அண்டை வீட்டுக்காரரின் துன்பங்களில் பங்கு கொள்வது தமிழ் மரபு மட்டுமல்ல, உலக மரபும் கூட. ஆனால் பக்கத்து வீட்டுக்காரியின் குற்றத்தை ஆதரிப்பது எந்த மரபு?
நூற்றுக்கணக்கான பக்கங்களில் சொத்து குவிப்பு வழக்கின் குற்றங்களை பார்த்து பார்த்து விளக்கியிருக்கிறார் நீதிபதி குன்ஹா. ஆனால் நெருப்பு தடைகளை தாண்டி பொதுவாழ்வில் நீந்துவதாக அரதப் பழதான வார்த்தைகளில் ஆர்ப்பரிக்கிறார் ஜெயாவுக்கு அறிக்கை எழுதித் தரும் “கோஸ்ட்” எழுத்தாளர். குற்றவாளிக் கூண்டில் நிற்கும் போது வாழ்க்கைக்கும் மட்டுமல்ல, வார்த்தைகளுக்கும் சிக்கல் ஏற்படுகிறது.
அதே குற்றவாளியை பல்வேறு தகுதிகளோடு கூட அண்டை வீட்டுக்காரர் எனும் உரிமையிலும் ஆதரிக்கும் போது அந்த வார்த்தை எள்ளி நகையாடப்படுகிறது. இது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும் ரஜினிக்கு வேறு வழியில்லை. காரணம் ”என் வழி தனி வழி” என்று பஞ்ச் டயலாக்கில் பழக்கினாலும் அவர் வழியும் அதே வழிதான்.
“அம்மா” கைது குறித்து அதிமுக அடிமைகள் போட்டு வரும் புரட்டாசி விரத கூத்துக்களை உண்மை என்று நம்பி சிரிப்பவர்களுக்கு ஒரு அதிர்ச்சி. அதெல்லாம் வெளியே, உள்ளே அவர்கள்தான் பேரானந்தத்தில் திளைக்கிறார்கள். இது தினத்தந்தியை தினம் படிக்கும் பழக்கமுடையவர்கள் எளிதில் கண்டுபிடிக்க கூடியதே. மாறாக தினமணி, தி இந்து என்று அறிஞர் செய்தி தாள்களை மோந்து பார்ப்பவர் மட்டுமல்ல, மூழ்கித் திளைப்போரும் கண்டு பிடிக்க முடியாது. அப்படி யாரேனும் நம்மைப் போன்று கண்டு சொன்னாலும் காண்டு என்று சிண்டு முடிப்பவராக சினமடைகிறார்கள் இந்த படித்த அடிமைகள்.
அதிமுகவில் இருப்போரை இரண்டாக வகை பிரிக்கலாம். அம்மாவால் ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டவர்கள், எடுப்பதற்காக காத்திருப்பவர்கள். இரண்டிலும் அம்மாவும், நடவடிக்கையும் இணைந்தே இருப்பதால் பீதியில் கழியும் அதிமுக அடிமைகளின் உள்ளக்கிடக்கையும் கூட இரண்டாகத்தான் இருக்கிறது. ஒன்று அம்மா தூக்கும் வரை சொத்துக்களை சுருட்டுவது, தூக்கினால் சுருட்டியதை பத்திரமாக பாதுகாக்க சர்வ கட்சி ஆசியுடன் தொழிலை தொடர்வது. இந்த இரண்டிற்கிடையில்தான் அதிமுக எனும் ‘பேரியக்கம்’ தோற்றத்தில் குத்தாட்டமும், கருவில் தள்ளாட்டமும் ஆடி வருகிறது.
அந்தப் படிக்கு அம்மா உள்ளே போனதில் அடிமைகளின் உள்ளே பேரானந்தமும், வெளியே கண்ணீர் வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனாலேயே அம்மா கொள்ளையை ஊர் ஊராக வெளுத்து வாங்கினாலும் எமது தோழர்களை சீண்டுவதற்கு போலிசு தயாராக இருக்குமளவுக்கு போயஸு அடிமைகள் தயாரில்லை.
இந்த இரட்டை நாடகத்தின் திரைக்கதையாகத்தான் அம்மாவை ஆதரிக்கும் ஆசாமிகளின் பேச்சு, மூச்சு, கிச்சு, கீச்சு அனைத்தும் அடிமைகளால் உரிமையுடன் கேட்டு வாங்கி பீற்றப்படுகிறது. அந்த ஆசாமிகளும் அதை மறுக்கும் கொள்கை நிலையில் இல்லை. அதாவது போயஸ் தோட்டத்து வழியில்தான் அவர்களது தொழில், வாழ்க்கை, சொத்து அனைத்தும் வந்து குந்தியிருக்கிறது என்ற படியால் அறிக்கையை நறுக்காக அனுப்புவதே அவர்களது கவலை.
