்டுகளில் கடத்தப்பட்ட செம்மண்ணின் அளவுக்கு முறையாக பர்மிட் போட்டிருந்தால் அரசுக்கு ரூ 1500 கோடி வருமானம் வந்திருக்கும் என்பது ஒருபுறம் இருக்க முறைகேடாக வெட்டப்பட்ட மண்ணின் மொத்த மதிப்புடன் உண்மையாக கணக்கிட்டால் இதில் மிகப்பெரிய அளவில் கனிமவளச் சூறையாடல் நடந்திருக்கிறது. இச்சட்ட விரோத நடவடிக்கைகளுக்கு உள்ளுர் அரசு அதிகாரிகள் துவங்கி மாவட்ட நிர்வாகம் வரை ஒத்துழைத்துள்ளதால் தான் கடத்தல் தொழில் தங்குதடையின்றி நடக்கிறது. தற்போது முறைகேட்டில் ஈடுபட்டவர்களே ஆய்வு செய்வது என்பது வேடிக்கையாக உள்ளது. இது குறித்து விரைவில் நாங்கள் உண்மை கண்டறியும் குழு அமைக்கவுள்ளோம். தவறிழைத்தவர்களை தண்டிக்காமல் விடமாட்டோம்” என்றார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணை பொதுச் செயலர் தோழர் காளியப்பன் இது குறித்து பேசுகையில், ”மீத்தேன் திட்டம் , ONGC குழாய் பதிப்பு ஆகியவற்றுக்கெதிராக விவசாயிகள் போராடி வரும் சூழலில் இந்த செம்மண் கடத்தல் மாஃபியாக்கள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதும், நிலத்தைடி நீரை இல்லாமல் செய்வதும் பேரழிவை ஏற்படுத்தும். சாலை கட்டுமானப் பணிகளுக்காக செம்மண் – கிராவல் தேவை என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். ஆனால் தனிப்பட்ட முதலாளிகள் கனிமவளங்களை சூறையாடிச் செல்வதை வேடிக்கை பார்க்க முடியாது. அரசு விசாரணைக்கமிட்டி போடுவது எல்லாம் கண்துடைப்பு என்பது வைகுண்டராஜனின் தாதுமணல் கொள்ளை விவகாரத்திலேயே அம்பலப்பட்டு நிற்கிறது. எனவே, சிங் துரை கும்பல் மட்டுமில்லாமல் பிற செம்மண் கடத்தல் மாஃபியா கும்பல்களின் சொத்துக்களையும் நட்ட ஈடின்றி பறிமுதல் செய்ய வேண்டும். கனிம வளக் கொள்ளையர்களை விரட்டியடிக்க கிராமந்தோறும் போராட்டக் கமிட்டிகள் அமைக்க வேண்டும் என்று கோரி நாங்கள் போராடி வருகிறோம். இந்த எதிர்ப்பியக்கத்தை விரிந்த அளவில் முன்னெடுக்க வேண்டியுள்ளதையும் நாங்கள் உணர்ந்துள்ளோம்’’ என்றார்.

தனியார்மய – தாராளமயக் கொள்கைளால் புதுப்பணக்கார கும்பல்களும், அரசு அதிகாரிகளும் ஒருபுறம் கொழுத்துக் கொண்டிருக்க விவசாயிகளும் உழைப்பாளி மக்களும் இவ்வாறு தான் ஓட்டாண்டியாகி அத்துக் கூலிகளாக்கப்படுகின்றனர்.

மேற்கில் சூரியன் அஸ்தமிக்க முயன்று கொண்டிருந்த போது செம்மண் குவாரிகளை ஒட்டியுள்ள குப்பை மேடுகளில் மயில்கள் குப்பைகளை கிளறிக்கொண்டு இருந்தன. பாவம் மயில்களைக் கூட மறுகாலனியாக்கம் விட்டுவைக்கவில்லை.

தகவல்
பு.ஜ செய்தியாளர்
திருச்சி.