Tuesday, December 10, 2024
முகப்புவாழ்க்கைநுகர்வு கலாச்சாரம்தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்

தீபாவளி தேவையா ? தந்தை பெரியார்

-

தீபாவளி தேவையா?

புராணக் கதைகளைப்பற்றிப் பேசினால் கோபிக்கின்றீர்கள். அதன் ஊழலை எடுத்துச் சொன்னால் காதுகளைப் பொத்திக் கொள்கின்றீர்கள். ஆனால், காரியத்தில் ஒரு நாளைக்கு உள்ள 60 நாழிகை காலத்திலும் புராணத்திலேயே மூழ்கி மூச்சு விடுவது முதல் அதன்படியே செய்து வருகின்றீர்கள். இப்படிப்பட்ட மனிதர்கள் புராணப்புரட்டை உணர்ந்தவர்களாவார்களா? புராண ஆபாசத்தை வெறுத்தவர்களாவார்களா? நீங்களே யோசித்துப் பாருங்கள்!

தீபாவளி வெடிகள்
அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது

பண்டித, பாமர, பணக்கார ஏழைச் சகோதரர்களே! எவ்வளவு பண்டிகை கொண்டாடினீர்கள்! எவ்வளவு யாத்திரை செய்தீர்கள்? இவற்றிற்காக எவ்வளவு பணச் செலவும் நேரச் செலவும் செய்தீர்கள்? எவ்வளவு திரேகப் பிரயாசைப்பட்டீர்கள் என்பதை யோசித்துப் பார்த்தால், நீங்கள் புராணப் புரட்டை உணர்ந்து – புராண ஆபாசத்தை அறிந்தவர்களாவீர்களா? வீணாய்க் கோபிப்பதில் என்ன பிரயோசனம்? இந்த விஷயங்களை வெளியில் எடுத்து விளக்கிச் சொல்லுகின்றவர்கள் மீது ஆத்திரம் காட்டி அவர்களது கண்ணையும், மூக்கையும், தாடியையும், தலைமயிரையும் பற்றிப் பேசுவதால் என்ன பயன்? ‘நீ ஏன் மலத்தில் மூழ்கி இருக்கின்றாய்?’ என்றால், அதற்கு, நீ தமிழ் இலக்கணம் தெரியாதவன்’ என்று பதில் சொல்லிவிட்டால் மலத்தின் துர்நாற்றம் மறைந்து போகுமா? இதைப் பார்ப்பனரல்லாத மக்கள் 1000-த்துக்கு 999 பேர்களுக்கு மேலாகவே கொண்டாடப் போகின்றீர்கள்.

  • பெரிதும் எப்படிக் கொண்டாடப் போகின்றீர்கள் என்றால், பொதுவாக எல்லோரும் – அதாவது துணி தேவை இருக்கின்றவர்களும், தேவை இல்லாதவர்களும் பண்டிகையை உத்தேசித்துத் துணி வாங்குவது என்பது ஒன்று;
  • மக்கள் மருமக்களை மரியாதை செய்வதற்கென்று தேவைக்கும், யோக்கியதைக்கும் மேலானதாகவும், சாதாரணமாக உபயோகப்படுத்துவதற்கு ஏற்றதல்லாததுமான துணிகள் வாங்குவது என்பது இரண்டு;
  • அர்த்தமற்றதும் பயனற்றதுமான வெடிமருந்து சம்பந்தப்பட்ட பட்டாசு வகைகள் வாங்கிக் கொளுத்துவது மூன்று;
  • பலர் இனாம் என்றும், பிச்சை என்றும் வீடு வீடாய்க் கூட்டங் கூட்டமாய்ச் சென்று பல்லைக் காட்டிக் கெஞ்சிப் பணம் வாங்கி அதை பெரும்பாலும் சூதிலும், குடியிலும் செலவழித்து நாடு சிரிக்க நடந்து கொள்வது நான்கு;
  • இவற்றிற்காகப் பலர் ஊர்விட்டு ஊர் பிரயாணம் செய்து பணம் செலவழிப்பது அய்ந்து;
  • அன்று ஒவ்வொரு வீட்டிலும் அமிதமான பதார்த்த வகைகள் தேவைக்கு மிகுதியாகச் செய்து அவைகளில் பெரும்பாகம் கண்டவர்களுக்குக் கொடுப்பதும், வீணாக்குவது ஆறு;
  • இந்தச் செலவுகளுக்காகக் கடன்படுவது ஏழு;
தீபாவளி கொண்டாட்டங்கள்
இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது?

மற்றும் இதுபோன்ற பல விஷயங்கள் செய்வதன் மூலம் பணம் செலவாகின்றது என்பதும், அதற்காகக் கடன்பட வேண்டியிருக்கிறது என்பதுமான விஷயங்களொரு புறமிருந்தாலும் – மற்றும் இவைகளுக்கெல்லாம் வேறு ஏதாவது தத்துவார்த்தமோ, ‘சயின்ஸ்’ பொருத்தமோ – சொல்லுவதானாலும் தீபாவளிப் பண்டிகை என்றால் என்ன? அது எதற்காகக் கொண்டாடப்படுகிறது? – என்கின்றதான விஷயங்களுக்குச் சிறிதுகூட எந்த விதத்திலும் சமாதானம் சொல்ல முடியாது என்றே சொல்லுவோம்.

ஏனெனில், அது எப்படிப் பார்த்தாலும் பார்ப்பனீயப் புராணக் கதையை அஸ்திவாரமாகக் கொண்டதாகத்தான் முடியுமே ஒழிய, மற்றடி எந்த விதத்திலும் உண்மைக்கோ, பகுத்தறிவுக்கோ, அனுபவத்துக்கோ சிறிதும் ஒத்ததாக இருக்க முடியவே முடியாது. பாகவதம், இராமாயணம், பாரதம் முதலிய புராண இதிகாசங்கள் பொய் என்பதாகச் சைவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. கந்த புராணம், பெரிய புராணம், திருவிளையாடற் புராணம் முதலியவைகள் பொய் என்று வைணவர்கள் எல்லாரும் ஒப்புக் கொண்டாய் விட்டது. இவ்விரு கூட்டத்திலும் பகுத்தறிவுள்ள மக்கள் பொதுவாக இவை எல்லாவற்றையும் பொய் என்று ஒப்புக்கொண்டாய்விட்டது. அப்படியிருக்க, ஏதோ புராணங்களில் இருக்கின்ற கதைகளைச் சேர்ந்த பதினாயிரகணக்கான சம்பவங்களில் ஒன்றாகிய, தீபாவளிப் பண்டிகைக்கு மாத்திரம் மக்கள் இந்த நாட்டில் இவ்வளவு பாராட்டுதலும் செலவு செய்தலும், கொண்டாடுதலும் செய்வதென்றால் அதை என்னவென்று சொல்லவேண்டும்?