தமிழ் சினிமா உண்ணா விரதத்தில் ரூம் போட்டு யோசித்த கவிஞர்களின் வாசகங்களை இறக்கி அது தமிழகமெங்கும் விநியோகிக்கப்பட்டதிலிருந்து என்ன தெரிகிறது? அம்மாவின் ஆற்றலை விண்டு சொல்ல வெள்ளித் திரை கலைஞர்களை விட்டால் விவரமானவர் யாருமில்லை. தெய்வத்தை மனிதன் தண்டிப்பதா என்று போட்டாலும் போட்டார்கள், ஊரெங்கும் தெய்வத்தின் புகழ் பாடும் பக்தி மணம் நாடு கடந்து நிலாவிற்கும் பயணிக்கிறதாம்.
உலகை படைத்தான் கடவுள் என்பது போய் உலகமே கடவுளின் துயரத்தில் பங்கேற்பதாக படைப்பு தத்துவத்தையே மாற்றிவிட்டார்கள். ஆகையால் இந்த உலகில் கடவுளை காலி செய்யும் பணியை கடவுளின் ஏஜெண்டுகளே பொறுப்பேற்றுச் செய்வார்கள் என்ற பொன் மொழி மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
சென்னையின் மேட்டுக்குடியினர் வசிக்கும் போயஸ் தோட்டத்தில் ரஜினியும், ஜெயாவும் வசிப்பது தற்செயலான ஒன்றல்ல. ஒருவர் பிளாக் மணியிலும், இன்னொருவர் பிளாக் டிக்கெட்டிலும் தோட்டத்தின் மதிப்பை எகிறச் செய்தவர்கள். என்றாலும் யார் வெயிட்டு என்ற போட்டி ஒரு காலத்தில் இருவரிடையேயும் இருந்தது. படங்களில் பெண்களை மட்டம் தட்டிப் பேசும் ரஜினி ஒரு நாள் பகலில் ஜெயாவின் கார் பவனியால் நடுரோட்டில் காரில் காத்திருந்த போது அந்த மட்டம் தட்டி, பீரு கொண்டு எழுந்தது. அதுவே ஆர் எம் வீரப்பன் எனும் உதிர்ந்த ரோமத்தின் பட விழாவில் பொங்கி பின்னர் ஊசிய சாம்பாரான கதையையெல்லாம் எழுதி எழுதி எங்களுக்கே சலிப்பாக இருக்கிறது.
ஆனால் ரஜினியை உசுப்பி விட்ட ஊடகங்கள், பார்ப்பனிய சித்தாந்தவாதிகளுக்கு மட்டும் இந்த சலிப்பு வரவேயில்லை. குறுக்கு வழியில் குபேரன் ஆக காத்திருப்பவனும், பேய் மாளிகையை வசந்த மாளிகையாக காட்டி தரகு பெறும் தரகனும் எந்தக் காலத்தில் சலித்திருக்கிறார்கள்?
தற்போதும் ரஜினியோடு அமித் ஷா பேசினார், அடுத்த முதல்வர் அவர்தான், மோடி திட்டம் என்றெல்லாம் எடுத்து விடுவதில் அவர்கள் சளைக்கவே இல்லை. எப்படியாவது தமிழகத்தில் ஒரு ஆளாவது என்று கங்கணம் பூண்ட பாஜகவும், சூப்பர் ஸ்டார் தயவிலாவது விரல் சூப்பும் பரிதாபத்தில் இருந்து மீள்வதற்கு ததிங்கிணத்தோம் போடுகிறது. இதில் சுருதி பேதியாகி இரைச்சல் தாங்க முடியாததாக இருந்தாலும் அதை சங்கீதம் என்று சத்தியம் அடிக்க இங்கே தொடை தட்டும் சுப்புடுக்கள் இல்லாமல் இல்லை.
இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு படம் எனும் சொர்க்க வாசல் தகுதியை அடைந்த ரஜினிக்கு இந்த சூழ்நிலையே ஒரு படத்தின் ஓபனிங்காக மார்க்கெட் செய்வதற்கு வசதியாக இருக்கிறது. பல பத்து கோடிகளை ஒரு படத்தில் எடுக்க வேண்டும் என்பதால் பல பத்து உளறல்களை மாபெரும் தத்துவ ஞான விளக்கமாக முன் வைக்கும் அவசியமும் அவருக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. “தலைவா” படத்தில் ஓடு தலைவா ஓடு என்று இளைய தளபதி தலை கால் தெறிக்க ஓடியது, விசுவரூபத்தில் உலக நாயகம் தேம்பித் தேம்பி அழுதது எல்லாம் பாட்சாவுக்கு நல்ல பாடமாக இருந்திருக்கும், ஐயமில்லை.
