privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புமறுகாலனியாக்கம்தனியார்மயம் - தாராளமயம் - உலகமயம்உருளைக்கிழங்கு இறக்குமதி வளர்ச்சியா வீழ்ச்சியா ?

உருளைக்கிழங்கு இறக்குமதி வளர்ச்சியா வீழ்ச்சியா ?

-

punjab potato 1
உருளைக்கிழங்கு விலை வீழ்ச்சியடைந்த நேரத்தில் உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படுவது விவசாயிகளை அழிக்கவா?

ந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் இந்த நாட்டின் முதுகெலும்பாகும்.  கண்டிப்பாக பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் குடிமையியல் பகுதியில் உங்களுக்கு இப்படி சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் இந்திய அரசாங்கம், விவசாயிகளின் குரல்வளையை நசுக்குவதில் பன்னாட்டு நிறுவனங்களின் பேராதரவுடன் களமிறங்கியுள்ளது.  கீழே சொல்லப்படும் விடயம் பல்வேறு பரிமாணங்களில் உங்களுக்கு வந்தடைந்திருப்பினும், இந்த பொருளாதார மேதாவித்தனம், விவசாயத்தை அழிப்பதில் நேரடிப்பங்கு வகிக்கிறது.

உங்களின் கவனத்திற்காக இந்த இரு செய்திகளை நினைவு கூர்கிறேன். முதல் செய்தி பஞ்சாபில் உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, வாங்கவும் ஆளில்லாமல், விளைபொருட்களை என்ன செய்வதென அறியாத விவசாயிகள் அவற்றை சாலையோரம் வீசிச்சென்றனர்.  இரண்டாவது செய்தி: இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய அனுமதி அளித்திருப்பது.  இதற்கு அரசின் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், உள்நாட்டின் தேவையை சமாளிப்பதற்கும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த இறக்குமதி உதவும் என்பது.  இவை ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டிற்கான உருளைக்கிழங்கின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்குகையில் சொற்பமான அளவில் 2.3% சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

மத்திய விவசாயத்துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் நவம்பர் மாத இறுதிக்குள் தேவையான அளவு உருளைக்கிழங்கினை இறக்குமதி செய்வதற்கான டெண்டர் பணிகள் விரைவாக நடந்து கொண்டிருக்கிறது.  இதே காலத்தில் பஞ்சாபின் விவசாயிகள் உற்பத்தி செய்யும் உருளைக்கிழங்கு, நவம்பர் மாத மத்தியில் சந்தைப்படுத்த தயாராகியிருக்கும்.  சாமானியனும் புரிந்துகொள்ளும் செய்தி என்னவெனில், நவம்பர் மாதத்தில் உருளைக்கிழங்கின் விலை பாதாளத்தில் வீழ்ச்சியடைந்து, அதனைப் பயிர் செய்த விவசாயிகள் போட்ட மூலதனத்தை மீட்டெடுக்க வழியின்றி வறுமையில் தள்ளப்படுவர்.

இந்த வணிகத்திற்குப் பின்னான ரகசியத்தை அறிவதும் அவ்வளவு எளிதான ஒன்றல்ல. கோடைப்பருவத்திற்கான உருளைக்கிழங்கு விளைச்சல் சராசரியாய் இருப்பதன் பொருட்டு, குளிர்கால விளைச்சல் எதிர்பார்த்த மகசூல் கொடுக்குமென நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர் விவசாயிகள்.  உருளைக்கிழங்கின் உற்பத்தியைப் பொறுத்தவரையில் உலகளவில் சீனா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்தபடியாக மூன்றாமிடத்தில் இந்தியா உள்ளது.

punjab potato 2
உலக உருளைக்கிழங்கு உற்பத்தியில் இந்தியா 3-ம் இடத்தில் இருந்தாலும் விவசாயிகள் அழிக்கப்படுவது ஏன்?

ஆனால் மத்தியில் அமர்ந்துகொண்டு லாபி செய்யும் இந்த மெத்தப் படித்த பொருளாதார மேதாவிகள், உணவிற்கான பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதாக கூறிக்கொண்டு நமது உள்நாட்டு சந்தையை பழங்கள், காய்கறிகள் மற்றும் பால் பொருட்கள் இறக்குமதியை அதிகரிப்பதன் மூலம் மேல்நாட்டு வர்த்தகம் செழிக்க பயன்படுத்துகின்றனர். தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் இந்தியா – ஐரோப்பிய யூனியன் இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய யூனியனின் கோரிக்கையும் இதுவேயாகும்.

