privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புவாழ்க்கைஅனுபவம்இவர்களுக்கு இல்லை தீபாவளி - படங்கள்

இவர்களுக்கு இல்லை தீபாவளி – படங்கள்

-

 

ஆட்டோ தொழிலாளி 1
டி. கஜேந்திரன் (வயது 54) – ஆட்டோ ஓட்டுநர் – பெரம்பூர்:
“எனக்கு ரெண்டு பொண்ணுங்க சார். யாருக்கும் டிரஸ் எடுக்கல. ஐநூறு ரூபாக்கு கூட ஓட மாட்டேங்குது. வண்டிக்கு வாடக கொடுப்பேனா, வீட்டுக்கு வாடக கொடுப்பேனா. இதுல எங்க போறது தீபாவளிக்கு?
பெட்ரோல் பங்க் ஊழியர்
தமிழ்மணி, பெட்ரோல் பங்க் ஊழியர்: “4 பேர் கொண்ட்டாட்டம் போடனும்னா, குறைஞ்சது 400 பேர் உழைக்கனும்! ‘லைப் இஸ் பியூட்டிப்ஃபுல் பட், கன்ட்டீஷன் அப்ளை சார்!’”
அரசு போக்குவரத்து ஊழியர்கள்
வந்தவாசி அரசுப் பேருந்து ஓட்டுநர் அதியமான் மற்றும் நடத்துநர் முருகன்: “தீபாவளிய உங்க கூட கொண்டாடிக்கிட்டிருக்ம்ல.. தெரியல. தொழில்தான் சார் நமக்கு முக்கியம். வருசத்துக்கு ஒரு வாட்டி வர மாட்டியானு என்னோட அப்பா அம்மா கேட்கிறாங்க. ரெண்டு நாள் கூட லீவ் இல்லாமா ஓட்டுறேன். கண்ணப் பாருங்க தண்ணியடிச்சவன் கண்ணு மாரி இருக்கும். (கண்கள் நன்றாக சிவந்து தூக்க கலக்கத்துடன் இருக்கிறது).
டீ மாஸ்டர்
கேரளாவைச் சேர்ந்த டீ மாஸ்டர் சந்திரன், வயது 50, கோயம்பேடு அருகில்: “கேரளாவில் தீபாவளி கிடையாது. தீபாவளியே மார்வாடிங்க கொண்டாட்டம் தான். அதப் பாத்து இங்கே ஈ அடிக்கிறாங்க.”
ஏடி.எம் பாதுகாவலர்
குமாரசாமி, வயது 70, பரோடா வங்கி பாதுகாவலர், சகோதரி வீட்டில் வசிக்கிறார். 12 மணி நேர ஷிப்ட்டிற்கு ஐந்தாயிரம் சம்பளம்:
“வருமானம் ஜாஸ்தியா இருந்தா தீபாவளி. கம்மியா இருந்தா கெடையாது”
பூக்காரம்மா
பேருந்துக்கு காத்திருக்கும் பூ கட்டி விற்கும் பெண்கள், மொழுகம்மாள் (50 வயது), லட்சுமி (62 வயது):
இன்னாது தீபாவளியா,அதான் பாக்குறீயே ? இதக் கட்டி வித்தா தான் பொழப்பு, இதுல எங்கேர்ந்து தீபாவளி! அஞ்சு பசங்க இருக்காங்க. கலியாணம் கட்டிகிணு தொரத்தி வுட்டுட்டாங்க.
முடித்திருத்தும் தொழிலாளி
விஜயகுமார்,வயது 34, சலூன் கடை தொழிலாளி, சொந்த ஊர் காரைக்குடி,திருமணமானவர்: “12 மணிக்கு ஓனர் வந்த பிறகு ஒரு இரண்டாயிரம் போனசு கிடைக்கும். அதுக்கு பிறகுதான் தீபாவளி. ஊரில் இருந்து கொண்டாடலங்கிற ஏக்கம் இல்லாமலா இருக்கும்? என்ன செய்றது?”
பழவண்டி வியாபாரி
ஆர்.வி.பெருமாள், வயது 40, தள்ளுவண்டி பழ விற்பனை, தூத்துக்குடியைச் சேர்ந்தவர்: “பழைய சரக்கு இது. நேற்று காய் இன்று பழமாகி விட்டது. தீர்ந்தவுடன் தீபாவளி கொண்டாட வீட்டுக்கு போவேன்.
இளநீர் வியாபாரி
ராஜேஸ்வரி, வயது 45, சொந்த ஊர் கடலூர், சாலையோர இளநீர் வியாபாரி: “நைட்டுக்கு உலை வைக்க வேணாமா? காலைல சாப்பாடு பண்ணி வச்சுட்டு வந்துட்டேன். நைட்டுக்கு இத வித்தாதான் சாப்பாடு.
