கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் நகருக்குட்பட்ட சாராவா கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், காவல் துறையிடம் அளிக்கப்பட்ட புகார் ஒன்று மாபெரும் சூறாவளியை துவக்கியது. இதை அந்தப் பெண்ணே எதிர்பார்த்திருக்க மாட்டார். இருபது வயதே நிரம்பிய இளங்கலை மாணவியான அவர், தற்காலிக பணியாக தனது கிராமத்திலிருந்த மதரசாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.
ஜூலை 23-ம் தேதி திடீரென்று தனது வீட்டை விட்டு வெளியேறி மாயமான அந்தப் பெண் நான்கு நாட்கள் கழித்து வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அடையாளத்துடன் வீடு திரும்பினார். இது குறித்து வீட்டார் விசாரித்த போது, தான் கல்லூரி நண்பர்களோடு சுற்றுலா சென்றதாகவும், சென்ற இடத்தில் வயிற்று வலி ஏற்பட்டு அப்பெண்டிசைடிஸ் (குடல்வால்) பிரச்சினைக்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மீண்டும் ஜூலை 29-ம் தேதி அந்தப் பெண் ‘மாயமான’தாகச் சொல்லும் அவளது குடும்பத்தார், ஆகஸ்ட் 3-ம் தேதி காவல்துறையிடம் புகார் அளிக்கிறார்கள். அதில் அந்த பெண்ணே, தான் சாராவா கிராம மதரஸாவில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்ததாகவும், முசுலீம்கள் சிலர் தன்னைக் கடத்தி கூட்டு வல்லுறவு செய்ததாகவும், கட்டாயமாக இசுலாத்திற்கு மதம் மாற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கூட்டு வல்லுறவால் தான் கருவுற்றதாகவும், அந்தக் கருவைக் கலைப்பதற்கே அறுவை சிகிச்சை செய்துள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தற்போது வடநாட்டு ஊடகங்களால் “மீரட் பெண்” என்று குறிப்பிடப்படும் அந்தப் பெண் காவல் துறையிடம் அளித்த புகாரைத் தொடர்ந்து சொல்லி வைத்தாற் போல் இந்து இயக்கங்கள் ‘கொந்தளித்து’ எழுந்தன. இசுலாமியர்கள் இந்துப் பெண்களின் மேல் தொடுத்துள்ள ’லவ் ஜிஹாத்’ போரின் ஒரு அங்கமாக இந்த சம்பவத்தை சித்தரித்த காவி கும்பல், உடனடியாக இந்த விவகாரத்தை முன்வைத்து மாநில அளவில் பல போராட்டங்களைத் துவக்கியது.
நடந்து முடிந்த உத்திரபிரதேச இடைத்தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய பாரதிய ஜனதாவின் மாநில பொறுப்பாளர் யோகி ஆதித்யநாத், “இசுலாத்திற்கு மதம் மாற்றம் செய்யப்படும் ஒவ்வொரு இந்துப் பெண்ணுக்கும் பதிலாக நூறு இசுலாமிய பெண்களைத் தூக்கி வந்து இந்துக்களாக மதம் மாற்ற வேண்டும்” என்று மதவெறியைக் கக்கியுள்ளார்.
இதற்காகவே காத்திருந்ததைப் போல் ஆர்.எஸ்.எஸ் சார்பில் “இந்து சகோதரிகள், மகள்கள் பாதுகாப்பு இயக்கம்” (Hindu Behen Betti bachao Andholan) “மீரட் பாதுகாப்பு இயக்கம்” (Meerut Bachao Manch) போன்ற புதிய பரிவார திடீர் அமைப்புகள் உண்டாக்கப்பட்டன. இந்த அமைப்புகளின் சார்பில் இந்து பெண்களை முசுலீம் காம கொடூரர்களிடம் இருந்து காப்பாற்றக் கோரி துண்டுப் பிரசுரங்கள் போஸ்டர்கள் மூலம் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன.