தீபாவளிப் பண்டிகையின் தத்துவத்தில் வரும் பாத்திரங்கள் மூன்று. அதாவது நரகாசுரன், கிருஷ்ணன், அவனது இரண்டாவது பெண் சாதியாகிய சத்தியபாமை ஆகியவைகளாகும். எந்த மனிதனாவது கடுகளவு மூளை இருந்தாலும் இந்த மூன்று பேரும் உண்மையாய் இருந்தார்கள் என்றாவது, அல்லது இவர்கள் சம்பந்தமான தீபாவளி நடவடிக்கைகள் நடந்தவை என்றாவது, அவற்றிற்கும் – நமக்கும் ஏதாவது சம்பந்தம் உண்டு என்றாவது, அதற்காக நாம் இந்த மாதிரியான ஒரு பண்டிகை – தீபவாளி என்று கொண்டாடவேண்டுமென்றாவது ஒப்புக் கொள்ள முடியுமாவென்று கேட்கின்றோம்.

– பகுத்தறிவு, 1936

தீபாவளி கதை

தீபாவளி கதை பற்றி சுமார் 10 வருடங்களுக்கு மேலாக எழுதியும் பேசியும் வருகிறோம். ஆதலால் விரித்து எழுத வேண்டியதில்லை என்றாலும் குறிப்பு கொடுக்கின்றோம்.

இது தீபாவளி கதை. மிகவும் அதிசயமானதும், ஆபாசமானதும், இழிவும், ஈனத்தன்மையும் பொருந்தியதுமாகும்.

விஷ்ணு அவதாரம்மகாவிஷ்ணுக்கு வாயில் காப்பாளராக இருந்த இரு காவலர்கள் உத்தரவின்றி உள்ளேவிட மறுக்கப்பட்ட இரண்டு பிராமணர்கள் சாபத்தால் இரணியன், இரணியாட்சன் என்று இரண்டு ராட்சதர்களாகப் பிறந்து விஷ்ணுவால் கொல்லப்பட்டு சீக்கிரம் மோட்சமடைய வேண்டுமென்று ஏற்பட்டுவிட்டதற்கிணங்க மூத்தவன் தேவர்களுக்கு தொல்லை கொடுத்து வந்தான். இளையவன் பூமியை பாயாகச் சுருட்டி எடுத்துக் கொண்டு ஓடி சமுத்திரத்திற்குள் நுழைந்து கொண்டான். தேவர்கள் வேண்டுகோளால் மூத்தவனைக் கொல்ல மகாவிஷ்ணு நரசிம்ம (சிங்க) அவதாரமெடுத்து வந்து கொன்றுவிட்டார். இளையவனான இரண்யாட்சனைக் கொல்ல மகாவிஷ்ணு வராக (பன்றி) அவதாரமெடுத்து வந்து சமுத்திரத்திற்குள் பாய்ந்து இரண்யாட்சனைக் கொன்று பூமியைக் கொண்டுவந்து பழையபடி விரித்துவிட்டு போய்விட்டார்.

இதுவரை கதையில் அதிசயம் அதாவது பொய்யும் புளுகும் இருக்கலாமே தவிர, இதில் ஆபாசமில்லை. இனிமேல் நடப்பதுதான் ஆபாசம்.

என்னவென்றால் விஷ்ணு பல அவதாரம், பலரூபம் எடுத்து இருக்கிறார். அவற்றுள் பெரும்பாகம் ஆபாசமாகவே முடிகின்றன.

விஷ்ணு, அசுரர்களால் கடைந்து எடுக்கப்பட்ட அமிர்தத்தை வஞ்சித்து தேவர்களுக்குக் கொடுப்பதற்காக அசுரர்களை ஏமாற்ற மோகினி அவதாரமெடுத்தார். அந்தக் காரியம் தீர்ந்த உடன் சிவனுக்கு அந்த மோகினி அவதாரத்தின்மீது ஆசை வந்து அவர் பின் திரிந்து, மோகினி இணங்காமல் போய் இருவரும் பலாத்காரம் செய்து, சிவன் இந்திரியம் பூமியில் கொட்டப்பட அந்த இந்திரியம் பூமியில் வெள்ளி தங்கமாக வேர் இறங்கிவிட்டன. அதுதான் இன்று வெள்ளியும் தங்கமுமாம்.

மற்றொரு சமயம் சிவன் பத்மாசூரனுக்கு வரம் கொடுத்ததால் அவன் சிவன் தலையிலேயே கையை வைத்து சிவனைக் கொல்லவர சிவன் ஓடி ஒழிந்து விஷ்ணுவைக் கூப்பிட விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து தந்திரம் செய்து பத்மாசூரனை இறக்கும்படி செய்து விட்டுத் திரும்புகையில் சிவன் அவளைப் புணர்ந்தானாம். அப்போது அய்யனார் பிறந்தார்.

நரகாசுரன்
நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன்.

இப்படியுள்ள கதைகள் போலவே விஷ்ணு பன்றி அவதாரமெடுத்து இரண்யாட்சனைக் கொன்றுவிட்டுத் திரும்பும் காலையில், பன்றி தான் கொண்டு வந்த பூமியைத் தனக்கு என்ன வேண்டுமானாலும் செய்ய உரிமை இருக்கிறதென்று கருதி அந்தப் பூமியையே அந்த பன்றி புணர்ந்ததாம். பூமியும் அதற்கு சம்மதித்து இடம் கொடுத்ததாம். அப்போது பூமி கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்று விட்டதாம். அக்குழந்தைக்கு நரகாசூரன் என்று பெயர் இட்டார்களாம். ஏன் அப்பெயர் இட்டார்கள் என்றால் நரகலைச் சாப்பிடுகின்ற பன்றிக்கும், நரகலைச் சுமக்கின்ற பூமிக்கும் குழந்தை பிறந்ததால் நரகன் என்று பெயர் இடாமல் வேறு என்ன பெயர் இடுவார்கள்?

இப்படிப் பிறந்த இந்தக் குழந்தை வங்காளத்துக்கும், அஸ்ஸாமுக்கும் மத்தியில் உள்ள ஒரு பிரதேச அரசனாக இருந்து கொண்டு பிரம்மாவின் மனைவியின் காதணியையும் வருணனின் ஆயுதத்தையும் பிடுங்கிக் கொண்டு, இந்திரனின் சிம்மாசனத்தையும் தூக்கிவர எத்தனித்தானாம். அதோடு தேவர்களுக்கு தொல்லை கொடுத்தானாம்; உலகத்தையும் துன்புறுத்தினானாம். தேவர்களுக்காக கிருஷ்ண பகவான் வந்து இந்த அசுரனை வதம் செய்தாராம். அந்த நாளை கொண்டாடுவதுதான் தீபாவளியாகும். இது என்ன கதை? இதில் அறிவு மானம் இருக்கிறதா?

இரண்யாட்சன் பூமியை சுருட்டித் திருடிக் கொண்டு போகக் காரணம் என்ன?