உள்நாட்டு உருளைக்கிழங்கு வணிகர்கள் (சிப்ஸ், அதன் மூலம் பெறப்படும் மற்ற பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தைச் சேர்ந்தவர்கள்), வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கின் விலையை கட்டுக்குள் கொண்டுவர,  அதன் மீதான இறக்குமதி வரி 30% சதவிகிதத்தை நீக்குமாறு, அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.  கடந்த ஆண்டு, இந்தியா பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ததைப் போலல்லாது, இந்த ஆண்டு அங்கு மகசூல் குறைந்ததன் காரணமாக அவர்கள் இந்தியாவிலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்து கொண்டிருக்கிறார்கள். தினமும் வாகா எல்லை வழியாக மூன்றாயிரம் லாரிகள் மூலம் உருளைக்கிழங்கினை ஏற்றுமதி செய்துகொண்டிருக்கும் நிலையில், தற்போது ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படும் பற்றாக்குறையினை பூர்த்தி செய்ய ஐரோப்பா மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து உருளைக்கிழங்கு இறக்குமதி செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவின் இந்த முறையற்ற ஏற்றுமதி இறக்குமதி கொள்கைகளால் பாதிக்கப்பட்டது உருளைக்கிழங்கு விவசாயிகள் மட்டுமல்ல. சில மாதங்களுக்கு முன் உணவிற்கான பணவீக்கம் உச்சத்தில் இருந்த போது, இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப் ஹரியானா, உத்தரப்பிரதேசம், கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தக்காளி பயிரிட்ட விவசாயிகள், ஒரு கிலோ தக்காளி ஒரு ரூபாய்க்கு விற்றாலும் அவற்றை வாங்குவதற்கு ஆளின்றி, நெடுஞ்சாலையோரங்களில் வீசிச்சென்ற அதே நேரத்தில் ஹரியானாவிலுள்ள ஒரு உணவு பதப்படுத்தும் நிறுவனம், சீனாவிலிருந்து கணிசமான அளவிற்கு தக்காளியிலிருந்து பெறப்படும் பதப்படுத்தப்பட்ட Pureeஐ இறக்குமதி செய்துகொண்டிருந்தது.

இதன் பின்னர், ஒரே மாதத்தில், அதாவது ஆகஸ்டு 28, 2014 முதல் செப்டம்பர் 28, 2014 வரையிலான காலகட்டத்தில் இந்தியா 3,76,009 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான தக்காளி மற்றும் அதிலிருந்து பெறப்படும் பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை சீனாவிடமிருந்தும், 94,057 மற்றும் 44,160 அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பொருட்களை முறையே நேபாளம், நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. உங்களில் பலருக்கும், நாம் சாப்பிடும் தக்காளி சாஸ், ப்யூரீ எனப்படும் பேஸ்ட், கெட்ச்அப் போன்றவை உள்நாட்டில் விளையும் தக்காளியிலிருந்து தயாரிக்கப்படுவதில்லை என்பதும் அவை சீனா, நேபாளம், இத்தாலி, அமெரிக்கா மற்றும் நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தக்காளியிலிருந்து தயாரிக்கப்படுவன என்பதும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இத்தகைய வகையில், இந்த பொருட்களை பயன்படுத்துவதன் வழி, நாமே நமது தக்காளி பயிர்செயும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியதாக்குகிறோம்.

சமையல் எண்ணை இறக்குமதி வரைபடம்
சமையல் எண்ணை இறக்குமதி வரைபடம்

பாஸ்தா எனப்படும் இத்தாலிய உணவினை எடுத்துக் கொள்வோம்.  இந்தியாவின் உணவுக் கிடங்குகளில் டன் கணக்கில்லாமல் கோதுமை வீணாகிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியாவின் பாஸ்தா இறக்குமதியோ வரலாறு காணாத வகையில் வருடத்திற்கு 39 சதவிகிதம் என்னும் வகையில் வளர்கிறது. பாஸ்தா கோதுமையிலிருந்து தயாரிக்கப்படும் அதே வேளையில், இறக்குமதியைக் கைவிட்டு, இந்தியாவில் வீணாகும் கோதுமையில் பாஸ்தா தயாரிக்க எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை, ஏன்?

இந்தியாவின் பாஸ்தாவிற்கான சந்தையோ கடந்த பத்து வருடங்களுக்கு முன்னால் (2003-2004 சுமார்) 300 கோடி ரூபாயிலிருந்து, இந்த ஆண்டு (2013-2014) 1,700 கோடி ரூபாய் அளவுக்கு  வளர்ந்து நிற்கிறது. பாஸ்தாவிற்கான இறக்குமதி வரி தற்போதுள்ள 40% சதவிகிதத்தில் இருந்து, மேற்சொன்ன இந்தியா-ஐரோப்பா இடையிலான இருதரப்பு தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் அமலாகும் வேளையில் 20 சதவிகிதமாக குறையும்.