சர்வதேசிய இசுலாமிய தீவிரவாத அமைப்புகள் இந்துப் பெண்களை முசுலீம் இளைஞர்களைக் கொண்டு மயக்கி காதலித்து இசுலாத்திற்கு மதம் மாற்றுவதாக இந்துத்துவ கும்பல் வட இந்தியா முழுவதும் தீவிரமான பிரச்சாரத்தை முன்னெடுத்தது. இந்து பார்ப்பன பெண்ணை காதலித்து மயக்க இரண்டு லட்ச ரூபாய்களும், இந்து ரஜபுத்திர அல்லது சத்ரிய பெண்களை காதலித்து மயக்க ஒரு லட்ச ருபாய்களும் இசுலாமிய இளைஞர்களுக்கு தீவிரவாத அமைப்புகள் சம்பளமாக கொடுப்பதாக காவிக் கும்பல் குற்றம்சாட்டியது. அதிலும் தலித்துக்களுக்கு இடமில்லை போலும். தலித்துக்கள் இந்துக்கள் இல்லை என்று இந்துமதவெறியர்கள் நடந்து கொள்வது வழக்கமான ஒன்றுதான்.
வட இந்திய ஊடகங்கள் தங்கள் பங்குக்கு ’மீரட் கூட்டு வல்லுறவு” தாக்குதல் பற்றிய தங்களது புலனாய்வு முடிவுகளை வெளியிடத்துவங்கின. மீரட் பெண்ணின் சிறுநீரகத்தை மதரஸாவில் வைத்து அறுத்து எடுத்து விற்று விட்டனர் என்பதில் துவங்கி, எத்தனை முசுலீம்கள் எத்தனை முறை எத்தனை நாட்கள் வல்லுறவு செய்தனர் என்பது வரை விதவிதமான கட்டுரைகளை எழுதி திரைக்கதையில் பல்வேறு “திகிலூட்டும்” திருப்பங்களைச் சேர்த்து வந்தனர்.
காவி கும்பல் போட்ட பிரச்சாரக் கூச்சல் ஒரு பக்கமும் ஊடகங்களின் ‘புலனாய்வுகள்’ இன்னொரு பக்கமும் காதைக் கிழித்துக் கொண்டிருக்கும் போதே இவ்விவகாரத்தின் உண்மை மெல்ல மெல்ல வெளியாகத் துவங்கியது. மீரட் பெண்ணின் சார்பாக அவளது குடும்பத்தார் அளித்த புகாரில் ஜூலை மாதம் 23-ம் தேதி தங்கள் பெண் இசுலாமியர்களால் கடத்தப்பட்டதாகவும் அதே நாளில் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனடிப்படையில் புகாரைப் பதிவு செய்த போலீசார், சம்பந்தப்பட்ட பெண்ணை முதல்கட்ட மருத்துவப் பரிசோதனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
பரிசோதனையில் அப்பெண்ணுக்கு கருக்கலைப்பு நடந்த போது அவள் ஒன்றரை மாத கர்ப்பவதியாக இருந்தது தெரியவந்தது. உடனே புகாரை மாற்றிக் கொண்ட பெண்ணின் குடும்பத்தார், அவள் ஜூன் 29-ம் தேதி வல்லுறவு செய்யப்பட்டாள் என்பதாக திருத்திக் கொண்டனர்.