பூமி தட்டையாய் இருந்தாலல்லவா சுருட்ட முடியும்? அதுதான் உருண்டை ஆயிற்றே? பூமியை உருட்டிக் கொண்டல்லவா போயிருக்க வேண்டும்?

அப்படியே சுருட்டினதாக வைத்துக் கொள்வதானாலும் சுருட்டினவன் எங்கே இருந்து கொண்டு பூமியை சுருட்டி இருப்பான்? ஒரு சமயம் ஆகாயத்தில் தொங்கிக் கொண்டு சுருட்டி இருந்தாலும் பூமியில் இருந்த மலை, சமுத்திரம், ஆறு, ஜீவப்பிராணி முதலிய சகலமும்தானே பாயாக சுருட்டப்பட்டு பாய்க்குள் சிக்கி இருக்க வேண்டும். அப்படி இருக்க அவன் பூமியை தூக்கிக் கொண்டு ஒளிய வேறு சமுத்திரமேது? வேறு சமுத்திரம் இருந்திருந்தால் அது எதன்மீது இருந்திருக்கும்?

அப்படியே வைத்துக் கொண்டாலும் இந்தப் பூமியை திருப்பிக் கொண்டுவர விஷ்ணு அவதாரமெடுப்பானேன்? அதுவும் பன்றி அவதாரமெதற்கு? அப்போது அது ஆகாரமான எதைத் தின்று இருக்கும்? எதையோ தின்று தொலைந்து போகட்டும்.

இந்தப் பன்றி பூமியைப் புணர ஆசைப்படுவானேன்! கொண்டு வந்ததற்குக் கூலியா? அப்படியேதான் இருக்கட்டும். இதற்கு இந்தப் பன்றியுடன் போகம் செய்ய பூமிதேவி இணங்கலாமா? இது என்ன கதை?

திராவிட மக்களை அசுரன், இராட்சதன், அரக்கன் என்று கூறி அவர்களை இழிவு செய்ய எழுதினதல்லாமல் வேறு என்ன இது? வங்காளத்தில் ஆரியர் வரும் முன்பு திராவிடர்கள்தானே ஆண்டு கொண்டிருந்திருக்க வேண்டும்? ஆரியர்கள், திராவிடர்களைக் கொல்வதானால் மானம், வெட்கம் பார்க்காமல் மிருகங்களுடன் புணர்ந்தானாலும் சரி, மலத்தைத் தின்னாலும் சரி, எப்படியான இழிவான அசிங்கமான காரியத்தைச் செய்தாவது கொல்லலாம் என்கின்ற தர்மத்தை ஆரியர்களுக்கு போதிக்க வந்த மனுநூல் போன்ற ஒரு கோட் தானே ஒழிய இப்புராணங்களுக்கு வேறு என்ன கருத்து சொல்ல முடியும்?

ஆகவே அப்பேர்ப்பட்ட கதையில் ஒன்றான நரகாசூரன் கதையை நம்பி நாம் பண்டிகை கொண்டாடலாமா? நாம் திராவிடரல்லவா? நம் கடவுள்கள் மலம் தின்பதையும், நம் பெண் கடவுள்கள் பன்றியுடன் புணர்ச்சி செய்வதையும் ஒப்புக் கொள்ள நம்மால் முடியுமா? ஒப்புக் கொள்ளலாமா? நமக்கு மானம், வெட்கம், புத்தி ஒன்றுமே கிடையாதா?

நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? நம் இன மக்கள் தீபாவளி கொண்டாடலாமா? கண்டிப்பாய் கொண்டாடாதீர்கள். கொண்டாடுவதானால் இந்தக் கதை கொண்ட புத்தகங்களை வாங்கி நடு வீதியில் வைத்து ஆண்கள் மிதியடியால் மிதி மிதியென்று மிதியுங்கள்; பெண்கள் முறத்தால் மொத்து மொத்து என்று மொத்துங்கள்.

– குடிஅரசு, 07.10.1944

தீ நாள்!

நரகாசுரன்
தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

ன்றைக்கோ ஒரு காலத்தில் ஒரு அசுரன் இருந்தானாம். அந்த அசுரன் ஒரு பன்றிக்கும் பூமிக்கும் பிறந்தவனாம். இந்த விசித்திரப் பிறவியான அசுரன் தேவர்களை – பூலோகப் பிராமணர்களை எல்லாம் கொடுமைப்படுத்தினானாம். இதனால் தன் பெண்சாதியின் சகாயத்தைக் கொண்டு மகாவிஷ்ணுவானவர் அந்த அசுரனைக் கொன்றொழித்தாராம்.

செத்துப் போனதைப் பூலோக மக்கள் எல்லாரும் கொண்டாடிக் களிப்படைய வேண்டுமென்று செத்துப்போன அந்த அசுரன் கேட்டுக் கொண்டானாம். அந்தப்படியே ஆகட்டும் என்று மகாவிஷ்ணு திருவாய் மலர்ந்தாராம். ஆகவேதான் தீபாவளிப் பண்டிகையை நாம் கொண்டாடுகிறோம்; கொண்டாட வேண்டும் என்று இன்றைக்கும் சொல்லப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகைக்கு ஆதாரமான இந்தக் கதையின் பொய்த் தன்மையையும், இதனால் இந்த நாட்டு மக்களுடைய மானம் – சுயமரியாதை எவ்வாறு அழிக்கப்பட்டு வருகின்றன என்பதையும், இந்த அர்த்தமற்ற பண்டிகையால் நாட்டுக்கு எவ்வளவு பொருளாதாரக்கேடும் சுகாதாரக்கேடும் உண்டாகிறது என்பதைப் பற்றியும் சுயமரியாதை இயக்கம் தோன்றிய நாளிலிருந்தே விளக்கப்பட்டு வருகிறது.

சுயமரியாதைக்காரர்கள் – திராவிடர் கழகத்தார்களுடைய இந்த விளக்கம், தவறானது என்றோ, நியாயமற்றதென்றோ, உண்மைக்கு அப்பாற்றட்டதென்றோ எப்படிப்பட்ட ஒரு பார்ப்பனன் கூட இன்றுவரை மறுத்தது கிடையாது. ஆனால் எல்லாப் பார்ப்பனர்களும் கொண்டாடத்தான் செய்கிறார்கள். பார்ப்பனர் அல்லாதவர்களிலும் பலர் கொண்டாடத்தான் செய்கிறார்கள். ஏன்?

பெரியார்பூமியைப் பாயைப்போல் சுருட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் ஒருவன் நுழைந்துகொள்ள முடியும் என்பதை எந்தப் பஞ்சாங்கப் புரோகிதன்கூட ஏற்றுக்கொள்ளமாட்டான். ஆனால் பஞ்சாங்க நம்பிக்கையுடையவன் மட்டுமல்ல, பஞ்சாங்கத்தையே பார்க்காத – நம்பாத பார்ப்பனரிலிருந்து பூகோளத்தைப் பற்றிப் போதனைசெய்யும் பேராசிரியர்கள் வரை கொண்டாடி வருகிறார்களே ஏன்?

