Monday, December 6, 2021
முகப்பு சமூகம் அறிவியல்-தொழில்நுட்பம் புராணங்கள், அறிவியல், சமூகம்

புராணங்கள், அறிவியல், சமூகம்

-

மிகப்பழங்கால இந்தியர்களுக்கு நவீன அறிவியல் கண்டுபிடிப்புகள் தெரிந்திருந்தன என்று சிலர் நம்புகிறார்கள். இந்தக் கூற்றுக்கு அறிவியல்பூர்வ சான்றுகள் ஏதும் இல்லை என்பதை ‘5,000 ஆண்டுகளுக்கு முன்பாக போதிய அறிவு இருந்திருக்கக்கூடும், ஆனால் அது பாதுகாக்கப்படவில்லை என்ற சாத்தியத்தின் மூலம் புரிந்து கொள்ளலாம்’ என்றும், அல்லது ‘அப்படியொரு அறிவு இருந்ததை நாம் தீர்மானகரமாக மறுத்துவிட முடியாது’ என்றும் விளக்குகிறார்கள். எனவே, இந்தக் கண்ணோட்டத்தை மீளாய்வு செய்வது பலனுள்ளதாக இருக்கும் என்று கருதுகிறோம்.

அறிவியல் புனைகதை
ஆர்தர் சி கிளார்க்கின் அறிவியல் புனைகதையை ஸ்டான்லி குப்ரிக் எடுத்த திரைப்படக் காட்சி.

கொஞ்சம் யதார்த்தவாதமும் பெருமளவில் அமானுஷ்ய அம்சங்களும், அமானுஷ்ய சக்தியும் அடங்கிய புனைகதைகளுமான கட்டுமானத்தை உடையது என்ற வகையில் தொன்மவியலை  மாய எதார்த்தவாதம் என்று பொருள் கொள்ளலாம். மேலும், தொன்மங்கள் மனித நடத்தையின் உக்கிரமான நிலை, குழப்பங்கள், மனப்பாங்குகள் மற்றும் புதிர்களை படம் பிடிக்கின்றன. தொன்மங்களிலிருந்து கற்பனையை நீக்கி விட்டால் அவை சலிப்பூட்டும் போதனையாக தளர்ந்து விடும்.

வானூர்திகள், பலதலைகள், பல கைகள் மற்றும் அறிவியல் புனைவு மற்றும் தொழில் நுட்பப் புனைவுகள் என்று சொல்லப்படக் கூடிய அனைத்து வகையான எந்திரங்கள் என தொன்மப் பழமையில் ஊறிய வளமான கற்பனைகள் நம்மிடம் ஏராளம் உள்ளன. இந்த வகையில், பழமையான வரலாற்றைக் கொண்ட எந்த ஒரு சமூகத்தையும் விட நாம் எந்த விதத்திலும் வேறுபட்டிருக்கவில்லை. இதை அடிப்படையாகக் கொண்டு நவீன கண்டுபிடிப்புகள் பழங்காலத்தில் இருந்தன என்று சொல்ல முடியுமா? அப்படி சொல்வது, எல்லா கற்பனைப் பொருட்களுமே பண்டைய சமூகத்தின் பருண்மையான கண்டுபிடிப்புகள் என்ற அபத்தக் கற்பனை முடிவுக்கு நம்மை இட்டுச் செல்லும். மட்டுமல்லாமல், தொன்மங்கள் மக்களின்  நம்பிக்கையுடன் இணையும் போது தொன்மவியல் மதத்துடன் சிக்கிக் கொள்கிறது.

கற்பனை என்பது ஆற்றல்மிக்க படைப்பூக்க சக்தியாக இருந்தது, தொடர்ந்து இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. கற்பனைகளை உள்ளடக்கிய தொன்மங்கள் தற்காலத்திலும் உருவாகியுள்ளன. ஜூல்ஸ் வெர்ன், ஆர்தர் சி. க்ளார்க்* ஆகியோரை நாம் படித்தால், அவர்கள் விவரிக்கும் வெளிகள் தெளிவாக வேறுவகையினதாக இருந்தாலும்  விண்வெளிப் பயணங்களின் சகாப்தத்துக்குள் நாம் அடித்து செல்லப்படுகிறோம். அல்லது ஜார்ஜ் ஆர்வெல்லின் 1984 என்ற நாவலை எடுத்துக் கொண்டால், எந்திர மற்றும் கம்ப்யூட்டர் வகை மனிதர்களின் எதேச்சதிகார ஆட்சிமுறையின் கீழ் கட்டுப்படுத்தப்படுகின்ற உலகுக்குள் நாம் நுழைகிறோம். இந்த கற்பனைகள் சில நேரங்களில் தீர்க்கதரிசனங்களாக ஆகி விடுவதும் உண்டு.