மேலும் முதலில் அளித்த புகாரில் வல்லுறவு செய்த கும்பலைச் சேர்ந்தவர்களாக சாராவா கிராமத் தலைவர் (சர்பன்ச்) நவாப், மற்றும் உள்ளூர் மதபோதகர் சனாவுல்லா ( விவசாயியான இவருக்கும் மதபோதனைக்கும் சம்பந்தமேயில்லை என்பது காவல்துறையின் விசாரணையில் பின்னர் தெரியவந்தது) மற்றும் இவர்களோடு பெயர் தெரியாத நான்கு பேர்களையும் தங்கள் புகாரில் அப்பெண்ணின் பெற்றோர் குறிப்பிட்டிருந்தனர். இதனடிப்படையில் நவாப் மற்றும் சனாவுல்லா ஆகிய இருவரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து புகாரில் குறிப்பிடப்பட்டிருந்த ஒன்பது பேரும் படிப்படியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையே மீரட் பெண்ணின் குடும்பத்தார் தெரிவித்தபடி முசாஃபர் நகர மருத்துவமனையில் கருக்கலைப்பு நடைபெறவில்லை என்பதையும் மீரட் நகர அரசு மருத்துவமனையில் நடந்துள்ளதையும் போலீசு விசாரணை உறுதிப்படுத்தியது. மேலும், மீரட் பெண்ணின் குடுமபத்தார் அளித்த புகாரில் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு இளைஞர்கள் (ஒரு முசுலீம் மற்றும் ஒரு இந்து) துணையோடு அந்தப் பெண் மருத்துவமனைக்கு வந்ததையும், அவளுடன் சென்ற கலீம் என்கிற முசுலீம் இளைஞன் அப்பெண்ணின் கணவனாக மருத்துவமனைப் பதிவேடுகளில் பதிவு செய்திருப்பதையும் போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டனர்.
விசாரணைகள் ஒருபக்கம் நடந்து கொண்டிருக்க அதன் விளைவாக ’மீரட் பெண்ணின்’ குடும்பத்தார் அளித்த புகாரில் இருந்த முரண்பாடுகள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருந்தது. இன்னொரு பக்கம் விசாரணைகளின் முடிவுகள் பற்றி அலட்டிக் கொள்ளாத இந்துத்துவ குண்டர்படை, முசுலீம்கள் இந்துப் பெண்களைக் கடத்திச் செல்வதற்கு முலாயமின் போலீசு உதவி செய்வதாக இடைத்தேர்தலை முன்வைத்து மதவெறிப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருந்தனர். இந்த சூழலில் முதல் தகவலறிக்கையை பதிவு செய்யும் போலீசு அதில் கலீமின் பெயரையும் இணைத்து அவரையும் கைது செய்தது.
மாநில இடைத்தேர்தல் காலத்தில் காவி கும்பல் செயற்கையாக ”லவ் ஜிஹாத்” விவகாரத்தை கொளுத்திப் போட்டு குளிர் காயத் துவங்கியிருந்தனர். ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சார்பாக இந்துப் பெண்களுக்கு ராக்கி கட்டி ‘இசுலாமிய ஆணழகர்களிடம் மயங்கிவிடாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளும் கேலிக்கூத்தான இயக்கம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது. சூழலின் இறுக்கம் மீரட் பெண்ணின் உயிருக்கு ஆபத்து எதையும் விளைவித்து விடக்கூடாது என்பதால் அவரது வீடு கடுமையான போலீசு கண்காணிப்பிற்கும் காவலுக்கும் உட்படுத்தப்படுகிறது.
இந்த சூழலில் நடந்து முடிந்த இடைத்தேர்தல்களில் காவி கும்பல் எதிர்பார்த்ததற்கு நேர்மாறான முடிவுகள் வெளியாகி – மொத்தமாக கவிழ்த்துப் போட்டது. அக்டோபர் மாத துவக்கத்தில் மீரட் பெண்ணின் குடும்பத்தார் தங்களுக்கு போலீசு காவல் தேவையில்லை என்று தெரிவித்ததன் அடிப்படையில் காவல் விலக்கிக் கொள்ளப்படுகிறது.