மகாவிஷ்ணு (?) பன்றியாக வேஷம் போட்டுக் கொண்டுதான் கடலுக்குள் நுழைய முடியும்! சுருட்டியிருந்த பூமியை அணைத்து தூக்கிவரும் போதே மகாவிஷ்ணுக்கு காமவெறி தலைக்கேறி விடும்! அதன் பலனாக ஒரு குழந்தையும் தோன்றிவிடும்! அப்படிப் பிறந்த குழந்தை ஒரு கொடிய அசுரனாக விளங்கும்! என்கிற கதையை நம் இந்துஸ்தானத்தின் மூலவிக்கிரகமான ஆச்சாரியாரிலிருந்து ஒரு புளியோதரைப் பெருமாள் வரை யாருமே நம்பமாட்டார்கள் – நம்ப முடியாது.

ஆனால் இப்படி நம்பாத விஷ்ணு பக்தர்கள் முதல், விஷ்ணுவுக்கு எதிர் முகாமிலுள்ளவர்கள் வரை இந்த நாட்டில் கொண்டாடி வருகிறார்கள். ஏன்? சுயமரியாதை இயக்கத்தின் தீவிரப் பிரசாரத்தினால், இன்று திராவிட நாட்டிலுள்ள பல ஆயிரக்கணக்கான திராவிடத் தோழர்கள் இந்த மானமொழிப்புப் பண்டிகையைக் கொண்டாடுவதில்லை என்றாலும், படித்தவன் – பட்டதாரி – அரசியல் தந்திரி – மேடைச் சீர்திருத்தவாதி என்பவர்களிலேயே மிகப் பலபேர் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றார்கள் என்றால், இந்த அறிவுக்குப் பொருத்தமற்ற கதையை ஆதாரமாகக் கொள்கிறார்கள் என்றால் இவர்களுடைய அறிவுக்கும் அனுபவத்துக்கும் யார்தான் வயிற்றெரிச்சல்படாமல் இருக்கமுடியும்? ஆரியப் பார்ப்பனர்கள், தங்களுக்கு விரோதமான இந்நாட்டுப் பழங்குடி மக்களை – மக்களின் தலைவர்களை அசுரர்கள் – அரக்கர்கள் என்கிற சொற்களால் குறிப்பிட்டார்கள் என்பதையும், அப்படிப்பட்ட தலைவர்களுடைய பிறப்புகளை மிக மிக ஆபாசமாக இருக்கவேண்டும் என்கிற ஒன்றையே கருத்தில் கொண்டு புழுத்துப்போன போக்கினின்றெல்லாம் எழுதிவைத்தார்கள் என்பதையும், இந்த நாட்டுச் சரித்திரத்தை எழுதிவந்த பேராசிரியர்களில் பெரும்பாலோரால் நல்ல முறையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இருந்தும் அந்த உண்மைகள் எல்லாம் மறைக்கப்பட்டுப்போக, இந்த நாட்டு அரசாங்கமும் – அதன் பாதுகாவலரான தேசியப் பார்ப்பனர்களும் இன்றைக்கும் கங்கணம் கட்டிக்கொண்டு வேலை செய்கிறார்கள் என்றால் அதை எப்படித் தவறு என்று சொல்லிவிட முடியும்? திராவிடப் பேரரசன் (வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் என்ற நகரில் இருந்து ஆண்டவன்) ஒருவனை, ஆரியர் தலைவனான ஒருவன், வஞ்சனையால், ஒரு பெண்ணின் துணையைக் கொண்டு கொன்றொழித்த கதைதான் தீபாவளி.

இதை மறைக்கவோ மறுக்கவோ எவரும் முன்வர முடியாது. திராவிட முன்னோர்களில் ஒருவன், ஆரியப் பகைவனால் அழிக்கப்பட்டதை, அதுவும் விடியற்காலை 4 மணி அளவுக்கு நடந்த போரில் (!) கொல்லப்பட்டதை அவன் வம்சத்தில் தோன்றிய மற்றவர்கள் கொண்டாடுவதா? அதற்காக துக்கப்படுவதா?

திராவிடர் இன உணர்ச்சியைத் தொலைக்க, ஆரிய முன்னோர்கள் கட்டிய கதையை நம்பிக்கொண்டு, இன்றைக்கும் நம்மைத் தேவடியாள் பிள்ளைகள் எனக் கருதும் பார்ப்பனர்கள் கொண்டாடுவதிலாவது ஏதேனும் அர்த்தமிருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், மானமுள்ள திராவிடன் எவனாவது இந்த பண்டிகையைக் கொண்டாடலாமா? என்று கேட்கிறோம்.

தோழர்களே! தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். இந்தத் தீயநாளில் நீங்கள் செய்ய வேண்டிய வேலை என்ன? தன் தலையில் தானே மண்ணையள்ளிப் போட்டுக் கொள்வதா? யோசியுங்கள்!

– குடிஅரசு – தலையங்கம் – 15.10.1949

  1. One person spending is another persons earnings! People have to spend more and that will create job opportunities for many… This is the basic for cash flow in modern economy engine.

    North Indians celebrate Diwali for “Home coming of Rama”. There itself Hinduism is not agreeing on reason. It allows to people have their own stories to celebrate, No one single view is enforced on others..

    Happy Deepavali to All.

    • அப்போ ‘ராவண லீலா’ கொண்டாட எங்களுக்கு அனுமதியுண்டா அய்யனே!

  2. .. இல்லாதவன் பாதி என்றால் இருக்கிறவன் முழுசா என்பது மாதிரி…படிக்காதவன் பாதியும்..படித்தவன் முழுமையாகவும் கொண்டாடுகிறான்.

  3. தந்தை பெரியார் அவர்கள் தமக்கே உரிய நையாண்டி நடையில் பார்ப்பன இந்துமத மோசடிகளை தோலுரித்து தொங்கப் போடுவது அழகோ அழகு!

  4. // நம் தலைவனைக் கொன்றதை நாம் கொண்டாடும் அவ்வளவு மானம் ஈனம் அற்றவர்களா நாம்? நாம் வீர திராவிடரல்லவா? //

    புராணத்தில் வரும் அரக்கர்களையெல்லாம் வீர திராவிடர்களின் தலைகள் ஆக்கி தமிழ் பேசும் ’திராவிடர்களை’ ஏமாற்றுவதுதான் பகுத்தறிவாக்கும்.. ராமாயண காலத்திலேயே வங்காளத்தைச் சேர்ந்த பிராக ஜோதிஷம் போன்ற நகரமெல்லாம் ஆரியவர்த்தமாகிவிட்டது.. பின்னால் வந்த கிருஷ்ணர் காலத்தில் பிராகஜோதிஷம் மட்டும் திராவிடமாகிவிட்டதா..?!