ஸ்டார் வார்ஸ் பாத்திரம் ஒன்றுடன் நடிகர் மார்க் ஹாமில்
ஸ்டார் வார்ஸ் பாத்திரம் ஒன்றுடன் நடிகர் மார்க் ஹாமில்

ஆனால், குறிப்பிடத்தக்க ஒரு வேறுபாடு உள்ளது. சமகால கற்பனைகள் எதிர்கால எதார்த்தத்துடன் இணைப்பை ஏற்படுத்துவதாக இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் நடக்கும் முயற்சி இதற்கு மாறாக தொன்மங்கள் வாயிலாக நிகழ்காலத்தை பழைய சமூகத்துடன் முடிச்சுப் போடுவதாக இருக்கிறது. எனவே, கற்பனைகளை கடந்த காலத்தில் வைக்க வேண்டுமா அல்லது எதிர்காலத்தில் வைக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது.

தொன்மவியலை அதன் வளமான, தனித்த அடையாளத்துடன் தொன்மவியலாகவே படிக்க வேண்டும். எகிப்தியர்கள், கிரேக்கர்கள், இந்தியர்கள், சீனர்கள் மற்றும் இதர பழங்கால தொன்மங்களின் படைப்பாளிகள் தொன்மங்களில் கடவுளையும், அமானுஷ்ய சக்திகளையும் உருவாக்கினர். எனவே அதனை வரலாறுடனும், அறிவியலுடனும் போட்டு குழப்பிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. தொன்மங்கள் என்பவை பழங்கதைகள்; வரலாறு என்பது அறிவியலின் துணை கொண்டு நடவற்றைப் பற்றி செய்யப்படும் கருத்தாக்கம். வரலாற்றை தொன்மம் கொண்டு பதிலீடு செய்வது அபத்தமானது. பிரதமர் நரேந்திர மோடி பழங்கால தொன்மவியலை சமகால அறிவியலுடன் இணைத்து இப்போது இருக்கும் கண்டுபிடிப்புகள் அனைத்தும் பழங்காலத்தில் இருந்தன என்று கூறிய கருத்துக்களைப் போல கற்பனையானது என்றும் சிலர் கருதுகின்றனர்.

கனவும், நிதர்சனமும்

அறிவியல் என்பது தகவலையும், சேகரிக்கப்பட்ட அறிவையும் அடிப்படையாகக் கொண்டது. இந்தத் தகவலையும் அறிவையும் ஒரு முறையை கையாண்டு, தர்க்கபூர்வமான ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. ஒரு தடயத்தை ஆதாரமாக ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அதன் நம்பகத்தன்மையை கடுமையான பரிசோதனைக்கு உடபடுத்துதல் அவசியம். இந்த நடைமுறையை மனதின் கற்பனைக்கு பொருத்த இயலாது.

மேலும் அறிவியல் கண்டுபிடிப்புகள் வெறுமனே கற்பனைத் திறனின் கணநேர தாவல்கள் அல்ல. அவற்றுக்கு நீண்டதொரு கர்ப்பக்காலம் உண்டு. ஆகாய விமானம் போன்ற ஒன்று இறுதி நிலையை எய்தும் முன்னர் பல்வேறு கட்டங்களையும், முயற்சிகளையும் தாண்டி வருகிறது. பழங்கால தொன்மப் படைப்புகளின் உருவாக்கத்திற்கு இத்தகைய பதிவு செய்யப்பட்ட எந்த ஆதாரமும் இல்லை. அறிவியல், அதன் கண்டுபிடிப்புகள், தொழில்நுட்பம் ஆகியவற்றின் உருவாக்கத்துக்கு படைப்புத் திறன் கொண்ட கற்பனை அவசியம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய கருத்து தான். ஆனால், அதே நேரம் அவை கற்பனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை அல்ல. கற்பனையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை கனவுகளாக மட்டுமே எஞ்சும்; எதார்த்தத்துக்கு வராது.

ஜார்ஜ் லூகாஸ்
‘ஸ்டார் வார்ஸ்’ உருவாக்கிய ஜார்ஜ் லூகாஸ் தனது படைப்புகளில் ஒன்றுடன்.