இந்தச் சூழலில் அக்டோபர் 12-ம் தேதி தனது வீட்டிலிருந்து தப்பும் மீரட் பெண் மாஜிஸ்டிரேட் முன் வாக்குமூலம் ஒன்றை அளிக்கிறார். முன்பு கொடுத்த புகாரின் படி யாரும் தன்னை வல்லுறவு செய்யவில்லை என்றும், தன்னை யாரும் வலுக்கட்டாயமாக மதம் மாற்றம் செய்ய முயற்சிக்கவில்லை என்றும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்தார் மீரட் பெண். மேலும், தான் கலீம் என்கிற முசுலீம் இளைஞரை காதலித்ததாகவும், அவர் மூலமாகவே கருவுற்றதாகவும், தாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்திருந்த சூழலில் கர்ப்பத்தில் சிக்கல் ஏற்பட்டதாலேயே அதை அறுவை சிகிச்சை செய்து அகற்றிக் கொண்டதாகவும் தெரிவித்திருந்தார்.
மேலும், ஜூலை மாத இறுதியில் இருந்து தனது குடும்பத்தின் பிடியில் சிக்கியிருந்ததாகவும், பாரதிய ஜனதாவைச் சேர்ந்த அகர்வால் என்பவர் தனது குடும்பத்திற்கு சுமார் 25,000 ரூபாய் கொடுத்ததன் பேரிலேயே அவர்கள் தனது காதலை எதிர்த்ததோடு தன் பெயரில் பொய் புகாரை அளித்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். தனது குடும்பத்தின் பிடியில் இருந்த சமயத்தில் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவில் உறுதியாக இருந்ததால் தன்னை கவுரவக் கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டதாகவும் அதற்காகவே போலீசு காவலை நீக்கிக் கொள்ள கோரியதாகவும், தனது பாதுகாப்பின் பொருட்டு மீண்டும் வீட்டுக்குச் செல்ல அஞ்சுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மீரட் பெண்ணின் வாக்குமூலத்தைப் பதிவு செய்து கொண்ட மாஜிஸ்டிரேட், அந்தப் பெண்ணின் கோரிக்கையின் பேரில் அரசு பெண்கள் காப்பகம் ஒன்றில் தற்போது தங்கவைத்துள்ளது.
காவி கும்பலின் திரைக்கதை ஒட்டு மொத்தமாக நொறுங்கி விழுந்துள்ள நிலையில் குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக தற்போது தாம் பணம் கொடுத்ததை மறுக்க முடியாத நிலையில் அக்குடும்பத்திற்கு ”நல்லெண்ணத்தின் பேரில், ஒரு உதவியாகவே” அந்தப் பணத்தைக் கொடுத்ததாக அசடு வழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இதற்கிடையே அல்ஜசீரா நிருபர் நேகா தீக்சித் அப்பெண்ணைச் சந்தித்துள்ளார்.
”பாருங்க என்னோட வாழ்க்கை முடிந்து விட்டது. இனி நான் எங்கே வாழ்ந்தாலும் இந்த மொத்த சம்பவங்களும் என்னைத் துரத்தும். அவர்கள் எனது உடலும் கருப்பையும் அசுத்தமாகி விட்டதாகச் சொல்கிறார்கள். நான் கலீமோடு பேச வேண்டும், அவனுக்கு என்ன விருப்பமென்று தெரிந்து கொள்ள வேண்டும். நீங்க யாரோடயாவது காதலில் இருந்தால் உங்களுக்கும் பாதி பொறுப்பு இருக்கு தானே? நாங்கள் தப்பு செய்திருந்தால் நாங்கள் இரண்டு பேருமே தண்டிக்கப் பட வேண்டும். ஒன்றுமில்லாத விசயத்திற்காக அவன் மட்டும் வாழ்க்கை முழுவதும் துன்பப் பட நான் ஏன் அனுமதிக்க வேண்டும்?” என்று தெரிவித்த மீரட் பெண், ”நான் வீட்டை விட்டு வெளியேறி போலீசிடம் போகாதிருந்தால் அவர்கள் என்னைக் கொன்றிருப்பார்கள்” என்று வீட்டாரின் கவுரவக் கொலைத் திட்டத்தை அம்பலப்படுத்துகிறாள்.