  5. // தீபாவளி திராவிடனின் மானத்தைச் சூறையாடத் திராவிடனின் அறிவை அழிக்கத் திட்டமிடப்பட்ட தீ நாள்! இந்தத் தீ நாள் திராவிடனின் நல்வாழ்வுக்குத் தீ நாள். //

    நரகாஸ் தீபாவளியை தமிழ் நாட்டுக்கு கொண்டுவந்ததே திராவிடன்ஸ்தானாமே நைனா..ஹிஹீ.. கங்காஸ்நானம் பண்ண நாழியாயிடுத்து, நான் போறேன்.. எல்லாரும் தீப ஒளியை பகுத்தறிவிலெ நன்னா ஏத்திண்டு, பலகாரம் சாப்பிட்டுட்டு பேஷா கொண்டாடுங்கோ..

  6. தீபாவளிப் பத்தி ஆளாளுக்கு கப்சா அடிக்கறாங்க. தீபம்+ஒளி ன்னு சொல்றாங்க. தீபம்+ஆவளி ன்னும் சொல்றாங்க. வடக்க இருக்க பாப்பாங்க ஒரு புருடாவ அடிச்சு உடுறாங்க. இந்த கேப்புல இந்த முதலாளிப் பயலுவ பாப்பானே அசந்து போற மேரி புச்சு புச்சா அட்ச்சு உடுராணுவ. எனக்கு என்னமோ இனிமே அந்த பாப்பா பயலுவளும் அவங்க அல்லகைகளும் தீபாவளி வேண்டான்ன கூட இந்த முதலாளி பயலுவ உடமாட்டணுவ போல.
    பார்ப்பனியமும் முதலாளித்துவமும் சேர்ந்து நல்ல இயங்கராங்கப்பா.
    எண்ணப் பொறுத்த வரைக்கும் தீபாவளி = பார்ப்பனியம்+ப்ப்ப்பிசினேஷ்ஷ்ஷ்ஷ்ஷுஷுஷு அம்புட்டுதேன் ஆமா.

  7. எல்லா மதங்களிலும் புராண கதைகள் உண்டு. பெரும்பாலும் அந்த காலகட்டங்களில் நடந்த சம்பவங்களை ஒட்டி கற்பனையை திரட்டி உருவான கதைகள் எல்லா மதங்களிலும் உள்ளன.

    அந்த கதைகளை நம்புவதும் நம்பாததும் நம்மிடம் உள்ளது.

    நல்லதோ, கெட்டதோ, தீபாவளி என்பது நமது மக்களிடம் ஆழ வேரூன்றி விட்டது.
    சிறு குழந்தைகள் பட்டாசுகளை வெடித்து, கொளுத்தி மகிழ்கின்றனர்.
    யாரும் தீபாவளியை இக்காலத்தில் நரகாசுரனுக்காகவோ அல்லது கிருஷ்ணனுக்காகவோ கொண்டாடுவதில்லை. குழந்தைகளை மகிழ்ச்சி படுத்த, அவர்களுக்கு புத்தாடை அணிவித்து அழகு பார்க்க, உறவினருடன் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்ள, இனிப்புகளை அக்கம் பக்கத்தினருடன் பகிர்ந்து உண்ண, தொலைக்காட்சியில் ஓய்வாக நிகழ்ச்சிகளை கண்டு கழிக்கவே தீபாவளியை கொண்டாடுகின்றனர்.

    மேற்கூறிய காரணங்கள் ஏறத்தாழ அனைத்து மத பண்டிகைகளுக்கும் பொருந்தும்.

    மேற்கூறிய காரணங்களுக்காக பண்டிகைகளை கொண்டாடுவதில் தவறில்லை. பண்டிகை காலங்களை நம்பி பல சிறு வியாபாரிகள், உழைப்பாளிகள் இருக்கின்றனர். ஊரில் ஒரு திருவிழா நடந்தால் அதில் பந்தல்காரன் முதல் ஆடல் பாடல் செய்து மகிழ்விப்போர், ஒளி மின்விளக்கு செய்பவர், பட்டாசு விற்பவர், இனிப்பு விற்பவர், விளையாட்டு பொருள் விற்பவர் என்பது போன்ற பலருக்கு அதில் இலாபம் உண்டு. மக்களும் வாழ்க்கையின் கெடுபிடியை மறந்து ஒரு நாள் கேளிக்கையில் மகிழ்கின்றனர்.

    அதனால் பண்டிகைகளை கொண்டாடுவதில் தவறில்லை என்கிறேன்.

    அதே சமயம், விரலுக்கு ஏற்ற வீக்கம் வேண்டும். வருமானத்தை மீறிய செலவும் தவறு, கடன் வாங்கி செய்யும் செலவும் தவறு. நம் அக்கம் பக்கம் இருப்பவர்கள் வருமானத்துக்கு தடுமாறும் நேரத்தில் டாம்பீகமாக படோபடமாக செலவு செய்வது தவறு.

    தீபாவளியை கொண்டாடும்போது அக்கம் பக்கம் உள்ள ஏழை குழந்தைகளுக்கும் சேர்த்து துணிமணி வாங்கி கொடுத்து, அவர்கள் கையிலும் சில பட்டாசுகளை கொடுத்து, அவர்களுக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடுங்கள். அந்த எளிய குழந்தைகளின் கண்ணில் அப்போது தெரியும் மகிழ்ச்சியில் நரகாசுரனும் கிருஷ்ணனும் தெரிய மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை இல்லாவிடினும், மக்களின் மகிழ்ச்சியில் பங்கு கொள்வதை நான் விரும்புகிறேன்.

    இன்னொரு முக்கிய விடயம் தீபாவளி காலங்களில் அதிகம் அவதிப்படுவது வாயில்லா ஜீவன்களான நாய் பூனை பறவைகள் தான். அதனால் முடிந்தவரை அதிகம் சத்தமிடும் பட்டாசுகளை தவிர்ப்பது நலம்.

    காசை விரயம் செய்யும் விலை உயர்ந்த பட்டாசுகளை வெடிப்பதை தவிர்ப்பதும் நல்லது.

    • க.கை அவர்களுக்கு,

      தீபாவளிகுறித்து தாங்கள் எழுதிய பின்னூட்டத்தின் மீதான சில பார்வைகள்.

      நல்லதோ கெட்டதோ தீபாவளி நம்மிடம் ஆழ வேரூன்றி விட்டது என்கிறீர்கள். ஆனால் அது உண்மையல்ல. பெரும்பாலான கிராமங்கள், விவசாய குடும்பங்கள் தீபாவளி கொண்டாடுவதில்லை. கலாச்சாரம் என்ற காரணத்தைவிட கடன்பட்டு சாகமுடியாது என்பதுதான் பிரதான காரணம். மேலூர் எருமைப்பட்டி, மாம்பட்டி போன்று பதினெட்டு பட்டி கிராமங்கள் தலைமுறைகளாக தீபாவளி கொண்டாடுவதில்லை. அங்கே இரண்டு பண்டிகைகள் மட்டுமே சிறப்பாக கொண்டாடப்படும். ஒன்று குதிரை எடுப்பு; சிறு தெய்வ வழிபாட்டு விழா; மற்றொன்று பொங்கல். தீபாவளி நம்மைப்போன்ற நகர்புறத்து நடுத்தர வர்க்கத்திற்கு பண்டிகையாக இருக்கிறது.