-வீட்டுகாரர் சரியா இருந்தா நான் ஏங்க இந்த தொழிலுக்கு வரப் போறேன். எங்க அப்பாவும் தண்ணியா அடிச்சுதான் செத்துப் போனாரு. இவரும் தண்ணி அடிச்சு எங்கயாவது விழுந்து கெடப்பாரு. மூணும் பொண்ணுங்க. மூவாயிரம் டிரசுக்கு ஆச்சு. ஆயிரம் ரூபா கடனா வாங்கிதான் வாங்கிக் கொடுத்தேன். எனக்கு இருக்கது போதும். ஆனாலும் எனக்கு ஏதும் கெடையாதானு அவரு கேக்காரு. சரின்னு இன்னொரு ஆயிரம் கடனா வாங்கி லுங்கி எடுத்தாந்து கொடுத்து சாமி கும்பிட்டு தொழிலுக்கு வந்துட்டேன். இந்தப் பிறவிய எனக்கு ஏந்தான் ஆண்டவன் கொடுத்தான்னு இருக்கு (கண்ணீர் விட்டு அழுகிறார்).
இருச்சக்கரவாகன மெக்கானிக்
ராஜேந்திரன், வயது 45, பைக் மெக்கானிக்: “பசங்களுக்கு உடம்புக்கு சரியில்ல. இப்போதான் ஆசுபத்திரில இருந்து வீட்டுக்கு இட்டாந்தேன். அங்கே அவங்க மொகத்த பார்த்து பார்த்து கஷ்டமாயிருக்குமேனு, வெறுத்துப் போய்தான் கடைக்கு வந்தேன். ஆனா பசங்களுக்கு டிரெசெல்லாம் எடுத்துக் கொடுத்திட்டுதான் வந்தேன்.”
காய்கறி கடை
தனசேகரன், சிறிய காய்கறிக் கடை, தூத்துக்குடியை சேர்ந்தவர்: “தொழில்தான் எங்களுக்கு தெய்வம். அதற்கு பிறகுதான் தீபாவளி எல்லாம்.”
காய்கறி தரைக்கடை
ஜெயலட்சுமி, வயது 38, தள்ளுவண்டியில் தக்காளி, வாழையிலை வியாபாரம்: “பொழப்பு இதுதான். தீபாவளின்னு போனா எப்படி பொழைக்கறது. இன்னைக்கு ஒரு நாள வச்சுத்தான் எங்க பொழப்பே.
-(புதுத்துணி ஏன் உடுத்தவில்லை எனக் கேட்டதற்கு) ரெண்டு பொண்ணுங்கள கட்டிக் கொடுத்திருக்கேன். அவங்களுக்கு பாக்குறதா? எனக்கு பாக்குறதா?”
தையல் தொழிலாளி
எத்திராஜ், தையல் தொழிலாளி: “தீபாவளின்னா என்னா? …..ஆம்பளைன்னா தண்ணி…அடிக்கிறது..! …பொம்பளைன்னா…டிவி பாக்கிறது..இங்க, நான்..விதிய நெனச்சி…வேலை செய்யிறேன்..!
பந்தல் மற்றும் வீடுகட்டும் கருவிகள் வாடகை கடை
ஆர். கோவிந்தராஜன், பர்னிச்சர் & டூல்ஸ் வாடகைக்கு விடும் கடைக்காரர்: “மூணு மணி நேரந்தான் சார் தீபாவளி. வீட்டோட சேந்தாப்ல கடைங்கிறதால தொறந்து வச்சுட்டேன். நான் பில்டிங் டூல்ஸ் கொடுத்தா ஒர்க்கர் எடுத்துட்டு போனா இன்னிக்கு கொஞ்சம் பணம் கெடைக்கும். அதான் திறந்திருக்கேன்.
துப்புரவு தொழிலாளி
கே. வெரிக்கோலப்பா, ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்தவர், குப்பை சேகரிப்பவர்: “தீபாவளிக்கு லீவு போட்டா சேர்ர குப்பைங்கள நாளைக்கு யாரு அள்றது?”
குப்பை பொறுக்கும் தொழிலாளி
குப்பை பொறுக்கும் தொழிலாளி: “தீபாவளியா..? தெருவும் சருகுமா இருக்குறவனுக்கு குடும்பமும் கெடையாது, கொண்டாட்டமும் கெடையாது!
சாலையோரம் வசிக்கும் தொழிலாளி குடும்பம்
பாஸ்கர் மாரி தம்பதியினர், சாலையோரத்தில் வசிப்பவர்கள்: “
இன்னைக்கு சாப்பாடு பண்ணலை. யாருக்கும் துணி இல்லை. ஒரு வருமானமும் இல்லை. எடுப்பு சாப்பாடுதான்.”

 படங்கள், நேர்முகம் – வினவு செய்தியாளர்கள்