மேலும் கலீமைத் திருமணம் செய்து கொள்ளும் தனது முடிவிலும் அவள் உறுதியாகவே இருக்கிறாள் “ஆமாம் நான் அவனைத் திருமணம் செய்து கொள்வேன். மதம் ஒரு பிரச்சினையே இல்லை. அவனுக்கு நான் கல்யாணத்திற்குப் பின் இந்துவாக தொடர்வதிலோ கோவிலுக்குப் போவதிலோ எந்தப் பிரச்சினையும் இல்லை. யாருடைய மதம் தப்பு? யாருடையதும் இல்லை. நாம் தான் மக்களை இந்துக்கள் என்றும் முசுலீம்கள் என்றும் பிரித்துப் பார்க்கிறோம். ஆனால், உண்மையில் நாம் எல்லோருமே ஒன்று தான்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த இருபது வயது பெண்ணின் எளிமையான வார்த்தைகள் ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ பயங்கரவாதிகளின் முகத்தில் காறி உமிழ்வதாய் அமைந்தது தற்செயலானதல்ல. எளிய உழைக்கும் மக்கள் சில சமயங்களில் இந்துத்துவ பிரச்சாரங்களில் மயங்கினாலும், இறுதியில் அவர்களின் மனித தன்மையே வெல்கிறது. அவர்கள் தம்மியல்பில் இந்து மதவெறி பயங்கரவாத கும்பலின் நோக்கங்களுக்கு எதிராகவே இருக்கிறார்கள்.
ஆனால், படித்த அதிகாரவர்க்கம்?
யாகூ இணையதளத்தின் விவாதக் குழுமம் ஒன்றான டாப்காப் (TopCop) என்பது பணியில் இருக்கும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் மற்றும் பணி ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரிகள் பங்கேற்கும் இணைய விவாதக் குழு. மீரட் பெண் விவகாரத்தை தொடர்ந்து ”லவ் ஜிஹாத்” குறித்து நடந்த விவாதங்களில் சில ஐ.பி.எஸ் அதிகாரிகள் ஆர்.எஸ்.எஸ்-ன் குரலில் இந்து பயங்கரவாத வன்மத்தைக் கக்கி இருக்கிறார்கள்.
“ஒரு போக்கு என்கிற வகையில் லவ் ஜிஹாத் என்பது உண்மை தான். அது ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட கிரிமினல் குற்றம்” என்று கருத்து தெரிவித்துள்ளார் 2003-ம் ஆண்டுத் வகுப்பைச் சேர்ந்த அதிகாரி . வேறு ஒரு அதிகாரி லவ் ஜிஹாத் என்பதைக் கடந்து “செக்ஸ் ஜிஹாத்” என்பதைக் குறித்து பேசியிருக்கிறார். தெலங்கானா பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர், இசுலாமிய இளைஞர்கள் தீய உள்நோக்கத்தோடு இசுலாமல்லாதவர்களை காதலித்து மதம் மாற்ற யோசிக்க மாட்டார்கள், ஆனால் அவர்கள் அப்படி செய்தால் சொர்க்கத்தில் இடம் உண்டு என்பதை நம்புவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய அதிகார வர்க்க அடுக்கின் ஒட்டுமொத்த கட்டுமானமும் பார்ப்பனிய நிலப்பிரபுத்துவ அடிப்படைகளின் மீதே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறது என்பது ஒரு எதார்த்தம். அப்படியிருக்க, நச்சுப் பாம்பின் பல்லில் இருந்து பால் வடிவதற்கு வாய்ப்பில்லை. அதிகார வர்க்கம் தம் இயல்பிலேயே இந்துத்துவ பாசிசத்தின் நெருக்கமான பங்காளி என்பதை “சுதந்திர” இந்தியாவின் வரலாற்றில் பதிவாகியிருக்கும் எண்ணற்ற சம்பவங்கள் நமக்கு உணர்த்தவே செய்கின்றன.