      பெரும்பாலான ஊர்களில் வருடந்தோறும் நடைபெறும் திருவிழாக்கள் இப்பொழுது நடைபெறுவதில்லை. பல ஊர்களில் உள்ள மக்கள் ஓட்டாண்டிகளாக நடோடிகளாக பிழைப்பு தேடி தாய் ஒரு பக்கம் மகன் ஒரு பக்கம் என்று பிரிந்து வாழ்கிறார்கள். நம் வாழ்வோடு பிணைந்துள்ள ஊர்த்திருவிழாக்களே காணாமல் போய்விட்ட பிறகு வேரும் கிளையும் இல்லாத தீபாவளி மட்டும் வருடந்தோறும் உயிர்பிக்கப்படுகிறது என்றால் தீபாவளியின் நோக்கம் என்ன? அல்லது தீபாவளி யாருக்காக?

      இரண்டாவது தீபாவளியை யாரும் காரணம் தெரிந்துகொண்டு கொண்டாடுவதில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இந்த வாதத்தின் ஒரு பகுதியை ஏற்றாலும் இந்துபாசிசம் தீபாவளியை இன்னகாரணத்திற்காகத்தான் கொண்டாட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்திவந்திருக்கின்றன. தீபாவளி, இந்துக்கள் பண்டிகை என்று சொல்லப்பட்டாலும் ஒவ்வொரு சாதியும் ஒவ்வொரு முறையில் கொண்டாடுகின்றன. பெரும்பாலும் ஆதிக்கசாதிகளே எண்ணெய் தேய்த்து குளிப்பர். இது ஒரு புறம் இருக்க பெரும்பாலான வீடுகளில் கறி எடுத்து உண்பர். குடல் குழம்பும் இட்லியும் மகிழ்ச்சியானவை என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்! ஆனால் இதை யாரும் பிரதிநிதிப்படுத்துவதில்லை. டிவி நிகழ்ச்சிகளிலேயே முதல் நிகழ்ச்சி மங்கள இசை. இரண்டாவது துஷ்டன் காஞ்சியின் தீபாவளி உரை. இப்படித்தான் தீபாவளியை மக்கள் எதிர்கொள்கிறார்களா என்ன?

      நீங்கள் தூர்தர்ஷன் செய்தியை கவனித்தீர்களேயானால் மக்கள் கோயில்களில் சென்று வழிபாடு நடத்தினர் என்று வலியுறுத்தி மயிலாப்பூர் கோயிலை தீபாவளியன்று காட்டுவார்கள். ஆனால் உண்மையில் யாரு கோயிலுக்கு போவார்கள்? எங்கள் தெருவில் தீபாவளிக்கு முந்தைய நாளிலிருந்து கறி உரிக்கும் இடத்தில் தான் அத்துனைபேரும் இருப்பார்கள். கறிவாங்குவது, வீட்டுப்பெண்கள் கொய்யாப்பூ கொளுத்துவது, என்று விசயங்கள் அனைத்தும் கறியைச் சுற்றியே வரும். கறிக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவர்கள் மட்டுமே கோயில் குலம் என்று சுற்றுவார்கள். அவர்களின் பார்வையில் தான் தீபாவளி முன்னெடுத்துச் செல்லப்படுகிறதேயன்றி நம்பார்வையில் அல்ல.

      மூன்றாவதாக அனைத்து சாதிகளிலும் யாராவது இறந்துவிட்டால் கருமாதி நிகழ்வாக எண்ணெய் தேய்த்து குளித்து மாமன் மஞ்சான்களுக்கு லேஞ்சி கட்டி (புதுத்துணி கட்டுவர்) கறி சோறு உண்பர். நரகாசுரன் இறந்துவிட்ட கருமாதி நிகழ்வுதான் தீபாவளியிலும் கடைப்பிடிக்கப்படுகிறது. ஆகையால் தீபாவளியை மற்ற மத பண்டிகைகளைப்போல ஒப்பிட முடியாது. தீபாவளி ஒரு பண்டிகையாக இருக்கும் பட்சத்தில் ரம்ஜானுடனோ கிறிஸ்துமசுடனோ ஒப்பிடலாம். ஆனால் உலகின் எந்த சமூகமும் ஒருவன் இறந்ததை விழாவாக கொண்டாடுவதில்லை. இறந்தவன் எதிரியாக இருந்தாலும் அதைக்கொண்டாடுவது நாகரிக சமுதாயம் என்றில்லை காட்டுமிராண்டி சமூகத்தின் பண்பாடு கூட அல்ல. பார்ப்பனியம் மட்டுமே இதுபோன்று கொடுரமான முறையிலும் கெட்ட எண்ணத்தோடும் இருக்க இயலும். இருக்கிறது.

      கிருஷ்ண செயந்தியை கிறிஸ்துமஸோடு ஒப்பிடவும் முடியாது. தமிழ்நாட்டில் ஆதிக்க சாதிகளைத் தவிர கிருஷ்ண செயந்தியை யாருக்கும் தெரியாது. பார்ப்பனர்கள் தான் “கண்ணன் தீராத விளையாட்டு பிள்ளை” என்றும் “நான் ஒரு விளையாட்டு பொம்மையா?” என்றும் பல கீர்த்தனைகளை தொடையை தட்டிக்கொண்டு இஷைப்பார்கள்!

      நான்காவதாக பண்டிகையே இல்லாவிட்டால் சமூகம் இருக்க இயலுமா? என்ற ஒரு கேள்வி வரும். ஆம். இது உண்மை தான். பண்டிகைகள் மனிதர்களின் விழுமியங்களைப் பறைசாற்றுகின்றன. மக்கள் திரளிற்கு பண்டிகைகள் அவசியம். காஞ்சா அய்லைய்யா போன்றவர்கள் அரக்கர்களின் விழுமியங்களை முன்னிறுத்தி விழாக்களை எடுத்திருக்கிறார்கள். பாரதிதாசன், நம் தமிழர் பெருமான் இராவணன்காண் என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறார். மக்கள் திரள் இதைக்கண்டுகொள்கிற பொழுது அதனால் உருவாக்கப்படுகிற போராட்டகுணத்திற்கும் வாழ்வியல் விழுமியங்களுக்கும் தான் மட்டற்ற உவகையும் தன்மானமும் இருக்க முடியும். ஏற்கனவே பண்டிகை கொண்டாடுகிற மக்கள் பார்ப்பனியத்தால் ஒருபுறம் நசுக்கப்பட்டும் வறுமையால் இறுக்கிப்பிழியப்பட்டும் இருக்கிற பொழுது நாம் தீபாவளியை வெறும் கருத்து தளத்தில் மட்டும் எதிர்த்துவிடவில்லை. இழந்த கலாச்சாரத்தை மீட்டெடுப்பதும் நமது நோக்கம். மக்கள் இதுபோன்ற முயற்சிகளை ஏற்றுக்கொள்வது மட்டுமல்ல இறுகப்பற்றவும் செய்வார்கள். எங்க சாலமன் பாப்பையா பட்டிமன்றத்திற்கு பதிலாக மகஇக வின் கலை நிகழ்ச்சிகளை ஆளும் வர்க்கம் அனுமதிக்கட்டுமே! மக்கள் யார் பக்கம் என்று பார்த்துவிடுவோம்.