இப்போது உள்ள சூழலில் அதிகாரபூர்வமாக மேற்கொள்ளப்படும் இந்த பிரச்சாரம் பரிணாமக் கோட்பாட்டை நிராகரித்து, தெய்வீகம் என்ற கருத்திலிருந்து முழுதும் துண்டிக்கப்படாத அறிவார்ந்த படைப்பு  (Intellectual Design) கோட்பாட்டை வைத்த ஜார்ஜ் புஷ் மற்றும் அமெரிக்கர்களின் செயலைக் காட்டிலும் ஒரு படி மேல் செல்கிறது. கடவுளுக்கு மிக நெருக்கமான போப் கூட சமீபத்தில் பரிணாமக் கோட்பாட்டை ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடவுள் நம்பிக்கை சார்ந்த பிரச்சினைகளைப் பொறுத்தவரை மக்கள் வெகுளித்தனமானவர்கள். ஏனெனில் அவர்களுடைய இந்த நம்பிக்கைகள் பொதுவாக கேள்விக்கு உட்படுத்தப்படுவதில்லை. மக்களின் இந்த பலவீன நிலையை தவறாக பயன்படுத்திக் கொள்வது எளிது.

எனவே இத்தகைய முழக்கங்கள் நம்பிக்கை கொண்ட மக்களை கடுந்தேசியவாதிகளாக, பகுத்தறிவற்றவர்களாக, கடந்தகாலம் பற்றிய மாறாத எண்ணத்தை உருவாக்கி அறிவியலுக்கு எதிரானவர்களாக உருமாற்றக்கூடியது. அறிவியல் அறிவு ஏற்படாத சூழலில் அறிவியல் கண்டுபிடிப்புகள் இருந்ததாக சொல்வது ஒரு வகையில் அறிவியலின் பொருத்தப்பாட்டை நிராகரிக்கும் செயல்பாடு.

தொன்மவியலும், மதமும் எளிதில் ஒன்று கலக்கின்றன. மதத்துடன் அரசியல் என்ற வெடிபொருள் கலவை தான் இங்கு அனைவரும் கவலைப்படுகின்ற ஒன்றாக இருக்கிறது. தொன்மவியலுடன் அறிவியலையும், மதத்தையும், அரசியலையும் கலக்கிறோம். இது மாலடோவ் காக்டெயில் என்றழைக்கப்படும் பல வெடிமருந்துகள் கலவையின் ஆபத்தையும் விஞ்சக்கூடியது. நாம் செல்ல வேண்டிய இடம் இதுவல்ல.

விக்ரம் சோனி, ரொமிலா தப்பார்.
தமிழில் சம்புகன்.

* ஜூல்ஸ் வெர்ன், பிரான்சை சேர்ந்த 19-ம் நூற்றாண்டின் அறிவியல் புனைகதை எழுத்தாளர். ஆர்தர் சி. க்ளார்க், அமெரிக்காவின் அறிவியல் புனைகதைசொல்லி.

கட்டுரை, படங்கள் : நன்றி thehindu.com

குறிப்பு :

கடந்த மாதம் அக்டோபர் 25-ம் தேதி பிரதமர் மோடி சர் ஹெச்.என். ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையை திறந்து வைத்தார். முகேஷ் அம்பானியின் மனைவி நீட்டா அம்பானி இயக்குநராக உள்ள இந்த மருத்துவமனையின் தொடக்க விழாவில் மருத்துவர்கள், முக்கியப் பிரமுகர்கள் எனப் பலரும் குழுமியிருந்தனர். இந்த விழாவில் பேசிய மோடி பழங்கால இந்தியர்கள் ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சையில் (Plastic Surgery) நிபுணத்துவம் பெற்றிருந்தனர் என்று திருவாய் மலர்ந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக துண்டிக்கப்பட்ட விநாயகனின் தலையிருந்த இடத்தில் யானையின் தலையை சிவன் ஒட்டிய புராணத்தை அடித்து விட்டார். அப்போது எத்தனை மருத்துவர்கள் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தனர் என்று தெரியாது. மோடி இத்துடன் நின்று விடவில்லை. மரபணுவியலிலும் பண்டைய இந்தியர்கள் சிறந்து விளங்கினர் என்றார். இதற்கு உதாரணமாக குந்தி தேவி கருத்தரிக்காமல் கர்ணனை பெற்றதை கூசாமல் குறிப்பிட்டார்.

மோடியின் இந்த உளறல்களை சகித்துக் கொண்டு இறுக்கமாக செய்திகளை வெளியிட்டன ஊடகங்கள். ஆனால், வெளிநாட்டு ஊடகங்கள் மோடியை பரிகசித்தன; சமூக வலைதளங்களில் எள்ளி நகையாடப்பட்டார். மோடியின் பிதற்றலை விமர்சிக்கத் தயங்கிய இந்திய விஞ்ஞானிகளையும், இந்திய ஊடகங்களையும் கடுமையாக சாடினார், கரண் தப்பார் என்ற பிரபல ஊடகவியலாளர். இந்திய அரசமைப்பு சட்டப் பிரிவு 51(A)1 -ன் படி இந்தியக் குடிமகன்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டிய அறிவியல் மனப்பான்மைக்கு எதிராகவே மோடி பேசியதை பதிவு செய்தார், கரண் தப்பார். கரண் தப்பாரின் கட்டுரை தி இந்து நாளிதழில் வெளியானது.