பார்ப்பனியச் சாதி அடுக்கை உத்திரவாதப்படுத்தும் மனுநீதி தான் இந்து-இந்தியாவின் இணைப்புக் கயிறு. இந்த விஷ விருட்சத்திலிருந்து நல்ல கனிகளை எதிர்பார்ப்பதே பேதமை. இயல்பாகவே சாதி மேலாதிக்க சிந்தனையும், இந்து பார்ப்பனிய மதவாத சிந்தனையும் கொண்டவர்களால் நிரம்பி வழியும் அதிகார பீடங்களுக்கு வந்து சேரும் சூத்திர பஞ்சமர்களும் கூட அங்கே நிலவும் பொது நீதிக்கு ஏற்ப தங்களைத் தகவமைத்துக் கொள்கிறார்கள். விதிவிலக்குகள் ஓரிரண்டு இருக்கலாம், எனினும் விதிகள் வேறு! எனவே தான் விசாரணைக்கென்று அழைத்துச் செல்லப்பட்ட திவ்யா இளவரசன் தம்பதியினர் சட்ட விரோதமாகவும் அறமற்ற முறையிலும் சாதி வெறியர்கள், கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகார வர்க்கத்தால் பிரிக்கப்பட்டு திவ்யா அவளது பெற்றோருடன் செல்லும் படி நிர்பந்திக்கப்படுகிறாள் – அவ்வாறு செய்யப்படுவது தான் எதார்த்தமானதென்று இந்துப் பொதுப்புத்திக்குச் சென்று சேர்கிறது.
ஒரு குற்ற விசாரணை அமைப்பில் பணிபுரிகிறோம், எனவே பாரபட்சமற்ற முறையில் சம்பவங்களை அணுக வேண்டும் என்கிற தொழில் முறை கடப்பாட்டுக்கு உட்பட்ட அதிகார வர்க்கம் எந்த கூச்ச நாச்சமும் இன்றி பட்டவர்த்தனமாக இணைய விவாதங்களில் வன்மத்தைக் கக்குகிறது என்றால் காக்கி பேண்டுகளுக்கு உள்ளே இரகசியமாக ஒளிந்திருக்கும் காக்கி டவுசர்களின் உண்மையான எண்ணிக்கை ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டோருக்கு அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறான இரகசிய காவிக் கோவணங்கள் தகுந்த சமயத்தில் வெளிப்படக் காத்துக் கிடக்கின்றன. அது திவ்யா இளவரசன் தம்பதியினரைப் போல் பார்ப்பன விதிமுறைகளுக்கு அடங்க மறுப்பவர்கள் ஆபத்துக் காலத்தில் காவல் நிலையத்தை நம்பிக்கையோடு நாடிச் செல்லும் சமயமாக கூட இருக்கலாம்.
அதிகார வர்க்கத்தின் கூட்டு தமக்குச் சாதகமாக இருக்கும் திமிரில் தற்போது அம்பலப்பட்ட நிலையிலும் “லவ் ஜிஹாத்” என்கிற கற்பனையான குற்றச்சாட்டோடு வட இந்தியாவின் இந்தி பெல்ட் எங்கும் பிரச்சாரம் செய்து வருகின்றனர் காவிப் பொறுக்கிகள். வட மாநில இடைத்தேர்தலில் இந்தப் பிரச்சாரம் எடுபடாத காரணத்தால் தங்கள் முயற்சிகளை அவர்கள் கைவிடுவார்கள் என்று நம்புவதற்கில்லை; ஏனெனில், சமூகம் மத அடிப்படையில் பிளவுபட்டுப் போவதிலேயே அவர்களது பாசிச அரசியலின் இருப்பும் எதிர்காலமும் தொக்கி நிற்பதால் தொடர்ந்து முயற்சித்துக் கொண்டு தான் இருப்பார்கள்.