    • திருவிழா என்பது வெறும் நுகர்வு சார்ந்தது அல்ல அது இம்மக்களின் பண்பாடு,கலாசார வரலாறு சம்மந்தப்பட்டது. பண்டிகைகள்,திருவிழாக்கள் கொண்டாடுவது மனித சமுதாயத்தின் நாகரிக வெளிப்பாடு அதை நாம் தடை செய்யவோ,மறுக்கவோ இல்லை மாறாக நாம் அதை வரவேற்கிறோம்.

      ஆனால் ஒரு மனிதன் அழிக்கப்பட்டதை ஒரு பண்டிகையாக கொண்டாடுவதை எப்படி ஒரு நாகரீகம் அடைந்த மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ள முடியும். நாட்டார் சிறுதெய்வ வழிபாடுகள் இம்மண்ணில் வாழ்ந்த பெருமக்களுடைய கதை. அம்மக்களுக்காக வாழ்ந்து மடிந்த அம்மந்தர்களின் கதை திருவிழாக்களாக இங்கே கொண்டாடப்படுகிறது. அப்புறம் உழவர் பெருமக்களின் தனிப் பெரும் திருவிழாவான பொங்கல் அம்மக்களின் வாழ்வோடு பின்னிப் பிணைந்தது. இது போன்ற விழாக்களே இம்மக்களின் உயிரோடும் ஊனோடும் கலந்தது. இது போன்ற மக்கள் வாழ்க்கையோடு கலந்த பெருவிழாக்களை அழித்தொழித்து இம்மக்களுக்கு கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாத தீபாவளி,விநாயகர் சதூர்த்தி , கிருஷ்ண ஜெயந்தி போன்ற அறிவிற்கு ஒப்பாத வழக்கங்களை எப்படி நாம் ஏற்றுக் கொள்ள முடியும்.

      அதுமட்டுமல்லாமல் இங்கே தீபாவளி கொண்டாடுவது என்பது மக்களின் நுகர்வோடு கலந்து உள்ளது. நுகர்விற்கு பலியாகி இருப்பது நகர்புறத்தில் வாழும் நடுத்தர/மேட்டுக்குடி மக்கள் தாம். இவர்கள் தான் இந்தியா என்று ஏற்க்கனவே ஊடகங்கள் உருவாக்கி இருக்கின்றன. இது இந்திய முழுமைக்கும் கொண்டாடப்படுகிறது என்பதை ஒரு வியாபாரம் சார்ந்து தான் ஊடகங்களில் காண்பிக்கிறார்கள். வியாபாரம் இல்லையெனில் தீபாவளிக்கு என்றோ சங்கு ஊதி இருப்பார்கள்.

      அதனால் தான் ஒரு அறிவிற்கு துளியும் பொருத்தமற்ற மற்றும் வெறும் நுகர்வு ரீதியிலான இது போன்ற கழிசடை கலாச்சாரங்களை ஒதுக்க வேண்டும் என்று அன்றே பெரியார் கூறினார். அது இன்றைக்கும் சரியாய் இருக்கிறது.

  8. போனஸை நிறுத்தினாலே தீபாவளி கொண்டாட்டம் பாதி குறைந்து விடும். நானறிந்த வரையில் சென்னையில் ஏழை, மத்தியதர வர்க்க மக்களிடம் ஒரு பழக்கம் தொற்றியிருக்கிறது. மாதா மாதம் 500 அல்லது 600 வரை ஒரு வருடம் ஒரு சிறு நிறுவனத்திடம் சேமித்தால், அந்த நிறுவனத்திடமிருந்து இனிப்புகள், பட்டாசு மற்றும் சேமிப்புத் தொகை ஆகியவை இறுதியில் கிடைக்கிறது. இது ஏழைக்கேற்ற எள்ளுருண்டையாக தீபாவளியன்று வெளிப்படுகிறது.

  9. //திருவிழா என்பது வெறும் நுகர்வு சார்ந்தது அல்ல அது இம்மக்களின் பண்பாடு,கலாசார வரலாறு சம்மந்தப்பட்டது. பண்டிகைகள்,திருவிழாக்கள் கொண்டாடுவது மனித சமுதாயத்தின் நாகரிக வெளிப்பாடு அதை நாம் தடை செய்யவோ,மறுக்கவோ இல்லை மாறாக நாம் அதை வரவேற்கிறோம்.//

    இந்த பண்பாடு,கலாசார வரலாறு , கத்தரிகாய், புடலங்காய் கூட்டு வகைகள் எல்லாம், உழைப்பை திருடியவன் (ஆண்ட?) , அடிமையை என்றென்றும் அடிமையாய் வைத்திருக்க பார்பனீயம் செய்த சதியே! வியாபாரிக்கும் லாபம், தண்டல் பேர்வழிக்கும் லாபம்!

    ஆண்டைகளின் காலில் விழுந்து அரையணா காசும், எண்ணையும் வாங்கியது அந்தகாலம்! இப்போது ‘கருணை தொகைக்காக’ கொடி பிடித்து போராடுவது இந்தகாலம்!

    பிரிக்கப்படாத ஈவுத்தொகையான (உழைப்புக்கான லாப பங்கீடு) போனஸ், அண்ணன் எம் ஜி யாரால் கருணை தொகையாக, பிச்சையாக மாற்றப்பட்டது! இந்த அரசு பிச்சையிட்டாலும், திருப்தி அடையாத போலிசு, கஸ்டம்ஸ், ஆடிட் அதிகாரிகள் ‘நன் கொடை’ என்ற அதிகார பிச்சையும் கேட்டு பெறுவர்!

    இப்படி உழைத்தவனின் காசு பிச்சையாக வந்து, பத்தாதற்கு பண்டிகைகடனாகவும், கந்துவட்டினாகவும் பல்கி பெருகி மீண்டும் அவாளையே சேரும்! செக்கு மாடுகள் எப்படி முன்னேற முடியும்!

    • // உழைப்பை திருடியவன் (ஆண்ட?) , அடிமையை என்றென்றும் அடிமையாய் வைத்திருக்க பார்பனீயம் செய்த சதியே //
      ஆரம்பிச்சுட்டாரு கோடு போட. எனக்கும் சேத்து போடுமையா.

      // இப்படி உழைத்தவனின் காசு பிச்சையாக வந்து, பத்தாதற்கு பண்டிகைகடனாகவும், கந்துவட்டினாகவும் பல்கி பெருகி மீண்டும் அவாளையே சேரும் //
      அடேங்கப்பா correctஆ கண்டுபிடிச்சுட்டீகளே. உமக்கு உலக detective பட்டம் குடுக்கலாம்யா.