அதற்கு பிறகு Mythology Science and Society என்ற தலைப்பில் வரலாற்றறிஞர் ரொமிலா தப்பாரும், விக்ரம் சோனி என்ற அறிவியலாளரும் இணைந்து எழுதிய கட்டுரை தி இந்து நாளிதழில் நவம்பர் 7-ம் தேதி வெளியானது. அதன் தமிழாக்கம் இது.

  1. இரவுபாடசாலை திட்டம் மனதை கவரும் ஒன்றாக இருக்கிறது. அது வெறும் அரசியல் வகுப்பாக மட்டும் இருந்தால் அதன் ஏற்பு எப்படி இருக்கும் என்று சொல்ல முடியாது. அரசியல் வகுப்பாக இருப்பது அரசியல் விலங்குகளாக (எதிர்மறை அர்த்தத்தில் பயன்படுத்தவில்லை) இருக்கும் நமக்கு போரடிக்காது. பொதுவானவர்களுக்கு ஏற்ற முறையில் பள்ளி/கல்லூரி பாடத்திட்டத்தின் இடைவெளிகளை நிரப்பும் வண்ணம் இருந்தால் பலன் கொடுக்கும்.

    ஆர்.எஸ்.எஸ் செல்வாக்கு செலுத்தும் தென் தமிழகத்தில் மதபாடசாலை திட்டத்துடன் வேலை பார்த்து கணிசமாக வெற்றி கண்டது. சமய வகுப்பு என்ற பெயரில் ஏழை குழந்தைகளை அழைத்து ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் போட்டு களத்தை வலுப்படுத்தியது. ஒவ்வொரு கோயிலையும் இதற்காக தத்தெடுத்தது. ஏதோ ஆன்மீக விஷயங்களை சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று பெற்றோரும் குழந்தைகளை இதற்கு அனுப்புகின்றனர்.

    ஆனால், வெறும் ஆன்மீகம் மட்டும் இருப்பதில்லை. எனக்கு கிடைக்கபெற்ற நூல்களில் மிகவும் மோசமான திரிபுகளுடன் வரலாற்றை சொல்லப்பட்டு இருக்கின்றன. இது சமய வகுப்பு என்று சொல்லப்பட்டாலும், அடிப்படையில் பிற சமய வெறுப்பு மதபாடசாலைகளாக இயங்குகின்றன. இந்த சோதனை முயற்சியின் வெற்றியை தொடர்ந்து ஹெச். ராஜாவும் சிவகங்கை மாவட்டத்திலும் சமய வகுப்பு திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக குறிப்பிட்டார்.

  2. தொன்மங்கள் மதத்துடன் எளிதில் கலந்துவிடுகின்றன.அது அரசியலோடு கலக்கும் போது மிகப்பெரும் ஆபத்தாக மாறிவிடுகிறது.இதனால் தான் தனி நபர் நம்பிக்கை சார்ந்த மதம் அரசியலோடு கலக்கக் கூடாது என்கிறது மார்க்சியம்.கலப்போம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.இந்து பாசிஸ்டுகள்.மோடி தன் முட்டள்தனத்தை,அறிவியல் வறுமையை அறிவுத்துறை சார்ந்தவர்கள் மத்தியில் எப்படி இவ்வளவு துணிச்சலாக கொஞ்சமும் கூச்சமின்றி வெளிப்படுத்த முடிந்தது?அதிகாரம்தான்.அதை எதிர்த்தால் அடுத்து நடவடிக்கை பாயும் என்பது தான்.பிரம்மத்தைப் பற்றி பேசினால் உன் தலை சுக்கு நூறாக வெடித்துவிடும் என்ற ஆதி சங்கரன் காலத்து நிலை தன் இன்றைய மோடி அரசின் நிலை.ராமன் பாலம்,பாபர் மசூதி போன்றவைகள் எல்லாம் இந்த வகைப் பட்டவைதான்.கங்கைக் கரையில் ஆசிரமம் கட்டி அங்கே அந்தப்புர அழகிகளுடன் ரிஷிபுங்கவர்கள் புடைசூழ திரிசூலத்தை[செருப்பு ராமனுடையது]அல்லது துடைப்பத்தை சிம்மாசனத்தில் வைத்து,அத்வானியை நாயாக மாற்றி பக்கத்தில் படுக்க வைத்துக் கொண்டு நமோஆட்சி நடத்தும் காலமும் வரலாம்.அதற்கும் ஜெமோ மற்றும் அமரிக்க அம்பிகள் பஜனை பாடலாம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க