மதச்சார்பற்ற, ஜனநாயக சக்திகள் இதை முன்னின்று எதிர்க்க வேண்டும். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் செயல் வெறுமனே மத அடிப்படையிலான பயங்கரவாதம் மட்டுமில்லை. அது பெண்களின் அடிப்படை ஜனநாயகத்தையே குழிதோண்டிப் புதைக்கும் காட்டுமிராண்டித்தனமான முயற்சி.
’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது? ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத கும்பல் பாபரி மசூதிக்கு மட்டுமல்ல, ஏமாந்தால் கருவறைக்கும் சொந்தம் கொண்டாடத் தயங்காதவர்கள் என்பதோடு தமது கோரிக்கையை நிலைநாட்ட எந்த எல்லைகளுக்கும் செல்லத் தயங்காத கொலை பாதகர்கள் என்பதை ‘இந்து’ப் பெண்கள் உணர வேண்டும். இசுலாமிய மக்கள் மீதான வெறுப்பு என்பது எத்தகைய சதிகளோடும், மோசடிகளோடும் அரங்கேற்றப்படுகிறது என்பதை பொதுவான வாசகர்கள் சிந்திக்க வேண்டும். இந்த பொதுப்புத்திதான் ஆழ்மனதில் முசுலீம் மக்களை கட்டோடு வெறுப்பதை சாத்தியமாக்குகிறது.
இந்துக்களின் பாரம்பரியத்தை காப்பவர்கள் இந்து ஸ்த்ரீகளே என்று தேனொழுக பேசும் அதே ஆர்.எஸ்.எஸ் காவி பொறுக்கிகள் தான் பாரத மாதாவுக்கு சூடம் கொளுத்தி பூஜை செய்த கையோடு அமெரிக்காவுக்கு கூட்டிக் கொடுத்த மாமாப் பயல்கள் என்கிற உண்மையை தம்மை இந்துக்கள் என்று சொல்லிக் கொள்வோர் புரிந்து கொண்டு சரியான பதிலடியைக் கொடுக்க வேண்டும்.
– தமிழரசன்.
மேலும் படிக்க
- U-turn by Meerut girl on ‘love jihad’ Top cops divided on ‘love jihad’
- New twist in Meerut ‘love jihad’ case
- Incongruity in Meerut victim’s story
- Truth vs Hype: The Complexities Behind the Alleged Meerut Gang-Rape
- Twist in Meerut gangrape, conversion tale: Woman had surgery for ectopic pregnancy, says DGP
- BJP: let CBI probe Meerut gang rape
- Fresh twist to Meerut rape case Meerut case: 2 more under lens; cops say woman’s statement inconsistent
- BJP comes under attack in Meerut girl case
- As ‘love jihad’ charge falls flat, families of ten accused wait for end of ordeal
இசுலாமியர்கள் கமூனிஸ்டுகள் நாத்தீகர்கள் கவலைப்படவேண்டாம் மதச்சார்பற்ற இந்தியாவில் ஆர் எஸ் எஸ் சின் நச்சுபிரச்சாரம் எடுபடாது ______________
’இந்துப்’ பெண்கள் தமது வாழ்க்கைத் துணையாக யாரைத் தேர்வு செய்ய வேண்டும் என்பதை ஆர்.எஸ்.எஸ் எனும் வன்முறைக் கூட்டமா முடிவு செய்வது?-NO,But Parents,atleast parents of the girls.
எனது கருத்து தவறு என்றால் தவறு என்று சொல்ல வேண்டுமே தவிர எனது கருத்தை மட்டுருத்தல் என்ற பெயரில் திரித்து வெளியிடுவது அப்பட்டமான அயோக்கியத்தனம் இதை கம்மூனிஸ்டுகள் செய்யலாமா…