லிங்கா படம் வெளியாகி எழுச்சியுடன் வசூல் செய்தால்தான் மகள்கள் அடுத்த பொம்மை படத்தை எடுத்து நம் தலையில் கட்டுவதிலிருந்து, அநேக நுட்பங்கள் தடையின்றி சாத்தியமாகும். மேலும் தமிழ் சினிமாவில் அம்பானி போன்று மூலதனத்திலும், வருமானத்திலும் ரஜினி ஒரு ரிலையன்ஸ் பிராண்டாக இருக்கிறார். இந்த ஃபிராண்டை அவ்வப்போது தூசு தட்டி ரிலீஸ் செய்ய வேண்டிய அவசியம் முதலாளிகளுக்கு இருக்கிறது. அதில் ரஜினியே ஒரு முதலாளி. ஆக சொந்தமாவும் தட்ட வேண்டும், சகபாடிகளுக்காகவும் தட்ட வேண்டும். தட்டினால்தான் திறக்கப்படும்.
ஆனால் ஊரறிய, நீதிமன்றம் நிலை நாட்டிய ஒரு குற்றவாளி பிணை கேட்டு கதறி வெளியே வந்து வீடு திரும்புவதையெல்லாம் வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன?
இது ரஜினி விரும்பிச் செய்த ஒன்றல்ல, கேட்டதால் அனுப்பிய நிர்ப்பந்தம் என்று பரிதாபப்படுவதற்கும் இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். ரஜினியைப் போன்றே பாஜக அமைச்சர் மேனகா காந்தியும் கூட வாழ்த்து செய்தி அனுப்பியிருக்கிறார். மூச்சுக்கு முன்னூறு தடவை காந்தியை நான் ஸ்டாப் வாந்தியாக நீதி பேசும் பெருமக்களைக் கொண்ட நாடிது. ஆக காந்திஜி போல ஜெயாஜி என்ன சுதந்திர போராட்டத்திற்கா சென்று வீடு திரும்பியிருக்கிறார்?
யார்தான் ஊழல் செய்யவில்லை என்று ஜெயாவை ஆதரிக்கும் பொதுப்புத்தி நிலவும் நாடிது. அதன்படி ஜெயாவை ஆதரிக்கும் ரஜினியை வீக் எண்டில் அரசியல் பேசும் அறிஞர்கள் மட்டும் கைவிடுவார்களா என்ன? மட்டுமல்ல, ஜெயா எனும் அப்பட்டமான ஊழல் குற்றவாளியை ஆதரித்தே ஆக வேண்டுமென்று ரஜினிக்கு நேர்ந்திருக்கும் விதி என்ன? மடியின் கனமிருந்தால்தானே வழியில் பயமிருக்கும்? அந்த கனம், லிங்கா, சிவாஜி உள்ளிட்ட கருப்பு பண முதலீட்டின் கனமில்லையா? இல்லை முதல் பத்து நாட்களில் தியேட்டர் அதிபர்களே டிக்கெட்டை ஆயிரம், ரெண்டாயிரத்திற்கு விற்கிறார்களே அந்த பணமில்லையா?
ரஜினியை ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை, நல்லவர், வல்லவர், பொய் கூறமாட்டார், ஆன்மீக அன்பர் என்று துக்ளக் சோ முதல் விகடன், குமுதம், தினமலர் உள்ளிட்டு இன்று இந்துமதவெறியர் வரை இமேஜ் புரவலராக காவடி தூக்குகிறார்களே அவற்றின் யோக்கியதை என்ன? நாட்டு மக்களுக்கு லஞ்சம் கொடுக்காதீர்கள் என்று உபதேசித்து விட்டு, லஞ்ச ராணியை நெஞ்சம் தூக்கி வரவேற்று வாழ்த்த வேண்டிய அவசியம் என்ன?
நாட்டு மக்களுக்கு நல்லொழுக்கத்தை காட்டி விட்டு, அரண்மனை ராணிகளை ஒழுக்கத்திற்கு அப்பாற்பட்டவர்களாக காட்டுவது எவ்வளவு அயோக்கியத்தனம்?