முறையற்ற உணவு இறக்குமதி, உள்நாட்டு உற்பத்தியாளர்களை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம், இந்திய அரசு எவ்வாறு சமையல் எண்ணெய் இறக்குமதியை ஊக்குவிக்கிறது என்பது.  இந்தியாவின் வறண்ட நிலப்பகுதிகளில் வாழும் விவசாயிகளுக்கு எண்ணெய்வித்துக்கள் பணப்பயிராக இருந்த காலம் மலையேறிப்போய், அவர்களது வாழ்வாதாரமாக மாறிவிட்டது. அதுவும் இப்போது இந்தோனேசிய, மலேசிய, பிரேசில், மற்றும் அமெரிக்க சமையல் எண்ணெய் முதலாளிகளின் நலனுக்காக காவு வாங்கப்பட்டுவிட்டது. கடந்த முப்பதாண்டு காலத்தில், இந்தியாவின் சமையல் எண்ணெய் இறக்குமதி அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

edible oil imports 1
பன்னாட்டு சமையல் எண்ணெய் முதலாளிகளுக்காக இந்திய எண்ணெய் வித்து விவசாயிகள் அழிக்கப்படுகிறார்கள்!

கடந்த நவம்பர் 2011 முதல் அக்டோபர் 2012 இறுதி வரையிலான ஆண்டில், இந்தியா 56,295 கோடி ரூபாய் மதிப்பிலான 9.01 மில்லியன் டன் சமையல் எண்ணெய் வகைகளை இறக்குமதி செய்துள்ளது.  2006-07 மற்றும் 2011-12 க்கு இடையிலான எழாண்டுக் காலத்தில் சமையல் எண்ணெய் இறக்குமதி 380% சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

இங்கு எல்லோரும் மறந்துவிட்ட மற்றொரு செய்தி எதுவெனில், 1994-95-ம் ஆண்டு காலகட்டத்தில் இந்தியா எண்ணெய்வித்துக்கள் உற்பத்தியில்  கிட்டத்தட்ட தன்னிறைவு நிலையை அடைந்தது (மொத்த தேவையில் 3% மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு வந்தது). அதன் பிறகு 300 சதவிகிதமாக இருந்த எண்ணெய் வித்துக்கள் மீதான இறக்குமதி வரி படிப்படியாக குறைக்கப்பட்டு தற்போது முழுவதுமாக ரத்து செய்யப்பட்டு விட்டது.  தற்போதைய நிலையில் உள்நாட்டு தேவையில் 50% சதவிகித எண்ணெய் தேவை இறக்குமதியின் மூலமே நிறைவேற்றப்படுகிறது. இந்தியாவின் “மஞ்சள் புரட்சி”யை கொன்றுவிட்ட பெருமிதத்தில், இந்த மெத்தப் படித்த பொருளாதார மேதாவிகள், தற்போது, சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பாமாயில் (Palm Oil) எனப்படும் எண்ணெய் வித்துப் பயிரை ஊக்குவிக்கின்றனர்.

Monoculture எனப்படும் ஒற்றைப்பயிர் விவசாய முறையில் இந்த பாமாயில் பயிரை பயிரிடுவதால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொள்ளாத விவசாயத்துறை அமைச்சகமோ, 1.03 மில்லியன் ஹெக்டர் பரப்பிலான காடுகளை அழித்து அவற்றில் இந்த Palm Oil விவசாயத்தை ஊக்குவிக்க கங்கணம் கட்டிக்கொண்டு அலைகிறது.  இவை முறையே, மிசோரம், திரிபுரா, அஸ்ஸாம், கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரப்பிரதேசம்  ஆகிய பகுதிகளில் விரைந்து செயல்படுத்தப்படுமாம். இதற்குப் பின்னால் உள்ள சூட்சுமம் உங்களுக்கு புரிகிறதா?

முதலில் நாட்டில் இருந்த எண்ணெய்வித்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்துவிட்டு, பின்னர் உள்நாட்டு தேவையை ஈடு செய்ய காடுகளை அழித்து, எண்ணெய் வித்துக்களை பயிரிட்டும், வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்தும் அந்நிய செலாவணியை வீணடித்து மேல்நாட்டு வர்த்தகத்தை   ஊக்குவிப்பதுமேயாகும்.

என்னே ஒரு ராஜ தந்திரம்…! என்னே அரசியல்..!. என்னே வளர்ச்சி…!

கட்டுரை மூலம்: தேவேந்திர ஷர்மா

Importing food when there is no shortfall in production. It only destroys farm livelihoods.

தமிழாக்கம்: ஜானகிராமன்.

  1. கட்டுரையின் உரையாடல் பெட்டி மூடப்பட்டிருந்தது – தற்போது திறக்கப்பட்டிருக்கிறது. சிரமத்திற்கு வருந்துகிறோம்.

  2. காசுக்குக்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் காவாலிகள் நிறைந்தது நம் நாடு. அரசியலில் இரண்டே பிரிவினர்தான் 1 அயோக்கியர்கள், 2 மோசமான அயோக்கியர்கள். என்ன செய்வது. நல்லவர்கள் ஆட்சிக்கு வரமுடியாது. மேலும் மேற்கத்திய சூழ்ச்சியை முறியடிப்பது கஷ்டம். விலைபோய்த்தான் ஆக வேண்டும். ஆனால் ஒரு நாள் மக்கள் புரட்சி வெடிக்கும் அப்போது பார்ப்போம் என்ன நடக்கும் என்பதை.

Leave a Reply to வினவு பதிலை ரத்து செய்க

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க