  10. நண்பரே,

    திருவிழாக்கள் தேவையில்லை என்று கூறுகிறீர்களா? பெரியார் எதற்கு பொங்கலை கொண்டாடச் சொன்னார். இன்று பார்ப்பனீயம் இம்மண்ணின் சொந்த மக்களின் வழிபாடுகளையும் பண்பாட்டுக் கலாசாரத்தையும் உட்செரித்து அழிக்க முனைகிறது. களவாடியத் தமிழிசையை கருநாடக இசை என்று கூறுகிறார்கள் அதற்காக தமிழிசையே இல்லை என்று நாம் மறுப்பதா. திருவிழாக்கள் என்பது வர்க்கம் தோன்றுவதற்கு முன்பிருந்தே இருந்து வருகிறது. அதை வர்க்கத்துடன் சேர்த்து குழப்பிக் கொள்ளத் தேவையில்லை.

    இன்றும் வர்க்கமற்ற பழங்குடி/காட்டுவாசி மக்கள் அவர்கள் மண் சார்ந்த விழாக்களைக் கொண்டாடுகிறார்கள் பண்பாடுகிறார்கள். அவர்களிடம் என்ன வர்க்கமா இருக்கிறது. தண்டகாரண்யா பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் மலையையே கடவுளாக வணங்குகிறார்கள். அதை விழாவாக கொண்டாடுகிறார்கள். அதை நாம் எதிர்க்க முடியுமா. பார்ப்பனீயம் என்று அதை சாடத் தான் முடியுமா. சமூகமாக வாழும் போது மட்டுமே இது போன்று திருவிழாக்கள் சாத்தியம்.வெறும் பார்ப்பன எதிர்ப்பு என்று மட்டும் சுருக்கி விடாதீர்கள் நண்பரே.

    நன்றி.

  11. I am not bramin – Periyar was mad man.. Dont listen to him – That guy would never say anything against islam or christianity. Not all hindus are bramins. I am happy all these guys in very minority. I am ok with athesim as long as all religions are treated equally. _________________________________

    • உங்களுக்கு தெரியாதா இந்துக்கள் இளிச்சவாயர்கள்.. எவ்வளவு மொத்தினாலும் பெரிய அளவில் போராட்டம் இருக்காது.. மற்ற மதங்கள் அப்படியா.. ஒரு குரூப்ப கூட ஏத்துக்கலாம் ஒரு குரூப் பத்வா போட்டு கொன்னுடும்.

      உழைக்கும் வர்க்கமும் தீபாவளியை கொண்டாடுவது வினாவுக்கு தெரியாதது போலும்.. அவருக்கு தெரிந்தது எல்லாம் பார்ப்பனீய திருவிழா விழா -அதில் இந்து பார்ப்பனீயம் கலந்திருப்பதால் எப்போதும் போல ஒரு பதிவு..

      ஏன் முடிஞ்சா இதுபோல ஒரு கட்டுரை கிறிஸ்துமஸ் / குட் பிறைடே / ரமதான் / ஹஜ்க்கு எழுதட்டுமே..

  12. Periyar is a staunch supporter of British Imperialism and continuation of colonial Rule. He shared the same dais with Justice party Nobles who were rich Jamindars and Merchants. Revolutionaries like Bhagath singh never bothered about such festivities and never talked about any race or creed. It is a great dishonor to Revolutionaries like him when our Vinavu comrades celebrate an colonial colaborator

  13. உலகிலேயே சுயமரியாதை அற்ற ஒரே இனம் அது திராவிட இனம் தான். பிறப்பு முதல் இறப்பு வரை ஆரிய அடிமையாகவே இருந்து மரிக்கிறான். தன்னை மேல்தட்டு இனத்தார் தாழ்த்தப்பட்டவனாக நடத்தும் பொழுது அதை சொரணை கெட்டவானாக அங்கீகரித்து தன்னை காட்டிலும் தாழப்பட்டவர்களாக நடத்த இன்னொரு ஜாதிகாரர்கள் இருப்பதை நினைத்து ஆறுதல் அடைகிறான். அவர்களிடம் தன ஜாதி பெருமை கொள்கிறான்.பறையர் பள்ளரைவிட உயர்ந்தவன் என்று பெருமைப்படுகிறான். இப்படித்தான் ஒவ்வொரு ஜாதிக்காரர்களும் நடந்துக்கொள்கிறார்கள். இந்த சாக்கடைக்குள் இருந்துக்கொண்டே இந்த இழிநிலை க்காக சிலர் போராடுவதுதான் வருத்தமான விஷயம். இவர்கள் இன மக்களுக்காக போராடுகிறார்களா அல்லது அதன் தலைவர்கள் அரசியல் லாபமடைய போராடுகிறார்களா ? அல்லது இட ஒதுக்கீடு என்ற பொருளாதார லாபத்திற்காக இந்த இன இழிவை சகித்துக்கொள்கிரார்களா ?
    இந்த இழி நிலை ஒரு நொடியில் தீர இவர்கள் நாத்திகத்தையோ, அல்லது இஸ்லாத்தையோ அல்லது புத்த மதத்தையோ, ஜைன மதத்தையோ (இதில் கிருத்துவத்தை சேர்க்க முடியாது அவர்கள் இந்த சாதிய இழி நிலையை அங்கீகரிக்கிறார்கள்) நோக்கி அல்லவா ஓடியிருக்க வேண்டும். பெரியார் என்ற சுயமரியாதை தலைவன் உழைத்தும் இந்த நிலை மாறாமல் அப்படியே இருக்கிறது என்றால் சுயமரியாதை அற்ற இனம் என்ற முடிவுக்குத்தான் நாம் வரமுடிகிறது.

  14. Periyar should have passed his observations on Bakri-Id which is based on belief That Nabi Ibrahim was instructed by god to sacrifice his son Ishmael.Periyar was very careful not to touch the topic. He declared that he was no more a Hindu. Hence Being a non religious Man should have written articles on Ramzan,Christmas. His pro colonialism and Pro British imperialism coincides with Winston Churchill’s views

  15. கல்வி நிறுவனங்களில் ஆழமாக வேரூன்றி உள்ள பார்ப்பனியத்தைக் களையெடுக்க ’அசுரர் வாரம்’ போன்ற விழாக்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு அதன் வழியாக ஒரு வீரியமான எதிர்கதையாடல் மரபினை உருவாக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.

    பார்ப்பனிய பண்பாட்டு ஒடுக்குமுறைய எதிர்கொள்வோம்! முறியடிப்போம்!

    அசுரர்குல வீரர்களுக்கு வீர வணக்கம்!

    அசுரர் கலாச்சாரம் ஓங்குக!

    திராவிடக் கலாச்சாரம் ஓங்குக! ஆரியக் கலாச்சாரம் ஒடுங்குக!

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க