பிக்பாக்கெட் திருடனுக்கு ஒரு நீதி, கொடநாடு முழுங்கிக்கு ஒரு நீதியா? ஒருக்கால் இதே ரஜினி மட்டும் ஜெயாவுக்கு மாற்றாக அன்று வந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? நூறு ஜெயாக்கள் ஒன்று சேர்ந்து ஆண்ட நிலைமைக்கு தமிழகம் தள்ளப்பட்டிருக்கும். அந்த தள்ளாட்டம் இன்று டாஸ்மாக்கில் தள்ளாடும் தமிழகத்தை விட பல மடங்கு அதிகமாயிருக்கும்.
“ரஜினி ஒரு கழிசடை நாயகன்” என்று 96-ல் மக்கள் கலை இலக்கியக் கழகமும், அதன் தோழமை அமைப்புகளும் போட்ட சிறு நூலில் இந்த உண்மை அன்றே சொல்லப்பட்டிருக்கிறது. இன்று ரஜினியே அதை மறுக்க முடியாது!
அரசியலிலும் எந்த கஷ்டங்களும் இன்றி பதவியை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ரஜினி AMBITION.
Actually BJP lost this chance,when JJ inside they should have tried for delaying the BAIL with the help of Ravi Shankar Prasad.During this period they should have SPLIT the AIADMK with their money/Central authority with knocked out AIADMK leaders and made the RAJINI as CM of TN.Than RAJINI agreed to lead the BJP Government here.
neenga ennathaan kooppaadu pottaalum. . . neethi vellum, thesa throgigal ini veliye thalaikaattamudiyaathu enbathai hariyaana matrum mathiyapirathesa vetrigal ullangai kannaadiyai pola kaattivittana
அம்மா ஜெயாவ விடுதலை செய்ய சொல்லி திரைத்துரையினர் உண்ணாவிரதம் இருந்தபோது ரஜினி அதுல கலந்துகிலயாமே அதுனால சாரி கேட்க போயிருப்பாருப்பா, இல்லனா அவரு டவுசர் கழன்றுராதா அதனால இந்த சமாளிப்பு “அதிகமா ஆசப்படுர ஆம்பிளையும் அதிகமா கோவப்படுர பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் இல்லைனு “சொல்ல இது என்ன சினிமாவா அப்பிடித்தான் பாஸு புழக்கனும் என்னா நாங்கெல்லாம் ராவான ரவுடிக …..
அருமையான கட்டுரை. செருப்பால் அடித்த மாதிரி.. பாராட்டுகள்
“என் வழி தனி வழி” என்பதை இனி இவர் “என் வழி அம்மா வழி” என்று சொன்னாலும் சொல்லலாம்.
ரஜினியைப் பொறுத்தவரை அவரது படம் தடங்கல் இல்லாமல் திரையரங்குகளில் ஓட வேண்டும்.
அதற்கேற்ப அவர் தனது பாணியை மாற்றிக் கொள்வார்..
கமலகாசனும் ஊழல் தெய்வத்துக்கு ஒரு லெட்டர் போடுறது நல்லது .இல்லேன்னா அப்புறம் தெய்வம் விஸ்வரூபம் எடுத்திட்டா நாடு தாங்காது.
போயஸ் ரஜினியும் போயஸ் ராணியும் ஊழலில் ஓரணி-மிகச்சரியான,துணிவான அறிவிப்பு!
தங்கள் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
ஊழல் ஊழல் என்று கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள் . நம்மில் யாருக்குமே ஊழல் பற்றி பேச தகுதி இல்லை .
இருக்கும் அரசியலும்,மக்களின் வாழ்வும் ஒவ்வொருவன் மனசாட்சிக்கும் தெரியும்.அதர்மங்களையே சுட்டும் வினவே!
நன்மையுள்ள நாடும்,மக்களும் எவ்வாறு இருக்கும்,இருப்பர்? வாரத்திற்கு ஒரு முறையாவது அதைப் பற்றி எழுதுங்களேன்?
மனசாட்சிக்குப் பதில் சொல்லாத எந்தவொரு மனிதனும் மனிதனே கிடையாது.
மனசாட்சிக்கு பயந்து பணி புரிந்த அரசியல்வாதிகளின் அரசியல் எவ்வாறு இருக்கும்?
வரலாறு இருந்தால் புரியாத மனிதர்களுக்கு புரிய் வையுங்கள், இல்லையெனில் மக்களுக்கு சேவை செய்ய நினைக்கும் ஒருவனுக்கு வழி காட்டுங்கள்.
எதை நோக்கி உங்கள் பயணம்?…
ஆத்திரக்காரனுத்தானே புத்தி மட்டு,பொறுமையின் எல்லையை உணர்ந்த மனிதனுக்கு…?